Thursday, December 11, 2008

கவித் தேவனை வணங்குவோம்



குழந்தைகளுக்கு இரவு தூங்கப் போகும்முன் பாட வேண்டும் அல்லது கதை சொல்லவேண்டும். பொதுவாக தாலாட்டுப் பாடல்கள் எதையாவது டேப் ரிகார்டரில் குறைந்த ஒலியில் ஓடவிட்டுவிடுவேன் - இரண்டாவது பாடல் முடியுமுன் சின்னவள் தூங்கிவிடுவாள். நேற்று ரிகார்டரை இயக்கியதும் “பாட்டு வேணாம். கதை சொல்லு” என்று அடம் பிடிக்க, யதேச்சையாக நினைவு வந்து குழந்தைகளுக்கு இந்தக் கதையைச் சொன்னேன்.

“ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம் - பேரு காந்திமதிநாதன்”

“ம்”

”அவனுக்கு யாராச்சும் அவனைப் பத்தி பாராட்டிக்கிட்டே இருக்கணுமாம். ஒவ்வொத்தரா வந்து ராஜாவைப் பத்திப் பாடி கிஃப்ட் வாங்கிக்கிட்டுப் போவானாம்”

“ம்“

“யாரோ பாரதியாராமே, நல்லா பாட்டெழுதுவாராமே, அவரைக் கூப்பிடுய்யா”ன்னு சொல்லி பாரதி அங்க்கிளை வரச் சொன்னானாம்”

இப்போது லேசாக விழிகள் விரிய, குறுநகை தவழ “ம்”

“முண்டாசு கட்டி, கோட்டு போட்டுக்கிட்டு, கம்போட உள்ள வந்தாராம் பாரதி அங்க்கிள்”

“ம்ம்”

“மீசையை முறுக்கிவிட்டுட்டு யாரு என்னை வரச் சொன்னது என்ன வேணும்?ன்னு கேட்டாராம்”

”ஹிஹி ம்”

“ஒடனே ராஜா என்னைப் பத்தி ஒரு பாட்டுப் பாடுன்னு சொன்னாராம்”

”ம்”

”ராஜா சொன்னா கேட்டாகணுமேன்னு பாரதி ஓகே சொன்னாராம். அவரு பாட்டு சொல்றதுக்குள்ள ராஜா வந்து - பாட்டோட கடைசில பாரதி சின்னப் பயல்னு முடிக்கணும்னு கண்டிஷன் போட்டாராம்”

“பயல்னா என்ன?” என்று அவள் கேட்க பெரியவள் குறுக்கிட்டு “குட்டிப் பாப்பா” என்று விளக்கினாள்.

“அப்புறம்?”

“பாரதி அங்க்கிள் பார்த்தாராம். ஓஹோ இந்த ஆளு நம்மை இன்சல்ட் பண்ணப் பாக்கிறாருன்னு தெரிஞ்சுக்கிட்டு பாட்டுப் பாடினாராம் - காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப் பாரதி சின்னப்பயல்-னு பாடி முடிச்சாராம்”

அவர்கள் ஒன்றும் புரியாமல் விழிக்க நான் “பார்-னா என்ன?”

“பாக்கறது”

“அதின்னா அதிகம் - அதாவது ஜாஸ்தி, பெரியன்னு அர்த்தம்”

“சரி”

“இப்ப பாரதி சின்னப் பயல்ன்றத பிரிச்சு படிச்சா பார்+அதி சின்னப்பயல் - இங்க பாருங்கய்யா இந்த ராஜா ரொம்பச் சின்னப் பயல்-னு பாடிட்டார் - ராஜா தப்ப உணர்ந்து அபாலஜைஸ் பண்ணி கிஃப்ட் கொடுத்து மரியாதையா அனுப்பிச்சார்”

ரெண்டும் தூக்கம் கலைந்து கட்டிலில் எழுந்து உட்கார்ந்து கொண்டன! அமுக்கிப் படுக்க வைத்து பாம்பே ஜெயஸ்ரீ பாடிய ஆத்மா ஒலிக்கோப்பை ஒலிக்க விட்டு அவர்களை கண்களை மூடிக்கொள்ளச் சொல்லிவிட்டு நானும் சின்னவள் கட்டிலில் அமர்ந்து அவளைத் தட்டிக்கொண்டே கண்களை மூட

மழைக்காலம்.
மாலை நேரம்.
குளிர்ந்த காற்று வருகிறது.
மலைக்காற்று நல்லது.
கடற்காற்று மருந்து.
வான் காற்று நன்று.
காற்று தேவனை வணங்குவோம்
காற்றே வா, காற்றே வா
மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு
மனதை மயக்குகின்ற இனிய வாசனையுடன் வா
காற்றே வா காற்றே வா

என்று ஆத்மாவை ஊடுருவிச் செல்லும் குரலில் பாரதியின் வரிகள் உடலில் ரத்தம் ஓடுவதைப் போல ஒவ்வொரு வார்த்தையாக உள்ளிறங்க உடல் சிலிர்த்தது - வெளியில் நிஜமாகவே மழையும் காற்றும் வீசியடித்துக்கொண்டிருக்க, அந்த அனுபவத்தை இதற்கு மேல் விவரிக்க இயலவில்லை.

காலையில் எழுந்ததும் மறுபடியும் அதே நினைவு - அட. இன்று பாரதியார் பிறந்த நாள்!

பிறந்த நாளில் அந்தக் கவித் தேவனுக்கு சிரந்தாழ்ந்த வணக்கம்!

***

Tuesday, December 02, 2008

ஊடகத் தீவிரவாதிகள்



தீவிரவாதத் தாக்குதலின் போது ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் பொறுப்பற்ற தன்மையின் உச்சம். செய்தியை முந்தித் தருகிறோம் என்ற பெயரில் அநாகரிகமாக நடந்துகொண்ட அவர்களது செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்தவித தணிக்கையுமில்லாமல் எல்லாவற்றையும் அவர்கள் ஒளிபரப்பிக்கொண்டிருந்ததைப் பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த அரசு இயந்திரங்களின் கையாலாகாதத் தனத்தை நினைத்தால் அவமானமாக இருக்கிறது.

உள்ளே எத்தனை தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்கள் என்று தெரியாது. எத்தனை பேர் பிணைக் கைதிகளாக மாட்டியிருக்கிறார்கள் என்று தெரியாது. கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்றும் தெரியாது. வந்தவர்களின் ஒரே இலக்கு முடிந்தவரை கொல்வதே. இதற்கு முன்பாக இம்மாதிரி நேரடித்தாக்குதல் எதுவும் நடைபெற்றதில்லையாதலால் இத்தாக்குதலின் தன்மையையும் வீரியத்தையும் உணர்ந்து கொண்டு அரசு இயந்திரங்கள் நடவடிக்கைகளைத் துவங்கவே பலமணி நேரமாகிவிட்டது. அதிலும் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த நிலை நம் கமாண்டோக்களுக்கு. அவர்களுக்கு ஹோட்டலின் வரைபடம் தரப்படவில்லை. காவல்துறையிடம் போதுமான அளவுக்கு ஆயுதங்கள் இல்லை. நிராயுதபாணியாக, அல்லது கையில் ஒரு லத்திக்கம்புடன்தான் 90 சதவீத காவலர்கள் நடமாடுகிறார்கள்.

இந்த நிலையில் காவலர்களின், காமாண்டோக்களின் ஒவ்வொரு அசைவையும் அணுவணுவாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள் ஊடகக்காரர்கள் - ஹெலிகாப்டரிலிருந்து கட்டடத்தின் மேலே கமாண்டோக்கள் இறக்கிவிடப்படுவதையும்கூட. சாட்டிலைட் தொலைபேசிகள், ஜிபிஎஸ் கருவிகள், நவீன ஆயுதங்கள், வெடிபொருட்களுடன், விலைமதிப்பற்ற நூற்றுக்கணக்கான மனித உயிர்களையும் கையில் வைத்துக்கொண்டு உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு ஊடகங்களின் தயவில் வெளிப்புற நடவடிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் செய்தியாகப் போய்க்கொண்டேயிருக்க, அவர்கள் - உட்புற அமைப்பை நன்கு அறிந்து வைத்துக்கொண்டு - கமாண்டோக்களுக்கு தண்ணீர் காட்டி மேலும் கொலை வெறியாட்டத்தைத் தொடர்ந்து நடத்தியிருக்கிறார்கள். இதை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்று எவன் அழுதான்? கொஞ்சம் கூட சிந்தித்து செயல்படவேண்டாமா? இப்படி பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டு தேசிய பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிட்டார்களே? உள்ளே அகப்பட்டிருக்கும் மனித உயிர்களைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களைக்காக்க வெளியே இருந்து வந்து திக்கு தெரியாமல் திண்டாடிப் போராடும் கமாண்டோக்கள், காவலர்கள் ஆகியோரது உயிரைப்பற்றியும் கவலைப்படாமல் எத்தனை பிணங்கள் விழுந்தன, எவ்வளவு ரத்தம் சிந்தியது என்பதைப்பற்றி மட்டுமே யோசித்து 20-20 கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி பிணங்களின், காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகளை மட்டும் தங்களது ஊடகங்களால் துரத்திய இவர்கள் பிணந்தின்னிக் கழுகுகளாகத்தான் இருக்க முடியும்.

இங்கு ஆஹா எஃப்எம்மில் கோல்மால் என்று ஒரு நிகழ்ச்சி. “மும்பை மாதிரி தீவிரவாதி உங்களைத் தாக்க வந்தால் எப்படிச் சமாளிப்பீர்கள்?” என்று அறிவிப்பாளர் கேள்விகேட்டு அதற்கு நேயர்கள் “நகைச்சுவையாக” பதிலளித்து பின்னணியில் செயற்கைக்குரல்கள் சிரிப்பதையும் ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். எவ்வளவு கேவலமான செயல்?

ஒரு படையை வழிநடத்திச் செல்லும் தலைவர் இறக்க நேரிட்டால் தளபதிகள் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வார்கள். அவர்கள் மரணமடைந்தால் அடுத்த நிலையில் இருப்பவர்கள் தொடர்வார்கள். சிப்பாய்களுக்கு சண்டை ஒன்றே குறிக்கோளாக இருக்கும், தலைவர்கள் செத்த செய்தி அவர்களுக்கு உடனடியாகச் சேராது. தலைவன் செத்தான் என்றால் சிப்பாய் மனதளவில் சோர்ந்துவிடுவான் - தோல்வியைச் சந்திக்குமுன்னேயே மனதளவில் தோல்வியடைந்துவிடுவான். நம் ஊடகங்கள் என்ன செய்தன? தீவிரவாத ஒழிப்புக் குழுத் தலைவர் ஹேமந்த கார்கரேயும், என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டான விஜய் சாலாஸ்கரும் கொல்லப்பட்டதை முந்திரிக்கொட்டைகளாக அறிவித்தார்கள். அறிவுகெட்டத்தனத்தின் உச்சம்! அவர்கள் உத்தரவின் கீழே போராடிக்கொண்டிருந்த மற்ற காவலர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

பத்து இடங்களில் தாக்குதல் என்று செய்தி. இவர்கள் 24 மணிநேரமும் காட்டியது தாஜ் ஹோட்டலை மட்டும். அவ்வப்போது ஓபராயைக் காட்டினார்கள். பின்பு நரிமண் ஹவுஸின் மாடியில் கமாண்டோக்கள் ஹெலிகாப்டரிலிருந்து இறங்குவதைக் காட்டினார்கள். வேறு இடங்களில் நடந்தது தீவிரவாத செயலில்லையா? ரயில் நிலையத்தில் செத்தவர்கள் மனிதர்களில்லையா? ஏனென்றால் அங்கேயெல்லாம் “மேட்ச்“ முடிந்துவிட்டது. ஹைலைட்ஸைக் காட்டுவதைவிட நேரடி ஒளிபரப்பில்தான் பரபரப்பு அதிகம் - பார்வையாளர்களும் அதிகம் - ஆகவே தாஜ்!

ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை அறிவித்துக்கொண்டேயிருந்தார்கள். CNN-ன் தலைமைச் செய்தியதிகாரியொருவர் அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு மும்பை அதிகாரி ஒருவரைத் தொலைப்பேசியில் அழைத்துக் கேட்டார் “பத்தே பேர் சேர்ந்து எப்படி இத்தனை பேரைக் கொல்ல முடிந்தது?” என்று. எனக்கு வந்த ஆத்திரத்தில் உடலெல்லாம் நடுங்கியது. கொல்வது ஒன்றே நோக்கம் என்றிருப்பவர்கள் தீவிரவாதிகள். குறைந்த எண்ணிக்கையில் வந்து விமானங்களைக் கடத்தி கட்டடங்களில் மோதி மூன்றாயிரம் பேரைக் கொல்லவில்லையா? அவ்வளவு ஏன் வெர்ஜினியா டெக் பல்கலையில் ஒரு வெறி பிடித்த மாணவன் துப்பாக்கி சகிதமாக நுழைந்து இருபதுக்கும் மேற்பட்ட சக மாணவர்கள், ஆசிரியர்களைக் கொல்லவில்லையா? எதிர் பாரா தருணத்தில், எதிர் பாரா நிலையில், எதிர் பாரா முறைகளில் வெறிபிடித்த மனிதர்கள் சக மனிதர்களைத் தாக்கும்போது சேதத்தைத் தடுக்க வல்லரசுகளாலேயே முடியவில்லை.

எதுகைமோனையாகச் செய்தி போடுகிறோம் என்ற பெயரில் “இந்தியாவின் 26/11” என்று ஒரு செய்திச் சானலில் போட்டார்கள். அதாவது அமெரிக்காவுக்கு 9/11 - இந்தியாவிற்கு 26/11. இதைப் பார்க்கும் அமெரிக்கர்கள் எது 26-வது மாதம் என்று குழம்பியிருப்பார்கள். அல்லது சாதாரண இந்தியப் பொதுஜனம் “ஓஹோ அமெரிக்காவுல நவம்பர் ஒம்பதாந்தேதி ஏதோ நடந்திருக்கு போல” என்று நினைத்திருப்பார்கள்!

வலையுலகு - அட அட அட.... ஒலி, ஒளி ஊடகங்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று நிரூபித்துக் கொண்டனர் பதிவர்களும் (மனசாட்சி: "அந்தக் கூட்டத்துல நீயும் ஒருத்தந்தேன்")

”கையில் காவிக் கயிறு - ஆக இது இந்துத் தீவிரவாதி”
”இல்லை இல்லை இஸ்லாமியத் தீவிரவாதி”
“இல்லவே இல்லை மொசாத் செயல்”

என்று பொங்கலுக்கு வெள்ளையடிக்கும் ஸ்டைலில் மத, இனச் சாயம் பூசி மகிழும் ஒரு கோஷ்டி! தீவிரவாதத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் அழிவு, கொலை, தீமை இவைதான் நோக்கங்கள் - இவர்கள் மனித வகையில் எந்த வகையிலும் சேராத கொடூர மிருகங்கள். இவர்களை இவர்கள் வழியில் அணுகி அழிப்பது ஒன்றுதான் சரியான முறை. இவர்களுக்கு மதச் சாயம் பூசுவது புண்ணைச் சொறிந்துகொள்ளத்தான் பயன்படும்.

இப்படிக் கேனத்தனமான கேள்விகள், பேட்டிகள், அறிவிப்புகள், செய்திகள் - ஊடகங்களின் வெறியாட்டத்தைத்தான் தாங்க முடியவில்லை.

தீவிரவாதிகளுக்கு பயம் தோன்றச் செய்வதைவிட, அவர்களைத் தேன்குடித்த நரிகளாக்குகின்றன நமது அரசு, ஊடக இயந்திரங்கள். டில்லியிருந்து கமாண்டோக்கள் வருவதற்கான விமானத்தின் விமானி சண்டீகரிலிருந்தாரென்றும் அவர் வந்து சேர்ந்து பின்பு விமானத்தைக் கிளப்பிக்கொண்டு மும்மையிறங்கி தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு வந்து சேர கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாகிவிட்டது என்று அறிகிறேன் - இதுவே பெரும் குறைபாடு - உடனடியாகச் சரி செய்யப் படவேண்டிய குறைபாடு.

5000 பேரை இலக்கு வைத்து வந்திருப்பார்களேயானால் இந்த இருநூறு கொலைகளைத் தோல்வியாகக் கருதி இன்னும் தீவிரமாகத் திட்டம் தீட்டித் தாக்கத் தயாராவார்கள் அவர்கள். இல்லை 200 பேரைக் கொன்றதே வெற்றியாக அவர்கள் கருதினால் இது போல இன்னும் பல தாக்குதல்களைத் தொடுக்கவும் முனைவார்கள். எப்படிப் பார்த்தாலும் தீவிரவாதிகள் சும்மா இருக்கப் போவதில்லை. மூளைச் சலவை செய்யவும் ஆயுதம் தூக்கவும் ஆட்கள் கிடைப்பதற்கா பஞ்சம்? கிடைப்பார்கள். ஆனால் இனிமேலும் அவர்களை வளரவிடாமல் நசுக்கி அழிப்பது முழுக்க முழுக்க இந்திய அரசின் கையில்தான் இருக்கிறது. வழக்கம்போலப் பாகிஸ்தான் மீது பழி போட்டுவிட்டு - அது முழுக்க முழுக்க உண்மையாகவே இருந்தாலும் - சோம்பியிருந்தார்கள் என்றால் அவர்களை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது. பாகிஸ்தான் பிடுங்குவது இருக்கட்டும். நீங்கள் என்ன பிடுங்கினீர்கள்? ஜார்ஜ் புஷ்ஷை என்னதான் திட்டினாலும் கோமாளியாகச் சித்தரித்தாலும் 9/11 க்கு பிறகு சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தி வேறு எந்த தீவிரவாத தாக்குதல்களும் அமெரிக்காவில் நடைபெறா வண்ணம் செய்ததை யாரும் மறுக்கமுடியாது. இந்தியாவில் எத்தனையெத்தனை தாக்குதல்கள்? மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்துகொண்டே இருக்கிறார்கள். ஏன் இவ்வளவு மெத்தனம்?

பொது மக்களைக் காக்கத் துப்பில்லாத அரசு எதற்கு? பாக்கிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவி வந்து தாக்குவது பெரும்பிரச்சினையாகவே இருந்தாலும் நம் எல்லைகளைக் காத்து உள்ளூர் ஓட்டைகள் அனைத்தையும் அடைப்பது முதல் கடைமை - அதன் முழுப் பொறுப்பும் இந்திய அரசின் கையில்தான். அதற்கு அலட்சிய மனப்பான்மையை ஒழிக்கவேண்டும். அதற்கு ரயில் நிலையத்தில் சுடப்பட்டுச் சாகும் அப்பாவி பொதுஜனத்தின் வலியை உணரவேண்டும். இரும்புக் கோட்டையாக தடுப்பு அரண் இருந்தால் எந்தத் தீவிரவாதியும் உள்ளே நுழைவதற்கு யோசிப்பான். அப்படியே நுழைந்தாலும் அவர்கள் கொட்டையைப் பிடித்து நசுக்க அதிக நேரம் ஆகக்கூடாது. அவர்களை உடனடியாக எதிர்கொண்டு அதிக சேதமில்லாமல் முறியடிக்கிற எமர்ஜென்ஸி ரெஸ்பான்ஸ் திறனை பலமடங்கு அதிகரித்துக் கொள்ளவேண்டும் - எல்லாத் திசைகளிலும். முழுமையாக தீவிரவாதத்தினை ஒழிக்க முடியாவிட்டாலும், தடுக்க முடியும். கிழிந்து தொங்குகிற புல்லட் புரூஃப் அங்கி, பழைய காலணிகள், கற்கால துப்பாக்கிகள் போன்றவற்றைத் துறந்து மொத்தத்தையும் நவீனப்படுத்த வேண்டும்.

உயிரைப்பணயம் வைத்து தீரமாகப் போராடிய காவலர்களுக்கும் கமாண்டோக்களுக்கும் தீவிரவாதிகள் தந்த நெருக்கடியைவிட அதிக நெருக்கடியை ஊடகங்கள் கொடுத்தார்கள். கிட்டத்தட்ட கட்டடங்களைச் சூழ்ந்துகொண்டு அவர்களை literally நெருக்கியடித்தார்கள். இதனால் திறம்பட எந்தத் திட்டத்தையும் வகுக்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்திருக்குமாவென்று தெரியவில்லை. ஊடகங்கள் பார்வையில் இருப்பதைவிட உள்ளே போய் தீவிரவாதிகளை எதிர்கொள்வது மேல் என்று நினைத்துவிட்டார்கள் போலும் - உள்ளே புகுந்துவிட்டார்கள். எவ்வளவு உயிர்ச்சேதம்? நேரடியாகக் கொன்றவர்கள் அந்த பத்து தீவிரவாதிகள். மறைமுகமாகக் கொன்றவர்கள் அனைத்து ஊடகத்தீவிரவாதிகளும்!

மும்பையில் இந்நேரம் ரத்தக்கறைகள் காய்ந்திருக்கும், அல்லது கழுவப்பட்டிருக்கும் - பிணங்களைத் துரத்திய ஊடகக்காரர்கள் இப்போது தாஜ் ஹோட்டலிலிருந்து உயிரோடு தப்பித்து ஓடிய புறாக்களையும் நாய்க்குட்டி ஒன்றையும் பேட்டியெடுத்து “மும்பைத் தாக்குதலில் மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம்” என்று தலைப்புச் செய்தியாகப் போட்டுக்கொண்டிருப்பார்கள். ஓரிரு தினங்களில் அதுவும் போரடித்து குலுக்கல் நடனங்களுக்கும், கொலை, கொள்ளைகளுக்கும், வேறு எங்காவது நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கும் திரும்பிவிடுவார்கள். நாமும் வழக்கமான வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம். இது வரை பரவாயில்லை. வீராப்பு வசனங்களைப் பேசிய தலைவர்களும்் மயிராப் போச்சு என்று புதிய நெருக்கடிகளுக்கும் வரப்போகும் தேர்தலுக்குத் தேவையான பகடை விளையாட்டுகளுக்கும் திரும்பிவிடுவார்கள்.

வாழ்க கருத்துச் சுதந்திரம்! வாழ்க ஊடகங்கள்!

***

Wednesday, November 05, 2008

ஒளி படைத்த கண்ணினாய் வா - ஒபாமா from இல்லினாய் வா!



நான்காயிரத்திற்கும் மேலான அமெரிக்கர்களை ஈராக் ஆக்கிரமிப்பில் இழந்துவிட்டு வாடும் குடும்பங்கள், பலத்த அடிவாங்கித் தடுமாறும் பொருளாதாரம், படு பாதாளத்திற்குப் பாய்ந்துவிட்ட ரியல் எஸ்டேட், நிறுவனங்கள் மூடப்படுவதால் தொடர்ச்சியான வேலையிழப்புகள், வீட்டுக்கடன் தவணை கட்டமுடியாமல் வீட்டையிழந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கும் குடும்பங்கள் என்று அடுக்கடுக்காய் பற்றியெரிந்து அமெரிக்கர்களைப் பொசுக்கிக் கொண்டிருக்கும் தீச்சுவாலையின் வெப்பம் உலக நாடுகளையும் பாதிக்கத் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட அனைவரும் வெறுக்கும் தலைவராகிவிட்ட புஷ் - கடந்த 8 ஆண்டுகளில் அமெரிக்காவின் “பெரியண்ணன்” பிம்பத்தை “ரவுடி பெரியண்ணன்” என்ற நிலைக்கு உயர்த்திவிட்ட பெருமை வாய்ந்தவராகிய நிலையில் வந்தது தேர்தல். இத்தேர்தல் நடந்த முறையிலிருந்து “உலகின் பெரிய ஜனநாயக நாடு” என்று பெருமையடித்துக்கொள்ளும் நம் நாடும், நமது அரசியல்வாதிகளும் கற்க வேண்டியது ஏராளம்.

நேற்றிரவு ஓட்டெடுப்பு முடிந்து கிழக்குக் கடற்கரை நேரப்படி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக ஒபாமா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சொந்த மாநிலமான இல்லினாயின் ஷிகாகோவின் Grand Park இல் குழுமியிருந்த இலட்சத்திற்கும் மேலான ஆதரவாளர்கள் மத்தியில் மேடையில் குடும்பத்தோடு தோன்றினார் ஒபாமா. மனைவி மிஷெல் ஒபாமாவும் குழந்தைகளும் ஓரிரு நிமிடங்கள் கையசைத்துவிட்டு திரும்ப உள்ளே சென்றுவிட, ஒலிவாங்கியைப் பிடித்து கம்பீரமாகத் தனது பேச்சைத் துவக்கினார் ஒபாமா. சுருக்கமாகச் சொன்னால் இம்மாதிரி ஒரு பேச்சைக் கேட்டு எவ்வளவோ வருடங்களாகிவிட்டது! அவரது உரையின் தமிங்கில வடிவம் இதோ.

******************



”ஹலோ ஷிகாகோ”

அமெரிக்காவில் எதுவும் சாத்தியம் என்பதிலும், இந்நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றனவா என்பதிலும், இந்நாட்டின் ஜனநாயகத்தின் சக்தியிலும் சந்தேகம் கொள்பவர்கள் இன்னும் இருந்தால் அவர்களுக்கு இன்றைய இரவே பதிலாக அமைந்திருக்கிறது.

இதற்கு முன்பு இந்த தேசம் பார்த்திராத பள்ளிகளிலும், கோவில்களிலும் இன்று நீண்ட வரிசைகளில் நின்ற மக்கள், பல மணி நேரமாகக் காத்திருந்தவர்கள், வாழ்நாளில் முதன்முறையாக வாக்கு அளிப்பவர்கள், என்று மக்கள் அளித்த பதில் அது. ஏனென்றால் முன்பு போலில்லாமல் இம்முறை நடைபெறும் தேர்தல் வித்தியாசமானது என்பதிலும், தங்கள் குரல்கள் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பிய மக்கள் அளித்த பதில் அது.

இளையவர்கள், முதியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், ஜனநாயகக் கட்சியனர், குடியரசுக் கட்சியினர், கறுப்பர், வெள்ளையர், ஆசியர், ஸ்பானியர், அமெரிக்கப் பழங்குடியினர், ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆண்பெண் உறவுகளை நம்புபவர்கள் (straight), ஊனமுற்றவர்கள், சாதாரணர்கள் எல்லாரும் சேர்ந்துவந்து கொடுத்த பதில் அது.

இதன் மூலமாக “நாம் எப்போதும் ஒரு சாதாரண கூட்டமாகவோ, அல்லது சிவப்பு மாநிலங்களின் கூட்டமாகவோ (குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள்), நீல மாநிலங்களின் கூட்டமாகவோ(ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்ற மாநிலங்கள்) இல்லாமல், என்றென்றும் ஒருங்கிணைந்த அமெரிக்கக் குடியரசாகவே (United States of America) இருந்து வந்திருக்கிறோம்” என்ற முக்கிய செய்தியை அமெரிக்க மக்கள் உலகுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

நம்மால் எதையும் அடையவோ, சாதிக்கவோ, வரலாற்றை மாற்றியமைக்கவோ, சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவோ முடியாது இது வரை மக்களிடம் நம்பிக்கையின்மை, சந்தேகம், பயம் ஆகியவற்றை மட்டுமே விதைத்துவந்தவர்களுக்கும் இது பதிலாக அமைந்திருக்கிறது.

இந்தத் தேர்தலில், இந்த நாளில், இந்தத் தருணத்தில் நாம் நிகழ்த்தியிருப்பது அமெரிக்காவில் ஏற்படப் போகும் சிறந்த மாற்றங்களுக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது.

சற்று நேரத்திற்கு முன்பாக செனேட்டர் மெக்கெயினிடமிருந்து எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு அசாதாரணமானது, பெருந்தன்மை மிக்கது, மரியாதைக்குரியது. அவர் இந்தத் தேர்தலில் மிகவும் கடுமையான, நீடித்த போட்டியைத் தந்தார். அதைவிட தான் நேசிக்கும் இந்நாட்டிற்காக இன்னும் கடுமையாக அவர் போராடியிருக்கிறார். நம்மில் பலர் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவுக்கு அமெரிக்காவிற்காக அவர் பல தியாகங்களைச் செய்திருக்கிறார். சுயநலமற்ற, நேர்மையான, தைரியமான தலைவரான மெக்கெய்னின் சேவைகளாலும், தியாகங்களாலும் நாம் பல பலன்களைப் பெற்றிருக்கிறோம். அவருக்கும், அவரோடு சேர்ந்து போட்டியிட்ட கவர்னர் சாரா பேலினுக்கும் அவர்களது சாதனைகளுக்காக எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இத்தேசத்திற்காக வரும் மாதங்களில் அவர்களோடு சேர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்.

இந்நேரத்தில் எனது இந்த நீண்ட பயணத்தில் உறுதுணையாக நின்று, முழு அர்ப்பணிப்பு உணர்வுடன், தனது மக்களுக்காகவே எப்போதும் பேசிய, என்னுடன் பணியாற்றிய, துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கு எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்று உங்கள் முன்னிலையில் நான் நிற்பதற்குக் காரணம் 16 வருடங்களாக எனது தோழியாகவும், எனது குடும்பத்தைத் தாங்கும் தூணாகவும், எனது அன்புக்கும் நேசத்திற்கும் உரியவராகிய, இத்தேசத்தின் அடுத்த First Lady யாகப் போகும் எனது மனைவி மிஷெல் ஒபாமா. அவரது முழு ஒத்துழைப்பு இல்லையென்றால் நான் இன்று இங்கு நின்று பேசிக்கொண்டிருக்கமாட்டேன்.

சாஷா, மாலியா (ஒபாமாவின் குழந்தைகள்) - நான் உங்களை உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு நேசிக்கிறேன். உங்களது செல்ல நாய்க்குட்டியும் நம்முடன் வெள்ளை மாளிகைக்கு வரப்போகிறது!

இப்போது எங்களுடன் இல்லாவிட்டாலும், என்னை இந்நிலைக்கு வளர்த்து ஆளாக்கிய எனது பாட்டி, மற்றும் (மறைந்த மூத்த) குடும்பத்தினரோடு என்னை பார்த்துக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அவரது மறைவு என்னைப் பிரிவுத்துயருக்குள்ளாக்கியிருக்கிறது. அவர்களுக்கு நான் என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்.

எனது சகோதரிகள் மாயா, ஆல்மா, சகோதரர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

அமெரிக்க வரலாற்றில் மிகச் சிறந்த தேர்தல் பிரச்சாரமாகத் திகழும் எனது தேர்தல் பிரச்சாரத்தை வடிவமைத்து, பிரச்சாரக் குழுவினரை நியமித்து, நிர்வகித்த பின்னணியில் இயங்கிய நாயகனான பிரச்சார மேலாளர் டேவிட் ப்ளஃப் (David Plouffe)க்கும், இந்தத் தேர்தல் பயணத்தில் நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என்னுடனிருந்த எனது முதன்மைத் திட்ட மேலாளர் (Chief Strategist) டேவிட் ஆக்ஸல்ராட் (David Axelrod)க்கும் எனது நன்றிகள்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வெற்றிக்குரியவர்கள் நீங்கள். இவ்வெற்றி உங்களுக்கு உரித்தானது.

நான் முதன்முதலில் 20 மாதங்களுக்கு முன்பு எனது தேர்தல் பயணத்தைத் துவக்கியபோது அதிபர் பதவிக்கு வரத் தகுதியுள்ளவர்களின் பட்டியலில் நான் இல்லை. பண பலமோ, பெரும் ஆதரவோ அப்போது எங்களிடம் இல்லை. எங்களது பிரச்சாரம் வாஷிங்டனின் பளிங்கு மாளிகை வளாகங்களில் உருவாக்கப்படவில்லை. Des Moines இன் புல்வெளிப் பரப்புகளிலும், Concord வீடுகளின் வரவேற்பறைகளிலும், Charlestonனின் முற்றங்களிலும் உருவானது. உழைக்கும் வர்க்கத்தினைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அவர்களின் கடின உழைப்பில் பெற்ற ஊதியத்திலிருந்து எங்களுக்கு அளித்த ஐந்து, பத்து, இருபது டாலர்களில் எழும்பியது அது. அது தங்கள் தலைமுறையின் சோம்பலை உதறி, வீட்டையும், குடும்பத்தினரையும் விட்டு குறைந்த ஊதியத்தையும், குறைந்த தூக்கத்தையும் அளித்த வேலைகளுக்காக வெளியேறிய இளைய சமுதாயத்தினரால் வலுப்பெற்றது. கடுமையான குளிரையோ, வெயிலையோ பொருட்படுத்தாது முன்பின் தெரியாத மக்களைச் சந்தித்து ஆதரவு கேட்க வீடு வீடாக ஏறி இறங்கிய லட்சக்கணக்கான தன்னார்வத் தொண்டர்களால் அது இன்னும் வலிமையடைந்தது.

அவர்கள் இருநூறு வருடங்கள் கழித்தும் மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குடியரசு இப்பூமியிலிருந்து மறைந்துவிடவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

இது உங்கள் வெற்றி.

இதை நீங்கள் இத்தேர்தலில் வெற்றியடைவதற்காக மட்டுமோ அல்லது என்னை வெற்றிபெறச் செய்வதற்காக மட்டுமோ செய்யவில்லை என்பதை நான் அறிவேன். இந்த வெற்றியை நீங்கள் தந்தது, நம் முன் இருக்கும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் பிரச்சினைகளையும் சவால்களையும் நீங்கள் நன்றாக உணர்ந்திருப்பதால்தான். இன்று நாம் இவ்வெற்றியைக் கொண்டாடினாலும், நாளை நமக்காகக் காத்திருக்கும் சவால்களை - இரண்டு போர்கள், அழிவுகளின் பிடியில் தத்தளிக்கும் உலகம், இந்நூற்றாண்டின் மோசமான பொருளாதாரச் சீரழி்வு ஆகியவற்றை - நாம் உணர்ந்திருக்கிறோம்.

இந்த இரவில் இங்கு நாம் நின்று கொண்டிருக்கையில், நமக்காக நம் தேசத்துக்காக இராக்கிய பாலைவனங்களிலும், ஆஃப்கானிஸ்தானின் மலைத் தொடர்களிலும் உயிரைப் பயணம் வைத்து நமது வீரர்கள் போராடிக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

குழந்தைகள் தூங்கிய பின்பும் விழித்திருந்து வீட்டுக்கடன் தவணையையோ, மருத்துவச் செலவுகளையோ எப்படி அடைப்பது என்றும், குழந்தைகளுடைய எதிர்காலக் கல்லூரிப் படிப்புச் செலவிற்கு எப்படிப் பணம் சேர்ப்பது என்றும் எப்படி அடைப்பது என்று யோசிக்கும் பெற்றோர்களின் நிலைமையை நாம் அறிவோம்.

மாற்று எரிசக்தியை உருவாக்குவது, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, புதிய பள்ளிக்கூடங்களைக் கட்டுவது, அச்சுறுத்தல்களைச் சமாளிப்பது, பழுதான கூட்டுறவுகளைப் புதுப்பிப்பது என்று பல சவால்கள் காத்திருப்பதை நாம் அறிவோம்.

நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம். நாம் அதை ஒரு வருடத்திற்குள்ளோ நான்கு வருடத்திற்குள்ளோ கடக்க முடியாமல் போகலாம். ஆனால், அமெரிக்கா, அத்தூரத்தைக் கடந்துவிடமுடியும் என்பதை நான் முன்பு எப்போதையும் விட இன்று, இந்தத் தருணத்தில் தீவிரமாக நம்புகிறேன்.

நாம், ஒன்றிணைந்த மக்களாக, அத்தூரத்தைக் கடப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். நம்மால் முடியும்!

(பொது மக்கள் - “நம்மால் முடியும்”)



சில இடையூறுகள் ஏற்படலாம். அதிபராக நான் எடுக்கப் போகும் சில முடிவுகளில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அரசால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம். நாம் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றியும், அதன் நிலவரங்களைப் பற்றியும் நான் உங்களிடம் நேர்மையாக இருப்பேன். உங்களின் கருத்துகளைக் கவனமாகக் கேட்பேன், குறிப்பாக நம்மால் ஒருமித்த கருத்து உருவாக்க முடியாத தருணங்களில். எல்லாவற்றையும்விட, நாம் இத்தேசத்தைச் செப்பனிடும் வேலையில் எல்லாரும் இணைந்து - இந்த 221 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியது போல- பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இருபத்தோரு மாதங்களுக்கு முன்பு தீவிர குளிர்காலத்தில் துவங்கிய இந்தப் பயணம் இந்த இலையுதிர்காலத்தில் முடியப் போவதில்லை.

இந்த வெற்றி மட்டுமே நாம் விரும்பிய மாற்றம் அல்ல. இவ்வெற்றி மாற்றத்தை ஏற்படுத்த நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு. கடந்த காலச் செயல்பாடுகளையே நாம் தொடர்ந்தால் அம்மாற்றத்தை ஏற்படுத்த இயலாது.

நீங்களில்லாமல், உங்களுடைய சேவையில்லாமல், தியாகங்களில்லாமல் மாற்றம் நிகழாது.

ஆதலால், நாம் செய்ய வேண்டியது நமது தேசபக்தி, பொறுப்புணர்வு எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, கடுமையாக நமக்காகவும், நம்மைச் சார்ந்தவர்களுக்காகவும், பிறர்க்காகவும் உழைப்பதே.

வால் ஸ்ட்ரீட் (நியூயார்க்கில் பெரும் நிதி நிறுவனங்கள் இயங்கும் தெரு) நிறுவனங்கள் செழிக்க, மெயின் ஸ்ட்ரீட்(சாதாரண பொதுமக்கள்) கஷ்டப்படும் நிலை ஏற்றுக்கொள்ள முடியாதது. இன்றைய நிதி நெருக்கடி நமக்குக் கற்றுக்கொடுத்த பாடம் அது. இந்நாட்டில் நாம் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்று பட்டிருக்கவேண்டும். நமது அரசியலில் நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் முதிர்ச்சியின்மை, பக்கச் சார்பு நிலை, சில்லறைத் தனங்களை எதிர்த்து, நீக்க வேண்டும்.

இந்த மாநிலத்திலிருந்துதான் ஒருவர் குடியரசுக்கட்சி சார்பாக - சுயசார்பு, தனிமனித சுதந்திரம், தேச ஒற்றுமை என்பதையே அடிப்படையாகக் கொண்ட கட்சி சார்பாக - வெள்ளை மாளிகையில் முன்பு நுழைந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இம்மாதிரி சிறப்புகளில் நாம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இன்று ஜனநாயகக் கட்சி பெரும் வெற்றி அடைந்தாலும் அதை நாம் அடக்கத்துடன் ஏற்றுக்கொண்டு, நம்மிடையே நமது வளர்ச்சிக்கு இதுவரை தடையாக இருந்த பிரிவுகளையும் பிளவுகளையும் களைய முனைப்புடன் இருக்கவேண்டும். ஆப்ரஹாம் லிங்கன் சொன்னது போல, நாம் எதிரிகள் அல்ல - நண்பர்கள். நமது சார்பு உணர்வுகள், நமது ஒற்றுமையைக் குலைத்துவிடக்கூடாது.

எனக்கு வாக்களிக்காத அமெரிக்க மக்களுக்கு - இன்று நீங்கள் எனக்கு வாக்களிக்காமலிருந்திருக்கலாம். ஆனால் நான் உங்கள் குரல்களுக்கும் செவிமடுப்பேன். உங்களது உதவியும் பங்களிப்பும் எனக்குத் தேவை. நான் உங்களுக்கும் அதிபரே.

பாராளுமன்றங்களிலிருந்தும், அரண்மனைகளிலிருந்தும், உலகின் மறக்கப்பட்ட மூலைகளிலிருந்து வானொலி மூலமாகவும், அமெரிக்கத் தேர்தலைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கும் மற்ற தேசத்தினருக்கு - எங்கள் வரலாறு எதுவாக இருந்தாலும், எங்கள் எதிர்காலம் ஒன்றே - இன்று ஒரு புதிய தலைமை உதயமாகியிருக்கிறது.

உலகில் அழிவுகளை ஏற்படுத்துவோருக்கு - நாங்கள் உங்களை வெல்வோம். உலகில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் வேண்டுவோருக்கு - நாங்கள் உங்கள் பக்கம் நிற்போம்.

அமெரிக்கா என்ற சக்தியின் ஜ்வாலை இன்னும் பிரகாசிக்கிறதா என்று கேள்வி எழுப்புவோருக்கு - அமெரிக்காவின் உண்மையான சக்தி எங்களது ஆயுத பலத்திலோ, பண பலத்திலோ இல்லை - அது எங்களது ஜனநாயகம், சுதந்திரம், வாய்ப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றில் இருக்கிறது என்பதை இன்றைய இரவு நிரூபித்திருக்கிறது. எங்களது ஒற்றுமை இன்னும் பலப்படும். நாங்கள் இன்று சாதித்தது, நாளை சாதிக்கவிருப்பவற்றுக்கான நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

இந்தத் தேர்தல் நிறைய “முதன் முறை”களையும், நிகழ்வுகளையும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு அளித்திருக்கிறது. குறிப்பாக எனது நினைவில் நிற்பது, அட்லாண்ட்டாவில் வாக்களித்த ஒரு பெண்மணி. அவர் வரிசையில் நின்று வாக்களித்த கோடிக்கணக்கான அமெரிக்கர்களிலிருந்து வித்தியாசப்பட்டவர். அவர் ஆன் நிக்ஸன் கூப்பர் (Ann Nixon Cooper) - 106 வயதானவர்!!

அடிமைத்தனம் ஒழிக்கப்பட்ட அடுத்த தலைமுறையில் பிறந்தவர். கார், விமானம் போன்ற வாகனங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் பிறந்தவர். இரண்டு காரணங்களுக்காக - தோலின் நிறத்திற்காகவும், பெண் என்பதற்காகவும் - ஓட்டளிக்க முடியாத காலகட்டத்தில் வளர்ந்தவர். இன்று அவர் அவரது நூற்றாண்டு அமெரிக்க வாழ்க்கையில் சந்தித்தவற்றை - வலிகளை, நம்பிக்கைகளை, போராட்டங்களை, முன்னேற்றங்களை, நம்மால் முடியாது என்று சொல்லப்பட்ட காலங்களை - நினைத்துப் பார்க்கிறேன். பெண்களின் குரல்கள் ஒடுக்கப்பட்ட, நம்பிக்கைகள் மறுக்கப்பட்ட, காலங்களில் அவர் வாழ்ந்திருக்கிறார் - இழந்தவற்றை, மறுக்கப்பட்டவற்றை மீட்டெடுத்து இன்று அவர் வாக்களித்திருக்கிறார் - நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

உலகம் பேரழிவுகளையும், நெருக்கடிகளையும் சந்தித்தபோதும், புது உத்வேகத்துடன் மீண்டெழுந்ததை அவர் பார்த்திருக்கிறார். நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

நமது துறைமுகத்தைக் குண்டுகள் சிதறடித்தபோதும், கொடுங்கோலாட்சியாளர்கள் உலகை மிரட்டியபோதும், அதைப் பார்த்த சாட்சியாகவும், பின்பு ஜனநாயகம் தழைத்தோங்கியதைப் பார்த்த சாட்சியாகவும் அவர் இருக்கிறார். நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}


நிலவில் மனிதன் காலடி வைத்தபோதும், பெர்லின் சுவர் விழுந்தபோதும், நமது அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகை இணைத்தபோதும் அவர் சாட்சியாக இருந்திருக்கிறார். நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

இந்த வருடம், இந்தத் தேர்தலில், அவரது விரலால் தொடுதிரையைத் தொட்டு வாக்களித்திருக்கிறார், நூற்றியாறு வருடங்கள் கழித்தும், பல சிறப்பான காலகட்டங்களையும், இருள் சூழ்ந்த காலங்களையும் கடந்தும், அமெரிக்கா இன்றும் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையுடன்.

நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

அமெரிக்கா! நாம் கடந்துவந்த தூரம் பெரிது. செல்ல வேண்டிய தூரமும் பெரிது. ஆதலால் இந்த இரவில் நாம் நம்மைக் கேட்டுக்கொள்வோம் - நமது குழந்தைகள் அடுத்த நூற்றாண்டைப் பார்க்க வாழ வேண்டுமென்றால்,எனது குழந்தைகள் ஆன் நிக்ஸன் கூப்பர் போல நெடிய ஆயுளுடன் வாழும் அதிர்ஷ்டத்தைப் பெறவேண்டுமென்றால், அவர்கள் எந்த மாற்றங்களைக் காண வேண்டும்?. அதற்கு நாம் எத்தகைய முன்னேற்றங்களை அடைய வேண்டும்? இதுவே அக்கேள்விகளுக்கு விடைகாணும் வாய்ப்பு. இதுவே நம் தருணம்!

இத்தருணத்தில் மக்களாகிய நாம் நமது கடமைகளைளைத் திறம்படச் செய்து, நம் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும். வளங்களைப் பெருக்கவேண்டும். அமைதியை நிலைநாட்டவேண்டும். அமெரிக்கக் கனவை மீட்டெடுத்து, அடிப்படை உண்மைகளை நிலைநாட்டி, வேற்றுமையில் ஒற்றுமை காண்போம். இவற்றைச் சந்தேகிப்பவர்களுக்கும், நம்மால் முடியாது என்று சொல்வதற்கும் நம் செயல்களில் பதில் சொல்வோம். நம்மால் முடியும்!

{பொதுமக்கள் - “நம்மால் முடியும்!”}

நன்றி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிக்கட்டும்!

*************

உரையின் போது பலரின் முகங்களில் காணப்பட்ட மலர்ச்சி, கண்ணீர், ஆனந்தம், உலகின் பல மூலைகளில் காணப்பட்ட கொண்டாட்டங்கள், ஈராக்கிலிருக்கும் அமெரிக்க வீரர்களின் ஆனந்த வெளிப்பாடுகள், கென்யாவில் ஒபாமா பிறந்த ஊரில் மக்களின் வெளிப்பாடுகள், வெள்ளை மாளிகை முன்பு கூடியிருந்து உரையைக் கேட்டு ஆர்ப்பரித்த இளைஞர்கள், யுவதிகள், கண்ணீரோடு கூக்குரலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கறுப்பின மக்கள் - மொத்தத்தில் உணர்வு மயமான அந்த அரைமணிநேரப் பொழுதில் ஆழ்ந்திருந்தது ஒரு புதிய அனுபவம். இங்கு ஒரு பணியாளனாக வந்து இருக்கும், இந்தியக் குடிமகனான எனக்கே ஒரு ஆசுவாசம் பிறக்கும்போது, அமெரிக்கர்களின் மனநிலையை, அவர்களது உணர்வு வெளிப்பாடுகளை, இந்தப் புதிய எழுச்சியை ஓரளவாவது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது!

மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து பிரதிபலிக்கும் தலைவர் ஒருவருக்குக் கிடைக்கும் வெற்றியே ஒபாமாவுக்குக் கிடைத்த வெற்றி.

GO OBAMA! GO!

ஒபாமாவால் மந்திரவாதி போல எல்லாப் பிரச்சினைகளையும் மந்திரக்கோல் கொண்டு சரிசெய்ய முடியாது. ஆனால் எந்தவிதமான பணபல, அரசியல் பின்புலம், பின்னணி இல்லாது, ஒரு பேராசிரியராக, ஒரு செனேட்டராக, ஒரு வல்லரசின் அதிபராக உயர்ந்துள்ள ஒபாமாவின் சாதனை - வரலாற்றுச் சிறப்பு மிக்கது. அவர் வாக்குறுதிகள் எனக்கு வெறும் வாய்ச்சவடால்களாகத் தெரியவில்லை. வலியுணர்ந்து, முனைப்புடன் செயல்படக்கூடிய சாத்தியங்களே அதிகம் என்று தெரிகிறது.

அவர் சொன்னது போல் மாற்றங்கள் உடனடியாக நடைபெறப் போவதில்லை. சில வருடங்களாகலாம். ஆனால் அதற்கான அஸ்திவாரம் அவரது வெற்றி. குறிப்பாக போரை விரும்பாத ஒரு தலைவர் அமெரிக்காவுக்கு அதிபராக இருப்பது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியம்.

மொத்த அமெரிக்கர்களிடமும் ஈரானை பரம எதிரியாகவும் சாத்தானாகவும் கட்டமைத்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், அவர்களுடன் முன் நிபந்தனைகளின்றி பேச்சு வார்த்தை தயார் என்று சொன்ன ஒபாமாவின் அணுகுமுறை மிகவும் முக்கியமானது. ஓரிரு வருடங்களில் அவரது செயற்பாடுகள் எந்தவிதமான மாறுதல்களை ஏற்படுத்தப்போகின்றன என்று தெரிந்துவிடும்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி. நம்மூரைப் போன்று “தலைவா! தலைவா!” என்று எந்த அடிமடையத் தலைவர்களுக்கும் - அவர்கள் என்ன குற்றம் செய்தாலும், கொள்ளையடித்தாலும், சுரண்டினாலும் - வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து அடிவருடும் கும்பலாக அமெரிக்க மக்கள் எந்தத் தலைவருக்கும் இருக்க மாட்டார்கள். புஷ்ஷை ஆரம்பத்தில் ஆதரித்த அதே மக்களே அவரின் தவறான முடிவுகள் ஏற்படுத்திய பாதி்ப்புகளை உணர்ந்ததும் அவரைத் தூக்கியெறியத் தயங்கவில்லை. அதேபோல் ஒபாமா வாக்குறுதிகளைக் காப்பாற்றாத பட்சத்தில், செயல்படாத பட்சத்தில் அவரையும் தூக்கியெறியத் தயங்க மாட்டார்கள்.

அமெரிக்க ஜனநாயகமும் தேர்தல் முறைகளும் நூறு சதவீதம் அப்பழுக்கற்றது என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவில் நடைபெறும் தேர்தல், கட்சி, தலைவர்கள், சீட்டுகளை “வாங்கும்” அல்லது ”விற்கும்” கூத்துகளோடு ஒப்பிட்டால் எவ்வளவோ தேவலாம் என்று சொல்ல வேண்டும். அதோடு போட்டியாளர்களாக இருந்தாலும், போட்டி முடிந்ததும் தோற்றவர் வெற்றி பெற்றவரைத் திட்டி, பழிசுமத்தி, ஏசும் கழகக் கலாசாரம் இல்லாமல் ஒருவரையொருவர் வாழ்த்திப் பாராட்டி, ஒன்றாக இணைந்து பணிபுரியும் - நாட்டை மட்டும் முன்வைத்துச் செயல்படும் - சுயநலமற்ற அணுகுமுறைகளையும் இவர்களிடமிருந்து நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற எதிரெதிர் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பொது விவாதம் செய்வதையோ, ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதையோ - தனிப்பட்ட, ஆபாசத் தாக்குதல்களின்றி ஆக்கப் பூர்வமான அணுகுமுறையைக் கொள்வதையோ என் வாழ்நாளில் பார்ப்பேனா என்று ஏக்கமாக இருக்கிறது. ஓட்டு என்ற ஒன்றைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் மக்களை விலக்கி வைத்துச் செயல்படும் நம்மூர்க் கட்சிகளின், கழகங்களின் செயல்பாடுகள் என்று மாறும்? மக்கள் நலமே பிரதானமானது, பெரிது - மற்ற எதுவும் முக்கியமல்ல என்று செயல்படும் ஒரு கட்சியோ தலைவரோ நமக்கு என்று கிடைப்பார்?

காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

*********

Tuesday, November 04, 2008

ஆஷ்லாண்ட் லஷ்மிகோவில் தீபாவளி

ஆஷ்லாண்ட் லஷ்மி கோவிலுக்கு ஒவ்வொரு வாரயிறுதியிலும் போவதுண்டு. சென்ற ஞாயிறன்று மாலை சென்றபோது ஏகமாக வாகனங்கள் நிறைந்திருக்க கோவிலுக்குப் பின்பக்கத்திலிருக்கும் பெரிய நிறுத்துமிடத்தில் - அது இருப்பதே கூட்டம் அம்மும் நாட்களில்தான் - தேடி நிறுத்திவிட்டு “இன்று என்ன விசேஷம்?” என்று யோசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் ஒரு பயலையும் காணோம். எல்லாரும் கோவிலுக்கு வலப்புறம் இருக்கும் வெட்ட வெளியில் கூடியிருந்தார்கள் - பலகையில் அறிவிப்பைப் பார்த்ததும்தான் புரிந்தது தீபாவளிக்காக மத்தாப்புகள் விடப்போகிறார்கள் என்று. வருடாவருடம் தீபாவளிக்காக மத்தாப்புகள் வாங்கி, நகர நிர்வாகம், காவல்துறை அனுமதி வாங்கி, பக்தர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் கொடுத்து விடச் சொல்லும் நல்ல காரியம்.

ஆனால் இந்தமுறை சில உறுத்தல்கள்.

சென்ற வருடம் வட்டமாக கயிறுகட்டி எல்லாரையும் சுற்றி நிற்கச் செய்து ஒவ்வொரு குழந்தைகள் கையிலும் ஒரு கம்பி மத்தாப்பு பெட்டியைக் கொடுத்தார்கள். கம்பு மத்தாப்புகள் நட்சத்திரங்களாய் சுற்றி எரிய, நடுவில் யாராவது மாமா வந்து புஸ்வாணம் (பூச்சட்டி) விடுவார் - எல்லாரும் வேடிக்கை பார்ப்பார்கள். இந்த முறை என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. வட்டக் கயிற்றைக் காணோம். எல்லாரும் சந்தை போலக் கும்பலாக நின்றுகொண்டிருக்க ஓரமாக யாரோ ஒருவர் புஸ்வாணம் ஒன்றை விட்டார்.

கோவிலின் பிரதான வாசலுக்குள் நுழைந்ததும் ஒரு ஹால் இருக்கிறது. ஹாலின் ஜன்னல் வழியாக வெளியே கூடியிருந்த கூட்டத்தையும் மத்தாப்புகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறு கும்பலிடம் அர்ச்சகர் “குழந்தைங்கள வெளில கூட்டிட்டுப் போய் மத்தாப்பு வாங்கிக் கொடுங்க” என்று சொல்ல அவர்கள் “ரொம்பக் குளிருது” என்றார்கள்.

“என்னம்மா இது! அமெரிக்கா வந்துட்டு, அதுவும் பாஸ்டன்ல இருந்துக்கிட்டு குளிருதுன்னா எப்படி?” என்றார். சரியான கேள்விதான்! இருந்தாலும்?

கூட்டத்தினருக்கிடையே ஒருவர் மத்தாப்பு விநியோகம் செய்வது போலிருக்க - குழந்தைகள் குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள் - அணுகிக் கேட்க நிமிர்ந்து முறைத்து “வரிசைல வாங்க“ என்றார். வரிசை என்று எதுவும் இல்லாமல் ஒருமாதிரி செவ்வகமாக ஒரு கூட்டம் நின்றிருந்தது. அவரும் - அமெரிக்கப் பொருளாதாரச் சரிவின் எதிரொலி போல - கம்பி மத்தாப்புப் பெட்டியைப் பிரித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒக்கே ஒக்க கம்பி மத்தாப்பைப் கொடுக்க திகைப்பாக இருந்தது. அன்று பார்த்து பயங்கரக் குளிர் 30 களில் (ஃபாரன்ஹீட் ஐயா). கைக்குழந்தைகள் வீறிடுவதையும் பொருட்படுத்தாமல் மறத்தமிழச்சிகள் அந்த “வரிசை”யில் நிற்க, கால்களில் தொற்றி அடம்பிடித்த குழந்தைகளைச் சமாதானம் செய்து, நடந்து வண்டியிலேறி வீட்டுக்குத் திரும்பினேன்.

வரிசையில் கொடுக்கும் வைபவத்தை இப்படி வெட்டவெளியில் பேய்க் குளிரில்தான் செய்யவேண்டுமா? கோவிலுள் நுழைந்ததும் இருக்கும் பெரிய ஹாலில் வைத்து தரிசனம் முடிந்து வெளியே வரும் குடும்பத்தினர் கையில் மத்தாப்பைக் கொடுத்து அனுப்பினால் இம்மாதிரி வெட்டவெளிக் கும்பலையும் குளிரில் குழந்தைகளைக் காக்க வைத்ததையும் அடியோடு தவிர்த்திருக்கலாம்.

சென்ற வருடம் செய்தது போலவே கயிறு கட்டி எல்லாக் குழந்தைகளையும் வட்டமாக நிற்க வைத்து மத்தாப்பு விட வைத்திருக்கலாம்.

ஏன் இப்படிச் செய்தார்கள் என்று கோபமாக வந்தது.

***

Thursday, September 18, 2008

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 4

அபார்ட்மெண்ட் வீட்டுக்குள் நுழைந்து தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தும் இன்னும் சத்தம் அதிகமாக இருக்கக் கவனித்தால் சத்தம் பக்கத்து வீட்டிலிருந்து வந்துகொண்டிருந்தது. எதிர் வீட்டில் வேறு ஒரு சானல் பார்க்கிறார்கள் போல - அதையும் எங்கள் வீட்டிலேயே கேட்க முடிந்தது. 'பக்கத்து வீட்டுல வயசானவங்க - காது சரியாக் கேக்காது' என்று அவ்வளவு அதிக ஒலியளவிற்கு விளக்கம் சொன்னார்கள். இரண்டு வீடுகளிலும் ஒரே சானல் ஓடும் பட்சத்தில் எங்கள் வீட்டில் ஒலியைச் சுத்தமாகக் குறைத்துவிடுவார்களாம்!

கிட்டத்தட்ட இருபது இருபத்தைந்து வருடங்களில் அதிவேகத்தில் காற்று மாசடைந்து வருவது தெரிந்த சங்கதிதான். இம்முறை நான் இருந்த நாட்களில் கவனித்தது ஒலியினால் ஏற்படும் அதிக இரைச்சல் - Noise Pollution. பொதுவாகவே எல்லாரும் உரக்கத்தான் பேசுகிறார்கள். யாரிடமும் பேச்சுக்கொடுத்தாலும் இரண்டு வாக்கியங்களுக்கு மேல் தாங்காது நாசூக்காக மெதுவாகப் பேசச் சொல்ல வேண்டியிருந்தது. சாதாரணமாக இருவர் பேசிக் கொண்டிருந்தாலும் பார்ப்பதற்கு உரத்து வாய்ச் சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று நினைக்குமளவிற்குச் சத்தமான பேச்சு. இது காது மந்தத்தில் கொண்டு விடும் - விட்டிருக்கிறது. எந்தக் குழந்தையிடம் எதைக் கேட்டாலும் முதல் முறையிலேயே பதில் வருவதில்லை. 'ம்?' அல்லது 'ஆ?' என்று பதில் கேள்வி - நான் முதலில் கேட்டதை இன்னும் நிதானமாக மறுபடியும் கேட்க பதில் சொன்னார்கள். சிலது என்னருகில் வந்து நிஜமாகவே காதைக் காட்டி 'என்ன கேக்கறீங்க?' என்றதில் ஆடிப்போய்விட்டேன். மெள்ளமாக உருவாகிவருகிறது செவிடாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தலைமுறை.

தசாவதாரத்தை பாஸ்டனில் வெளிவந்த நாளன்றே பார்த்துவிட்டேன். நம்மூரில் திரையரங்கத்திற்குச் சென்று வருடக்கணக்காகிறதே என்று திருவானைக்கோவில் இருக்கும் திரையரங்கத்திற்கு 20 டிக்கெட்டுகள் வாங்கி மொத்த குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு சென்றேன். திரையரங்கம் பக்கமே 20-30 வருடங்களாக வந்திராத என் தந்தையையும் 'பெருமாள் படம் முழுக்க வர்றாரு' அழைத்துச் செல்ல அவர் படம் முழுதும் காதுகளை அழுந்த மூடிக்கொண்டு பார்க்க நேர்ந்தது. அவ்வளவு அதிபயங்கர ஒலியளவை வைத்திருந்தார்கள். நாங்கள் அமர்ந்திருந்தது Box-இல். Sound Effects என்பதை தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியாக இம்மாதிரி திரையரங்குகளில் அதிக ஒலியளவில் நான்கைந்து முறை பார்த்தாலே காது மந்தமாகிவிடுவது நிச்சயம். நல்லவேளை அந்த அரங்கத்தில் படத்தில் ஆழ்ந்து இருக்கையில் ஏஸியை அணைத்துவிடவில்லை.

வாகன ஓட்டிகள் ஓயாது ஒலிப்பானை ஒலித்துக்கொண்டே இருக்கிறார்கள். கிளம்பும்போது பீங்க். பின்பு சாலையில் செல்கையில் பீங்க் பீங்க். சிக்னலில் பீங்க். முன்னால் வண்டி போனால் பீங்க். நின்றால் பீங்க். நகர்ந்தால் பீங்க். செல்லுமிடம் சேர்ந்ததும் பீங்க். வீட்டிலுள்ளவர்களுக்கு வந்ததைத் தெரிவிக்க பீங்க். வண்டியே ஓட்டாமல் சும்மா உட்கார்ந்திருந்தால் அவர்களது விரல்கள் காற்றில் ஒலிப்பானை அமுக்கிக் கொண்டேயிருக்கின்றன. இப்படி ஆயிரக்கணக்கான வாகனங்கள் அல்லும் பகலும் ஒலிப்பானை ஒலித்துக்கொண்டு இருந்தால் பாம்புக்கும் காது இப்போதெல்லாம் மந்தமாகியிருக்கும்! எதையாவது சொன்னால் 'ஆ ஊ ன்னா அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு அலட்டிக்கிறான்யா' என்று சொல்லிவிடுவார்கள் என்பதால் தயங்கியே இருக்க வேண்டியிருந்தது. வரையறையற்ற சாலைப்போக்குவரத்தில் எவ்விதகளும் கடைபிடிக்கப்படாமல் சர்க்கரையைக் கண்ட பிள்ளையார் எறும்புகளைப்போல வாகனங்கள் எல்லாத் திசைகளிலும் பறக்கின்றன. விபத்துகள் அனுதினமும். மக்கள் கொத்து கொத்தாகச் சாகிறார்கள். இதைப்பற்றி எந்த மசிரான்களும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மாம்பழச் சாலையைத்தாண்டி காவிரிப்பாலத்தில் நண்பனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்க நடுப்பாலத்தில் இருக்கும்போது எதிர் திசையில் வந்த காரோட்டி என்ன செய்தார் என்பதைக் கீழே பாருங்கள்! இம்மாதிரி இருந்தால் ஏன் விபத்து நடக்காது?



உயிரைக் கையில்பிடித்துக்கொண்டுதான் சாலையில் இறங்க வேண்டியிருக்கிறது. ஆனால் என்னைத்தவிர எல்லாரும் சாதாரணமாகத்தான் போய் வந்துகொண்டு இருக்கிறார்கள். எல்லாருக்கும் பழகிவிட்டது. நான் அங்கு இருந்தால் ஓரிரு மாதங்களில் எனக்கும் பழகிவிடும். ஆனால் ஏன் இப்படி இருக்கவேண்டும்?. முன்பு இருந்ததை விட சாலைகள் எல்லா இடங்களிலும் இப்போது நன்றாகவே இருக்கின்றன. திருச்சியிலிருந்து மதுரைக்கு அனைத்து சாலை வேலைகளையும் மிஞ்சி இரண்டரை மணிநேரத்தில் சென்றுவிடமுடிகிறது. சாலை வேலைகள் நிறைவு பெற்றால் ஒன்றரை மணிநேரத்தில் சென்றுவிடலாம். திருச்சியிலிருந்து சென்னைக்கு ஐந்து அல்லது ஆறரை மணிநேரத்தில் சென்றுவிட முடிகிறது. முன்பெல்லாம் 8-9 மணி நேரம் ஆகும்.

பிரச்சினை அதிக அளவிலான வாகனங்கள். அதையும் மிஞ்சி முறைப்படி ஓட்டாத, ஓட்டக் கற்றுக்கொள்ளாமல் ஓட்டுனர் உரிமத்தை 'வாங்கி' வண்டியோட்டும் பொது ஜனங்கள். சாலைவிதிகளின் அடிப்படை அறிவுகூட பெரும்பாலானோரிடம் இல்லை. எல்லாரும் ஒரே ஒரு விதியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அது "முன்னால் செல்லும் வாகனம் - சிறிதோ, பெரிதோ - அதை உடனடியாக முந்திச் செல், பின்னால் வருபவனுக்கு வழிவிடாதே" என்பதுதான். இந்தியச் சாலைகளின் போக்குவரத்தைப் பற்றி ஏகப்பட்ட நகைச்சுவைத்துணுக்குகள், ஒலி, ஒளித் துணுக்குகள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைப் பார்த்துச் சிரிக்க முடியவில்லை. அவமானமாகத்தான் ஒவ்வொருமுறையும் உணர நேரிடுகிறது. 'ஏழை நாடு' 'வளரும் நாடு' என்று நிரந்தரமாக ஜல்லியடிப்புகளைச் செய்துகொண்டே குட்டிச்சுவராக விட்டுக்கொண்டிருக்கிறார்கள். RTO அலுவலகம் என்றொரு செவ்வாய்கிரம் இருக்கிறதே - அங்குதான் பிரச்சினையின் ஊற்று துவங்குகிறது. ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வுகளைக் கடுமையாக்கி அதில் முறைப்படித் தேர்ச்சியடைந்தவர்களுக்கு மட்டுமே உரிமம் என்பதைக் கடுமையாக அமல்படுத்தினாலே சில வருடங்களில் முன்னேற்றம் கண்டுவிடலாம் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். அங்கு செல்லாமலே இடைத்தரகர்களிடம் பணம், போட்டோ, கையெழுத்து என்று கொடுத்து உரிமத்தை வாங்கும் நிலை வேரறுக்கப்படவேண்டும். இதை ஒழுங்காகச் செய்து சாலைப் போக்குவரத்தைக் கடுமையாகக் கண்காணித்து சரிப்படுத்தினால் முன்னேற்றம் நி்ச்சயம்.

சாக்கடையாக இருந்த சத்திரம் பேருந்து நிலையம் இப்போது எவ்வளவோ பரவாயில்லை. சாலையை நன்றாக அகலப்படுத்தியிருக்கிறார்கள். முன்பே சொன்னது போல சாலைகள் பிரமாதமாகவே இருக்கின்றன. ஆனால் போக்குவரத்து. நிறுத்தங்களில் நிறுத்தாமல் ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படும் பேருந்துகளால் நெரிசல் ஏற்படுகிறது. கேமராவில் கண்காணித்து, ஒலிபெருக்கியில் அவ்வப்போது வாகன ஓட்டிகளை எச்சரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின், காவலர்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. நடுச்சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆனால் அவர்களுக்குத் தேவையான அதிகாரங்களும், கருவிகளும், வசதிகளும் குறைவாக இருக்கும்போது வாகன ஓட்டிகள் அவர்களை மதியாது செல்லும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. இதைப்பற்றி விவரிக்க ஆரம்பித்தால் இக்கட்டுரை பாதை மாறி வேறெங்கோ சென்றுவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

ஒழுங்காகச் சாலை விதிகளை மதித்து ஓட்டினால் இவ்வளவு 'பீங்க்' தேவையில்லை - ஏன் தேவையே இல்லை. எனது 10 வருட வெளிநாட்டு அனுபவத்தில் அதிக பட்சமாக பத்து முறைக்குள்ளேதான் ஒலிப்பானை உபயோகித்திருப்பேன் - அதுவும் மற்ற ஓட்டுனர்களை ஏதாவது விஷயத்துக்காக எச்சரிக்கத்தான். இதைப்பற்றி விவாதித்து நேரத்தை விரயம் செய்து கடைசியில் நண்பனை உட்காரச்சொல்லிவிட்டு ஸ்ரீரங்கத்திலிருந்து ஜங்ஷனுக்குச் சென்று திரும்ப வீட்டுக்கு வரும்வரை ஒரு முறை கூட ஒலிப்பானை ஒலிக்காது ஓட்டிச் சென்று வந்து காட்டியதும்தான் அவன் யோசிக்க ஆரம்பித்தான்.

இன்னும் வரும்....

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 3

ரிங் டோன் என்ற இம்சை போதாதென்று யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று காலர் டோன் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். கைப்பேசியில் காலர் டோனும் ரிங்டோனும் சினிமாப் பாடல்களை வைத்துக்கொள்ளாதவர்கள் கற்காலத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் மட்டுமே. 'பேரக்கேட்டா அதிருதுல்ல' என்பதிலிருந்து 'You're the south end of the north side facing horse' என்பது வரை பல்வேறு காலர் டோன்கள் - அழைப்பவர் காலரைப் பிடித்து யார்ரா என்னைக் கூப்பிர்ரது என்று கேட்பது போல இருந்தது சிலவற்றைக் கேட்க. பால்ய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் மத்தியில் இருந்த டேபிளில் இருந்த காப்பிக் கோப்பைகளின் எண்ணிக்கையில் கைப்பேசிகளும் இருந்தன. திடீரென்று நாய் குலைக்கும் சத்தம் கேட்க ஒருத்தன் அவனது போனை லாவிக்கொண்டு 'வீட்லருந்துடா' என்று சொல்லிவிட்டு வாயருகில் கையை வைத்துக்கொண்டு பவ்யமாகப் பேசிக்கொண்டே எழுந்து அறையைவிட்டு வெளியே சென்றான். பெரிசுகள் கந்த சஷ்டி கவசமும் சுப்ரபாதமும் வைத்துக்கொண்டிருக்கின்றன.

சிலரை அழைத்தால் முழுப்பாடலே ஓடுகிறது. ரீமிக்ஸ்ஸே இல்லாத அசல் 'பொதுவாக என் மனசு தங்கம்' என்று மலேசியாவின் கணீர்க் குரல் பாடலைக்கூட இளைஞர்கள் வைத்திருக்கிறார்கள். குழந்தையின் குரல், காதலி சிரிப்பது என்று வித்தியாசமான காலர் டோன்கள். சுவாரஸ்யமாக இருந்தாலும் சில நேரங்களில் மகா இம்சை. தொலைபேசியில் இண்ட்டர்வ்யூ செய்வதற்காக விண்ணப்பித்தவரை அழைத்தாலும் முழுப்பாடல் ஒலித்ததும்தான் 'அலோ யாருங்க' கேட்கிறது. எரிச்சல்! 1980-களின் இறுதியில் வேலை தேடி நிறுவனங்களை எம்மாதிரி அணுகவேண்டியிருந்தது என்பதையும் இப்போது நிறுவனங்கள் நல்ல வேலையாட்களை எவ்வாறு தாஜா செய்து அணுகவேண்டியிருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன்.

முக்கியமான சந்திப்புகளில்கூட கைப்பேசியை அணைத்தோ அல்லது ம்யூட் செய்தோ வைக்கும் நாகரிகம் 90% உபயோகிப்பாரிடம் இல்லை. கல்வியகங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள், ஆலயங்கள் என்று எல்லாவிடங்களிலும் கைப்பேசி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சிலர் இரண்டு மூன்று கைப்பேசிகளைக்கூட வைத்திருக்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் கழுத்தைச் சாய்த்துக்கொண்டோ அல்லது ஒரு கையாலோ பேசிக்கொண்டே ஓட்டுபவர்களைப் பார்த்தால் எனக்குத்தான் பயமாக இருந்தது. அலட்சியம்.

ஆனால் கைப்பேசி இன்று ஊடுருவியிருக்குமளவிற்கு வேறு எந்த மின்னணு சாதனமும் எல்லாத்தட்டு மக்களிடமும் ஊடுருவியிருக்கவில்லை என்று அடித்துச் சொல்வேன் - தொலைதொடர்பில் இது சந்தேகமில்லாமல் ஒரு மாபெரும் புரட்சி. கூலித் தொழிலாளியிலிருந்து கோடீஸ்வரன்வரை எல்லாரும் கைப்பேசி வைத்திருக்கிறார்கள். வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலைப்பற்றி குமுதம் பக்தியிலோ எதிலோ விஸ்தாரமான கட்டுரை வந்திருந்தது. அதில் மலையின் கீழேயிருந்து மேலே வயதானவர்கள் செல்ல டோலி சேவை புரியும் மூன்று கூலித்தொழிலாளர்களின் போட்டோக்களை வெளியிட்டு அவர்களது பைப்பேசி எண்ணையும் (முன்கூட்டியே அழைத்து ஏற்பாடு செய்ய) வெளியிட்டிருந்தார்கள். இது கைப்பேசி எந்த அளவு பயன்பாட்டிலிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்.

மிஸ்டு கால் மாஃபியா என்றொரு கூட்டம் இருக்கிறது. கைப்பேசிச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு இந்த மி.கா.மா. பெரிய தலைவலியாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மிஸ்டு கால்களுக்குக் கட்டணம் கிடையாது என்பதை வைத்துக்கொண்டு நம்மாட்கள் பேயாட்டம் ஆடுகிறார்கள். காலையில் எழுந்ததும் காதலிக்கு ஒரு மிஸ்டு கால். அதிலும் ஏகப்பட்ட சங்கேதங்கள். ஒரு தடவை, இரண்டு தடவை என்று மிஸ்டுகால்களின் எண்ணிக்கை அடிப்படையில் சங்கேத வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்கிறார்கள். அலுவலகத்தை அடைந்ததும் ஒரு மிஸ்டுகால் வீட்டிற்கு. ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் மிஸ்டுகால். காரியம் முடிந்ததும் மிஸ்டுகால் என்று ஒரு நூறு காரியங்களுக்கு மிஸ்டுகால் பயன்படுத்துவது நம்மூரில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்கிறேன்.

நான்கூட பொதுக்கழிப்பறையில் எனக்கு முன் நின்றவரின் எண்ணை வாங்கிக்கொண்டு ஐந்து நிமிடம் கழித்து ஒரு மி்ஸ்டு கால் விட (ஆச்சா?), ஐந்தாவது நொடியில் ஒரு மிஸ்டு கால் (ஆயிக்கிட்டே இருக்கு). 30வது நொடியில் இன்னொரு மிஸ்டு கால் (ஆச்சு) - ஆசாமி கதவைத் திறந்து வெளியேறிப் போனார்.

இன்னும் வரும்... அட அடுத்த பகுதியைச் சொல்றேங்க!

***

Tuesday, September 16, 2008

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 2

தொலைக்காட்சியின் தொகுப்பாளப் பெருமக்களைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவே முடியவில்லை. சிற்றலை வானொலிகள் ஒரு பக்கம், தொலைக்காட்சிச் சானல்கள் மறுபக்கம் என்று 24 மணி நேரமும் ஆங்கிலம் 4 தேக்கரண்டி, தமிழ் ஒரு சிட்டிகை என்ற விகிதத்தில் கலந்து தடித்த நாக்குடன் ஒரு கூட்டமே தமிழைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. கலைஞர், அலைஞர் என்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இடையறாத தமிழ்க் கொலை. விதிவிலக்காக மக்கள் தொலைக்காட்சியில் வேட்டி சட்டை போட்டுக்கொண்டு அறிவிப்பாளர் அடித்தட்டு வர்க்க மக்கள் வசிக்கும் பகுதியில் யார் ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையில் வறட்டி தட்டுகிறார் என்று பெண்மணிகளுக்கிடையில் நடத்திய போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. வறட்டி தட்டுவதற்காக சாணியைக் கையிலள்ளும் காட்சியைப் பார்த்த மாத்திரத்தில் என் இரண்டு குட்டீஸும் ஒரே நேரத்தில் 'யக்' என அலற, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அடுத்த அரை மணி நேரத்திற்குச் சாணி கரைத்து நீர் தெளிப்பதற்கான காரணங்களை விளக்கி வறட்டியின் பெருமைகளையும் சொல்ல, சின்னவள் Can we buy it in Wal-Mart? எனக் கேட்டாள். கவலையாக இருந்தது.

Sun Music என்று துவங்கி ஒரு இருபது முப்பது இசைச் சானல்கள் இருக்கின்றன. பெரிய நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சிகளைத் தவிர விண் டிவி, மண் டிவி, மலைக்கோட்டை டிவி என்ற வகையில் வட்டாரச் சானல்கள் தமிழகத்தில் மட்டும் ஒரு ஆயிரம் இருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் ஓயாது பேசுகிறார்கள். அவர்கள் பேசியதில் பெரும்பாலானவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அது தமிழ் போலவும் இல்லை, ஆங்கிலம் போலவும் இல்லை - கடும் காய்ச்சலில் ஈன ஸ்வரத்தில் உளறுவது எப்படிப் புரியாதோ அப்படி அவர்கள் பேசுவதும் புரியவில்லை.

இது தவிர SMS Mafia என்று வேரூன்றிப் பரவியிருக்கும் இன்னொரு கலாச்சாரம். எல்லா இசைச் சேனல்களிலும் திரைக்குக் கீழே இரண்டு அங்குலத்திற்கு ஓயாது குறுஞ்செய்திகள். புனைப்பெயர் பூனைப்பெயர் என்று எதையும் வைத்துக்கொள்ளாமல் நிசப் பெயர்களிலேயே இளைஞர்களும், யுவதிகளும் நாள் பூரா சாட்டுகிறார்கள். அவர்கள் கொடுத்த எண்ணிற்கு ஏர் டெல் கைப்பேசியிலிருந்து ஒரு சோதனைச் செய்தி அனுப்ப ஐந்தாவது வினாடியில் திரையில் அது வந்தது ஆச்சரியமாக இருந்தது. சன் ம்யூசிக்கில் 'Hi da..'. உதயாவில் 'Kano..' ஜெமினியில் 'Hi ra..' சூர்யாவில் 'ஞிங்களைப் பிரேமிக்கு' என்று மொழி காலாச்சார வித்தியாசமில்லாமல் வயதுக்கு வந்தவர்கள், வராதவர்கள், என்று எல்லாரும் SMS-இல் மூழ்கியிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண், கூடப் படித்த பெண், பிரயாணத்தில் சந்தித்த பெண் என்று எல்லாருக்கும் பெயரைக் குறிப்பிட்டுக் காதலைத் தெரிவிக்க, அவர்கள் 'யா யா' என்று சளைக்காமல் பதில்செய்தி அனுப்புகிறார்கள். Love Meter என்று ஒன்று ஆண் பெண் பெயரை வைத்து அவர்களது ஜோடிப் பொருத்த சதவீதத்தை 'இணைபிரியாது இருப்பார்கள்' என்பது போன்ற கிளி ஜோசியக் கருத்துகளுடன் இன்னொரு சானலில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது தவிர தொலை பேசி அழைப்புகள். இவற்றையும் மிஞ்சி் இன்னும் கடிதம் அனுப்பி பாடல் கேட்கும் ஆசாமிகள் கூட இருக்கிறார்கள். இணையக்குழுக்களை விஞ்சியிருக்கிறது தொலைக்காட்சி மூலமாக உரையாடும் குழுக்கள்.

ஆபாசப் பாடல்கள், SMS உரையாடல்கள், காதல் என்ற பெயரில் இச்சை பரிமாற்றங்கள் என்று இசைச்சானல்களில் இளையவர்கள் இருக்க நாற்பது + வயதில் மாமாக்களும் மாமிகளும் மெகா சீரியல்கள் என்ற பயங்கர போதை வஸ்துகளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 25க்கும் 35க்கும் இடைப்பட்டவர்களுக்கு என்று பெரிதாக எதுவும் நிகழ்ச்சிகள் இருப்பது போலத் தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் வட இந்திய மேற்கத்திய சானல்களில் வரும் பிறன்மனை நோக்குவதை இயல்பாக, யதார்த்தமாகக் காட்டும் நிகழ்ச்சிகளில் இரவு 10 மணிக்கு மேல் மூழ்கியிருக்கிறார்களோ என்னவோ?

காதலை எப்படி தெரிவிப்பீர்கள் என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு இளைஞன் சாஷ்டாங்கமாக ஒரு பெண்ணின் காலில் விழுந்தான் - அதைப்பார்த்து ஆஹாகாரம் செய்தார்கள் பார்வையாளர்கள். எனக்கு நிஜமாகவே புல்லரித்தது. அவ்விளைஞனைப் பெற்றவர்கள் அநேகமாகக் குஷ்புவுக்குக் கோவில் கட்டிய திருப்பணிக்குழு உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். இளைய பாரதத்தினாய் வா என்று பாடியவர் நல்ல வேளை இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் வெறுப்புடன் இளைய பாரதத்தி நாய் போ போ என்று திட்டியிருப்பார். இல்லாவிட்டால் இக்கண்றாவிகளையெல்லாம் பார்த்துத் தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

மொத்தத்தில் களேபரம்.

இளைஞர்கள் ஒரு நாட்டிற்கு, சமுதாயத்திற்கு மிகப்பெரிய பலம். இந்திய போன்ற தேசத்தின் அபரிமிதமான இளைய சமுதாயத்தின் மனிதவளமும் சக்தியும் இப்படி உப்புப் பெறாத வெட்டிச் செயல்களில் எவ்வளவு அநியாயமாக வீணாக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று வேதனையாக இருந்தது. 84-இல் சொற்ப பதக்கங்களுடனிருந்த சீனா இன்று உலகிலேயே அதிக தங்கப்பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்தியா? இம்மாதிரி தொலைக்காட்சிகள் இளைய சமுதாயத்தினைக் குறிவைத்து அவர்களது சக்தி முழுவதையும் அணுஅணுவாக அனுதினமும் உறிஞ்சிக்கொண்டிருக்கையில் பதக்கம் என்பது வெறும் கனவாகவே இன்னும் பல தலைமுறைகளுக்கு இருக்கும். சுதந்திரம் என்ற மாலையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கும் குரங்கின் நிலையாக இருக்கிறது இன்றைய தலைமுறை. ஆக்கப்பூர்வமான வழிகளில் நேரத்தைச் செலவழிக்காமல் இப்படி அநியாயமாக எல்லாவற்றையும் கோட்டைவிட்டு மூழ்கியிருக்கிறார்களே என்று கவலையாக இருந்தது.

இன்னும் வரும்...

மூன்று வருடங்களுக்குப் பிறகு # 1

தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இப்படி வெளியே இருந்ததில்லை - ஆதலால் இம்முறை விடுமுறையில் இந்தியா வந்த போது கிடைத்த அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானவை. நான்கு வாரங்களில் என்னென்னவோ செய்யவேண்டும் என்று வழக்கம்போல அட்டகாசமாகத் திட்டம்போட்டுக்கொண்டு வந்து, வழக்கம்போலவே எதையும் செயல்படுத்த இயலவில்லை. நாமொன்று நினைக்க நம்மாட்கள் வேறொன்று நினைக்கிறார்கள்!

சென்னை பன்னாட்டு விமானநிலையத்தின் உள் வளாகத்தைப் புதுப்பித்து இழைத்திருக்கிறார்கள். அட்டகாசம். நான் வந்த விமானம் அதிகாலை மூன்றரை மணிக்கு வந்திறங்க, அந்நேரத்தில் வேறு விமானங்கள் எதுவும் வரவி்ல்லையாதலால் குடியுரிமைச் சோதனைகளை முடித்து பெட்டிகள் வரும் Baggage Claims area-வுக்கு 10 நிமிடங்களில் வந்து விட்டேன். அமெரிக்காவின் பல நகரங்களிலிருந்து லண்டன் வரும் விமானங்களில் சென்னைப் பயணிகளைப் பிரித்து ஒரு விமானத்தில் போட்டு அனுப்புவதால் பெட்டிகள் எல்லாம் சீட்டுக் குலுக்கலைப் போலப் பிரிந்து பிரிந்து, என் முதல் பெட்டி உடனேயும், இரண்டாம் பெட்டி ஒரு மணிநேரம் கழித்தும் வந்தது. மற்ற மாநிலங்களில் - குறிப்பாக மும்பை - உள்ள நிலையங்களைப் போலல்லாது, சென்னை விமான நிலையம் எப்போதுமே இனிதான அனுபவத்தைத்தான் தந்திருக்கிறது. இம்முறையும் சுங்கச் சோதனை இனிதாகவே முடிய - அந்த அதிகாரியிடம் விசாரித்தபோது, முனையத்தைப் புதுப்பித்து இரண்டு வருடங்களாகிவிட்டன என்றார். நன்றாகவே பராமரிக்கிறார்கள். பாராட்டுகள்.

நிலையத்திலிருந்து வெளியேறி வந்தால் கையில் பஸ் டிக்கெட்டுகளைப் போல டாலர்களையும் ரூபாய்களையும் வைத்துக்கொண்டு 'FC, FC, FC மாத்தணுமா சார்' என்ற விசாரிப்புகளையும் ஆட்டோ டாக்ஸி அழைப்புகளையும் தாண்டி - நண்பர்கள் கால் டாக்ஸியில் வந்து காத்திருந்தார்கள் - வண்டியிலேறி பிரதான சாலையை அடைய ஏதோ பாலம் அரைகுறையாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க அப்பகுதி முழுதும் மூத்திர நாற்றமடித்தது! ஒரு வழியாக அதை விட்டு விலகி உள்ளகரத்தில் இருக்கும் நண்பனின் வீட்டுக்குச் சென்று ஒரு காபியைக் குடித்துவிட்டு, குளித்துவிட்டு திருச்சி கிளம்பினேன். எட்டரைக்கு தாம்பரத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினால் வெள்ளையுஞ் சொள்ளையுமாக ஒரு கோஷ்டியே அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தது. 'இதுல ஒக்காருங்க' என்று நல்ல தமிழில் காலியாக இருந்த Middle Berth காட்டியவர் மார்வாரி. பெட்டிகளை வைக்க இடமில்லாமல் அதில் ஏற்றி வைத்துவிட்டு Aisle-இல் நின்று கொண்டேன். வாடி வாசலைப் பிரித்து வைத்துக்கொண்டு - அட்டைப்படத்திலிருந்து முதற் பக்கத்திற்குச் செல்லவே அரைமணி நேரமாகிவிட்டது. அற்புதமான படம் - அதையும் எழுதிய செல்லப்பாவே எடுத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது - படிக்க ஆரம்பித்தேன். பத்து நொடிக்கு ஒருவராக வந்து போய்க்கொண்டேயிருந்தார்கள். விழுப்புரத்தில் சிலர் இறங்கிக்கொள்ள ஜன்னலோர இருக்கையில் சிறிது நேரம் அமர முடிந்தது. மிகவும் அயர்வாக இருந்தது. வெளியே காட்சிகளை வெற்றுச் சிந்தனையுடன் கவனித்துக்கொண்டே இருந்தேன். நிறைய வயல்களில் வெள்ளைக் கற்கள் 60 x 40 களில். அதன் பிறகு ஒரு வழியாக விவசாயத்திலிருக்கும் நிலங்களில் பசுமையைக் காண சற்று ஆறுதலாக இருந்தது. என்னுடன் பயணித்த ஆறு பேரும் கைப்பேசியில் ஓயாது திருச்சிவரைப் பேசிக்கொண்டேயிருந்தார்கள். இந்த கைப்பேசிப் புரட்சியைப் பற்றி பிற்பாடு.

ஸ்ரீரங்கத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைகள் - ஒரு மாதம் முன்னதாகவே சென்றிருந்தார்கள் - ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள். லேசாக இளைத்திருந்து, களைத்திருந்தார்கள். ஆனால் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று நிறைய உறவினர்கள் மத்தியில் உற்சாகமாக, சந்தோஷமாக, சுதந்திரமாக ஓடியாடினார்கள்.

அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தேன்.

இன்னும் வரும்...

Tuesday, July 15, 2008

'ஙே'யென்று விழித்தேன்! இருந்தாலும்....



இது வரை இந்தியன் ரயில்வே இணையத்தை உபயோகித்ததில்லை. இன்று முயன்ற போது சற்று தடுமாறிப் போனேன்!

குறைகள் இருந்தாலும் இந்த அளவுக்காவது சேவையை மேம்படுத்தியிருக்கும் இந்தியன் ரயில்வேக்கு வாழ்த்துகள். (http://irctc.co.in)

Saturday, July 12, 2008

(தமிழகக்) கரைமேல் பிறக்க வைத்தான் - எங்களைக் கண்ணீரில் மிதக்க வைத்தான்


காலையில் போனால் மாலையில் திரும்புவது நிச்சயமில்லாத வாழ்க்கைதான் - ஆனால் இந்நிச்சயமின்மை கடற் தாயினால்தானேயொழிய மூளை மழுங்கிய மனுச நாய்களினால் அல்ல. அன்றாட ஜீவனத்திற்குக் கடுமையாக உழைத்தால்தான் சோறு என்பது மீனவர்களின் விதி. அதிலும் தமிழக மீனவர்களின் நிலை பரிதாபமானது.

இலங்கை என்ற சிறிய அண்டைதேசத்தின் ராணுவத்தினர் அனுதினமும் நமது மீனவர்களைக் குருவிகளைச் சுடுவது போலச் சுட்டுக் கொல்கின்றனர். இங்கே தலைவர்களும் ராணுவமும் என்ன மயிர் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்களா? எது எதற்கோ போராட்டம் நடத்துகிற கேவலப் பிறவிகள் இதற்குப் போராட்டம் நடத்தவேண்டாமா? அப்படி வேறு என்ன முக்கியமான மயிர்பிடுங்கி வேலை இருக்கிறதய்யா உங்களுக்கு? சோறுதானே தின்னுகிறீர்கள்? அல்லது வேறு ஏதாவதா? முதுகெலும்பில்லா மண்புழுக்களா நீங்கள்?

தமிழக மீனவர்கள் கடலில் மீனைத்தான் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கடலில் மீன் அதிகம் கிடைக்கும் இடத்திற்குச் சென்று மீன் பிடிப்பது இயற்கையே. இதில் எல்லையைத் தாண்டிப் போகிறோமா என்று அவர்களது ஒட்டிய வயிற்றுக்குத் தெரிவதில்லை - கடலில் என்ன எல்லையைக் காட்ட லட்சுமணன் கோடா போட்டு வைத்திருக்கிறது? "எல்லைத் தாண்டி வந்தார்கள் சுட்டுக் கொன்றோம்" என்று அவர்கள் சொல்லலாம். இது வரை இந்திய கடற்படை எல்லை தாண்டி வந்த எத்தனை இலங்கை மீனவர்களைச் சுட்டுக் கொன்றிருக்கிறது? நானறிந்த வரையில் இல்லை. அப்படியிருக்க அவர்கள் ஏன் நம் மீனவர்களைக் கொல்ல வேண்டும்? இந்தியா இலங்கையைக் கண்டிக்க வேண்டாமா? எச்சரிக்க வேண்டாமா? நடவடிக்கை எடுக்க வேண்டாமா? இப்படி வெறியுடன் நடந்து கொள்ளும் இலங்கைக் கடற்படையினரைச் சுளுக்கெடுக்க வேண்டாமா?

பரம எதிரியாக இருக்கும் பாக்கிஸ்தான் ராணுவம்கூட நம் மீனவர்களை இப்படி நாயைப் போலச் சுட்டுக் கொல்வதில்லை - எல்லைதாண்டிச் சென்றால் சிறைபிடித்துத்தான் போகிறார்கள். இந்த இலங்கை ராணுவத்தினருக்கு இப்படிச் சர்வசாதாரணமாக நம்நாட்டு மீனவர்களைச் சுட்டுக்கொல்லும் தைரியத்தைக் கொடுத்தது யார்? எல்லை தாண்டி வந்திருந்தாலும் அவர்களைக் கைது செய்யாமல் சுடுவது எவ்விதத்தில் நியாயம்? ஐயா இந்தியத் தலைவர்களே, மாநில முதல்வர்களே - ஒரு வேளை கேட்பாரற்றுச் சாவது இலங்கைத் தமிழன் என்று தவறாக நினைத்து, வழக்கம்போலச் சும்மா இருக்கிறீர்களா?

போன வாரம் என்று நினைக்கிறேன். இஸ்ரேலில் ஒரு இஸ்ரேலில் வசிக்கும் பாலஸ்தீனியனை நடுரோட்டில் பாய்ண்ட் ப்ளாங் ரேஞ்சில் சுட்டுக் கொன்றார்கள். பாலஸ்தீனத்திலிருந்து எல்லை தாண்டி வந்ததற்காக அவனைப் போட்டுத் தள்ளவில்லை. கட்டட வேலைகளுக்காக உபயோகிக்க வைத்திருந்த கனரக வாகனமொன்றை ஓட்டிக்கொண்டிருந்தவன் அதே வாகனத்தைக்கொண்டு சாலையில் தாறுமாறாக ஓட்டி கார்கள் பேருந்து என்று கண்ணில் தென்பட்ட அனைத்தின் மீதும் மோதிச் சாய்த்து மூன்று பொதுமக்களைக் கொன்றுவிட்டு, இன்னும் மதம்பிடித்த யானைபோல வாகனத்தைத் தொடர்ந்து ஓட்டிக்கொண்டிருந்தான். இஸ்ரேலிய காவலர்கள், உளவாளிகள் விரட்டிச் சென்று வாகனத்தின் மீதேறி - எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று - அந்த நபரை - மேலும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்க - போட்டுத் தள்ளினார்கள். யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. பேச்சு வார்த்தைக்குக் கூப்பிடவில்லை. அங்கேயே உடனடித் தீர்ப்பு!

இந்திய கடற்படை என்று ஒன்று செயல்படுகிறதா? இம்மாதிரி அபாயகரமான கடற்பகுதியைக் காக்காமல் வேறு எங்காவது சொந்தபந்தங்களுக்கு மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார்களா? மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கித் தீர்க்க வேண்டாமா அவர்களை? அதைச் செய்யாமல் அவர்கள் கால்களை ஏனய்யா நக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

தன்னாட்டு மக்களை கொசு அடிப்பது போல தினமும் கொல்லும் ராணுவத்தை வரவழைத்து தன்னாட்டிலேயே பயிற்சி அளிக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்ன நடந்தாலும் தேமேயென்று கோழையாக இருப்பதை அஹிம்சை என்று தப்பாகத் புரிந்துகொண்டிருக்கிறார்களோ?

எனக்கு வருகிற ஆத்திரத்தை எப்படிக் கொட்டுவது என்று தெரியவில்லை. வாழ்நாளில் உபயோகிக்காத கெட்டவார்த்தைகளையெல்லாம் சொல்லித் திட்டவேண்டும் போல இருக்கிறது.

அவனவன் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு மூன்று வேளை தின்று கொழுத்துக்கொண்டு தினமும் ஒரு கலைநிகழ்ச்சி, அரைகுறை நங்கைகளில் தொப்புள் நடனங்கள், புதிய திரைப்படம் என்று பார்த்துக்கொண்டு பதவி நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கையில் அவர்களது செத்த தோலுக்கு நாட்டின் ஓரத்தில் வாழ்க்கையின் ஓரத்தில் அமர்ந்தபடி விழாமலிருக்கக் கடலுக்குத் தினமும் செல்லும் மீனவர்களின் துயரங்கள் உறைக்குமா?

நாட்டு மக்களைக் காக்கத் துப்பில்லாத அரசன் நாசமாய்த்தான் போவான். இவர்களெல்லாம் தலைவர்களா? த்தூ..... போங்கய்யா, போய் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ளுங்கள்.

உங்களது தேசத்தில் இப்படி ஜந்துக்களைப் போன்ற வாழ்க்கையை வாழ்வதைவிட அண்டைய நாட்டின் ராணுவத்தினால் சுடப்பட்டுக் கடலில் சாவது எவ்வளவோ மேல்.

போய் அடுத்த தேர்தலுக்கான வியாபாரத்தைக் கவனியுங்கள்.

ச்சீ!

***

Sunday, June 29, 2008

நாட்டையாளும் புழுக்களும் சொரணையற்ற நாமும்!


செய்தி: தமிழ்முரசு.காம்

நாட்டைக் காத்த மானக்ஷாவின் இறுதி அஞ்சலி

வி.ஐ.பி. அரசியல்வாதிகள், முப்படை தளபதிகள் "மிஸ்ஸிங்"

நன்றி மறவாத வங்கதேசம்


பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு வெற்றித் தேடித் தந்த முன்னாள் ராணுவத் தலைமை தளபதி பீல்டு மார்ஷல் மானக்ஷாவின் (Sam Hormusji Framji Jamshedji Manekshaw) இறுதிச் சடங்கில் ஜனாதிபதி, பிரதமர், வி.ஐ.பி அரசியல்வாதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வங்கதேச முப்படைத் தளபதிகள் மட்டும் நன்றி மறக்காமல் தங்கள் நாட்டின் விடுதலைக்கு காரணமான மானக்ஷாவுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1971ம் ஆண்டு போர் நடந்தபோது இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தவர் ஜெனரல் மானக்ஷா. இவர் வகுத்த போர் யுத்திகள்தான், பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவிடம் சரணடைய வழிவகுத்தது. அப்படி நாட்டையே காப்பாற்றிய ராணுவ தளபதி மானக்ஷா தனது 94 வயதில் நேற்று முன்தினம் இறந்தார்.



நியாயப்படி பார்த்தால் முன்னாள் ஜனாதிபதியோ, பிரதமரோ இறந்தால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைவிட இவருக்கு அதிகமாகவே கொடுத்திருக்க வேண்டும். ஆனால், மானக்ஷாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர்கள் உட்பட எந்த அரசியல் வி.ஐ.பி.க்களும் நேரில் வரவில்லை. ஏன், நமது நாட்டின் முப்படைத் தளபதிகள் கூட இதில் கலந்து கொள்ளாததுதான் வருத்தம் அளிக்கும் விஷயம்.

தரைப்பட தளபதி ரஷ்யா சென்றுள்ளதால், அவரால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் கூறலாம். ஆனால் கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி மேஜர் ஆகியோர் டெல்லியில்தான் இருந்தனர். அவர்கள் நேரில் வராமல் தங்கள் சார்பில் மலர்வளையம் வைக்க தனக்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரிகளை அனுப்பிவைத்து விட்டனர். ராணுவ இணையமைச்சர் பள்ளம் ராஜூ மட்டும் இந்தியா சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தினார். மற்றவர்கள் சார்பில் மலர்வளையம் மட்டுமே வைக்கப்பட்டது.

வங்கதேச விடுதலைக்கு இந்திய ராணுவ தலைமை தளபதி மானக்ஷா காரணமாக இருந்தார் என்பதற்காக அந்த நாட்டின் முப்படை தளபதிகள் சமீன், அலீம் சித்திக்தி ஆகியோர் நேரில் ஆஜராகி மானக்ஷாவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இவர்களின் நன்றி உணர்வு கூட, சொகுசு வாழ்க்கையில் புரளும் நம் நாட்டு வி.ஐ.பி.க்களுக்கு இல்லாமல் போனதுதான் வேதனை. பேருக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டுவிட்டு கண்டுகொள்ளாமல்பலர் இருந்து விட்டனர்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆட்சியை கவிழாமல் காப்பாத்துவது எப்படி என்ற தீவிர ஆலோசனையில் டெல்லி வி.ஐ.பி அரசியல்வாதிகள் இருந்துவிட்டனர். அவர்களே செல்லாதபோது நாம் ஏன் செல்ல வேண்டும் என மற்றவர்கள் இருந்து விட்டனர்.
இது குறித்து ராணுவ பிரிகேடியர் ஒருவர் கூறுகையில், "நாட்டுக்காக போராடிய ஹீரோக்களுக்கு நமது நாட்டில் மதிப்பில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியினருக்கு இப்போது விழா கொண்டாடி மதிப்பளிக்கப்படுகிறது. ஆனால் நாட்டை காத்த உண்மையான ஹீரோக்களை போருக்கு பின் மறந்து விடுகிறார்கள்" என்றார்.

****

அவமானமாக உணர்கிறேன்! :(

Tuesday, April 22, 2008

National G(Sh)ame?

செய்தி:

இந்திய ஹாக்கி சம்மேளனத்தின் செயலர் கெ.ஜோதிகுமரன் இந்திய ஹாக்கி அணியில் வீரர்களைச் சேர்ப்பதற்காக லஞ்சம் வாங்கிய வீடியோ காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. ஐந்து லட்சம் ரூபாய் வரை ஜோதிகுமரன் லஞ்சம் பெற்றதை அத்தொலைக்காட்சி நிறுவனம் அப்பட்டமாய் படம் பிடித்துக் காட்டியது. இதனையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் 1994 ஆண்டுமுதல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஹாக்கி சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.கில் இந்திய ஹாக்கி வரலாற்றில் இது ஒரு துரதிர்ஷ்ட அத்தியாயம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்தியாவிற்கே பெருமை தேடித் தந்த அந்த ஜோதிகுமரன் இவர்தான்!



'துரதிர்ஷ்ட அத்தியாயம்' என்று குறிப்பிட்ட அந்த எம்.எஸ்.கில் எப்படிப்பட்ட உத்தமர்? அவர் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு அந்த வழக்கு பத்து பதினைந்து வருடங்களாக நடப்பதாக நினைவு. அவரால் எப்படி தொடர்ந்து பதவியில் இயங்க முடிகிறது? 120 கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் ஒரு தேசிய விளையாட்டைத் திறம்பட நிர்வகிக்க வேறு ஆட்களே இத்தனை ஆண்டுகளாகக் கிடைக்கவில்லையா?

பிரபுஜி வேறு உணர்ச்சி வசப்படாமலிருப்பது நல்லது என்று சொல்கிறார். ஆனால் எனக்கு என் வாழ்நாளில் இதுவரை உபயோகிக்காத எனக்குத் தெரிந்த அனைத்துத் "தூய தமிழ் வார்த்தைகளையும்" இப்போது உபயோகிக்கவேண்டும் போல இருக்கிறது.

அவர்கள் இருவரையும் கப்பைக் கால்களை அகட்டி நிற்க வைத்து ஹாக்கி மட்டையை வைத்து ஹாக்கி பந்தை அவர்களது பந்துகள் மீது ஒரு பெனல்ட்டி ஸ்ட்ரோக் அடிக்க வேண்டும் போலிருக்கிறது.

காசுக்காக கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு தேசத்தைக் கூட்டிக்கொடுக்கும் இவர்களை என்ன செய்யலாம்?

இந்தியாவின் மானத்தோடு விளையாடும் இவர்கள் மாதிரி - ஜந்துகள் புழுக்கள் என்று இவர்களைக் குறிப்பிட்டு அந்த வாயில்லா ஜீவன்களை அவமானப்படுத்த விரும்பவில்லை - $#%^*@-கள் எப்போது வேட்டையாடப்படுவார்கள்?

++++

Friday, April 18, 2008

மாக்கள்!



இந்தியன் படத்தில் எரிந்த மகளை வண்டியில் போட்டு எடுத்துக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்காக நாய் மாதிரி அலைவார் கமல். வைட்டமின் 'ப' கண்ணில் படாதவரைக்கும் மனிதர்களைப் பன்றிகள் போல நடத்தும் மருத்துவமனையில் அவர் அல்லாடிக்கொண்டிருக்க அங்கே மழையில் நனைந்துகொண்டு இறந்துபோவார் மகள். அக்காட்சியைப் பார்க்கும்போது கொழுந்துவிட்டெரியும் தீயின் நடுவில் நின்ற உணர்வு எழுந்தது.

இதையொட்டிய சமீபத்தில் படித்த செய்தியொன்றை நாளிதழ்களில் படிக்க நேரிட்டபோதும் தீயின் நடுவில் நிற்கவேண்டியிருந்தது. அச்செய்தி:

பெரம்பூர் மாநகராட்சியில் பிரசவத்திற்கு வந்த தாயும் சேயும் சரியான சிகிச்சையின்றி மரணமடைந்தனர். அப்பெண்ணின் வயசாளியான தாயார் மரித்துப் போன பச்சிளங் குழந்தையை ஒரு கையில் வைத்துக்கொண்டு உயிருக்குப் போராடிய மகளை மீன்பாடி வண்டியில் ஏற்றி இரவெல்லாம் அலைந்து திரிந்தாராம்.

இரண்டே வரிகளில் இது இருந்தாலும் பெருங்கூட்டத்தின் நடுவே நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்ட உணர்வைத் தந்து கூசிக் குறுகச் செய்தது இந்தச் செய்தி. பிரசவச் சிக்கல்களில் தாயும் சேயும் மரித்தார்களா அல்லது தகுந்த சிகிச்சையின்றி மரித்தார்களா என்பது உண்மை வெளியில் வரும்போது தெரியும்தான். ஆனாலும் அரசு மருத்துவமனைகள் இயங்கும் லட்சணத்தை நேரில் பார்த்த அனுபவத்தைக் கொண்டு பார்க்கப்போனால் அவர்களுக்குத் தகுந்த சிகிச்சைக் கிடைக்காது போயிருக்கும் என்பதைத்தான் நம்பவேண்டியிருக்கிறது.

கொந்தளிக்கும் மனதுடன் வார்த்தைகளைக் கோவையாக எழுத வரவில்லை. ஆனாலும்..

மனிதன் மிருகங்களைவிட மிகவும் கேவலமானவன் என்று அடிக்கடி நிரூபணமாகும் சம்பவங்களில் இந்த அசம்பாவிதமும் ஒன்று.

மனசாட்சியைக் கொன்றுவிட்டு பணத்திற்காக அலையும் பேய்களினால் நிரம்பியிருக்கும் அத்தியாவசியச் சேவை இயந்திரங்களை எந்த அரசும் கவனிக்காமல் இப்படி பொதுமக்களின் உயிரை உதாசீனப்படுத்தி துச்சமாக மதித்து எதிர்கட்சி, ஆளும்கட்சி, கடந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று வெட்டியறிக்கைகளை விட்டுக்கொண்டு வெள்ளை வேட்டி சட்டையில் கறைபடாமல் வியர்க்காமல் இருக்கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு பொதுமக்களின் வரிப்பணத்தில் உண்டு கொழுத்து நாட்களை ஓட்டி காசுகளை எண்ணும் காவாலிக் கூட்டத்தினை நினைத்தால்........

அறுபத்தோரு ஆண்டுகளில் ஒரு எழவுக் கட்சியும், எந்த எழவு பிரதமரும், எழவு முதல்வரும் இன்ன பிற எழவுப் பெருச்சாளித் தலைவர்களும் ஒரே ஒரு துறையை - அதுவும் போக்கிடமற்ற ஏழை மக்களுக்கான - உயிர்காக்கும் சிகிச்சை முதல் எல்லா சிகிச்சைக்கும் அவர்கள் தஞ்சமடையவேண்டிய - ஒரே ஒரு மருத்துவ துறையைக்கூடவா - சிறப்பாக இயங்க வைக்க முடியவில்லை? என்ன கேவலம் இது!

இப்படிப் பட்ட சம்பவங்களை அனுமதித்துக்கொண்டு எப்படி இவர்களால் எந்தக் கூச்சமுமின்றி அடுத்தவேளைச் சோற்றைத் தின்ன முடிகிறது?

இவர்களுக்கு ஓட்டுப் போட்டு பதவியில் அமர வைத்த முதுகெலும்பற்ற கோழைகளான நம்மைப் போன்ற மக்களைத்தான் செருப்பாலடிக்க வேண்டும். ம்ஹும்.. மக்களா நாம்... மாக்கள்!

ச்சீ!

***

Monday, March 24, 2008

I know.. I know.. I know.. I know.. I know.........



யதேச்சையாக இருந்தாலும் இவ்வருடத்தில் விரல்விட்டு எண்ணுமளவு எழுதியவைகளில் இது மூன்றாவது பதிவு - மரணித்தவர்களைப் பற்றி. :(

வில்லன் என்றாலே அபத்தமான தருணங்களில் அபத்தமாகச் சிரித்து அபத்த ஒளியமைப்புக் காட்சிகளில் - கீழேயிருந்து சர்க்கஸ் லைட் அளவிற்கு பளீரென்று கலர் கலராக ஒளியை வில்லனின் முகத்தில் பாய்ச்சி - பசுவைக்கூட பயங்கரமாகக் காட்டி விடும் அது - பயங்கரமாகச் சித்தரிப்பார்கள் - அபத்தமான வசனங்களைப் பேசும் பாத்திரங்களையே பார்த்துவந்த தமிழ்ச்சினிமாவில் 'ஹீரோவை விட நல்லாருக்காருய்யா வில்லன்' என்று ரசிகர்களைப் பேச வைத்தவர் ரகுவரன் - ஹீரோவாக அறிமுகமாகி காணாமல் போகாமலிருப்பதற்காக வில்லன் வேடங்களை ஏற்று - அவற்றிலும் தனி முத்திரை பதித்தவர். என்ன செய்வது - நமது ரசிகர்களின் ரசனை அப்படி - ஏழாவது மனிதனில் (1982) அவர் கதாநாயகனாக அறிமுகமானார் - நல்ல படம் - ஆனால் ஏழு ரசிகர்கள்தான் வந்திருந்தார்கள் போல - வேறு வழி? - ஆனார் வில்லன். ஆனால் வித்தியாசமான வில்லன். ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தாத வில்லன்.

ரகுவரன் என்றதும் அவர் முத்திரை பதித்த படங்கள் நினைவுக்கு வருகின்றன:

ஒரு ஓடை நதியாகிறது

அருமையான படம். இன்றும் காதில் ஒலிக்கும் பாடல்கள். பாலு பாடிய சிறந்த பாடல்களில் நான் எப்போதும் "தலையைக் குனியும் தாமரையே" பாடலைச் சேர்ப்பேன்.

பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு - குழந்தை, பெற்றோர் இடையே நிகழும் உணர்வு ரீதியான உறவுகள், பிரச்சினைகள், போராட்டங்களை மையமாக வைத்து வந்த படங்களில் வெளுத்துக் கட்டியிருப்பார்.

சம்சாரம் அது மின்சாரம் - பெருவெற்றி பெற்ற படம். ஒரு மத்திய வகுப்புக் குடும்பத்தில் ஒருவராக அன்றாடப் பிரச்சினைகளையும் உறவு ரீதியான பிரச்சினைகளையும் கூட்டுக்குடும்பப் பிரச்சினைகளையும் அலசிய படம். விசுவுக்கு நிகராக ரகுவரன் முக்கிய பாத்திரத்தில் அசத்தியிருந்தார்.

காதலன், உல்லாசம், ரட்சகன் போன்ற படங்களில் நல்ல பாத்திரங்களில்.

முதல்வன்

தமிழ்த் திரைப்படங்களில் பொதுமக்களிடையே அதிகம் பேசப்பட்ட காட்சிகளில் முதல்வன் படத்தில் அர்ஜுன் முதல்வராக வரும் ரகுவரனைத் தொலைக்காட்சி நிலையத்தில் வைத்துப் பேட்டி காணும் அந்தக் காட்சி முக்கியமானது. ஒரு கட்டத்தில் பதில் சொல்லாமல் உதடுகளுக்குக் குறுக்காக விரலை வைத்து 'உஷ்' என்று 'நான் பேசப் போவதில்லை' என்று சைகை செய்துவிட்டு விழிகளில் வன்மம் கக்கும் அந்தக் காட்சியில் அர்ஜுனைத் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் ரகுவரன்.

என் சுவாசக் காற்றே - அரவிந்த சாமியோடு ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்திருப்பார் ரகுவரன்.

அஞ்சலி

மூளைவளர்ச்சி குன்றிய குழந்தையின் தகப்பனாக, மனைவியிடம்கூட உண்மையை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் போட்டுக் குமைந்து கொண்டு, கேள்வி கேட்கும் குழந்தைகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்து, அதே சமயத்தில் பாசத்தில் கட்டுண்டு திணறும் அந்தப் பாத்திரத்தை அவர் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தார். சாதாரணமாகவே குறைந்த வசனங்களைப் பேசக் கூடியவர் - மணி ரத்னம் படம் வேறு - நடிப்பதற்குக் கிடைத்த அபாரமான வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டார். என்றும் நினைவில் நிற்கும் படம்.

அமர்க்களம்

அஜீத் (எங்க அந்த அஜீத்?) கலக்கலான நடிப்பைத் தந்த படத்தில் அவருக்குக் கார்டியனாக ரகுவரன் படம் முழுதும் அஜீத்தை மட்டுமல்ல - நம்மையும் ஆக்கிரமித்திருப்பார்.

புரியாத புதிர்

கமல் சிகப்பு ரோஜாக்களில் 'நத்திங்.. நத்திங்... என்று சீவாத பென்சிலால் அழுத்தமாகக் கிறுக்கும் அந்தக் காட்சி நினைவிலிருக்கிறதா? கிட்டத்தட்ட அதே மாதிரியான காட்சி - ரகுவரன் I Know என்ற இரண்டு வார்த்தைகளை அவருடைய பிரத்யேகமான குரலில் விதவிதமான ஏற்ற இறக்கங்களுடன் மறுபடி மறுபடி சொல்லி நடித்த அந்தக் காட்சி அபாரமானது (கிட்டத்தட்ட 30 தடவைக்கு மேல் சொல்வார்). திகில் படத்திற்கு மேலும் திகிலூட்டியதில் அந்த வசனம் பேசி நடித்த ரகுவரனின் பங்கு அபாரமானது.

பாட்ஷா

கிட்டத்தட்ட பதினாறு வருடங்களுக்கு முன்பு ரஜினியை மதுரையில் அவர் தங்கியிருந்த பசுமலை தாஜ் ஹோட்டலில் பறவைகளின் இரைச்சல் மட்டுமே சூழ்ந்திருந்த ஒரு ரம்யமான சூழ்நிலையில் சந்தித்தது நினைவுக்கு வருகிறது (காதெல்லாம் கிர்ரென்று அடைத்துக்கொள்ள மூளை இயங்காமல் - ஜுரம் அடித்த - காந்தத்தில் சிக்குண்ட உணர்வைத் தந்த அவரது Charisma மறக்க முடியாதது) - அவர் நல்ல உயரம் - காதுவரையில் தான் நான் இருந்தது போல நினைவு - ரஜினி என்றாலே உடனடியாக நினைவுக்கு வரும் வெகுசில முத்திரைப் படங்களில் பாட்ஷா பிரதானமானது. அவரைப் போலவே உயரமான ரகுவரன் அவருக்கு எதிரியாக, வில்லனாக பாட்ஷாவில் கலக்கியிருந்தார். பின்னால் தாடி மீசையெல்லாம் வைத்துக்கொண்டு வரும் காட்சிகள் கண்றாவியாக இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி மிளிர்ந்தது ரகுவரனின் நடிப்பு! ரஜினி-ரகுவரன் ஜோடி அபார வெற்றி பெற்றது. மிஸ்டர் பாரத், சிவா, ராஜா சின்ன ரோஜா, முத்து, அருணாசலம், சிவாஜி என்று ரஜினியோடு பல படங்களில் இணைந்திருக்கிறார்.

கூட்டுப் புழுக்கள்

தென்றல் தழுவுவது மாதிரியான இன்னொரு அருமையான படம். என்னுடைய Sweet heart-உடன் நடித்திருந்தார்.

கமலோடு ஏன் ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை என்பது புரியாத புதிர்! மற்றபடி சத்யராஜ், விக்ரம், அஜீத், விஜய், அரவிந்தசாமி, மாதவன் என்று அநேக ஹீரோக்களுடன் அவர் நடித்திருக்கிறார். நடிப்பைப் பொருத்தவரை தனக்கென ஒரு தனிப்பாணியை ஏற்படுத்திக்கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர். அலட்டிக்கொள்ளாத வெள்ளெழுத்துக் கண்ணாடியுடன், மீசையில்லாது, ஒடிசலான உயர்ந்த தேகத்துடன், கோட், சூட்டெல்லாம் போட்டு நடித்த மிகவும் 'நட்பான வில்லன்' அவர்! இன்றும் கலக்க, அசத்தப் போவது யார் போன்ற நிகழ்ச்சிகளிலும், குரல் மாற்றிப் பேசும் எந்த மிமிக்ரி நிகழ்ச்சியானாலும், கமல், ரஜினி, எம்ஜியார், சிவாஜி, விஜயகாந்த் (பாவம்) ஆகியோருக்கு அடுத்தபடியாக ரகுவரன் போல் பேசிக் காட்டுபவர்கள் அநேகம் பேர். பிரபல நடிகர்களைப் போலவே பல வயதுகளிலும் ரசிகர்களைப் பெற்ற ஒரு intellectual villain ரகுவரன் என்று சொன்னால் மிகையாகாது. தமிழக அரசின் கலைமாமணி விருதினைப் பெற்றவர். ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றவர்.

கிட்டத்தட்ட 200 படங்களில் நடித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். மிகவும் குறிப்பிடத்தக்கது சிவசங்கரியின் 'ஒரு மனிதனின் கதை' (சின்னத்) திரைக்கு வந்தபோது நல்ல நிலையில் இருந்து குடியினால் சீரழிந்த பாத்திரத்தை ஏற்று அவர் இயல்பாக, அழகாகச் செய்திருந்தார். மிகவும் பேசப்பட்டது அது. பிறகு தியாகு என்ற திரைப்படமாகவும் வந்தது. இவ்வளவு நல்ல நடிகர் தனிப்பட்ட வாழ்க்கையில் குடி, போதை என்று உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டது சோகம். அவர் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவர் மீது கோபம்கூட வருகிறது. நல்ல படங்களைத் தரக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடிய நடிகர்களில் அவரும் ஒருவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கும் ரசிகர்களுக்கும் ஒரு இழப்பு.

'ஒரு ரகுவரனின் கதை' எடுக்கும்போது சில சமயங்களில் காலில் தங்கிவிடும் உடைந்த முள்ளின் முனை போன்று சிலகாலம் அவரது மறைவு நினைவுகளில் உறுத்திக்கொண்டு இருக்கும்.

+++++

Friday, March 14, 2008

Parent Trap - குட்டி பத்மினி - Lindsay Logan


குழந்தையும் தெய்வமும் (1965) என்றாலே நினைவுக்கு வருவது குட்டி பத்மினியின் ரெட்டை வேட நடிப்பு. வாய் கிழிய படம் முழுவதும் எல்லாரும் பேசிக்கொண்டே இருப்பார்கள் - நாடகத்திலிருந்து வெள்ளித் திரைக்கு இடம் பெயர்ந்த ஆரம்ப காலங்களில் படங்களனைத்திலும் வசனமும் பாடல்களுமே பிரதானமாக இருந்ததில் ஆச்சரியமில்லை - ஆனாலும் சுவாரஸ்யமாக இருந்தது. பல பாடல்கள் இனிமையாக இருக்கும் - என்ன வேகம் நில்லு பாமா, அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம், நான் நன்றி சொல்வேன் உங்கள் கண்களுக்கு, கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழிக் குஞ்சு ரெண்டுமிப்போ அன்பில்லாத காட்டிலே (த்சோ த்சோ) என்று நல்ல பாடல்கள்.

அப்பாவாக ஜேம்ஸ் பேண்ட் (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை) ஜெய்ஷங்கரும், அம்மாவாக ஜமுனா (எனக்கு மிகவும் பிடித்த பெண் பெயர்களில் ஒன்று!)வும் நடித்திருப்பார்கள். இரட்டைக் குழந்தைகள் வேடத்தில் குட்டி பத்மினி அட்டகாசமான நடிப்பைக் கொடுத்து தாய்மார்கள் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தார். குழந்தைகளில் ஒன்று அப்பாவிடமும் இன்னொன்று அம்மாவிடமும் - தனக்கொரு சகோதரி இருக்கிறாள் என்று அறியாமல் - தனித்தனியாக வளர்ந்து பின்பு பள்ளிச் சுற்றுலா ஒன்றில் எதேச்சையாக சந்தித்துக்கொள்கிறார்கள். அம்மா யாரென்றே தெரியாத அப்பாக் குழந்தையும், அப்பாவைப் பார்த்திராத அம்மாக் குழந்தையும் அவர்களுக்கு உதித்த யோசனைப்படி இடம்மாறி வீடு திரும்புகிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுபிடிக்காமல் பெற்றோரிருக்க, பெற்றோருக்கிடையே இருக்கும் ஊடல்களையும் பூசல்களையும் களைந்து இருவரும் ஒன்று சேர குழந்தைகள் எப்படி உதவுகிறார்கள் என்று எல்லாரையும் சுற்றிப் பின்னப்பட்ட அழுத்தமான திரைக்கதையுடன் குழந்தையும் தெய்வமும் படம் வெளிவந்த பெருவெற்றி பெற்றது.

ஏவிஎம்மினால் தயாரிக்கப்பட்ட இப்படத்தின் மூலம் 1961-இல் David Swift இயக்கி Hayley Millis இரு வேடங்களில் நடித்து வெளிவந்து ஆங்கிலத்தில் சக்கை போடு போட்ட Parent Trap என்ற படம்!



இந்தப் பழையை ஒயினைப் புதிய பாட்டிலில் ஊற்றி மறுபடியும் அமெரிக்கர்களின் தற்போதைய கனவுக்கன்னிகளில் ஒருவரான லிண்ட்ஸே லோஹன் பத்து வருடங்களுக்கு முன்பு சிறுமியாக இருந்தபோது (1998) Parent Trap என்ற அதே தலைப்பில் - தமிழில் மட்டும்தான் பில்லா, பொல்லாதவன் என்று மறுபடியும் வரலாமா? - அப்போதைய தொழில் நுட்பங்களைக் கொண்டு அசத்தலாகப் படம் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள. இந்தப் புதிய குழந்தையும் தெய்வமும் உலகம் முழுவதுமாக கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்களை வசூலித்துக் குவித்திருக்கிறது. இதில் அப்பாவாக நடித்திருப்பவர் The Day After Tomorrow-விலும் அப்பாவாக நடித்துப் புகழ் பெற்ற Dennis Quad. அம்மாவாக Natasha Richardson. இயக்கியவர் Nancy Meyers.

இப்போது கழுதையாகத் திரியும் Lindsay Lohan பதினொரு வயதுச் சிறுமியாக இப்படத்தில் நடித்து சக்கை போடு போட்டிருப்பார். அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இரட்டையரில் ஒருவர் லண்டனில் புகழ் பெற்ற டிஸைனர் பெண்ணிடமும் வளர்வார்கள. Vineyard வைத்திருக்கும் அப்பா இருப்பதோ அமெரிக்க மேற்குக் கடற்கரையின் Napa Valley-யில். கோடையில் பெரும்பாலான அமெரிக்கப் பள்ளிகள் நடத்தும் Summer Camp-இல் இரண்டு சகோதரிகளும் சந்தித்துச் செய்யும் அமர்க்களங்கள் மிகவும் ரசிக்க வைப்பவை. பிறகு இருவரும் இடம்மாறிக் கொள்ள அமெரிக்காவில் அப்பாவிடம் வளரும் சிறுமி விமானமேறி லண்டன் அம்மாவைப் பார்க்கப் போகிறாள். லிண்ட்ஸேயின் நடிப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அம்மாவை முதன்முறையாகச் சந்திக்கும்போது ஆனந்தக் கண்ணீர் விட்டுக்கொண்டு வெளிப்படுத்தும் முகபாவமென்ன, அப்பாவைச் சந்திக்கும் (இன்னொரு வேடத்தில்) வார்த்தைக்கு வார்த்தை 'அப்பா' என்று அழைத்து ஆனந்தப்படுவதென்ன? அப்பா தனது பெண் நண்பியைத் திருமணம் செய்யும் யோசனையை வெளிப்படுத்தியதும் கோபத்தில் பிரெஞ்ச் மொழியில் கத்துவதென்ன? பணத்திற்காக அப்பாவிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பெண் நண்பியைப் படாத பாடு படுத்தித் துரத்துவதென்ன? அப்பாவையும் அம்மாவையும் சந்திக்க வைத்து - இரவு உணவுச் சந்திப்பை அவர்கள் முதன்முதலில் அதே சொகுசுப் படகில் சந்திக்க வைப்பார்கள் - அருமையான வசனங்கள்- துணை நடிகர்களாக வரும் அப்பா வீட்டில் சமையல்கலைஞராக இருக்கும் Lisa Ann Walter - சிறுமி அம்மாவிடம் வளர்ந்த இன்னொரு குழந்தை என்ற தெரிந்ததும் ஒரு நடிப்பை வெளிப்படுத்துவாரே, சான்ஸே இல்லை! - அம்மாவின் சமையல்காரராக இருக்கும் Simon Kunz இருவரும் அட்டகாசமாக நடித்திருப்பார்கள். அப்பாவின் தற்காலிகக் காதலியாக வரும் Elaine Hendrix-ம் கலக்கியிருப்பார்.

கலகலப்பூட்டும் காட்சிகளுக்குப் படத்தில் பஞ்சமே இல்லை. இரட்டை வேடம் என்றாலே சுமாரான காட்சியமைப்புகளில் கிராபிக்ஸ் அது இது என்று தட்டையான படங்களையே பார்த்துப் பழகிய நமக்கு இப்படத்தில் நல்ல ஒளியில் எடுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான காட்சிகளில் லிண்ட்ஸே இரட்டை வேடத்தில் வரும் காட்சிகள் அருமையாக எடுக்கப்பட்டிருக்கும்.

நம்மூரில் குழந்தைகளோடு பார்க்கும் வகையில் படங்கள் வருவது அபூர்வம். இம்மாதிரிப் படங்களை - மொழி புரியாவிட்டாலும் - குழந்தைகளோடு பார்த்து மகிழலாம்.

++++++

Thursday, March 13, 2008

மன்னியுங்கள் ஸ்டெல்லா ப்ரூஸ்



தமிழில் வாசித்த எல்லா எழுத்தாளர்களின் பெயர்களையும்விட என்னை அதிகம் கவர்ந்த பெயர் ஸ்டெல்லா ப்ரூஸ். படித்தவற்றில் சட்டென நினைவுக்கு வருவது அது ஒரு நிலாக்காலம். எந்த வித கவர்ச்சிப் பூச்சுமன்றி எளிமையான நடையில் நீரோட்டமாக எழுதியவர்.

அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் ஒரு ஆண் என்பதையோ அவரது இயற்பெயர் ராம்மோகன் என்பதையோ அவர் மறைந்த நாள் வரை அறிந்திராத என் அறியாமையை எண்ணி வெட்கமாக இருக்கிறது.

மரணம் தந்த வருத்தத்தை விட அதை அவர் தேடிக்கொண்ட வழிமுறையை அறிந்து ஏற்பட்ட அதிர்ச்சியின் தாக்கம்தான் மிகமிக அதிகமாக இருந்தது.

சுஜாதா இயற்கையாக மரணமடைந்தார். வாழ்வில் பொருளாதார ரீதியாக எந்தச் சவால்களையும் சந்திக்காது பிரபலமானவராகவே மறைந்தார். அவரது மறைவு ஏற்படுத்தியது துக்கம்.

ஆனால் ஸ்டெல்லா ப்ரூஸ் மரணமடைந்தது பலத்த அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியது. கைவிடப்பட்ட முதியோர்களைப் பற்றிய செய்திகளை அடிக்கடி படிக்க நேரும்போதெல்லாம் மிகவும் வலிக்கும். இருப்பதிலேயே கொடுமையானது முதுமையில் வறுமை - ஸ்டெல்லா அவர்கள் மனைவியின் பிரிவினால் ஏற்பட்ட தனிமையைத் தாங்காமலும், வறுமையினை எதிர்கொள்ள முடியாமலும் தற்கொலை என்ற அதீத முடிவைத் தேடிக்கொண்டது அறிந்து - குற்றமிழைத்தது போல உணர்ந்தேன். பிரபலமானவர்களுக்கு ஒன்று என்றால் ஓடிவர ஆயிரம் பேர் இருக்க ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கப்படுகிறதே என்று வேதனையாக இருந்தது.

அவர் இம்மாதிரி ஒரு துன்பமான நிலையில் இருந்தார் என்பதைக்கூட தமிழ் எழுத்துலகம் அறிந்திராதிருந்தது (அல்லது நான் அறிந்திராமலிருந்தது) பெரிய அவமானம். கேவலம்.

எப்படி யார் கண்ணிலும் படாமல் போய் விட்டார் என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. காலம் மறக்கச் செய்துவிடுகிறதோ? வெளிநாட்டுக்கு வேலை விஷயமாகக் கிளம்ப நேரும்போது பெற்றோரைப் பிரி்ந்து செல்லும் அந்தச் சூழ்நிலையில் தனியாகச் சமாளிப்பார்களா? ஏதாவது உடல்நிலை சரியில்லையென்றால்கூட சட்டென ஓடி வரமுடியாதே என்று பல்வேறு எண்ணச்சிக்கல்களில் உழன்றுகொண்டே கிளம்பி வந்து சில காலம் கழித்து வாரயிறுதித் தொலைபேசி அழைப்புகளிலும், முக்கிய நாட்களின் தொலைபேசி அழைப்புகளிலும், flicker-இல் புகைப்படங்களையிட்டு நண்பனுக்கு அனுப்பி பெற்றோரிடம் காட்டச் சொல்வதிலும் - ஆரம்ப நாட்களின் வலிகளை மறந்து - மரத்து - ஒரு விதமாக வாழ்க்கையை வெளிநாட்டில் ஓட்டுவதில் - வாழ்க்கையின் முக்கியத்துவங்களும், கவலைகளும் மாறிவிட்டதைப் போல - ஸ்டெல்லா ப்ரூஸ் போன்ற எத்தனையோ எழுத்தாளர்களை ரசித்துப் படித்த காலங்கள் தேய்ந்து நினைவிலிருந்தே கிட்டத்தட்ட மறைந்து போய்விட்ட வேளையில்தான், அவர்களது மறைவின் மூலம் எத்தகைய அவல நிலையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்ற உண்மை உறைத்துச் செவிட்டிலடிக்கிறது. இன்னும் எத்தனை கலைஞர்களும், படைப்பாளிகளும் இப்படி அவலநிலையில் கவனிப்பாரற்று மூலையில் இருளில் போடப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

முன்பே அவரை நினைவு கூர்ந்திருந்தால் அவரது தனிமையைத் தீர்க்காவிட்டாலும், வறுமையையாவது போக்கியிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. வாசகர்களின் தொடர்புமற்று எழுத்தாளன் இப்படி ஐயோவென முடிவைத் தேடிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவது என்னைப் போன்ற வாசகர்களின் குற்றமாகத்தான் பார்க்க முடிகிறது. நான் ஏதாவது செய்திருக்க வேண்டும் - செய்யவில்லை.

உங்கள் மரணத்திற்கு ஏதோவொரு வகையில் நானும் உடந்தை. வருத்தத்துடன் குற்றவுணர்ச்சியும் தொக்கி நிற்கிறது.

மன்னியுங்கள் ஸ்டெல்லா ப்ரூஸ் அவர்களே!

++++

சுஜாத்........ஆ!



'எண்ட்டர் த ட்ராகன்' படம் பாத்தியா என்று பசுபதி கேட்டபோது 'இல்லை' என்றேன்.

அது வரை நான் பார்த்த ஆங்கிலப் படங்களெல்லாம் பள்ளியில் மொத்தமாக எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஆசிரியர்களோடு சென்று புழுங்கித் தள்ளிய மதியக் காட்சி வரிவிலக்கு பெற்ற படங்கள் மட்டும்தான். அவற்றில் மிருகங்கள் மட்டுமே நடித்திருந்தன. ஒரு முறை பாடி பில்டர் படமெல்லாம் போஸ்டரில் அடித்திருந்தார்களே என்று ஆண்கள் மட்டுமே வந்திருந்த - நடுவில் பெண்கள் பகுதியைப் பிரிக்க போட்டிருந்த தட்டிகளைத் தற்காலிகமாக எடுத்திருந்தார்கள் - மாலைக்காட்சி படத்தில் முதற்காட்சியிலேயே அந்தப் பெண் 'புன்னகை மட்டும் அணிந்து வர' அடுத்த ஒரு வாரத்திற்கு ஜன்னி கண்டதால் பிறகு ஆங்கிலப் படங்களைப் பார்க்க முயற்சிக்கவில்லை.

பசு 'வாத்தியார் எண்ட்டர் த டிராகனுக்கு விமர்சனம் எழுதியிருக்கார் படிச்சயா?' என்றான். 'எதுல? இல்லையே' என்றேன். 'கேளு' என்று சொல்லிவிட்டு அவன் லேசான சிரிப்புடன் தொடங்கினான் 'ப்ரூஸ்லி கராத்தே முறையில் எதிரிகளிடம் சண்டை போடுகிறார். கராத்தே முறையில் பறந்து பறந்து எதிரிகளைத் தாக்குகிறார். கராத்தே பாணியில் எதிராளியின் கொட்டையைப் பிடித்து நசுக்குகிறார் நமக்கு வலிக்கிறது' என்று சொல்லி முடித்துவிட்டு கடகடவென்று சில நிடங்கள் தொடர்ச்சியாகச் சிரித்ததும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டதும் நினைவில் நிழலாடுகிறது. கிட்டத்தட்ட ஆங்கிலப்படங்களைப் பார்ப்பது போன்ற பிரமிப்பைக் கொடுத்த வாத்தியாரின் எழுத்துகளுக்கு நாங்களெல்லாம் அடிமையாகியிருந்த காலகட்டம் அது. தொடர்கதை, சிறுகதை, கட்டுரை என்று எதைப்படித்தாலும் அதில் ஊடறுத்திருக்கும் நையாண்டிகளைப் பற்றிப் பேசிப்பேசி ஆனந்தப்படுவது வழக்கமான பொழுதுபோக்கு.

ஓவியர் ஜெ.யின் சித்திரக் கவர்ச்சி, சுஜாதாவின் எழுத்துக் கவர்ச்சி என்று போதை தலைக்கேற கிடைத்த சந்து பொந்துகளிலெல்லாம் ஒளிந்துகொண்டு நானும் என் அண்ணனும் குமுதம் விகடன் போன்ற பத்திரிகைகளை யாருக்கும் தெரியாமல் சுஜாதா என்று கட்டையாக அச்சிடப்பட்ட பக்கங்களைப் புரட்டிப் புரட்டி வாசித்தது நினைவுக்கு வருகிறது. எப்போது அவருடைய எழுத்து எனக்கு முதன்முதலாக அறிமுகமானது என்று நினைவிலில்லை. ஆனால் வாசிப்புப் பழக்கம் துவங்கியதிலிருந்து அவருடைய எழுத்துகளையெல்லாம் படித்து வந்தது நினைவிருக்கிறது. நிதானமான, அறிவாளி கணேஷும், உற்சாகம் கொப்பளிக்கும் வசந்த்தும் ஆண்களாக இருந்தாலும் எங்களையெல்லாம் வசீகரித்துக் கொண்டேயிருந்தார்கள. கதையில் வசந்த் என்று அவன் பெயர் வரும் வாக்கியத்திலிருந்து அடுத்த வாக்கியத்திற்குப் போவதற்குள் யாராவது பெண்ணிடம் ஏதாவது குறும்பு செய்திருப்பான் அவன். மூன்றாவது வாக்கியத்தில் கணேஷ் கட்டாயம் அவனை ஒருமுறையாவது அதட்டியிருப்பார் என்பது அவர்கள் வரும் கதைகளில் பிரதானமாக இருந்தாலும் அலுத்ததேயில்லை.

ஆதர்ச திரைப்படக் கதாநாயகர்களை அந்த அளவு ரசித்தோமோ இல்லையோ வாத்தியாரின் எழுத்துகளை நிறையவே ரசித்தோம். என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நைலான் கயிறு, பிரிவோம் சந்திப்போம், தூண்டில் கதைகள், கற்றதும் பெற்றதும் என்று சகட்டு மேனிக்கு இந்தியச் சாலைகளில் ஓடும் பலவித வாகனங்களைப் போல, பல களன்களைக் கொண்ட எழுத்துகளில் பயணித்துக்கொண்டே இருந்தார். ஜீனோவைக் கழற்றி செயலற்றதாக ஆக்கியபோது நிஜமாகவே கண்ணில் நீர் பெருகியது. அந்த எழுத்துகள் அழ வைத்திருக்கின்றன. நிறையவே சிரிக்க வைத்திருக்கின்றன. ஏராளமானவற்றை ரசிக்க வைத்திருக்கின்றன.

காலப் போக்கில் வாழ்க்கையின் ஓட்டத்தில் ஓடி இணையத்தில் தமிழ் குழுக்கள், வலைப்பதிவுகள் என்று பரவலாக தமிழை மறுபடியம் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்ததும் அச்சில் வாசித்தவற்றில் சிலவற்றை திரையில் வாசிக்க முடிந்ததும், ஆர்வத் தீ மறுபடியும் பற்றிக் கொண்டு எரிந்து சனி காலையின் அம்பல அரட்டையில் முதன்முதலாக முகமன் சொல்லி அவரைச் சந்தித்தபோது 'யாராச்சும் அவர் பெயரில் அரட்டையடிக்கிறார்கள்' என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அரட்டை துவங்கியதும் கேள்விகளுக்குத் தெறித்து விழுந்த கூர்மையான அரைவரி அல்லது ஒரு வார்த்தை பதில்களில் அவர்தான் என்ற உறுதியானதும் உற்சாகமாக சனிக்கிழமை எதையும் தவறவிடாதிருந்தேன். பின்பு எப்படியோ அரட்டை நின்று போனது.

பிரபலமானவர்களைச் சந்தித்தால் அதுவரை நம் மனதில் எழுப்பியிருக்கும் பிம்பம் உடைந்து போகும் என்று அவர் குறிப்பிட்டதை வாசித்துவிட்டு அவரை நேரில் சந்திக்கவேண்டும் என்ற நினைப்பே எழாமலிருந்தது. அப்படியே சந்திக்க நினைத்தாலும் 'அவர் மாதிரி பெரியாளுங்களையெல்லாம் நம்மால் சந்திக்க முடியமா?' என்ற அவநம்பிக்கையே ஓங்கியிருக்கும். அதனாலேயே அவரைச் சந்திப்பது என்பதைப் பற்றியெல்லாம் யோசித்ததே இல்லை.

2003-ஆம் வருட இறுதியில் விடுமுறைக்கு ஸ்ரீரங்கம் சென்றிருந்தபோதுதான் அது வரை தவமிருந்த அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அதைப் பற்றி மரத்தடியில் எழுதியது...

+++++
பள்ளியில் முதல் வகுப்பு சேர்ந்தபோது தாத்தா கைப்பிடித்து அழைத்துச் சென்று வகுப்பறையைக் கண்டுபிடித்து 'போ.. நல்லா படி' என்று கையை விட்டுச் சென்றதும் தனியாக வகுப்பறை வாசலில் நின்ற அந்தச் சில வினாடிகளில் ஒரு வித பய உணர்வு ஆட்கொண்டது. 'வாத்யார் எப்படி இருப்பாரோ? அடிப்பாரா? என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டும்?' என்று வயிற்றைப் பிசைந்தது. அதேபோல் இன்றும் இதயம் படபடத்தது. ஒருவித இனம் புரியா பயம் அடிவயிற்றைக் கவ்வியது. எதற்கென்று கேட்கிறீர்களா? வாத்தியாரைப் பார்க்கப் போனேன்.

அம்பலத்தில் நேற்று காலை அரட்டையில் கலந்துகொண்டு பேசியபோது, 'நாளை ஸ்ரீரங்கம் வருகிறேன்' என்று சுஜாதா சொன்னதும் துள்ளிக் குதித்தேன். அவரை தூரத்தில் நின்று பார்த்தாலே போதும் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டேன். 'ஸ்ரீரங்கத்தில் சகோதரன் வீட்டில் தங்குகிறேன். இதோ தொலைபேசி எண்' என்று கேட்பதற்கு முன்பே கொடுத்த அவரின் எளிமை பிரமிப்பூட்டியது. காலையில் அத்தொலைபேசி எண்ணை அழைத்ததும் அவரது சகோதரர் 'அவர்ட்டயே பேசுங்களேன்' என்று சுஜாதாவிடம் கொடுத்ததும் 'சொல்லுங்க சுந்தர்' என்று எளிதாக அவர் பேசத் தொடங்கியதும்- எதுவும் எதிர்பாராதது- ஆதலால் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. 'வெல்கம் பேக் டு ஸ்ரீரங்கம். ஒங்கக்கிட்ட பேசுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு ஸார்' என்று வாய்குழறச் சொன்னாலும் அவரைச் சந்திக்க வேண்டுமே என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். 'ஒரு அஞ்சு நிமிஷம் வந்து பாத்துட்டுப் போய்டறேன் ஸார்' என்று கேட்க 'இப்பவே வாங்களேன். என் ப்ரதர்கிட்டக் கொடுக்கறேன். அட்ரஸ் கேட்டுக்கோங்க' என்று ஜெட்வேகத்தில் சொல்லி விட்டுக் கொடுக்க முகவரி பெற்று, மனைவியை அழைத்துக் கொண்டு சற்றுத் தாமதமாகச் சென்று வரவேற்பறையில் அமர்ந்துகொள்ள, அவர் மதிய உணவிலிருந்தார்.

பதற்றமாகவே இருந்தது. வரவேற்பறை மிகுந்த ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருக்க வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் அவரது சகோதரர் வர, அவர் பின்னே மெதுவாக மெலிந்த தேகத்துடன் சுஜாதா. பேசவே தோன்றவில்லை. வணக்கம் தெரிவித்து அமர்ந்ததும், தொலைபேசியதுபோலவே சகஜமாக உரையாடலைத் துவக்கினார். அவரே அவரது சகோதரரிடம் அம்பல அரட்டையைப் பற்றியும் அதில் பங்குபெறும் நம் குழு நண்பர்களையும் பற்றிச் சொல்லி (பாங்காக் சீனியையும் நினைவில் வைத்துச் சொன்னார் மனிதர்!) அறிமுகப் படுத்தி 'மரத்தடில ரொம்ப நல்லாப் பண்றாங்க' என்றார்.

இருவருக்கும் இருவருடங்கள் வித்தியாசமாம். ஆனால் முகங்கள் அச்சு அசலாக ஒரே மாதிரியாக இருந்தன. இரா.மு., எல்லே மற்றும் க்ளப் பெரியவர்களைப் பற்றியும் குறிப்பிடத் தவறவில்லை. முகுந்த் பற்றியும் தமிழா உலாவியைப் பற்றியும் இந்த வாரக் கற்றதும் பெற்றதுமில் குறிப்பிட்டிருந்த ஓப்பன் சோர்ஸ் பற்றியும் பேசிவிட்டு 'ஒரு லட்சம் வார்த்தைகளுக்கு தமிழ் வார்த்தைகள் தேவையாயிருக்கு. ஓப்பன் சோர்ஸ்ல (லினக்ஸ்) தமிழ் கொண்டு வரணும். நீங்கள்ளாம் உங்களால முடிஞ்ச அளவுக்கு எடுத்துப் பண்ணுங்க' என்று சொன்னார். இது குறித்து நண்பர்களிடம் பேசவேண்டியிருக்கிறது. அம்பல அரட்டையில் பங்கு கொள்ளும் மரத்தடி நண்பர்கள் ஒவ்வொருவர் பற்றியும் குறிப்பிட்டுக் கேட்டார். என் மனைவியிடம் குடும்பத்தைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டார். ஓமான் மட்டும் துபாய் குறித்து சிலநிமிடங்கள் பேசினோம். நான் அறிந்த விவரங்களைச் சொன்னேன். வாய் பேசிக்கொண்டிருந்தாலும், கண்கள் அவர்மீதே இருந்தது. அவரது உடல்நிலை மிகவும் கவலையளித்தது. விடைபெறும்முன் மரத்தடி நண்பர்கள் சார்பாக, புத்தாண்டு வாழ்த்து மடல் ஒன்றை அவருக்கு அளித்துவிட்டு, தொந்தரவு செய்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வணங்கி விடைபெறுகையில் ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. மாலை ஆறுமணிக்கு அரிமாசங்கக் கூட்டம்.

நேற்று அரட்டையில் ஒரு சிறு உரையாடல்

சுஜாதா : 'நாளை மாலை அரிமா சங்கக் கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். அங்கு வாருங்கள்'

நான் : 'நான் அரிமா உறுப்பினர் இல்லை. ஆனால் சிம்மராசி. அந்தத் தகுதியில் உள்ளே விடுவார்களா?'

சுஜாதா : 'நானே ரிஷப ராசிதான். சிம்மத்திற்கு உணவு. என்னை விடும்போது உங்களையும் விடுவார்கள்'

விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்திற்குச் சென்று அங்கிருந்த அரிமாக்களிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு திஸ்கி, யூனிக்கோட் பற்றி கொஞ்சம் கொளுத்திப் போட்டதும் அவர்களுக்குப் பற்றிக் கொண்டது. காய்ந்து போன கம்பங்கொல்லையாக இருந்தார்கள். இ-கலப்பையைக் கொண்டு எந்த விண்டோஸ் மென்பொருள்களிலும், இணையத்திலும் எங்கு வேண்டுமானாலும் தமிழில் உழலாம் என்று சொன்னபோது நூறு தடவையாவது 'அப்படியா?' என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டார்கள்.

'எதாவது செய்யணும் ஸார்' என்றார்கள். திக்குத் தெரியாமல் தவிப்பது கண்கூடாகத் தெரிந்தது. இவர்களுக்கு, தமிழுக்காக இப்போதிருக்கும் இணையத் தொழில்நுட்பத்தைப் பற்றிச் சொல்ல ஆள் தேவை. ஆசாத் மற்றும் ராஜா சவுதியில் இணையத் தமிழை அறிமுகப் படுத்தியது நினைவுக்கு வர, அவர்களிடம் அதேபோல் இங்கும் செய்துகாட்டமுடியும் என்று சொன்னவுடன் ஆர்வத்துடன் 'செஞ்சிரலாம் சார். தேதி குறிச்சுட்டு சொல்றோம். நீங்க ஊர் திரும்பறதுக்குள்ள நடத்திரலாம்' என்று மறுபடியும் மறுபடியும் கேட்டுக் கொண்டார்கள்.

ராஜாவிடம்/ஆசாத்திடம் அந்த நிகழ்ச்சியின் agenda-வைக் கேட்கவேண்டும். அதேபோல் இங்கு நடத்திக்காட்டினால் ஊர் பற்றிக்கொண்டு தமிழ்த் தீ எளிதாகப் பரவும் என்று நம்பிக்கை தோன்றுகிறது. பார்க்கலாம். கூட்டம் சம்பிரதாயமாக நடந்து, சுஜாதா சிறிது சொந்தமாகவும், பலது ஏற்கெனவே எழுதிய விஷயங்களையும் சற்றுச் சிரமத்துடன் மூச்சு வாங்கிக்கொண்டு பேசினார்- அவரை உட்கார வைத்தே பேசச் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. பிறகு சில கேள்விகளுக்கு சுருக்கமாக விடையளித்தார்.

நன்றியுரை முடிந்து இரவு உணவு விருந்து துவங்குகையில் அறிமுகமாயிருந்த அரிமாக்களிடமும், வாத்யார் கூட்டத்தில் புகைப் படத்திற்கும், கையெழுத்திற்கும் சிக்கியிருந்ததால், அவரது சகோதரரிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் உடனே பகிர்ந்து கொள்ளும் ஆவலில் இந்தக் கடிதம்.

பசிக்கவில்லை. இன்று உறக்கம் வராது!

+++++

எத்தனையோ சிறுகதைகள், குறுங்கதைகள், நாவல்கள் என்று இது அது என்றில்லாமல் ஒரு சராசரி மனிதனின் வாழ்வில் நேரடியாகவோ மறைமுகமாகவோ குறுக்கிடும் அனைத்துத் துறைகளைப் பற்றியும் கட்டுரையாகவோ, கதையாகவோ, நாவலாகவோ, கேள்வி பதிலாகவோ, கற்றதிலும் பெற்றதிலுமோ அயராது தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டே வந்திருக்கிறார் அவர்.

எந்த சஞ்சிகையாக இருந்தாலும் கடைசிப் பக்கத்திலிருந்துதான் படிப்பேன் - விதிவிலக்கு அவரது எழுத்துகளைத் தாங்கி வருபவை.

+++++

ஒரு வரிக்கதை, அரைவரிக்கதை, சிறுகதை, குறுங்கதை, கவிதை, நாவல், தூண்டில் கதைகள் என்று நானறிந்திருந்த எழுத்தின் சாத்தியங்களையும் எல்லைகளையும் தொடர்ச்சியாக விரித்துக்கொண்டே போனவர் அவர்.

இயல்பாகவே வரும் நகைச்சுவையும் நையாண்டியும் ஒரு வரம். அது அவருக்கு ஸ்ரீரங்க கோபுரமளவிற்கு வாய்த்திருந்தது. அவரது அஞ்சலிக் கூட்டத்தில் 'எதைக் கேட்டாலும் அதெல்லாம் பெரிய கம்ப சூத்திரமில்லப்பா சிம்ப்பிள்தான் என்று சொல்லிவிடுவார். கம்ப சூத்திரத்தையே அப்படித்தான் சொல்லுவார்' என்று குறிப்பிட்டாராம் கமல். உண்மை. எளிமையாக, அதே சமயத்தில் சுருக்கமாக, ஸ்வாரஸ்யமாக எழுதும் அவரது எழுத்து நடையின் பாதிப்பு இல்லாத ஆரம்பகால எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம் போல.

சினிமான்னா என்ன என்று கேட்கப்பட்டபோது 'அது நெசம் போல பொய் சொல்றது' என்றாராம்.

கல்லூரிக் காதல் கதையை எழுதிக்கொண்டு வந்து அவரிடம் கருத்து கேட்டு நச்சரித்தவரிடம் 'காதல் கதையை எழுதணும்னா உங்களுக்குக் காதல் அனுபவம் இருக்கணும் ஸார்" என்றவரிடம், அந்த நபர் கேட்டது 'நீங்ககூடதான் கொலைக் கதையெல்லாம் எழுதறீங்க'!

+++

நதிகளைச் சார்ந்த இடங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு நதிகள் மீதான ஸ்நேகத்தை மற்றவர்களால் புரிந்து கொள்வது கடினம். அவ்விடங்கள் சார்ந்து வந்த படைப்புகள் என்னை எப்போதும் பாதித்திருக்கின்றன. அது எழுத்து வடிவிலான படைப்புகளாயினும் சரி - மஹாநதி போன்ற படங்களும் சரி.

படித்த தினத்திலிருந்து இன்று வரை இன்னமும் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கும் அவரது நாவல் - "ஆ". சென்னையில் துவங்கினாலும் கதை ரயிலேறி திருச்சி, ஸ்ரீரங்கம், பாலத்திற்கு அந்தப் புறம் நின்று வாவா என்று அழைக்கும் ஆசிரியை, வற்றிய நதி நடுவே நிகழும் சம்பவங்கள் என்று என்னை ஹிப்னாடிஸத்தில் ஆழ்த்தியது போல, நானே அக்கதையின் பாத்திரமாக இருப்பது போல உணரவைத்த படைப்பு அது. தொடர்கதையாக வந்து ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் ஆ-வென 'ஒரு கமர்ஷியலுக்காக' அவர் முடித்ததை ஆர்வத்துடன் படித்து அடுத்த வார ஆ-விற்காகக் காத்திருந்த நாட்களையும், பின்னாளில் புத்தகமாக வாங்கியும் ஏராளமான முறை சலிக்காது படித்ததையும், புத்தகத்தை அன்றைய காதலி, இன்றைய மனைவிக்கு அவருடைய பெயரை முதற்பக்கத்தில் 'To my dear --+ஆ' என்று எழுதிப் பரிசளித்ததையும் நினைக்கையில் - எனது பல்வேறு வாழ்க்கை நிலைகளில் அவரது பாதிப்பை உணரமுடிகிறது.

ஆ-வைப் படமாக எடுத்தால் நாயகனே இல்லாது கேமராக் கோணத்தையே நாயகனது கோணமாகக் காட்டி முழுப்படத்தையும் எடுத்தால் எப்படியிருக்கும் என்றெல்லாம் யோசித்ததுண்டு!

ஆ-வை பற்றி நினைக்கும் போது, வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் நமது செயல்பாடுகளெல்லாம் நம்மிடம் நாமே மனதிற்குள் பேசிக்கொள்ளும் உரையாடல்களின் விளைவாகவே இருக்கின்றன என்று தோன்றுகிறது. ஆ -ஆடிட்டரி ஹலுஸினேஷன் - மாதிரியான குரல் பிரமைகள் எதுவும் இல்லாவிட்டாலும் மனதில் ஒலிக்கும் என் குரலே விரல்கள் வழியாக இப்பதிவில் ஒலி்த்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

ஆ-வைப் போலவே அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகளும், ஸ்ரீரங்கத்துக் கதைகளும் எனது வாழ்க்கையின் பல்வேறு பக்கங்களைத் தூசி தட்டியிருக்கின்றன.

+++++

விக்ரம் தொடர்கதையை தொடர்ச்சியாகப் படித்து அது படமாக்கப்பட்டபோது 'ஐயய்யோ சலாமியாவெல்லாம் கதையாகப் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கும். படத்திற்கு அது சரிவராது - நல்ல படம் வீணாகி விடுமே' என்ற கவலையாக இருந்தது. மதுரை மதி திரையரங்கத்தில் முதற் காட்சிக்குச் சென்று பார்த்தபோதும் அதிவேகமான முதல் பகுதியின் வெற்றியை, கற்பனை சலாமியாவும், அம்ஜத்கான், மனோரமா, ஜனகராஜ் தொடர்பான கொடுமையான நகைச்சுவைக் காட்சிகள் கெடுக்கப் போகிறது என்று நினைத்து வருந்தினேன். சுஜாதா இதைக் கமலிடம் சொல்லியிருக்கக்கூடாதா என்றும் நினைத்துக் கொண்டேன். 'கமலின் ஆறுகோடி ரூபாய் கனவு' என்று புத்தகமாகவும் வந்த நினைவு. ஒரு கேள்வி பதிலில் கமல் 'விக்ரம்?' என்ற ஒற்றை வார்த்தைக் கேள்விக்கு 'விரயம்' என்று பதிலளித்திருந்தார். இன்றைக்கெல்லாம் ஷங்கர் விக்ரம் படம் எடுத்திருந்தால் அந்த ஆறு கோடி ரூபாயை 'காப்பிச் செலவுக்கு' கணக்கு எழுதியிருப்பார்!

++++++

நட்புக்காக எழுத்தில் அவர் செய்த சமரசங்கள் அவர் மீது நிறைய பேருக்கு வெறுப்பையும் சம்பாதித்துக்கொடுத்திருந்தது. அவர் சினிமாவிற்குச் சென்றிருக்கக்கூடாது என்றுதான் இன்றுவரை நினைக்கிறேன். பத்திரிகைகளில் 'ஏராளமான மார்புகளுடன் அவள் வந்தாள்' என்று அவர் எழுதினால் அதைக் கண்கொட்டாது படித்து ரசிப்பவர்கள் அது படமாக்கப்பட்டால் 'ச்சீ' என்று விமர்சனம் செய்வார்கள் என்பதை உணர அவர் ஏனோ மறந்தார். கலாசாரக் காவலர்களின் பல்வேறு முகங்கள் ரத்தம் ஒரே நிறத்திலிருந்து பாய்ஸ் வரை அவரைத் துரத்தித் துரத்தி அச்சுறுத்தியதை எண்ணிப் பார்த்துக் கொள்கிறேன். அப்படி அச்சுறுத்தியவர்களுக்கும், இன்று வலையுலகில் சங்கடமேயில்லாமல் அவருக்கு அன்று மறுக்கப்பட்ட அதே 'எழுத்துச் சுதந்திரத்தை' ஆயுதமாகப் பாவித்து அவரைத் தாக்குபவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.

++++++

மரணத்தின் விளி்ம்புவரை ஏற்கெனவே சென்று அந்த அனுபவங்களையும் அவரது வழக்கமான பாணியில் எழுதியதைப் படித்தபோது 'இவர் நிஜமாகவே மரணித்தபின் அந்த அனுபவங்களைக் கட்டுரையாக எழுதிவிடுவார்' என்று நம்பிவிடலாம் போல இருந்தது.

++++++

அவரது மரணச் செய்தியைக் கேட்டபோது வெறுமையாக இருந்தது. யாரிடமும் பேசப் பிடிக்காமலிருந்தது. தமிழ் மணத்தில் தொடர்ச்சியாக எங்கும் சுஜாதா வியாபித்திருக்க வருத்தம், அஞ்சலிகள், மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் பின்னூட்டம், விளக்கம், பதில் விளக்கங்கள், என்று ஒருபுறம் பதிவுகள் வந்துகொண்டிருக்க, இதற்கெல்லாம் ஒப்பாரியா என்று கேட்ட பதிவுகள் - சுஜாதா - சுரதா என்று ஒப்புமைப்படுத்தி கேள்வி கேட்ட பதிவுகள் - எல்லாரையும் ஏதோவொரு விதத்தில் அவர் பாதித்திருக்கிறார் என்ற மட்டில்தான் அவற்றைப் படிக்க முடிந்தது. இம்மாதிரி அடிதடிகளினூடே அஞ்சலி தெரிவித்துப் பதிவு போட மனம் இடங்கொடுக்கவில்லை. தவிர ஒவ்வொருவருக்கும் அவரவரது கருத்துக்கு ஒரு நியாயம் இருக்கும். யார் சரி யார் தவறு என்ற நடுநிலைப் பார்வை யாரிடமும் இல்லையென்பதால் எல்லாமே சரியாகிவிடுகிறது. ஊடகச் சுதந்திரம், கட்டற்ற இணையவெளி, அது தரும் முகமூடிகள் - யாரும் எதைப் பற்றியம் எப்படியும் எழுதலாம். யாரும் தடுக்க முடியாது. பிடித்தவற்றைப் பிடித்துக் கொண்டு இந்த பரந்த வெளியில் தொங்குவதுதான் வழி - பிடிக்காதவற்றை நினைக்காதிருப்பது மேல் - இரு சாராருக்கும் - அல்லது எல்லா சாராருக்கும் இது பொருந்தும். சற்று காட்டமாகச் சொல்லப் போனால் வலையுலகில் வலைப்பதிவுகளும் வலைப்பதிவர்களும் தத்தமது ஏரியாக்களைக் காத்துக்கொள்ளும் நாய்கள் மாதிரி. வேற்றாள் உள்ளே நுழைந்தால் - பிடித்திருந்தால் வாலாட்டப்படும் - இல்லையெனில் வள்வள்தான் - நாய் என்பதை தரக்குறைவான பிரயோகத்திற்காக இங்கு உபயோகிக்கவில்லை - எனக்கு நாய் பிடித்தமான தோழமை. ஒரு காரின் பின்புறத்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் சொல்வது போல சில நேரங்களில் 'The more people I meet, the more I love my dog' என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நிற்க.

சாவுக்கு ஏன் ஒப்பாரி வைக்கவேண்டும்? அப்படியென்றால் எல்லாச் சாவுக்கும் ஏன் ஒப்பாரி வைக்கவில்லை என்று பகுத்தறிவு ரீதியாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இது அஞ்சலிப் பதிவா, ஒப்பாரிப் பதிவா என்று நான் பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்திக்கவில்லை. சிலரது சாவுச்செய்தி 'அப்படியா?' என்று கேட்கவைக்கும், சிலவற்றுக்கு 'ஐயோ' என்றிருக்கும். சிலவற்றுக்கு 'நாம் இப்போது எம்மாதிரியான உணர்ச்சிகளுக்கு ஆட்படவேண்டும்?'என்று குழப்பமாக இருக்கும். வெறுமையாக இருக்கும். அந்திப் பொழுதில் தோன்றும் இனந்தெரியாத சோக உணர்வு போல சோகமாக இருக்கும். பெரும்பாலும் அமைதியாக இருக்கத் தோன்றும். சுஜாதா இயற்கை எய்திய செய்தி என்னை வெறுமையாகத்தான் உணர வைத்தது. திடுக்கிடல்கள் எதுவுமின்றி ஆனால் ஆயாசமாக உணர்ந்தேன். துக்கமாக இருந்தது. கடந்த சில வருடங்களாகவே மரணத்தை நோக்கி ஒரு குழந்தையாக அவர் தவழ்ந்து சென்று கொண்டிருந்தார் என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருந்தது. ஆதலால் உடல் உபாதைகளிடம் தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருந்தவருக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று ஓரத்தில் நிம்மதியாகவும் இருந்தது.

சுஜாதா ஜுரத்துடன் பதிவு பதிவாகப் போட்டு அலைந்ததில்லை என்றாலும் இப்பதிவு எழுதுவதற்கு எனக்கிருக்கும் முக்கிய காரணமாக நான் உணர்ந்தது - என் வாழ்நாளில் இவ்வளவு நீண்ட நாட்களாக தொடர்ந்து ரசித்து வாசித்த எழுத்தாளர் அவர் ஒருவர்தான் என்பதால். என்னையறியாமலேயே அடிமனதின் ஆழத்தில் நீண்ட வருடங்களாகத் தேங்கியிருக்கும் அவர் மீதான அபிமானத்தின் வெளிப்பாடாகவே இப்பொழுது அவர் மறைவிற்காக என்னுள் என்னைச் சூழ்ந்திருக்கும் வருத்த உணர்வினைப் பார்க்கிறேன்.

நம்மை ஏதோவொரு விதத்தில் பாதித்திருக்கும் எந்த உயிரும் மறையும்போது இயல்பாகவே எழும் வலிகளுக்கும் துக்கத்திற்கும் இம்மாதிரி வெளிப்பாடுகள் ஒரு வடிகால். ஒவ்வொரு மரணச் செய்தியும் நமக்கும் நாளை இது நிகழக்கூடும் என்ற நிஜத்தினை உணராது அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களில் மூழ்கி உறங்கிக்கொண்டிருக்கும் என் போன்றோருக்கு உறக்கத்தைக் கலைக்கும் கடிகார அலார ஒலி. சுஜாதா மறைந்த செய்தி ஒலித்தபோது விபத்துப் பகுதியைக் கடக்கும் வாகனம் போல, வாழ்க்கை தனது வேகத்தைக் குறைத்து நிதானித்துப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பயணத்தைத் தொடர்கையில் கடந்து சென்றவற்றை அடிக்கடி பார்த்துக்கொள்ள உதவும் வாகனக் கண்ணாடி போல, இம்மரணங்களை அடிக்கடி நினைத்துப் பார்த்துக்கொள்ள இப்பதிவுகள் துணைபுரியலாம்.

ஒரு பயணம் முடிவுக்கு வந்திருக்கிறது. நின்ற போது சன்னல்களுக்கு வெளியே எழுந்த ஏராளமான இரைச்சல்கள் இப்போது அடங்கிவிட்டன. நமது பயணம் தொடர்கிறது. அதுவும் ஒரு நாள் முடிவுக்கு வரும். இரைச்சல்கள் மறுபடியும் எழும். என்ன - அவற்றைக் கேட்கத்தான் நாம் இருக்க மாட்டோம்! எல்லாரும் போய்ச் சேருவதென்னவோ ஓரிடம்தான். நீங்கள் முதலில் போய்ச் சேர்ந்துவிட்டீர்கள். நாங்கள் எப்போது வந்து சேர்ந்துகொள்வோம் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் காதருகே வந்து சொல்லுங்கள் - சிலநொடிகளுக்கு முன்னால்!

அதுவரை உங்களைத் தொந்தரவு செய்யப் போவதில்லை சுஜாத்....ஆ!

++++++++++