Thursday, October 13, 2005

பந்தயத்தில் முயலும் ஆமையும்

('இதைப் போன ஜென்மத்திலேயே படிச்சுட்டோம்' என்கிற ஆத்மாக்கள் அடுத்த வலைக்குத் தாவுக)

Image hosted by TinyPic.com
image courtesy : Disney
முயலும் ஆமையும் யார் வேகமா ஓடறாங்கன்னு பாக்க ஒரு பந்தயம் நடத்துச்சுங்களாம். துப்பாக்கித் தோட்டா மாதிரி கிளம்பின முயல் கொஞ்சதூரம் போனப்பறம் திரும்பிப் பாத்துட்டு ஆமையைக் காணாம சரி.. அது வர்றதுக்கு எப்படியும் ரொம்ப நேரமாவும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அப்றம் ஜெயிச்சு முடிச்சுக்கலாம்னு நினைச்சு மரத்தடில ஒக்காந்து கண்ணசந்து தூங்கிருச்சி. தவழ்ந்து வந்த ஆமை நிறுத்தாம அப்படியே மெதுவா முயலைத் தாண்டிப் போயி பந்தயத்துல ஜெயிச்சிருச்சி. முழிப்பு வந்ததும் முயல் தோத்துட்டோம்ங்கறத தெரிஞ்சிக்கிச்சி.


அப்டீன்னு கதையச் சொல்லி "மெதுவா ஓடினாலும் ஸ்திரமா ஓடினா போட்டில ஜெயிக்கலாம்" (Slow and Steady wins the race)ங்கற நீதியப் படிச்சிருக்கோம். ஆனா கதை இன்னும் முடியலையாம்.

நொந்து போன முயல் யோசன பண்ணிப் பாத்ததுல தோத்துப் போனதுக்கு மூல காரணங்கள் "அதீத நம்பிக்கை, அஜாக்கிரதை, சோம்பல்" தான்ங்கறத உணர்ந்துக்கிச்சாம். ஜெயிச்சிருவோம்னு மப்புல தூங்காம முயல் ஓடியிருந்தா ஆமையால ஜெயிக்கவே முடியாதுங்கற உண்மைய புரிஞ்சிக்கிட்டு திரும்ப ஆமைகிட்ட போயி இன்னொரு தடவை பந்தயத்துக்குக் கூப்பிட்டுச்சாம். ஆமையும் ஒத்துக்கிட்டு பந்தயத்தை ஆரம்பிச்சது. முயல் முழு சக்தியையும் உபயோகிச்சா ஒரே மூச்சுல பந்தய தூரத்த ஓடி முடிச்சு ஜெயிச்சிருச்சு. ஆமை வந்து சேர ரொம்ப நேரம் ஆச்சு.

இதனால நாம தெரிஞ்சுக்கிட்ட நீதி: "வேகமாவும் அதே சமயத்துல தொடர்ச்சியாவும் ஓடறது, மெதுவா ஸ்திரமா ஓடறதக் காட்டிலும் பல மடங்கு வெற்றியத் தரும்" (Fast and consistent will always beat the slow and steady. It's good to be slow and steady; but it's better to be fast and reliable)
இருங்க, கதை இன்னும் முடியலை.

தோத்துப் போன ஆமை யோசிச்சதுல இந்த மாதிரியான பந்தயக் களத்துல ஓட்டப்பந்தயத்துல முயல ஜெயிக்கவே முடியாதுங்கறது புரிஞ்சது. அதுக்கு ஒரு யோசனை தோணுச்சு. முயல் கிட்ட போயி இன்னொரு தடவ போட்டிக்கு வரயா?ன்னு கேட்டது. முயலுக்கு ஆச்சரியம். ஒத்துக்குச்சு. இந்த தடவ முந்தி ஓடின வழிய விட்டுட்டு ஆமை சொன்ன வழில ஓடிச்சுங்க ரெண்டும். முயல் படு வேகமா ஓடிச்சு. ஆனா குறுக்க ஒரு நதி ஓடறத பாத்ததும் என்ன செய்யறதுன்னு தெரியாம நின்னுடுச்சு, போட்டி முடியறதுக்கு நதியத் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் போகணும். நதிக்கரைல ஒக்காந்துக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சது முயல். மெதுவா வந்து சேந்த ஆமை முயலைக் கண்டுக்காம தண்ணிக்குள்ள இறங்கி, நீந்தி அந்தப் பக்கம் போயி, மிச்ச தூரத்தையும் தாண்டி ஜெயிச்சிருச்சு.

இப்ப என்ன நீதின்னா "மொதல்ல ஒன்னோட திறமை எதுலங்கறத புரிஞ்சிக்கிட்டு அதுக்குத் தகுந்தாப்ல போட்டியோட இடத்தைத் தீர்மானிச்சுக்கோ" (First identify your core competency and then change the playing field to suit your core competency).

அட இருங்க ஸார். கதை இன்னும் முடியலை.

அந்தச் சமயத்துல முயலும் ஆமையும் நல்ல நண்பர்களா ஆயிடுச்சு. ரெண்டும் சேந்து பேசினதுல கடைசியா ஓடின போட்டிய ஒரு குழுவா ஓடிப் பாக்கலாம்னு முடிவு பண்ணி திரும்ப ஆரம்பிச்சதுங்க. ஆரம்பிச்ச இடத்துல இருந்து நதிக்கரை வரைக்கும் ஆமையை முயல் தூக்கிட்டு ஓடிச்சு. அப்றம் முயலை ஓட்டுல ஏத்திக்கிட்டு ஆமை அந்தக் கரைக்கு நீந்திக் கொண்டு போய் விடவும் திரும்பவும் ஆமையைத் தூக்கிக்கிட்டு முயல் பந்தய தூரத்த ஓடி முடிச்சது. ரெண்டுக்கும், அதுக்கு முன்னாடி ஒருத்தரையொருத்தர் ஜெயிச்சப்ப பட்ட சந்தோஷத்த விட பலமடங்கு சந்தோஷம் இப்போ.

கட்டக்கடைசீயா என்ன சொல்ல வர்றாங்கன்னா "தனிப்பட்ட திறமைகள் மிகவும் நல்லதே. அப்படிப்பட்ட தனித் திறமைகளை ஒன்றிணைத்துக் குழுவாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இல்லாத பட்சத்தில் நம்மைவிட வேறு வகையில் வேறு யாராவது திறமையாகச் செயல்பட்டு, நமது செயல்திறன் குறைந்து போகும் சாத்தியங்கள் அதிகம்". ("It's good to be individually brilliant and to have strong core competencies; but unless you're able to work in a team and harness each other's core competencies, you'll always perform below par because there will always be situations at which you'll do poorly and someone else does well. )
அம்புட்டுத்தான்.

என்னமோ போங்கப்பா. எனக்கு 'முயலாமை'ன்னாலே ஆகாது.

3 comments:

Anonymous said...

அட.. அருமையா இருக்குங்க. இந்தக் கதைதான் நமக்கு அத்துப்படியாச்சே பின்ன ஏன் மறுபடி எழுதி இருக்காங்கணு படிக்க ஆரம்பிச்சேன். இவ்வளவு விஷயம் புதைச்சு வச்சிருக்கிங்க. அருமை

பாலராஜன்கீதா said...

ஆமையும் முயலும் என்றால் வேறொரு அர்த்தம் வருகிறதே :-))

Sundar Padmanaban said...

//ஆமையும் முயலும் என்றால் வேறொரு அர்த்தம் வருகிறதே //

ஆமாங்க. ஆமையும் முயலும்தான். :)

மரத்தடில ஷைலஜா இப்படிக் கேட்ருக்காங்க.

//எதற்குமே பயிலாமையா இருந்தா எதிலும் முயலாமையாய்
இயலாமையாய் எல்லாவற்றின்மீதும் பொறாமையாய் கடைசியில
தள்ளாமையாகிவிடுமோ சுந்தர்?:)//