Wednesday, October 11, 2017

இரண்டு பாடல்களும் இரண்டு தேவதைகளும்

வேலைக்குச் சென்று முதல் மாதச் சம்பளத்தில் ஒரு BPL ஸ்டேரியோ காஸட் ரெகார்டர் வாங்கினேன். டூ-இன்-ஒன்னெல்லாம் இல்லை. ரேடியோ கிடையாது. முதலில் வாங்கிய காஸட் சின்னத் தம்பி. அதன் முதல்பாடல் குருவிகளின் கீச்சுகளுடன் துவங்கும் ‘போவோமா ஊர்கோலம்’. பாடியது ஸ்வர்ணலதா என்று காஸட் அட்டையில் போட்டிருந்தது. அதைப் படித்திராவிட்டால் ஜானகி வித்தியாசமாகப் பாடியிருக்கிறார் என்று நினைத்திருப்பேன். என்ன மாதிரியான குரல்!
எனக்கு அமலாவைப் பிடிக்கும் என்பது அமலாவைத் தவிர எல்லாருக்கும் தெரியும் இல்லையா! அதுபோல் பல இளைஞிகளுக்குப் பிடித்த கார்த்திக்கை என் மனைவிக்குப் பிடிக்கும். நான் தீவிர எஸ்பிபி வெறியன். என் மனைவி அவருக்குப் பிடித்தவையென்று தனியாக ஒரு பட்டியல் வைத்திருப்பார். இருவருக்கும் பிடித்ததாக அமையும் பாடல்கள் என்று தனியாக ஒரு பட்டியல் உண்டு. அதிலொன்று உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் வரும் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்..’ பாடல். 

மரத்தடியில் இந்தப் பாடலைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இதில் வரும் 'கன்னல்.. கன்னல் மொழி நீ பாடு குயிலே' வரியின் கன்னலின் அர்த்தத்தைக் கேட்டு Hari Krishnan (ஹரியண்ணா) அவர்களைத் தொந்தரவு செய்திருக்கிறேன்.

பாஸ்டனிலிருந்தபோது பக்கத்துவீட்டில் ஓய்வு பெற்ற வயதான அமெரிக்க வெள்ளைக்காரத் தம்பதிகள் - மேரியனும் டானல்டும். என் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். மேரியனுக்கு என் மனைவியின் சமையலில் கொள்ளை பிரியம். தினமுமே கிட்டத்தட்ட வந்து கண்ணில் நீர்வர சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடுவார். இத்தனைக்கும் வீட்டுச் சமையலில் மிதமாகத்தான் காரம் இருக்கும். ஒரு நாள் அவரை அழைத்துக்கொண்டு வெளியில் இந்திய உணவகத்துக்குச் சென்று இரவு உணவு சாப்பிடலாம் என்று Chelmsfordலிருக்கும் Madas Grill-க்குக் கூட்டிச் சென்றோம். எங்களது ஹோண்டா ஆடிஸி வேனில் கிட்டத்தட்ட ஒரு மணிநேர பிரயாணம். அவர் பின்னிருக்கையில் நடுவில் அமர்ந்துகொள்ள இருபக்கமும் எங்கள் குழந்தைகள். நல்ல உயரமானவர். எனது ரியர்வ்யூவில் பார்த்தால் அவர் தலைமட்டும் சில்லவுட்டாகத் தெரியும். ரொம்பவும் ரசித்துச் சாப்பிட்டார். திரும்ப வீட்டுக்கு வரும்போது வழக்கம்போல எங்களது ஆஸ்தான இளையராஜா பாடல்களை ஒலிக்கவிட்டேன். நாலைந்து பாடல்கள் முடிந்ததும் ‘என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட’ ஆரம்பித்தது. மனைவிக்கும் எனக்கும் குஷி. ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டே ஓட்டினேன். அந்தப் பாடலில் எல்லாமே துள்ளல்கள்தான். கார்த்திக், மோனிஷா ஒரு பக்கம் துள்ளிக்கொண்டிருக்க, பாலுவும் ஸ்வர்ணலதாவும் குரலில் தாவித்தாவி அலைபாய, இசைஞானியின் தாளக்கட்டு சீராகத் துள்ளிக்கொண்டேயிருக்கும்.

எதேச்சையாக ரியர்வ்யூ கண்ணாடியில் பார்க்க, பாடலின் துரித தாளத்திற்கேற்ப மேரியனின் தலை இடமும் வலமுமாகச் சீராக ஆடிக்கொண்டிருந்தது நிழலாகத் தெரிந்தது!
இன்று யூட்யூபில் வேறு ஒரு பாடலைத் தேடிக்கொண்டிருந்தபோது இந்த வீடியோ கண்ணில் பட்டது.

ஸ்வர்ணலதா போவோமா-வை ஆரம்பித்தபோது என் முதன்முதல் BPL ஸ்டேரியோ காஸட் ரெகார்டரும், என்னைத்தொட்டு பாடலும், இரவில், காரின் பின்னிருக்கையில் அழகாகத் தாளத்திற்கு நிழலுருவமாக ஆடிக்கொண்டிருந்த மேரியனின் தலையும் நினைவுக்கு வந்தன!



அதோடு அப்பாடலில் வரும் மோனிஷாவும், பாடிய ஸ்வர்ணலதா ஆகிய இரண்டு தேவதைகளும் நம்மிடையே இல்லை என்பதும்!
***

Saturday, October 07, 2017

குண்டூசி விற்பவர்களும், புண்ணாக்கு விற்பவர்களும்!

புகழ்பெற்ற ஒருவர் புலாவ் சாப்பிட்டு ஏப்பம் விட்டாலே அவரைப் புலவர் என்று பட்டம் கொடுத்து அழைக்கும் தமிழ்ச் சமூகச் சூழலில் 'பிரம்மாண்ட' இயக்குநர் ஷங்கர் எழுத்தாளர் ஷங்கர் ஆனதில் வியப்பேயில்லை.
இதற்குப் போய் சாரு இவ்வளவு பெரிய கட்டுரை எழுதவேண்டுமா என்றால் எழுதவேண்டும்தான். போகிறவன் வருகிறவன், குண்டூசி விக்கிறவன், புண்ணாக்கு விக்கிறவனெல்லாம் கவிஞர் என்று தன்னை அழைத்துக்கொள்வதையும், பாரதியையும் தன்னையும் ஒரே தராசில் நிறுத்தி புலவர் என்று கூசாமல் அடைமொழி போட்டுக்கொள்பவர்களையும், எவ்வளவு பெரிய எழுத்தாளர்களெல்லாம் இருக்க தன்னை எழுத்தாளர் என்று ஒருவர் அழைப்பதை அனுமதிப்பவர்களையும் எவ்வளவு நாள்தான் சகித்துக்கொண்டு அறச்சீற்றம் கொள்ளாமல் ஒருவன் வாழ முடியும்!


Friday, October 06, 2017

வற்றாயிருப்பு !


இணையத்தில், குறிப்பாக மரத்தடியில், எழுதத் துவங்கிய நாள் முதல், பெரும்பாலான கட்டுரைகளில் வற்றாயிருப்பும் எனது பால்ய கால நினைவுகளும் இடம்பெறாமல் இருந்ததேயில்லை. படிப்பவர்களுக்குச் சலிக்கச் சலிக்க ஆயாசமளிக்குமளவிற்கு ஊரைப்பற்றி எழுதியாகிவிட்டது. வாசிப்பதற்காக எழுதியவையல்ல அக்கட்டுரைகள். நினைவுகள் நினைவிலிருக்கும்போதே எழுதிவைத்துவிட்டால் முதுமையில் நினைவுகள் தவறும்போது நினைவூட்டிக்கொள்ள அவ்வெழுத்துகள் பயன்படுமே என்ற சுயநலத்தில்தான் - ஒருவித சுய-பால்ய-சரிதை!
அந்த வற்றாயிருப்பைக் கடைசியாகப் பார்த்து இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும்போது ஊருக்குச் செல்ல வாய்ப்பிருந்தும், மனதில் இருக்கும் 70-கள், 80-களின் வற்றாயிருப்பு பிம்பம் கலைந்துவிடும் என்ற அச்சத்திலேயே போகத் தயங்கிக்கொண்டிருந்தேன். அதைவிடமுக்கிய காரணம், பரம்பரை பரம்பரையாக இருந்த கூரைவீடு காரைவீடாக பரிமாணம் எடுத்து குறுகிய காலத்திலேயே விற்கப்பட நேர்ந்ததால், பிறந்து, வளர்ந்து, ஓடியாடிய வீட்டில் வேறு யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இருப்பதைக் காணும் மனோதிடம் இல்லாததாலும்தான்.
சமீப காலமாக Beema Rao Kannan அண்ணாவின் தயவில் வற்றாயிருப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்ளவும், நினைவுகளை மீட்டுக்கொள்வும் முடிகிறது. அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி.
இம்மாதிரி கோவில், குளங்கள், நிகழ்வுகள் குறித்த செய்திகளையும், படங்களையும் பார்த்து மகிழ்வதில் தயக்கம் இல்லை. ஏனெனில் - ஒரு கிராமம் காலவோட்டத்தில் பரந்து, பெருத்து, ஆட்கள் அதிகமாகி வசதிகள் பெருகி, பெரிய கிராமமாகவும், பிறகு டவுனாகவும், பிறகு சிறு, குறு நகரமாகவும், பெருநகரமாகவும் மாறினாலும் கோவில்கள் எவ்வளவு நவீனப்படுத்தப்பட்டாலும் மாறாதிருப்பது.. கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் கடவுள் சிலைகள்!
கிட்டத்தட்ட 35-40 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவனாக இருந்தபோது பார்த்த அதே முத்தாலம்மன் எவ்வித மாறுதலுமின்றி அதேபோல் அப்படியே காட்சி தருகிறார். பெருமாள் கோவிலும், விசாலாட்சி கோவிலும், சிவன் கோவிலும், ஹனுமான் கோவிலும், கிழவன் கோவிலும், காட்டழகர் கோவிலும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலும், அம்மச்சாரம்மன் கோவிலும், வெள்ளைப் பிள்ளையார் கோவிலும் அப்படியேதான் இருக்கிறார்கள்.
இக்கடவுளர்தான் எவ்வளவு காலம் கடந்தாலும் மாறாத நிஜங்களாகவும், மனதில் படிந்திருக்கும் கலையாத பிம்பங்களாகவும் நிலைத்திருக்கிறார்கள்! காலங்கள் மாறினாலும், மனிதர்கள் மாறினாலும், இடங்களும், பொருட்களும் மாறினாலும், ஓரளவு மாறாதிருப்பது இத்தோற்றங்கள்தான்!






Tuesday, October 03, 2017

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி!

மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றிப் போக்குவரத்தைத் தடைசெய்தது இருப்பதிலேயே ஆகச்சிறந்த நடவடிக்கை. 24 மணிநேரமும் காதைச் செவிடாக்கும் வாகனங்களின் இரைச்சல் நின்று அந்த அற்புதக் கோவிலிலிருந்து எழும் மந்திரங்கள், பக்தர்களின் குரல்கள் கோவிலைச் சுற்றியுள்ள மரங்களின் பறவைகளின் இடைவிடாத ஒலிகள் என்று அந்த இடமே பிரமாதமாக மாறிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது உள்ளே படுசுத்தமாகப் பராமரிக்கப்படுவதைப் பார்த்து வியந்தேன்.
ஒரு வரலாற்றுச் சின்னத்தை, வழிபாட்டுத்தலத்தை எப்படி வைத்திருக்கவேண்டும் என்பதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் உதாரணம். ஆனால் அதை இந்தக் கோவிலோடு நிறுத்திவிடாமல், தமிழகத்தின் ஒவ்வொரு கோவிலுக்கும் விரிவாக்கினால் நலம்.
இதைவிட முக்கியமான நடவடிக்கை, கடவுள் தரிசனத்திற்குக் கட்டணம் வாங்குவதை ஒழிப்பது. அதோடு மீனாட்சி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களில் அர்ச்சகர்கள் பணம் பிடுங்கும் இயந்திரங்களாக இருப்பதையும் ஒழிப்பது. அவர்களுக்கு உரிய சம்பளத்தை (ஒரு நடுத்தர வாழ்வு நடத்தும் அளவிற்கு) உயர்த்தி, பணத்திற்குக் கையேந்தும் நிலையில் அவர்களைத் தள்ளாமல் வைத்திருப்பதும் அவசியம். இறை ஊழியம் ஓர் அற்புதப் பணி. அதைச் செய்வோர்கள் பணக்கஷ்டம் இல்லாதிருப்பதும் அவசியம். இறைவன் முன்பு பணம் படைத்தவனுக்கு ஒருவித செளகரியமும், பணமில்லாதவரைத் தள்ளிவைக்கும் கலாசாரமும் ஒழிக்கப்படவேண்டும்.
இது ஒரு துவக்கமே. செல்லவேண்டியதும், செய்யவேண்டியதும் நிறைய உள்ளன. இக்கோவிலைச் சுத்தமாக வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தவர்களையும், சுத்தத்தைத் தொடர்ந்து பேணுபவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்!

செய்தி: 
மதுரை : இந்தியாவிலேயே சிறந்த கோயிலுக்கான மத்திய அரசின் விருதை மதுரை மீனாட்சியம்மன் கோயில் தட்டி வந்துள்ளது. மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இடம்பிடித்திருந்தது. இதன்படி மீனாட்சி அம்மன் கோவிலை தூய்மையான கோயிலாக மேம்படுத்துவதற்காக மதுரை மாநகராட்சியுடன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து ரூ.11.65 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன.

 குப்பையில்லா கோயில்

Monday, October 02, 2017

Groin Swelling

Groin Swelling என்றொரு பிரச்சினை சிலருக்கு வரும். எனக்கு மிகச் சிறு வயதில் வந்திருக்கிறது. நன்றாக வலிக்கும். அதற்கு 'நெறி கட்டியிருக்கு' என்று பாட்டி சொல்வார்கள். இரண்டொரு நாளில் சுண்ணாம்பு, வெந்நீர் போன்ற சிசுருஷைகளில் சரியாகிவிடும். ஆனால் நிரந்தரமாக நெறிகட்டியிருப்பதால் வலியில் அவதிப்பட்டு வெறிபிடித்து இருக்கும் சில ஆசாமிகள் தமிழ் ஊடகங்களில் உலவுகிறார்கள். அவர்களுக்கு 'நெறியாளர்கள்' என்று பெயர். கேள்வி கேட்கிறோம் என்ற பெயரில் நக்கல், நையாண்டி, அவமரியாதை செய்தல், அவமானப்படுத்துதல், வேண்டுமென்றே புண்படுத்தும் விதமாகக் கேள்விகேட்டு பேட்டியெடுக்கப்படுபவர்களைத் தூண்டிவிட்டு அவர்கள் சினங்கொண்டு கொந்தளித்து எதையாவது சொல்ல மாட்டார்களா, செய்யமாட்டார்களா, அதை வைத்து மறுபடியும் மறுபடியும் பரபரப்புச் செய்தி வெளியிட்டு தமது சானலின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தலாமா என்பது ஒன்றுதான் இந்த 'நெறியாளர்களின்' தலையாய நோக்கம். இதில் தர்மத்திற்கோ, நேர்மைக்கோ, பண்புக்கோ இடமில்லை.
நான்கைந்து பேரைச் சேர்த்துவைத்துக்கொண்டு ஒரே சமயத்தில் எல்லோரும் உச்சஸ்தாயியில் கத்தும் இந்த நெறியாளர்களின் நிகழ்ச்சிகள் எல்லாமே தொட்டியில் எச்சில் இலைகளுக்குச் சண்டைபோடும் தெருநாய்களின் ஓலத்தை நினைவூட்டி அருவெறுப்பிலாழ்த்துகிறது!

2017-இல் பருவ மழையும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளும்!

தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 1996-க்குப் பிறகு இந்த வருடந்தான் ஜூன் - செப் காலப் பருவமழை வழக்கத்தைவிட 30% க்கு மேல் பெய்திருக்கிறது. நகரங்களில் மழையளவு 15% மேல் பெய்திருக்கிறது.

தமிழக அரசு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரை எந்த அரசும் செய்யாத வகையில் நீர் மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளைத் துரித கதியில் முடுக்கிவிட்டிருக்கிறது. 25000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மாநிலத்திலிருக்கும் பல்லாயிரக்கணக்கான நீராதாரங்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்து, வாய்க்கால்களையும், மற்ற நீர் செல்லும் வழிகளையும், ஜாதி, மதம், கட்சி என் எந்தப் பாகுபாடுமின்றி, ஓட்டுக்காக யார் காலையும் நக்காமல், அரசு இயந்திரங்களை முடுக்கி ஆக்கிரமிப்புகளை கடந்த ஆறுமாத காலமாக அகற்றி வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் மொத்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு நீர்வழித்தடங்கள் சீராகி, பெய்யும் மழையில் ஒரு துளிகூட வீணாகமல் சேமிக்கப்படும்.

தனது வீட்டையும், கார்களையும், நிலங்களையும் விற்றுச் சொந்தக்காசில் இதுவரை தமிழக விவசாயிகளுக்காக இதுவரை தில்லியில் பலவிதங்களில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ண்ணு, மழை நிறையப் பெய்திருப்பதால் இனிமேல் விவசாயம் தழைக்கும் என்பதால் போராட்டங்களை விலக்கிக்கொண்டு, கைவிட்டு, தமிழகம் திரும்பி வயற்காட்டிற்கு நேரடியாகச் சென்றார்.
தேவையில்லாத ஓட்டு பெறுவதற்காகத் தொடங்கப்பட்ட இலவசத் திட்டங்களை ரத்து செய்து அந்த நிதி இனிமேல் மாநிலக் கட்டமைப்புகளுக்காகச் செலவழிக்கபடும் என்ற அறிவிப்பு நாளை காந்தி ஜெயந்தியன்று வெளியிடுகிறது தமிழக அரசு.
தமிழகத்தில் இருக்கும் அனைத்து மணல் குவாரிகளும், கற் குவாரிகளும் மூடப்பட்டு, மணல் அள்ளும், கல்லுடைக்கும் அனைத்து ஒப்பந்தங்களும் இரத்து செய்யப்படுகிறது. ஆற்று மணலை கையால் அள்ளினாலும் உடனடி சிறை என்ற சட்டம் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட உள்ளது. யாரேனும் எங்கேனும் மணல் கடத்துவதாகத் தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாக 109 என்ற எண்ணுக்கு அழைத்துத் தெரிவித்தால் போதும். 108 ஆம்புலன்ஸ் போலவே 109 என்ற அவசர அழைப்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 கமாண்டோக்களடங்கிய அதிரடிப்படை நிறுவப்பட்டு 25 ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்படும். 109 அழைப்புகளுக்கு இந்த அதிரடிப்படை உடனடியாக களத்திலிறங்கி மணலைக் கடத்துபவர்களைக் கண்டதும் சுட அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் 110 எண்ணுக்கு அழைத்தால் மரம் வெட்டுபவர்களையும், கடத்துபவர்களையும் கண்டதும் சுடும் அதிகாரத்துடனான காடு பாதுகாப்புப் படை நிறுவப்பட்டிருக்கிறது. மொத்தம் 10000 அதி உயர் நுட்ப ட்ரோன்களை தமிழகம் அமெரிக்காவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இந்த ட் ரோன்களைத்தான் அமெரிக்கா ஆஃப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை வேட்டையாட உபயோகிக்கிறது. இந்த ட்ரோன்களில் லேசர் வழிகாட்டும் சிறு ரக ஏவுகணைகளும் இயந்திரத் துப்பாக்கிகளும் பொருத்தப்பட்டுள்ளன. மரம் கடத்தும் எவரும் கேள்விகேட்காமல் போட்டுத்தள்ள இந்த அமைப்பு உதவும்.
இயற்கை வளங்களை முழுவதும் பாதுகாத்து வருங்கால சந்ததிகள் தழைப்பதே ஆட்சியாளர்களின் ஒரே குறிக்கோள் என்பதை முதல்வர் தெரிவித்தார். இதை தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் ஒருமனதாகப் பாராட்டியுள்ளனர். யாரும் இது மோடியின் சதி என்று திட்டவில்லை.
அனைத்து நடுநிலை வகிப்பவர்களும் பாராட்டும் விதமாக, 'கடவுள் இல்லை, கடவுளைக் கும்பிடுகிறவன் காட்டு மிராண்டி' என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஆளுயர பெரியார் சிலைகளை தமிழகத்தின் ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்கள் முன்னும் நிறுவ அரசு உத்தரவிட்டிருக்கிறது. எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான செலவை அந்தந்த மத அமைப்புகள் எவ்வளவு கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் இருக்கின்றனவோ அதற்குத் தகுந்தாற்போல் கணக்கிட்டுப் பங்கிட்டுக்கொள்ள இசைந்திருக்கிறார்கள். 'இவ்வளவு நாள் ஸ்ரீரங்கம் கோவில் முன்பு மட்டும் பெரியார் சிலை வைத்து இந்துக்களை மரியாதை செய்த அரசு, இப்போது சிறுபான்மையினர் மீதும் அதே கரிசனத்தைக் காட்டுவது, தாமதமான முடிவு என்றாலும், வரவேற்கிறோம்' என்று ராமுடன் சேர்ந்து நின்று ரஹீமும் ராபர்ட்டும் கூட்டறிக்கை விட்டிருக்கிறார்கள். 'இச்சிலைகளை ஈமாமும், பாதிரியாரும், பூசாரியும் மட்டும்தான் திறந்து வைக்கவேண்டும். நாங்கள் காசு போட்டிருப்பதால். இதிலும் புகழை மட்டும் எடுத்துக்கொள் திகவினர் முனையக்கூடாது' என்று மூவரும் அன்புக் கட்டளை விடுத்திருக்கின்றனர். 'வேண்டுமானால் பறவை எச்சத்தையும், நாய்கள் பெய்யும் மூத்திரத்தையும், மனிதர்கள் துப்பி, மூக்கு சீந்தி வைத்திருப்பதையும், துடைத்துச் சுத்தம் பண்ணும் அரிய பணியை திகவினருக்கு விட்டுக்கொடுக்கத் தயார்' என்றும் பெருந்தன்மையுடன் அவர்கள் அறிவித்தனர். இதைக்கேட்ட தலைவர் வீரமணி ஆனந்தக் கண்ணீருடன் மூவருக்கும் சால்வை போர்த்திப் பாராட்டி கழகத் தோழர்களுக்கு ப்ரஷ், சோப், வாளித் தண்ணீரை இலவசமாக வழங்க தீவுத் திடலில் மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தும் அறிவிப்பை வெளியிட்டார். 'என் துண்டால் சிலையைத் துடைத்து இப்பணியைத் துவக்கிவைப்பேன்' என்று முழங்கினார்.
***
முதல் பத்தி மட்டும் உண்மை. மற்ற பத்திகள் உண்மையாகும் காலம் வெகுதொலைவில் இல்லை!