Tuesday, October 03, 2017

நலம் தருவாய் என் தாயே மீனாட்சி!

மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றிப் போக்குவரத்தைத் தடைசெய்தது இருப்பதிலேயே ஆகச்சிறந்த நடவடிக்கை. 24 மணிநேரமும் காதைச் செவிடாக்கும் வாகனங்களின் இரைச்சல் நின்று அந்த அற்புதக் கோவிலிலிருந்து எழும் மந்திரங்கள், பக்தர்களின் குரல்கள் கோவிலைச் சுற்றியுள்ள மரங்களின் பறவைகளின் இடைவிடாத ஒலிகள் என்று அந்த இடமே பிரமாதமாக மாறிவிட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்றிருந்தபோது உள்ளே படுசுத்தமாகப் பராமரிக்கப்படுவதைப் பார்த்து வியந்தேன்.
ஒரு வரலாற்றுச் சின்னத்தை, வழிபாட்டுத்தலத்தை எப்படி வைத்திருக்கவேண்டும் என்பதற்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் உதாரணம். ஆனால் அதை இந்தக் கோவிலோடு நிறுத்திவிடாமல், தமிழகத்தின் ஒவ்வொரு கோவிலுக்கும் விரிவாக்கினால் நலம்.
இதைவிட முக்கியமான நடவடிக்கை, கடவுள் தரிசனத்திற்குக் கட்டணம் வாங்குவதை ஒழிப்பது. அதோடு மீனாட்சி கோவில் உள்ளிட்ட பெரிய கோவில்களில் அர்ச்சகர்கள் பணம் பிடுங்கும் இயந்திரங்களாக இருப்பதையும் ஒழிப்பது. அவர்களுக்கு உரிய சம்பளத்தை (ஒரு நடுத்தர வாழ்வு நடத்தும் அளவிற்கு) உயர்த்தி, பணத்திற்குக் கையேந்தும் நிலையில் அவர்களைத் தள்ளாமல் வைத்திருப்பதும் அவசியம். இறை ஊழியம் ஓர் அற்புதப் பணி. அதைச் செய்வோர்கள் பணக்கஷ்டம் இல்லாதிருப்பதும் அவசியம். இறைவன் முன்பு பணம் படைத்தவனுக்கு ஒருவித செளகரியமும், பணமில்லாதவரைத் தள்ளிவைக்கும் கலாசாரமும் ஒழிக்கப்படவேண்டும்.
இது ஒரு துவக்கமே. செல்லவேண்டியதும், செய்யவேண்டியதும் நிறைய உள்ளன. இக்கோவிலைச் சுத்தமாக வைத்திருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுத்தவர்களையும், சுத்தத்தைத் தொடர்ந்து பேணுபவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்!

செய்தி: 
மதுரை : இந்தியாவிலேயே சிறந்த கோயிலுக்கான மத்திய அரசின் விருதை மதுரை மீனாட்சியம்மன் கோயில் தட்டி வந்துள்ளது. மத்திய அரசின் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தூய்மையான புனித வழிபாட்டுத் தலங்களை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் இடம்பிடித்திருந்தது. இதன்படி மீனாட்சி அம்மன் கோவிலை தூய்மையான கோயிலாக மேம்படுத்துவதற்காக மதுரை மாநகராட்சியுடன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் இணைந்து ரூ.11.65 கோடி செலவில் தூய்மை மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டன.

 குப்பையில்லா கோயில்

No comments: