Tuesday, October 20, 2009

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 10

காணி நிலம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் ஒரு சிறிய வீடு கட்டுவதற்காகவாவது நிலம் வாங்கிப் போடவேண்டும் என்ற நெடுங்காலத் திட்டம் ஊருக்குத் திரும்புவதற்கு ஒரு வாரம் முன்பு திடீரென நினைவுக்கு வர நாளிதழ்களின் வரி விளம்பரங்களை ஆராய்ந்தேன். முன்பு செண்ட், கிரவுண்ட் அளவைகளில் விலை குறிப்பிடுவார்கள். இப்போது சதுரஅடி அளவையில் இருக்க திருச்சியிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிலங்களின் விலை சதுரஅடிக்கு 200 ரூபாய் என்றார்கள் (ஒரு கிரவுண்டு கிட்டத்தட்ட நாலரை லட்சம் ஆகிறது). சரி தந்தை பெயரில் ஒரு பவர் ஆஃப் அட்டர்னியாவது வாங்கிக் கொடுத்துவிட்டு ஊருக்குப் போகலாம் என்ற முடிவு செய்தபோதுதான் சார்பதிவாளர் அலுவலகம் என்ற குகைக்குப் போகவேண்டுமே என்று உறைத்தது.

தென்னூர் ரோட்டை ஒட்டி இருந்த அந்த அலுவலக காம்பவுண்டைத் தாண்டவே முடியவில்லை. ஈக்கள் மாதிரி மக்கள் கூட்டம். அதில் நுழைந்து தேடியதில் அலுவலர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் ஒன்றில் கடைபிரித்து நான்கைந்து டாக்குமண்ட் ரைட்டர்ஸ் அலுவலகங்கள் மும்முரமாக புரோக்கர்கள் நிரம்பி இயங்கிக்கொண்டிருக்க தரையில் படுத்திருந்த நாயின் வாலை மிதிக்காமல் உள்ளே நுழைந்து ஈசான மூலையில் பொதுதொலைபேசிக் கூண்டு அளவு இருந்த அறையில் அமர்ந்திருந்த டாக்குமண்ட் ரைட்டரைப் பார்க்கப் போனேன். அவர் ஈஸிசேரில் அமர்ந்திருப்பதைப் போல நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருக்க மூக்கின் நுனியில் கண்ணாடி, சட்டையின் மேல்பட்டன்கள் திறந்திருக்க, காலரில் கைக்குட்டை சுற்றியிருந்தார். அருகில் இன்னொரு இருக்கையில் சோனியாக ஒரு பெண் அமர்ந்து கணிணியில் எதையோ தட்டச்சிக் கொண்டிருக்க, என்னைப் பார்க்காமல் “என்ன?” என்றார்.

“ஒரு பவர் ஆஃப் அட்டர்னி வேணும் ஸார்”.

“யார் பேருக்கு?”

“அப்பா பேருக்குத்தான்”

“செஞ்சிரலாம்” என்று சொல்லிவிட்டு மனக்கணக்கு போட்டு “ஆயர்ரூவா கொடுங்க” என்றார்.

நூறு ரூபாய் ஸ்டாம்ப் பத்திரம். ஏற்கனவே ஆயிரம் முறை உபயோகித்த இரண்டு பக்க டெம்ளேட்டை கணிணியிலிருந்து உருவி என் பெயர், என் அப்பா பெயர், முகவரி விவரங்கள் மாத்திரம் நுழைத்து அச்சு எடுக்க வேண்டும். ஆயிரம் அநியாயமாகத் தோன்றியது.

“கொஞ்சம் பாத்து செய்ங்க ஸார்” என நான் இழுக்க, அவர் இன்னமும் நிமிராமல் “இங்க பாருப்பா. ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. நிறைய பத்திரம் பதிய வேண்டியிருக்கு (அதில்தான் காசு). பவர் ஆஃப் அட்டர்னில்லாம் உடனே கொடுக்க மாட்டாங்க. ஆயிரம் கொடுத்தா நாளைக்கு கெடைக்கும். சப்-ரிஜிஸ்தார்லருந்து எல்லாத்துக்கும் கொடுக்கணும்ல? எனக்கு அம்பதுதான் நிக்கும்”

நிற்க முடியாமல் வெளியில் வந்துவிட்டேன்.

அங்கிருந்து விரைந்து ஸ்ரீரங்க கோபுரத்திலிருந்து திருவானைக்காவல் செல்லும் சாலையில் இருந்த சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நண்பனோடு வந்தேன். கூட்டமேயில்லாமலிருக்க, சுற்றுச் சுவரையொட்டி தரையில் பாய்விரித்து கும்பலாக அமர்ந்திருந்தவர்களைத் தாண்டி அலுவலகத்தினுள் நுழைந்தேன். எதிர்பட்ட பியூனிடம் விசாரிக்க “வெளில ரைட்டர்ட்ட போயி சொன்னீங்கன்னா அவங்களே எல்லாத்தையும் செஞ்சு கொடுத்துருவாங்க” என்றதும் வெளியே வந்து மறுபடிம் பாய் கும்பலைப் பார்த்தபோதுதான் மையமாக டைப்ரைட்டர் ஒன்று இருப்பது கண்ணுக்குத் தெரிந்தது. அதன் முன் படபடத்துக்கொண்டிருந்தவரிடம் நெருங்கிக் கேட்டதில் அவர் “ஆயிரம் கொடுங்க” என்று கேட்க, நான் தயங்கினேன். பணம் கொடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் மனம் வரவில்லை. “வெளிநாட்ல இருக்கேன்னு சொல்றீங்க. ஆயிரத்துக்கு இம்புட்டு யோசிக்கறீங்களே” என்றார். வெளிநாட்டிலும் ஆயிரம் ரூபாய் மரத்தில் விளைவதில்லை என்று சொல்ல நினைத்தேன். “நியாயமாக் கேக்கறேன். தொள்ளாயிரம் கொடுத்திருங்க. உள்ள எல்லாத்துக்கும் கொடுக்கணும்” என்றார். நான் பேசாமல் எழுந்து நடக்க முதுகுக்குப் பின் கேலி சிரிப்புகள் கேட்டன. “விஜிலென்ஸ்க்கு கம்ளெயிண்ட் கொடுக்கலாம்னு பெரிசா போஸ்டர் ஒட்டியிருக்கானுங்களே. ஒரு போன் போட்டு சொல்லிரலாமா” என்று நண்பன் கேட்க சற்று சபலமாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்த வாரம் ஊர் திரும்ப வேண்டியிருந்ததால் அத்திட்டத்தைக் கைவிட்டேன். இவற்றில் எதுவும் புதிதல்ல - பல்லாண்டுகளாக அரசு இயந்திரத்தின் முனை மழுங்கிய பற்சக்கரங்களின் வழியாக மொத்தமும் பரவியிருக்கும் லஞ்சப் பேய் எல்லாருக்கும் தெரிந்த பேய்தான். இவர்களோடு போராட திராணியில்லாமல் வியர்வை பொங்க உழைத்த காசைக் கொடுத்துவிட்டு காரியத்தை முடித்துவிட்டுப் போய்க் கொண்டேயிருக்கிறார்கள். கொடுக்காவிட்டால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காரியம் ஆகாது என்பது நிதர்சனம்.

மதுரையிலிருக்கும் செல்வாவை அழைக்க அவன் “இங்க வா. திருநகர்ல ஆள் இருக்கு. முடிச்சிரலாம்” என்றான். அதற்காக இல்லாவிட்டாலும் வாழ்நாளில் பாதியைக் கழித்த மதுரைக்கு எப்படியும் போவதாக இருந்தேன். மனைவி குழந்தைகளை ஸ்ரீரங்கத்திலேயே இருக்கச் சொல்லிவிட்டு நண்பன் வண்டியில் தொற்றி திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் மதுரைப் பேருந்துகள் நிற்கும் பிளாட்பாரத்தினருகில் இறங்கியதும் “மர்ரை மர்ரை மர்ரை” என்று நான்கைந்து பேர் சூழ்ந்துகொண்டு “சார் ஏஸி விடியோ கோச்சு. நான் ஸ்டாப். ரெண்டு அவர்ல போயிரலாம். நூறு ரூவாய்தான்” என்று சொல்லிவிட்டு காதருகில் “தசாவதாரம் போடுவாங்க” என்றார்கள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக. அவர்களிடம் தப்பித்து அரசு பேருந்து ஒன்றில் ஏறி படியருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

தங்க நாற்கரத் திட்டத்தின் ஒரு பகுதியோ என்னவோ - திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் ஏகமாக வேலைகள் நடந்து கொண்டிருக்க முன்பு ஊர்களுக்குள் பயணித்த சாலையை கண்டுபிடிக்க முடியவில்லை. அமெரிக்க ஹைவே, அல்லது ஃப்ரீ வே மாதிரி சாலை நெடிதாகப் போக, எக்ஸிட் எடுத்து வழியில் இருக்கும் ஊர்களுக்குச் செல்லும் அமைப்பில் உருவாகிக்கொண்டிருந்த அந்த நால்வழிச் சாலையைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது. அதிக அலுங்கல், குலுக்கல் இல்லாமல் விரைந்த பேருந்தின் ஜன்னல் வழியாக வீசியடித்த காற்றைச் சுகமாக வாங்கிக்கொண்டு பயணிக்க, மேலூர் தூசியைத் தாண்டி, யானை மலை, மீனாட்சி மருத்துவமனை, உயர்நீதிமன்றம் கடந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் வந்தே விட்டது.
எண்பதுகளின் இறுதியில் மதுரையில் இருந்தவையெல்லாம், பெரியார் பேருந்து நிலையம், அதையொட்டி திருவள்ளுவர் பேருந்து நிலையம், அதை விட்டால் அண்ணா பேருந்து நிலையங்கள்தான். பின்பு பெரியாருக்கு எதிராக தனியார் பேருந்து நிலையம் வந்தது. அப்புறம் ஆரப்பாளையம், பழங்காநத்தம் என்று மாற்றி மாற்றி பேருந்து நிலையங்களைக் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தார்கள். மாட்டுத்தாவணி உருவான புதிதில் அடிமாடு மாதிரி பாவமாக இருந்தபோது பார்த்தது. இப்போது அதன் அபார வளர்ச்சியைப் பார்த்துப் பிரமித்துப் போனேன்.

மதுரையிலும் வெயில் சுட்டெரித்தாலும் திருச்சி போலில்லை. செல்வா “வண்டியனுப்பவா” என்று தொலைபேசியில் கேட்டபோது மறுத்துவிட்டு மஞ்சள் நிறத்தில் கூட்டமில்லாது வந்த தாழ்தளப் பேருந்தில் ஏறினேன். செல்வாவின் அலுவலகம் பைக்காராவில் இருக்கிறது. அதில் தாழ்தளப் பேருந்து நிற்காது என்றும் அதற்கு முந்தைய பழங்காநத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளுமாறும் நடத்துனர் சொல்லி “டிக்கெட்டு ஒம்பது ரூவா” என்றார். என்னிடம் ஒன்பது ரூபாய் நோட்டு இல்லாததால் பத்து ரூபாயைக் கொடுத்துவிட்டு பாக்கி வாங்கிக்கொண்டேன். அளவான நிறுத்தங்களுடன் ஓடும் பேருந்தாம் அது. அரசு மருத்துவமனை கடந்து வைகைப் பாலத்தில் பயணித்தபோது வைகையில் நீர் பூனை மூத்திரம் அளவே ஓடியதைப் பார்க்க ஏமாற்றமாக இருந்தது. தரைப் பாலத்தை ஒட்டி புதிதாக இன்னொரு மேம்பாலம் உருவாகியிருந்தது. சிம்மக்கல் வழியாக, ரயில் நிலையத்தையும், பெரியார் மற்றும் உபரி பேருந்து நிலையங்களையும் கடந்து மதுரைக்கல்லூரிப் பாலத்தின் மேல் சென்றபோது அதன் பிரும்மாண்ட மைதானத்தை - ஒரு காலத்தில் அனுதினமும் ஓடியாடிய மைதானத்தை ஆவலுடன் பார்த்தேன் - யாருமில்லாது கால்வாசி நீர் தேங்கியிருக்க பன்றிகள் நிறைய இருந்தன.

பழங்காநத்தத்திலிறங்கி அருகிலேயே இருந்த ஆட்டோவிலேறி “பைக்காரா போங்கண்ணே” என்று ஏறிக்கொண்டேன். செல்வாவின் அலுவலக வாசலில் இறங்கிக்கொண்டு அவரிடம் இருபது ரூபாய் கொடுத்துவிட்டு “வரேண்ணே” என்று உள்ளே செல்ல அவரும் எதுவும் பேசாமல் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றால். இதே சென்னையாக இருந்திருந்தால் என் நிலைமையே வேறு மாதிரி!

செல்வாவுக்குத் தொப்பை பெரிதாகியிருந்தது. “என்னடா ஆளு அப்படியே இருக்க?” என்றான். குசலங்கள் விசாரித்துக்கொண்டு வெளியில் வந்து பக்கத்து சாலையோரக் கடையில் டீ வாங்கிக் குடித்தபோது அந்த வெயிலிலும் இதமாக இருந்தது. மனதிற்குள் இளையராஜா “சொர்க்கமே என்றாலும்...” என்று பாடினார். செல்வாவோடு திருநகர் விரைந்து புதிய சார்பதிவாளர் அலுவலகத்தின் கீழிருந்த எழுத்தரிடம் விவரங்களைக் கொடுக்க அவர் கடகடவென்று பத்திரத்தை அடித்துத்தர படியேறி அலுவலகத்திற்குச் சென்றோம். மக்கள் பெஞ்ச் ஒன்றில் வரிசையாக அமர்ந்திருக்க அலுவலகம் அமைதியாக இருந்தது. செல்வா பத்திரத்தை உள்ளே கொடுக்க அரை மணி நேரம் கழித்து அழைத்தார்கள். ஒருவர் என் விரல்களில் மசி தடவி கைரேகையை பத்திரத்தில் பதித்துக்கொள்ள, செல்வாவும் இன்னொரு நண்பரும் சாட்சியொப்பங்களிட்டார்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையை மட்டும் செலுத்தி ரசீது வாங்கிக்கொண்டு மறுபடியும் கீழே எழுத்தரிடம் வந்த போது அவர் மிகவும் தயங்கி “பத்திரத்திற்கு நூறு. எழுத்துச் செலவு அம்பது - நூத்தம்பது கொடுங்க ஸார்” என்றார். அதோடு திருச்சியிலிருந்து நான் வந்த செலவுகளெல்லாம் சேர்த்து எனக்கு அதுவரை முந்நூற்றைம்பதுதான் ஆகியிருந்தது. “செல்வா வேற எதனாச்சும் யாருக்காச்சும் கொடுக்கணுமா?” என்று சந்தேகத்தோடு கேட்க, அவன் புழுவைப் போல பார்த்துவிட்டு “வண்டில ஏர்றா” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்ப நம்ப முடியாமல் ஏறியமர்ந்து அவன் அலுவலகம் திரும்பினோம்!

மறுநாள் காலை ரயிலில் திருச்சிக்குத் திரும்பிவிட்டேன்.

தொடரும்..

***

நன்றி தென்றல்.காம்

3 comments:

Edward said...

Excellent Sundar. As a person born & brought up in Madurai, it is like F5ed (I am an IT guy, you know). Sitting in the back seat of the bus, near the door, Me too. I used to do this when i travel between Madurai & Tuticorin - Edward

Edward said...

Excellent Sundar. As a person born & brought up in Madurai, it is like F5ed. Sitting in the back seat of the bus, near the door, Me too. I used to do this when i travel between Madurai & Tuticorin - Edward

SKuppa said...

மதுரைக்கே சென்று வந்த மாதிரி இருந்தது, சுந்தர். மிக்க நன்றி.

latha