Friday, December 21, 2007

ந.ஒ.க. போட்டிக்கு அல்ல -** பலூன் ** - மீள்பதிவு


எங்கூர்ல முத்தாலம்மஞ்ஜாவடி இருக்கு. வருசா வருசம் திருவிளா நடக்கும். சொக்கப்பனை கொளுத்துவாய்ங்க (அவர்: "இன்னிக்கு சொக்கப்பனைக் கொளுத்தும் நாள்" இவர் : "அவரு என்ன தப்பு பண்ணாருங்க?" விகடன் ஜோக்). அது எரியறப்பவே சில பேரு கட்டய புடுங்கப் பாப்பாய்ங்க. பொறிபொறியா செதறும். பக்கத்து கடைகள்ல விளுந்துருமோன்னு பயமா இருக்கும். சொக்கப்பனை எரிஞ்சி முடிஞ்சதும், எல்லாரும் கரிக்கட்டை ஒண்ணை சுடச்சுட எடுத்து அவங்கவங்க வீட்டுக்கு கொண்டு போவாய்ங்க. எல்லாரும் போனதும் கடைசில நானும் தேடிப்பாத்து சின்ன துண்டு கெடச்சா வீட்டுக்கு எடுத்துப்போயி கூரைல செருகி வச்சுருவேன். சாம்பல வீபூதியா பூசிக்குவேன். ரொம்ப நல்லதுன்னு அம்மா சொல்லிருக்காங்க.

முத்தாலம்மந் திருவிளா நடக்கறப்ப, அம்மஞ் ஜாமிய அளகா அலங்காரம் செஞ்சு வச்சுருப்பாய்ங்க. கண்ணுதான் பாக்க பயமா இருக்கும். நெறய அபிசேகம் செய்வாங்க. எளநி, பாலு, தேனு அபிசேகம் செய்யறப்ப மட்டும் நானு, என் பிரெண்ட்ஸ் எல்லாம் சைடுல போயி எல்லாத்தையும் பாட்டில்ல பிடிச்சு குடிப்போம். இனிப்பா இருக்கும். தீர்த்தமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தண்ணில தொளசி போட்டு சூட வாசனையோட ரொம்ப நல்லா இருக்கும்.

நெறய புதுக்கடை போட்ருப்பாய்ங்க. பொம்மை, டிரஸ்சு, பந்து, பலூன், அப்றம் பூசை ஜாமான் கடையெல்லாம் நெறய இருக்கும். நீலக் கலர்ல கோடுகோடா போட்ட பந்துங்கள குமிச்சி வச்சிருப்பாய்ங்க. அம்பது பைசா ஒரு பந்து. அதுல ஊசியால ஓட்டை போட்டு ரப்பர்நூல் முனில ஈர்க்குச்சி துண்டு ஒண்ண கட்டி ஈர்க்குச்சிய பந்து ஒட்டைல சொருகி உள்ள போட்டுட்டா, குச்சி குறுக்கால விளுந்துகிட்டு ரப்பர் நூல் நல்லா மாட்டிக்கும். நூலோட இன்னொரு நுனிய விரல்ல மாட்டிக்கிட்டு பந்த பிடிச்சி எறிஞ்சா, சொய்ங்ங்னு போயிட்டு திருப்பி கைக்கே வந்துடும். ரொம்ப சூப்பரா இருக்கும். பந்து ரொம்ப கனமா இருந்தா இல்ல ஓங்கி ரொம்ப தூரத்துக்கு எறிஞ்சுட்டா ரப்பர் நூல் அந்துடும். சுள்ளுனு வெரல்ல நூல் அடிச்சி வலிக்கும். பக்கத்து வீட்டு தடியன் கோவிந்து, ரப்பர் நூல இளுத்து விட்டு சுள்ளுன்னு அடிப்பான். எனக்கு கோவமா வரும்.

அன்னிக்கு ராத்திரி சாமிய தூக்கிட்டு மூணு தெருலயும் ஊர்வலம் போவாங்க. சாமி முன்னாடி கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால்குதிரை எல்லாம் ஆடுவாங்க. எனக்கு அதே மாதிரி ஒரு குதிரை பொம்மை வேணும்னு தோணும். ஸ்கூலுக்கு குதிரைல இன்னும் வேகமா போலாம்ல? வீட்ல மரக்குதிர ஒண்ணு இருக்கு. ஆனா சின்னது. கரகாட்டம் ஆடுறவங்க மொகத்துல நெறய பவுடர் போட்டு பளபளன்னு ஜிகினால்லாம் தடவிக்கிட்டு இருப்பாய்ங்க.

அப்றமா சறுக்கு மரம். காலைலேயே பெருமாள் கோயில்ல இருந்து சறுக்கு மரத்த கொண்டு வந்துருவாய்ங்க. அடேயப்பா எவ்ளோ நீளமா இருக்கும் தெரியுமா? ரோட்ல குளி தோண்டி அதுல நெட்டுக் குத்தலா நிக்க வச்சுடுவாய்ங்க. ரொம்ப பெருசா இருக்கும். நான் கட்டிப் பிடிச்சி பார்ப்பேன். ரெண்டு கையையும் சேக்கக்கூட முடியாது. அவ்ளோ பெருசு. ஒரு தடவ கஷ்டப்பட்டு ஒரு அஞ்சடிக்கு ஏறிட்டேன்.கோவிந்து வந்து திடீர்னு என் காலப் பிடிச்சு இளுத்துட்டானா. நான் சறுக்கிக்கிட்டு தொம்முன்னு விளுந்தேன். ஒண்ணுக்குப் போற எடத்துல பயங்கரமா வலிச்சு எனக்கு அளுகை வந்துருச்சு. சாயங்காலம் வரைக்கும் எல்லா பசங்களும் அதுல ஏறி ஏறி வெளையாடுவாங்க. அஞ்சு மணி போல ஒரு ஆளு வந்து மஞ்சத் துணில காசுபோட்டு முடிஞ்சி, கிடுகிடுன்னு சறுக்கு மரத்து மேல ஏறி உச்சில கட்டிட்டு, சர்ருன்னு எறங்கினாரு. அவருக்கு வலிக்கவேயில்லை போல. சிரிச்சிக்கிட்டே போனாரு. என் பிரண்டு மணிகிட்ட கேட்டப்ப, பெரிய ஆளுங்க சறுக்கு மரத்துல ஏறும்போது, இரும்புல ஜட்டி போட்டுகிட்டுதான் ஏறுவாங்கன்னு சொன்னான். நான் டிராயரு மட்டும் தான் போடுவேன். ஜட்டியெல்லாம் இன்னும் பெரியவனா ஆனப்புறம் போடலாம்னு அம்மா சொன்னாங்க. இரும்பு ஜட்டிய பாத்ததே இல்ல. மதுரை டவுன்ல தான் கெடைக்குமாம்.

ஆறு மணி போல அதே ஆளு ஒரு பெரிய வாளி நெறய கஞ்சி பசையோட வருவாரு. இன்னொரு டப்பால ஏதோ எண்ணை இருக்கும். வாளில கயிறு கட்டி, கயிற மட்டும் பிடிச்சுக்கிட்டு மேல ஏறி உச்சில போயி ஒரு குறுக்குக் கட்டயில வசதியா உக்காந்துகிட்டு, கயிற மேல இளுப்பாரு. வாளி கைக்கு வந்ததும், அதுல இருந்து கொளகொள கஞ்சி பசைய எடுத்து மரத்து மேல இருந்து தடவிக்கிட்டே கீள எறங்குவாரு. மொதல்ல எண்ண. அப்றம் கோந்து. எவ்ளோ கோந்து தெரியுமா? அப்படியே கீள வரைக்கும் புல்லா தடவி முடிச்சுருவாரு. அப்றம் எங்களை மரத்து பக்கத்துல விட மாட்டாங்க. சுத்தி முள்ளுச் செடிய போட்டு வச்சிருவாய்ங்க. ஏளு மணிக்கு நெறய ஆம்பளையாளுங்க ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு வந்து ஏற ஆரம்பிப்பாங்க. சாதா துணி ஜட்டிதான். இரும்பெல்லாம் இல்ல. தொம்மு தொம்முன்னு விளுவாங்க. அப்றம் நெறய சக்தியோட இருக்கற ஒரு ஆளு கீள நின்னுக்கிட்டு மரத்த கட்டி புடிச்சுக்குவாரு. அவரு தோள் மேல இன்னொரு ஆளு ஏறி, கோந்தெல்லாம் வளிச்சு வளிச்சு கூட்டத்து மேல எறிவாரு. அப்டியே ஒருத்தரு மேல ஒருத்தரா ஏறி மேல போவாங்க. எல்லார் மேலயும் தண்ணிய ஊத்துவாங்க. வீட்டு மாடில நின்னுக்கிட்டு ட்யூப்பு வச்சி தண்ணீய பீச்சி அடிப்பாங்க. கீள இருக்கற ஆளு சில சமயம் வலி தாங்காம வெலகிடுவாரு. எல்லாரும் தொம்முன்னு வளுக்கி விளுவாங்க. இப்படியே ஒருமணி நேரத்துக்கு மேல ஆயிடும். கடைசியா ஒருவளியா ஏறி மஞ்சத் துணி முடிச்ச எடுத்து எறங்கிடுவாங்க. எல்லாத்துக்கும் மாலை போடுவாங்க. முடிச்சுக்குள்ள இருக்கற பணத்த பிரிச்சுக்குவாங்க.

அதுக்கு அப்றமா உரியடி நடக்கும். கண்ணுல துணிய கட்டிக்கிட்டு கைல கம்பு ஒண்ண கொடுத்து சர்ருன்னு சுத்திவிட்டு உரிய அடிக்கச் சொல்வாங்க. உரிய விட்டுட்டு சிலபேரு எங்கேயோ போயி கம்ப வீசிப் பாப்பாங்க. எனக்கு சிரிப்பா வரும். ஒரு ஆளு கோவிந்து தலைல நங்குன்னு அடிச்சார் பாருங்க. நல்லா வேணும்னு நினைச்சிக்கிட்டேன். சுத்தி நின்னு வேடிக்க பாக்குறவங்க சும்மா இருக்காம அங்க போ இங்க போன்னு கண்ணு கட்டுன ஆள இளுத்தடிப்பாங்க. உரியடி ரொம்ப சிரிப்பா இருக்கும்.

எனக்கு பலூன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா கைல காசில்லயே என்ன பண்றது? நெறய பசங்க பலூன் வாங்கிக்கிட்டு போவாங்க. விதவிதமா பலூன் இருக்கும். ரொம்ப நல்லா இருக்கும். பலூன் விக்கற ஆளு உஸ்ஸ¤ன்னு ஊதி ஊதி டக்குன்னு நூல் கட்டி கொடுப்பான். ஊதும்போது வெடிச்சிரும்னு பயமா இருக்கும். நான் பாத்தவரைக்கும் ஒரு பலூன் கூட வெடிக்கலை. கையில தடி மாதிரி ஒரு பலூன வச்சுக்கிட்டு கிர்ரக் கிர்ரக்னு சவுண்டு விட்டுக்கிட்டே இருப்பான். அதையே முறுக்கி முறுக்கி பொம்மையா செய்வான். எனக்கு ரொம்பஆச்சரியமா இருக்கும்.

ஒரு பலூன் கூட வாங்க முடியலைன்னு சோகமா இருந்தப்பதான் மணி வந்தான்.

'டேய் ராஜா. என்ன இங்க நின்னுகிட்டு இருக்க? ஒன்னோட அப்பத்தா தேடுச்சு'

'போடா. அதுக்கு வேற வேலையில்ல. சாப்பிட கூப்பிடும்'

'வரயா இல்லயா'

'நான் வர்லை. நீ போ'

மணி பலூன் வாங்கிட்டுப் போனத பாத்து எனக்கு ஏக்கமா இருந்துச்சு. அளகா நீலக்கலர் பலூன் அது. எனக்கு நீலக்கலர் ரொம்ப பிடிக்கும். மணி போனதும் இன்னொரு பையன் பலூன் வாங்கி அவனே ஊதறேன்னு ஊதினானா; அது டம்முன்னு வெடிச்சிருச்சி. அவன் அத கீளப் போட்டுட்டு ஓடிப் போயிட்டான். அந்த ஒடஞ்ச பலூன எடுத்து ஒடஞ்ச எடத்துல இன்னொரு முடிச்சு போட்டு ஊதிப் பாத்தேன். குட்டி பலூன் மாதிரி இருந்திச்சு. சரி நமக்கு கிடச்சது அவ்ளவுதான்னு மனச தேத்திக்கிட்டேன்.

பசிக்க ஆரம்பிச்சதால மெதுவா வீட்டுக்கு நடந்தேன். வளக்கம்போல கீள பாத்துக்கிட்டே. கொஞ்ச தூரம் நடந்ததும் கீள லைட் ப்ளூ கலர்ல ஒரு பலூன் காத்து போயி கெடந்துச்சு. மணி பலூன வெடிச்சி கீள போட்டுட்டு போயிட்டானான்னு எடுத்துப் பாத்தா முளுசா ஒடயாம ஆனா கொஞ்சம் மண் ஒட்டிகிட்டு இருந்துச்சி. கலர் கொஞ்சம் வேற மாதிரி புளு கலர். ஆஹா. எனக்கு ரொம்ப சந்தோஷம். சாமி தான் நான் ஆசைப்படறத பாத்துட்டு கொடுத்துருகாருன்னு நினைச்சிக்கிட்டேன். டக்குன்னு எடுத்து மண்ண தட்டி விட்டு பார்த்தேன். ஒரு ஓட்டை கூட இல்லை. நல்ல ஸ்ட்ராங்கா இருந்துச்சு. பக்கத்துல இருந்த நல்லதண்ணிக் குளாய்ல களுவிட்டு சட்டைல தொடச்சிப்பாத்தா புதுசுமாதிரி ஆயிருச்சி. தம் கட்டி ஊதினா எவ்ளோ பெருசா வந்துச்சு தெரியுமா. எனக்கு பயங்கர சந்தோசமா இருந்துச்சு. கைல நூல் இல்லாததால பலூன் வாய முறுக்கி பிடிச்சிக்கிட்டு குடுகுடுன்னு வீட்டுக்கு ஓடினேன். கோவிந்து பாத்தா புடுங்கிருவான்னு பயமா இருந்துச்சு. நல்ல வேளை அவன் பாக்கல. எதுத்த வீட்டு குமார் அண்ணன் பாத்துட்டு 'எங்க கெடைச்சதுடா?'ன்னு கேட்டாரு.

'தெருவுல கீள கெடந்துச்சுண்ணே'

'எங்க?'

'சுப்புணி டாக்டரு வீட்டு முன்னாடி'

'அப்பிடியா?'ன்னு கேட்டுட்டு சிரிச்சுக்கிட்டே உள்ள போயிட்டாரு.

எங்க வீட்டு வாசல்ல தோல் செருப்ப பாத்ததும் அப்பா ஊர்ல இருந்து வந்திருக்காருன்னு தெரிஞ்சு போச்சு. அய்யோ. லேட்டா வந்ததுக்கு திட்டுவாரேன்னு யோசிச்சேன். பலூன பின்னாடி மறச்சுகிட்டு உள்ள போனேன். அப்பா பாத்ததும் சிரிச்சாரு. எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. 'ராஜா.. வாடா இங்க'ன்னு கூப்பிட்டு கைல ஒரு பொட்டலத்த கொடுத்தாரு. பக்கோடா வாசனை. ஹை. எனக்கு பக்கோடான்னா ரொம்ப பிடிக்கும். பொட்டலத்த வாங்கறதுக்கு கைய நீட்டுனேனா, பலூன் லூசாயி சர் புர்ருன்னு வீட்டுக்குள்ள சுத்திசுத்தி பறந்து அப்பா மடில போயி விளுந்துச்சு. அப்பா அத எடுத்து பாத்ததும் அவரு மூஞ்சி மாறிச்சு. 'எங்கருந்து எடுத்தே இத?'

'தெருவுல கெடந்துச்சுப்பா'

சடால்னு எளுந்து என் தலை முடிய பிடிச்சு சப்சப்னு நாலு அறை விட்டார். எனக்கு சுள்ளுன்னு வலிச்சி அளுதேன். 'அடியே இந்த எச்சக்கலப்பய எத எடுத்து வந்துருக்கான் பாரு'ன்னு கத்தினார். அம்மா சமயல் கட்டுல இருந்து வந்து பாத்துட்டு 'அய்யய்யோ'ன்னாங்க. கீள கெடக்குற சாமானையெல்லாம் எடுக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்கதான். ஆனா எனக்கு பலூன் வாங்க காசு கொடுத்தாங்கன்னா நான் ஏன் கீள கெடந்த பலூன எடுக்கப் போறேன்.? 'அப்பா நல்லா களுவிட்டு தான் ஊதினேன்'ன்னு சொன்னேன். 'நாயே.. இனிமே கண்டகண்டதையும் தெருவுல கிடந்தா தொடுவியா?'ன்னு அப்பா மறுபடியும் பளார்னு அடிச்சார். 'கருமம் கருமம். இந்த எழவையெல்லாம் எந்த மடையன் தெருவுல போட்டான்?.'ன்னு அத வீட்டுக் கொல்லப்புறத்துல இருக்கற சாக்கடைல தூக்கிப் போட்டார்.

அவரு ஏன் தலைல அடிச்சிக்கிட்டார்னு எனக்கு புரியலைங்க. நீங்க சொல்லுங்களேன். பலூன் கீள கெடந்தா எடுக்கக் கூடாதா?

***

நன்றி : மரத்தடி.காம் (இக்கதை திண்ணையிலும் வெளிவந்தது)

Wednesday, November 07, 2007

பிறந்த நாள் வாழ்த்துகள் கமல் ஸார்



ஆண்டொன்று போனாலும் வயதொன்று சேர்ந்தாலும் உங்கள் அர்ப்பணிப்பு உணர்வும் புதியவற்றின் தேடல்களும் தமிழ்ச் சினிமாவுக்கான பங்களிப்பும் கொஞ்சமும் குறையவில்லை - இன்னும் சொல்லப் போனால் இவற்றில் இளைஞர்களுக்கு முன்மாதிரியான இளைஞனாக இருக்கிறீர்கள்.

அன்றும் இன்றும் போலவே உங்களின் கலைத் தாகம் என்றென்றும் தொடரட்டும். தசாவதாரம் மட்டுமல்ல - சதாவதாரம் வரை உங்கள் பயணம் தொடரட்டும்.

உங்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

Friday, October 12, 2007

தலைப்புச் செய்தியல்ல

காலை அலுவலகத்திற்கு வண்டியோட்டிக் கொண்டு வருகையில் முன்னே சென்ற ஊர்தியின் பின்னொட்டப்பட்டிருந்த வாசகம்:

THE MORE PEOPLE I MEET
THE MORE I LIKE MY DOG


***

Friday, August 31, 2007

நினைவலைகள் - காசு மேலே காசு வந்து

காசுகள் எப்போது கையில் புழக்கத்திற்கு வந்தது என்று நினைவில்லை. ஆனால் பள்ளிக்குச் செல்லத் துவங்கிய தினத்திலிருந்து தாத்தா நாள்தோறும் தவறாது ஐந்து பைசா கொடுத்தனுப்புவது நினைவிருக்கிறது. அறுகோண மூன்று பைசா ஒன்று, அப்றம் பூ வடிவ (?) இரண்டு பைசா ஒன்று. சில சமயத்தில் டைமண்ட் ஐந்து பைசாவாகவும் கிடைக்கும். அலுமினியப் பைசாவை ஆள்காட்டி விரல் நுனியில் வைத்து அண்டா நீரில் மெதுவ்வ்வ்வ்வாக இறக்கி மிதக்க வைத்து விளையாடுவோம்.

அந்தப் பைசாக்களை வைத்து உலகத்தை வாங்கும் தீராத ஆசை இருந்து கொண்டே இருந்தது. கொடிக்காப்புளி என்ன, ஜிங் ஜிங்கென்று மூங்கிலின் உச்சியில் பொம்மை கைதட்ட அதை வைத்திருப்பவர் மிட்டாயைப் பிய்த்துக் கையில் கட்டிவிடும் வாட்ச்சு மிட்டாய் என்ன, கடலை மிட்டாய் என்ன, கல்கோனா என்ன, எத்தனை எத்தனை வாங்கலாம் தெரியுமா? 'அவனுக்குக் காசு கொடுத்து நீங்கதான் கெடுக்கறீங்க' என்று அப்பா தாத்தாவைக் கடிந்து கொள்வார். ஆனால் ஒரு நாளும் பாக்கெட் மணி இல்லாமல் பள்ளிக்குச் சென்றதில்லை. தாத்தா நாலு வீடு தள்ளி நின்றுகொண்டு பள்ளிபோகும்போது கொடுத்துவிடுவார் - அப்பாவுக்குத் தெரியாமல். தெரிந்தால் அவருக்குச் சிறுவயதில் பாக்கெட் மணி கிடைக்காத ஆத்திரமெல்லாம் என் முதுகில் விடியும்!

தாத்தா மடியில் நிறைய சில்லறைக் காசுகளைக் கட்டி வைத்திருப்பார். கேட்டு இல்லை என்று சொன்னதேயில்லை. திரையரங்கத்தில் அவர் டிக்கெட் கொடுக்கும் அறையில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும்போது மேசை மீது உயரமாக காசுவாரியாக எல்லாக் காசுகளையும் அழகாக அடுக்கி வைத்திருப்பதைப் பார்க்க பிரமிப்பாக இருக்கும். நாலணாக் காசுகளின் நெளிந்த தூண் கீழே விழுந்துவிடுமோ என்று பயமுறுத்திக்கொண்டே இருக்கும். ஒரு ரூபாய் காசின் கனம் பிடித்தமானது. பிந்நாளில் இரண்டு ரூபாய் காசும் இன்னும் கனமான ஐந்து ரூபாய் காசும் பார்த்து பிரமித்தேன்.

எந்தக் காசாக இருந்தாலும் முதலில் கவனிப்பது அதில் அச்சிடப்பட்டிருக்கும் வருடத்தைத் தான். வெவ்வேறு வருடங்களில் வெளியிடப்பட்ட நாணயங்களை ஒப்பிட்டுப் பார்ப்பேன். சிலவற்றில் சில படங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

தங்கக் காசு ஏதோ ஒன்றில் ஒளிந்திருக்கிறது என்ற வதந்தியை நம்பி அலுமினியக் காசுகளைத் தேய்த்து மொண்ணையாக்கியதும் நடந்திருக்கிறது.

நடக்கையில் புதையல் போல மண்ணில் புதைந்து லேசாக நீட்டிக்கொண்டிருக்கும் காசுகள் கிடைத்தபோது லாட்டரியில் கோடிரூபாய் கிடைத்த ஆனந்த அதிர்ச்சியும் கிட்டியிருக்கிறது. ஆனால் வெட்டுப்பட்ட காசுகளைக் கண்டால் எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப் பட்டிருந்தோம் - "சூனியம் வைத்த காசு அது. தொட்டே ஒனக்குச் சூனியம்தான்" என்று பயமுறுத்தப்பட்டிருந்தோம். ரத்தம் கக்கிச் சாக விருப்பமில்லாமல் அதே சமயத்தில் அரை மனதோடு அம்மாதிரிக் காசுகளை எடுக்காது போவோம்.

இப்போதெல்லாம் எந்த வெட்டுப்பட்ட காசையும் தொடாமலே இணையத்தில் எளிதாக சூனியத்திற்கு ஆளாகிவிடலாம்.

ஆண்டுக்கொருமுறை நடக்கும் முத்தாலம்மன் திருவிழாவுக்கு மட்டும் ஒரு ரூபாய் நோட்டு ஒன்று தாத்தாவிடமிருந்து கிடைக்கும். கருப்புக் கலர் நோட்டு. இரண்டு ரூபாய் சிவப்பு. ஐந்து ரூபாய் பச்சை. பத்து ரூபாய் கருப்பு! அடுத்த வருடம் எப்படியும் இரண்டு ரூபாய்க்கு உயர்வு பெற்றிட வேண்டும் என்று ஒவ்வொரு வருடமும் முத்தாலம்மனிடம் வேண்டிக்கொள்வேன். ஒரு ரூபாய்த் தாள் கையில் புழங்கிய தினத்தில் முகத்தில் ஒரு 'கெத்து' ஏறியிருப்பதாகக் கூட வரும் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ரூபாய் நோட்டுகளின் வெள்ளை வட்டங்களில் ஏதாவது எண்கள், அல்லது பெயர்கள், அல்லது புரியாக வாக்கியங்கள் எழுதியிருக்கும். அப்படி எழுதப்பட்ட நோட்டுகளைப் பார்த்தாலே எரிச்சலாக இருக்கும்.

பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் பல மடி மாறி, சட்டைப் பைகள், சுருக்குப் பைகள் மாறிக் கசங்கி அழுக்காக இருக்கும். சில சமயம் தாத்தா ரூபாய் நோட்டை நனைத்து பறவைக் குஞ்சைக் கையாளுவது போல, லேசாகச் சோப்புக் கரைசலைப் பட்டும்படாமலும் தேய்த்துக் காயவைத்து, இஸ்திரிப் பெட்டியால் ஒரு இழு இழுப்பார். என்ன ஆச்சரியம்! அப்படியே மொறமொறப்பாக ஆகிவிடும் அது.

அது மாதிரி நானும் ஒன்றைச் செய்து பேச்சி கடையில் பொட்டுக்கடலை வாங்கியதற்குக் கொடுத்தபோது உயர்த்திப் பிடித்து, திருப்பிப் பார்த்துவிட்டு மறுபடியும் என்னிடமே கொடுத்துவிட்டாள். "கள்ள நோட்டு மாரியல்லா இருக்கு ராசா. நோட்டு அடிச்சியா? ராசா சாமிகிட்ட சொல்லவா?" என்று முறைத்துப் பார்க்க, நான் கோன் பொட்டலத்தை அரிசி மேலே வைத்துவிட்டுத் திரும்பி சோகமாக நடந்தேன். கள்ள நோட்டைக் கையால் வரையவே வசதியில்லை. இதில் அச்செல்லாம் எங்கிருந்து அடிப்பது?. ஒர்ரூவாய் கள்ள நோட்டு அடிக்க ஏகமாகச் செலவாகுமே. இது கூட பேச்சிக்குத் தெரியாதா? என்று கடுப்பாக இருந்தது.

தாத்தாவிடம் அதைத் திருப்பிக் கொடுத்துவிட அவர் கொட்டகைக்குச் சென்று மாற்றிக் கொள்கிறேன் என்று நான்கு காலணாக்களைக் கொடுத்தார். ஆனால் என்னை அவமானப் படுத்திய பேச்சி கடைக்குச் செல்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு கீழக் கடைத்தெருவிற்குச் சென்று பொட்டுக் கடலை வாங்கிக்கொண்டேன். என்ன நாலணாவுக்கு பொட்டுக்கடலை அளவு குறைவாக இருக்கும் - தன்மானத்தை விடுவதைவிட அளவு குறைந்தால் பரவாயில்லை என்று தேற்றிக் கொண்டேன்.

1-ந்தேதி தாத்தாவிற்குச் செட்டியார் சம்பளம் கொடுப்பார். அறுபது ரூபாயோ என்னவோ - மாசச் சம்பளம் வாங்குவார் தாத்தா. ஒரு சம்பள நாளில் என்னை அழைத்து மடியில் இருத்திக்கொண்டு அவர் சட்டைப்பையிலிருந்து எடுத்துக்காட்டியது அப்பழுக்கற்ற சலவை ஒரு ரூபாய்த் தாள்கள்! முதன்முறையாகச் சலவைத்தாளைப் பார்க்கையில் பரவசமாக இருந்தது. அதைத் தாத்தா கையிலிருந்து வாங்கவே மனசில்லை - அழுக்காகிவிடுமோ என்று அச்சமாக இருக்க சூரிய ஒளியில் பளபளத்த அதைக் கண்வாங்காமல் பார்த்தேன். சீட்டாட்டத்தில் சீட்டுகளைப் பிரிப்பது போல அவற்றில் ஒரு தாளை கட்டிலிருந்து விலக்கி என்னிடம் கொடுக்க அதை நுனிவிரலால் பிடித்து வாங்கிக்கொண்டேன். அதை மடக்க மனம் வரவில்லை. மடக்காமல் கால்சராய் பையில் வைக்க முடியாது. அப்படியே மெதுவாக நடந்துசென்று பள்ளிக்கூடப் பைக்கட்டிலிருந்து ஒரு நோட்டை எடுத்து விரித்துத் தாளை அலுங்காமல் வைத்து நோட்டை மூடியதும்தான் மூச்சே விட்டேன்! 'தொலைச்சுடப் போறே' என்று எச்சரிக்கை செய்தார் தாத்தா. அடுத்த சில வாரங்களுக்கு அந்த நோட்டைக் கண்ணுங்கருத்துமாகப் பாதுகாத்தேன். வகுப்பறையில் அடிக்கடி அந்தப் பக்கத்தைப் புரட்டி அது இருக்கிறதா என்று சோதித்துக் கொள்வேன். நண்பர்களுக்கும் தொடவிடாமல் காட்டி அவர்களைப் பொறாமைப்படச் செய்தேன். மொத்தத்தில் தரையில் கால் பாவாமல் இருந்தேன்.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்பிற்கு உயர்நிலைப் பள்ளிக்கு மாற வேண்டியிருந்தது. ஊக்கத்தொகை பெறுவதற்கு ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்த ஒரு அறக்கட்டளைக்குச் சென்று பரீட்சை எழுத வேண்டியிருந்தது. தயிர் சாதம் எலுமிச்சை ஊறுகாயைக் கட்டி எடுத்துக்கொண்டு அதிகாலைப் பேருந்தைப் பிடித்து நானும் அப்பாவும் போனோம். அந்த இருளடைந்த வகுப்பறையில் தேர்வு முடித்துவிட்டு சன்னல் குரங்கை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சாப்பாட்டை முடித்துவிட்டு மாலை பேருந்தைப் பிடித்து ஊர் திரும்பினோம்.

அன்று இரவுக்காட்சிக்காக திரையரங்கத்திற்குச் சென்றால் டிக்கெட்டுகளை வேறொருவர் கொடுத்துக்கொண்டிருந்தார். 'தாத்தா?' என்று கேட்டதற்கு, 'சாமி இன்னிக்கு வரலை தம்பி' என்று சொல்லிவிட, மறுபடியும் வீட்டுக்கு வந்து தாத்தாவைத் தேடியபோது அவர் நான்கு வீடுகள் தள்ளியிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் நண்பர்களோடு சீட்டு விளையாடிக்கொண்டிருந்தார். நடுவில் சீட்டுகள் சிதறிக்கிடக்க அவரவர் மடிக்கு முன்பாக நாணயங்களும் சிதறியிருந்தன. புகையிலையை அடக்கிக்கொண்டு தாத்தா விளையாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கண்களால் 'என்ன?' என்று வினவ 'படத்துக்குப் போகணும்' என்றேன். 'நான் சொன்னேன்னு சொல்லி மணிகிட்டச் சொல்லிட்டுப் போ' என்றார். எனக்குத் தாத்தா இல்லாமல் படத்துக்குப் போக பயம். உள்ளே இருக்கும்போது யாராவது டிக்கெட் எங்கே என்று கேட்டால் என்ன செய்வது என்று. 'நான் போ மாட்டேன்' என்று உறுதியாகச் சொல்லிவிட்டு அங்கேயே நின்றுகொண்டிருந்தேன். அவர் சீட்டைச் சுருட்டி அடுக்கிக் கீழே வைத்துவிட்டு கையிலிருந்த சில்லறைகளையும் போட்டுவிட்டு என்னை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடந்து திரையரங்கத்திற்குச் சென்று உள்ளே அமர்த்திவிட்டு 'இடைவேளை விட்டதும் வெளில வா - முறுக்கு வாங்கித் தாரேன்' என்று சொல்லி விட்டு செட்டியாரைப் பார்க்கப் போய்விட்டார். அது ஏதோ ஒரு அறுவையான படம். கண்களை மூடிய விரல்களின் இடைவெளியினூடே ஜெயமாலினி பாடலைப் பார்த்து முடித்ததும் இடைவேளை வந்துவிட தாத்தாவோடு வீட்டுக்குத் திரும்பிவிட்டேன்.

அந்த வருட பள்ளி ஆண்டுவிழாவில் முதல் மாணவனுக்கான பரிசு எனக்குக் கிடைத்தது. பரிசு ஒரு உறைக்குள் ஐம்பது ரூபாய்த் தாள் ஒன்று. அதோடு 'ஒரு மரப்பாச்சியின் கதை' என்ற (பினாக்கியோ) புத்தகம். என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பரிசாக அந்தப் புத்தகத்தை கருதுகிறேன். படிப்பு, வீடு என்றிருந்த மாணவ நிலையில் 'கதைப் புத்தகம்' என்ற வரையில் எனக்குக் கிடைத்த அறிமுகம் அப்புத்தகத்திலிருந்துதான் துவங்கியது. அதே போல அன்றைய தினத்திற்கு ஐம்பது ரூபாய் பெரிய தொகை. அதை வைத்திருக்க பயந்துகொண்டு மேடையிலிருந்து இறங்கியதும் அப்பாவிடம் கொடுத்துவிட்டேன்.

என்ன இருந்தாலும் நோட்டுப் புத்தகத்தில் வைத்திருந்த அந்த ஒரு ரூபாய் சலவைத்தாள் எனக்கு உற்ற நண்பனாக நீண்ட நாட்கள் இருந்தது. அதை எதற்கோ எடுத்துச் செலவு செய்ய நேர்ந்தபோது விழியோரத்தில் துளிர்த்த நீர் - அதன் விலை மதிப்பற்ற தன்மையை எனக்கு இன்னும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது.

****

Monday, July 09, 2007

Bowling for Columbine



Bowling for Columbine 2002-இல் வந்த படம். 2004-இல் வந்த Fahrenheit 9/11 -ன் வெப்பமே இன்னும் தணியவில்லை. இப்போது Bowling for columbine-ஐப் பார்த்து மண்டை காய்ந்து போயிருக்கிறேன். இரண்டு செய்திச்சுருள்களையும் நிறைய விதத்தில் தொடர்பு படுத்திப் பார்க்க முடிகிறது.

1970-இல் பிறந்த எனக்கு நம்மூர் அரசியல் நிகழ்வுகளைப் பற்றிய செய்திகள் - அதிக ஈடுபாடில்லாததால் - புகையாகவே மனதில் நிற்கும். துக்ளக்கை வாசிப்பவன் என்ற முறையில் சில விஷயங்களில் அரசியல்வாதிகளின் மாறுபடும் நிலைகளையும், மாற்றி மாற்றிப் பேசுதல்களையும் -1970-இல் சொன்னது; 1977-இல் சொன்னது; 1984-இல் சொன்னது என்று நான் அறிந்திராத அவர்களது 'வரலாற்றுச் சிறப்புகளையும்' - வெளிக்கொணர்ந்து தொடர்பு படுத்தி - முகத்திரையைக் கிழிக்கும் சோ-வின் "நினைவுத் திறன்" மிகவும் பிடிக்கும் (யய்யா.... வகையான அவல் கிடைச்சாச்சு... மண்டகப்படியை நடத்துங்க.....!!!)

அதே போல் அமெரிக்கா பற்றியோ, ஈராக் யுத்தம், ஒஸாமா, 9/11 போன்றவற்றைப் பற்றித் துணுக்குகளாக அங்கொன்றும் இங்கொன்றும் கிடைக்கும் செய்திகளை மட்டுமே வைத்து அரைகுறை பிம்பங்களை மனதில் உருவாக்கிக்கொண்டிருக்கும் எனக்கு மைக்கேல் மூரின் இந்த இரண்டு செய்தித் தொகுப்புகளும் நிறைய விஷயங்களைத் தெளிவு படுத்தி, தொடர்பு படுத்தி, மொத்தமாகப் பார்க்கும் Big Picture-ஐக் கொடுத்தன என்றால் மிகையாகாது. அநியாயத்துக்கும் அநியாயமாக இந்த ஆளுக்குத் தில் இருக்க வேண்டும். அல்லது அமெரிக்காவில் மீடியாக்களை இந்த அளவுக்கு 'அவுத்து' விட்டிருக்கிறார்கள். நேர்காணல்களில் சற்றும் பயமில்லாது முகத்துக்கு நேராக நேரிடையாகக் கேட்கும் கேள்விகளும், தொகுத்திருக்கும் உண்மைச் சம்பவங்களும் - மிகவும் திறமையாகக் கையாண்டிருக்கிறார் மூர்.

மை.மூர் எழுத்தாளர்; பத்திரிகையாளர்; இயக்குனர் என்று முப்பரிமாணங்களிலும் கலக்கியெடுத்திருக்கிறார்.

வளர்ந்த நாடான அமெரிக்காவில் எந்தவித உள்நாட்டுச் சண்டையோ, வேறு தலைபோகும் பிரச்சினைகளோ இல்லாதிருக்கும்போது ஏன் ஒவ்வொரு வருடமும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிக் கொலைகள் நடக்கின்றன? படம் முழுவதும் ஊடுருவியிருப்பது அவர் எழுப்பியிருக்கும் "Are we a nation of gun nuts or are we just nuts?" என்ற கேள்வியே! உடனடியாக எல்லாரும் சொல்லும் சப்பைக்கட்டு விடைகள் :

அ) அதிக அளவில் புழங்கும் ஆயுதங்கள் - துப்பாக்கி வாங்குவது எளிது
ஆ) ரத்தக்கறை படிந்த வரலாறு - இயற்கையாகவே இருக்கும் சண்டை குணம்
இ) சினிமா போன்ற ஊடகங்களில் அதிக அளவு முன்னிலைப் படுத்தப்படும் வன்முறைகள்

இவை மட்டும் காரணமல்ல என்பதை உணர்ந்துகொண்டு இதற்கு விடை காணும் முயல்கிறார். அம்முயற்சியே Bowling for columbine-ஆக உருவெடுத்திருக்கிறது.




அமெரிக்காவின் கொலம்பைன் பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 மாணவர்களும் இரண்டு ஆசிரியர்களும் கொல்லப்பட்ட சம்பவத்திலிருந்து துவங்குகிறது படம். அப்பாவி அமெரிக்க பொதுஜனத்தை சதா சர்வகாலமும் பயமுறுத்தியே தொழில் நடத்தும் அரசியல்வாதிகளையும், ஊடகங்களையும் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார். இதற்கு அமெரிக்க முதற் குடிமகனிலிருந்து கடைக்குடிமகன் வரை யாரும் தப்பவில்லை.

பயத்தினடிப்படையில் எழுப்பப்பட்டிருக்கும் அமெரிக்க சமூக வாழ்க்கையின் அவலங்களைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது.

துப்பாக்கிச் சூடு நடந்த பள்ளியில் படித்த தீவிர காயங்களால் ஊனமடைந்த மாணவர்களில் இருவரை - துப்பாக்கிகள் விற்றுக்கொண்டிருக்கும் K-Mart அங்காடிக்கு அழைத்து வந்து - அவர்களிடம் காட்டி துப்பாக்கி விற்பனையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடன் தர்ணா செய்கிறார். நம்மூராக இருந்தால் அவரையும் அந்தப் பையன்களையும் 'ஆபிஸ் ரூமுக்குக்' கூட்டிக்கொண்டு போயிருப்பார்கள்.

அந்த K-Mart அதிகாரி (Mary Lorenz) அவகாசம் கேட்டுக்கொண்டு தலைமைப் பொறுப்பு இருப்பவர்களிடம் பேசிவிட்டுத் திரும்ப வந்து 'இனிமேல் துப்பாக்கிகளை விற்பதில்லை என்று எங்களது நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது' என்று அறிவிக்க - அவர்களைப் பாராட்டி மூரும் அந்தப் பையன்களும் கைதட்டிவிட்டுக் கிளம்புகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்கிறது!

கேள்வியை எப்படி நோண்டிக் கேட்பது என்று மூரிடம் கற்றுக் கொள்ளலாம் போலிருக்கிறது. தமிழாக்கம் செய்யாத சில சுவாரஸ்யமான உரையாடல்கள்:

Michael Moore: Now wait a minute... The Constitution says you've got the right to bear arms. What do you think 'arms' means?
John Nichols: Well it's not like these... [waves his arms]
John Nichols: It means we ought to have handguns if we want to.
Michael Moore: What about nuclear weapons? Should you be able to have weapons-grade plutonium?
John Nichols: [pauses] ... Well I think that oughta be restricted.
Michael Moore: Why not use Gandhi's way? He didn't have guns, and he beat the British Empire.
John Nichols: I'm not... familiar with that.

***

Michael Moore: This was my first gun. I couldn't wait to go out and shoot up the neighborhood.

***

அமெரிக்காவில் மக்கள் எல்லாரும் வீட்டின் கதவுகளை அடைத்துவிட்டு உள்ளே அடைந்திருக்கிறார்கள். (வத்திராயிருப்பில் எங்கள் வீட்டு வாசலில், தெருவில் நின்றுகொண்டு பார்த்தால் கொல்லைப்புறக் கொனேயில் இருக்கும் வேப்பமரம் தெரியும் - அது நினைவுக்கு வருகிறது - இப்போது நம்மூரிலும் கதவைப் பூட்டாமல் திறந்து வைத்திருக்க முடியாது போல - பகலிலும். பூட்டியிருந்தாலேயே ஆட்டையைப் போட்டுவிடுகிறார்கள்). பாதுகாப்பு குறித்த பயம் பிரதான காரணம். அழைப்பு மணி அடித்ததும் கையில் துப்பாக்கியோடுதான் கதவைத் திறப்பார்கள் என்ற ரீதியில் அமெரிக்காவைக் காட்டிவிட்டு, மற்ற நாடுகளில் நிலவரம் எப்படி என்று சோதனை செய்கிறார். ரொம்பத் தூரம் போவானேன் - ஆற்றுக்கு அந்தாண்டை இருக்கும் கனடாவில் போய் பார்க்கலாம் என்று அங்கு சென்று பார்க்க, கனேடியர்கள் கதவைப் பூட்டுவதே இல்லை என்றறிகிறார். அதை உறுதி செய்ய ஒரு வீட்டின் கதவைத் தள்ள அது திறந்துகொண்டு உள்ளே வீட்டுக் காரர் 'Yes' என வினவுகிறார். அவரிடம் கதவைப் பூட்டுவதில்லையா எனக் கேட்க அவர் 'எதுக்கு?' என மறுகேள்வி எழுப்புகிறார். அவரிடம் அத்துமீறி நுழைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு மூர் சொல்வது "Thank you for not shooting me"!

Marilyn Manson-ஐ பேட்டி காணுகையில் நிகழும் உரையாடலில் ஒரு பகுதி.

Michael Moore: If you were to talk directly to the kids at Columbine or the people in that community, what would you say to them if they were here right now?
Marilyn Manson: I wouldn't say a single word to them, I would listen to what they have to say and that's what no one did.

Terror Alert Elevated என்று சிவப்பு மஞ்சள் என்று தினமும் ஜிங்குச்சா அடித்து மக்களை பயமுறுத்தும் அமெரிக்க ஊடகங்களையும் அரசையும் கேலியுடன் இப்படிக் குறிப்பிடுவார் மூர் "The media, the corporations, the politicians... have all done such a good job of scaring the American public, it's come to the point where they don't need to give any reason at all." அதைத் தொடர்ந்து அவர் காட்டுவது திருவாளர் புஷ் "Today the Justice Department did issue a 'Blanket Alert'. It was in recognition of a general threat that we received. This is not the first time the Justice Department has acted like this. I hope it's the last, but given the attitude of the evil-doers, it may not be." என்று திருவாய் மலர்ந்ததை!

"It was the morning of April 20th 1999, and it was pretty much like any other morning in America. The Farmer did his chores. The milkman made his deliveries. The President bombed another country whose name we couldn't pronounce. Out in Fargo, North Dakota, Cary McWilliams went on his morning walk. Back in Michigan, Mrs Hughes welcomed her students for another day of school. And out in a little town in Colorado, two boys went bowling at 6 in the morning. Yes, it was a typical day in the United States of America.

Yes, it was a glorious time to be an American."

வன்முறையைக் காட்டும் அமெரிக்க ஹாலிவுட் படங்களால் அமெரிக்காவில் துப்பாக்கிச் சாவுகள் அதிகம் என்ற பிம்பம், கனேடியர்களும், ஏன் மற்ற நாடுகளில் ஹாலிவுட் படங்களை ரசித்துப் பார்க்கிறார்கள் என்ற உண்மையின் மூலம் உடைபடுகிறது. கனேடியர் ஒருவரிடம் மைக்கேல் மூர் "அமெரிக்காவில் ஏன் துப்பாக்கிச் சாவுகள் இவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்க அவர் சொல்வது "May be they like killing each other!"

நேஷனல் ரைஃபிள் அஸோஸியேஷன் காரர்கள் ஊர் ஊராகச் சென்று ஊர்வலம் நடத்துகிறார்கள் - துப்பாக்கிக் கலாசாரத்தைப் பரப்பி. கொலம்பைன் பள்ளியில் அந்த அசம்பாவிதம் நடந்தும் அந்த ஊருக்கு அவர்கள் வருகிறார்கள். அவர்களது 'மாநாட்டை' எதிர்த்து பெற்றோர்கள் கூட்டம் கூட்டி, உயிரிழந்த மாணவர்களின் படங்களைத் தாங்கி, நாத் தழுதழுக்கப் பேசியும் மாநாடு நடக்கிறது! NRA-யின் தலைமை அதிகாரி Charlton Heston-யை மைக்கேல் மூர் சந்தித்துக் காணும் பேட்டி இந்தத் தொகுப்பிலேயே ஒரு முக்கியமான அம்சம். அவரை அவரது வீட்டிலேயே (வீடா அது? கோடநாடு எஸ்டேட்!) சந்தித்து கேள்விகளால் துளைத்தெடுக்க கிழவர் தடுமாறுகிறார். இறுதியில் அவரிடம் 'நீங்கள் Columbine மக்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களா?' என்று மூர் கேட்க, அவர் திடுக்கிட்டு மறுத்துவிட்டு பேட்டியை முடித்துக்கொண்டு எழுந்து போக, அவரிடம் ஒரு ஐந்தாறு வயதிருக்கும் பெண் குழந்தையின் படத்தைக் காட்டி 'இந்தப் படத்தைப் பாருங்கள். துப்பாக்கிக்குப் பலியான சின்னப் பெண். இதைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்' என்று சொல்லச் சொல்ல அவர் உள்ளே சென்றுவிட, அந்தப் படத்தைக் கீழே சாய்த்து வைத்துவிட்டு வெளியேறுகிறார் மூர். நம்மை ஒரு பலத்த சோகம் கவ்விக் கொள்வதை மறுக்க முடியவில்லை.

மைக்கேல் மூர் படங்களைக் குப்பை என்று நிறைய விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

என்னுடைய பார்வையில், நான் பார்த்த வரையில் உண்மை சார்ந்த படத் தொகுப்புகளை நேர்த்தியாகத் தயாரிப்பதில் அவரது திறமை அசாத்தியமானது. நானெல்லாம் துண்டு துண்டாகச் செய்திகளை வாசித்துவிட்டு மறந்து போகும் ஆசாமி. அத்துண்டுகளைத் தொடர்பு படுத்தி கோர்வையாக நம்மிடம் முழு பரிமாணத்தையும் காட்டும்போது அடடா என்று பிரமிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

இந்தத் தொகுப்பு ஆஸ்கர் மற்றும் பல்வேறு விருதுகளை வென்றது!

Healthcare Industry-யின் அவலங்களை வைத்து சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் விவரணப்படம் - Sicko - அதைப்பற்றி இன்னொரு நாள் ஒரு கண்ணோட்டம் எழுத முயல்கிறேன்.

நம்மூரில் ஒரு படமாவது இம்மாதிரி எடுக்கவேண்டும் என்பது என் கனவு! இதற்கு அரிதாரங்களோ அலங்காரங்களோ தேவையில்லை. தேவை உண்மையை ஒளிவு மறைவின்றிச் சொல்ல முடியும் சுதந்திரம். அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. அப்படியே படத்தை எடுத்தாலும் அது வெளிவருமா என்பது சந்தேகம். அப்படியே வெளிவந்தாலும் அதை 'வந்தேறிகளின் சதி' என்று சுலபமாகத் திரித்து அதில் பார்ப்பனீய மூலக்கூறுகளை 'உருவாக்கி' - கடைசியில் 'போட்டுத் தள்ளி' விடுவார்கள் என்பது மட்டும் பளீரென்று உறைக்கிறது.

பார்க்கலாம்!

***

Friday, July 06, 2007

ஜாவா



இளவஞ்சியின் இந்தப் பதிவைப் படித்துவிட்டு ஆனந்தப்பட்டுப் பின்னூட்ட ஆரம்பித்து கட்டுப்படியாகாமல் போகவே தனிப்பதிவாகப் போட்டுவிடலாம் என்ற உத்தேசத்துடன் இந்தப் பதிவு! இளவஞ்சிக்கு நன்றி.

அவருக்கு என்ஃபீல்டு புல்லட்டின் நினைவுகள் போல எனக்கு ஜாவாவும் யெஸ்டியும் கலந்த நினைவுகள்.

ஜாவாவையோ என்ஃபீல்டையோ ஓட்டாத ஆத்மாக்களையெல்லாம் நான் சைக்கிள்காரர்களோடுதான் சேர்த்துப் பார்ப்பேன்! டூ-வீலர்ங்கற பேர்ல 100 ஸிஸி வண்டிங்களையெல்லாம் இங்கிட்டும் அங்கிட்டும் ஓட்டிக்கிட்டு படம் காட்டறவங்களைக் கண்டாலே சிரிப்பா இருக்கும். என்ஃபீல்டு அண்ணன் அருமையானவர்தான். ஆனா அவரு (இளவஞ்சி சொன்னமாதிரி) பெரிசுங்க ஓட்ற சமாச்சாரம்ங்கறதால ஜாவாதான் நமக்கு வசதிப்பட்டுச்சு.

பொதுவா சைக்கிள்ளருந்து டூவீலருக்கு மார்றவங்க மொதல்ல டிவிஎஸ்50 இல்லாட்டி லூனா மாதிரி ஒண்ணுல ஆரம்பிச்சு 'பழகி' பின்னால 100 ஸிஸி எதுக்காவது மாறுவாங்க. எனக்கு என் நண்பன் ராஜாங்கம் புண்யத்துல நேரடியா ஜாவாலதான் பயணம் ஆரம்பிச்சது. இன்னும் நல்லா நினைவு இருக்கு. பழங்காநத்தம் தண்டக்காரன் பட்டில அவன் அவனோட சித்தப்பா கடைலருந்து 'எடுத்துட்டு' வந்த ஜாவாவை ஒதுக்குப்புறத்துக்குக் கொண்டுபோய் 'ஓட்டுடா'ன்னு இறங்கிச் சொன்னதும் படிக்காத பரீச்சைக்குப் போய் கேள்வித்தாளைப் பாத்ததும் வயித்துல புளியைக் கரைக்குமே அது மாதிரி ஜிலீர்னு இருந்துச்சு. இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாக்கலாம்னு அவனப் பிடிச்சுக்கச் சொல்லிட்டு ஏறி உக்காந்துக்கிட்டு ஒண்ணுக்கு போற நாய் மாதிரி இடது காலைத் தூக்கிக்க அவனே ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தான். மொதல் கியர்ல போட்டு எடுத்தும் ஒரு தவ்வு தவ்வி அணைஞ்சு போச்சு. 'கிளட்ச மெள்ள விட்றா' என்று அவன் சொல்லி மறுபடி ஸ்டார்ட் பண்ணிக் கொடுக்க, ரெண்டடி போயிருக்க மாட்டேன். லாடம் அடிக்க மாட்டைச் சாச்சாப்புல அப்படியே வலது பக்கம் சாஞ்சிச்சு பாருங்க. காலு போச்சுன்னு நெனச்சுக்கிட்டு தரைல சாஞ்சா, வண்டி பட்டர்ஃபிளை பம்பர்ல சாஞ்சிக்கிட்டு நிக்குது. வண்டிக்கும் தரைக்கும் எடைல ஒரு ஆளு கைலிக்குள்ள படுத்துத் தூங்கலாம் போல. எந்திருச்சு தூக்கலாம்னு தூக்குனா பொணங்கனம் கனக்குது. ராஜாங்கம் வந்து நிமித்திக் கொடுத்து அப்றம் ஒரு வழியா ஓட்ட ஆரம்பிச்சேச்சு.

அதுல ரொம்பப் பிடிச்ச விஷயமே தெருல போம்போது சைக்கிள் மொபெட்னு எல்லாப் பயலும் ஒதுங்கி வழிவிடறதுதான். தெருக்கோடில வரும்போதே தெரிஞ்சுடும். ஸ்டார்ட் பண்ணிட்டு வண்டிக்கு நாலடி பின்னாடி நின்னு அதோட ஸைலன்ஸர்லருந்து 'பக் பக்'னு வர்ற காத்து கால்ல படறதை அனுபவிக்கறது அலாதியான விஷயம் (இது என்ஃபீல்டுல இன்னும் விசேஷம். பட்டமே விடலாம் போல!)

என்ஃபீல்டு மாதிரி எருமை மாட்டு முதுகு டிஸைன் கிடையாது ஜாவாவுக்கு! பெட்ரோல் டாங்க் கும்முன்னு காளைத் திமில் மாதிரி இருக்க நம்ம குதிரை மேல ஒக்காந்து போற மாதிரி ஒக்காந்துக்கிட்டு போனோம்னு வைங்க.

ரெண்டாவதா என்ஃபீல்டு மாதிரி ஒர்ரே ஒரு பீரங்கி ஸைலன்ஸர் மட்டும் கிடையாது. இது ரெட்டைக் குழல் துப்பாக்கி மாதிரி. வண்டி என்னவோ டீலர்கிட்ட இருந்து வரும்போது மஃப்ளர் எல்லாம் போட்டு சாதுவா சத்தம்போடாமத்தான் வரும். வந்ததும் சந்தனம் குங்குமம் வச்சு சாமி கும்பிடறோமோ இல்லையோ, மொத வேலையா ரெண்டு ஸைலன்ஸர்லருந்தும் மஃப்ளரை உருவி எடுத்துருவோம். அப்றம் அது மூக்கணாங்கயிறு போடாத காளை கன்னுக்குட்டி மாதிரி ஆயிடும். ஆக்ஸிலேட்டரை ஒரு திருகு திருகி விட்டோம்னு வைங்க - டம்... டம்...டம்...னு ஒரு சீரான தாளம் அப்படியே ரொங்க வைக்கும். பாலத்துல போகும்போது பாலம் ஏத்தம் முடியறவரைக்கும் ஆக்ஸிலேட்டரைக் கொடுத்துட்டு இறக்கம் ஆரம்பிச்சதும் விட்ருவோம். டம்... டம்...னு இறங்கும் பாருங்க. சான்ஸே இல்லை.

ஜாவா பின்னாடி யெஸ்டியா உருவெடுத்தப்போ பெட்ரோல் டாங்க் ரெண்டு பக்கமும் லைட்டா உள்ள தள்ளி முழங்கால் ரெண்டையும் அண்டக் கொடுத்துக்கிட்டு ஓட்டலாம் மாதிரி டிஸைன்ல இருந்தது. அப்படியே குதிரை முதுகுல ஒக்காந்துட்டு போற ஃபீலிங் வந்துரும்! அது தவிர பிரிடேட்டர் வில்லன் தலை மாதிரி ஹேண்டில்பாரோட சேந்து இருந்த ஹெட்லைட்டை யெஸ்டில எடுத்துட்டு ரவுண்டா அழகா தனியா வச்சிட்டாங்க. எல்லாத்தையும் விட ஜாவாவோட சாவியை யாராச்சும் பாத்திருக்கீங்களா? காது குடையற கம்பி மாதிரியே இருக்கும். அதைப் போட்டு கிட்டத்தட்ட எல்லா ஜாவாவையும் ஸ்டார்ட் பண்ணிரலாம் போல இருக்கும். அதையும் யெஸ்டில மாத்தினாங்க.

இளவஞ்சி சொன்ன சைடு பீரோதான் பெரிய கோராமை. அது இருந்தாலே வண்டி ஒரு பக்கம் இழுக்கறமாதிரி பிரமை. அதை எடுத்துக் கழட்டிப் போட்டதும்தான் வண்டி லேசான மாதிரி மைலேஜ் கூட ரெண்டு கி.மீ. எக்ஸ்ட்ரா கொடுத்திச்சு.

யெஸ்டிலயும் மொத கியரு மேல - மத்ததெல்லாம் கீழ. அதுக்கு உல்ட்டாவா யமாஹால இருக்கும்.

கியருக்கும் ஸ்டார்ட்டருக்கும் ஒரே லீவர். லீவரோட ஆக்ஸில் பக்கத்துல அமுக்கி அதை உள்ள தள்ளி ஒரு அரைவட்டமா பின்னாடி எடுத்து மிதிக்கணும். மிதிக்கணும்னா சும்மா பேச்சுக்கு மிதிக்கறது இல்லை. மக் மக்குன்னு நாலஞ்சு தடவை பம்ப் பண்ணிட்டு மிதிச்சோம்னா அழகா ஸ்டார்ட் ஆகும். ஸ்டார்ட் பண்ணினதும் லீவரை மறுபடியும் அரைவட்டம் போட்டு முன்னாடி கொண்டு வந்து கியர் போடறதுக்கு உபயோகப் படுத்திக்கணும். ஸ்டார்ட் பண்ணிட்டு ஒடனே காலை எடுத்தோம்னா அது பறந்து முன்னாடி போய் கியர்ல விழுந்து வண்டிய அணைச்சுடும். பம்ப் பண்ணி ஒழுங்கா மிதிக்காம Back Fire ஆச்சுன்னு வைங்க. பின்னங்கால் காலி. செண்ட்ர் ஸ்டாண்டு போடறதுக்கு தெனமும் ஜிம்முக்குப் போகணும்! இல்லாட்டி ஸைடு ஸ்டாண்டுதான் பெட்டர்.

இது தவிர ரெட்டைக் குழல் துப்பாக்கி மேலயும் கவனமா இருக்கணும். 'என்ன மச்சி?'ன்னு குசலம் விசாரிச்சுக்கிட்டே ஸ்டாண்டு போட்டு நிப்பாட்டின வண்டி மேல சாஞ்சவனுங்கள்ளாம் காலைச் சுட்டுக்கிட்டது தனிக்கதை.

இளவஞ்சி சொன்னது இது:

//புல்லட்டுக்கு சரியாக அந்தக் காலத்தில் ஜாவா கோலோச்சிக்கொண்டு இருந்தது. புல்லட்டு என்பது மிலிட்டரிமேனுங்க, போலீஸ்காரருங்க,கிராமத்து பணக்கார விவசாயிங்க போன்ற ஆட்களுக்கான, ஒருவித பொறுப்பை உணர்த்தும் வண்டியாகவும், ஜாவா என்பது இளமையை பறைசாற்றும் வாகனமாகவும் இருந்திருக்கக்கூடும்//

ரொம்ப சரி.

என்ஃபீல்டு 350 ஸிஸி. யெஸ்டி 250ஸிஸி. இதோட மகத்துவம்லாம் கொடைக்கானலுக்கோ வேற மலைப் பிரதேசங்களுக்கோ வண்டிய எடுத்துட்டுப் போனாக்கா தெரியும். அப்படியே அலுக்காம சலிக்காம ஏறிப் போகும் பாருங்க. 100 ஸிஸில்லாம் பார்த்தா பரிதாபமா இருக்கும். எத்தனையோவாட்டி கொடைக்கானலுக்கு வண்டில போயிருக்கேன். நாங்க பத்து பேரு அஞ்சு வண்டில போவோம். மூணு நாலு ஜாவா, யெஸ்டி இருக்கும். ஒண்ணு ரெண்டு 100ஸிஸி எதாவது வரும். பேரிஜாம் போம்போது டபுள்ஸ் இழுக்காம நண்பனோட 100 ஸிஸி கஷ்டப்பட என் வண்டில ட்ரிபிள்ஸ் போனது ஞாபகத்துக்கு வருது. அன்னிலருந்து அவன் தெருவுல வீலிங் பண்ணி அலட்றத நிறுத்திட்டான். யெஸ்டில வீலிங் பண்ண முடியாதுன்னு தப்புக் கணக்குப் போடாதீங்க. அழகா பண்ணலாம். ஆனா அதுக்கு நம்ம அர்னால்டு சிவநேசனுக்குப் பாதியாவாவது இருக்கணும். அந்த டிரிப்ல இன்னொரு நண்பன் ஹீரோ ஹோண்டா 4S-னு நாலு ஸ்ரோக் வண்டிய புதுசா வாங்கி எடுத்திட்டு வந்தான். லிட்டருக்கு 80 கி.மீ.ன்னு போம்போது வயித்தெரிச்சலக் கொட்டிக்கிட்டான். மலைலருந்து இறங்க ஆரம்பிச்சா வத்தலக்குண்டு வரைக்கும் பிரேக்லருந்து காலை எடுக்க முடியாது - இல்லையா? பாதி மலைதான் எறங்கியிருப்போம். திடீர்னு அவன் வண்டி நின்னு போச்சு. என்னன்னு பாத்தா பிரேக் ட்ரம் (அலுமினியம்) இளகி அப்படியே சக்கரத்தோட அச்சுல ஒட்டி ஜாமாயி நின்னுடுச்சு. நான் கீழ போயி ஒரு லாரி மெக்கானிக்கக் கூட்டிக்கிட்டு வந்து அதைச் சுரண்டியெடுத்துப் பிரிச்சு ஒரு மாதிரியா ஓட்டிக்கிட்டு வந்து மதுரை போய் சேர்ந்தோம். டீலர்ட்ட கொண்டுபோய் காட்டினா அவங்க மயக்கமே போடாத கொறை. என் 'சரிவீஸ்'லயே இந்த மாதிரி பிரச்சினையை இப்பத்தான் பாக்கறேன். 'விட்டா வெயிலுக்கு உருகிரும் போலக்கே ஒங்க வண்டி'ன்னு அவர்ட்ட சண்டை போட்டு சரிபண்ணி எடுத்துட்டுப் போனான். எதுக்குச் சொல்றேன்னா மைலேஜ் கூட்டறதுக்காக வண்டியை லேசாப் பண்ணி சருகு மாதிரி விக்கிறாங்க. ஆரம்பத்துல 75-80 கி.மீ. தரும்போது சந்தோஷமாத்தான் இருக்கும். ஒண்ணு ரெண்டு வருஷத்துலயே லொடலொடன்னு ஆயி க்ளட்ச் கேபிள் போச்சின்னா கூட செட்டோட மாத்தணும்னு நூத்துக்கணக்குல புடுங்கிருவாய்ங்க. யெஸ்டில க்ளட்ச் கேபிள் தப்பித்தவறி போச்சின்னாக் கூட மாத்தறதுக்கு 10 ரூபாய்தான் ஆகும்.

என்பீல்டுலயும் யெஸ்டிலயும் மிகப்பெரிய விசேஷம் - ஒரு பய ஓசி கேக்க மாட்டான். அப்படியே வீம்புக்குக் கேட்டு எடுத்துட்டுப் போனவங்களைத் தேடி நான் போய் - வேர்க்க விறுவிறுக்கத் தள்ளிட்டு வர்றவங்களைக் காப்பாத்தியிருக்கேன். 'ஸ்டார்ட்டே ஆகலைடா' என்பான். நான் அதைத் தடவிக் கொடுத்துத் தாஜா பண்ணி ஒரே மிதில ஸ்டார்ட் பண்ணினதும் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு 'ஆள விடு சாமி' என்று போனவர்கள் அதிகம்!

பெங்களூர்ல 98-ல இருந்தப்ப மதுரைலருந்து யெஸ்டிய எடுத்துக்கிட்டுப் போனேன். அங்க ஓடிக்கிட்டு இருந்த புல்லட் Machimo-வைப் பாத்துட்டுப் பொறாமையா இருந்தது. அழகான டிஸைன் அது. யெஸ்டிலயும் வியாபாரம் தேஞ்சிப் போய் 175-ஸிஸில ஒரு மாடல் விட்டுப் பாத்தாங்க. அது சோனி நாய் மாதிரி யாரும் சீந்தாமப் போனது. :-(

பெட்ரோல் விலையேறிப் போனப்போ மதுரைல நெறய பேரு யெஸ்டில 2:1 விகிதத்துல கெரஸின் அல்லது டீஸலைப் போட்டும் ஓட்டினாங்க. எனக்கு அப்படிச் செய்ய மனசு வர்லை. காசு போனாலும் பரவாயில்லைன்னு கடைசிவரைக்கும் பெட்ரோல்போட்டுத்தான் ஓட்டினேன் - ஓட்டுவேன்.

ராஜ்தூத்னு ஒரு வண்டிய ஓட்டிட்டுப் போவானுங்க பாருங்க. அது என்னங்க வண்டி. இங்கிட்டும் இல்லாம அங்கிட்டும் இல்லாம?

என்னதான் சொன்னாலும் என்ஃபீல்டும் புல்லட்டும் சிவாஜி எம்ஜியார் ரஜினி கமல் மாதிரி. :-)

காலேஜ்லயும் சரி, வேலை பாக்க ஆரம்பிச்சப்பவும் சரி என்னோட 1984 மாடல் வண்டிதான் என் உற்ற தோழன். அதுல எத்தனையோ எடங்களுக்குப் போயிருக்கேன். மத்த வண்டிங்கள்ளாம் நிறைய ஓட்டினாலும் யெஸ்டி மாதிரி வரவே வராது. இப்ப ஸ்ரீரங்கத்துல தனியா அது நிக்கறத நெனச்சு மனசு கஷ்டமா இருக்கும். என்ன பண்றது. லீவுல ஊருக்குப் போம்போது அதை நல்லா கவனிச்சு ஓட்டுவேன். அதெல்லாம் ஒரு மாசந்தானே. திரும்ப இங்கிட்டு வந்துட்டா அதைக் கவனிக்க நாதி கிடையாது. ஒரு விதத்துல பாத்தா பெத்தவங்களைக் கூட அப்படித்தான் வச்சுருக்கோமோன்னு அடிக்கடி தோணும்.

சீக்கிரம் ஊருக்குத் திரும்பப் போகணும்.

***

Friday, June 15, 2007

சும்மா... இல்லை, வலித்து அதிருகிறது இதயம்!

யானை ஊர்வலம் என்ன;
மொட்டை அடித்துக் கொள்வதென்ன;
கட்டவுட்டுக்குப் பாலபிஷேகம் என்ன;
பட்டாசு வெடிப்பதென்ன;
பிரம்மாண்ட டிஜிட்டல் பேனர்கள் என்ன;

எல்லாம் சரிதான். உங்கக் கைக்காசைப் போட்டு என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க. ஆனா இது?

Image and video hosting by TinyPic

ரசிப்புத்தன்மை இருப்பவன் ரசிகன். மேலிருக்கும் படத்தைப் பார்த்தால் நீங்கள் ரசிக்கும் விஷயங்கள் மீது சந்தேகமாக இருக்கிறது.

அடுத்து தசாவதாரம் வெளியீடன்று என்னென்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. கமல் ரசிகர்கள் இம்மாதிரி செய்ய மாட்டார்கள் என்ற நினைப்பில் மண்... ஸாரி.. இடி விழுந்து நீண்ட நாட்களாகிற்று. எனக்கென்னவோ இது ஒருவகையான மனோவியாதி என்று தோன்றுகிறது.

இதையெல்லாம் பார்த்தாலே.... சும்மா... இல்லை, வலித்து அதிருகிறது இதயம்!

Saturday, May 26, 2007

அதாண்டா இதாண்டா அருணாச்சலம் எங்களுதுடா!

"அருணாச்சலப் பிரதேசத்தில் இருப்பவர்களெல்லாம் சீனர்கள். சீனர்கள் சீனாவுக்குள் வர விஸா தேவையில்லை - அருணாச்சலப் பிரதேசம் சீனாவைச் சேர்ந்தது"

Image and video hosting by TinyPic

இந்தியா சீனாவுக்கு பயிற்சி பெறுவதற்காக 107 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு விஸா வேண்டி விண்ணப்பித்திருந்தது. 107-இல் ஒருவர் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியர். அவருடைய விண்ணப்பத்தை மட்டும் நிராகரித்த சீனத் தூதரக அதிகாரிகள் நிராகரிப்புக்குக் குறிப்பிட்ட காரணம்தான் மேலே குறிப்பிட்ட செய்தி!!

'ஏற்கனவே மாநிலத்தின் பல பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்போது மாநிலமே எங்களுடையது என்று சொல்கிறது. இது கண்டனத்துக்குரியது என்று அருணாச்சல மாநில முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக சர்வ வல்லமை பொருந்திய, வெளிநாடுகள் சீண்டிப் பார்க்கவே அஞ்சும் நம் தேசத்தை ஆளும் தலைவர்கள் கீழ்க்கண்ட அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்று ஊகிக்கிறேன்.

1. எல்லா செய்தித்தாள்களிலும் 'அருணாச்சலம் எங்கள் மாநிலம். அதில் கையளவு நிலத்தைக் கூட - 'ஏழைகளுக்கு இலவச நிலம்' போன்ற திட்டம் மூலமாகக் கூட - யாருக்கும் விட்டுத் தர மாட்டோம்' என்று நாள் தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிடும்.

2. சீனாவின் அருணாச்சலப் பிரதேச ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா. சபையில் இந்தியத் தூதர் பிரச்சினை எழுப்புவார்.

3. அரசியல்வாதிகள் ராஜஸ்தானில் அடையாள உண்ணாவிரதம் இருப்பார்கள்

4. உள்நோக்கத்துடன் அருணாச்சல மாநிலத்தை சீனாவின் பகுதியாக வரைபடத்தில் சித்தரித்திருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய அரசு கண்டனம் வெளியிடும்

5. 2020-இல் இந்தியப் பிரதமர் அருணாச்சல மாநிலத்திற்கு 'அமைதிப் பேருந்து' ஒன்றின் முதல் 'வரலாற்றுச் சிறப்பு மிக்க பயணத்தைக்' கொடியசைத்துத் துவக்கி வைப்பார்.

6. IoAP-க்கும் CoAP-க்கும் சர்வதேச எல்லை ஒன்றை வரையறை செய்ய இந்தியாவும் சீனாவும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும்.

7. அனுதினமும் அந்தச் சர்வதேச எல்லையில் 'ஒப்பந்தத்தை மீறுவதாக' இந்தியா மீது சீனாவும், சீனா மீது இந்தியாவும் குற்றம் சாட்டிக் கொள்ளும்.

8. 'அருணாச்சல மாநிலத்தின் சட்டசபையைத் தவிர அனைத்துப் பகுதிகளையும் சீனா ஆக்கிரமித்துள்ளது. இப்போது சட்டசபையையும் சீனாவைச் சேர்ந்தது என்கிறது. இது கண்டனத்துக்குரியது' என்று அருணாச்சலப் பிரதேச முதல்வர் அறிக்கை வெளியிடுவார்.

9. 'அருணாச்சல மாநிலத்தில் நுழைவதற்கு இந்தியர்கள் விஸா வேண்டி விண்ணப்பிக்கும் நடைமுறை 2021 ஜனவரியிலிருந்து அமலுக்கு வருகிறது' என்று சீனா செய்தித் தாள்களில் செய்தி வரும்.

10. சீனப் பிரமர் இந்தியாவுக்கு விஜயம் செய்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்த்துவிட்டு 'சந்திப்பு தோல்வி' என்று பத்திரிகைகளுக்குப் பேட்டியளிப்பார்.

11. அஸாமில் நமக்குத் தெரியாமல் ஊடுருவிய சீனப்படைகளுடன் போரிட்டு ஐந்தாயிரம் படைவீரர்களைக் காவுகொடுத்து சீனப் படையை அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஓட ஓட விரட்டி வெற்றிபெற்றது இந்தியா!

12. அருணாச்சலப் பிரதேசத்தில் "அதாண்டா இதாண்டா அருணாச்சலம் எங்களுதுடா!" என்று 60-வருடமாகத் தமிழ்த் தி்ரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் ஆடிப்பாடி நடித்துப் படமாக்க விரும்பிய பகுதியில் படபிடிப்பு நடத்த சீன அரசு அனுமதி மறுத்துவிட்டது! ஆனால் பாடல் பெருவெற்றி பெற்று தமிழகத்தின் பட்டி தொட்டிகளெங்கும் டீக்கடைகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

****

வயிறு எரிகிறது ஐயா! வயிறு எரிகிறது! இம்மாதிரி முதுகெலும்பேயில்லாத, முடிவு எடுக்கும் , கடும் நடவடிக்கை எடுக்கும் திராணியில்லாத தலைவர்கள் கையில் சிக்கி இந்தியா இப்படிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதை நினைக்கையில் - ஏதோ ஒருவிதத்தில் இதற்கு நானும் ஒரு மறைமுகக் காரணகர்த்தன் என்று நினைக்கையில் - வயிறு எரிகிறது!

****
இந்தப் பிரச்சினை தொடர்பான கட்டுரை ஒன்று ரீடிப் தளத்தில் இங்கு இருக்கிறது.

Saturday, May 19, 2007

என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்!

தினமல் செய்தி: "மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அமைச்சர் (இப்படியா குழப்பமா எழுதறது?) வயலார் ரவி கொச்சி துறைமுகத்திற்குச் சென்றபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது" - அதற்கு இந்தப் படம்.



நான் செய்தியைப் படிக்காமல் படத்தை முதலில் பார்த்ததும் 'என்னவோ ஏதோ'வென்று பயந்து போனேன்.

வரவேற்பை இப்படியா முகத்தை வைத்துக்கொண்டு ஏற்பது அமைச்சர்? கஷ்டம்!

Friday, May 04, 2007

அன்புச் சங்கிலி?

இதைத் தான் அன்புச் சங்கிலி என்று சொல்கிறார்களா? :-)

Image and video hosting by TinyPic

படம் நன்றி: தமிழ்முரசு.காம்

Thursday, May 03, 2007

ஊற்றும் நெகிழ்வும்

ஸ்ரீரங்கத்தில் தனிமையில் அவர்களை விட மனமேயில்லை. அதிலும் வயது ஆக ஆக கவலை ரேகைகள் நிறையவே ஏறிக்கொண்டதால் ரொம்பவும் தவித்து, குளிர்காலமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அவர்களை அழைத்துவர முடிவாகிவிட்டது. கடந்த டிசம்பரில் விஸாவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் அனுப்பி, இணையத்தில் நாள் குறித்து, அம்மாவும் அப்பாவும் சென்னையின் அமெரிக்கத் தூதரகத்தில் நேர்முகத்திற்குச் சென்று விஸா கிடைத்தது என்று தொலைபேசி சொன்னதும்தான் நிம்மதியாக இருந்தது.

பிப்ரவரி 1-ம் தேதி அவர்களது 40-வது திருமணநாள். சென்னையிலிருந்து கிளம்பி பாஸ்டனுக்கு பிப்-1 பிற்பகல் வந்து சேர்ந்தார்கள். நல்லபடியாக வந்து சேரவேண்டுமே என்று கவலையாக இருந்தது - அம்மாவின் உடல்நிலையை நினைத்து. கூடப் பயணித்த இன்னொரு நல்ல தமிழ் உள்ளம் அவர்களுக்கு பிராங்க்பர்ட்டில் விமானம் மாறுவதற்கு உதவி செய்து பாஸ்டனில் விமான நிலைய வாசல்வரை வந்தது - அவருக்கு நன்றி சொல்லி கிளம்பி வீட்டுக்கும் வந்தாகிவிட்டது. குழந்தைகள் இருவருக்கும் தாத்தா பாட்டி அன்று வரப்போவது தெரியாது. அவர்கள் பள்ளியிலிருந்து திரும்பும்முன் வீட்டிற்குச் சென்றுவிடவேண்டும் என்று சற்று வேகமாகவே வண்டியை ஓட்டி வந்தோம்.

பெரியவள் சின்னவள் இருவரும் மூன்று மணிக்கு வருவார்கள். பெற்றோரது பெட்டிகளை தற்காலிகமாக ஒளித்துவைத்துவிட்டு, அவர்களை குழந்தைகளின் அறையில் அமரச்செய்து கதவை மூடிவிட்டு 'ஒண்ணுமே தெரியாதது' போல வரவேற்பறையில் அமர்ந்துகொண்டோம்.

முதலில் வந்தது சின்னவள் துர்கா. வழக்கத்துக்கு மாறாக நான் வீட்டில் அந்த நேரத்தில் இருப்பதைப் பார்த்துவிட்டு 'இன்னிக்கு ஆபீஸ் லீவா?' என்று கேட்க, 'ஆமா. லீவு விட்டுட்டாங்க. Early Release day today' என்றேன்! அவள் புத்தகப் பையை இறக்கிவைக்க அவளது அறைக் கதவைத் திறந்ததும் தாத்தா பாட்டியைப் பார்த்து ஒரே ஒரு கணம்தான் ஸ்தம்பித்து நின்றாள். பிறகு ஒரு கையால் வாயை மூடிக்கொண்டு சிரித்துக்கொண்டே அறையைவிட்டு வெளியே ஓடி வந்தாள். பிறகு அதே வேகத்தில் உள்ளே திரும்ப ஓடி சட்டெனத் தரையில் அமர்ந்து பையைப் பிரித்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்து அவள் அன்று பள்ளியில் செய்த சாகசங்களை விவரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

ஜன்னல் வழியாகப் பார்த்தபோது தூரத்தில் பள்ளிப் பேருந்து வந்து நிற்க, பெரியவள் அக்ஷரா இறங்கி வருவது தெரிந்தது.

அக்ஷரா வரும் ஸ்டைலே தனி. ஆடிக்கொண்டே வருவாள். தரையில் கிடக்கும் சிறு கற்கள் உதைபட்டுப் பறக்கும். நீட்டிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளிலிருந்து சுள்ளிகளைப் பிய்ப்பாள். ஓரமாக உறைந்திருக்கும் பனிக்கட்டியை மிதித்து அது அசைகிறதா என்று பார்ப்பாள். வாய் ஏதாவது பாடலை முணுமுணுக்கும். நாங்கள் புன்னகையை அடக்கிக்கொண்டு அவள் கதவைத் திறந்து வரும்வரை காத்திருந்தோம். ஒவ்வொரு முறை அவள் வரும்போதும் அப்படியே படியிலேறி உள்ளே வர, என் மனைவி 'செருப்பைக் கழட்டிட்டு வா' என்று அவளுக்குச் சொல்லவேண்டும். வேண்டுமென்றே காலணியோடு உள்ளே வருவாள்! :-) இன்றும் அப்படியே வர, "shoe-வைக் கழட்டு" என்று அதட்டியதும் கழற்றிப் போட்டுவிட்டு உள்ளே வந்தாள். வேண்டுமென்றே புத்தகப்பையை இறக்கி நடு அறையில் போட - 'ஒன் ரூம்ல கொண்டு போய் வை' என்ற இரண்டாம் சம்பிரதாய அதட்டல் வர, எடுத்துக்கொண்டு அறையை நோக்கி நடந்தாள்.

நாங்கள் மெதுவாக அவள் பின்னாலேயே போனோம். கதவைத் திறந்தாள். எதிரே தாத்தா பாட்டி அடக்கமாட்டாத சிரிப்புடன்! தொப்பென்று பையைக் கீழே போட்டுவிட்டு 'பாட்டீ' என்று அலறினாளே பார்க்கணும்! அப்படியே ஓடிச்சென்று இருவரையும் கட்டிப்பிடித்துக்கொள்ள அவள் கண்களிலிருந்து கரகரவென்று கண்ணீர் அருவியாய் வர எங்களுக்கு அவளது உணர்வு வெளிப்பாடுகள் ஆச்சரியமாக இருந்தது. சிரிப்பும் அழுகையுமாய் தொடர்ந்து பல நிமிடங்கள் அந்த நிலை நீடித்தது. என் அம்மா 'எதுக்கு அழறே. அதான் வந்துட்டோமே' என்று மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே இருந்தார்.

பிறகு 'Why didn't you tell before?' என்று என் மேல் பாய்ந்து சண்டை போட்டது தனிக்கதை.

ஆனால் அந்தக் கண்ணீரில் எனக்குள் சில ஊற்றுகள் திறந்தன போல உணர்ந்தேன்.


***

Friday, April 20, 2007

தம்மின் மெலியாரை நோக்கி

"நான் கஷ்டப் படறேன்" - என்று வெளியில் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் மனதால் நினைத்திருப்போம் - ஒரு முறையாவது.

செருப்பில்லை என்று வருத்தப்படுவதைவிட காலில்லாதவனைப் பார்த்து ஆண்டவன் நமக்கு இரு கால்கள் கொடுத்திருக்கிறார் என்று சந்தோஷப்படவேண்டும் என்று அறிவுரைகளைப் படித்திருக்கிறோம்.

'இன்னும் வேண்டும்' என்று ஆத்மாவைத் தொலைத்துவிட்டு வாழ்நாள் முழுதும் ஓடிக் கொண்டேயிருப்பது எவ்வளவு அற்பத்தனம் என்று இப்படங்களைப் பார்க்கையில் புரிகிறது.

"தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை
அம்மா பெரிதென் றகமகிழ்க"


Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Tuesday, March 27, 2007

துட்டு இல்லையெனின் வெட்டென மற!

Image and video hosting by TinyPic

பார்க்கவே நெஞ்சு பதைக்கிறது. இதையும் வேடிக்கை என்று சுற்றி நின்று கொண்டு பார்க்கும் மனிதர்களை நினைத்தால் ஆத்திரமாக வருகிறது. ஆனால் ஏனோ அந்த அப்பனின் மீது கோபம் வரவில்லை. இந்நிலையில் அவர்களை வைத்திருக்கும் சமூகத்தின் மீதும் அச்சமூகத்தைப் பேண வேண்டிய அரசின் மீதும் கோபம் வருகிறது.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதால்தான் இப்படி 'உயரத்தில்' வைத்திருக்கிறோமா?

வதைபடும் பிராணிகளுக்குக் குரல் கொடுக்க நீலச் சிலுவைச் சங்கம் இருப்பதுபோல வதைபடும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு ஏதாவது அமைப்புகள் இருக்கின்றனவா? மன்னிக்க. "துட்டு இல்லையெனின் வெட்டென மற"-என்கிற ஏழைகளின் மந்திரத்தை மறந்துவிட்டேன்.

வேதனையாக இருக்கிறது.

படம் நன்றி: தமிழ்முரசு

Monday, March 26, 2007

ரா உளவு அமைப்பு தலைமறைவான இந்திய அணியைக் கண்டுபிடித்தது !

உலகக் கோப்பையில் தோல்வியைத் தழுவி முதற் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியினர் இன்று காலை மும்பைக்கு வருவதாக இருந்தது. மும்பை வந்த விமானத்தில் அவர்களைக் காணாது அதிர்ச்சியடைந்த அரசு உடனடியாக உளவு அமைப்பான ரா -வின் உதவியை நாடியதில் ரா உளவாளிகள் ஜமைக்காவிற்கு விரைந்து சென்று துப்பறிந்து மறுபடியும் இந்தியாவிற்குத் திரும்பி பல்வேறு திசைகளில் தேடியதில் விமானத்தில் வராமல் அங்கிருந்து கள்ளத் தோணிகள் மூலமாக இந்தியாவிற்கு வந்து தலைமறைவாக இருந்தவர்களைக் கண்டுபிடித்து விட்டது.

அவர்களை அந்தந்த இடங்களிலேயே விட்டுவிடுமாறு அரசு ரா அமைப்பினருக்கு வலியுறுத்தியதால் அவர்களைப் பிடிக்காமல் திரும்பினர் உளவாளிகள். ஆனாலும் அவர்களது புகைப்படங்கள் இணையத்தில் சற்றுமுன் வெளியானதில் எல்லாரும் பலத்த அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.

அகார்க்கர்

Image and video hosting by TinyPic

தோனி

Image and video hosting by TinyPic

திராவிட்

Image and video hosting by TinyPic

கங்குலி

Image and video hosting by TinyPic

சச்சின்

Image and video hosting by TinyPic

கும்ளே

Image and video hosting by TinyPic

சேவக்

Image and video hosting by TinyPic

உத்தப்பா

Image and video hosting by TinyPic

யுவராஜ்

Image and video hosting by TinyPic

ஜஹீர் கான்

Image and video hosting by TinyPic

Friday, March 16, 2007

அடப் பாவிகளா!

மனிதனின் சாதனைப் படிக்கட்டுகளில் மற்றுமொன்று என்றாலும் ஏனோ பெருமைப்பட முடியவில்லை - அந்தப் புறாவின் கண்கள்!

Image and video hosting by TinyPic

நன்றி: தினமலர்.

Thursday, March 15, 2007

கை கொடுக்கும் கால்!

Image and video hosting by TinyPic

சென்னை ராயப்பேட்டை மேம்பாலத்தில் ஏறமுடியாமல் இன்று தனது மூன்று சக்கர வாகனத்தில் திணறிக்கொண்டிருநத் ஊனமுற்றவருக்குக் "கால் கொடுத்து" உதவும் ஆட்டோக் காரர்.

நன்றி: தமிழ்முரசு (படத்துக்கு மட்டும் இல்லை. இதை முதற் பக்கத்தில் வெளியிட்டதற்கும்தான்).

Saturday, March 10, 2007

ரெளத்திரம் கொள்!

ஆறுவது சினம் - ஆனால் இதற்கெல்லாம் ஆறினால் சொரணையற்ற தமிழர்களாகவே இருப்போம்.

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic

சேலம் நெத்திமேடு ஸ்ரீரத்னா ஆங்கிலப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்த ரோட்டுப்பாடம் இது. தினமலரில் இதைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

இந்த வேலைக்குக் குழந்தைகளை உட்படுத்தியவர்களை என்ன செய்யலாம்? அங்கிருக்கும் வலையுலக நண்பர்கள் அதிகார வர்க்கத்திடம் கடுமையான கண்டனங்களையும் புகார்களையும் அளித்து இதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆத்திரத்தில் ஏதாவது கெட்டவார்த்தையை பயன்படுத்திவிடுவேன் என்று அஞ்சுவதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

***

Saturday, February 24, 2007

துக்ளக்கா சோ? # 3 (நிறைவுப் பகுதி)

Image and video hosting by TinyPic
துக்ளக் 37-ஆம் ஆண்டுவிழா நிறைவுரையில் பேசிய சோ அவர்களின் உரையின் இறுதிப் பகுதி.

நன்றி: துக்ளக்.காம்

தீவிரவாதத்தில் மத்திய அரசு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு ஏற்ற வகையில் இங்கே ஒரு அரசு செயல்படுகிறது. பொடா சட்டத்தில் கைதானவர்களை எல்லாம் வெளியில் விட்டு விட்டார்கள். எல்.டி.டி.ஈ. மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை விவாதத்திற்குரியது என்கிறார் முதலமைச்சர். இங்கே, ஒரு முன்னாள் பிரதம மந்திரியைக் கொலை செய்திருக்கிறார்கள். அங்கே இலங்கையில் தமிழ் தலைவர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். இந்த மாதிரியெல்லாம் செயல்பட்டவர்களை "தடை செய்தது சரியா, தவறா என்று பார்க்கிறோம் என்ற அளவில் விவாதத்திற்குரியது' - என்கிறார்.

அதனால்தான் எல்.டி.டி.ஈ. பிரச்சாரம் இப்போது ஓங்கிக் கொண்டே இருக்கிறது. நல்லதா இது? யாழ்ப்பாணத்தில் இதனால் என்ன சாதித்தார்கள்? யாழ்ப்பாணத்தை சுடுகாடாக ஆக்கியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் மாதிரி படிப்பில் புத்திசாலிகள் கிடையாது. சுமார் 92 சதவிகிதம் பேர் படித்தவர்கள். இப்போது அது எல்லாமே பாழ். வெளியேறியவர்கள் தப்பித்தார்கள். இல்லா விட்டால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துதான் தீர வேண்டும். வேறு வழியில்லை. 7 வயதிலும், 10 வயதிலுமுள்ள பையன்களின் கைகளில் துப்பாக்கியைக் கொடுத்து, இலங்கை ராணுவத்தின் முன்னால், தங்களுக்குக் கேடயமாக நிறுத்தும் கோழைகளை எப்படி நாம் பாராட்டுவது? அந்த மாதிரி நிலைமை தமிழ்நாட்டுக்கு வர வேண்டுமா? அந்த மாதிரி கலாச்சாரம் இங்கே பரவ வேண்டுமா? இவற்றுக்கெல்லாம் இந்த அரசு ஆதரவு தருகிறது.

சரி. மற்றதை பார்ப்போம் என்றால், இந்த இலவசத் திட்டத்தில் என்னென்னவோ வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் வந்து விட்டது. ஆகையால் தவணை முறையில் கொடுக்கிறார்கள். தவணை முறையில்தான் கொடுக்க முடியும். டெலிவிஷன் செட்டுகளை திடீரென்று எல்லோருக்கும் கொடுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. டி.வி. கொஞ்சம் பேர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்; கேஸ் அடுப்பு கொஞ்சம் பேருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இதுவே பெரிய விஷயம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் இந்த அளவு கூட தருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

மூன்றுபடி அரிசியைப் பார்த்தவன் நான். அது கூட கலைஞர் பண்ணியிருக்க மாட்டார், வேறு யாராவதுதான் செய்திருப்பார்கள் என்று நினைக்கக் கூட இடமில்லை. ஏனென்றால் அவரே (கலைஞரே), ""1967ல் இருந்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கிறவன் நான்தான்'' என்று சொல்லி விட்டார். ஆகையால் அந்த டுபாக்கூரும் அவருடையதுதான் என்று தெரிந்து போயிற்று. சரி. அப்பொழுதிலிருந்தே பழக்கப்பட்டவர், இப்போது இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது. இதில் கொஞ்சமாவது இலவசங்களைக் கொடுக்கவில்லை என்றால், தவறாகப் போய்விடும் என்று நினைத்திருக்கிறார்.

"மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு' என்று ஜெயலலிதா சொல்கிறார். பா.ம.க.வினரும் அவ்வப்போது சந்தேகத்தைக் கிளப்புகிற வகையில் பேசுகிறார்கள். காங்கிரஸையும் முழுக்க நம்ப முடியாது. அதிலும் காங்கிரஸிலும் இருக்கிற த.மா.கா. சக்திகள் என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. ஆகையால் பாராளுமன்றத் தேர்தல் வந்தால், அப்பொழுது சட்டசபையையும் கலைத்து விட்டு, தேர்தல் நடத்தலாமா என்று (கலைஞர்) யோசிக்கிறாராம். இது நிச்சயமா என்று எனக்குத் தெரியாது. அப்படி இருந்தால் வியப்பதற்கில்லை. இந்த கூட்டணியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள முடிந்தால் - சீட் பேரங்கள் எப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது ௲ சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்று அவர் (கலைஞர்) நினைக்கலாம். அதனால் இந்த இலவசங்கள் எல்லாம் நடக்கிறது. அதுவரைக்கும் இவையெல்லாம் நடக்கும் என்று சிலர் சொன்னார்கள்.

இலவசத்தில் எல்லாம் கொஞ்சம் சாம்பிள் செய்து காட்டியவர், இந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் ஒன்றும் செய்ய முடியவில்லை. கொடுப்பதற்கு நிலம் இல்லை. எங்கே
இருந்து கொடுப்பது? ஆகையால் இவர் என்ன செய்தார் என்றால், "ஜெயலலிதா அரசுதான் தவறாகக் கணக்குக் கொடுத்தது; அதை நான் நம்பி விட்டேன்' என்று சொன்னார். "53 லட்சம் ஏக்கர் இருப்பதாக ஜெயலலிதா அரசு கணக்குக் கொடுத்தது; அப்படிக் கூறிய பொன்னையன் இப்போது எங்கே?' என்று கேட்டார்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், இவர் (கலைஞர்) கொடுத்த கணக்கு அது. 55 லட்சம் ஏக்கர் என்று இவர் கணக்குக் கொடுத்தார். ""தேர்தல் சமயத்தில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் கிடப்பதை என்னுடைய அரசாங்கம் கண்டுபிடித்து, அதை உரிய வகையில் பயன்படுத்த நினைத்தபோதுதான், நாங்கள் வெளியேற நேர்ந்தது'' என்றார். அதாவது ஐந்து வருடங்களுக்கு முன்பே இது அவருக்குத் தெரியும். இவர்கள்தான் கண்டுபிடித்தார்கள். இப்போது அதை மறைக்கப் பார்க்கிறார்கள். அதனால் "இப்போது கலைஞர் எங்கே?' - என்றுதான் கேட்க வேண்டும். "பொன்னையன் எங்கே?' என்று கேட்டு பயன் இல்லை. அதற்கு முன்பே தீர்மானம் செய்தவர்கள் இவர்கள்தான்.

அதில் என்னவாயிற்று? "இரண்டு ஏக்கர்... இல்லை ஒரு ஏக்கர்... உள்ளங்கை அளவாவது நிலம் கொடுப்பேன்' என்று கூறி விட்டார். உள்ளங்கை அளவு நிலத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? சில பேர்களுக்கு பதவி கொடுக்காத சமயத்தில், "இதயத்தில் இடம் தருகிறேன்' என்பார். அந்த மாதிரி யாருக்குமே நிலம் கிடைக்காத போது, எல்லோருக்கும் உள்ளங்கை அளவு நிலம். ஃப்ளாட் கட்டுகிறவர்கள் கொடுக்கும் ஷேர் கூட கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கும். "ஒளவையார் படத்தில் ஒரு பாட்டு வரும். ஒருவரிடம் ஒளவையார் செல்ல, "நாளைக்கு வா, நாளைக்கு வா' என்று கூறி, கடைசியில் ஒன்றும் கொடுக்க மாட்டார்.

"கரியாகி, பரியாகி, கார் எருமை
தானாய் எருதாகி,
முழப் புடவையாகி, திரிதிரியாய்த்
தேரைக்கால் பெற்று மிகத் தேய்ந்து
காலோய்ந்ததே
கோரைக்கால் ஆழ்வான் கொடை'
- என்று ஒரு பாடல் வரும்.

அந்த மாதிரி, இவருடைய இரண்டு ஏக்கர் நிலம் கோரைக்கால் ஆழ்வான் கொடையாகி விட்டது; அவருக்கு இப்பொழுது "கோரைக்கால் ஆழ்வான்' என்று பட்டம் கொடுத்தால் கூட தவறில்லை. அவர் விரும்புவார். பட்டம் என்றால் எதுவாக இருந்தாலும் கவலைப்பட மாட்டார். பட்டம்தானே? பட்டம் வாங்கிக் குவிப்பதை அவர் விரும்புவார். ஆகையால் வந்த வரைக்கும் லாபம் என்று வாங்கினாலும் வாங்கிக் கொள்வார்.

இதைத் தவிர தமிழை வளர்க்கப் போகிறோம் என்கிறார்கள். எப்படி வளர்க்கிறார்கள்? சினிமாவின் பெயரை தமிழில் வைத்தால், அந்தப் படத்திற்கு கேளிக்கை வரி கிடையாது. சினிமா பெயரை மட்டும் தமிழில் வைத்தால் போதும். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எவ்வளவு அசிங்கம் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் படத்தின் பெயர் மட்டும் தமிழில் இருக்க வேண்டும். இதனால் எல்லோரும் படத்தின் பெயரை தமிழில் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். அரசுக்கு கேளிக்கை வரி வசூலாகப் போவதில்லை.

இந்த இலவசங்களால் இந்த அரசு திவாலாகப் போகிறது என்று நான் நினைக்கிறேன். பெரிய பிரச்சனை வரப் போகிறது. பீஹாரில் ஒருமுறை, சுமார் ஒரு வருடத்திற்கு மேல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதைப் பற்றி அவர்களும் கவலைப்படவில்லை. ஏனென்றால் மற்ற வருமானம் அவர்களுக்கு வந்து கொண்டிருந்தது.

அந்த மாதிரி நிலைமை இங்கு வரலாம். அதனால் கமர்ஷியல் டாக்ஸையெல்லாம் வசூல் செய்து விடுவோம் என்கிறார்கள் - இப்பொழுது பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது. வணிக வரியை இதுவரை கட்டாதவர்களிடமெல்லாம், வசூல் செய்வதற்காக ஒரு திட்டம். அதாவது "கட்ட வேண்டிய பாக்கித்தொகையை கட்டினால் போதும்; அதற்கு அபராதமும் கிடையாது, ஒன்றும் கிடையாது' என்று திட்டத்தை அறிவித்தார்கள். இதில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் வசூலாகி விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஒன்றரை கோடி ரூபாய்தான் வசூலாகி இருக்கிறது. பிறகு எங்கே போவார்கள் இவர்கள்? இப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசு திவாலாகப் போகிறதோ என்னவோ? அந்த மாதிரிதான் தோன்றுகிறது. இதில் இலவசங்களை வேறு வாரிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழை செம்மொழியாக்கி விட்டோம் என்று சொல்கிறார்கள். சரி, செம்மொழியாக்கி விட்டார்கள். நான் ஒரு யோசனை சொல்கிறேன்: பெரியாருக்கு 128 சிலை வைக்கப் போகிறார்கள். செம்மொழி என்றால் அதைச் செயல்படுத்துவதற்கு ஒரு அலுவலகம் இருக்கும். அந்த அலுவலகத்தின் எதிரில் பெரியார் சிலையை வைக்க வேண்டும். ஏற்கெனவே கோவிலுக்கு எதிரில் வைக்கப்பட்டிருக்கும் பெரியார் சிலையில் "கடவுளை கற்பித்தவன் முட்டாள்; கடவுளை பரப்பினவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி' என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதே போல இந்த பெரியார் சிலைகளின் கீழ் "தமிழ் காட்டுமிராண்டி பாஷை'; "தமிழை படித்தவன் உருப்பட முடியாது' என்றெல்லாம் எழுதுவார்களா?

அதுதான் வேண்டாம். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரே பெரியார் சிலையை வைக்க வேண்டும். 128 சிலையையும் வைக்க வேண்டுமே? அவர்கள் மட்டும் பின் தங்கி இருப்பானேன்? அவர்களையும் முன்னேற்றி விடுவோம். கம்யூனிஸ்ட் அலுவலகம் எதிரே சிலை. அந்த சிலையில் "எவன் காலை நக்கியாவது, பிழைப்பவன் கம்யூனிஸ்ட்; அயோக்கியர்கள், பித்தலாட்டக்காரர்கள், கலவரக்காரர்களைக் கொண்டதுதான் கம்யூனிஸ்ட் கட்சி'. இதெல்லாம் பெரியாருடைய பொன்மொழிகள். இவற்றையெல்லாம் அங்கே எழுதி வைக்கலாமே!

காங்கிரஸ் கட்சி இவர்களுக்கு வேண்டிய கட்சிதான். அவர்களுடைய அலுவலகக் கட்டிடத்தின் வாசலில் பெரியார் சிலை இல்லை என்றால் எப்படி? அவர்கள் தினமும் அதைப் பார்க்க வேண்டாமா? அந்த சிலைக்கு முன்னால் "ஒழிய வேண்டியது காங்கிரஸ் கட்சி; "பொறுக்கித் தின்பவன்தான் காங்கிரஸை ஆதரிப்பான்' - என்று எழுதி வைக்க வேண்டியதுதானே! ஆனால் அப்படி சிலை வைத்தால் கூட காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியாமல் போய் விடும். அவர்கள்தான் சத்திய மூர்த்தி பவனுக்குப் போவதில்லையே! அறிவாலயம்தானே போகிறார்கள்.

கலைஞர், ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

"சிவாஜி சிலையை வைக்க நீதிமன்றத்தில் அனுமதி தந்து விட்டார்கள். அதற்கு அனுமதி மறுத்திருந்தால், இன்னொரு சிலை வைக்க வேண்டியிருக்கும்' என்கிறார். அதாவது இவரும் (கலைஞரும்) சிலையாகி விடுவாராம். இதெல்லாம் என்ன பேச்சு? இதெல்லாம் பெண்கள் பேசும் பேச்சு போல் இருக்கிறது. பேச்சில் ஒரு கம்பீரம் இருக்க வேண்டாமா? அப்படிப் பார்க்கும்போது ஜெயலலிதா பேசுகிற பேச்சு, ஆண்கள் பேசுவது போல் இருக்கிறது. நாம் என்னதான் செய்வது என்று தெரியவில்லை.

மஞ்சள் துண்டுக்கு என்னென்னவோ விளக்கம் கொடுத்தார். "மருத்துவர்கள் குளுமையாக இருக்கும் என்று சொன்னார்கள்' என்றார். இன்னொன்று - "இது பொருத்தமாக இருக்கிறது' என்று சொன்னார். இன்னொன்று - "புத்தர் போட்ட கலர் இது' என்றார். "இப்பொழுது முதலில் இந்த மஞ்சள் துண்டை ராமதாஸ் எனக்கு அணிவித்தார். அந்த உறவுக்காக இதை அணிகிறேன்' என்றார். நல்லவேளையாக ராமதாஸ் மலர் கிரீடம் வைக்கவில்லை; வைத்திருந்தால், இவர் போகுமிடமெல்லாம் மலர் கிரீடத்துடனே போவார் போலிருக்கிறது. மன்மோகன் சிங்கே பார்த்து இவர் யாரென்று ஆடிப் போய் விடுவார். ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள். ஒரு காரணத்தோடு எதையுமே விடுவது கிடையாது.

"ராமர் கோவில் கட்டுவோம் என்று பிடிவாதமாக இருந்ததால், பா.ஜ.க. கூட்டணியை விட்டேன்' என்றார். பிறகு இப்பொழுது சமீபத்தில் "தாழ்த்தப்பட்டவர்களை மந்திரியாக்க வேண்டும் என்று சொன்னேன். கேட்கவில்லை. அதனால் பா.ஜ.க. கூட்டணியை விட்டேன்' என்றார். ஒவ்வொன்றுக்கும் இரண்டு மூன்று காரணங்களைக் கூறுகிறார். இந்த ஈழம் கொள்கைக்கு இவர் கொடுத்திருக்கிற விளக்கம் இருக்கிறதே அது மிகவும் அசாத்தியம். தெளிவான சிந்தனையே கிடையாது. ஆனால் இவர்கள் எல்லாம் பகுத்தறிவுவாதிகள்.

இப்படி இருக்கிற போது, கார்ப்பரேஷன் தேர்தலில் நடந்த மாதிரி ஒரு அட்டூழியமான தேர்தல் பீஹாரிலும் கூட நடந்திருக்குமா என்பது சந்தேகமே. அப்படி ஒரு தேர் தலை நடத்திக் காட்டினார்கள். எவ்வளவு வன்முறை? எவ்வளவு கள்ள ஓட்டு? கடைசியாக நீதிபதியே, "அட்டூழியம் நடந்திருக்கிறது; தேர்தலே நடக்கவில்லை. 99 வார்டுகளில் தேர்தல் நடத்துங்கள்' என்று கூறி விட்டார்.

ஒரு நீதிபதியே இந்த அளவுக்கு மாநிலத் தேர்தல் கமிஷனைப் பற்றி பேசியிருக்கிறார். முன்பு எதிர்க் கட்சியினர் எல்லாம் சொன்ன பொழுது, "தேர்தல் கமிஷனர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர், ஆகையால் இவர்கள் எல்லாம் சொல்கிறார்கள்' என்றார் கலைஞர். இதுதான் அவருடைய (கலைஞருடைய) பதில். இப் போது நீதிபதியைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்? அப்படி ஏதாவது சொன்னால், அது நீதிமன்ற அவமதிப்பாகி விடும். இதையே ஒரு பிராமண நீதிபதி சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. கொஞ்சத்துக்குக் கொஞ்சம் பூடகமாக ஏதாவது சொல்லி விடலாம். சொன்னது ஒரு முஸ்லிம் ஜட்ஜ். ஆகையால் இன்னும் தர்மசங்கடம் அதிகம். அவ்வளவு கேவலமாக ஒரு தேர்தல் நடந்தது.

இன்னொரு நீதிபதியான முகோபாத்யாயா, "தேர்தலில் தலையிட முடியாது. ஆகையால் இந்த வழக்கில் சாரம் இருக்கிறதா என்று நான் பார்க்கப் போவதில்லை' என்று கூறி விட்டார். அவரும் தேர்தல் ஒழுங்காகத் தான் நடந்தது என்று சொல்லவில்லை. "இப்பொழுது அதைப் பார்க்க முடியாது' என்று கூறி விட்டார். இந்த வழக்கைப் பொறுத்தவரையில் சட்டத்தினுடைய நிலைமை அதேதான் என்று உறுதி செய்யப்பட்டாலும், வியப்பதற்கில்லை. சட்டம் அப்படித்தான் இருக்கிறது. இருந்தாலும் ஒரு நீதிபதி, இவ்வளவு தூரம் கண்டனம் செய்திருக்கிறார் என்பது அரசாங்கம் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம். சரி, இது இதோடு முடியும் என்று நான் நினைக்கவில்லை.

சட்டசபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுக்கு இந்த கார்ப்பரேஷன் தேர்தல் ஒரு ஒத்திகை என்றுதான் நான் நினைக்கிறேன். அந்தத் தேர்தலில் இந்த மாதிரி செய்ய முடியுமா? அது தேசிய தேர்தல் கமிஷனின் கீழ் இருக்கிறது. அவர்கள் இந்த மாதிரி ஒத்துழைக்க மாட்டார்களே என்றால் - உண்மை தான்; ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனால் ஓட்டுச் சாவடி அதிகாரிகள் அனைவரும் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். போலீஸ், மாநில போலீஸ். தேர்தல் கமிஷனுக்கென்று தனி போலீஸ் கிடையாது. ஆகையால் பெரிய அளவில் 150 சட்டமன்றத் தொகுதிகளில் அட்டூழியம் நடந்தது என்றால், தேர்தல் கமிஷன் மீண்டும் அந்த எல்லாத் தொகுதிகளிலும் தேர்தலை நடத்திக் கொண்டிருக்க முடியாது. மேலும் இந்த மாதிரி பெரிய அட்டூழியம் நடந்தது என்று சொன்னால், தேர்தல் கமிஷனுக்கும் இழுக்கு.

ஏனென்றால் "மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில் எப்பேற்பட்ட தேர்தலை நடத்தி இருக்கிறோம்' என்று சொல்ல வேண்டும். ஆகையால் ஒரு நான்கு சட்டசபை தொகுதிகளை தேர்ந்தெடுத்து, "இங்கே அட்டூழியம் நடந்து விட்டது. ஆகையால் மறு தேர்தல்' என்று சொல்லி விடுவார்கள். அவ்வளவுதான். மற்ற இடங்களில் தோற்றவர்கள், தோற்றவர்கள்தான். வெற்றி பெற்றவர்கள், பெற்றவர்கள்தான். இந்த மாதிரி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

விஜயகாந்தை எடுத்துக் கொண்டால், அவர் ஓட்டை பிரிக்க முடியுமே தவிர, அவர் வெற்றி பெற்று என்றைக்கு ஆட்சிக்கு வரப் போகிறார்? "எல்லா இடங்களிலும் இவர் கட்சிக்கு டெபாசிட் போகும்; இவர் மட்டும் ஜெயிப்பார்' என்று நான் முதலிலேயே எழுதினேன். அதே மாதிரி முக்கால்வாசி இடங்களில் இவர் கட்சிக்கு டெபாசிட் போய் விட்டது. இவர் மட்டும் தான் ஜெயித்தார். ஆகையால், இவரும் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜெயலலிதாவும், "யாருமே வேண்டாம்; நான் ஜெயித்துக் காட்டுவேன்' என்று நினைத்தால், அவர் தனக்குத்தானே தோண்டிக் கொள்கிற குழிதான் அது. அவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.க., அ.தி.மு.க., விஜயகாந்த் -எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிட்டால், இப்போதைக்கு ஒரு மாற்றத்தை காணலாம். பல தவறான விஷயங்களில் அரசு காட்டும் வேகத்தையும் தடை செய்யலாம் என்று நினைக்கிறேன்.

(அரங்கத்திலிருந்து வைகோ பற்றி ஒருவர் கேட்டார்) அவருடைய விடுதலைப் புலி ஆதரவை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அதில் ஒரு விஷயத்தை நாம் பார்க்க வேண்டும். அவர் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருக்கிறார். வைகோ விடுதலைப் புலியின் தீவிர ஆதரவாளர். அவர் கூட்டணியில் இருக்கும்போதே "நளினியை ஏன் தூக்கில் போடவில்லை?' என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். அதுதான் தைரியம் என்பது. ஜெயலலிதா செய்வது எல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. நிறைய தவறுகள் இருக்கின்றன. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க.தான் மாற்று என்கிற போது எந்தெந்த சமயத்தில் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைப் பார்க்கத்தான் வேண்டும். அ.தி.மு.க. ஊழல் அதிகமான பொழுது, தி.மு.க.வைப் பார்த்தோம். தி.மு.க. தவறு செய்யும்பொழுது, அ.தி.மு.க.வைப் பார்க்க வேண்டும். வேறு வழியில்லை. ஆகையால் இப்பொழுதிலிருந்தே இவர்கள் (அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க.) ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, ஒரு வலுவான கூட்டணி அமைய, ஏற்பாடு செய்ய வேண்டும்.

காங்கிரஸிலும் எப்படி என்று சொல்ல முடியாது. த.மா.கா.வில் இருந்தவர்கள் தினமும் அங்கே அவமானப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சென்ற முறையே தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியே வருகிற மாதிரிதான் இருந்தது. அந்தக் கட்சி என்ன செய்யும் என்று சொல்ல முடியாது. ஆகையால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மத்தியிலும் என்ன ஆகப் போகிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

(9ஆவது அட்டவணையைப் பற்றி ஒருவர் கேட்டார்) "9ஆவது அட்டவணையில் 284 சட்டங்களைச் சேர்த்திருக்கிறார்கள். இது மாதிரி சேர்த்த சட்டங்களை சுப்ரீம் கோர்ட் பரிசீலிக்கத்தான் வேண்டும்' என்று முதலிலேயே எழுதி இருந்தேன். அந்த மாதிரிதான் இப்பொழுது தீர்ப்பும் வந்திருக்கிறது. ரொம்ப நல்ல தீர்ப்பு. இந்த விஷயத்தில் வக்கீல் விஜயனையும் நாம் பாராட்ட வேண்டும். அவர் மிகவும் கடுமையாகத் தாக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். நான் போய் அவரைப் பார்த்தேன். உடல் முழுக்க பேண்டேஜ்தான் தெரிந்தது. நான் போய்ப் பார்த்தது கூட அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ! அவர் அப்பொழுது பேசினார். அதனால் நான் வந்தது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சினிமாவில் எல்லாம் காட்டுவார்களே அந்த மாதிரி - கண் மட்டும்தான் தெரிந்தது. உடல் முழுக்கவும் பேண்டேஜ்தான். அப்படி அவரை அடித்திருக்கிறார்கள். அப்படி அடி வாங்கியும் கூட விடாமல் அதைச் செய்கிறார் என்றால், என்ன மனோதைரியம் இருக்க வேண்டும்?.

அந்த மாதிரி தைரியத்தை நீங்கள் ராமகோபாலனிடமும் பார்க்கலாம். அவர் தலையில் துணியை கழட்டுவதில்லை. கழட்டினார் என்றால், இரண்டு விரலை அவர் தலையினுள் வைக்கலாம். அவ்வளவு ஆழமாக வெட்டி இருக்கிறார்கள். கால்வாய் மாதிரி. அதன் பிறகும், அவர் விடாமல் தன்னுடைய பணியைச் செய்து கொண்டிருக்கிறார் என்றால், அதற்கு வேண்டிய நெஞ்சுரம் அவரிடம் இருக்கிறது. இந்த மாதிரி சில பேர் இன்னமும் இந்த நாட்டில் இருக்கிறார்கள்.

(இந்த நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு துண்டு காகிதம் கொடுக்கப்படுகிறது). ஒரு வாசகர் கோரிக்கை - "இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். நீங்கள் இதற்கு பதில் சொல்லாமல் மழுப்பாதீர்கள். தமிழக முதல்வர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் சொத்துக் கணக்கை வெளியிடுமாறு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பலமுறை கேட்டு விட்டார். ஆனால் கலைஞர் தன் குடும்பத்தினரின் சொத்து விவரத்தை வெளியிடவில்லை. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' - என்று எழுதி இருக்கிறார்.

நான் என்ன ஆடிட்டரா? யாருக்கு தெரியும் இது? தெரிந்தவர்கள் நம்மிடம் வந்து சொல்லப் போகிறார்களா? இதைப் போய் என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது?

"கண்டாரும் கிடையாது; விண்டாரும்
சொன்னதில்லை;
அண்டாண்ட கோடியெல்லாம்
ஒன்றாய் சமைந்திருக்கும் அல்லவோ
ஏழை சொல்லவோ
நேரமாகுதல்லவோ...!
ஐயே... மெத்த கடினம்...'


முற்றிற்று.

***

நன்றி. துக்ளக்.காம்

Friday, February 23, 2007

துக்ளக்கா சோ? # 2

Image and video hosting by TinyPic
துக்ளக் 37-ஆம் ஆண்டு விழாவின் நிறைவு உரையில் சோ தொடர்ந்து பேசியது இங்கே. நன்றி: துக்ளக்.காம்

***
இதெல்லாம் போதாதென்று ரிசர்வேஷன், ஒரு எல்லையே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அதை எப்படியாவது மத ரீதியாகவும் கொண்டு வந்துவிட வேண்டும் என்றும் பார்க்கிறார்கள். அதை நேரடியாகச் செய்ய முடியாது. மத ரீதியான இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை. ஆகையால் அதற்கு வேறு ஏதாவது வழி கண்டுபிடிக்க முடியுமா என்று ஒரு சச்சார் கமிட்டியை நியமித்தார்கள்.

"முஸ்லிம்கள்தான் நிறைய படிக்காமல் இருக்கிறார்கள் – என்று அக்கமிட்டி கூறியது. ஆனால் அதன் பிறகு ஒரு சென்ஸஸ் கணக்கே வந்திருக்கிறது. ஹிந்துக்களை விட, முஸ்லிம்களின் படிப்பு நன்றாக இருக்கிறது என்று. இப்பொழுது எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

இதற்கு முன்னால் சில சமுதாயத்தினர் வியாபாரத்தைத்தான் விரும்பினார்கள்.
ஹிந்துக்களில் செட்டியார்கள் வியாபாரத்தை விரும்பினார்கள். நாடார்கள் வியாபாரத்தை விரும்பினார்கள். மார்வாடிகள் வியாபாரத்தை விரும்பினார்கள். அவர்கள் எல்லாம் படிப்பதை விட வியாபாரத்தில் தங்கள் பையன்களை விடுவதில்தான் அவர்களுக்கு விருப்பம் இருந்தது. அப்பொழுதுதான் அவர்கள் எல்லாவற்றையும் கற்றுக் கொள்வார்கள் என்று நினைத்து அப்படிச் செய்தார்கள்.

அந்த மாதிரி முஸ்லிம் சமுதாயமும் கூட வியாபாரத்தையும், அந்த மாதிரி சேவைகளையும் – ஸர்வீஸஸ் – முக்கியமாக நினைத்தார்களே ஒழிய, படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இப்பொழுது எல்லோருக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. முஸ்லிம்களும் மற்றவர்களுக்குச் சமமாக வந்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு சமூகமும் பாதிக்கப்பட்டு நிற்க வேண்டும் என்பது, நாட்டின் அமைதிக்கு நல்லதல்ல. ஆனால் அதற்காக, முஸ்லிம்கள் ஒரு ஓட்டு வங்கி, அதை நாம் இழந்து விடக் கூடாது என்பதற்காக, இவர்கள் செய்து வருகிற அட்டூழியங்களில் இதுவும் ஒன்று.

அஸ்ஸாமில் வெளிநாட்டவர் சட்டத்தை மாற்றினார்கள். எதற்கு? ஒருவர் இந்தியர் இல்லை என்றால் – நான் இந்த மாநிலத்துக்கு வந்து இவ்வளவு வருடம் ஆகிறது என்று அவர் நிரூபிக்க வேண்டும். அதை மாற்றி, அரசுதான் அவர் இந்தியரல்ல என்று நிரூபிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தார்கள். இது செல்லுபடியாகாது என்று நீதி மன்றம் சொல்ல வேண்டிய தாகி விட்டது. இவர்கள் பங்களாதேசத்திலிருந்து வந்த அகதிகள். மேலும் யார் யார் வருகிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? இத்தனையும் எதற்காக? "இந்த மைனாரிட்டி ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அது தங்களிடம் கொஞ்சம் இருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கிடம் நிறைய இருக்கிறது. அதையும் பிடுங்கி விட வேண்டும் என்பதற்காக, எவ்வளவு தூரம் சமுதாயங்களுக்கிடையே பகைமையையும், துவேஷத்தையும், அவநம்பிக்கையையும் வளர்த்து வருகிறோம்' என்பது பற்றி கவலைப்படாமல் செயல்படுகிறார்கள்.

தீவிரவாதம் பற்றி பேசினால் கூட, பா.ஜ.க. ஒன்றுதான் தீவிரவாதம் பற்றி பேசுகிறது. தீவிரவாதம் பற்றி பேசினால், உடனே முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள் என்கிறார்கள், காங்கிரஸாரும் மற்றவர்களும். தீவிரவாதத்தைப் பற்றி பேசினால், அது ஏன் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்க வேண்டும்? அப்படி என்றால் இவர்கள் தீவிரவாதமும், முஸ்லிம்களும் ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். அப்பொழுது யார் உண்மையான மதச்சார்பின்மைவாதிகள்? இவர்களா, பா.ஜ. க.வா?

தீவிரவாதத்தை பா.ஜ.க. தீவிரவாதமாகப் பார்க்கிறது. இவர்கள் முஸ்லிம்கள் என்று பார்க்கிறார்கள். ஆகையால் இவர்களைப் பார்த்துத்தான் முஸ்லிம்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மதச்சார்பின்மை கட்சிகள் என்று தங்களை சொல்லிக் கொள்கிற கட்சிகள்தான், தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம் மதத்தையும், முஸ்லிம்களையும் அடையாளம் காட்டுகிறார்கள். இந்தக் காரியத்தை பா.ஜ.க. செய்யவில்லை. இந்தக் காரியத்தை இவர்கள்தான் செய்கிறார்கள்.

காஷ்மீரை எடுத்துக் கொண்டால், "இன்று காஷ்மீரில் குண்டு வெடிப்பு இல்லை' என்றுதான் செய்தி வர வேண்டும். தினமும் ஏதாவது நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் பாகிஸ்தானுடன் இணைந்து ஏதாவது செய்ய வேண்டுமாம். பாகிஸ்தானிய உளவுத் துறையுடன் தகவல்களையெல்லாம் பகிர்ந்து கொண்டால் நமது கதி என்ன ஆவது?

அந்தத் தீவிரவாதிகள் எல்லாம் தப்பிப்பதற்கும், உள்ளே நுழைவதற்கும்தான் அது வசதி செய்து தருமே தவிர, தீவிரவாதிகளை அடக்கவா அது உதவும்? பாகிஸ்தானியர்கள்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறார்கள் என்பதும் தெரியும். அவர்கள்தான் பயிற்சியும் கொடுக்கிறார்கள் என்பதும் தெரியும். இருந்தும், நீங்களும், நானும் போலீஸ்காரர்களாகச் செயல்படுவோம் என்றால் என்ன அர்த்தம்? அதைச் செய்கிறார்கள். ஏனென்றால் பாகிஸ்தானுடன் உறவை "சரியாக' வைத்துக் கொண்டால் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று இந்தியா நினைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் அப்படி அணுகுமுறை எதுவும் இல்லை.

முஸ்லிம்களில் எவ்வளவோ தேசியவாதிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். அப்துல்கலாமை விட்டு விடுங்கள். அவர் புகழ் பெற்றவர். ஆசிரியர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். தேசத் தொண்டிலிருந்து பல துறைகளிலும் முஸ்லிம்களின் பணி இருக்கிறது –விளையாட்டுக்களில் கூட. பாவம் கெய்ஃப். மற்றவர்கள் விளையாட்டில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வீட்டை யாரும் தாக்க வில்லை; கெய்ஃப் வீட்டை தாக்கினார்கள்.இவற்றை எல்லாமும் கண்டிக்க வேண்டும்.

நரேந்திர மோடி
அந்தக் காலத்தில் – முஷ்டாக் அலி காலத்திலிருந்து மொஹம்மது நிஸ்ஸார் காலத்திலிருந்து – இன்று வரை, கிரிக்கெட்டுக்கு முஸ்லிம்கள் நிறைய பேர் தங்கள் பங்கை செலுத்தி இருக்கிறார்கள். ஹாக்கியிலும், தங்கள் பங்களிப்பை முஸ்லிம்கள் செய்திருக்கிறார்கள். இங்கே ஒரு வாசகர் பேசும்போது சொன்னார் – கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்த முஸ்லிம்கள், அந்த குத்தகைப் பணத்தை ஒழுங்காகக் கட்டி வருகிறார்கள் என்று சொன்னார். மேலும் அவர்கள் எல்லாம் இந்த நாடு தங்களுடையது என்று நினைக்கிறபோது, அவர்களை விரோதிக்கிற வகையில், அவர்கள் மனதை பழுதாக்குகிற வகையில், அவர்கள் மனதில் வக்கிரம் தோன்றுகிற வகையில் நடந்து கொள்வது நல்லதல்ல.

இன்னொரு பக்கம், "பாராளுமன்றத்தை தாக்கிய அஃப்ஸலை தூக்கில் போடக் கூடாது; கருணை காட்ட வேண்டும்' என்கிறார்கள். எங்கேயாவது உண்டா இது? பாராளுமன்றத்தைத் தாக்கியதற்கு அவன் காரணமாக இருந்திருக்கிறான். அவனை தூக்கிலிடக் கூடாது. எத்தனை பேர் பாராளுமன்ற வளாகத்தில் இறந்தார்கள்? அவர்களின் மனைவிகள் எல்லாம் மெடல்களை திருப்பிக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். அரசுக்கு வெட்கம், மானம்... வேண்டாம். இதைவிட அரசாங்கத்திற்கு ஒரு இழுக்கு உண்டா?

நான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்தில் சுமார் 70 பேர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தேன். அவர்களில் ஒருவர் கூட அந்த பட்டத்தை திருப்பித் தரவில்லை. சும்மா எல்லோரும் "டாக்டர், டாக்டர்' என்று போட்டுக் கொள்கிறார்கள் என்று அப்படிச் செய்தேன். ஏழு வயது பையனுக்குக் கூட "டாக்டர்' பட்டம் கொடுத்தேன். என்னை மாதிரி ஒரு சமதர்மவாதியை உலகத்திலேயே பார்க்க முடியாது. அவர்கள் கூட திருப்பித் தரவில்லை.

எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்தளவுக்கு மனது நொந்து போய், வாங்கிய மெடல்களையே திருப்பித் தருகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அரசாங்கத்தை அவமதிக்க வேண்டும் என்று அவர்கள் அப்படிச் செய்யவில்லை. மனது நொந்துபோய் அப்படிக் கூறியிருக்கிறார்கள். "எங்களின் கணவன், பையன் ஆகியோர் இறப்பதற்குக் காரணமாக இருந்தவனுக்கு, நீங்கள் கருணை காட்டப் போகிறோம் என்று சொன்னால், எங்களுக்கு உங்கள் மெடல் வேண்டாம்' – என்கிறார்கள். இதை விட ஒரு தெளிவான தகவல் இருக்க முடியுமா? அப்படியும் இந்த அஃப்ஸல் விவகாரத்தை சிலர் விடவில்லை. அவனை தூக்கில் போடக் கூடாது என்று இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே நளினி விவகாரம் வேறு. "நளினியை விட்டு விட்டால் எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்' என்று கலைஞர் சொல்கிறார். ஏன் என்றால் ராஜீவ் காந்தியின் உயிர் ஒன்றுமே இல்லை, பாருங்கள். போகட்டும்! தீவிரவாதம் பற்றி என்ன கேவலமான அணுகுமுறை பாருங்கள்? ஆகையால் இந்த அரசாங்கம் தொடர்ந்தால் வரக்கூடிய மிகப் பெரிய ஆபத்து, தீவிரவாதம் வளர்வதுதான். பெங்களூர் வரைக்கும் வந்தாகி விட்டது. இந்த மாநிலத்திற்கு வருவதற்கு இன்னும் ரொம்ப நாள் ஆகாது. பா.ஜ.க. ஆட்சியில்
இருந்தால் இந்த தீவிரவாதம் வராது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இந்த மாதிரி அசடு வழிய மாட்டார்கள். மேலும் பா.ஜ.க. அரசு இருந்தால் உறுதியாக தீவிரவாதத்தை அடக்க முயற்சிக்கும் என்று தெரியும். அதற்கு தீவிரவாதிகள் பயப்படாமல் இருக்கலாம். ஆனால் தீவிரவாதத்திற்கு உதவுகிறவர்கள் எல்லோரும் அஞ்சும்படியாக அரசு நடக்கும். அந்த உதவிகள் எல்லாம் கிடைக்கவில்லை என்றால், இங்கு தீவிரவாதம் வெகுவாகக் குறைந்து விடும்.

தங்கும் இடம் முதற்கொண்டு, அவர்களுக்கு நிறைய உதவி தேவைப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு உதவினால் நம் கதி என்னவென்று உதவி செய்ய நினைக்கிறவர்கள் பயப்படுவார்கள். இந்த பயம் பா.ஜ.க. அரசிடம் இருக்கும்; ஜெயலலிதா அரசிடம் இருக்கும். மன்மோகன் சிங்கிடம் தீவிரவாதிகளுக்கு இந்த பயம் இருக்காது. கலைஞரிடமும் இந்த பயம் இருக்காது. சோனியா காந்தியின் தயவில்லாமல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தால் அவரும் தீவிரவாதிகளிடம் கடுமை காட்டுவார். ஆனால் இப்போது நிஜ பிரதமர் சோனியா காந்தி; நிழல் பிரதமர் மன்மோகன் சிங். ஆகையால் இப்படித்தான் நடக்கும்.

மன்மோகன் சிங் நல்லவர்; நேர்மையாளர். மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அவ்வளவுதான். ஆனால் பதவியை விடுவதற்கு மனதில்லை. பிரதமர் பதவி என்பது சாதாரண பதவி இல்லை. ஆகையால் விட்டு விடுவதற்கு மனது வரவில்லை. சரி, இதற்கெல்லாம் மாற்று என்ன?

தேசிய அளவில் பா.ஜ.க.தான் இந்த அரசுக்கு மாற்று வழி. இந்த மூன்றாவது அணி என்பது உருப்படாத சமாச்சாரம். தேர்தலில் மூன்றாவது வரும் அணிக்குப் பெயர் மூன்றாவது அணி. ஏற்கெனவே அந்த மூன்றாவது அணியில் இடம் பெற்றிருந்தவர்கள் பலவீனமாகி விட்டார்கள். முலாயம் சிங் பலவீனமாகி விட்டார்; மாயாவதி அந்த அணியில் சேருவாரா என்பது சந்தேகம்.

பிறகு மம்தா பானர்ஜி. அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தைப் பார்த்து நான் பிரமித்து விட்டேன். 25 நாட்கள் அதைத் தொடர்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நமக்குத் தெரிந்த உண்ணாவிரதம் என்பது – காலையில் டிஃபன் சாப்பிட்டு விட்டு, இனிமேல் உள்ளே தள்ள முடியாது என்ற அளவுக்கு சாப்பிட்டு முடித்து விட்டு, அங்கே போய் உட்கார்ந்தால், மாலை 4 மணிக்கு எழுந்து திரும்பவும் சாப்பிட ஆரம்பித்து விட வேண்டியதுதான். அப்படிப்பட்ட உண்ணாவிரதம்தான் நமக்குத் தெரியும். இப்படிச் செய்து விட்டு "வெற்றி... வெற்றி...உண்ணா விரதம் வெற்றி...' என்று சொல்லிக் கொள்ளும் காலத்தில், இந்த 25 நாள் உண்ணாவிரதம் ஆச்சரியம்தான். முன்பு காந்தி இருந்திருக்கிறார். பிறகு குஜராத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக மொரார்ஜி உண்ணாவிரதம்
இருந்தார். மொரார்ஜி உண்ணாவிரதத்தைத் தொடங்கி 17, 18 நாட்கள் கடந்த பிறகு, இந்திரா காந்தி கூறினாராம் – "அவர் செத்தால் என்ன ஆகிவிடும்?' என்று. அதற்கு
சந்திரசேகர், "அதன் பிறகு நாம் குஜராத்தை மறந்து விட வேண்டியதுதான்' என்று கூறியுள்ளார். அதன் பிறகுதான் எல்லோரும் விவாதித்து, குஜராத்தில் தேர்தல்களை நடத்துவது என்று முடிவெடுக்க, மொரார்ஜி உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இதை சந்திரசேகரே பின்னர் என்னிடம் தெரிவித்தார்.

இந்த மம்தா பானர்ஜியின் உண்ணாவிரதத்தினால், அவருக்கு பெரிய அளவில் ஆதரவு கூடி விடும் என்று நான் நினைக்கவில்லை. மூன்றாவது அணியில் பிறகு யாரை வைத்துக் கொள்ளப் போகிறார்கள்? முலாயம் சிங் சைஃபராகிக் கொண்டிருக்கிறார். மாயாவதிக்கு இந்த அரசின் தயவு தேவை. தாஜ் வணிக வளாக வழக்கு இருப்பதால், அவரும் ஒன்றும் செய்யப் போவதில்லை. பிறகு யாரை வைத்துக் கொண்டு மூன்றாவது அணி? அதனால்தான் இது உருப்படாத விஷயம் என்று நான் சொல்கிறேன்.

காங்கிரஸுக்கு மாற்று பா.ஜ.க. என்று கூறும்போது, பா.ஜ.க.வில் என்ன பிரச்சனை என்றால், அதில் உள்ள உட்கட்சி மோதல். அக்கட்சி பெற்ற தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து, அதன் தலைவர்கள் இன்னும் மீண்டபாடில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். அதனால் மீண்டும் பதவிக்கு வருவோம் என்பதையே அவர்கள்
மறந்து விட்டார்கள். "இந்தியா ஒளிர்கிறது' என்று கூறியதால், தோற்று விட்டோமோ என்று கூட அவர்களிடையே ஒரு அபிப்பிராயம். பத்திரிகைக்காரர்கள் அப்படி கிளப்பி விட்டு விட்டார்கள். ஏதோ கிராமத்தில் இருப்பவர்கள் எல்லாம் "இந்தியா ஒளிர்கிறது என்று சொல்கிறாயா, வா உன்னை தோற்கடிக்கிறேன்' என்று முடிவு செய்தது போல, பா.ஜ.க. தலைவர்கள் நினைத்துக் கொண்டு விட்டார்கள். அப்படியானால் குஜராத்தில் பா.ஜ.க. எப்படி வெற்றி பெற்றது? அங்கு இந்தியா ஒளிர்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு விட்டார்களா? மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் எப்படி பா.ஜ.க. வெற்றி பெற்றது? அங்கெல்லாம் இந்தியா ஒளிர்கிறது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்களா? அதுவல்ல உண்மை.

பா.ஜ.க.வுக்கு சரியான கூட்டணி அமையவில்லை. அவ்வளவுதான். இன்று எந்தக் கட்சியும் தனியாக நின்று வெற்றி பெறும் அளவுக்கு தேசிய அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, இல்லை. பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் அந்த நிலையில் உள்ளது. குஜராத்தில் தற்போது நரேந்திர மோடி அந்த நிலைக்கு கட்சியைக் கொண்டு வந்திருக்கிறார். மற்றபடி எந்தக் கட்சியும் தனியாக நின்று வெற்றி பெறப் போவதில்லை. அதனால் கூட்டணிதான் முக்கியம். கூட்டணியை தேர்தல் நேரத்தில் தேடாமல், இப்போதே பா.ஜ.க. அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அத்வானி ஒரு உறுதிமிக்க தலைவர். பிரதமர் பதவிக்கு நிறுத்தப்படும் வேட்பாளரைப் பார்த்தால் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வர வேண்டும். மன்மோகன் சிங்கைப் பார்த்தால் பச்சாதாபம் வருகிறது. நம்பிக்கை வரவில்லை. அவர் நல்லவர். நாம் எல்லோருமே நல்லவர்கள்தான். நாம் யாருக்கும் கெடுதல் செய்யப் போவதில்லை. ஆனால் ஒரு பள்ளி ஆசிரியர் சொன்னால், அதற்கு கட்டுப்பட்டு நடப்பது போல, ஒரு பிரதமர் செயல்படுவது அந்தப் பதவிக்கு அழகல்ல. அதனால் அத்வானி போன்ற ஒருவர் பிரதமராக வந்தால், நமக்கே ஒரு தெம்பு வரும்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அவரும்தான் கூட்டணி அமைச்சரவையை நடத்தினார். ஒரே ஒரு குறை. பொழுது விடிந்து பொழுது போனால், யாராவது ஒருவரை ஜெயலலிதாவுக்கு தூது அனுப்பிக் கொண்டிருந்தார்கள். மற்றபடி அந்த ஆட்சி, கூட்டணி கட்சிகளுக்கு டான்ஸ் ஆடவில்லை. வாஜ்பாயின் அந்த ஆட்சி செய்த திட்டங்களின் பயன்களைத்தான், தற்போதை மத்திய அரசு அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

என்னிடம் ஒருவர் ஒரு தகவலைச் சொன்னார். நம்பத் தகுந்த வட்டாரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். "லாலு பிரஸாத் யாதவ் ரயில்வே துறையில் மிகத் திறமையாகச் செயல்படுகிறார். நிர்வாகத்தை நிமிர்த்தி விட்டார்' என்கிறார்களே, அது பற்றிய விவரம் என்ன என்றும், அது போல வேறு ஓரிரு இலாகாக்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் கூறினார். "இவை அத்தனையும் பா.ஜ.க. ஆட்சியில் தொடங்கப்பட்டவை. இவை பற்றிய விவரங்களை நான் ஆதாரங்களுடன் கொண்டு வருகிறேன்' என்று கூறியிருக்கிறார். அது கிடைக்கும்போது நான் வெளியிடுகிறேன்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், அது போல அர்த்தமுள்ள வகையில் செயல்படும் ஒரு அரசை வாஜ்பாய் அளித்தார். பொக்ரானில் அணுகுண்டை வெடித்தார். இந்த அரசுக்கு அதுபோல் தைரியம் வருமா? வாஜ்பாய் ஆட்சி அதைச் செய்தபோது, அதுபற்றி முன்கூட்டியே யாருக்கும் தெரியவில்லை. சாட்லைட் மூலம் அறிந்து கொள்ளும் வசதி அமெரிக்காவிடம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த அணுகுண்டு சோதனை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு ரகசியமாக வைத்து, வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. "கூட்டணி தர்மம்' என்று எல்லோரிடமும் விவாதிக்கக் கூடிய விஷயமா இது?

மன்மோகன் சிங்காக இருந்தால், சோனியா காந்தியிடமிருந்து, கூட்டணி கட்சியினரிடமெல்லாம் கருத்து கேட்பார். அணுகுண்டு சோதனை நடத்தலாமா? என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டிருப்பார். இப்படிக் கேட்டுக் கொண்டிருந்தால், நம்மால் தீபாவளி பட்டாசு கூட வெடிக்க முடியாது. ஆக, உறுதி உள்ள ஒரு அரசு அமைய வேண்டும். அப்படிப் பார்த்தால், பா.ஜ.க.தான் அந்த மாற்று சக்தி. அவர்களுக்குத்தான் வாய்ப்பும் உள்ளது. அதற்கு அவர்கள் தங்களை சரி செய்து கொள்ள வேண்டும்.

இந்த உமாபாரதி ஒரு சந்நியாசி. அவர் பா.ஜ.க.வுக்கு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தினார். துறவி அல்லவா? உண்மையையும் சேர்த்து துறந்து விட்டார். அவரை ஒருமுறை டெல்லியில் சந்திக்க வேண்டி வந்தது. அப்போது குருமூர்த்தியும் அங்கு இருந்தார். "எனக்கு எதிராக நீங்கள் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாமே?' என்று கேட்டார். "ஆமாம்' என்று சொன்னேன். குருமூர்த்தி வேறு இருந்ததால், "நமக்கு ஏன் வம்பு? என்று உண்மையைச் சொல்லி விடுவோம்' என்று சொல்லி விட்டேன். எந்த இடத்தில் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா? "உங்களுக்கு எதிராக அவர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்' என்று குருமூர்த்தியும் சொன்னார்.

"ஏன்?' என்று உமாபாரதி கேட்டார். "உங்களை கட்சியிலிருந்து வெளியேற்றா விட்டால், பா.ஜ.க. செயல்பட முடியாது' என்று நான் பளிச்சென கூறி விட்டேன். இப்படி சொன்னதால் அவருக்கு என் மீது மிகவும் கோபம். "சரி. எத்தனை பெண்கள் நம்மை ஆதரிக்கிறார்கள். அதில் இவரது ஆதரவு இல்லாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது?' என்று விட்டு விட்டேன்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், பா.ஜ.க.வில் இப்படிப்பட்ட கட்டுப்பாடின்மை காணப்படுகிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸும் பெரும் காரணம் என்று நான் சொல்வேன். அனாவசியமாக பா.ஜ.க. தலைவர்களைப் பற்றியெல்லாம் ஆர்.எஸ்.எஸ். வெளிப்படையாக விமர்சனங்களை செய்யத் தொடங்கியது பெரும் துரதிர்ஷ்டம். ஆனால் பா.ஜ.க.வுக்கும் சரி, ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும் சரி, இது இப்போது புரிய ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் தங்களின் தவறுகளை சரி செய்து கொண்டு வருகிறார்கள் என்று நினைக்கிறேன். விரைவில் இத்தகைய பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட நிலையில் பா.ஜ.க.வுக்கு ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்றுதான் நான் நம்புகிறேன்.

சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க. நன்றாகச் செயல்பட்டிருக்கிறது. யாருமே எதிர்பார்க்கவில்லையே! உத்திரப் பிரதேசத்தையும், பீஹாரையும் (பா.ஜ.க.) கைப்பற்ற வேண்டும். இல்லையென்றால் பயன் இல்லை. போன தேர்தலில் அது வேறு பிரச்சனையாகி விட்டது.

(தொடரும்)

Thursday, February 22, 2007

துக்ளக்கா சோ? # 1

Image and video hosting by TinyPic
பல வருடங்களாக துக்ளக்கை வாசித்து வந்தாலும் அவர் சொல்வது சரியா, தவறா, என்றெல்லாம் சிந்தனையைச் செலுத்தியதில்லை. ஆனால் சொல்ல நினைத்ததை தனக்கேயுரித்தான பாணியில் வெளிப்படுத்தும் சோ -வை ஒரு வாசகனாகப் பிடிக்கும். ஆடையில் ஊடாடும் நூலைப்போல அவரது எழுத்தின் ஆதார இழையாக இருக்கும் நையாண்டி மிகவும் பிடிக்கும். வாசகனாக அவர் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வதும், புனைவு என்று புன்சிரித்துப் போவதும் என்னிஷ்டம்.

Image and video hosting by TinyPic
இப்பதிவின் நோக்கம் நான் நம்புவதை ஆதரித்து எழுதவோ மறுப்பதை விமர்சிப்பதோ அல்ல. முதலில் சோ -வின் நெடுநாள் வாசகன் என்ற அடையாளத்தைக் குறிப்பிடவேண்டுமா என்பதையே நீண்டநேரம் யோசித்தேன். எழுத்தாளருடைய சாயல் அவரது தீவிர வாசகர்களிடையே லேசாகவாவது பிரதிபலிக்கும். அந்த வகையில் சோ -வின் சாயலை என் தலை இன்னும் லேசாகக்கூடப் பிரதிபலிக்கவில்லை என்றாலும் அவரது வாசகன் என்ற அடையாளத்தைக் குறிப்பிடுவதில் தவறில்லை என்று தோன்றிய எண்ணத்தை இப்போது வெளிப்படுத்திக்கொண்டிருப்பதில் காணலாம்.

"ஆஹா இவனும் சோ -வோட ஆளா?" என்று தலைதெறிக்க ஓடிவந்து என்னிடம் குடுமியையும் முப்புரி நூலையும் தேடாமல், சொல்லப்பட்ட கருத்துகளில் மட்டும் கவனம் செலுத்தி அதற்குத் தொடர்பான விஷயங்களை மட்டும் பேசுமாறு வலைப்பதிவு கும்மியடிப்பாளர்கள் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

துக்ளக் 37-ஆம் ஆண்டுவிழாவின் நிறைவுரை ஆற்றிய சோ குறிப்பிட்ட கருத்துகளை இங்கே வெட்டி ஒட்டியிருக்கிறேன் (நன்றி. துக்ளக்.காம்). அவரது பேச்சைக் கேட்டதில்லை. ஆனால் இதைப் படிக்கும்போது அவர் நல்லதொரு பேச்சாளராக இருக்கவேண்டும். ஏன் இப்படி துக்ளக்கோடு தனது எல்லைகளைக் குறுக்கிக்கொண்டுவிட்டார் என்று அடிக்கடி தோன்றும். தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு செய்த நற்பணிகளுக்கு முன்பு துக்ளக்கில் கணக்கு காட்டியதைப் படித்திருக்கிறேன். நிறைய கருத்துகளைச் சொல்வதோடு நிற்காமல் மக்கள் பிரதிநிதியாக வந்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இன்னும் நல்லது செய்யலாமே என்றும் தோன்றும். ஆனால் இத்தனை வருட அரசியல் சதுரங்க விளையாட்டுப் போதையிலிருந்து - ஒரு செளகர்யமான அந்த நிலையிலிருந்து - அவரால் மீண்டு வெளியே வரமுடியவில்லை என்றும் தோன்றுகிறது. "அரசியல் சாணக்கியனாகவோ" அல்லது "அரசியல் விதூஷகனாகவோ" காலந்தள்ள முடிவுசெய்துவிட்டதாகக் தோன்றுகிறது. அவருக்குத் துக்ளக் என்ற பிம்பமே போதுமானதாக இருக்கிறது போலத் தோன்றுகிறது.

Image and video hosting by TinyPic
***

(ஆசிரியர் தனது நிறைவுரையை தொடங்கும் சமயத்தில், வாசகர் ஒருவர் ஏதோ குரல் எழுப்பினார். அதே சமயம் "துக்ளக்' நிருபர் ரமேஷ், ஆசிரியரிடம் ரங்காச்சாரியை அறிமுகப்படுத்துமாறு கூறினார்.)

சோ :

அங்கிருந்து (அரங்கத்திலிருந்து) நீங்கள் ஏதோ பேசுகிறீர்கள். இங்கே இவர் (ரமேஷ்) அப்போதிலிருந்தே என்னிடம் எதையோ சொல்லிக் கொண்டே இருக்கிறார். நான் என்ன செய்வேன்? பெரியார் ஒரு காதிலேயும், அண்ணா ஒரு காதிலேயும் பேசுகிற மாதிரி இருக்கிறது எனக்கு. எனக்கு இதுவே தாங்க முடியவில்லை. அவர் (கலைஞர்) எப்படித்தான் சமாளிக்கிறாரோ? (அரங்கத்தில் இருப்பவரைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதும் புரியவில்லை; இவர் என்ன சொல்கிறார் என்பதும் புரியவில்லை. இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பேசுகிறீர்கள். அவரிடம் (கலைஞரிடம்) பெரியார் ஒரு பக்கம் "பொங்கி எழு' என்று கூறுவாராம். இன்னொரு பக்கம் அண்ணா, "பொறுமையாக இரு' என்பாராம். இதில் எது காதில் விழும்? "பொறுமையாக பொங்கி எழு' என்று காதில் விழுமா? "பொங்கி பொறுமையாக இரு' என்று விழுமா? அதுதான் தெரியவில்லை. அதனால்தான் ராமதாஸ் மீது பொங்குகிற மாதிரி வருகிறார். பிறகு பொறுமையாக இருந்து விடுகிறார்.

என்னென்னவோ சொல்கிறார். விநோதமாக இருக்கிறது. இவர் (ரமேஷ்) என்னை விடப் போவதில்லை. பெரியார் காது இது. இதில் வந்து அவர் "ரங்காச்சாரியை அறிமுகப்படுத்த விட்டு விட்டேன்' என்கிறார். அதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார். "ரங்காச்சாரி... ரங்காச்சாரி...' அவர் என் நண்பர். அவர் வரத்தான் வருவார். வரட்டுமே... வந்து விட்டுப் போனால் என்ன இப்போது? என்ன இருந்தாலும் அவர் வருவார். என்னவோ இரண்டு எம்.பி.க்கள் என் பக்கம் வந்துவிட்ட மாதிரி அல்லவா அமர்க்களம் செய்கிறார், இந்த ரமேஷ்! என்னவோ இவர்தான் ஆற்காடு வீராசாமி மாதிரியும், நான்தான் கலைஞர் மாதிரியும் "வந்துட்டாங்க... வந்துட்டாங்க..' என்றால்..?

தி.மு.க.விற்கு ஒரு சிலர் போகிறார்கள் என்றால் அதில் அர்த்தம் இருக்கிறது. அங்கெல்லாம் எம்.பி.க்கள் போவார்கள். என்கிட்டேயா வருவார்கள்? ஆனால் அங்கே போக சில நிபந்தனைகள் உண்டு. "மானத்தை விட்டு விட வேண்டும். வைகோ மீது இருக்கிற அபிமானத்தை விட்டுவிட வேண்டும். தனியாக வர வேண்டும். அப்போது வந்து உள்ளே சேர்ந்து விட்டால், அதன் பிறகு ஜாலிதான். எல்லாம் கிடைக்கும். பதவிகள் கிடைக்கும். மந்திரியாகலாம். ஜனாதிபதியாகலாம். உள்ளே வந்து சேர்ந்தால் போதும். என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.

"மானாபிமானம் விட்டு, தானாகி நின்றவர்க்கு, சேனாதிபதி போல ஞானாதிபதி உண்டு! பாருமே! கட்டிக் காருமே! உள்ளே சேருமே! அது போறுமே! செம்மங்குடி சீனிவாச ஐயர் சாகும்போது, "சோ நீதான் கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று என்னிடம் சொல்லி விட்டுப் போனார். என்ன... ஜோக் அடிச்ச மாதிரி சிரிக்கிறீர்கள்? அவர், கலைஞர் யார் யார் செத்துப் போனார்களோ, எல்லார் லிஸ்ட்டையும் போட்டு – அவர் அப்படிச் சொன்னார், இவர் இப்படிச் சொன்னார் என்கிறார். அதையெல்லாம் சீரியஸாகக் கேட்டுக் கொள்கிறீர்கள். நான் சொன்னால் சிரிக்கிறீர்கள்.

காய்தே மில்லத் சாகும் தறுவாயில், கலைஞரிடம் "மைனாரிட்டி மக்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். காமராஜ் சாகும் தறுவாயில் "தேசம் போச்சே... தேசம் போச்சே... நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என்றார். ராஜீவ் காந்தி இறப்பதற்கு முன்னால், "நீங்கள்தான் இலங்கை தமிழர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும்' என்றார்... செத்துப் போறதுக்கு முன்பு எல்லோரும் எப்படியாவது இவர் தலை மீது பாரத்தை வைத்து விட்டுத்தான் போவார்கள். உயிரோடு இருக்கிறவர் சொன்னார் என்று எதையும் சொல்வது கிடையாது. அது வைகோதான். பைத்தியம் மாதிரி, "மன்மோகன் சிங் சொன்னார்' என்று சொல்ல வேண்டியது. செத்துப் போனவர்கள் என்று சொன்னால், சொன்னது சொன்னதுதான். செம்மங்குடி சீனிவாச ஐயர் என்னிடம் "கர்நாடக சங்கீதத்தைக் காப்பாற்ற' சொன்ன மாதிரிதான் அதுவும். உயிரோடு இருப்பரைச் சொன்னால், பிரச்சனை வருகிறது.

யாராவது செத்துப் போனால் ரங்காச்சாரி விட மாட்டார். இவரோடு துக்கம் விசாரிக்க ஒரு வீட்டுக்குப் போகிற மாதிரி மடத்தனம் வேறு எதுவும் கிடையாது. அங்கே போனால் "கடைசியா என்ன சொன்னான்?' என்று கேட்பார். இதெல்லாம் வேணுமா? கடைசியா என்னத்தையோ சொல்லி விட்டுப் போகிறான். இவர் என்ன கலைஞரா? கடைசியா பொறுப்பை சுமந்து கொண்டு போகப் போகிறாரா?. ஒரு நண்பர் இறந்து விட்டார். அவர் வீட்டுக்குப் போய் இருந்தோம். "கடைசியா என்ன சொன்னான்?' என்று கேட்டார் ரங்காச்சாரி. அவருடைய மனைவி திரும்பிப் பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டார். இவரோ (ரங்காச்சாரி) அதைத் தெரிந்து கொள்ளாமல் விட மாட்டார். "கடைசியா என்ன சொன்னான்?'.

எனக்கா என்ன செய்யலாம், எழுந்து ஓடலாமா – என்று யோசனை! அங்கே இருந்து எப்படி ஓடறது? ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிற இடம். இவர் இப்படிச் செய்கிறாரே? இவர் இந்த மாதிரி இவ்வளவு பெரிய கலைஞரா இருக்கிறாரே? மீண்டும் "கடைசியா என்ன சொன்னார்...?'.... இப்படி ஐந்து, ஆறு முறை கேட்டு விட்டார். ஆறாவது முறையோ, ஏழாவது முறையோ, கேட்கும்பொழுது அந்த அம்மா திரும்பிப் பார்த்தார். "ஒரு பாட்டில் பிராந்தி கேட்டார்' என்றார். தேவைதானா இது? கடைசியில் ஒருநாள் கலைஞருக்கு இந்த மாதிரி ஆகிவிடப் போகிறது! யாராவது ஒருவர் சாவதற்கு முன்னால், "கலைஞரே! நீங்கள் அரசியலை விட்டு விலகி விடுங்கள்' என்று சொல்லப் போகிறார்.

இப்பொழுது எந்தத் தேர்தலும் நடக்க இருக்கவில்லை. தேர்தல் காலத்தில்தான் நமக்கு அரசியலில் மதிப்பீடு செய்கிற வழக்கம் வரும். தேர்தல் இல்லாத நேரங்களில், நாம் அப்படி அப்படியே அதை ஏற்றுக் கொண்டு சென்று கொண்டிருப்போம். அவ்வப்பொழுது ஒரு சின்ன ரியாக்ஷன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு சின்ன ரியாக்ஷன். அதோடு போய்விடுவோம். தேர்தல் வந்தால்தான் இந்த கட்சி நல்லதா, அந்தக் கட்சி நல்லதா என்ற பார்வையெல்லாம் நமக்கு வருகிறது.


இல்லை என்றால் என்ன நடக்கிறது? விலைவாசி உயர்ந்தவுடன், "இந்த அரசாங்கம் போக வேண்டும்' என்போம். அடுத்த நாள் ஒரு பேப்பரில், தேசிய வருமானம் 0.2 சதவிகிதம் ஏறியிருக்கிறது என்று படிப்போம். "பரவாயில்லை. அரசாங்கத்தை நன்றாகத்தான் நடத்துகிறார்கள்' என்று நினைப்போம். தேசிய வருமானம் என்ன என்பதும் தெரியாது. அது எவ்வளவு இருந்தது என்பதும் தெரியாது. இந்த 0.2 சதவிகிதம் என்ன என்பதும் புரியாது. ஆனால் அரசாங்கம் நன்றாகத்தான் செயல்படுகிறது போல் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வோம். அத்துடன் விட்டு விடுவோம். இதெல்லாம் கிரிக்கெட்டை ரசிக்கிற மாதிரி ஆகி விட்டது. கிரிக்கெட்டில் என்ன செய்கிறோம்? ஒருவர் செஞ்சுரி அடித்து விட்டால், அவரை மாதிரி உண்டா என்கிறோம். உலகத்திலேயே அவரை மாதிரி ஆட்டக்காரர் கிடையாது என்போம்.

"அவர் எப்படி விளையாடினார்? இதற்கு முன்னால் அவருக்கு எவ்வளவு "சான்ஸ்' கிட்டியது? எத்தனை பௌன்ஸர்களை எதிர் கொண்டார்? ஸ்லிப்பில் எத்தனை கேட்ச் விட்டார்? இவையெல்லாம் அனாவசியம். செஞ்சுரி அடித்தார். சரி. அவரே அடுத்த இரண்டு ஆட்டங்களில் சரியாக ஸ்கோர் செய்யவில்லை என்றால், "சே.... இவரை சேர்த்ததே தவறு. இவரை தூக்கிவிட வேண்டும்' என்போம்.

இந்த மாதிரி அரசியலை அணுகக் கூடாது. சில பந்து வீச்சாளர்களுக்கு "ஃபுல் டாஸி'ல் கூட விக்கெட் விழுந்து விடுகிறது. பவுண்டிரியில் பந்தைப் பிடித்து அவுட் ஆகிறார்கள். அதில் நான்கு விக்கெட் வந்து விடுகிறது. உடனே இவரைப் போல் பௌலர் உண்டா என்கிறோம். இந்த மாதிரி அரசியலை அணுகக் கூடாது.

அவ்வப்பொழுது அரசியலை கணித்துக் கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் நம் கண்காணிப்பை நாம் தளர விடக் கூடாது. தொடர்ந்து கண்காணிப்பதுதான் ஜனநாயகத்தின் விலை. அந்த மாதிரி இந்த மத்திய அரசைப் பற்றி பார்க்கும்பொழுது, பொருளாதார நிர்வாகம் பெரும்பாலும் சரியாகத்தான் இருக்கிறது. எந்த கூட்டணி அரசாங்கமாக இருந்தாலும் பின்னால் இழுப்பவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். இந்த அரசாங்கத்திலும் அப்படி இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மேற்கு வங்காளத்தைத் தவிர வேறு எல்லா இடங்களிலும் அவர்களுக்கு கம்யூனிஸம் வேண்டும்.

மேற்கு வங்காளத்தில் மட்டும் கேபிடலிஸம் இருக்க வேண்டும். "அங்கே நிலத்தை அரசு கையகப்படுத்தலாம். நிலத்தை டாடாவுக்குக் கொடுக்கலாம். இன்னும் 20,000 ஏக்கர் எடுத்து சிறப்புப் பொருளாõர மண்டலத்திற்குக் கொடுக்கலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். வேறு இடத்தில் அதைச் செய்தால், அது பாட்டாளி மக்களுக்குத் துரோகம். அமெரிக்கக் கைக்கூலி, அது, இது எல்லாம் வந்து விடும். அவர்கள் ஒரு பக்கம். இன்னும் சில பேர் அங்கே உள்ளே இருந்து கொண்டு தகராறு.

இந்த மாதிரியெல்லாம் இருப்பதால், பொருளாதார விஷயங்களில் கொஞ்சம் கட்டுப்பாடுடன்தான் இந்த அரசாங்கம் செயல்பட வேண்டியிருக்கிறது. அப்படி
இருந்தும் கூட மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை திறம்படத்தான் நிர்வகித்து வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.

இப்பொழுது கூட்டணி அரசை சமாளிக்க வேண்டிய நிலை வந்து விட்டது. கூட்டணி அரசை எப்படி தளுக்காக சமாளிப்பது என்ற நிலை. தளுக்காக சமாளிப்பது என்றால் என்ன? கேட்கிறவர்களுக்கெல்லாம் அடி பணிந்து கொண்டிருக்க வேண்டும். கலைஞர் முதலில் என்ன செய்தார்? இன்ன இன்ன அமைச்சரக பதவிகள் கொடுத்தால் வருகிறோம். இல்லை என்றால் வர மாட்டோம் என்று சொன்னார். அதை முல்லைப் பெரியாறுக்கு அவர் சொல்லவில்லை. அமைச்சரக பதவிகளுக்குத்தான் அதைச் சொன்னார். அதற்கு மத்திய அரசு அடிபணிய வேண்டி வந்தது. இப்படி சொல்வதை எல்லாம் கேட்டு, தளுக்காக சமாளித்துக் கொண்டு, போக வேண்டி இருக்கிறது. அதையும் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார். மன்மோகன் சிங்கை பிரதமர் என்று சொன்னால், யாருக்காவது கோபம் வருமா என்று தெரியவில்லை. ஆனால் நான் சோனியா காந்தியின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவருடைய அனுமதியுடன் மன்மோகன் சிங்கை "பிரதமர்' என்று சொல்கிறேன். ஆனால் ஒரு பலவீனமான அரசாங்கம் இது. இந்த அரசு செய்திருக்கிற தவறுகள் ஏராளம்.

ஜனநாயக ஆட்சி முறை என்று பார்த்தால், பீஹாரிலும், ஜார்க்கண்டிலும் இவர்கள் செய்த அட்டூழியம் கொஞ்சம் நஞ்சமல்ல. போன ஆண்டு விழாவிலேயே அதைப் பற்றி பேசி இருக்கிறேன். யாருக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்கள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக என்னென்னவோ செய்தார்கள். நீதிமன்றங்கள் குறுக்கிட வேண்டியதாகி விட்டது. இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

சிபுசோரன் ஒரு கொலைகாரப் பேர்வழி என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. அவர் இத்தனை நாள் மத்திய அமைச்சரவையில் இருந்திருக்கிறார். அப்பொழுதே அவர் மீது கொலை வழக்கு இருந்தது. அவர் தலைமறைவாக போய்விட்டார். மத்திய அமைச்சர் ஒருவர் தலைமறைவாகச் சென்றது இதுதான் முதல் முறை. நியாயமாக எல்லா
அரசியல்வாதிகளுமே தலைமறைவாகலாம்; தவறில்லை. ஆனால் இவர் தலைமறைவானார். அப்பொழுதும் மத்திய அமைச்சராகவே தொடர்ந்தார். என்னவென்றால், இது கூட்டணி தர்மம். அவரைத் தவிர இன்னும் சில பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்றைக்கு வழக்கு நடந்து முடியுமோ தெரியாது. என்றைக்கு தண்டனை கிடைக்குமோ தெரியாது. இந்த மாதிரி குற்ற சக்திகளை ஒரு பக்கம் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

க்வோட்ரோச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். பிரிட்டிஷ் அரசும் ஒப்புக் கொண்டு, முடக்கி வைக்கப்பட்டிருந்த அவருடைய வங்கிக் கணக்கை நமது அரசாங்கம் விடுவித்தது. அந்தக் கணக்கில் இருந்த பணத்தை அவர் எடுத்துக் கொண்டு விட்டார். அவர் சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு வேண்டியவர் என்பதைத் தவிர, இதற்கு வேறு எந்தக் காரணமும் இருந்திருக்க முடியாது. இந்த அளவுக்கு குற்றவாளிகளுக்கும், இந்த நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகத்திற்கும், இந்த அரசு ஊக்கமளித்தது மிகவும் வேதனையான விஷயம்.

ஆனால் இந்த க்வாட்ரோச்சி விவகாரம் வந்த போது என்ன சொன்னார்கள் – ஸி.பி.ஐ. அந்த மாதிரி செய்து விட்டது – எங்களுக்குத் தெரியாது என்றது அரசாங்கம். அதாவது ஸி.பி.ஐ. அருகிலேயே இவர்கள் போகாதது மாதிரியும், ஸி.பி.ஐ. என்ன செய்தாலும் இவர்களுக்கு சம்பந்தம் இல்லாதது மாதிரியும் பேசினார்கள். அத்வானிக்கு எதிரான வழக்கில் சாரமில்லை என்பதால் ஸி.பி.ஐ. அப்பீல் செய்யாத போது, "ஏன் அப்பீல் செய்யவில்லை?' என்று அரசாங்கம் தாக்கீது பிறப்பித்தது. அப்பொழுது ஸி.பி.ஐ.யை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம். அதாவது நேர்மை இல்லை.

மாயாவதியை எடுத்துக் கொள்வோம். நடத்து விசாரணையை என்று நீதிமன்றம் சொல்ல வேண்டியிருக்கிறது. வழக்கைப் போடு என்று கோர்ட் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால் உத்திரப் பிரதேசத்தில் கூட்டணி வருமோ, என்னவோ? நாளை அரசுக்கு ஆதரவு தேவைப்படலாம். ஆகையால் மாயாவதி மீது வழக்கு நடக்கக் கூடாது. இவ்வளவு நேர்மையற்ற முறையில் ஒரு அரசாங்கம் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர பார்த்தோமென்றால், குஜராத்தில் நரேந்திர மோடிதான் மிகப் பெரிய கொலைகாரர் என்று எப்படியாவது நிரூபிக்க வேண்டும் – என்று இந்த அரசுக்கு இருக்கிற ஆதங்கம் சொல்லி முடியாது. பெஸ்ட் பேக்கரி வழக்கு ஒன்றும் இல்லாமல் ஆகி விட்டது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் – "ரயிலின் உள்ளே இருந்தவர்களே, எங்கிருந்தோ பெட்ரோலைக் கொண்டு வந்து தங்கள் மீது ஊற்றிக் கொண்டு எல்லோரும் செத்தார்கள்' என்று நிரூபிப்பதற்காக ஒரு கமிஷன்.

"அது செல்லுபடியாகாது. அந்த கமிஷனை நியமித்ததே பைத்தியக்காரத்தனம்' என்று நீதிமன்றமே கூறி விட்டது. எப்படியாவது நரேந்திர மோடியின் பெயரைக் கெடுக்க முடியாதா என்று அந்த அலை அலைகிறார்கள். எதற்காக? நரேந்திர மோடிக்கு குஜராத்தில் அவ்வளவு செல்வாக்கு ஓங்கி இருக்கிறது.

வெளிநாட்டு இந்தியர்கள் அங்கே முதலீடு செய்வதற்காக எப்படி பணத்தைக் கொட்டுகிறார்கள் என்பது, இன்றைய பத்திரிகையில் கூட வந்திருக்கிறது. குஜராத்தில் பணத்தைப் போடக் கூடாது என்பதற்காக என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். காங்கிரஸும், மத்திய அரசும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் முனைந்து எவ்வளவோ செய்தும் கூட, அவர் அதையும் தாண்டி மேலே நிற்கிறார். அவருடைய நிர்வாகத் திறன் அப்படிப்பட்டதாக இருந்திருக்கிறது. ஒரு ஊழல் குற்றச்சாட்டு அவர் மீது கிடையாது.

அந்த அரசை எப்படியாவது தொலைத்துக் கட்ட வேண்டும். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் உதாரணமாக ஒரு மாநில அரசு நடக்கிறதே – எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்போல இருக்கிறதே – இதை ஊக்குவிப்போம் என்று ஒரு மத்திய அரசு நினைத்தால், அது அரசு. அந்த மாதிரி இல்லாமல், இப்படி நன்றாக வளர்ந்து விடும் போல் இருக்கிறதே என்று நினைத்து, அதை கெடுக்க வேண்டும் என்று நினைத்தால், நடப்பது அரசே அல்ல. அது ஒரு துரோகம்.

இங்கே முல்லைப் பெரியாறு விஷயம். மத்திய அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்கிறதா? "பேசுங்கள்... பேசுங்கள்...' என்று மத்திய அரசு சொல்கிறது. வேறு எதுவுமே சொல்லவில்லை. மத்திய அரசு தலையிடுவதற்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தலையிட மாட்டேன் என்கிறது. ஏனென்றால் கம்யூனிஸ்ட் ஆதரவு போய்விடும். அந்த தைரியமும் கிடையாது. அதுவும் கூட்டணி தர்மத்தில் வருகிறது. சரி, கலைஞராவது "நீங்கள் முல்லை பெரியாறில் உதவி செய்யவில்லை என்றால், நான் ஆதரவை வாபஸ் வாங்குவேன்; நான் மந்திரி சபையில் இருக்க மாட்டேன்' என்று சொன்னாரா? கிடையாது. அதை நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விஷயத்தில் சொன்னார். இதற்கு அவர் சொல்லவில்லை.

ஆனால் அதைப் பற்றி சொன்னால் அவருக்குக் கோபம் வரும். ஏனென்றால் பெட்ரோல் விலை உயர்ந்தபொழுது ஒரு நிருபர் கேட்டார். "நீங்கள் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் விஷயத்தில் ஆதரவை வாபஸ் வாங்கப் போகிறேன் என்ற அளவுக்குப் பேசினீர்களே! இதற்கு ஏன் சொல்லவில்லை?' என்றார். "வர்றியா? நீயும் நானும் தீக்குளிக்கலாம், வர்றியா?' என்று கேட்டார். அதனால் நான் ஏதாவது முல்லைப் பெரியாறு என்று பேசப் போக, "வர்றியா? நீயும் நானும் அந்த டேம்லேர்ந்து கீழே குதிக்கலாம். வர்றியா?' என்று கேட்டால் என்ன ஆவது? அவருக்கு அந்த அளவிற்குக் கோபம் வந்தாலும் வரும்.

மேலும் மாநிலங்களை எப்படி அழுத்துகிறார்கள் என்று பாருங்கள். தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்ளுங்கள். ஜெயலலிதா ஆட்சி இருந்தவரையில், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தில், உதவியே கிடையாது. தடங்கல்தான். கடைசியாக சுற்றுப்புறச் சூழல் என்று கூறிவிட்டார்கள். என்ன அது என்று பார்த்தால் மீனுக்கெல்லாம் ஆபத்து வந்துவிடும் என்று சொன்னார்கள். கடல்நீரை வெளியில் எடுத்து, அதில் உள்ள உப்புத் தன்மையை அகற்ற வேண்டுமாம். அதில் எப்படி மீனெல்லாம் செத்துப் போகும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இவர்கள் கணக்குப்படி மீனெல்லாம் செத்துப் போய் விடும். ஒருவேளை கடலே வற்றிப் போய் விடும் போல் இருக்கிறது – என்று அதை நிறுத்தினார்கள். பைகாரா மின்நிலையம். அதை விரிவுபடுத்த வேண்டும் என்றால் சுற்றுப்புறச் சூழல். அதற்கு டி.ஆர். பாலு போன்றவர்களை மத்தியில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் எதுவாக இருந்தாலும் நிறுத்தி விடுகிறார்கள்.

ஆனால், அதே மாதிரி சேது சமுத்திரத்தில் ஆயிரம் ஆட்சேபனைகள் வந்து இருக்கின்றன. "அதற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு இருக்கிறது. மீன்கள் பெரிய அளவில் உயிரிழக்க நேரிடும். மீன்களே அந்தப் பகுதியில் இல்லாமல் போய் விடும். மேலும் பொருளாதார ரீதியில் பெரிய பயன் எதுவும் இல்லை. பலரும் இலங்கையைச் சுற்றிக் கொண்டு வரும் வழியைத்தான் விரும்புவார்களே தவிர, இதை விரும்ப மாட்டார்கள்' என்று நிறைய நிபுணர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து விட்டார்கள். ஆனாலும் அது தொடர்ந்து நடைபெறும்.

ஏனென்றால் அதில் நிறைய கான்ட்ராக்ட்கள் எல்லாம் வரும். பெரிய திட்டம். அங்கே ராமர் கட்டிய பாலம் சமுத்திரத்திற்கு அடியில் இருக்கிறது என்று – பா.ஜ.க.வோ, ஆர்.எஸ்.எஸ்.ஸோ, ஹிந்து முன்னணியோ அல்ல – நாஸாவே சொல்லி விட்டது. அதுவும் போய்விடும் போல் இருக்கிறது. ஆனால் இது இவர்கள் திட்டம் என்பதால், இவர்கள் ஆட்சி நடக்கும்போது நிறைய வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அதுவும் சரியாகப் போய்விட்டது. அங்கே சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு எதுவும் கிடையாது.

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தை எடுத்துக் கொண்டால், அன்புமணி அதில் புகுந்து விளையாடி விட்டார். அந்த டாக்டர் வேணுகோபாலை உண்டு இல்லையென்று பார்த்துக் கொண்டிருந்தார். மத்திய அரசு அதில் எதுவும் செய்யவில்லை. பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. நடப்பது அனைத்தும் அநீதி என்று தெரியும். ஒரு டாக்டரின் பெயரைக் கெடுத்து, இழிவுபடுத்தி, ஹிம்ஸை செய்தார்கள். உலகிலேயே புகழ்பெற்ற சர்ஜன்களில் ஒருவர் என்று நான் கேள்விப்பட்டேன். அப்படி இருந்தவரை எவ்வளவு தூரம் மட்டம் தட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் மட்டம் தட்டி, அவரை ஹிம்ஸை செய்தார்கள். அதற்கும் இந்த மத்திய அரசு பேசாமல் இருந்தது. ஏனென்றால் அது கூட்டணி தர்மம்.

***

நன்றி: துக்ளக்.காம்