Monday, January 09, 2006

நீங்கள் இவ்வுலகின் கடைசி மனிதனாக இருந்தால்?

ரொம்ப நாளுக்கப்புறம் அந்துமணியின் பா.கே.ப. பகுதியில் ஒரு உருப்படியான கட்டுரையை (கட்டுரையின் 80% வேறொருவர் எழுதிய கட்டுரையின் குறிப்புகளாக இருந்தாலும்) படிக்க முடிந்தது. அது சரி. இந்தப் பதிவில் நானும் 90% அந்துமணியின் கட்டுரையிலிருந்து தான் எடுத்துத் தந்திருக்கிறேன். :) இனி பா.கே.ப.விலிருந்து.....

***

"இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்படும்போது, அது, அவனுக்கு, "பொட்' என்று தலையில் குட்டியது போன்ற பாடம் கற்பிக்கிறது ஒவ்வொரு முறையும்... ஆனாலும், இவன் திருந்துவதில்லை!

இப்படித்தான் நடந்தது இங்கிலாந்தில்... இங்கிலாந்து நாட்டு பசுமாடுகளை "டிவி'களில் பார்த்து இருப்பீர்கள்... கொழு, கொழுவென இருக்கும்; 30-40 லிட்டர் பால் கொடுக்கும். இதற்கும் அதிகமாக பால் வேண்டும் என பேராசைப்பட்டனர். இதற்கென ஆராய்ந்து, விசேஷ உணவு தயாரித்தனர். சாக பட்சிணியான மாட்டுக்கு, மாட்டு எலும்புத் தூள் கலந்த உணவைக் கொடுத்தனர்... பால் மற்றும் இறைச்சி அதிகமாகத்தான் கிடைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மாடுகளுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. இதை "Mad Cow disease" என்றனர். இந்த நோய் பீடித்த மாடுகளை, சில ஆண்டுகளுக்கு முன் லட்சக்கணக்கில் கொன்று எரித்தனர்.

இங்கிலாந்தையும், பிரான்ஸ் நாட்டையும் ஆட்டிப் படைப்பது "காவா' நோய் எனப்படும், "Foot and mouth' நோய். நம் நாட்டில், இந்த நோய் கண்ட மாடுகளை தனியே பிரித்து, விளக்கெண்ணெயும், மஞ்சளும் தடவி வருவர்... இந்த நோய் கண்ட மாடுகள், உணவு எடுத்துக் கொள்ளாது... அதனால், மூங்கிலை வாயில் நுழைத்து, அரிசிக் கஞ்சி ஊற்றுவர். பத்து நாளில் நோய் ஓடிப்போகும். ஆனால், இங்கிலாந்திலோ, இந்நோய் கண்ட, மாடு ஆடுகள், ஒன்றல்ல, இரண்டல்ல... ஏழு லட்சத்தை கொன்று குவித்துள்ளனர். நினைத்தே பார்க்க முடியவில்லை... இதென்ன சோகம்...

இந்த நேரத்தில், கோவை பாரதியார் பல்கலைக் கழக, உளவியல் துறை பேராசிரியர் வேதகிரி கணேசன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை படிக்க நேர்ந்தது... அவர் கூறுகிறார்... மதங்கள் சொல்வதெல்லாம் மனித நேயத்துடன் மனிதர்கள் செயல்பட வேண்டும் என்பதே. ஆனால், தங்கள் சுயநலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையே மனிதர்கள் விரும்புகின்றனர்; அவர்களுக்கு, தங்களது சுயநலத்திற்கு எதிரானதாக மனிதநேயம் தோன்றுகிறது. பெரும்பான்மையினர், பெயருக்கு தங்கள் தாய், தந்தையரின் மதத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகின்றனர்; இன்னும் சிலர் மதமாற்றம் செய்கின்றனர். ஆனால், அநேகமாக எல்லாருமே மதங்கள் கூறுவதைப் பின்பற்றுவதில்லை... உதாரணமாக, உணவுப் பழக்கத்தை எடுத்துக் கொள்ளலாம்... இந்தியா முழுவதும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் சைவ உணவையே சாப்பிட்டதாக யுவான் சுவாங் என்ற சீன அறிஞர், இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தபோது பார்த்து எழுதியுள்ளார்.

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட குற்றவாளிகள் ஊரை விட்டுத் துரத்தப்பட்டு காடுகளில் வாழ்ந்தனர். "சண்டாளர்கள்' என்று கூறப்பட்ட இந்த மதத்தைச் சேர்ந்த இவர்கள் மட்டுமே வேறு வழியின்றி காடுகளில் வாழும்போது புலால் உணவை உண்டு வந்தனர். ஆனால், தற்போது இந்து மதத்தினரில் பெரும்பாலோர் மாமிச உணவு சாப்பிடும் பழக்கத்தில் சிக்கி விட்டனர்; அதை கவுரவமானதாகவும் கருதுகின்றனர்.

"புலால் மறுத்தல்' என்ற ஒரு அதிகாரத்தில் பத்து குறள்கள் மூலம் மாமிச உணவை மறுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார் திருவள்ளுவர். அவர், மாமிச உணவை உண்பவர் உள்ளவரையில் அதை விற்பவர்கள் இருப்பர் என்று கூறியுள்ளார். விற்பவர்கள் உள்ளவரை, வளர்ப்பவர்கள் இருப்பர்; வளர்ப்பவர் உள்ளவரை, மேய்ப்பவர்கள் இருப்பர்; மேய்ப்பவர் உள்ளவரை பூமியின் மேற்பரப்பிலுள்ள பச்சை பசேலென்ற பாதுகாப்புக் கவசம் தேய்வடையும்.

அதனால் சூரிய கதிர்வீச்சுப் பட்டு நிலபரப்பு பாலைவனமாகும். நிலத்தடி நீர் கீழே இறங்கி, நீர்வளம் வற்றிப் போகும்.

ஒரு கிலோ மாமிசம் ஒருவர் உண்ணும்போது, அது பல கிலோ பசுமையான தாவர இலைகளால் ஆனது என்பதை உணர்வதில்லை; பூமியின் பசுமைப் பாதுகாப்பு கேடயம் அரிக்கப்படுவதற்கு தான் காரணமாவதை உணர்வதில்லை.

"உயிர்களைக் கொன்று மாமிச உணவைச் சாப்பிடக் கூடாது' என்று கூறினார் புத்தர். ஆனால், இன்று மாமிச உணவைச் சாப்பிடுகின்றனர் புத்த பிட்சுகள். ஏனென்று கேட்டால், "நாங்கள் மாமிசத்திற்காக உயிர் வதை செய்வதில்லை; மாமிசத்தைக் கடையில் வாங்குகிறோம்...' என்கின்றனர்.

அசைவ உணவை இயேசுநாதர் உண்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. சைவ உணவையே உண்டு வந்தார் முகமது நபி. குர்ஆனில், "அல்பகறர் (பசு)' என்ற முதல் அத்தியாயத்தில், "அல்லாஹ் (இறைவன்) மரங்களைப் படைத்தேன். ஏனென்றால், அவை உங்களுக்கு (மக்களுக்கு) நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக' என்று கூறியதாக குறிப்பிடுகிறார் நபிகள் நாயகம். மேலும், இறைவன், "பசுக்களை (பால் கொடுக்கும் மிருகங்களை ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை) படைத்தேன். அவற்றில் ரத்தத்திற்கும், சாணத்திற்கும் இடையில் பாலைப் படைத்தேன். ஏனென்றால் அது உங்களுக்கு நல்ல (ஹலால்) உணவாகும் என்பதற்காக' என்று குறிப்பிடுகிறார்.

"உணவாகும்' (மாமிசம்) என்பதற்காக என்று குறிப்பிடவில்லை. சொர்க்கத்தில் பாலும், பழங்களும், தேனும் கிடைக்கும் என்று கூறுகிறார் இறைவன். இதனால் , அவற்றின் சிறப்பை அறியலாம். தடை செய்யப்பட்ட உணவு என்று ரத்தத்தை கூறுகிறார் இறைவன்.
மாமிசத்திலிருந்து ரத்தத்தை முழுமையாக நீக்க முடியுமா? ஜைன மதத்தினரும், உயிர் வதையையும், மாமிச உணவையும் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். புத்த மதத்தைப் பின்பற்றும் சீனர்களும், ஜப்பானியர்களும் சைவ உணவை பின்பற்ற இயலாமல் மதக் கொள்கைகளுக்கு முரணான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். சைவ உணவுப் பழக்கத்தை பின்பற்றாத வரையில், மக்களிடம் பிற உயிரினங்களிடமும் அஹிம்சை முறையைப் பின்பற்றாத வரையில், இந்துக்களோ, பவுத்த மதத்தினரோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியரோ, யூதர்களோ, ஜைன மதத்தினரோ தங்கள் மதக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதாக ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரும்பாலும், மாமிச உணவை உண்டு வந்த, இந்த உலகையே ஒரு காலத்தில் ஆண்டு வந்த மேலை நாட்டினர், நுõற்றுக்கு நாற்பது பேர் சைவ உணவுப் பழக்கத்திற்கு மாறி விட்டனர். இதற்கு மதம் காரணமல்ல; மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் மூலம், மாமிச உணவு இதய நோயை உருவாக்கும் என்ற காரணத்தால்தான். இதிலிருந்து சிந்தனை பூர்வமாக செயல்படும்போது, தங்கள் செயல்களை மனிதர்கள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்று உறுதியாகிறது. எந்த மதமும் சிந்திக்காமல் செயல்படச் சொல்லவில்லை. மதங்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், அறிவுபூர்வமாகச் சிந்திக்க மறுக்கின்றனர். ஏனென்றால், தங்களது சொந்த ஆசாபாசங்களுக்கு முதலிடம் கொடுக்கும் போது, மதக் கோட்பாடுகளும், கருத்துகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

— இப்படி எழுதியுள்ளார்.

எந்த மதமுமே, ஒரு உயிரைக் கொன்று தின்னச் சொல்லவில்லை. விஞ்ஞானப் பூர்வமாகவும் அசைவம் நல்லதல்ல என தெரிய வந்துள்ளது. உணவுக்காக கால்நடைகளை வளர்ப்பதும், அதற்கு வியாதிகளை வரவழைத்து, பின்னர் லட்சக்கணக்கில் கொல்வதும் என்று முடிவுக்கு வருமோ?"

என்று அந்துமணி முடித்திருக்கிறார்.

***

ஆக புலால் உண்ணுதலை எந்த மதமும் ஆதரிக்கவில்லை எனும்போது ஏன் இன்னும் புலால் உண்கிறோம்?

பல்வேறு மதங்களின் சடங்குகளில் - சடங்குகள் மதங்கள் நம்பும் இறைவனுக்காக நடத்தப்படுவது என்னும் வகையில் - உயிர்வதை செய்து புலால் உண்ணுவது எப்படி ஆரம்பித்தது?

ஆட்டையும், மாட்டையும், கோழியையும் சாமியாடிவிட்டு கொன்று பலி போடுவதைப் பார்த்திருக்கிறேன் (அந்த உணர்ச்சியற்ற ஆட்டின் கண்கள்!). நண்பர்களின் வீடுகளுக்கு தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமதான் சமயங்களில் செல்லும்போதெல்லாம் தவறாமல் தரப்படும் மாமிச பிரியாணி. கோயில் திருவிழாக்களில் கும்பிடுகிறார்களோ இல்லையோ - கிடாவெட்டு கட்டாயம் இருக்கும். "இன்னிக்கு விசேஷம்ல? கோழியடிச்சுருக்கோம்" என்று ரப்பர் போல வழுவழு உடலில் மஞ்சள் போல் மசாலா பூசுவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது பிறந்த குழந்தை போல, தலை மட்டும் நில்லாது இங்கும் அங்கும் சாய்ந்து விழும்!

வளைகுடாவில் வாழ்ந்த அனுபவத்திலிருந்து எனக்குத் தோன்றிவது, மனிதன் வாழும் இடங்களைச் சார்ந்து, அங்கு இருக்கும் இயற்கை வளங்களைச் சார்ந்துதான் தனது உணவுமுறையை அமைத்துக்கொள்கிறான் என்பது. பாலைவன வளைகுடா நாடுகளில் விவசாயம் செய்து சைவத்தை மட்டும் உண்டு ஜீவிக்கமுடியாது. மஸ்கட்டிலிருந்தபோது கரடுமுரடான மொட்டை மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரின் பிரதான உணவு பேரீச்சம்பழங்கள். அதைவிட்டால் நெருப்பில் சுட்ட ஆட்டின் மாமிசம். பேரீச்சம்பழங்கள் கிடைக்காத காலங்களில் மாமிசம் உண்பதைத் தவிர வேறு வழியே கிடையாது அவர்களுக்கு. இதைப் போலவே பனிப்பிரதேசங்களில் அல்லது அதிகக்குளிர் நிலவும் இடங்களிலும் விளைநிலங்கள் இல்லாத இடங்களிலும் மனிதனுக்குக் கிடைப்பதை வைத்தே உண்டு உயிர்வாழ்கிறான். கடலோரங்களில் வாழ்பவர்கள் மீன் உண்பதும் (கல்கத்தாவில் பிராமணர்கள் மீன் உண்பது சாதாரணம் என்று எனது பெங்காலி நண்பர் சொல்லியிருக்கிறார்), மலைப்பிரதேசங்களில் இருப்பவர்கள் அங்கு கிடைப்பதை உண்டும் வாழ்வதும் - இப்படி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை - என்று இருக்கும் இடத்திற்கேற்ப உணவுமுறைகளை அமைத்துக்கொண்டிருக்கிறான் மனிதன். இதில் புலாலை மறுத்து சைவமாக இருப்பது அனைவருக்கும் சாத்தியமாக இல்லாமலிருக்கலாம் - போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்ற எந்த வசதிகளுமில்லாத அக்காலத்தில்.

ஆனால் இப்போது மனிதர்களை இரண்டே வகைகளில் பிரித்துவிடலாம். வறுமையிலிருக்கும் ஏழைகள். வசதி படைத்தவர்கள். வறுமையிலிருக்கும் ஏழைகள் பஞ்சத்தில் எலியைக் கூட தின்ன வேண்டியிருக்கிறது. வசதி படைத்தவர்கள் மினரல் வாட்டரில் கூட கழுவிக்கொள்ளலாம். பாலில் குளிக்கலாம். ஆக பிரச்சினை பொருளாதார ரீதியிலினான ஏற்றத் தாழ்வுகள். இவற்றை அறவே நீக்குவதென்பது முதலாளித்துவ உலகத்தில் எந்த அளவு நடைமுறையில் சாத்தியப்படும்; எத்தனையா (நூற்றா)ண்டுகள் பிடிக்கும் என்றும் தெரியவில்லை. ஆனால் உயிர்வாழக் குறைந்தபட்சத் தேவையான உணவாவது அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும்; பட்டினிச் சாவுகள் ஒழியவேண்டும். இது ஒன்றுதான் இப்போதைய நிலையில் வல்லரசுகளிலிருந்து எள்ளரசுகள் வரை அனைவரும் முனைந்து செயலாற்ற வேண்டிய விஷயமாக எனக்குப் படுகிறது. மெனக்கெட்டுச் செயலாற்றினால் சைவர்களாக அனைவரும் மாறுவதும் சாத்தியம்தான் என்று தோன்றுகிறது. சாதி, மதம், எல்லை யுத்தங்கள், பொருளாதாரத் தாக்குதல்கள், கொடுங்கோலாட்சியை அகற்றுவது, செவ்வாய்க்குப் போவது போன்றவை அஜெண்டாவில் கடைசிக்குத் தள்ளப்படவேண்டிய விஷயங்கள்.

"பொருளாதாரம் உயர்ந்தால்தான் வேலைவாய்ப்பு பெருகும்; அரசுக்கும் வருவாய் கிடைக்கும்; அப்போது வறுமைக் கோட்டை எச்சில் தொட்டு அழித்துவிடலாம்" போன்ற அரதப் பழைய வசனத்தைச் சொல்லாமல் உண்மையிலேயே நிறைய அனைத்து அரசாங்கங்களும் மெனக்கெடவேண்டும் என்று நினைக்கிறேன். நம் நாட்டிலேயே ஐம்பது வருடங்களாகத் தலைவர்கள் வாக்குறுதிகளை அள்ளிவீசிக்கொண்டு கடைசியில் நெஞ்சுவலி வந்து குளிரூட்டப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அரசு செலவில் படுத்துக்கொண்டு விடுகிறார்கள்.

குற்றங்களின் ஆணிவேர் பசி. அது தீர்க்கப்பட்டால் மக்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு நம்மைப் போன்று இலக்கியத் தேடல்களில் கூட ஈடுபட முனைவார்கள் என்று தோன்றுகிறது.

"ஒருவன்/ஒருத்தி எப்படி வாழவேண்டும் என்பதைக் காட்டுவது மதம்" அதாவது "வாழ்வியல் முறை"களைச் சொல்வது மதம். அப்படிப்பட்ட மதங்கள் புலால் உண்ணுவதை ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக அந்துமணி குறிப்பிட்டுள்ள வேதகிரி கணேசன் அவர்களது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது எந்த அளவு உண்மை?.

இதை அறிந்தவர்கள், அறிஞர்கள் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் - அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன்.



அது சரி இப்போதைய ஆயுதக்குவிப்பு உலகில் இன்னொரு உலகப்போர் வந்தால், அணுகுண்டுகளைப் போட்டு பூச்சி பொட்டுகள் இல்லாது எல்லாவற்றையும் அழித்து, தின்பதற்கு புல் பூண்டு கூட முளைக்காதபடி செய்துவிடுவான் மனிதன். பிறகு சைவமென்ன அசைவமென்ன? அப்போது இவ்வுலகத்தில் நரமாமிச பட்சிணிகள்தான் இருப்பார்கள் - கடைசி ஆள் தன்னையே கொன்று தின்னும் வரை!

குழம்பு நன்றாக இருக்கிறது என்று ஆள்காட்டி விரலைச் சப்புக்கொட்டி நக்கியதுண்டு. அந்தக் கடைசி மனிதனாக இருந்து, என் ஆள்காட்டி விரலை நானே கடித்துத் தின்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க பயமாக இருக்கிறது!

***

நன்றி : அந்துமணி பா.கே.ப. வாரமலர்


9 comments:

துளசி கோபால் said...

நினைக்கவே பயமா இருக்கு.

G.Ragavan said...

சுந்தர்,எனக்கென்னவோ இந்தக் கட்டுரை ஒரு அதீத அச்சத்தின் உச்சத்தில் அமர்ந்து எழுதப் பட்டுள்ளதோ என்றே தோன்றுகின்றது.

இதில் காணப்படுகின்ற முரண் : இயற்கையோடு விளையாண்டால் இயற்கை நம்மோடு விளையாடும். சரிதான்.

அசைவ உணவுப் பழக்கம் இயற்கைக்கு ஒவ்வாதது என்றால்.....கண்டிப்பாக இயற்கை அதைத் தட்டி வைக்கும்.

மேலும் இந்தியாவில் அனைவரும் சைவர்களாக இருந்தார்கள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளவே முடியாயது. திருமுருகாற்றுப்படையை எடுத்துக் கொள்ளுங்கள். முருகன் கோயிலில் கெடா வெட்டியதைச் சொல்கின்றது. சங்க நூல்களை எடுத்துக் கொள்ளுங்கள் திருமாலுக்கு மீனைப் படைத்ததைச் சொல்கின்றது. கொற்றவைக்கும் விரிசடையனுக்கும் சொல்லவே வேண்டியதில்லை.

சேர, சோழ பாண்டிய மன்னர்களாவது சைவம் உண்பவர்களாக இருந்தார்களா என்றால் இல்லை என்பதே விடை. இதெற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்க....ஏதோ திடீரென்று அனைவரும் சைவ உணவிற்கு மாறி விட்டது போல உள்ளது கட்டுரை.

மனிதனை மனிதனே உண்ணும் பழக்கம் இப்பொழுது இல்லை. முன்பு இருந்திருக்கின்றது. ஆக மனிதன் உணவு விஷயத்தில் கொஞ்சம் மென்மையடைந்திருக்கிறான் என்றே கொள்ள வேண்டும்.

அசைவம் சாப்பிடுவதால் ஒருவர் இந்துவாகவோ முஸ்லீமாகவோ புத்தராகவோ இருக்க முடியாது என்று சொல்வது ஏற்புடைய கருத்தே இல்லை.

இருக்கின்ற இடத்தில் கிடைப்பதை வைத்து உணவுப் பழக்கம் வந்தது என்ற கட்டுரை சொல்கின்றது. உண்மைதான். ஒப்புக் கொள்ளக் கூடியதுதான். ஆனால் சீனர்களும் ஜப்பானியர்களும் புத்தர்களாக இருந்தாலும் மாமிசம் சாப்பிடுகின்றார்கள் என்று சொல்கின்றது அதே கட்டுரை.

புத்த மதத்திற்கு முன்னமே தோன்றியவை அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்கள். அப்படி இயற்கை வழி வந்த உணவுப் பழக்கத்தை எப்படி விட முடியும்? இயற்கைக்கு மாறாக நடந்தால் இயற்கை அழித்து விடாதா?

சரி. இயற்கையோடு ஒட்டிப் பிறந்த உணவுப் பழக்கத்தைத்தான் பின்பற்ற வேண்டுமென்றால்....நாம் சங்க இலக்கியத்தில் உள்ள உணவுப் பழக்கத்திற்கு மாறி விடலாமா?

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்ததே. இது உலகம் முழுதும் உள்ள பிரச்சனைதான். சைவம் தின்னும் பணக்காரர்களே இல்லையா?

அசைவ உணவுப் பழக்கத்தில் சாதக பாதங்களை அலசுவதில் கொஞ்சம் பயனுள்ளது. மருத்துவர்கள் சிலவகை அசைவ உணவுகளை விலக்கச் சொல்வதும் உண்டே.

தினமலரில் அந்துமணியின் பா.கே.பாவின் இதற்கு மேலும் எதுவும் எதிர் பார்ப்பது மிகக்கடினம்.

Anonymous said...

i have spent sleepless nights looking at the goats and sheep in every nook and corner during bakrid...

Sundar Padmanaban said...

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ராகவன்.

நிறைய மேற்கோள்கள் கொடுத்திருக்கிறீர்கள்.

பல்வேறு கால கட்டங்களில் அப்போது பெரும்பான்மையாக இருந்த சமயக் கோட்பாடுகளின்படி வேதங்களிலும், புராணங்களிலும் புலால் உண்ணுதல் பற்றியோ, விலக்குதல் பற்றியோ இந்தியர்கள் குறிப்பிட்டிருக்கலாம்.

மதங்கள் புலால் உண்பதை வலியுறுத்துகின்றனவா இல்லையா என்பதை அந்தந்த மதங்களின் மறைகளைப் படித்துள்ள அறிஞர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும். திருக்குறளில் புலால் உண்ணாமை குறித்து திருவள்ளுவர் வலியுறுத்தியிருக்கிறார் என்றால் அப்போது புலால் உண்ணும் பழக்கம் இருந்தது என்றுதானே பொருள்? ஆக, புலால் உண்ணும் பழக்கம் எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறது. யுவான் சுவாங் இந்தியா முழுவதும் இந்துக்கள் சைவர்களாக இருந்தனர் என்பது அவரது பார்வை. எந்த அளவு இந்தியா முழுவதும் அவர் பிரயாணம் செய்தார் - எவ்வளவு இடங்களைப் பார்த்தார் என்பதை படித்துத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். வெளிநாட்டுக்காரர்கள் இந்தியாவுக்கு வந்து ஒரே ஒரு இடத்தை மட்டும் பார்த்துவிட்டு மொத்த இந்தியாவையும் - இப்படித்தான் போல - என்று உருவகித்துக்கொள்வது போல யுவான் சுவாங் செய்யாதிருந்தால் அதுவே பெரிய விஷயம். எல்லா வசதிகளும் இருக்கும் இக்காலத்திலேயே நாடுகளைப் பற்றி நாம் சரிவர அறிந்துகொள்வதில்லை. நம்மைப் பற்றியும் வெளிநாட்டினர் சரிவர அறிந்துகொள்வதில்லை. எந்தவசதியுமில்லாத அக்காலத்தில் - அப்போதிருந்த நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் பார்க்கும்போது எதை வைத்து யுவான் சுவாங் "இந்துக்கள் அனைவரும் சைவம் உண்டனர்" என்று எழுதியிருப்பார் என்று தெரியவில்லை.

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற மனோபாவமும் பரவலாக இருக்கிறதே. ஆனாலும் உயிர்வதை என்பது எந்த அளவு ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பது பெரும் விவாதப் பொருள்.

சிங்கம் மானைக் கொன்று தின்பதோடு மனிதன் ஆட்டைக் கொன்று தின்பதை ஒப்பிட முடியாது. சில விலங்குகள் அசைவ பட்சிணிகள். சில சைவ பட்சிணிகள். மனிதன் இரண்டையும் தின்கிறான். உயிர்வதை எந்த அளவு நம்மை, நம் எதிர்காலத்தைப் பாதிக்கப்போகிறது என்று இப்போது தெரியவில்லை. சிலர் கணித்திருக்கலாம். அச்சத்தின் உச்சமே இக்கட்டுரையின் வெளிப்பாடு என்று நீங்கள் குறிப்பிட்டது சரிதான்.

இயற்கைக்கு எதிராக மனிதன் போகும்போது இயற்கை தட்டி வைக்கும். காடுகள் அழிக்கப்படுவதிலிருந்து எத்தனையோ இயற்கையை அழிக்கும் சேயல்களை மனிதன் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறான். இயற்கை மொத்தமாக ஒரு நாள் தட்டும்போது குய்யோ முறையோ என்று பரபரப்பாக அடித்துக்கொண்டு கொஞ்ச காலம் கழிந்ததும் பலியான லட்ச உயிர்களும் மறக்கப்பட்டு பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவோம். இது வரை இயற்கையழிவுகளிலிருந்து உருப்படியாகப் பாடம் கற்றுக்கொண்டு திருந்தியிருக்கிறோமா என்பது கேள்விக் குறியே!

வெள்ளம் வந்தபிறகுதான் கூவம் ஆக்கிரமிக்கப்பட்டது கண்டு கொள்ளப் படுகிறது. அது போல ஏதாவது பேரழிவு ஏற்படும் சமயங்களில் மட்டுமே விழித்துக்கொள்வது என்ற நிலை மாறி கொஞ்சம் முன்யோசனையுடன் செயலாற்றத் துவங்கினால் நலம் என்பதே என் அவா.

நானும் ஒரு காலத்தில் அசைவம் உண்டிருக்கிறேன். ஆனாலும் மனதில் ஒரு குற்ற உணர்வு இருந்துகொண்டே இருக்கும். ஒரு நன்னாளில் நிறுத்தி பத்து வருடங்களாகிவிட்டது. கனவில் கூட நினைப்பதில்லை இப்போதெல்லாம்.

துளசிக்கா, அனானி நன்றி.

நன்றிகள்.

Anonymous said...

சுந்தர், பயப்படுத்தாதிங்க!!., 1 வாரம் நான் கோழிய மறந்தா., அதுவா கனவுல வந்து மறந்துட்டியான்னு கேட்குதுல்ல?. என்னாது உலகம் அழுஞ்சு., நம்ம விரல நாமே... யப்பு.... நல்ல பாட்டுகீட்டு இருந்தா போட்டுக் கேளுங்க. வாழ்க்கைய இரசிக்கிற ஆளாச்சே நீங்க?!., என்னாச்சு?., அந்துமணி எழுதுறதையெல்லாம் படிச்சா இப்படித்தான் அதீதமா பயம் வரும்.

இப்னு பஷீர் said...

சுந்தர், இன்னொரு முறை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கருத்துக்களை மறுக்க வேண்டியதாகி விட்டது. விளக்கமான பதிலை, குறிப்பாக இஸ்லாம், குர்ஆன் வசனங்கள் பற்றிய கருத்துக்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.

Sundar Padmanaban said...

//கோழிய மறந்தா., அதுவா கனவுல வந்து மறந்துட்டியான்னு கேட்குதுல்ல?. //

எனக்கு அப்படியே உல்ட்டா. சிக்கனைப் பாக்கும்போதெல்லாம், காதுல 'கொக்கரக்கோஓஓஓ'ன்னு கோழி அழுவுற மாதிரி பிரமை. :))

//வாழ்க்கைய இரசிக்கிற ஆளாச்சே நீங்க?!., என்னாச்சு?., அந்துமணி எழுதுறதையெல்லாம் படிச்சா இப்படித்தான் அதீதமா பயம் வரும்.
//

நன்றி. ஆமாம். என மன உளைச்சல்களோடு உழல்வது பிடிக்காது. மலை போலக் கஷ்டம் வந்தாலும் தூசி மாதிரி உதறிட்டு போயிட்டே இருக்கற ஆசாமி (சில சமயம் எனக்கே என் மேல இதனால கோவம் வரும்!).

ஆனாலும், slow poison மாதிரி நிகழ்ந்துவரும் அழிவுகள் கவலையைத் தருகின்றன. நமக்கு இல்லாவிட்டாலும் எதிர்கால சந்ததியினருக்கு வரும் கஷ்டங்களை நினைத்து.

நன்றி.

Sundar Padmanaban said...

//சுந்தர், இன்னொரு முறை நீங்கள் எடுத்து வைத்திருக்கும் கருத்துக்களை மறுக்க வேண்டியதாகி விட்டது. விளக்கமான பதிலை, குறிப்பாக இஸ்லாம், குர்ஆன் வசனங்கள் பற்றிய கருத்துக்கள் பற்றி பிறகு எழுதுகிறேன்.

//

பஷீர் அண்ணாத்தே! நீங்க இன்னொரு முறையல்ல. நூறு முறை - ஏன் எல்லா முறையுமே கருத்துகளை மறுத்து தாராளமாக எழுதலாம். வரவேற்கிறேன். ஒரே சின்ன திருத்தம் - குறிப்புகள் என்னுடையது அல்ல. அந்துமணி குறிப்பிட்டிருந்த கட்டுரையிலிருக்கும் கருத்துகள் அவை.

நான் கூறியது ஒன்றே ஒன்றுதான். அது

//மதங்கள் புலால் உண்பதை வலியுறுத்துகின்றனவா இல்லையா என்பதை அந்தந்த மதங்களின் மறைகளைப் படித்துள்ள அறிஞர்கள்தான் தெளிவுபடுத்தவேண்டும். //

என்பதுதான். நான் முன்பே முத்துக்குமரன் பதிவில் கூறியுள்ளபடி, எனக்கு எம்மறைகளும் தெரியாது. புலால் உண்ணுவது தவறா; உண்பது வாழ்வியல் நெறிகளோடு சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே. வாழ்வியல் நெறிகளைக் கொடுக்கும் மறைகள் புலால் உண்பதைப் பற்றி என்ன சொல்கின்றன என்று மட்டும் அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்டிருக்கிறேன். இக்கேள்வி அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன் - பதிவில் தெளிவாகக் குறிப்பிடாமலிருந்தால்.

உங்க்ள் கருத்துகளை படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜோசப் ஸார் வந்து எதாச்சும் சொல்வாருன்னு எதிர்பார்த்தேன். அவர் இப்பதிவைப் படிச்சாரான்னே தெரியலை :(

நன்றி நண்பரே.

இப்னு பஷீர் said...

சுந்தர், //ஒரே சின்ன திருத்தம் - குறிப்புகள் என்னுடையது அல்ல. அந்துமணி குறிப்பிட்டிருந்த கட்டுரையிலிருக்கும் கருத்துகள் அவை.// இதை நான் நன்கு புரிந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் நீங்கள் 'எடுத்து வைத்திருக்கும்' கருத்துக்கள் என்று குறிப்பிட்டேன்.

இதற்கான பதில் சற்று நீளமாகி விட்டதால், எனது பதிவில் வைத்திருக்கிறேன். சிரமம் பாராது அங்கு சென்று படிக்கவும். நன்றி.

http://ibnubasheer.blogsome.com/2006/01/14/non-vegetarianism/