Friday, October 06, 2017

வற்றாயிருப்பு !


இணையத்தில், குறிப்பாக மரத்தடியில், எழுதத் துவங்கிய நாள் முதல், பெரும்பாலான கட்டுரைகளில் வற்றாயிருப்பும் எனது பால்ய கால நினைவுகளும் இடம்பெறாமல் இருந்ததேயில்லை. படிப்பவர்களுக்குச் சலிக்கச் சலிக்க ஆயாசமளிக்குமளவிற்கு ஊரைப்பற்றி எழுதியாகிவிட்டது. வாசிப்பதற்காக எழுதியவையல்ல அக்கட்டுரைகள். நினைவுகள் நினைவிலிருக்கும்போதே எழுதிவைத்துவிட்டால் முதுமையில் நினைவுகள் தவறும்போது நினைவூட்டிக்கொள்ள அவ்வெழுத்துகள் பயன்படுமே என்ற சுயநலத்தில்தான் - ஒருவித சுய-பால்ய-சரிதை!
அந்த வற்றாயிருப்பைக் கடைசியாகப் பார்த்து இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு மேலிருக்கும். ஒவ்வொரு முறை விடுமுறையில் வரும்போது ஊருக்குச் செல்ல வாய்ப்பிருந்தும், மனதில் இருக்கும் 70-கள், 80-களின் வற்றாயிருப்பு பிம்பம் கலைந்துவிடும் என்ற அச்சத்திலேயே போகத் தயங்கிக்கொண்டிருந்தேன். அதைவிடமுக்கிய காரணம், பரம்பரை பரம்பரையாக இருந்த கூரைவீடு காரைவீடாக பரிமாணம் எடுத்து குறுகிய காலத்திலேயே விற்கப்பட நேர்ந்ததால், பிறந்து, வளர்ந்து, ஓடியாடிய வீட்டில் வேறு யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் இருப்பதைக் காணும் மனோதிடம் இல்லாததாலும்தான்.
சமீப காலமாக Beema Rao Kannan அண்ணாவின் தயவில் வற்றாயிருப்பு நிகழ்வுகளை அறிந்துகொள்ளவும், நினைவுகளை மீட்டுக்கொள்வும் முடிகிறது. அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி.
இம்மாதிரி கோவில், குளங்கள், நிகழ்வுகள் குறித்த செய்திகளையும், படங்களையும் பார்த்து மகிழ்வதில் தயக்கம் இல்லை. ஏனெனில் - ஒரு கிராமம் காலவோட்டத்தில் பரந்து, பெருத்து, ஆட்கள் அதிகமாகி வசதிகள் பெருகி, பெரிய கிராமமாகவும், பிறகு டவுனாகவும், பிறகு சிறு, குறு நகரமாகவும், பெருநகரமாகவும் மாறினாலும் கோவில்கள் எவ்வளவு நவீனப்படுத்தப்பட்டாலும் மாறாதிருப்பது.. கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் கடவுள் சிலைகள்!
கிட்டத்தட்ட 35-40 ஆண்டுகளுக்கு முன்பு சிறுவனாக இருந்தபோது பார்த்த அதே முத்தாலம்மன் எவ்வித மாறுதலுமின்றி அதேபோல் அப்படியே காட்சி தருகிறார். பெருமாள் கோவிலும், விசாலாட்சி கோவிலும், சிவன் கோவிலும், ஹனுமான் கோவிலும், கிழவன் கோவிலும், காட்டழகர் கோவிலும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலும், அம்மச்சாரம்மன் கோவிலும், வெள்ளைப் பிள்ளையார் கோவிலும் அப்படியேதான் இருக்கிறார்கள்.
இக்கடவுளர்தான் எவ்வளவு காலம் கடந்தாலும் மாறாத நிஜங்களாகவும், மனதில் படிந்திருக்கும் கலையாத பிம்பங்களாகவும் நிலைத்திருக்கிறார்கள்! காலங்கள் மாறினாலும், மனிதர்கள் மாறினாலும், இடங்களும், பொருட்களும் மாறினாலும், ஓரளவு மாறாதிருப்பது இத்தோற்றங்கள்தான்!






No comments: