Wednesday, October 11, 2017

இரண்டு பாடல்களும் இரண்டு தேவதைகளும்

வேலைக்குச் சென்று முதல் மாதச் சம்பளத்தில் ஒரு BPL ஸ்டேரியோ காஸட் ரெகார்டர் வாங்கினேன். டூ-இன்-ஒன்னெல்லாம் இல்லை. ரேடியோ கிடையாது. முதலில் வாங்கிய காஸட் சின்னத் தம்பி. அதன் முதல்பாடல் குருவிகளின் கீச்சுகளுடன் துவங்கும் ‘போவோமா ஊர்கோலம்’. பாடியது ஸ்வர்ணலதா என்று காஸட் அட்டையில் போட்டிருந்தது. அதைப் படித்திராவிட்டால் ஜானகி வித்தியாசமாகப் பாடியிருக்கிறார் என்று நினைத்திருப்பேன். என்ன மாதிரியான குரல்!
எனக்கு அமலாவைப் பிடிக்கும் என்பது அமலாவைத் தவிர எல்லாருக்கும் தெரியும் இல்லையா! அதுபோல் பல இளைஞிகளுக்குப் பிடித்த கார்த்திக்கை என் மனைவிக்குப் பிடிக்கும். நான் தீவிர எஸ்பிபி வெறியன். என் மனைவி அவருக்குப் பிடித்தவையென்று தனியாக ஒரு பட்டியல் வைத்திருப்பார். இருவருக்கும் பிடித்ததாக அமையும் பாடல்கள் என்று தனியாக ஒரு பட்டியல் உண்டு. அதிலொன்று உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் வரும் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன்..’ பாடல். 

மரத்தடியில் இந்தப் பாடலைப் பற்றிப் பேசியிருக்கிறோம். இதில் வரும் 'கன்னல்.. கன்னல் மொழி நீ பாடு குயிலே' வரியின் கன்னலின் அர்த்தத்தைக் கேட்டு Hari Krishnan (ஹரியண்ணா) அவர்களைத் தொந்தரவு செய்திருக்கிறேன்.

பாஸ்டனிலிருந்தபோது பக்கத்துவீட்டில் ஓய்வு பெற்ற வயதான அமெரிக்க வெள்ளைக்காரத் தம்பதிகள் - மேரியனும் டானல்டும். என் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். மேரியனுக்கு என் மனைவியின் சமையலில் கொள்ளை பிரியம். தினமுமே கிட்டத்தட்ட வந்து கண்ணில் நீர்வர சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடுவார். இத்தனைக்கும் வீட்டுச் சமையலில் மிதமாகத்தான் காரம் இருக்கும். ஒரு நாள் அவரை அழைத்துக்கொண்டு வெளியில் இந்திய உணவகத்துக்குச் சென்று இரவு உணவு சாப்பிடலாம் என்று Chelmsfordலிருக்கும் Madas Grill-க்குக் கூட்டிச் சென்றோம். எங்களது ஹோண்டா ஆடிஸி வேனில் கிட்டத்தட்ட ஒரு மணிநேர பிரயாணம். அவர் பின்னிருக்கையில் நடுவில் அமர்ந்துகொள்ள இருபக்கமும் எங்கள் குழந்தைகள். நல்ல உயரமானவர். எனது ரியர்வ்யூவில் பார்த்தால் அவர் தலைமட்டும் சில்லவுட்டாகத் தெரியும். ரொம்பவும் ரசித்துச் சாப்பிட்டார். திரும்ப வீட்டுக்கு வரும்போது வழக்கம்போல எங்களது ஆஸ்தான இளையராஜா பாடல்களை ஒலிக்கவிட்டேன். நாலைந்து பாடல்கள் முடிந்ததும் ‘என்னைத்தொட்டு அள்ளிக்கொண்ட’ ஆரம்பித்தது. மனைவிக்கும் எனக்கும் குஷி. ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டே ஓட்டினேன். அந்தப் பாடலில் எல்லாமே துள்ளல்கள்தான். கார்த்திக், மோனிஷா ஒரு பக்கம் துள்ளிக்கொண்டிருக்க, பாலுவும் ஸ்வர்ணலதாவும் குரலில் தாவித்தாவி அலைபாய, இசைஞானியின் தாளக்கட்டு சீராகத் துள்ளிக்கொண்டேயிருக்கும்.

எதேச்சையாக ரியர்வ்யூ கண்ணாடியில் பார்க்க, பாடலின் துரித தாளத்திற்கேற்ப மேரியனின் தலை இடமும் வலமுமாகச் சீராக ஆடிக்கொண்டிருந்தது நிழலாகத் தெரிந்தது!
இன்று யூட்யூபில் வேறு ஒரு பாடலைத் தேடிக்கொண்டிருந்தபோது இந்த வீடியோ கண்ணில் பட்டது.

ஸ்வர்ணலதா போவோமா-வை ஆரம்பித்தபோது என் முதன்முதல் BPL ஸ்டேரியோ காஸட் ரெகார்டரும், என்னைத்தொட்டு பாடலும், இரவில், காரின் பின்னிருக்கையில் அழகாகத் தாளத்திற்கு நிழலுருவமாக ஆடிக்கொண்டிருந்த மேரியனின் தலையும் நினைவுக்கு வந்தன!



அதோடு அப்பாடலில் வரும் மோனிஷாவும், பாடிய ஸ்வர்ணலதா ஆகிய இரண்டு தேவதைகளும் நம்மிடையே இல்லை என்பதும்!
***

No comments: