Thursday, December 16, 2010

தாய் மன்னே வனக்கம்!


நேற்று (நவ-10) இங்கு Veterans Day அனுசரிக்கப்பட்டது. நிறைய வெட்கமாகவும் அவமானமாகவும் உணர்ந்த நாள்!

நாட்டுக்காக ராணுவத்தில் சேவைப் பணியாற்றியவர்களை Veteran என்று குறிப்பிடுவது வழக்கம். பள்ளிகளுக்கு விடுமுறை. அரசு விடுமுறையும்கூட என்று நினைக்கிறேன். பணி நிமித்தமாக அட்லாண்டா போக வேண்டியிருந்ததால் காலை நான்கு மணிக்கு எழுந்து ஐந்து மணிக்குக் கிளம்பி ஏழு மணி விமானத்தைப் பிடிக்கப் போனேன் - பொதுவாகவே அமெரிக்கத் தேசியக்கொடி நிறைய இடங்களில் பறக்கும். கொடியை பலவிதமாக அலங்காரமாகப் பயன்படுத்துவார்கள் - தொப்பி, உடை, முகப்பூச்சு, சிகையலங்காரம் என்று பல வகை - இவையெல்லாம் ஜூலை நான்காம்தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் எல்லா நகரங்களிலும் (எல்லா சுதந்திர நாடுகளிலும்) நடப்பவைதான்.

விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டங்களெதுவுமின்றி பெரிய அளவு கொடிகளை ஆங்காங்கே வைத்திருந்தார்கள். விமானம் அட்லாண்டா ஓடுதளத்தைத் தொட்டு இறங்கியதும் வழக்கமான வரவேற்பு அறிவிப்பு, உள்ளூர் தட்பவெப்பம், பெட்டிகளை எந்த கரோஸலில் எடுத்துக்கொள்வது என்பதைத் தெரிவித்துவிட்டு முடிக்கையில் ”இன்று Veterans தினம். நாட்டுக்காகப் சேவை புரிந்த, புரியும் அவர்களுக்கு நன்றிகள். இந்த விமானத்தில் யாராவது Veterans இருக்கின்றீர்களென்றால் உங்களுக்கு எங்களுடைய பாராட்டுகள், வந்தனங்கள், நன்றிகள்” என்று குறிப்பிட பயணிகள் கைதட்டினார்கள். அப்போதுதான் இந்த தினம் நினைவு வந்தது. திரும்ப நள்ளிரவு விமானத்தில் பாஸ்டனுக்குத் திரும்பி இறங்கியதும் அதேமாதிரி நன்றி தெரிவித்தார்கள். அந்த அறிவிப்பு என்னை சில வினாடிகள் ஸ்தம்பிக்கச் செய்தது.

ஈராக் போன்ற தேசங்களிலிருந்து அமெரிக்க ராணுவத்தினர் ஊர் திரும்பும்போது விமானநிலையங்களில் அவர்களைப் பார்த்ததும் மற்ற பொதுமக்கள், பயணிகள், விமான நிலையச் சிப்பந்திகள் என்று அனைவரும் அவர்கள் கடந்து செல்லும்வரை கைதட்டி ஆரவாரம் செய்வதைப் பலமுறை, பல விமான நிலையங்களில் பார்த்திருக்கிறேன். அது பொதுமக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு. புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் ஒரு லாபநோக்கோடு இயங்கும் விமான நிறுவனத்தில், விமானத்தில் சேவையாளர்கள் தினத்தை நினைவுகூர்ந்து நன்றி அறிவிப்பு செய்தது எனக்குள் பல கண்களைத் திறந்தது. நாங்கள் வசிக்கும் ஊரில்கூட வாழும் முன்னாள் ராணுவத்தினரை வரவேற்று மக்களுக்கு, குழந்தைகளுக்கு, சிறியவர்களுக்கு, இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி எல்லாரும் “நன்றி” சொல்லி கைதட்டிப் பாராட்டினார்கள்.

நம்மூரில் “பட்டாளத்தான்” என்று கிராமங்களில் அவர்களை அழைப்போம். மிடுக்கோடு இருப்பார்கள். ஆனால் நகரங்களில்? ”முன்னாள் ராணுவத்தினர்” என்று அடையாளப்படுத்தப்பட்டு - நாட்டுக்குச் சேவை செய்த, செய்யும் ராணுவ வீரர்களை எப்படி நடத்துகிறோம்?. தமிழ்ச் சினிமாக்களில் முழுச் சீருடையுடன் ராணுவ வீரர் அத்தை மகளைப் பார்க்க வருவதையோ, காதல் செய்வதையோ அல்லது ஊர்க்காரர்களுடன் தகராறு செய்வதையோ காட்டுகிறார்கள். நேரில் பார்த்தால் சகாய விலையில் மிலிட்டரி கேண்ட்டீனில் சாராயம் (ரம்) கிடைக்குமா போன்ற விசாரிப்புகளைக் கேட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன்.

வற்றாயிருப்பு வீட்டில் குடும்பத்தில் ராணுவத்தில் பணிபுரிந்த யாரோ ஒரு மாமா கொண்டு வந்த சுருட்டிய தோல்படுக்கை - அதற்கு ஏதோ ஒரு பெயர் சொல்வார்கள் - ஆங்.. ”ஹோல்டால்” - ரொம்ப வருடங்களாப் பரணில் இருந்தது. மற்றபடி ஊரிலோ, பள்ளியிலோ, கல்லூரிகளிலோ அல்லது வேலைசெய்த இடங்களிலோ எப்போவது ராணுவச் சேவையாளர்களைப் பற்றி பேசியிருக்கிறோமா என்று எவ்வளவு யோசித்தும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

அவர்கள் எல்லையில் நடுங்கும் குளிரில், பனிப்பொழிவில், மழையில் எவ்வளவு துன்பப்பட்டு நாட்டைக் காக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டு வெயிலில் நமக்கு உறைப்பதே இல்லை. தேசப்பற்று என்பது ஏட்டளவில்தான் என்று சொல்லவேண்டியிருக்கிறது.

NCC என்றொரு அமைப்பு. பள்ளியில் படிக்கும்போது அதில் சேரலாம் என்று போனால் முட்டி ஒட்டுகிறது என்று துரத்தி விட்டார்கள். கஞ்சி போட்டு விறைப்பாக நிற்கும் (ஏன் அப்படி “அந்த இடத்தில்” புஃப்பென்று இருப்பது மாதிரி ட்ரவுசர் மாடலை வைத்திருக்கிறார்கள் என்று யோசித்து வெட்கமடைந்திருக்கிறேன்) காக்கி ட்ரவுசர், முட்டி வரை சாக்ஸ் போட்டு, தேய் தேய் என்று பிரஷ்ஷால் தேய்த்துப் பளபளப்பாக்கிய கல்போன்ற காலணி, ஒருக்களித்துச் சரிந்திருக்கும் தொப்பி. சிவப்புக் குஞ்சலம் ஒன்று அதில் இருக்கும். முழுக்கையைச் சுருட்டி முழங்கைக்கு மேல் ஏற்றிவிட்டுக்கொண்டு NCC மாணவர்கள் அதிகாலையில் கவாத்து பழகுவதை வேலிக்கு அந்தப் பக்கம் நின்று சோகமாக வேடிக்கைப் பார்த்திருக்கிறேன். எனக்கு ஆண்டவன் ஏன் கப்பைக் கால்களைக் கொடுக்கவில்லை என்று வருந்தியதெல்லாம் நினைவிலிருக்கிறது. பிறகு இலுப்பைப் பூ சக்கரையாக NSS-இல் வெண் சீருடையுடன் சேர்ந்து மதுரைப் பெரியார் நிலைய சந்திப்பில் புகையில் மூச்சு திணறிக்கொண்டு வாகனச் சத்தங்கள் காதைப் பிளக்க போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது - NSS மாணவிகள் STOP காட்டினால் மட்டும் நிற்பார்கள் - நாங்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை; திருப்பரங்குன்றத்தில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தியது; அவ்வளவுதான் - வியர்வைகூட அவ்வளவாகச் சிந்தாத தேசசேவை!

சுதந்திர தினம் என்றால் தேசியகீதம் பாடி, சட்டையில் கொடியைக் குத்திக்கொண்டு மிட்டாய் தின்றுவிட்டு, நாள் முழுதும் வீட்டில் நடிகையர்களைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஜனகனமனவை மொணமொணவென்று சம்பிரதாயமாகப் பாடுவதைத் தவிர ஒரு முறையாவது தேசத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு வாயார “நன்றி” என்று சொல்லியிருக்கிறோமா என்று யோசித்து வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது.

எல்லாமே சுதந்திரம் வாங்கியதோடு முடிந்துவிட்டது என்ற நினைப்பில் நிகழ்காலச் சேவையாளர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. இல்லை கார்கில் போன்று ஏதாவது நிகழும்போதுதான் ஆளாளுக்கு தேசப்பற்று தேசப்பற்று என்று மாரடித்துக்கொள்கிறோம். அதாவது Fire Extinguisher-இன் மதிப்பு தீ பற்றிக்கொண்டு எரியும்போது தெரிவது போல!

திராவிடன், ஆரியன், பகுத்தறிவு, இட ஒதுக்கீடு என்று அரசியல் செய்துகொண்டு, காவிரிக்காக அடித்துக்கொண்டு மலையாளத்தான், கன்னடத்தான், தெலுங்கன் என்று பிரித்துக்கொண்டு வானம் பார்த்த பூமியாக மாநிலத்தை ஆக்கியதைத் தவிர நமது கட்சிகளும் தலைவர்களும் கடந்த அறுபது ஆண்டுகளில் என்னதான் சாதித்தார்கள் என்று எண்ணங்கள் ஓடியது. ஈராக் போர் தவறான முடிவாக இருந்தாலும் - அங்கு ராணுவம் சென்றதைத் தீர்மானித்தது தேசத்தின் தலைவர், உயர் அதிகாரிகள் - சாதாரண ராணுவ வீரர் அல்ல. அவர்களுக்குக் கற்பிக்கபட்டது, படுவது உயரதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், செல் என்றால் செல்வது, சுடு என்றால் சுடுவது, போர் புரியச் சொன்னால் புரிவது. சொந்த நம்பிக்கைகளையும் சரி தவறு என்ற விவாதங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு நாட்டுக்காகச் செல் என்றால் கேள்விகேட்காமல் செல்ல வேண்டும்.

புஷ்ஷின் தவறுகளைச் சுட்டிக்காட்டித் தட்டிக்கேட்கும் அதே வேளையில், அங்கு சென்றுவிட்டுத் திரும்பும் ராணுவத்தினரை “நாட்டுக்காகச் சென்றார்கள்” என்ற ஒரே அடிப்படையில் வேண்டிய மரியாதைகளைக் கொடுத்து வரவேற்றுப் பாராட்டத் தவறுவதேயில்லை இம்மக்கள். இந்த தெளிபு நம்மிடையே இல்லை. நம் ராணுவத்தின் தியாகங்கள் நமக்குப் புரிவதில்லை. அமெரிக்க மக்கள் ஒரு முன்னாள் ராணுவ வீரரை எப்படி மரியாதையாக அணுகுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பி தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடத்தப்பட்ட விதம் நினைவுக்கு வந்து தொலைத்தது. அவர்களை வரவேற்காது புறக்கணிப்பு செய்தார் அன்றைய, இன்றைய மாநில முதல்வர் கருணாநிதி. மக்களுக்கு எப்படிப்பட்ட உதாரணம்! அமைதிப்படை அனுப்பப்பட்டது தவறு என்று அவர் நினைத்தால் இங்கு புஷ்ஷை வறுத்தெடுப்பதுபோல நம் படையை அனுப்ப முடிவுசெய்த பிரதமரையும் அவர் சார்ந்த கட்சியையும் அல்லவா புறக்கணித்திருக்கவேண்டும்? அக்கட்சியுடன் இன்று வரை கூடிக் குலாவிக்கொண்டுதான் திமுக இருக்கிறது. ஆக தமிழ்ப் பற்றும் இல்லை, தேசப் பற்றும் இல்லை. கட்சிப் பற்று - பதவிப் பற்று - அதனால் கிடைக்கும் பலன்களின் மீதான பற்றுதான் முக்கியமாக அவர்களுக்கு இருக்கிறது. இப்படிச் சுயநலத்தின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் நம் தலைவர்களால் எப்படிப்பட்ட சமுதாயங்கள் உருவாகியிருக்கின்றன என்றும் தேசத்தின் மீது எம்மாதிரி பற்றுதல்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றும் எண்ணிப் பார்த்தேன்.

குடும்பம், குழந்தைகள், சுற்றம், சுகங்களைவிட்டு ராணுவத்தில் சேர்ந்து கண்காணாத தொலைவில் மொழி புரியாத மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து கொட்டும் பனியில், பனி மலைகளில் எதிரிகள் ஊடுருவாதவண்ணம் கண்காணித்து, அவர்களின் எதிர்பாராத தாக்குதல்களைத் தடுத்து, துப்பாக்கிச் சூடுகளுக்குப் பலியாகி, தீவிரவாதிகளின் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, சும்பத் தனமாக அரசுகள் அளிக்கும் பிச்சைக்காரச் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அன்-ரிசர்வ்டு பெட்டியில் பயணித்து, ஊருக்கு வந்து சேர்ந்து, பிறகு மீதி வாழ்க்கையைத் தொடர பணத்தில் புரளும் வியாபார நிறுவனங்களின் பளபள கட்டிடங்களுக்கு வெளியேவோ, புதிதான அபார்ட்மெண்ட் கட்டிட மூலையில் இருக்கும் ஐந்துக்கு ஐந்து அறையிலோ, வெயிலிலும், இரவுகளிலும் “செக்கூரிட்டியாக” காவல்நாய் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கும், யாரும் கண்டுகொள்ளாத தேசச் சேவை புரிந்த, புரிந்துகொண்டிருக்கும் அந்த உத்தமமான மனிதர்களுக்கு, நல்ல ஆத்மாக்களுக்கு - “எக்ஸ்-ஸர்வீஸ்மென்களுக்கு” நெஞ்சார்ந்த நன்றிகள், வணக்கங்கள்!

***

நன்றி தென்றல்.காம்

Tuesday, October 12, 2010

இந்தியத் தூத(த்தேறி)ரகங்கள்


அடிமாடுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கேரளாவுக்குக் கடத்தப்படுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அனாயசமாக வைக்கோல்போர் ஏற்றிச் செல்வதுபோல மாடுகளை லாரியின் இண்டு இடுக்களில் நிரப்பி அடைத்துக் கொண்டுபோவார்கள். வளைகுடா நாடுகளுக்குக் கூலிவேலைக்காகச் செல்லும் படிப்பறிவற்ற, வசதியற்ற பெரும்பாலான இந்தியத் தொழிலாளர்களின் நிலை அந்த அடிமாடுகள் மாதிரிதான். இருக்கும் நகை, நிலம், மானம் எல்லாவற்றையும் அடகு வைத்தோ விற்றோ, அல்லது திரும்பக் கட்டவே முடியாத கடன்களை வாங்கியோ இடைத்தரகர்களுக்குப் பணம் கொடுத்து எப்படியாவது தன்னை நம்பியிருக்கும் வீட்டு ஜீவன்களைக் காப்பாற்றவேண்டும் என்று திரைக்கடலோடித் திரவியம் தேட விழையும் அம்மனிதர்களைச் சந்தித்திருக்கிறீர்களா?  கல்யாணமான இரண்டாவது மாதத்தில் மனைவியை விட்டுவிட்டு விமானம் பிடிப்பவர் குழந்தைக்கு நான்கைந்து வயதாகியிருக்கையில் இந்தியாவுக்கு விடுமுறையில் வருவார். அல்லது கைக்குழந்தையுடன் மனைவி இருக்கும்போது செல்பவர் அந்தக் குழந்தை அப்பா என்ற பிம்பத்தை மறந்து வளர்ந்திருக்கையில் அப்பாவானவர் திரும்ப விடுமுறைக்கு வந்து தந்தைப் பாசத்தைக் கொட்ட முயல, அது ஒட்டாது அம்மாவின் முந்தானைக்குள் ஒளிந்துகொள்ளும்.

சிறிய நைந்த பர்ஸ் ஒன்றில் மனைவி குழந்தைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு அங்கிருக்கும் மணி எக்சேஞ்ச் அலுவலகங்களில் மாதம் ஒண்ணாந்தேதியானதும் ஐம்பது, அல்லது நூறு ரியால், அல்லது திர்ஹாம் பணத்தை இந்தியாவிலிருக்கும் குடும்பத்தினருக்கு அனுப்புவதற்காக ஃபாரம் நிரப்பத் தெரியாது அல்லாடிக்கொண்டு அலைமோதுவார்கள்.

ஷேர் ஆட்டோ போன்று அடைக்கப்பட்ட ”லேபர் கேம்ப்”களில் வாசம் செய்யும் அவர்களின் நிலை பரிதாபம். ”வீட்டு வேலைக்கு” என்று ”எடுக்கப்பட்டு” வளைகுடா நாடுகளுக்கு அனுப்பப்படும் பெண்களின் நிலை இன்னும் பரிதாபம். சொல்லவொண்ணா துயரங்களை அனுதினமும் அனுபவித்துக்கொண்டு பாஸ்போர்ட்டை ஸ்பான்ஸர்களிடமோ அல்லது ஏஜண்ட்டுகளிடமோ பறிகொடுத்துவிட்டு சிறைவாழ்க்கை வாழும் அப்பெண்களின் நிலை கொடியது. அவர்களுக்கு நேரும் துர்ச்சம்பவங்கள் ஊடகத்தில் வெளிவருவதில்லை. நூற்றில் ஒன்றிரண்டு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தால் அதிசயம். மற்றபடி எல்லாமே மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.

வளைகுடா நாடுகளின் விமான நிலையங்களில் கும்பல் கும்பலாக ஏஜண்ட்டுகளுக்காகக் காத்திருக்கும் ஆசியர்களைப் பார்த்திருக்கிறீர்களா? விமான நிலையத்திலேயே சில நாட்கள் வாசம் செய்வார்கள். பெரும்பாலானவர்கள் (ஏமாற்றிய) ஏஜண்ட்டுகள் வராத காரணத்தினால் தாய்நாட்டுக்குத் திருப்பியனுப்பப் பட்டுவிடுவார்கள். சிலர் போதைகடத்தல் என்று ஏதாவது வழக்கில் மாட்டிக்கொண்டு அந்தந்த நாடுகளின் நரக சிறைகளுக்குள் வாழ்நாளைக் கழிக்கவேண்டிவரும். யாருக்கும் அவர்களுக்கு என்ன ஆகிறது என்று தெரியாது.

அப்படித் தப்பித் தவறி விசா பிரச்சினையின்றி நாட்டுக்குள் நுழைந்து எங்கோ தங்கிக்கொண்டு கூலி வேலை செய்து பிழைத்தாலும் எப்போதாவது இந்தியத் தூதரகம் என்ற அவமரியாதைக்கூடத்திற்குள் ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் இந்தியனும் ஒரு தடவையாவது நுழைந்துதான் ஆகவேண்டும். ஒரு டிபிக்கல் இந்திய அரசாங்க இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதற்கு அவை அத்தாட்சிகள். உள்ளே நுழைவதிலிருந்து வெளியே காரியம் முடித்து வருவது வரை துச்சமாகப் மதிக்கப்படுவதையும், அவமரியாதைகளுக்குட்படுவதையும், தாமதங்களையும், பொறுப்பற்ற பதில்களையும் அனுபவித்துத்தானாக வேண்டும். வளைகுடாவில்தான் இப்படியென்று நினைத்துக் கொண்டிருந்தேன். இங்கு நியூயார்க்கில் இருக்கும் இந்தியத்தூதரகத்தைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துப் பாருங்கள் - அப்போது நான் சொல்வது புரியும். ஒரு கடவுச்சீட்டை புதுப்பிக்க வேண்டிருந்தால் ஆயிரத்தெட்டு குழப்பமான விதிமுறைகள் - எவ்வளக்கெவ்வளவு ஒரு விஷயத்தைக் Complicated ஆகக் கையாளவேண்டுமோ அவ்வளவு சிக்கல்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் யாரையும் தொலைபேசியில் தப்பித்தவறியும் பிடிக்க முடியாது. அப்புறம் எதற்கு தொலைபேசியை வைத்திருக்கிறார்கள்?

மற்ற நாடுகளில் அரசு, தனியார் என்று பாரபட்சமில்லாது வாடிக்கையாளர்களுக்கு துரித சேவையை வழங்கி அவர்களைத் திருப்திப்படுத்துவதையே முதற்குறிக்கோளாக வைத்து இயங்கிக்கொண்டிருக்க, நமக்கு மட்டும் வாடிக்கையாளர்களின் திருப்தி என்பது Priority List-லேயே இல்லை. இந்நிலை இழிவானது. அரசாங்க ஊழியர்கள் என்றாலே இப்படித்தான் என்ற இழிவான நிலையை, பிம்பத்தை தொடர்ந்து அவர்கள் வெற்றிகரமாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பது அவமானமான விஷயம்.

Tom Hanks நடித்த The Terminal படத்தில் நாடிழந்த அனாதையாக அமெரிக்க விமானநிலையத்தில் அல்லாடும் கதையைச் சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பார்கள். பார்ப்பதற்குத்தான் சுவாரஸ்யம். நிஜவாழ்வில் அம்மாதிரியான சம்பவம் சமீபத்தில் ஒரு பெண்ணின் மரணத்தில் முடிந்திருக்கிறது. கீழே இரு செய்தித் துணுக்குளைத் தந்திருக்கிறேன். படித்துப் பாருங்கள்.
***
துபாய்: பாஸ்போர்ட்டை பறி கொடுத்து விட்டு 5 நாட்களாக பரிதவித்து வந்த சென்னையைச் சேர்ந்த பணிப்பெண், மஸ்கட் விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் பீபி லுமடா. 40 வயதான இவர் மஸ்கட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். மஸ்கட்டிலிருந்து சென்னை செல்வதற்காக இவர் கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார். அதன்படி மஸ்கட்டிலிருந்து விமானம் சென்னை கிளம்பியது. வழியில் தோஹாவில் அது இறங்கியது.

தோஹாவில் இறங்கி இணைப்பு விமானத்தைப் பிடிப்பதற்காக பீபி சென்றபோது அவரது பாஸ்போர்ட் தொலைந்து போய் விட்டது. இதனால் அவரால் தோஹாவிலிருந்து விமானத்தைப் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அவர் மீண்டும் மஸ்கட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் ஏற்கனவே ஓமனில் குடியிருப்பதற்கான விசாவை ரத்து செய்திருந்ததால் மஸ்கட் விமான நிலையத்தை விட்டு வெளியேற அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் பீபியால் எங்குமே போக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலையை விளக்கி இந்தியத் தூதரகத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். ஆனால் இந்தியத் தூதரகத்திலிருந்து ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. இதனால் ஐந்து நாட்களாக அந்த அப்பாவிப் பெண் விமான நிலையத்திலேயே முடக்கப்பட்டிருந்தார்.

அவரது நிலையைப் பார்த்து பரிதாபப்பட்ட கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தினர் அவருக்கு சாப்பாடு, தண்ணீர், படுக்கை உள்ளிட்டவற்றை கொடுத்து உதவியுள்ளனர். மேலும், இந்தியத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்து உடனடியாக அவருக்கு உதவுமாறு கோரியுள்ளனர். ஆனால் மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாத இந்திய தூதரக அதிகாரிகள் யாருமே வந்து பார்க்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என விமான நிலைய மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், நாங்கள் பலமுறை இந்திய தூதரகத்திற்கு தகவல் அளித்தும் ஒருவர் கூட வந்து பார்க்கவில்லை. விமான நிலையப் போலீஸாரும் பலமுறை இந்திய தூதரகத்தை அழைத்தும் கூட யாருமே வரவில்லை. ஏன் இந்தியத் தூதரகம் இப்படி நடந்து கொண்டது என்று தெரியவில்லை என்றனர்.

எல்லாம் நடந்து முடிந்த பின்னர் பீபியின் மரணம் குறித்து இந்தியத் தூதரகம் வருத்தமும், கவலையும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தூதர் அனில் வாத்வா கூறுகையில், இது மிகவும் சோகமானது. எக்ஸ்டி பாஸ் தருவதற்குள் அவர் உயிரிழந்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. நிர்வாக தாமதங்களே இந்த மரணத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பீபியின் உறவினர்களுக்குத் தகவல் தரப்பட்டுள்ளது.

தனது நாட்டுக் குடிமகளைக் காக்கக் கூட முன்வராத இந்திய தூதரகத்தின் இந்த இரக்கமற்ற செயல் சக இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ்.காம்
****

MUSCAT: The body of Beebi Lumada, who died at Muscat International Airport on Friday, will be flown to her native place in Kerala today evening if post-mortem examination is completed and the Indian Embassy gets possession of the body.

An Indian Embassy official said that all the expenses of transporting the body will be borne by the embassy.
It may be recalled that an Indian domestic maid died at Muscat International Airport on Friday after she was left stranded for four days because of lost passport.
The embassy official said preparations are being made to send the body of the deceased to her native town today.
The Royal Oman Police has assured that the post-mortem examination will be done today morning, after which the embassy will transport the body to Chittoor in Andhra Pradesh, where the deceased’s relatives live, he added.
Meanwhile, repeated calls to the relatives of the deceased in Chittoor were not answered.
The incident which took place on Sunday attracted substantial media attention in India with all major print media and TV channels reporting the news.
Beebi Lumada, 40, (PP No. G4679737) worked in Muscat on a maid contract. She had changed her sponsor in August and the new sponsor had asked her to leave the job and go back to India since she was suffering from some illness.   She lost her passport while travelling to Doha from Muscat.


Courtesy: www.TimeofOman.com  
***

அமெரிக்கக் குடிமகனாகியிருக்கும் தென்கொரியர்கள் வடகொரியாவில் மாட்டிக்கொண்டு சிறையிலிருக்கும்போது அமெரிக்க முன்னாள் ஜனாபதி வடகொரியாவுக்குச் சென்று அவர்களை மீட்டு அழைத்துவருகிறார். இத்தனைக்கும் அவர்கள் சாதாரண பொதுஜனங்கள்தான் - விவிஐபிக்கள் அல்ல. 


வெளிநாட்டில் இருக்கும் குடிமகன்களைக் காக்கவேண்டியது ஒரு அரசாங்கத்தின் முதன்மையான கடமையல்லவா? யாராவது ஒரு முக்கியப் (கரும்)புள்ளியோ அல்லது ஒரு சினிமா நட்சத்திரமோ கடவுச் சீட்டைத் தொலைத்திருந்தால் இப்படி ஐந்து நாட்கள் விமான நிலையத்தில் அல்லாடவிட்டுச் சாகடித்திருப்பார்களா? ஷாருக்கானை வெளிநாட்டு விமான நிலையத்தில்  சோதனைக்குட்படுத்தியது பெரும்செய்தியாகி நாடே கொந்தளித்தது. இங்கு ஒரு அப்பாவி இந்தியக் குடிமகள் கேட்பாரற்று விமானநிலையத்தில் மாட்டிக்கொண்டு செத்துப் போகிறார். தூதரக மயிராண்டிகள் அறிக்கைவிட்டு சவப்பெட்டியை இந்தியாவுக்கு அனுப்பும் செலவுகளை ஏற்றுக்கொள்கிறார்களாம்! அதில் நூறில் ஒரு பங்கு மட்டும் செலவழித்து ஒரு புதிய கடவுச்சீட்டை அந்தப் பெண்மணிக்கு உடனடியாகக் கொடுத்திருந்தால் இந்நேரம் ஊர்போய் சேர்ந்திருப்பார். 


இவ்வளவு ஏன். அந்தத் தூதரக அதிகாரிகளின் இஷ்டமித்ரபந்துக்களில் யாராவது இப்படி கடவுச்சீட்டைத் தொலைத்துவிட்டு மாட்டிக்கொண்டிருந்தால் இப்படி ஐந்து நாட்கள் அல்லாடுவார்களா? தூதரகத்தில் செய்துகொண்டிருக்கும் வேலையை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு முதல் காரியமாக அவர்களுக்கான கடவுச்சீட்டை உடனடியாக வழங்கி அவர்கள் பிரயாணத்தைத் தொடரச் செய்து விமானத்தில் அவர்கள் கிளம்பியதை உறுதிப்படுத்திக்கொண்டுதான் மோளவே போவார்கள் இல்லையா? ஆனால் இங்கு மாட்டிக்கொண்டது யாரோ ஒரு வீட்டுவேலைசெய்யும் கூலிப் பெண்மணி - காத்திருக்கட்டும் - சாகட்டும் - யாருக்குக் கவலை? யார் கேட்பார்கள்? சவப்பெட்டியை மக்களின் வரிப்பணத்தில் இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு வருத்தம் தெரிவித்தால் போதுமே?

இந்தியர்களின் உயிர்களுக்கு மதிப்பில்லை என்று அரசாங்கமே ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது மறுபடியும். எவன் செத்தாலென்ன என்று ஊழல் செய்து நாட்டைச் சுரண்டிக்கொண்டிருக்கும் கொள்ளைக் காரர்கள் ஒரு பக்கம், மக்கள் செத்தாலென்ன என்று இப்படி மெத்தனமாக இருக்கும் புரையோடிப்போன அரசாங்க இயந்திரம் என்று இன்னொரு பக்கம் - நம் நிலையை நினைத்தால் பரிதாபமாகவும் பயமாகவும் இருக்கிறது. 

இப்போதெல்லாம் கோபமே வருவதில்லை. எதுவுமே புதிசில்லை என்பதான ஆயாசமே மிஞ்சுகிறது. கோபப்பட்டு ஒரு மயிரும் பிடுங்க முடியாது என்ற நிதர்சனம் இன்னொரு காரணம்.

நாம் இந்தியர்கள் - நம் இந்தியா என்று நெஞ்சு நிமிர்த்திப் பெருமைப் படுவதற்கான காரணங்கள் அருகிக்கொண்டே வருவது மிகவும் வருத்தத்தை தரும் விஷயம்.

****
picture courtesy: psdblog.worldbank.org

Friday, October 01, 2010

இளைஞர்களே!

"இளைஞர்களே இந்நாட்டின் தூண்கள்
இளைஞர்களே இந்நாட்டின் எதிர்கால மன்னர்கள்
இளைஞர்களே இந்நாட்டின் முதுகெலும்பு
இளைஞர்களே 2020-இல் இந்தியாவை வல்லரசாக்கப் போகிறார்கள்!


ஒளி படைத்த கண்ணினாயே வா வா வா
இளைய பாரதத்தினாயே வா வா வா


நாளைய உலகின்....”




”யோவ். யாருய்யா அது பகல்ல கனா கண்டுக்கிட்டு இருக்கறது? நவருய்யா. படம் பாக்கப் போம்போது குறுக்கால....தலிவாஆஆஆஆஆஆ!”







Sunday, August 15, 2010

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!





பிறந்ததிலிருந்தே சுதந்திரத்தைச் சுவாசித்துக்கொண்டிருக்கும் நாம் அதை வாங்கிக்கொடுத்தவர்கள் அனுபவித்த வலியையோ, சிந்திய வியர்வையோ சிறிதும் உணர்வதில்லை. காலில்லாதவனுக்குத்தான் தெரியும் அதன் அருமை. நாம் சுதந்திரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை - அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவதில்லை - அதை வாங்கித்தந்தவர்களை மதிப்பதில்லை - ஆகஸ்ட் 15 அன்று எந்தப் புதிய படம் வெளியாகியிருக்கிறது என்று திரையரங்கங்களுக்குப் படையெடுத்துப் போகும் அரைக்கண் இந்தியர்களாகவே இருக்கிறோம். அரசு விடுமுறைகளில் இது இன்னொரு நாள் - ஞாயிற்றுக்கிழமை வந்து தொலைத்துவிட்டது என்று கடுப்பில் இருப்பார்கள் தனியார்கள். அதனாலென்ன என்று திங்கட்கிழமை விடுமுறை விட்டிருப்பார்கள். பின்னே - அது எ்ப்படி சல்லிசாக ஒரு நாளை விட்டுக்கொடுக்க முடியும்?

குண்டூசியால் காகிதக்கொடியை சட்டையில் குத்திக்கொண்டவர்களுக்கும். ஞாயிறுதானே விடுமுறைதானே என்று இன்னும் தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும், பல்லே விளக்காது பெட்காஃபி பருகிக்கொண்டிருப்பவர்களுக்கும் FDFS போகத் திட்டமிட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கும் இளையபாரதத்தினாய்களுக்கும், எவன் எக்கேடு கெட்டுப் போனாலென்ன என்று நாட்டை தினமும் சுரண்டிக் கொள்ளையடித்து சொத்தை (வெளிநாட்டில்) சேர்ப்பதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கும் அரசியல் வியாதிகளுக்கும், ஊழல் விஞ்ஞானிகளுக்கும் (அதாவது விஞ்ஞான ரீதியான ஊழல் செய்வதில் Subject Matter Experts), ஓட்டுக்காக இலவசங்களைக் கொடுத்து ஏழை மக்களை ஏழையாகவே, பிச்சைக்காரர்களாகவே வைத்து, நாட்டின் கடன்சுமையை அனுதினமும் ஏற்றிக்கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கும், டாஸ்மார்க் குடிமகன்களுக்கும், இவற்றில் எதைப்பற்றியும் கவலைப்படும் நிலையில் இல்லாமல் தினமும் சோற்றுக்கு லாட்டரியடித்துக்கொண்டிருக்கும், நாளை விடிந்தால் என்ன செய்வது என்று கையைப் பிசைந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக்கொண்டு, மின்வெட்டில் கொசுக்கடியில், நீர்வராத குழாயை வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கும் சாதாரண இந்தியக் குடிமகன்களுக்கும்.....இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

தன்னலம் கருதாது வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, உயிரையும் கொடுத்து நாளைய தலைமுறையாவது சுதந்திர நாட்டில் சுதந்திரமாக இருக்கட்டும் என்று நமக்குச் சுதந்திரத்தை வாங்கித்தந்துவிட்டுப் போன கடவுளுக்குச் சமமான மாமனிதர்களுக்கும், தியாகிகளுக்கும் நன்றிகள் - அஞ்சலிகள் - பிரார்த்தனைகள்.

நமக்குத்தான் பிறப்பிலிருந்து சாவு வரை சினிமா கூட வேண்டுமே. இது மட்டும் விதிவிலக்கா என்ன - இருந்தாலும் அதற்காக மன்மத ராசா பாட்டைப் போடாமல் உருப்படியாக இதைப் பதிகிறேன்.

Thursday, May 27, 2010

ஒரு கதை சொல்லு


வழக்கம் போல நேற்றிரவும் குழந்தைகளுக்கு ஒரு கதை. முன்னேற்பாடாக எந்தக் கதையையும் படித்து வைத்துக்கொள்ளாததால் இட்டுக்கட்டி ஒரு கதையைச் சின்னவளுக்குச் சொன்னேன்.

கொட்டாவி விட்டுக்கொண்டே நான் கதையை ஒருவழியாகச் சொல்லி முடிக்க, கொட்டக்கொட்ட முழித்துக்கொண்டு கேட்டுவிட்டு என் கழுத்தைக் கட்டிக்கொண்டு "Thank You daddy" என்று சொல்லி போனஸாக ஒரு முத்தத்தையும் கொடுக்கப் புல்லரித்தது. குழந்தையின் சின்னஞ்சிறு உதடுகள் கன்னத்தில் படும்போது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட உணர்வு எழும். எப்போதும் போல Good Night சொல்லிவிட்டுத் தூங்கியிருந்தாளானால் அது இன்னொரு இரவாகப் போயிருக்கும். அவள் சிறிது யோசனையுடன் “டாடி. Did you read this story somewhere?" எனக் கேட்டாள்.

“இல்லம்மா. நானா கற்பனை பண்ணிச் சொன்னது”

“you mean you created the story all by yourself?"

“ஆமா”

இன்னும் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு புன்னகையுடன் தூங்கிப் போய்விட்டாள். என்ன யோசித்திருப்பாள் என்று ஆச்சரியமாக இருந்தது. குழந்தைகளின் உலகம் மிகவும் அலாதியானது என்பதை மறுபடியும் உணர்ந்தேன்.

***

வல்லான் வாழ்வான்


பரபரப்பான விஷயத்தை உடனே முந்திப் பதிவது என்ற வலைப்பதிவு ரேக்ளா ரேஸ் எனக்குக் கொஞ்சமும் ஒவ்வாதது. அதனாலேயே இந்தப் பதிவு தேவையா என்று பலமுறை யோசித்துத் தயங்கி பின் இப்போது எழுதுகிறேன்.  இதை எழுதியிருக்க வேண்டாமோ என்று பின்னொரு நாளில் தோன்றலாம்.

தமிழ்நாட்டில் எல்லைச்சாமி, முனியாண்டி கோவில் இல்லாத கிராமமே கிட்டத்தட்ட கிடையாது எனலாம். மூத்தார், நீத்தாரைக் கடவுளாகக் கருதி வணங்கிய பண்பும், கண்ணியமும் நிரம்பியிருந்த ஒரு சமூகம் இன்றிருக்கும் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் வெளிப்பாடே இப்பதிவு.

மும்பை தீவிரவாத தாக்குதலைப் போல லைவ் ரிலேவாகக் காட்டவில்லை - முடிந்தால் கட்டாயம் செய்திருப்பார்கள் - அது ஒன்றுதான் குறை - நமது ஒளியூடகங்களின் பொறுப்பற்ற தன்மையின் சிகரமாக நித்தியானந்தா, ரஞ்சிதா ஆகியோரின் - அவரோட ராவுகள் வீடியோ - இந்தியா சுதந்திரம் அடைந்ததைப் போன்ற முக்கிய நிகழ்வாக அரை மணிக்கொருதரம் போட்டுத் தாக்கினார்கள்.

முதலில் சன்டிவியில் அரைமணிக்கொருதரம் என்று தொடர்ச்சியாகப் காட்டுகிறார்கள் என்று செய்தி கேள்விபட்டபோது - ஒரு வேளை இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்ட செய்தியோ இல்லை “ஐயா கொல்றாங்களே” செய்தியோ என்றுதான் நினைத்தேன். ரெண்டுமே இல்லையாம். பணம் சேர்ப்பதற்காக நீண்டநாட்களாக சலூனுக்குப் போகாமலிருக்கும் ஜடாமுடிதாரி இளைஞனும் ஒரு யுவதியும் படுக்கையிலிருப்பதை ஒரு ஒழுக்கமான, நேர்மையான, சதாசர்வகாலமும் இவ்வுலகத்தை உய்விக்கும் வழியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் ஆத்மா படம்பிடித்து சன் டிவிக்கு அனுப்பியிருக்கிறார்கள் போல. மிட்நைட் மசாலாவைவிட நல்லாருக்கே என்று பொழுதன்றைக்கும் போட்டுத் தாக்கியிருக்கிறார்கள். ஆனால் அதை ”மானாட மயிலாட” போன்று ஏதோ ஒரு நிகழ்ச்சிபோல என்று கலைஞர் தனது குடும்பத்தினருடனும் பேரக்குழந்தைகளுடனும் பார்த்துத் தொலைத்ததை அறிந்திருக்க மாட்டார்கள். கலைஞர் என்ன - தமிழ்நாடே பார்த்தது - இணையம் தயவில் உலகமே பார்த்தது. அந்நேரத்தில் வீட்டிலில்லாத, அல்லது சன்டிவி கனெக்ஷன் இல்லாத என் போன்ற ஆசாமிகள் யூட்யூபில் தேடி என்ன விஷயம் என்று தெரிந்து கொண்டோம். பேரக்குழந்தைகளோடு இதைப் பார்த்துவிட்டோமே என்று சங்கடம் தாங்காமல் “ஊடகங்கள் இம்மாதிரி விஷயங்களை ஒளிபரப்பாது பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்” என்று அறிக்கை மூலம் கலைஞர் அறிவுறுத்தியதும் - வழக்கமாக ஒரு வாரமாவது இதை அச்சு, ஒளி ஊடகங்களின் மூலம் பரபரப்பி மகிழும் சன் டிவி, தினகரன், தமிழ்முரசு மறுநாளே எல்லாவற்றையும் மூட்டைகட்டி - பலவருடக் குப்பை பெருக்கித் தள்ளிவிடப்பட்ட அறை மாதிரி தோற்றமளித்தன! கலைஞரின் அந்த அறிக்கை பாராட்டத்தக்கது. ஆனால் இப்படி செலக்டிவ்வாக அறிக்கைவிடுவதுதான் (வழக்கம்போலச்) சகித்துக்கொள்ள முடியவில்லை.

சரி - ஒரு வழியாய் அலை ஓய்ந்ததா என்று பார்த்தால் கலைஞர் சொன்னதற்காக இரண்டு நாட்கள் சும்மா இருந்துவிட்டு மறுபடியும் ரஞ்சிதாவைத் தேட ஆரம்பித்துவிட்டார்கள். வியாபாரம் நடக்க வேண்டுமே! ஒரு வாரமாக புல்லரிக்கச் செய்யும் செய்திகள் மயிர்கூச்செறியும் காட்சிகள் என்று இடைவிடாது பார்த்தால் என்ன ஆகும்? உடம்பும் மனதும் அரிக்கிறது! செருப்பாலடிக்கும் நிகழ்ச்சிகள், கொடும்பாவி எரிப்பு, திவசம், ஆசிரமம் நொறுக்குதல் என்று தொடர்ச்சியாக வரும் செய்திகளைப் பார்க்கும்போது நம்மூரில் இத்தனை பரமாத்களா என்று பெருமையில் நெஞ்சம் விம்முகிறது. அடஅடஅட! ஆனாலும் நம்மாட்கள் தீமை கண்டு பொங்கியெழுவதைப் பார்த்தால் அட நம்மூருக்குத் திரும்பிரலாம் போலருக்கே என்று தோன்றியதை மறுக்கவே முடியாது. Fashion TV-யைத் தடைசெய்யக் கொடிபிடித்த தமிழர்கள் இப்படி புணர்ச்சி வீடியோக்களை செய்திகளின் ஊடே குடும்பத்தோடு பார்க்குமளவிற்கு நாகரீகத்தின் உச்சியிலிருக்கிறார்களே என்று அதிசயமாக இருந்தது. தமிழ் நாட்டில் ஒரே நாளில் இத்தனை காட்சிகள் எந்தப் படமும் ஓடியிருக்காது!

பகுத்தறிவு நாமத்தைச் சார்த்திக்கொள்ளும் பக்த கோடிகள் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணாமல் வாயிலிருந்து லிங்கம் எடுப்பவர்களையும், ”நானே கடவுள்” என்ற பிராண்டில் பன்னாட்டு பிரம்மாண்ட பக்தி நிறுவனங்களை ஆயிரக்கணக்கில் உலகெங்கும் கிளைகளை ஏற்படுத்தி நடத்தி யூரோக்களும், டாலர்களும், ரூபாய்களுமாகக் கோடிகளில் புரளும் கபடவேடநாடகதாரி (உபயம் : மௌலி இன் அபூர்வ சகோதரர்கள்)களின் பின்னால் சென்று விழுந்து அங்கப் பிரதட்சணமும் ஆலிங்கனமும் செய்துவிட்டு - இப்போது தணிக்கை செய்யப்படாத படுக்கையறைக் காட்சியில் அவர்களது கடவுளைப் பார்த்து வயிறெரிந்துக் காரித்துப்பித் தூற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. இந்த உத்தம சிகாமணிகளுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வரவே வராதா? அது எப்படி இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், நாயர், நாட்டுக்கோட்டைச் செட்டியார், ஐயர், திராவிடன் என்று வித்தியாசமே இல்லாமல் மகா ஒற்றுமையாக ஏமாறுகிறார்கள் என்று புரியவேயில்லை.

மறுபடி சன் டிவிக்கு வருவோம். என்னே சமூக சிந்தனை! என்னே நாட்டுப் பற்று! எனக்குப் புல்லரிக்கிறது! அந்த ரெண்டு ஆசாமிகளும் மனமொத்து ஆலிங்கனம் செய்ததைத் திருட்டுத் தனமாக படம் எடுத்ததை சாட்டிலைட்டுகளின் மூலமாக வரவேற்பறைக்கு அரைமணிக்கூருக்கொருதரம் போட்டுக் காட்டிய சேவைக்கு ஒரு பெயர் இருக்கிறது - மீடியா வெளிச்சம் என்று இங்கிலீஷில் - தமிழில் “விளக்குப் பிடித்தல்” என்று ஒரு வழக்கு இருக்கிறது. கலாநிதி மாறனிடம் நான் கேட்க நினைத்தது - நீங்கள் சன் டிவி பார்ப்பதுண்டா? உங்கள் மனைவி குழந்தைகள் பார்ப்பதுண்டா? துண்டென்றால் இதைக் குடும்பத்தோடு உங்கள் வீட்டில் உட்கார்ந்து பார்த்தீர்களா? இல்லையென்றால் உங்களுக்கு யூட்யூப் லிங்க் அனுப்பட்டா? இல்லாவிட்டால் உங்கள் சொத்திலிருந்து சிலநூறு ரூபாய்களைக் கொடுத்தீர்களென்றால் நக்கீரனுக்கு சந்தா கட்டி அவர்கள் முழு வீடியோவும் காட்டுகிறார்களாம் - அந்த லிங்க்கை உங்களுக்கு அனுப்பலாமா?

Mr. Nithyanandam, CEO of ஞானபீடம், ஸாரி, தியானபீடம் அநேகமாக சன்டிவியை கோர்ட்டுக்கு இழுக்கலாம். தமிழ்நாட்டில் இழுக்க முடியாது - ஆனால் கர்நாடகத்திற்கு வழக்கை மாற்றிவிட்டார்களே! எப்படியும் சில வருடங்கள் ஓடி பேரங்கள் படிந்து மக்கள் வழக்கம்போல இலவச டிவியில் மெட்டி ஒலியிலோ அல்லது தட்டு ஒலியிலோ மூழ்கி விடுவார்கள். போலீஸார் நித்யானந்தத்தையும் ரஞ்சிதாவையும் தேடுகிறார்கள் என்று செய்தி படித்தேன் - எதற்காம்? அமைதிப் பூங்காவான தமிழகத்தில் அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததற்கா? இல்லை பச்சிளம் பாலகர்கள் மனதில் பாலுணர்வைத் தூண்டிவிட்டதற்கா? அட ராமா.. அவர்கள் சன் டிவியை நடத்தவில்லை என்பதை யாராவது சொல்லக்கூடாதா?

ஏழே ஆண்டுகளோ என்னவோ - இப்படி உலகச் சந்தையில் பெரிய துண்டு போட்டு இடம் பிடித்திருக்கும் Dhyanapeetam கம்பெனியை உருவாக்கிய நித்தியானந்தத்தைப் பார்த்து நூற்றாண்டுகள் கண்டும் இந்தியச் சந்தையில் இன்னும் பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கும் பெப்ஸி, கோக் நிறுவனங்கள் பிச்சை வாங்கவேண்டும் என்பதை ஒத்துக்கொண்டேயாக வேண்டும். .

இந்த தேசம் படும் பாடு கேவலமாக இருக்கிறது.  எடுப்பார் கைப்பிள்ளை என்றுகூட சொல்ல முடியாது - கைப்பிள்ளை எவ்வளவோ பரவாயில்லை - இது வேறு ரகம் - என்ன ரகம் என்று எழுத நான் என்ன நக்கீரன் இணைய தளமா? அல்லது சன் டிவி நடத்துகிறேனா? 

தெருவில் கண்கட்டி வித்தை காட்டுபர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களது பிள்ளை குட்டிகளே கயிற்றில் நடக்கும், சவுக்கால் அடித்துக்கொள்ளும். ரத்தம்கக்கிச் சாகாமலிருப்பதற்காக கால்களைச் சேர்த்துவைத்துக்கொண்டு நின்று மொத்த நிகழ்ச்சியையும் அசையாது பார்த்ததுண்டு. குடுகுடுப்பைக் காரனின் ஒலி கேட்டால் வாசல்கதவை மூடி வைத்துக்கொண்டு திக்திக்கென்ற நெஞ்சத்துடன் அவன் கடந்து போகும் வரை சத்தமில்லாமல் ஒளிந்து நின்றதுண்டு. இம்மாதிரி வித்தைக்காரர்கள் கற்ற வித்தையோடு இந்து மதம், யோகா என்று சரிவிகிதத்தில் கலந்து லாகிரி வஸ்துவாகத் தர அதைத் தின்றுவிட்டு போதையில் அவர்கள் பின்னால் “கடவுளே” எனத் துதிக்கிறது பெருங்கூட்டம். அதோடு இப்போது நடிகையை வேறு பார்த்துவிட்டார்களா? ஆஹா... சாமியாருக்கு மச்சம்டா என்று நினைக்காதவர்கள் எத்தனை பேர். பிரேமானந்தாவிலிருந்து பல ஆனந்தாக்களைப் பார்த்து நாமும் ஏதாவதொரு ஆனந்தாவாகிவிட்டு ஆனந்தமாக இருக்கலாம் என்று எண்ணியவர்கள் நித்தியானந்தாவைப் பார்த்து முடிவே செய்திருப்பார்கள்! வழக்கம்போல எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் - என்று நாட்டில் எந்தப் பிரச்சினை வந்தாலும் அந்தத் தீயில் குளிர்காய நினைக்கும் - பாதிக்கப்பட்டவர்கள் என்ற போர்வையில் வரும் சமூக விரோத கூட்டம் - இப்பிரச்சினையிலும் ஆஜராகி ஆசிரமத்தை நொறுக்குவது, உடைப்பது என்ற சமூக நற்பணிகளில் ஈடுபட, எங்கு நோக்கினும் எதிர்ப்பு குரல்கள்!

மதம் என்னும் காவிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு திரியும் நித்தியானந்தா மாதிரி ஆசாமிகளைக் கடவுள் போலப் பாவித்து அவர்கள் பின்னால் ஆட்டுமந்தைக் கூட்டமாகச் சென்று பணத்தை வாரியிறைத்து “அருள்” தேட நினைத்த பக்தர்கள் இனி என்ன செய்வது என்று முடிவு செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த விடியோவைப் பார்த்த பின்பு ஆசிரமத்துல நடிகைங்களை ஈஸியாப் பார்க்கலாம் போலருக்கே என்று கூட்டம் இன்னும் கூடலாம். 

சரி. சொல்லவந்ததை... அய்யய்யோ என்ன சொல்ல வந்தேன் என்று மறந்து போச்சே!!! தொலையட்டும். பரபரப்புச் செய்திகள் பதினைந்து நாட்களுக்கு மேல் தாங்காது. இதுவும் தாங்காது. 

காளஹஸ்தி கோபுரம் இடிந்து விழுந்திருக்கிறது. இது இடிந்து விழுந்திருக்கும் ஒரு சமூகத்தின் குறியீடே. மதம், இறை போன்ற விஷயங்களுக்குள் போகாது பார்த்தால் ஐநூறு வருடம் பழமையான ஒரு புராதான, வரலாற்றுச் சின்னத்தை நாம் பேணி காக்கும் லட்சணம் இதுதான். பகுத்தறிவு என்ற பெயரில் வரலாற்றை மறைப்பதும், புராதானங்களைக் கேட்பாரற்று, மரியாதையற்று நட்டாற்றில் விடுவதும் நம்மூரில் மட்டுமே நடக்கும். வௌவால்கள்கூட வாழமுடியாத நிலையில் அருங்காட்சியகங்கள்.  பழமையான சின்னங்களில் சமூக விரோதச் செயல்கள். இவற்றின் அருமை பெருமை என்று எதைப்பற்றியும் அறிந்துகொள்ளாத, ஊடகப்பால் ஊட்டி வளர்க்கப்படும், கவைக்குதவாத ஏட்டுச் சுரைக்காய்களைப் படித்து வளரும், எதையும் பணம்கொடுத்துச் சாதித்துக்கொள்ளலாம் என்ற கலாசாரத்தில் ஊறிய, குற்றவுணர்வே எழாத மக்கள்.

பரம ஏழை நாடுகளில்கூட அவர்களது வரலாற்றுச் சின்னங்கள் மீது அபரிமிதமான மரியாதை கொண்டு பூப்போலப் பார்த்துக்கொள்கிறார்கள. இங்கு பணம் குவிக்க மட்டுமே அதைப் பயன்படுத்திக்கொண்டு இப்படி அம்போவென இடிந்துபோக விடுகிறோம். இதுமாதிரி கேட்பாரற்று சிதிலமடைந்திருக்கும் சின்னங்கள் எத்தனை ஆயிரங்கள்? லட்சங்கள்? கடவுளாலேயே இவற்றைக் காப்பாற்ற முடியாது. ஆட்சியாளர்கள் இலவச டிவியில் மக்களை மூழ்கடித்து ஓட்டு வாங்குதில் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களது நிறுவனங்கள் அந்தரங்கக் காட்சிகளை உலகெங்கும் ஒளிபரப்புவதில் மூழ்கியிருக்கிறார்கள்.


காசிருப்பவர்கள் என்னமும் செய்யலாம். கேட்பாரற்ற சாமான்யர்கள் கேட்பாரற்றவர்களாகவே இருப்பார்கள். வல்லான் வாழ்வான் - இதுதான் இன்றைய நியதி.  ஒரு பெரும் சுழலில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகிறது சமூகம். கடவுள் காப்பாற்றட்டும்.



***

உவ்வேக்கானந்தன்!



திடீரென்று போன சனியன்று டாய்லெட் அடைத்துக்கொண்டுவிட்டது.

“போன மேயில்தானே செப்டிக்கைச் சுத்தம் செய்தோம். ரெண்டு வருஷத்துக்கொரு தடவை பம்ப் பண்ணினா போதும் என்றானே விண்ட்ரிவர் ஆள். நடுவுல வேற ரெண்டரை மாசம் ஊர்லயே இல்லையே. டாங்க் ரொம்பறதுக்கு சான்ஸே இல்லை” என்றெல்லாம் யோசித்துக்கொண்டு விண்ட்ரிவர் கம்பெனிக்குத் தொலைபேசியதில் வீக்கெண்ட் என்பதால் யாரும் உடனடியாக வரமுடியாது என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு திங்கள் காலையில் ஆளனுப்புவதாகச் சொன்னார்கள். இந்த வருடம் நிறைய மழை பெய்ததாலும் போன ஜனவரி போல பனி கொட்டித் தீர்த்ததாலும் தொட்டி நிரம்ப வாய்ப்பு இருக்கிறது என்றும் சொன்னார்கள். தெருவில் எங்கள் வீட்டில் மட்டும்தான் செப்டிக் டாங்க். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் டவுன் ஸீவர் ஸிஸ்டத்தில் ஐக்கியமாகியிருக்கிறார்கள். காரணம் எங்கள் வீட்டுக்கு முன்னால் ஓடும் வாய்க்கால். மெயின் இணைப்பிலிருந்து வீட்டு வரை குழாய் போட மொத்தம் இருபதாயிரம் டாலர் ஆகும் என்றார்கள! அடப்பாவிகளா!

அவசரத்துக்குப் பேசாமல்  வாய்க்காலில் இறங்கியிருப்பேன். ஆனால் இங்கு போனால் Fox சானலின் SkyFox ஹெலிகாப்டரிலிருந்து படமெடுத்து லைவ் ரிலேவாகவே காண்பித்து நான் “போய்” முடிப்பதற்குள் சைரனைப் போட்டுக்கொண்டு காவல்துறை வந்துவிடும் என்பதால் அந்த ரிஸ்கை எடுக்காமல் என்ன செய்வது என்று யோசித்து நண்பரிடம் பேசியதில் உடனே வீட்டுக்கு வந்துவிடச் சொல்லி அழைக்க குளிக்காமல் கொள்ளாமல் குடும்பம் குட்டிகளோடு கிளம்பிப் போயாகிவிட்டது. நமது விருந்தோம்பலைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. எங்களை நிரம்பவும் சிரத்தையெடுத்துக் கவனித்துக்கொண்டார்கள்.

திங்களன்று காலை குழந்தைகளைப் பள்ளியில் இறக்கிவிட்டு, வீட்டுக்கு வந்து காத்திருக்கத் துவங்கினோம். பத்தரை மணியளவில் டாங்கர் லாரி வந்து பெரிய குழாய்களைப் பொருத்தி இழுத்துக்கொண்டு வந்து செப்டிக்கைத் திறந்து பார்த்துவிட்டு அந்த நபர் “உள்ளே ஒரு ஓட்டலே இருக்கிறதே” என்று சொல்ல தயக்கத்தோடு எட்டிப் பார்த்தேன். என்ன பார்த்தேன் என்பதை விவரிக்கப் போவதில்லை.

இங்கு பெரும்பாலான வீட்டுச் சமையலறைகளில் ஸிங்க் தொட்டிக்கு அடியில் Garbage Disposal என்று மிக்ஸி மாதிரி மோட்டார் ஒன்றைப் பொருத்தியிருப்பார்கள். தட்டுப் பாத்திரங்களைக் கழுவும்போது உணவுக் கழிவுகளை ஸிங்க்கில் கொட்டி ஸ்விட்சைத் தட்டினால் அவை விழுதாக அரைபட்டு நீரோடு ஐக்கியமாகிவிடும். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரெல்லாம் நேராக செப்டிக் தொட்டிக்குத்தான் செல்லும். வீட்டுக்காரப் பெண்மணிகள் சமைத்த மிச்சங்களையும் சிலசமயம் அதில் போட்டு குழாயைத் திறந்துவிடுவதால் அவை சிறிது சிறிதாகச் சேர்ந்து குழாயில் எங்காவது அடைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. அவர் செப்டிக் நிரம்பவில்லை என்றும் வீட்டிலிருந்து வரும் குழாய்களில் எங்கோ அடைப்பிருக்கிறது என்றும் சொல்லி டாங்கைச் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று அறிவித்துவிட்டு மூடியைத் திரும்பப் பொருத்திவிட்டு நூற்றைம்பது டாலர்கள் மட்டும் வாங்கிக்கொண்டு (டாங்கைச் சுத்தம் செய்திருந்தால் முன்னூறு டாலர்கள்), ப்ளம்பரை அனுப்புவதாகச் சொல்லிவிட்டு நம்மூர் ப்ரூ இன்ஸ்டண்ட் காஃபியை பருகிவிட்டுச் சென்றார்.

மறுபடியும் விண்ட்ரிவரில் விசாரித்ததில் மூன்று மணிக்கு ப்ளம்பர் வந்துவிடுவார் என்றும் ஒரு மணிநேரத்திற்குள் பிரச்சினை சரிசெய்யப் பட்டுவிடும் என்றும் உறுதியளித்தார். குழந்தைகள் இரண்டரை மணிக்கு பள்ளியிலிருந்து வந்துவிடுவார்கள்.

மூன்று மணிக்கு பிளம்பர் வந்து கீழ்தளத்தில் இருந்த டாய்லட் சீட் ஒன்றை கழற்றி நகர்த்தி வைத்துவிட்டு, கொண்டு வந்திருந்த இயந்திரத்தின் தாம்புக்கயிறு மாதிரியான குழாய் ஒன்றை உள்ளே செருகி இயக்கியதில் அது சரசரவென்று உள்ளே போய் கடைசியாக ஒரு துணிப்பந்தை இழுத்துக்கொண்டு வந்தது.

“இதான்” என்று வெள்ளைக்கொடி மாதிரி அதை விரித்துக்காட்டிவிட்டு கழற்றியதையெல்லாம் மறுபடி பொருத்தி ஒரு தடவை ஃபளஷ் செய்ததில் ஆஹா.. நீர் தடையின்றிப் போகும் சத்தம்!

சின்னதுதான் துணியை உள்ளே போட்டிருக்கவேண்டும். பள்ளிக்கூடம் விட்டு வந்தவளை “என்ன பண்ணினே” என்று மூலையில் மடக்கி மிரட்டிக் கேட்டேன். “நீதான் Wet Tissue வச்சு தொடச்சா அழுக்கு போயிடும்னே. அதான் அதை உள்ளே போட்டு Flush பண்ணினேன்” என்று என்னை மூலைக்குத் தள்ளி எகிறினாள். Wet Tissue காகிதம் மாதிரியும் இருக்காது. துணி மாதிரியும் இருக்காது. ஆனால் கிழியாது. “மூணு டாய்லட் இருக்கில்லியா. அதான் டப்பாவிலிருந்த எல்லா டிஸ்யூவையும் எடுத்துப் போட்டேன்.  அய்யோ I have to go one bathroom” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்து கதவைப் பூட்டிக்கொண்டாள்.

எனக்கும் லேசாக வயிறு கலக்குகிற மாதிரி இருந்தது!

***





Tuesday, May 25, 2010

FICCI - கமல்ஹாஸன் - தமிழுணர்வாளர்கள்


கொழும்புவில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் FICCI பங்கெடுக்கக்கூடாது என்று கமல்ஹாஸன் அலுவலகம் முன்பு “தமிழுணர்வாளர்கள்” குழுமி ஆர்ப்பாட்டம் நடத்தினார்களாம். அதோடு அவர்கள் வைத்த கோரிக்கைகள்.

1. FICCI அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்து கமல் விலகவேண்டும்
2. பத்மஸ்ரீ பட்டத்தைத் திரும்பக் கொடுக்கவேண்டும்.

மேற்குறிப்பிட்ட இரண்டையும் செய்தால் ஈழத் தமிழர்களுக்கு விடிவு காலம் வந்துவிடும் போல. போராட்டம் நடத்தியவர்களின், அவர்களைப் பின்னணியில் இருந்து உந்தியவர்களின் அறிவை மெச்சிக்கொள்ள வேண்டியதுதான்.

கலை, விளையாட்டு போன்றவை எல்லைகளற்றவை என்றெல்லாம் பீத்திக்கொண்டது ஒரு காலம். அரசியல் அவற்றில் கலந்து நாற்றமடிக்கத் துவங்கி நீண்ட நாட்களாகிறதுதான். இம்மாதிரி தமிழுணர்வு போராட்டங்களால் ஒரு மயிற்கற்றையைக் கூட பிடுங்க முடியாது என்று நன்கு தெரிந்தும் இவர்கள் போராடுவது பதினைந்து நிமிட ஊடகப் புகழுக்காகத்தான் என்று தோன்றுகிறது.

இதே FICCI க்கு வேறு யாராவது எந்த மாநிலத்தவராவது தலைவராக இருந்திருந்தால் அவர்கள் வீட்டு முன்பு சென்று போராடுவார்களா? மாட்டார்கள். அதாவது தமிழன் கமல் அந்த அமைப்புக்குத் தலைவராக இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அவ்வமைப்பு பங்கேற்கக்கூடாது. ஆனால் வேறு மொழி பேசுவோர் தலைவராக இருந்தால் ஒன்றும் போராட மாட்டோம். என்னே லாஜிக்!!! அதே போல பிரச்சினைக்குச் சற்றும் சம்பந்தமேயில்லாத பத்மஸ்ரீ பட்டத்தை திருப்பிக் கொடுக்கவேண்டுமாம்! ஏன் தமிழக முதல்வரிடம் பதவியைத் துறக்கச் சொல்லவேண்டியதுதானே! அல்லது இவர்களே சூட்டிய “தானைத் தலைவர்” “புரட்சித் தலைவி” போன்ற பட்டங்களை திருப்பி எடுத்துக்கொள்கிறோம் என்று அறிக்கை விட வேண்டியதுதானே? விட்டால் வீட்டுக்கு ஆட்டோ வரும் என்ற பயம்! கமல் ஹாஸன் நிதானப் போக்கைக் கடைப்பிடிப்பவர். ஆகவே அவர்மீது கல்லெறிந்து பார்க்கலாம்.

இம்மாதிரி விழா புறக்கணிப்புகளால் புண்ணைத்தான் சொறிந்து சுகம்காண முடியுமே ஒழிய விழா நடக்காமலிருக்கப் போவதில்லை.

உண்மையிலேயே அவர்கள் இலங்கையரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தால் மாநிலத்தில் ஆட்சியிலும் மத்தியில் செல்வாக்காகவும் இருக்கும் “தமிழினத் தலைவர்” வீட்டு முன்பு சென்று போராடி இலங்கையுடன் எவ்வித வர்த்தக உறவும் தமிழ்நாடோ இந்தியாவோ கொள்ளக்கூடாது என்று பொருளாதாரத் தடை கொண்டுவரச் சொல்லி போராட வேண்டும். செய்வார்களா? மாட்டார்கள்.

இலங்கைக்கு இங்கிருந்து ஏற்றுமதியையோ, அங்கிருந்து இறக்குமதியாவதையோ நிறுத்தப் போராடுவார்களா? மாட்டார்கள். கமலிடம் போய் சொறிவது ஏன்?

பதவியை இறுகப் பிடித்தக்கொண்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாராமுகம் காட்டும் அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராடாமல் கலைஞர்கள் வீட்டு முன்பு போராடுவது பைத்த்தியக்காரத்தனம்.

இலங்கைத் தமிழர்களை விடுங்கள். இலங்கைக் கடற்படை எத்தனை தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்களைத் தாக்கிக் கொன்றார்கள்! இன்னும் மீனவர்கள் அடிபடுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். அப்போது எங்கே போயிற்று “தமிழுணர்வு”? இதை எதிர்த்து முதலமைச்சர் வீட்டு முன்பு போராடினார்களா? அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் போட்டார்களா? சொந்த மக்கள் பற்றியே உணர்வில்லாதவர்கள்  அண்டை நாட்டுப் பிரச்சினையை வைத்துக்கொண்டு அரசியல் செய்வது படு கேவலம்.

புல்லுருவித் தலைவர்கள் இருக்கும் வரை, அவர்களை ஆட்சியில் வைத்துக்கொண்டு வேடிக்கை பார்க்கும் மட மக்கள் இருக்கும் வரை, இந்தியா வல்லரசல்ல - வெறும் புல்லரசுதான்! இலங்கை என்ன - பிஜி தீவு கூட இந்திய மீனவர்களைக் கொல்லும். இல்லாவிட்டால் படகில் தீவிரவாதிகளை அனுப்பி கொலைவெறியாட்டத்தை நடத்தும். நாம் அகிம்சை பேசிக்கொண்டு கொன்று குவித்த கொலையாளிகளை கோர்ட்டில் நிறுத்தி கோடிக்கணக்கில் செலவு செய்து தண்டனை கொடுத்து உலகில் நம் “பெருமையை” நிலை நாட்டிக்கொள்வோம். பிறகு கண்டன அறிக்கைகள், “கடுமையான” அறிக்கைகளை அனுதினமும் விட்டுக்கொண்டிருப்போம். தமிழர்கள்/இந்தியர்கள் கேட்பாரற்று தினம் சாவார்கள். வாழ்க பாரதம்!

இதற்கு முன்பு வேறு சில பிரச்சினைகளுக்கு நடந்த போராட்டங்களில் மற்ற நடிகர்கள் மனோகரா பாணியில் வசனம் பேசி பிரச்சினைகளைப் பெரிதாக்கியதோடு சரி. கமல் அவற்றில் நிதானப் போக்கைக் கையாண்டு பேசியது அனைவரும் அறிந்ததே. இப்போது இந்த
“மாபெரும் தமிழுணர்வுப் போராட்டத்தையும்” அவருக்குயுரித்தான நிதானத்தோடு கையாண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை கீழே!

"தமிழ் உணர்வாளர்களே...

மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால்  கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

ஃபிக்கி என்ற அமைப்பு திரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களால் துவங்கப்பட்டது. மனித நேயம் இந்த அமைப்பின் அடிப்படைத் தீர்மானங்களுள் இரண்டறக் கலந்ததாகும். 

உங்களைப் போன்ற உணர்வுள்ள நான், ஏற்கெனவே இலங்கை சென்று இந்த விழாவில் பங்கு கொள்வது நியாயமில்லை என்ற காரணத்தில் ஐஃபா நிகழ்ச்சியில் பங்குபெறச் செல்லவில்லை. உண்மையைச் சொன்னால், இதுவரை நடந்த ஐஃபாவின் எந்த நிகழ்ச்சியிலுமே நான் கலந்து கொண்டதில்லை. 

என் அலுவலகத்தின் முன்னாள் கூடிய ஒரு சிறு தமிழுணர்வாளர்கள்  கூட்டத்தில், சிலர் விண்ணப்ப வாக்கியங்கள் எழுதிய காகிதங்களை உயர்த்திப் பிடித்திருந்தனர். 

அவை நான் தென்னக FICCI தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்றும், இன்னொரு சுவரொட்டி, எனக்கு இந்நாடு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தை திரும்பத் தந்துவிட வேண்டும் என்றும் வலியுறுத்தின. 

தமிழ் உணர்வை மனதில் கொண்ட நான், FICCI தலைமை, FICCI entertainment தலைவர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யாரும் கொழும்பு விழாவில் பங்கேற்கக் கூடாது என அன்புக் கட்டளையிட, அவர்களும் இசைந்து IIFA விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். இலங்கையில் நடக்கவிருக்கும் வர்த்தக் கூட்டமைப்பு விழாவுக்கும் இவர்கள் செல்லப்போவதில்லை என்றும் சொல்லியிருக்கின்றனர். 

மற்றபடி வியாபாரிகள் வர்த்தகம் செய்வது தொடர்ந்து நடந்து வருவதைத் தடுப்பது FICCI போன்ற சிறிய அமைப்புகள் கையில் இல்லை. உங்கள் கருத்துக்கள் என்னை வந்தடையும் முன்பாகவே (தற்காப்பு அல்ல) உணர்வின் உந்துதலால் இந்தப் பணியைச் செய்துள்ளேன். மற்றபடி என் நாடு எனக்களித்த கவுரவத்தைத் திருப்பித் தருவதால் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்று நம்புகிறேன்.

FICCI விமர்சனங்களை ஏற்று நடவடிக்கை எடுக்கும் மனப்பாங்குடையது. இம்மனித நேயம், மனப்பாங்கு, அதை நிறுவியவரிடம் FICCI கற்ற பாடம். தன் நிலையை உணர்த்தும் முதல் நடவடிக்கையாக FICCI தலைவர்கள் மனித நேயத்தோடு எடுத்திருக்கும் இம்முடிவு உங்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன்!" 


-கமல் ஹாஸன்






ஆக “போராட்டம்“ வெற்றியடைந்துவிட்டது. இனி இலங்கைத் தமிழர்களுக்கு எல்லாம் சுபமே! வாழ்க வளமுடன்!

***

Saturday, May 22, 2010

விக்கல் - சுஜாதாவின் கடைசிப் பக்கங்கள்!

செந்நிற அட்டையுடன் வந்திருக்கும் சுஜாதா கணையாழியில் 1965 லிருந்து 1998 வரை எழுதிய கடைசிப்பக்கங்களையடக்கிய தொகுதியை வாங்கி ஒரு வருடத்திற்கு மேலானாலும் கைக்குக் கிடைத்ததென்னவோ இரு வாரங்களுக்கு முன்பு.

சுஜாதா என்ற ஆளுமையின் எழுத்துலகப் பயணத்தின் மைற்கற்களை ஒரு சேர ஒரு புத்தகத்தில் பார்த்ததும் எழுந்த பெருந்திகைப்பு அடங்கவேயில்லை.

இதை வெளிக்கொண்டுவந்த மனுஷ்யபுத்திரனுக்கும் தொகுப்பதில் பெரும்பங்காற்றிய தேசிகன் மற்றும் அனைத்து மேன்மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

புத்தகத்தைப் படிக்கப்படிக்க பிரபஞ்சத்தின் கீழ் அனைத்தையும் தொட்ட எழுத்துச் சிற்பி மீது எழுந்த பிரமிப்பு அடங்க இன்னும் எத்தனை வருடங்களாகுமோ தெரியவில்லை. எழுத எழுத பண்படும் எழுத்து என்பார்கள். 80-களில் நான் படித்து பிரேமைகொண்ட அவரது வசீகர எழுத்து பாணியை அறுபதுகளிலேயே அவர் கையாண்டிருப்பது பெரிய ஆச்சரியம்- தலைமுறைகள் தாண்டிய அவரது எழுத்துகளின் ஆழம் - Consistency - சுஜாதாவின் மறைவு தமிழுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை இன்னும் பெரிதாக இப்போது உணர முடிகிறது.

கடைசிப் பக்கங்களிலிருந்து சில பக்கங்களை பகிர்ந்துகொள்ள ஆசையாயிருப்பதால் இப்பதிவு (இன்னும் சில பதிவுகள்).

*****

“விக்கல்” - சுஜாதா

விக்கலுக்கு வைத்தியம் தெரியாதவர்கள் ஒருவருமே இல்லை என்று நினைக்கிறேன். போன வியாழக்கிழமை எனக்குப் பிடிவாதமாக விக்கல் எடுத்தது. அண்ணாசாமி வந்தார். “சௌக்கியமா?” என்றார். “க்” என்றேன். “விக்கிறதா? ஆர் யூ ஸெல்லிங்?” என்று இங்கிலீஷில் கேட்டார். “க்” என்றேன். “இதோ பார், நான் சொல்வதைச் செய். குனிந்து முதுகிலே ஒரு கிளாஸ் டம்ளரை பாலன்ஸ் பண்ணி 500 வரை அஞ்சு அஞ்சாக மூச்சு விடாமல் எண்ணு” என்றார். எண்ணினேன். 500 தாண்டியதும் “க்” என்றேன். அண்ணாசாமி யோசித்தார். “பிடிவாதமான விக்கல். ம்! கொஞ்ச நாழி சீட்டி அடித்துப் பார்” என்றார். சீட்டியடிக்கத் துவங்கினேன். “நிறுத்து, பயமாக இருக்கிறது. வேண்டாம். இப்படிப் பண்ணிப் பார். ஒரு கிளாஸ் பாலை வலது கையிலே வைத்துக்கொண்டு கழுத்தைச் சுற்றி இடது பக்கமாகக் கொண்டுவந்து சீப்பிப் பார்” என்றார். பார்த்தேன். “சேச்சே என்னப்பா கவனமாகச் செய்ய வேண்டாம்? பனியன் எல்லாம் பாலாக்கிவிட்டாயே! ...சே! சரி இப்படிச் செய். மாடிப் படியிலிருந்து உரக்கக் கத்திக்கொண்டே குதித்துக் குதித்துப் பத்து தடவை ஏறி இறங்கு” என்றார். மூன்றாம் தடவை இறங்கும்போது பக்கத்துவீட்டுக்காரர்கள் கும்பலாக வந்து என்ன என்ன என்று கவலையுடன் எட்டிப் பார்க்க அதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது. அண்ணாசாமி சொல்படி வாசல் புல்தரையில் சிலதடவை புரண்டு பார்த்தேன். (ஒவ்வொரு தடவையும் ஒரு கொத்துப் புல்லை வாயால் கவ்வ வேண்டும்). ம்ஹூம்! விக்கல் நிற்கவில்லை. மேலும் யோசித்தார்.


அண்ணாசாமி கையைச் சொடக்கினார்! “ஒரு ஷ்யூர் க்யூர். ஒரு காகிதப் பை கொண்டு வா” என்றார்.


கொண்டு வந்தேன்.


“மூஞ்சியை மறைத்துக்கொண்டு வெடிக்க ஊதுவதுபோல் ஊதி பைக்குள்ளேயே அஞ்சு நிமிஷம் சுவாசம் பண்ணி பைக்குள் இருக்கும் கார்பன் மானாக்ஸைட் ஜாஸ்தியாகப் போய் அது விக்கல் நரம்புகளைத் தளர்ச்சி பண்ணும்” என்றார்.


நான் அவ்வாறே மூஞ்சியைக் காகிதப் பையில் மறைத்துக்கொண்டு ஐந்து நிமிஷம் மேலும் கீழும் நடந்தேன். அண்ணாசாமி உடன் நடந்தார்.


பையை எடுத்தேன். தாமதித்துப் பார்த்தேன்.


என் விக்கல் போய்விட்டது. “போய் விட்டது சார், வந்தனம்” என்று சிரித்தேன்.


“சொன்னேனா அல்லவா? அப்ப நான் வரட்டுமா” என்று போகச் கிளம்பினார். பத்தடி போனதும் “ஹிகிக்” என்றார்.


***

Wednesday, January 27, 2010

60-வது சீட்டு!



ஜன-20, 2009 என்ற தேதி முதன்முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் அமெரிக்க ஜனாதிபதியான நிகழ்வினால் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. தங்களது ஓட்டுகளினால் அதை வரலாற்று நிகழ்வாக ஆக்கிய அமெரிக்க மக்களே, அதே ஓட்டு என்ற ஆயுதத்தால் சரியாக ஒரு வருடம் கழித்து ஜன-19, 2010-இல் நடந்த தேர்தலில் வேட்டு வைத்துவிட்டார்கள்.

மறைந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜான் கென்னடியின் சகோதரர்களில் ஒருவரான ட்டெட் கென்னடி என்று அழைக்கப்படும் எட்வர்ட் எம். கென்னடி ஜனநாயக்கட்சியைச் சேர்ந்தவர். அமெரிக்க செனேட் சபைக்கு மாஸசூஸட்ஸ் மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பல வருடங்களாக பணியாற்றியவர். மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் அவர் மரணமடைந்ததும் காலியான அவரது பதவியை எளிதில் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று இறுமாந்திருந்த ஜனநாயகக் கட்சிக்கு மக்கள் பலத்த குட்டு வைத்துவிட்டார்கள்.

கிட்டத்தட்ட அறுபதாக ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சியின் கட்டுக்குள் இருந்த தொகுதியை எதிர்க் (குடியரசுக்) கட்சியின் சார்பாக நின்ற ஸ்காட் ப்ரவுன் பறித்து அமெரிக்கா முழுவதும் அலைகளை ஏற்படுத்தியிருக்கிறார். இது ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரே ஒரு செனேட் சீட்டுக்கு நடந்த தேர்தலாகச் சாதாரணமாகக் கருதிவிட முடியாது.

ஒபாமா பதவியேற்று ஒருவருட காலத்தில் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகள் மிகப் பெரிய பிரச்சினைகள் - கடந்த நாற்பதாண்டுகளில் வேறு எந்த அதிபரும் சந்தித்திராத பிரச்சினைகள். அதீத உயரத்தின் உச்சியிலிருந்து உடைந்து விழுந்த பொருளாதாரத்தினால் மொத்த அமெரிக்காவும் தவித்துக்கொண்டிருக்கிறது. தினமும் ஏதாவதொரு வங்கி திவாலாகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் உச்சபட்ச அளவாக 10%-க்கும் மேல் எகிறிவிட்டது. பெரிய நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்து வருகின்றன. இன்றைக்கு மிகப்பெருமளவில் தொழிலாளர்களைக் கொண்ட Wal-Mart போன்ற பல்பொருள் அங்காடிகள் 11,000 பேரை வேலைநீக்கம் செய்வதாகவும் பல கிளைகளை மூடுவதாகவும் அறிவித்திருக்கிறது. இது ஒரு உதாரணம் மட்டுமே. லட்சக்கணக்கான வேலைகள் காலியாக வேறு வேலை கிடைக்காமல் நடுவீதிக்கு வராத குறையாக அமெரிக்கர்கள் திண்டாடுகிறாரக்ள். வீடு, மனை, நில விற்பனையோ அதல பாதாளத்தில். தினமும் கோடிக்கணக்கில் செலவாகும் ஈராக், ஆஃப்கானிஸ்தான் போர்கள். அவ்வப்போது தீவிரவாத அச்சுறுத்தல்கள் வேறு. கடும் முட்கள் நிறைந்த அதிபர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார் ஒபாமா! ”அனுபமில்லாதவர், வாய்ச்சொல்லில் வீரர்” என்று அனுதினமும் எதிர்க்கட்சி அவரைப் போட்டுத் தாளித்துக்கொண்டிருக்க, பில் ஓரெய்லியும் ஹானிட்டியும் க்ளென் பெக்கும் ஃபாக்ஸ் சானலில் தினமும் அவரைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா, ஜனநாயகக்கட்சியனரின் ஒவ்வொரு அசைவும் உருப்பெருக்கிக் கண்ணாடிகொண்டு ஆராயப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் அசுரத்தனமான பொருளாதார இயந்திரம் ஆங்காங்கு ஆட்டம் கண்டு இயங்க முடியாமல் தத்தளிப்பதைத் தடுத்து மீட்டெடுக்க கடந்த ஓராண்டாக ஒபாமா எடுத்த பல நடவடிக்கைகளும் - பெரும் வல்லுநர்களின் ஆலோசனைகள்கூட - உதவவில்லை. லட்சக்கணக்கான கோடிகளை நீராய் இறைத்துப் பார்த்துவிட்டார்கள் - ஒரு பிரயோஜனமும் இல்லை. வேலைவாய்ப்புகள் பெருகி, வேலையிழப்புகள் குறைந்திருக்கின்றன என்று வெள்ளை மாளிகை கணக்கு காட்டினாலும் - பெரிதாக ”மாற்றம்” ஏதும் நிகழாததால் அமெரிக்க மக்கள் பொறுமையிழக்கத் துவங்கிவிட்டார்கள்.

அமெரிக்கா ஒரு அசுர சக்தி என்றால் அந்த அசுர சக்தி தன்னகத்தே உட்கொண்டிருக்கும் ராட்சத பற்சக்கரங்களில் ஒன்று இந்த Healthcare என்பது. மருத்துவக் காப்பீடு இல்லாத மனிதன் பிணத்திற்குச் சமானம். கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாத அளவு இங்கு மருத்துவச் சிகிச்சைகளுக்கான செலவு மிகமிக அதிகம். உலகிலேயே மருத்துவக் காப்பீடுக்கு மக்கள் அதிகமாகச் செலவழிக்கும் நாடு அமெரிக்காதான். ஆனாலும் செலவினங்கள் கூடிக்கொண்டே செல்ல வேலையிழப்புகளினால் மருத்தவக்காப்பீடுகளும் தொலைந்து போக, காப்பீடு இல்லாமல் கோடிக்கணக்கில் மக்கள் திண்டாடுகிறார்கள். இது சாதாரண பிரச்சினையல்ல. இங்கு யாரும் யாரையும் எதற்காகவும் எப்போதுவேண்டுமானாலும் நீதிமன்றத்துக்கு இழுக்கலாம். America is a country of Law - என்பார்கள். எதெதற்கு வழக்கு போடுவது என்று நம்மால் கற்பனை செய்ய முடியாத விஷயத்துக்கெல்லாம் வழக்குப் போட்டு கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு வாங்குவார்கள். மருத்துவத் துறையும் விதிவிலக்கல்ல. வழக்குகளிலிருந்து காத்துக்கொள்வதற்காக மருத்துவத் துறையில் இருப்பவர்கள் (மருத்துவர்களிலில் தொடங்கி கிட்டத்தட்ட எல்லாரும்) காப்பீடு எடுத்துக்கொள்வதற்காகச் செலுத்தும் காப்பீட்டுத் தவணை மிக மிக அதிகம். அதை எங்கிருந்து எடுப்பார்கள்? மருத்துவ சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடமிருந்து வசூலிக்கும் கட்டணங்கள் மூலமாகத்தான். ஒவ்வொரு நோயாளியும் அந்த அளவு கட்டணங்களை தத்தமது வருமானத்திலிருந்து செலுத்துவது என்பது சாத்தியமேயில்லை என்பதால் ஒவ்வொருவரும் மருத்துவக்காப்பீடு இருக்கவேண்டியது மிக அவசியம். நோயாளிகள் செலுத்தும் காப்பீட்டுத் தொகை வருமானத்திலிருந்து அவர்களின் சிகிச்சை செலவுகளை மருத்துவமனைகளுக்கு காப்பீட்டு நிறுவனம் செலுத்துகிறது. வழக்குகளிலிருந்து பாதுகாக்க மருத்துவமனைகளி பெரும் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்குச் செலுத்துகின்றன. வழக்கு நடத்துவதற்காக பெரும் தொகையை வழக்குரைஞர்கள் வசூலிக்கிறார்கள்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் நோயாளிகளும் மருத்துவர்களும் வழக்குரைஞர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகிய இரண்டு ராட்சதர்களின் பிடியில் இருக்கிறார்கள் என்றால் மிகையல்ல. இந்தப் பிரச்சினையை இன்னும விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நாவல் அளவுக்கு எழுத வேண்டியிருக்கும்.

இதற்கு முன் பில் கிளிண்ட்டன் அதிபராக இருந்தபோது பிரஸ்தாபிக்கப்பட்டு ஹிலாரி கிளிண்ட்டன் கடுமையாக முயற்சி செய்து கரை சேராமற்போன ”Health care reform" என்ற உடல்நலம் குறித்தான மசோதாவை நிறைவேற்றியே தீருவேன் என்று பதவிக்கு வந்தது முதல் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கும் ஒபாமா சம்பாதித்துக்கொண்டு எதிரிகள் ஏராளம். சிறுபான்மையாக ஒரு பகுதி மக்கள் காப்பீடு இல்லாமல் சரியான மருத்துவ வசதிகள் இல்லாமல் அல்லாடுவது முக்கியமான பிரச்சினை என்றாலும் தற்போதைய பொருளாதார நிலையில் வேலையிழப்புகளினாலும், பாடுபட்டுச் சேர்த்த சேமிப்புகள் கண்முன்னே வங்கிகள் திவாலாவதினால் கரைந்து காணாமல் போவதாலும் மக்களில் பெரும்பான்மையினர் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதையுணர்ந்து Healthcare Reform மசோதாவை அவர் சற்று கழித்து கையிலெடுத்திருக்கலாம். ஒரு வாளித் தண்ணீர் கொண்டு ஒரு தெரு முழுதும் பற்றியெரியும் தீயை அணைக்க முடியுமா? ஆரம்பத்தில் அட்டகாசமாகத் துவங்கிய ஒபாமாவின் அரசியல்பயணம் இப்போது ஆட்டங்காணத் துவங்கிவிட்டதன் அறிகுறியை ஸ்பாட் ப்ரவுனின் வெற்றி உணர்த்தியிருக்கிறது.



எல்லாருக்கும் மருத்துவ வசதி கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஒபாமா கொண்டு வந்த மசோதாவுக்கு செனேட் சபையின் ஒப்புதல் வேண்டும். நம்மூர் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று மசோதாக்களை நிறைவேற்றுகிறார்களே - அதே போலத்தான். ஜனநாயகக் கட்சிக்குத் தேவை 60 ஓட்டுகள். 59 ஏற்கெனவே கிடைத்துவிட, 60-வதாக மசோதாவை ஆதரித்தவர் மறைந்த ”டெட்” கென்னடி (Dead கென்னடியல்ல - dead-ஆன Ted கென்னடி!).



கென்னடியின் சீட்டைப் பிடிக்க ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நிறுத்தியது மார்த்தா கோக்லி (Martha Coakley)யை. குடியரசுக் கட்சி சார்பாக நின்றவர் ஸ்காட் ப்ரவுன் (Scott Brown). இரண்டு மாதம் முன்பு வரை ஸ்காட் ப்ரவுன் மார்த்தாவைத் தோற்கடித்துவிடுவார் என்று அவரே கனவு கண்டிருக்க மாட்டார். ஒபாமாவே பாஸ்டனுக்கு வந்து மார்த்தா கோக்லிக்காகப் பிரச்சாரம் செய்தும் தோல்வியடைந்தது ஒபாமாவுக்கான மிகப்பெரிய எச்சரிக்கை மணி! ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் முடிந்து ”It's all Bush's fault" என்ற ஜனநாயகக் கட்சியின் ”தினமும் நான்கு காட்சிகள்” எல்லாம் ஓடி முடிந்து - இமாலய பிரச்சினைகள் எதுவும் தீர்கிற வழியெதுவும் காணாததால் பொறுமையிழக்கத் தொடங்கிய மக்கள் பலமாக அடித்த அபாய மணி அது. Health care reform மசோதாவைக் கொண்டுவந்தால் இன்னும் பல ட்ரில்லியன் டால்கள் கடனுக்கு அமெரிக்கா ஆளாக நேரிடும் என்று குறிப்பிட்டு அதைத் தீவிரமாக எதிர்ப்பது குடியரசுக் கட்சி (ஜனநாயகக் கட்சியிலேயே இம்மசோதாவை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்). மசோதாவைத் தோல்வியடையச் செய்ய அவர்களுக்குத் தேவை நாற்பது ஓட்டுகள். இருந்தது முப்பத்தொன்பது. மசோதா வெற்றிபெறச் செய்ய ஜனநாயகக் கட்சிக்குத் தேவைப்பட்டது 60 ஓட்டுகள். இருந்தது 59 ஓட்டுகள். இம்மாதிரி திரிசங்கு சொர்க்கத்திலிருந்த இரு கட்சிகளுக்கும் கென்னடியின் சீட்டு எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கவேண்டியதில்லை. இவ்வளவு அதிமுக்கியத் தேர்தலை Taken for granted என்ற ரீதியில் எதிர்கட்சியையும் அதன் வேட்பாளரையும் மிகவும் குறைவாக எடைபோட்டு அதி சாதாரணமாக ஜனநாயகக் கட்சியனர் கையாண்டது அசல் பைத்தியக்காரத்தனம். யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்ட கதைதான். ஜனநாயகக் கட்சி என்ற யானை தலையில் அல்ல - தன் கண்களில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது.

ஜனநாயகம் மலிவான, எளிமையானதொரு விஷயமல்ல என்பதை அமெரிக்கா தேர்தல்களுக்குச் செலவழிக்கும் பணத்தைப் பார்த்தால் தெரியும். மக்களுக்கு வேட்டி, சட்டை, சேலை, டிவி என்று இலவசங்கள் எதுவும் கொடுப்பதில்லையே தவிர, அவர்கள் மற்ற எல்லாவற்றுக்கும் செய்யும் செலவைக் கணக்கிட்டால் நமக்கு மயக்கம் வரும்.

தேர்தல் செலவுக்காக ஸ்காட் ப்ரவுன் போட்டுவைத்திருந்த உண்டியல் பட்ஜெட் ஒரு மில்லியன் டாலர்கள் மட்டுமே. கருத்து கணிப்புகளில் முன்னணியிலிருந்த மார்த்தா கோக்லிக்கு ஜனநாயகக் கட்சி அள்ளியள்ளி செலவழித்தது. மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்து கொள்ளாமல் கட்சியின் பிரச்சாரங்களை அறிவிக்கும் பீரங்கி போல விட்டேற்றியாக நடந்துகொண்டார் மார்த்தா. பாஸ்டன் தவிர புறநகர் பகுதிகளில் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இந்தப் பக்கம் ஸ்காட் ப்ரவுன் மக்கள் மனதில் கனன்று கொண்டிருக்கும் உணர்வுகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அதன்படி தனது தேர்தல் பிரச்சாரத்தை அமைத்துக்கொண்டு மாநிலம் முழுவதும் பம்பரமாகச் சுற்றி மக்களைச் சந்தித்துப் பேச, இருவருக்கும் இருந்த வாக்கு வித்தியாசங்கள் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கணிசமாகக் குறைந்து நான்கைந்து சதவீதமே ஸ்காட் ப்ரவுன் பிந்தியிருக்க அவரின் குடியரசுக் கட்சி புருவம் உயர்த்தி “நம்மாள் ஜெயித்துவிடுவார் போலருக்கே” என்று பார்த்தது. அதன்பிறகு கடைசி மூன்று வாரங்களில் மாநிலத்திற்குள் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்காட் ப்ரவுனுக்கு வந்து குவிந்த தேர்தல் நிதி மட்டும் பதிமூன்று மில்லியன் டாலர்கள்! அதில் பெரும்பணம் இணையத்தின் மூலமாக வந்திருக்கிறது. மனிதர் காட்டில் மழை! அவர் அதைச் சரியான முறையில் அவரது பிரச்சாரங்களை ஒலி, ஒளி பரப்பப் பயன்படுத்திக் கொண்டார். மார்த்தா மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுக்காமல் அதற்கான தீர்வுகளை முன்வைக்காமல் பிலாக்காணம் பாடுவது மாதிரி ஸ்காட் ப்ரவுன் பற்றிய எதிர்மறை விளம்பரங்களை வெளியிட, ஸ்காட் ப்ரவுனின் விளம்பரங்களில் அவர் எளிமை உடையில் அவரது GMC வாகனத்தில் தெருத்தெருவாகச் சுற்றி வாக்காளர்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகளை செனேட் சபையில் எடுத்துரைப்பேன் என்று உறுதியளித்து அவர்களது மனங்களை வென்றார். கடைசி நேரத்தில் மக்கள் ஆதரவு குறைவதை உணர்ந்தார்களோ என்னவோ, தோல்வியைத் தவிர்க்க ஒபாமாவையே நேரடியாக பாஸ்டனுக்கு வரவழைத்து மார்த்தாவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யச் செய்தார்கள் - மிகவும் காலதாமதமான இந்நடவடிக்கைகளினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை.

இறுதியில் மக்கள் குரல் வென்றது. இந்த வெற்றி தனிக்காட்டு ராஜாவாக வேகநடை போட்டுக்கொண்டிருந்த ஒபாமா யானையின் காலில் சங்கிலியைப் பிணைத்திருக்கிறது. Obamacare என்று விமர்சிக்கப்பட்ட அம்மசோதா இப்போதைக்கு நிறைவேற வழியில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பொருளாதாரம் மீண்டு எழும்வரை பெரும் செலவு வைக்கும் அம்மாதிரி மசோதாக்கள் எதுவும் எடுபடாது, நிறைவேறாது என்பதை மக்கள் அவர்களது ஓட்டின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். இனிமேல் ஜனநாயகக்கட்சியினரும், ஒபாமாவும் Healthcare reform விஷயத்தை அடக்கிவாசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இவ்வருடமும் இனிவரும் வருடங்களிலும் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் அவரது மறுதேர்தலை நிர்ணயிக்கப்போகிறது. ஒருபானை சோற்றுக்கு இத்தேர்தலை ஒரு பதமாக அவர் எடுத்துக்கொள்வார் என்று நம்புவோம்.

நேற்றே ஒரு அறிக்கையில் அரசு செலவினங்களை அடுத்த மூன்றாண்டுகளுக்குக் கட்டுப்படுத்தும் அறிவிப்பை ஒபாமா வெளியிட்டிருக்கிறார். இன்று இரவு ஒன்பது மணிக்கு State Union Address என்று குறிப்பிடப்படும் மிக முக்கிய உரையொன்றை நாட்டு மக்களுக்கு ஆற்றவிருக்கிறார். அதிபர் பதிவிக்கு வந்ததும் ஒபாமா ஆற்றப்போகும் முதல் State Union Address இதுதான். அளவுகடந்து வரையறையில்லாது ட்ரில்லியன் டாலர்கள் கணக்கில் ஆகாயத்தைத் தொடும் செலவினங்களை அவர் எவ்வாறு கட்டுப்படுத்தி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை மக்களுக்கு விளக்குவது உரையின் முக்கிய பகுதியாக இருந்தாலும், அரசியல் நோக்கர்கள் உரையின் சாராம்சமாகக் கணிப்பது ”மாஸசூசட்ஸ் மக்களே - உங்கள் குரல் என் காதில் விழுந்தது” என்பதைத்தான்.

****