Wednesday, January 11, 2006

த டெர்மினல் - திரை விமர்சனம் (The Terminal - Film Review)



எனக்குப் பிடித்த ஹாலிவுட் நடிகர்களில் முக்கியமானவர் டாம் ஹாங்க்ஸ் (Tom Hanks). அசப்பில் ஆரம்பகால கயாமத் ஸே கயாமத் தக் பட அமீர்கான் போல இருக்கும் டாம், அந்தத் துறுதுறு கண்களுடன் அலட்டிக்கொள்ளாமல் நடிக்கும் மெக் ரயானுடன் (Meg Ryan), மென்மையான பாத்திரங்களில் நடித்த You've Got Mail, Sleepless in Seattle படங்களை மறந்திருக்க மாட்டோம்.

ஒரு சிறுகதை முடிச்சை வைத்துக்கொண்டு இயல்பான நிகழ்வுகளைப் பின்னிப் பிணைந்து ஆர்ப்பாட்டம், வெட்டு குத்து தொப்புள் நடனங்கள், பஞ்ச் டயலாக், ஐட்டம் சாங் என்ற குத்துப்பாட்டு, வெளிநாட்டு வழுவழு சாலை சந்திப்புகளில் கும்தலக்கடி கும்மா என்று ஆடுவது - போன்ற மசாலா அம்சங்கள் எதுவுமின்றி நேரடியாகக் கதை சொல்லப்படும் இம்மாதிரி படங்களை அசத்தலாக எடுக்கிறார்கள்.

இதே மாதிரி தமிழில் படங்கள் வராதா என்று நீண்டகாலமாக ஏங்கிக்கொண்டிருக்கிறேன். (பாடல்கள் தவிர்த்த) நம்மவர் படத்தை இவ்வகையில் சேர்க்கலாமா?

அந்த வரிசையில் டாம் ஹாங்ஸ் நடித்து 2004-இல் வந்த இன்னொரு படம் The Terminal. சமீபத்தில் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அசந்து போகச் செய்திருந்தார் மனிதர்.

விக்டர் நவோர்ஸ்கி என்ற நபர் சலாமியா மாதிரியான க்ரகோஷியா (Krakhosia) என்ற கற்பனை தேசத்திலிருந்து நியூயார்க்கின் JFK விமான நிலையத்திற்கு வருகிறார். வந்து இறங்கும் அதே சமயத்தில் உள்நாட்டுப் போரின் எதிரொலியாக க்ரகோஷியாவில் ஆட்சி கவிழ்ந்து ஆங்காங்கே கலவரங்கள் வெடித்து அரசியல் ரீதியாக எந்த அமைப்பும் ஆட்சியில் இல்லாமல், அதே ரீதியில் க்ரகோஷியா என்ற தேசமே இல்லாது போகிறது. அதாவது விக்டர் வைத்திருக்கும் கடவுச்சீட்டோ, அமெரிக்காவில் நுழைவதற்கான விசாவோ செல்லாதவை. விக்டர் எதற்காக அமெரிக்காவுக்கு வருகிறார் என்பதும் புரியாத புதிர். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. விமானநிலைய அதிகாரிகளுக்கு விக்டர் பேசும் மொழியின் (பல்கேரியன்) அட்சரம் கூட தெரியாது (இதன் தொடர்ச்சியான விமானநிலைய அதிகாரிகளுக்கும் விக்டருக்குமான உரையாடல்கள் சரியான கலாட்டா). குடியேற்ற அதிகாரிகள் விக்டரை அனுமதிக்க மறுக்கிறார்கள். சரியான விசா இல்லாதவர்களைப் பொதுவாக வெளியேற்றிவிடுவது எல்லா நாடுகளின் வழக்கம். விக்டர் வெளியேறி எங்கே போவார் என்பதில் குழப்பம். ஆட்சி வீழ்ந்த க்ரகோஷியா தேசமே இல்லை. அதாவது ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை; ஒருமாதிரி திரிசங்கு சொர்க்கத்தில் - மன்னிக்க - நரகத்தில் மாட்டிக்கொண்டு விக்டர் படும் அனைத்து அவஸ்தைகளையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறார்கள்.

க்ரகோஷியாவில் நிலவரம் சரியாகும்வரை, ஒரு முடிவு கிடைக்கும்வரை, விமானநிலைய வளாகத்திலேயே இருக்க அதிகாரிகளால் அறிவுறுத்தப்படுகிறார் விக்டர். அவரை என்ன செய்வது என்று தெரியாமல் பயங்கரமாக விழிக்கிறார் புதிதாக விமான நிலைய மேலாளராகப் பதவி ஏற்றுள்ள ப்ராங்க் டிக்ஸன் (Stanley Tucci). விக்டருக்கு அவர் கொடுக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. சட்டத்துக்குப் புறம்பாக விக்டரை விமானநிலையத்திலிருந்து வெளியே செல்லத் தூண்டி அவர் அப்படி வெளியேறும் பட்சத்தில் காவல்துறையிடம் சொல்லிக் கைது செய்ய அனைத்து ஏற்பாடுகளும் அவர் செய்ய, கடைசி வினாடியில் விக்டருக்கு மண்டைக்குள் மணியடிக்க வெளியேறாமல் திரும்பிவிடுகிறார். இப்படி ஏகக் களேபரங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

தனது அபாரமான இயல்பான நடிப்பால் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார் விக்டராக நடித்த டாம் ஹாங்க்ஸ். படம் துவங்கிய சில நிமிடங்களில் டாம் ஹாங்க்ஸ் மறைந்துபோய் விக்டர் நம் மனதில் அமர்ந்துகொள்கிறார். தவித்துக்கொண்டிருக்கும் விக்டருக்கு யாராவது உதவ மாட்டார்களா? அவருக்கு நல்லது நடக்காதா என்று நம்மைக் கவலைப்படச் செய்வதே டாம் ஹாங்க்ஸ்ஸின் நடிப்பின் வெற்றி.

கதையில் இடைச்செருகல்களாக சில உபகதைகள்.

தினப்படியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்துகொண்டு போய் கவுண்ட்டரில் இருக்கும் பெண் அதிகாரி டாரஸ்ஸிடம் கொடுப்பதும் அவர் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்து திருப்பி அனுப்பவதும் நடக்கிறது. டாரஸ் மீது காதல் கொண்டிருக்கும் நிலைய பணியாளர் என்ரிக் க்ரூஸ் விக்டருக்கு உதவ முன்வருகிறார். இருவரும் செய்து கொள்ளும் ஒப்பந்தப்படி விக்டருக்கு என்ரிக் உணவளிக்க, விக்டர் விண்ணப்பத்துடன் என்ரிக் சார்பாக கடிதங்களை டாரஸ்ஸிடம் கொடுக்கவேண்டும்.

சுத்தம் செய்யும் பணியாளராக வரும், பல வருடங்களாக அமெரிக்காவில் இருக்கும், குப்தா ராஜன் என்ற இந்தியரின் தொடர்பும் விக்டருக்குக் கிடைக்கிறது. குப்தா அமெரிக்காவுக்கு வந்த காரணம் சுவாரஸ்யமானது. சென்னையில் பொட்டிக்கடை நடத்தும் குப்தாவிடம் தினமும் லஞ்சம் பெற்றுச் செல்லும் போலீஸ்காரரை ஒரு நாள் குத்திக் கொன்றுவிட்டு அமெரிக்காவுக்கு விமானம் ஏறி வந்தவராம் அவர். வந்ததிலிருந்து விமானநிலையத்தில் துப்புரவுப் பணி! திரும்பப் போனால் பிடித்துக்கொள்வார்கள் என்பதால் போகாமல் இங்கேயே இருக்கிறேன் என்று விக்டரிடம் சொல்கிறார் குப்தா.

இதற்கிடையில் அடிக்கடி வந்து செல்லும் விமான பணிப்பெண் அமெலியா வாரனுடன் (Catherine Zeta Jones) விக்டருக்குக் காதல் மலருகிறது. விக்டரை ஒவ்வொரு முறை வரும்போதும் பார்க்கும் அமெலியா அவர் ஏதோ அலுவல் விஷயமாக அடிக்கடி பறக்கும் நிறுவன அதிகாரி என்று நினைத்துக் கொள்கிறார். காதலில் தடுமாறும் விக்டருக்கு, மொழிப் பிரச்சினையாலும், அமெலியாவிடம் அவரது நிலைமையைச் சொல்லமுடிவதில்லை.

இறுதிக்காட்சியில் நிறையவே சினிமாத்தனம். கிளம்பிக்கொண்டிருக்கும் விமானத்தைத் தடுக்கும் குப்தா, விக்டரை நியூயார்க்குக்குள் நுழைய விடாமல் தடுக்கத் துடிக்கும் மேலாளர், இறுதியில் பாதுகாப்பு அதிகாரி கருணைகொண்டு விக்டரை விமானநிலையத்திலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கிறார். இதெல்லாம் அமெரிக்காவில் நடைமுறையில் எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை.


விமானத்தில் உள்ளிருந்து மனநிலை சரியில்லாத ஒருவர் அவரது பையுடன் நிற்காமல் ஓடினார் என்ற ஒரே காரணத்துக்காகச் சமீபத்தில் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். குப்தா மாதிரி விமான மறியல் செய்தால் என்ன ஆகும் என்று சொல்லவேண்டியதில்லை.

கொசுறு தகவல்கள்:

இப்படத்தை எடுக்கத் தூண்டிய உண்மைச் சம்பவம் : மேரன் நஸேரி (
Merhan Nasseri) என்ற ஈரானிய அகதி 1988-இல் ஐ.நா.வால் கொடுக்கப்பட்ட அகதிகளுக்கான சான்றிதழைத் திருட்டுக்கொடுத்ததால் இங்கிலாந்தில் அனுமதி மறுக்கப்பட்டு பிரெஞ்சு தேசத்திற்கு வந்திறங்க அங்கும் அனுமதி மறுக்கப்படுகிறார். அவரை அங்கிருந்து கிளம்பவும் விடாததால் Terminal One-லேயே - தேசமற்ற அகதியாக - தங்க நேரிடுகிறது. பிறகு திரும்பச் செல்லவோ, அல்லது பிரஞ்சு தேசத்துக்குள் நுழையவோ அனுமதி கொடுக்கப்பட்ட போது, அவர் எங்கும் செல்ல மறுத்து விமானநிலையத்துக்குள்ளேயே தங்க முடிவெடுத்துவிட்டாராம். 2004 கோடைக்காலம் வரை அவர் அங்கேயே வசித்துக்கொண்டிருந்ததாகச் செய்தி.

பாதுகாப்பு காரணங்களால் படபிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டு, விமானநிலையத்தின் மொத்த உள்ளமைப்பையும் அட்டகாசமாகக் கட்டமைப்பு செய்து எடுத்திருக்கிறார்கள். செட் என்றால் நம்ப முடியவில்லை. ஆர்ட் டைரக்டரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஈ.ட்டீ., ஜாஸ், ஜுராஸிக் பார்க் போன்று பிரம்மாண்ட படங்களைத் தந்திருக்கும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் த டெர்மினல் போன்ற மென்மையான படத்தை எடுத்திருக்கிறார் என்றால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது.

துபாயில் சரியான விசா இல்லாமல் அந்த பிரம்மாண்ட விமானநிலையத்தின் ஏதாவது ஒரு மூலையில் முடங்கிக்கிடக்கும் சில ரஷ்யர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரே உடை ஒரு சிறு பையுடன் நான்கைந்து நாட்கள் உள்ளேயே சுற்றித்திரிந்த பிறகு அதிகாரிகள் வந்து அழைத்துச் செல்வதை அருகிலேயே இருந்து பார்த்திருக்கிறேன்.

த டெர்மினலில் விக்டருக்கு ஏற்பட்ட கதி, நிஜத்தில் நடந்திருக்கிறது. நடக்கக்கூடிய சாத்தியங்களும் உண்டு.

மொத்தத்தில் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

***

11 comments:

Boston Bala said...

அண்மையில்தான் நானும் இந்தப் படத்தை பார்த்தேன்.

சோகமான நிகழ்வை நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார்கள். டாம் ஹான்க்ஸ் மேல் கழிவிறக்கம் அதிகம் வராதபடி, அதே சமயம் அவரையொத்த குந்துரத்தர்களின் (கன்சல்டண்ட்) மேல் பரிதாபம் வரும்படி சொன்னது பிடித்திருந்தது. ஹீரோயினையும் ஹீரோவையும் சேர்த்து வைப்பார்கள் என்று ஆசையாக எதிர்பார்த்தால், மலையாளப் படம் போல் முடித்து விட்டார்கள்.

நுணுக்கமாக ஆய்பவன் என்பது 'ஆட்டுக்கு மருந்து' போன்ற காட்சிகளில் இயல்பாக வந்திருந்தது. நியு யார்க் போன்ற அமெரிக்க பெருநகரங்களில் கூட்டமைப்பு வைத்திருக்கும் தினக்கூலிகளின் சம்பளம் விமான நிலைய மேலாளரின் சம்பளத்தை விட அதிகம் இருப்பதை எடுத்து வைப்பது; சரித்திர புத்தகங்கள் எனக்குப் பிடிக்கும் என்பதற்கு காரணமாக நாயகி சொல்லும் காரணம்: 'அவை குறைந்த விலையில் நிறைந்த பக்கங்களைக் கொண்டது; மேலும் மனுசனை மனுசன் கொல்லும் காட்சிகள் நிறைந்தது' (எனக்கும் சரித்திர புத்தகங்கள் பிடிக்கும் - கிட்டத்தட்ட நாயகி சொன்ன முதல் காரணத்துக்காக ;-))

மிகவும் பிடித்த காட்சி என்றால் 'உன் நாட்டுக்கு திரும்பப் போக உனக்கு பயமாகத்தானே இருக்கிறது?' என்று விடையையும் சொல்லிவிட்டு கேள்வி கேட்கும்போதும் தன்னிச்சையாக 'இல்லையே' என்று வெளிப்படும் விடை. அமெரிக்காவில் என்னதான் பாதுகாப்பாக இருந்தாலும் இந்தியாவில் உணர்ந்த சுதந்திரம் இல்லையே என்று பளிச்சிடும்.

பூனைக்குட்டி said...

மிகவும் நன்றி சுந்தர். எனக்கும் டாம் ஹாங்ஸ் ரொம்ப பிடிக்கும் அந்தப்படமும்(The Terminal).

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நாளாய் பார்க்க நினைத்திருந்த படம். கடைசியாக பார்த்தது ஒரு (லேட்டாய் போன) விமானத்தில். மிகவும் ரசித்தேன். யாருடைய படம் என நினைக்கயில் திரையில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் பெயர். தலைவர் கலக்கிட்டார். கட்டாயம் பார்க்க வேண்டிய படம். அந்த விமான நிலையம் செட்டுங்களா? நம்பவே முடியலையே.

Sundar Padmanaban said...

பாலா, ஆமா. கொஞ்சம் சிக்கலான காட்சியமைப்புகள். நம்ம மெகா சீரியல் மக்கள் இந்தப் படத்தோட க்ளைமாக்ஸை பாத்திருந்தா "இப்படிப் போறாளே இந்தக் கேத்தரீன் பொண்ணு"ன்னு உச்சு கொட்டிருப்பாங்க :)

டாம் ஹாங்ஸ்ஸோட அப்பா, ஜாஸ் குழு, ஆட்டோ கிராப் வாங்கறதெல்லாம் இங்கிலீஷ் செண்டிமெண்ட் போல! நமக்கு ஒட்டலை. "தந்தையோட விருப்பத்தைக் கஷ்டப்பட்டு நிறைவேற்றும் மகன்"-ன்னு அப்படியே தமிழ்ப்பட பார்முலாவா இருந்துச்சு! :)

நன்றி மோகன் தாஸ். இலவசக்கொத்தனார் (அட அட என்ன பெயர்! எப்படித்தான் தோணுதோ!)

நிலா said...

டாம் தவிர படத்தில் வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை. முதல் பாதியில் இருந்த அழுத்தம் இரண்டாவது பாதியில் இல்லை. எப்படி எடுத்துச் செல்வது என்ற தெரியாமல் திணறியது போல் தோன்றியது. உண்மைக் கதைகளை எழுதுவதிலும் எடுப்பதிலுமுள்ள சிரமம் இது (கரு மட்டும் உண்மையாக இருந்தால்கூட அதை சிதைத்துவிடுவோமோ என்ற பதட்டம் இருக்கும்).

செட்டிங் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் நம்ப கடினமாக இருக்கிறது. அத்தனை தத்ரூபம்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த உப கதைகள் சின்ன ஆறுதல். கேதரீனின் பாத்திரப்படைப்பும் அவரின் காதலும் சுத்தமாய் கதையுடன் ஒட்டவில்லை. அதே போல் அந்த மேலதிகாரிக்கு விக்டர் மேல் அப்படி என்ன காட்டம் என்பதும் சரியாகச் சொல்லப்படவில்லை.

Sundar Padmanaban said...

//செட்டிங் என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் நம்ப கடினமாக இருக்கிறது. அத்தனை தத்ரூபம்.
//

விமானங்கள் வரும் காட்சி ஓடுதளக்காட்சி எல்லாம் கனடாவில் ஒரு விமானநிலையத்தில் எடுக்கப்பட்டது. விமானநிலைய வளாகம், கடைகள், எல்லாமே உள்ளரங்கு அமைக்கப்பட்டு - தத்ரூபமாக - எடுக்கப்பட்டதாம். அவ்வளவு நேர்த்தி!

நன்றி.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

The airport scenes were shot in Mirabel airport outside of Montreal.

The movie didnt attract me that much. Recently Spielberg said that this is his favourite movie. Some scenes were thought provoking. The director or the actor wouldnt have thought about that..

But, this movie is much better than 'War of the Worlds. :)

-Mathy

இலவசக்கொத்தனார் said...

சுந்தர்,
ரொம்ப பேர் நம்ம பெயரை பத்தி கேக்கறாங்க. ஒரு பதிவே போட்டாச்சு. வந்து படிச்சி பாருங்களேன்.
http://elavasam.blogspot.com/
நன்றி

Sundar Padmanaban said...

Mathy, Thanks for the info. The most memorable part in this movie is "Tom Hanks" as Victor Navorski. The rest are webbed around him and he dominated everything else.

இலவச கொத்தனார் அவர்களே.

உங்க பதிவுக்கு வந்து வேகமா ஒரு பார்வை பாத்தேன். இதுக்கு முன்னாடி இந்தப் பெயரைக் கேள்விப்படவேயில்லையேன்னு யோசிச்சேன். இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கீங்க போல. இன்னிக்கு நைட்டு உங்க பதிவுகளை முழுக்கப் படிச்சுட்டு சொல்றேன். வலைப்பதிவுலகிற்கு வருக; வாழ்த்துகள்.

அன்புடன்
சுந்தர்.

Anonymous said...

saw it almost a year back ,Tom hanks has done his job
but this movie did not need a "Tom Hanks"
As others, surprised to know that the airport scenes were shot in the studio.

The movie itself did not have much impact ,may be because I saw the actual
documentary long before the movie.
Merhan Nasseri , with his lean frame , and the way he accepted his life as it is
was more moving.

S.S could not resist feeding the americans desire to save the world,to be heros and love their dogs.
Worth seeing the doco "Waiting for Godot at De Gaulle" .

If you liked this movie you might also like "Beijing Bicycle"

Sundar Padmanaban said...

Karthik,

//The movie itself did not have much impact ,may be because I saw the actual
documentary long before the movie.//

I guess that's the only reason. Since I haven't seen the documentary before, I found this movie very interesting. Putting myself into Victor's shoes, I could feel the 'helpless state' of 'I'm from nowhere and I cant go anywhere'!!

//S.S could not resist feeding the americans desire to save the world,to be heros and love their dogs.//

:)) :))

//Worth seeing the doco "Waiting for Godot at De Gaulle" .

If you liked this movie you might also like "Beijing Bicycle"
//

Thanks for the info. I will check if I can get hold of these videos.

Thanks for the comments.