Wednesday, November 30, 2005

2005-ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் : இறுதிப் பாகம்

"ஆமா. பதுங்கு குழிதான். "

"என்ன மீன் வளர்க்கிறாங்க இவங்க. ஒழுங்கா ஒரு தொட்டி இருக்கா? காத்தோட்டமே இல்லாம இப்படி பாட்டில்ல போட்டு வச்சுருக்காங்களே?"


" ஏதோ சுனாமி வருதுன்னாங்களே? ஒண்ணத்தையும் காணோம்?"

"இதான் கற்கால லிப்ட்-ஆ?"
"ஆமாங்க. இடைவெளி ரொம்பக் கம்மியா இருந்துச்சு. நேரா ஓட்டிக்கிட்டு வந்து பார்க் பண்ண முடியலை. அதான்.."

"பொழுது போகாம ஆத்துல இருந்து எடுத்து அங்கிட்டே திருப்பி விடறேன்"


2005-ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் : பாகம் 4

"குளிச்சா தொவட்டக் கூடாது. இப்படித்தான் காய்வேன்னு அடம் பிடிக்கறான். என்ன பண்றது?"



"அதுவா? சிட்டி பஸ் கண்டக்டர் வேலைக்கு ப்ராக்டீஸ் பண்றாங்களாம்."

"அடப் பாவிங்களா! எங்கெங்க ஸ்பீடு பிரேக்கர் வைக்கணும்னு ஒரு விவஸ்தையே இல்லையா?"

"செம பிகருங்கள்ல?"

"தமிழ்ச் சினிமால வில்லனா நடிக்குதாம். "


Tuesday, November 29, 2005

2005-ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் : பாகம் 3


கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான் கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி!



நம்ம பையனுக்கு எல்.கே.ஜி. சீட் இல்லேன்னீங்களாமே?



இப்படி என் வயித்தெரிச்சலக் கொட்டிக்கிட்டு அவங்கூட ஓடிப்போயிட்டாளே மாராசி!



ரோல் தீந்து போச்சு மோலாளி. வேற ரோல் லோடு பண்ணிர்றீங்களா?



இதுக்கு மேல வண்டி போவாது. எல்லாரும் எறங்கி அப்படியே பொடி நடையா கரைக்குப் போயி சேருங்க!


Thursday, November 24, 2005

2005-ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் - பாகம் 2


"அவளப் பாத்து ஓவரா ஜொள்ளு விடாதீங்கப்பா. வழுக்குதுல்ல?"



"பல்லு சொத்தையாயிரும்னு தெரியும்தான். ஆனா பாத்துட்டு சும்மா இருக்க முடியலையே"



"அப்படியே அந்நியன் ஹேர்ஸ்டைல் மாரியே இல்லை?"


"DirectTV மாதிரி இது DirectElectricity. கம்பியில்லா மின்சாரம்! நீங்க எங்க வேணா வீடு மாத்திக்கோங்க. புது அட்ரஸ் எதுன்னு போன் பண்ணிச் சொல்லிட்டீங்கன்னா போதும். அடுத்த செகண்டே வீட்ல பல்பு எரியும்!"



"மொதல்ல அப்படித்தான் கொஞ்சம் காத்து குடிப்பே. நீஞ்ச நீஞ்ச எல்லாம் சரியாப் போயிடும்"



Wednesday, November 23, 2005

பேசாப் பொருள்கள் பேசத் துணிந்தால்....

"கடைசி வரைக்கும் சீட் தரேன்னு நம்ப வச்சு தலைவரு இப்படிக் கவுத்துட்டாரே!"



"ஹூம். பக்கத்தாத்துப் பங்கஜம் டச் டயலை வச்சுக்கிட்டு மினுக்கறா. எனக்கும் ஒண்ணு வாய்ச்சிருக்கே. இந்த மனுஷனுக்குச் சமர்த்து போறாது"



"சிகரெட் பிடிக்கலைன்னு சொன்னா நம்பணும். என்னப் பாத்தா பொய் பேசறவனாவா தெரியுது டார்லிங்?"



"கருப்புதான் எனக்குப் பிடிச்சக் கலரு! டொட்டாய்ங் டொட்டாய்ங்"



"எளவெடுத்த பயலுக. இவைய்ங்க பிரச்சினைல நம்ம தலையப் போட்டு உருட்டுறாய்ங்க"


"ஏண்டா அறிவு கெட்டவனுங்களா.. உங்கள மாதிரி நானும் தொண்டைத் தண்ணி வத்த கத்தறேன்ல? எனக்கு ஒரு சோடாவாவது கொடுக்கணும்னு ஒங்களுக்குத் தோணலை?"


"இத்தன நாளு தலைல ஏறி மிதிச்சேல்ல... இன்னிக்கு வா. உனக்கு இருக்குடி மவனே"

"ஆவ்.. தூக்கம் கண்ணச் சுத்துது. What about you darling?"


"பேரு மட்டும் 'சோனி'. ஆனா இவனுக்குச் சோறு போட்டுக் கட்டுப்படியாவலை"

(பழைய டயலாக்) "இவனுக்குப் பல்லு ரொம்ப அரிக்குது போலருக்கு. எப்பப் பாத்தாலும் டேப்பக் கடிச்சுத் துப்பிக்கிட்டே இருக்கான். டாக்டரப் பாக்கணும்"

****


அலுவலக சகா மின்னஞ்சலில் அனுப்பிய படங்கள்! டயலாக் மட்டும் என்னுது! :)

Friday, November 18, 2005

கல்கி (யப்பாடி. ஒரு வழியா முடிச்சாச்சி)



'கலி முத்திடுத்துடா' என்ற வசனத்தை நூற்றுக்கணக்கான தடவைகள் கேட்டிருப்போம். அநியாயம் நடந்தாலே 'கலி முத்திருச்சு'. இரண்டாம் ஆட்டம் திரைப்படத்திற்குச் சென்றுவிட்டு வந்தால் பாட்டி 'கலி முத்திடுத்து..' என்பாள். 'முற்றிப்போக கலி என்ன பீர்க்கங்காயா?' என்று பாட்டியிடம் கிண்டலடிப்பதுண்டு.

கல்கி பகவான் கைகளை பக்கவாட்டில் விரித்து நிற்கும் புகைப்படம் இல்லாத வீடுகளில்லை அப்போது எனலாம். எங்கு நோக்கினும் எதில் நோக்கினும் கல்கி. 'கல்கி ட்ரெஸ்' என்று ஒன்றை ஜவுளிக்கடைகளில் விற்காததுதான் பாக்கி. மற்ற எல்லாம் நடந்தது. அந்த கருமையும் வெண்மையும் கலந்த நீண்ட தாடியும் சாந்தமான கண்களும் சாமியார்களுக்கு ஒரு அமைதி சொரூபத்தைக் கொடுக்கின்றன என்பது உண்மைதான். பார்க்கிற பாமரர்களும் லேசான பயத்துடன் அவர்கள் எதைச் சொன்னாலும் 'ஆமாம் சாமி' போடத் தயாராகவே இருக்கின்றனர்.

எந்தவித ஆன்மீகப் பின்னணியும் இல்லாது திடீரென்று வானத்திலிருந்து குதித்து வந்தது போல் தோன்றுவார்கள். 'அவதாரம்னா அப்படித்தான்.. சொல்லிக்கிட்டா வரும்?' என்று கேள்வி கேட்டார்கள். அதற்காக அப்படித் தோன்றியவர்கள் மீது நம்பிக்கையோ அவநம்பிக்கையோ வளர்த்துக் கொள்ளவில்லை. அவதார புருஷர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்- பல விஷயங்களுக்கு முன்னுதாரணமாக- என்பது நெசமே.

'உயிர்களிடத்து அன்பு வேணும்' என்பதை நம்மில் எவ்வளவு பேர் மதிக்கிறோம் என்று தெரியவில்லை. பெரும்பாலான இளைஞர்களுக்கும், வழுக்கை பயத்திலிருக்கும் முற்காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்களுக்கும் 'மயிர்களிடத்தில் அன்பு வேணும்' என்று இருக்கிறார்கள். கண்ணாடியின் முன் செலவழிக்கும் நேரத்தில் ஒரு பங்காவது சக உயிர்களிடத்து அன்பு செலுத்துவதில் செலவழிக்கிறோமா என்று யோசிக்கையில் நெருடுகிறது.

மழையில் நனைந்த காலங்கள், புல் நுனியின் பனித் துளியை ருசித்த காலங்கள், வயல் சேற்றில் முழங்கால் வரை புதைந்து நடந்த காலங்கள், மலைகளினூடே வெறுங் கால்களுடன் நடந்த காலங்கள், தன்னந் தனியே பனி பெய்த நள்ளிரவுகளில், நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துப் படுத்திருந்த காலங்கள், கரை புரண்டோடும் ஆற்று நீரில் மூழ்கி, கூழாங் கற்களைச் சேகரித்த காலங்கள், ஆற்று மணல் வெளிகளில் சிறுவர்கள் சிறு குழிகளில் சேகரித்து விட்டுப்போன மீன்களை, நீர் சூடேறிச் சாகுமுன், ஆற்றில் விட்ட காலங்கள்.. அந்தக் காலங்கள் திரும்ப வாராதா என்று ஏங்குகிறேன்.

பிரச்சினைகள் அறியாத பருவத்தில், என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த இயற்கையையும், அதன் வாசனையும் உணர்ந்து, அதனில் ஒன்றாகவும் உணர்ந்த காலங்கள் போய், வாழ்க்கையின் நடைமுறை இன்னல்களிலிருந்து தப்பிக்க நடத்தும் போராட்டத்தில் முழு நேரமும் செலவழிக்கப்பட்டுவிட, சுற்றத்தை கவனிக்க, தொடர்ந்து தவறிக் கொண்டேயிருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு மாய உலகத்தில் எதையோ துரத்திக்கொண்டு ஓடிக் கொண்டேயிருக்கிறோம் என்றும் தோன்றுகிறது. ஒன்றிலிருந்து பனிரெண்டு வரை வரையறை செய்திருந்தாலும், கடிகார முள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. நம் வாழ்வைப் பற்றிய பெரும்பாலானோரின் கற்பனையும் அப்படியே. ஆனால் நம் வாழ்வு வரையறுக்கப்பட்ட காலகட்டத்திற்குட்பட்டது. அதைத் தாண்டி நம் உயிர்முள் ஓடமுடியாது. கலாசார, வாழ்க்கை மற்றும் வளர்ப்பு முறைகளை வைத்து சக உயிர்களிடத்து ஒவ்வொருவரின் அணுகுமுறை மாறுபடுகிறது. நற்குணங்களும் தீய சங்கதிகளும் எல்லாரிடத்திலும் விரவியிருக்கின்றன. அந்தத் தருணத்தில் தலைதூக்கும் குணாதிசயங்களின் விகிதாச்சாரம் மாறுபட்டுக் கொண்டேயிருக்கிறது- ஆயுள் முடியும் வரை.

'எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கற மிருகத்த எழுப்பிடாத' என்று வசனம் பேசுவதெல்லாம் இந்த ரீதியில்தான் என்று படுகிறது. சாது வீரனாக மாறுவதும், வீரன் கோழையாகிப் பதுங்குவதும், சிலர் பிறந்ததிலிருந்தே கோபக் கனல் பொங்க இருப்பதும், சிலர் என்ன இன்னல் வந்தாலும் புத்தர் போன்றிருப்பதும்- ஏதோ ஒன்று- அந்த விகிதாச்சாரத்தை நிர்ணயிக்கிறது. அந்த ஒன்றும் நம்முள்ளேயே இருக்கிறது என்று நம்புகிறேன்.

அந்நியன் போன்ற பல குணாதிசயங்கள் நாம் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்கின்றன. சில சந்தர்ப்பம் கிடைக்கையில் வெளிப்படுகின்றன. சில அமுக்கப்பட்டு உள்ளே ஒடுங்கிக் கிடக்கின்றன. திருடன் அகப்படும்போது அவனைக் கட்டிவைத்து அடித்துக் கொல்வது உள்ளே அதுவரை தேக்கியிருந்த ஆங்காரம்; சமூகக் கோபம்; ஆற்றாமை அல்லது இயலாமை. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்பதும் ஒருவித குணாதிசயம். கட்ரினா பேரழிவிலோ சுனாமி பேரழிவிலோ பிணங்களிடமிருந்து பணம் பொருள்களைக் கொள்ளையடிப்பதும் ஒருவித குணாதிசயம். கலவரங்களின்போது சொத்துகளைத் தீயிட்டுக் கொளுத்தி, உடைத்துச் சேதம் செய்வதும், அடைசல் பேருந்துகளில் பெண்களின் பின்புறங்களை உரசுவதும், இணையத்தில் நிர்வாணப் படங்களைத் தனியறையில் ரசிப்பதும், ஒவ்வொருவருள்ளிருக்கும் வக்கிரங்களின் வெளிப்பாடே. வக்கிரமும் ஒருவகை குணம். வெளிப்படும் விகிதாசாரத்தை வைத்து வெளிப்படுத்துபவன் நல்லவனாகவோ கெட்டவனாகவோ பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தில் தீர்மானிக்கப் படுகிறான்.

ஒரு விதத்தில் பார்த்தால், நாமனைவரும் ஒவ்வொரு அவதாரம்தான். நமக்குள்ளே பல அவதாரங்கள்.

முற்றும்.

நன்றி : மரத்தடி.காம்

கிருஷ்ண


வாழ்க்கையில் அனுதினமும் எத்தனை எத்தனை கிருஷ்ணர்களைப் பார்க்கிறோம். தூக்கிக் கொஞ்சியிருக்கிறோம். சேட்டைகளைக் கண்டு மகிழ்ந்திருக்கிறோம்.

கல்லூரியிலும் சில தோழர்கள் கிருஷ்ண லீலா வினோதங்களை நடத்தும்போது கூட இருந்து கண்டு அதிசயித்திருக்கிறோம். 'அவனுக்கு மச்சம்டா' என்று சக நண்பர்கள் பொறாமையுடன் கூறுவதையும் கண்டு சிரித்திருக்கிறோம். 'அது எப்பிடிரா ஒங்கிட்ட மட்டும் வந்து பேசறாளுங்க?' என்று தலையைத் தட்டிக் கேட்டால், சிரித்து மழுப்பிவிட்டுப் போகும் கிருஷ்ணர்கள் எத்தனை பேர்!

என் மகள் அக்ஷராவைக் 'குட்டிக் கிருஷ்ணி' என்று எல்லோரும் அழைத்தார்கள். இப்போது அவள் தங்கை துர்கா அந்தப் பெயரைத் தட்டிக்கொண்டு போய்விட்டாள். எத்தனை எத்தனை சேட்டைகள்! சாப்பிடும்போது வழக்கமாக அவளுக்கு தட்டில் சோறு இட்டுவிட்டு அதன் மீது கொஞ்சம் நெய் ஊற்ற வேண்டும். பிஞ்சுக் கைகளால் அதை ஒரு மாதிரி பிசைந்துவிட்டு இறைத்துச் சாப்பிடுவாள். ஒரு நாள் சாப்பிட அமர்ந்ததும் என் மனைவி மறதியாக முதலில் நெய்யை ஊற்றிவிட்டு அதன்மேல் சோறிட்டார்கள். துர்கா வந்து அமர்ந்ததும் நெய்யைக் காணாது கேட்டதில், 'அடில இருக்கு பாரு' என்று சொன்னதும், டக்கென்று மேசையின் கீழ் குனிந்து தேடினாளே பார்க்கலாம்! ஸ்ரீரங்கம் கோயிலில் யானைமேல் ஏறிக்கொள்ளச் சொன்னதற்கு 'அய்ய.. இது கருப்பு யானை.. என் ட்ரெஸ்லாம் அழுக்காயிடும்.. வெள்ளை யானை கொண்டுவாங்க தாத்தா' என்று என் தந்தையிடம் மறுத்துச் சொன்னது; 'வானம் என்ன வர்ணம்?' என்று ஒரு அமாவாசை இரவில் கேட்டதற்கு 'இப்ப இருட்டா இருக்கு.. நாளைக்கு காலைல சூரியன் வந்ததும் பாத்துட்டுச் சொல்லவா?' என்று கேட்டது; எவ்வளவோ சேட்டைகள்.

தொலைக்காட்சியின் தொலை இயக்கியைக் காணாது வீடுமுழுதும் தேடியதில் ஒரு வாரம் கழித்து அதைத் நீர் நிரம்பியிருந்த குடத்தில் கண்டுபிடித்தோம். வழக்கமாக பள்ளிவிட்டு வந்ததும், சமையலறையில் தட்டின்மீது ஒரு வேகவைத்த முட்டையை வைத்திருப்போம். அக்ஷராவிடம் அதை எடுத்துக்கொள்ளச் சொல்வதும், அவள் அதை முன்னறைக்குக் கொண்டுவந்து உட்கார்ந்து கொள்வதும், முட்டையின் ஓட்டை நீக்கித் தருவதும் என் மனைவியின் அன்றாட அலுவல்களில் ஒன்று. அன்றும் முன்னறையில் உட்கார்ந்து கொண்டு, அக்ஷரா கொண்டுவந்த முட்டையின் லேசான சில்லிப்பை உணராது உடைத்ததில், வேகாத முட்டை சிந்தி வீணாகியது. 'ஒரு வேளை அடுப்பை பற்றவைக்கவேயில்லையா.. சே சே அப்படி இருக்காது' என்று குழம்பிப் போய் கேட்டதில் நிதானமாக பதில் வந்தது. 'அந்த முட்டை சூடா இருக்கும்மா. அதான் ப்ரிட்ஜில இருந்து ஜில் முட்டை கொண்டு வந்தேன்'.

நான் பள்ளியில் படிக்கும்போது பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு 'தா' உச்சரிக்க வரவில்லை என்று அம்மா சொன்னபோது என்னால் நம்பமுடியவில்லை. என் குழந்தைப் பருவத்தில் எனக்கும் சக குழந்தைகளுக்கும் அப்படிப்பட்ட பிரச்சினை இருந்ததாக நினைவில்லை. பக்கத்து வீட்டுக்குப் போய் அதனிடம் ஒரு உரையாடல்:

'இது யாரு?'

'எங்க காக்கா'

'இந்த குட்டிப் பையன்?'

'என் கம்பி'

'அவங்க?'

'அக்கை'

'ஒங்க ஊரு பேரென்ன?'

'கிருச்சி'

'எங்க சொல்லு பார்க்கலாம். தா தை தத்தத்தை'

'கா கை கக்ககை'அதற்குமேல் அடக்கமுடியாமல் சிரித்துவிட்டு, அதைத் தூக்கிக் கொஞ்சிவிட்டு வந்தேன்.

சுருளிராஜன் படமொன்றில் ஒரு பையனுக்கு 'ச'வை உச்சரிக்க வராது. அவர் பையனின் பெற்றோரிடம் 'ஒங்க பையனுக்குச் சாவே வராதா?' என்று கேட்டு நன்கு திட்டு வாங்குவார்!

(தொடரும்...)

Thursday, November 17, 2005

புத்தா


'என்னடா புத்தர் மாதிரி ஒக்காந்துருக்கே' என்று டயலாக் கேட்காத நண்பர் குழாம் உண்டா? 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்று பரீட்சையில் பாசாகும் ஆசை(!)யோடு மனனம் செய்தது இன்னும் நினைவிருக்கிறது. 'கொழந்த குட்டிங்கள விட்டுட்டு நடுராத்திரில எந்திரிச்சி போயிட்டார்டா புத்தர்' என்று பேசிக்கொண்டு, 'போதி மரம் எங்கடா இருக்கு? எப்படி இருக்கும்? என்று கேட்டுக்கொண்டு, அலைந்தது ஒரு காலம்.

பொன்னியின் செல்வன் நான்காம் பாகம் இறுதி அத்தியாயத்தில், சூடாமணி விஹாரரத்தில் அருள்மொழிவர்மன் மற்ற கடவுள்களை ஒப்பிட்டு, எந்த வாக்கும் கொடுக்காமல், யாருக்கும் கடன்பட்டுச் செய்யாமல், மனித குல துன்பங்களுக்கு முடிவு தேட வேண்டும் என்ற ஒரே நோக்குடன் சம்சார சாகரத்தை உதறி சன்யாசம் மேற்கொண்ட புத்தரே மிகவும் உயர்ந்தவர் என்று படிக்கையில், ஒரு நிமிடம் மனதில் கற்பனை ஓடியது.

'நள்ளிரவு ஏ.ஸி-யின் மெல்லிய ரீங்காரத்தில், நாள்முழுதும் குழந்தைகளுக்காகவும் எனக்காகவும், வீட்டிற்காகவும் உழைத்துவிட்டு, அயர்ந்து தூங்கும் மனைவி ஒரு பக்கம்; இப்போதுதான் ஓரிரு வார்த்தைகள் கோர்வையாகப் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் இரண்டு வயது துர்கா என் நெஞ்சில் இடுங்கிக்கொண்டு தூங்க, மறுபக்கம் அக்ஷரா தூங்கும் முன் நான் சொன்ன கதையை கனவாகக் கண்டுகொண்டு கண்மூடிய முகத்தில் பாவனைகளும் புன்னகையும் காட்டிக்கொண்டு, காலை என்மேல் போட்டுக் கொண்டு தூங்க, அப்படியே எல்லாவற்றையும் விலக்கிவைத்து சட்டையை மாட்டிக்கொண்டு, சன்யாசம் போக முடியுமா?' என்று யோசித்தால் அடிவயிறு என்னவோ செய்தது.

காலையில் கமண்டலத்தில் தண்ணீர் அருந்துகையில், துர்காவின் முகம் வந்து 'அப்பா எங்கம்மா?' என கேட்க, அக்ஷரா 'டாடி ஆபிஸ் போயிருக்காரு, சாயங்காலம் வந்துருவாரு' என, மனைவி 'எங்கே போயிருப்பார் இவ்வளவு சீக்கிரம் எழுந்து?' என்று யோசித்து, என் செல்ஃபோனுக்கு எண்களை ஒற்றியதில், அது மேசை மேல் 'நான் இங்கிருக்கிறேன்' என்று கூக்குரலிட, கவலை கொள்ளத் தொடங்கியிருப்பார்கள். ஒரு மணி நேரம் கழித்து 'அப்பா வேணும்' என்று குழந்தைகள் அழத் தொடங்க, விழியோரத்தில் எட்டிப் பார்க்கும் கண்ணீருடன், ஊருக்குத் தொலைபேசி சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பி, திகிலுடன் இருக்கும் மனைவியின் முகம் நிழலாட, கமண்டலமாவது, காவியாவது என்று அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து, வீட்டுக்கு ஓடி வந்து விடமாட்டேன்?

கோழியின் சிறகில் ஒடுங்கிக்கொள்ளும் குஞ்சு போல், குடும்பத்தின் இதம் எப்போதும் வேண்டும். நான் புத்தர் இல்லை!

(தொடரும்...)

நன்றி: மரத்தடி.காம்

Wednesday, November 16, 2005

பலராம



உடல் வலிமை எவ்வளவு அவசியம் என்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தது உண்டு. பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த விளையாட்டுத்தனம், கல்லூரியில் நுழைந்ததும் தொலைந்து போய், பெரிய மனிதத் தோரணையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொள்ளும் இளைஞர்கள் அநேகம் பேர். அதற்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழிகள் பல. எளிதான வழி சிகரெட்.

ஃபில்ட்டர் சிகரெட் ஒரு பணக்கார அடையாளம். மற்றவர்கள் பஸ் டிக்கெட்டிற்கே சிங்கியடித்துக்கொண்டு சீசன் டிக்கெட்டில் வரும் அப்பாவி மாணவர்கள். டிக்கெட் எடுக்காத கும்பல் இன்னொரு வகை- 'என்னண்ணே.. சீட்டுக்குத் தானே டிக்கெட்டு.. நாங்க நின்னுக்கிட்டு இல்ல வர்றோம்? அப்புறம் எதுக்கு டிக்கெட் வாங்கணும்?' என்று அளப்பரை பண்ணும் இளவட்டங்கள். கல்லூரிக்காக வரிசையாக வரும் பேருந்துகளில் மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள் போல், முதல் நிறுத்தத்தில் இருந்து அடுத்த நிறுத்தம் வரை ஒரு பேருந்து. அடுத்ததில் இறங்கிக்கொண்டு, பின்னால் வரும் அடுத்த பேருந்தில் பயணம். கடைசியாக வரும் பேருந்தில் கல்லூரிக்குப் போய்ச் சேர்வார்கள்- இலவசமான பிரயாணம்.

ஒரே ஒரு நோட்டு, ஒரு டிபன் பாக்ஸ் என்ற சீருடை(?)யுடன் வரும் படிக்கட்டுப் பையன்கள் செய்வது இன்னும் விசேஷம்.. படிக்கட்டு ஜன்னலில் கம்பிகளுக்குப் பின்னே அவர்களின் 'கிளி'கள் அமர்ந்திருக்க, 'கொஞ்சம் இத வச்சுக்கறீங்களா? காலேஜ் வந்ததும் வாங்கிக்கறேன்' என்று மறுமொழிக்குக் காத்திருக்காமல், நோட்டையும், டிபன் பாக்ஸையும் ஜன்னல் வழியாக அவர்களின் மடியில் தவழ விட்டுவிட்டு, படிக்கட்டில் தொத்திக் கொள்ளும் மாணவர்கள் ஏராளம். சும்மாவா? தகவல் பரிமாற்றத்திற்கு அதைவிட சிறப்பான, நேரடி வசதி வேறு எதுவும் இல்லை. அப்பெண்கள் நோட்டின் இடையே இருக்கும் அவர்களுக்கான கடிதங்களையோ, வாழ்த்து அட்டைகளையோ எடுத்துக்கொள்ள, காலேஜ் சென்று இறங்கியதும் பொருட்கள் திரும்ப மாணவனிடம் கொடுக்கப் படும். அவள் கடந்ததும், நோட்டைத் திறந்து முகர்ந்து அவளைத் தேடுவான். அய்யய்யோ தடம் மாறி எங்கெங்கோ செல்கிறேன். நிற்க.

ஆரோக்கியமான வாழ்வென்பது எவ்வளவு சிறப்புடையது என்று ஒவ்வொருவரும் உணருகின்ற சமயங்களில், நம்மில் பெரும்பாலானோர் ஏற்கெனவே அதைத் தொலைத்துவிட்டு, மருத்துவ மனைகளிலும், மாத்திரைகளிலும் அதைத் தேடிக்கொண்டிருப்போம். கல்வி நிலையங்களில் உடற்பயிற்சி பாடங்களுக்கு முப்பத்து மூன்று சதவீத 'இட ஒதுக்கீடு' கோர வேண்டியது இன்றைய கட்டாயம். இல்லாவிட்டால் 'பூஞ்சை அடைந்த கண்ணினாய் வா வா' என்று எதிர்கால மன்னர்களைப் பார்த்துப் பாடவேண்டியதுதான்.

என் நண்பன் ராஜாங்கத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அந்த வயதில், அவன் உடலமைப்பு எங்களுக்கு அற்புதமாகத் தோன்றியது. உடற்பயிற்சி நிலையத்தில் பத்து வயதிலேயே சேர்ந்து உழைத்து, உருண்டு திரண்ட புஜங்களுடனும், பரந்த தோள்களுடன் அட்டகாசமாக இருப்பான். எந்த உடையணிந்தாலும் அழகாக இருக்கும். அடிக்கடி கையை மடக்கிக் காட்டச் சொல்லி நச்சரிப்போம். பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும்போது, கம்பியைப் பிடித்திருக்கும் கரங்களில் தசைகள் முறுக்கேறியிருப்பதைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பேன். அவன் இருக்கும் இடங்களில் பிரதானமாக அனைவரது கவனத்தையும் கவர்ந்திருப்பான்.

அந்த உடல்வலிமை பல சந்தர்ப்பங்களில் பயன்பட்டிருக்கிறது. ஒரு விதத்தில், குடிக்காத, புகைக்காத நண்பர் வட்டத்தில் இருந்தது எவ்வளவு நன்மை பயத்திருக்கிறது என்று நினைத்துப் பார்க்கிறேன். 'சூழ்நிலை' ஒருவரை எந்த அளவுக்கு மாற்றி விடுகிறது என்பதையும் பார்த்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, சென்ற வருடம் ராஜாங்கத்தைச் சந்தித்தபோது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. கூட்டத்தில் தனித்துத் தெரிந்த ராஜாங்கம் காணாமல் போயிருந்தான். அவனும் ஒரு சாதாரண மனிதனாக, என்னுடைய அளவுகளில் இருக்க, 'என்னடா ஆச்சு?' என்றேன்.


'கல்யாணம்' என்றான்.

**

நன்றி : மரத்தடி.காம்

Monday, November 14, 2005

பரசுராம்

சிவப்பிந்தியர்கள் கோடரியைக் கொண்டு முஸ்தாங்குப் பள்ளத்தாக்குக் குதிரைகள் மீதேறிப் புயலென வந்து தாக்குவார்களாம். அம்புகளும் கோடரிகளும் கொண்டு வேட்டையாடி ஜீவித்திருந்தவர்களை வந்தேறிகள் துப்பாக்கியால் பொட் பொட்டென்று எளிதாகப் போட்டுத்தள்ளிவிட்டு, இப்போது பெரும் வல்லரசாக மற்ற நாடுகளைப் போட்டுத்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்மூரில் கோடரியைப் பேச்சுவழக்கில் 'கோடாலி' என்று குறிப்பிடுகிறோம்.

கோடாலியால் மரம் வெட்டி விறகு பிளப்பது ஒரு தனிக்கலை.


குறுக்காக போடப்பட்ட மரத்துண்டின் மீது இன்னொரு துண்டை நெடுக்காக இட்டு; கால் கட்டைவிரலால் அழுத்திக்கொண்டு, ஓங்கி ஒரே போடு. மரத்துண்டு இரண்டாகப் பிளக்க வேண்டும். குறி தப்பினால் இடமோ வலமோ வழுக்கிக்கொண்டு கோடாலி விலகிப்போகும். கால் கட்டைவிரல் சேதமடையும் வாய்ப்பு மிகவும் அதிகம். தவறான இடத்தில் கோடாலியை இறக்கினால், கட்டை தெறித்து நம்மையே தாக்கும்.

வீட்டில் விறகடுப்புதான் சமையலுக்கு. மரக்கடைக்குச் சென்று விறகுகளை இரண்டு அல்லது மூன்று 'தூக்கு' வாங்கிவர வேண்டும் (வாழையிலையை 'பூட்டு' கணக்கில் வாங்க வேண்டும். அடடா! இந்த அளவைகளைப் பற்றி இராம.கி. எழுதியிருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்!) பணமில்லையென்றால், வீட்டில் கொல்லைப்புறத்தில் இருக்கும் மரங்களில் ஏதாவது ஒன்று பலி கொடுக்கப்படும். அல்லது அவற்றின் சில கிளைகள் வெட்டப்படும்.

மரவெட்டிகள் கோடாலி கொண்டு அனாயசமாக விறகு வெட்டுவார்கள். கோடாலியின் மரக் கைப்பிடி லூசாகிவிடும் தருணங்களில் ஓங்கி இறக்கும்போது கோடாலி தனியே எகிறிப்போய் தூர விழும். அதை மீண்டும் கைப்பிடியில் இணைத்து, இறுக்கமாக இருப்பதற்காகச் சில சுள்ளிகளையும் செருகி வைப்பார்கள். அப்போதுதான் வெட்டிய மரங்கள் என்றால் கோடாலியில் துண்டாக்கும்போது பச்சை விறகு பிளந்துகொள்ளாமல் சிக்கலாக இருக்கும். காய்ந்த மரத்துண்டுகளைப் பிளப்பது எளிது. ஆனால் எகிறும் அபாயம் அதிகம்.


கோடாலியை தோளில் தொங்கவிட்டுக் கொண்டு, கைப்பிடிக் கழி மார்பில் சாய்ந்திருக்க, தலையில் துண்டு, பஞ்சகச்சம் ஸ்டைல் வேட்டியுடன் கைகளை வீசிக் கொண்டு சிந்தனையுடன் நடந்து செல்லும் பரசுராமர்களை நிறையப் பார்த்திருக்கிறேன்- ஒட்டிய வயிறுடன்.

***

Sunday, November 13, 2005

வாமன


குள்ள மனிதர்கள் ஒரு வினோதம். பாக்கியராஜின் 'தவக்களை'யை மறந்திருக்க மாட்டோம். தவக்களையைப் போலவே சில குள்ளர்கள் எங்களூரிலும் இருந்தார்கள்.

குள்ளமாக இருப்பதன் செளகரியங்களும் அசெளகரியங்களும் ஆச்சரியமூட்டுபவை. ஆடை தைக்க துணி நிறைய தேவைப்படுவதில்லை. வீட்டினுள் தலையைக் குனிந்து நுழைய வேண்டியதில்லை. தரையிலிருக்கும் பொருட்களை நம்மைவிட விரைவாக எடுக்க முடியும். நம்மை விட அவர்களை குழந்தைகளுக்கு நிரம்பப் பிடிக்கும். உணவும் கொஞ்சம் சாப்பிட்டால் போதும் போல. எல்லாமும் அவர்களுக்கு சிக்கனம்.

ஆனால் அசெளகர்யங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை. பேருந்திலோ வேறு பயணிகளுக்கான வாகனங்களிலோ டக்கென்று உதவியில்லாமல் ஏறிவிட முடியாது. தியேட்டரில் முன்வரிசையிலோ அல்லது சீட்டில் நின்றுகொண்டோ படம் பார்க்கவேண்டும். கவுண்ட்டரில் இன்னொருவர் உதவியுடன் டிக்கெட் வாங்கவேண்டும். தனியாக சைக்கிள் செய்துகொள்ள வேண்டும். வேகமாக ஓட முடியாது. ரெடிமேட் ஆடைகள் கிடைக்காது. இன்னபிற வாழ்க்கைத் தொந்தரவுகள். சக மனிதர்களை எப்போதும் ஏறிட்டுப் பார்க்கவேண்டிய கட்டாயம். கூட்டத்தில் மாட்டிக்கொண்டால் தொலைந்து போகக் கூடிய அபாயம். அப்பப்பா..

தன் சோகத்தினால் மற்றவர்களைச் சிரிக்கவைப்பவர்கள் அவர்கள்.தெருவில் வித்தைகாட்டும் கூத்தாடிக் கும்பல்களில் குள்ளர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரே சக்கர சைக்கிளில் கைகளை விரித்து பாலன்ஸ் செய்து ஓட்டிக்கொண்டு போவார்கள். குள்ளர்கள் இல்லாத சர்க்கஸ் உண்டா? குள்ளர்களின் பால் நம் கவனத்தைக் கவர்ந்ததில் 'அப்பு'விற்கு கொஞ்சம் பங்குண்டு. ஒருமுறை கால்களை பின்புறம் மடக்கிக் கட்டிக்கொண்டு நின்று பாருங்கள். தவக்களை குள்ளமணி என்று பொம்மைகளாகவும் நகைக்கத்தக்க கோமாளிகளாகவும் மட்டுமே குள்ளர்களைத் தமிழ்த்திரையுலகம் சித்தரித்துவந்த வேளையில் அவர்கள் பொம்மைகள் இல்லை; விளையாட்டுக் காட்டும் கோமாளிகள் இல்லை; சின்ன உருவங்களுக்குள் இருக்கும் பெரிய மனிதத்தையும், அரிதாரம் பூசிய முகமூடி முகங்களுக்குப் பின்னே இருக்கும் கண்ணீரையும், சாமான்ய மனிதர்களுக்கான அதே உணர்வுகளும் அவர்களுக்கும் உண்டு என்பதையும் காண்பித்ததில் - அப்புவாக அபூர்வ சகோதரர்களில் - கமல் ஹாஸனுக்கும் பங்கு உண்டு.


குள்ளம் என்பதை விட, அவர்களின் விஸ்வரூபம் சில சமயம் பிரமிக்க வைக்கும்!

பழங்காநத்தம் தண்டல்காரன் பட்டித் தெருவில் பாண்டி என்றொரு குள்ளர் இருந்தார். வயது எவ்வளவென்று சொல்லமுடியாது. அவர் ஒரு குள்ள நாய் (ரயில் மாதிரி நீளமாக இருக்குமே!) வளர்த்திருந்தார். இருவரும் தெருவில் போகும்போது கிண்டலுக்கும் கேலிப்பேச்சுக்களுக்கும் குறைவிருக்காது. அவர் மனைவி சாதாரண மனிதர்களைப் போல உயரம். அது பாண்டிக்கு இன்னும் ஏச்சுபேச்சுக்களையே தந்தது. தெரு முக்கில் லுங்கியை மடித்துக்கட்டி உட்கார்ந்திருக்கும் இளவட்டங்கள், பாண்டியும் அவர் மனைவியும் சேர்ந்து போகும்போது, வக்கிர கமெண்ட்டுக்களை அள்ளி வீசுவார்கள். இருவரும் அவற்றைச் செவிமடுக்காமல் செல்வார்கள். பரிதாபம். இது முற்றிப்போய், ஒரு நாள் பாண்டியின் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு இருக்கும் சோழவந்தானுக்குச் சென்றுவிட்டார். பாண்டிக்கு இன்னும் சிரமமாகி விட்டது.

ஒரு மாலைப் பொழுதில் பாண்டி தெருவில் வந்து கொண்டிருந்தபோது, வாடிக்கைக் கும்பல் ஒன்று ஏதோ கமெண்ட் அடிக்க, பாண்டி நின்றார். அவர்களைப் பார்க்க, அவர்கள் சிரித்தார்கள். மெதுவாக நடந்து அவர்கள் அருகில் சென்றார். அவர்கள் குட்டிச்சுவர் மீது கால்களை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பாண்டி அந்தச் சுவர் உயரம் கூட இல்லாதிருந்தார். அவர்களில் தலைவனாகத் தோன்றியவன் முன்னே சென்று நின்று அவனை உற்று நோக்க, அவன் 'என்ன பாண்டி! சம்சாரத்தைக் காணோம்' என நக்கலாகச் சிரித்தான். பாண்டி சட்டென்று அவன் கால்களுக்கிடையே கையைச் செலுத்தித் திருக, அவன் பெற்றவளை அலறி அழைத்தான்.

பாண்டியின் கைகள் உறுதியானவை. உழைத்துக் காய்த்து நரம்போடியிருப்பவை. அந்தச் சிலவிநாடிகளில் அவ்விளைஞன் நரகத்தைப் பார்த்தான். அருகில் அமர்ந்தவர்கள் 'ங்கோ.......' என்று பாண்டியைத் தாக்கி இழுக்க, பாண்டியை அசைக்க முடியவில்லை. 'விட்றா... விட்றா..' என்று அவன் அலறித்துடித்து மயங்கி விழ, பாண்டி அமைதியாகத் திரும்பி நடந்து போனார். ஸ்தம்பித்திருந்த தெரு, இயக்கம் பெற்று விட்ட இடத்தில் தொடர, நண்பர்கள் அவனைத் தூக்கிப் போனார்கள்.

மறுநாளிலிருந்து குட்டிச்சுவர் காலியாக இருந்தது.

***

நன்றி: மரத்தடி.காம்

நரசிம்மா



'அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்' என்று அதீத மேக்கப்புடன் ப்ரகலாதனாக நடிக்கும் சிறுவன் வசனம் பேச, தொந்தியும் தொப்பையுமாக செயற்கை கூந்தல், மீசை, மை அப்பிய கண்களுடன், தரையிலிருந்து முகம் நோக்கி ஃபோக்கஸ் செய்யப்பட்ட சிவப்பு விளக்கின் வெளிச்சத்தில், தண்டாயுதத்தால் அட்டைத் தூணை இரண்யன் பிளக்க, உள்ளே இருந்து புகை மூட்டத்தின் நடுவே அசைவே இல்லாத சிங்க முகத்துடன் இருமாமல் நரசிம்மர் வந்து படிகளில் அமர்ந்து இரண்யனின் வயிற்றை ஒட்டு நகங்களால் கிழித்து, சிவப்புச் சாயத்தில் நனைத்த பாவாடை நாடாவை (குடல்) உருவி வதம் செய்வார். இந்தக் கதை மிகவும் பிரபல்யம்.

மென்பொருள் உருவாக்கும் திட்டங்களுக்கு (Software Development Projects) ஒப்பந்தம் எழுதுவது ஒரு கலை. அதிலும் அரசு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில், பேரமோ அல்லது பேச்சுவார்த்தையோ கிடையாது. டெண்டர் வரும்போதே, 'இது இது வேணும்.. இது இதுக்கு இம்புட்டுத்தான் கொடுக்க முடியும்' என்று கறாராகச் சொல்லியிருப்பார்கள். இத்தகைய நிறுவனங்களுக்கு மென்பொருள் செய்ய ஆர்டர் எடுக்க முக்கிய தேவை ஒரு தலையாட்டி பொம்மையும் நிறைய லஞ்சப் பணமும்தான். இத்தகைய காண்ட்ராக்ட்டுக்களைத் தயாரித்து, பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மனதாக கையெழுத்துப் போடுவதற்குள் மென்பொருள் விற்கும் நிறுவனத்தின் விற்பனையாளர்களுக்கு நாக்கு தள்ளிவிடும்.

பேச்சுவார்த்தை நடக்கும் சமயங்களில் வாடிக்கையாள நிறுவனத்தில் பழந் தின்று கொட்டை போட்டிருக்கும் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த நபர்கள் திமிருடன் கொழுப்பெடுத்துப் போய் எடுத்தெறிந்து பேசும் சமயங்களில் எல்லாம் கோபம் தலைக்கேறும்; கொலை வெறி கிளம்பும்; அடக்கிக்கொண்டு பல்லை இளித்து 'கொஞ்சம் பாத்து செய்ங்க சார்' என்று வழிய வேண்டும். இதே வேலையாக இருப்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருவது உறுதி.

'ஒங்க சாஃப்ட்வேருக்கு அஞ்சு வருஷம் கியாரண்டி/வாரண்டி கொடுக்கணும்'

'முடியாது சார். ஆரக்கிளே கொடுக்கறதில்லை. ஒரு வருஷம் தான் முடியும்'

'அப்ப.. ஒரு வருஷத்துக்கு அப்புறம் பூச்சி எதுவும் (bug) வராதுன்னு எழுதிடலாமா?'

'ஒலகத்துல எந்த சாஃப்ட்வேர் வெண்டாரும் அப்படி எழுதிக் கொடுக்க மாட்டாங்க'

'என்ன சார் பேசறீங்க? நான் காசு கொடுத்து நீங்க செஞ்சு கொடுக்கற சாஃப்ட்வேருக்கு நீங்க தானே பொறுப்பாளி? ஒங்களோட இண்ட்டலிஜென்ஸுக்குத்தானே காசு? அதுக்கு பொறுப்பெடுத்துக்க முடியாதுன்னா எப்படி?'

'பொறுப்பெடுத்துக்க முடியாதுன்னு சொல்லலியே. ஒரு வருஷம் பொறுப்பெடுத்துக்கறோம். அஞ்சு வருஷம் வேணும்னாலும் பொறுப்பெடுத்துக்கறோம். காசு கூடும்'

'இது என்ன அநியாயமா இருக்கு? குறையுள்ள ப்ராடக்ட்ட கொடுத்துட்டு குறைதீர்க்க காசு கேட்டா எப்படி?'

இப்படியே வாக்குவாதம் வளர்ந்து ஒரு கட்டத்தில் அந்தப் பழம் 'நானும் மெய்ன் ப்ரேம்ல ப்ரோக்ராம் எழுதிருக்கேன். பத்து வருஷம் அய்ட்டில இருந்திருக்கேன். எனக்கும் டெக்னாலஜி தெரியும். சும்மா சாக்குபோக்கு சொல்லாதீங்க' என்று எகிறுவார்.

'அப்டிங்களா. ரொம்ப நல்லது. ஆனாலும் நாங்க வழக்கமா ஒரு வருஷம்தான் கொடுக்கறது'

'எனக்கு அஞ்சு வருஷம் வேணும். நீங்க கோட் பண்றது பண்ணுங்க. மத்த வெண்டார்ஸ் என்ன சொல்றாங்கங்கறத பாத்துட்டு முடிவு பண்ணுவோம். அப்புறம் வருத்தப்படாதீங்க' என்பார் அந்த ஆள்.

ஒப்பந்தத்தில் இருக்கும் ஆங்கில வாக்கியங்களைப் படித்தால் தலை சுற்றும். ஒரு பத்திக்கு ஒரே ஒரு வாக்கியம் இருக்கும். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாது. ஒரு சில வார்த்தைகளில் நேரடியாகச் சொல்ல வேண்டியதை, என் தலையையும் பக்கத்தில் நிற்பவனின் தலையையும் சுற்றி எதிரே இருப்பவனின் பிடரியைத் தொடும் வண்ணம் நீஈஈஈளமாக எழுதியிருப்பார்கள். அதை படித்து முடிக்கும் முன்னே 'ஷேக்ஸ்பியர் டோல்டு' என்று தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலும் லீகல் டிபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் ஒப்பந்தம் எழுதுவதால், சட்டம் படித்தவர்கள் மீது கோபமாக வரும்! They make simple things very complicated என்று சக அலுவலர்கள் புலம்புவார்கள்.
அரசு காண்ட்ராக்ட்கள் அனைத்திலும் 90% பணம் கொடுத்துவிட்டு, 10% நிறுத்தி வைத்துவிடுவார்கள். இதைத் தெரிந்து கொண்டு அனைத்து நிறுவனங்களும் கொட்டேஷன் கொடுக்கும்போதே 110% விலை வைத்து தான் கொடுப்பது வழக்கம். '10% கொடுக்கலைன்னா மயிரா போச்சு' என்று இருந்து விடுவார்கள்.
ஒரு வழியாக காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு ப்ராஜக்ட் டீம் களத்தில் இறங்கும்போது தான் தெரியும். அது பெரிய சாக்கடை என்று. 'அய்யய்யோ இதற்கு பாழும் கிணற்றில் விழுந்திருக்கலாமே' என்று தோன்றும். சேல்ஸ் டீம் 'ஆர்டர் எடுத்துக் கொடுத்ததோட எங்க வேலை முடிஞ்சு போச்சு' என்று நக்கலாகச் சிரிப்பார்கள். சுடலாம் போலத் தோன்றும். ப்ராஜக்ட் தொடங்கி, சில வாரங்களும், மாதங்களும் கடந்ததும், உணர்ச்சிகளெல்லாம் மரத்துப்போய், கிட்டத்தட்ட ஒட்டகம் மாதிரி போய் வந்து கொண்டிருப்பார்கள் ப்ராஜக்ட் மெம்பர்கள். சில பேருக்கு வீட்டு ஞாபகம் வந்து வாட்டி வதைக்கும். ப்ராக்ஜக்ட் மேனேஜரை முற்றுகையிட்டு விடுமுறை கேட்பார்கள். ப்ராஜக்ட் நடுவில் யாராவது விடுமுறை கேட்டாலே உஷாராகி விடுவார் அவர். அப்படியும் என்னன்னவோ தகிடுதத்தம் பண்ணி எமெர்ஜன்ஸி லீவு எடுத்துக்கொண்டு செல்பவர்கள் அப்படியே முங்கி விடுவார்கள்- சிறையிலிருந்து விடுதலை கிடைத்த உணர்வுடன்!
மூன்று மாதங்களில் முடிக்க வேண்டிய சில ப்ராஜக்டுகள் ஐந்து வருடங்களாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன சில நிறுவனங்களில். 'ஈரைப் பேனாக்கி.. பேனை யானையாக்கும்' வித்தையில் கில்லாடிகளான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்றால், யானையைப் பேனாக்கி பேனை ஈராக்கி கடைசியில் கடுகளவு கொடுக்கும் சில விற்பனை எத்தர்களும் இருக்கிறார்கள். இருவரில் யாராவது ஒருவர் இளிச்சவாயர்களாக இருந்து தொலைப்பது விதி.! இருவரும் எத்தர்களாக இருக்கும் பட்சத்தில், ப்ராஜக்ட் முடிவது என்பது பிரபஞ்சத்தின் எல்லையைப் பார்ப்பது போல்தான்.
இருக்கும் கடுப்பையெல்லாம் சேர்த்து வைத்து, லைவ் ரன் முடிந்து சில மாதங்களில் ஒளப்படியாகும்படி சில ஸ்க்ரிப்ட்டுகளை ஓட வைத்துவிட்டு வந்துவிடுவார்கள் (கஸ்டமர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பக் காரர்கள் இல்லாத செளகரியத்தில்!).
திடீரென்று ஒரு காலை வேளையில் சிஸ்டம் புட்டுக்கொள்ளும் போது தொலைபேசிகள் பறக்கும். 'இதோ வந்துர்ரோம்' என்று ஒருவாரமாவது இழுத்தடித்து அப்புறம் போய் சரி செய்து கொடுப்பார்கள். 'அடடா. ப்ராஜக்ட் காண்ட்ராக்ட்-ல அவ்ளோ கேர்ஃபுல்லா இருந்துட்டு, போஸ்ட் இம்ப்ளிமெண்டேஷன் காண்ட்ராக்ட்ல கோட்டை விட்டு விட்டோமே' என்று அவர்களின் கொள்முதல் மேலாளர் வயிறெரிந்து போவதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார்கள்.
நீதி: 'நீ என்னதான் சாமர்த்தியமா வரம் வாங்கிருந்தாலும்; ஒனக்கும் ஆப்பு இருக்கு மச்சி'
(தொடரும்)

Friday, November 11, 2005

வராக


பன்றியைப் பற்றி எழுதுவது உசிதமா என்று தெரியவில்லை. அருவருப்பாக இருந்தால் தயவுசெய்து அடுத்த அவதாரத்திற்குப் போய்விடுங்கள்.

கிராமம் என்றால் பன்றியில்லாமலா? நகரத்திலும் பன்றிகள் உண்டு- வேறு வடிவத்தில்- அது பற்றி இப்போது வேண்டாம். வத்திராயிருப்பில் ஏராளமான பன்றிகள் இருந்தன. ஊர் அமைப்பு நகரங்களைப் போல கச்சடாவாக இல்லை - ஒரே தெருவில், கோயிலும், பொதுக் கழிப்பறையும், ஒயின் ஷாப்பும், தெருவோரக் கடைகளும், குப்பைகளும், பள்ளியுமாக. ஊரினுள் நுழைந்ததும் சாவடி/கடைத்தெரு. கடைகள் மட்டுமே. அப்புறம் மூன்று அக்ரஹார தெருக்கள். அதற்குத் தாண்டியதும் மேலப் பாளையம்- தேவர் சமுதாயத்தினர் வாழும் பகுதி. அதற்கும் தாண்டி ஒதுக்குப்புறமாக குடிசைகளில் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினர். அர்ச்சுனா நதிக் கரையை ஒட்டிய தெருவில் சலவைத் தொழிலாளர்கள். நான் இருந்தவரை அந்த அமைப்பு மாறாதிருந்தது (1980).

அக்ரஹாரங்களில் சைக்கிள் விட்டுக்கொண்டு மற்ற சமூகத்தினர் செல்ல மாட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் செருப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். பெரிய வெள்ளை வேட்டியில் துணிகளைத் திணித்து மூட்டை கட்டித் தோளில் சாய்த்து 'துணி இருக்கா?' என்று வண்ணான் ஒருவர் தினமும் வந்து கேட்டு வாங்கிச் செல்வார். 'நாம் துவைத்தால் மட்டும் ஏன் இவ்வளவு வெண்மை வருவதில்லை?' என்று யோசித்திருக்கிறேன்.

வீடுகள் அகலம் குறுகலாகவும், நீளமாகவும் இருக்கும். வீட்டுக்குப் பின்புறம் இன்னொரு வீடெல்லாம் அங்கு கிடையாது. ஒரு தெருவில் இட வலமாக இரு வரிசைகளில் வீடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். வலப்புற வரிசையின் பின்புறம் அடுத்த தெருவின் இடப்புற வரிசை தானே நகரங்களில் இருக்கும்? அங்கும் இருந்தன. ஆனால் இரண்டு வீடுகளுக்கும் நடுவே உள்ளே இடைவெளி அரைக் கிலோ மீட்டராவது இருக்கும்! இரண்டு வீடுகளின் கொல்லைப்புறங்களும் சந்திக்கும் இடம் வீட்டை விட்டு தொலைவில் இருக்கும் கழிவறைகள். அந்த இடைவெளியில் தான் பன்றிகள் உலவும். ஏனென்று சொல்ல வேண்டியதில்லை.

பன்றிகள் அதன் குட்டிகளுடன் கூட்டமாக உலவிக் கொண்டிருக்கும். எல்லா வீடுகளிலும் கழிவறை வசதி இல்லை. வீட்டுக் கொல்லைப் புறத்தில் குத்துக் காலிட்டு அமர வேண்டும். சற்றுத் தொலைவில் குப்பைமேனி செடிகளுக்கு மத்தியில், ஒரு பன்றி நம்மையே உற்றுப் பார்க்கும்- 'எப்போது முடிப்பாய்?' என்று கண்களில் கேள்வியுடன். சில முரட்டுப் பன்றிகள் காத்திருக்க பொறுமையின்றி, நம்மை மிரட்டி ஓடச்செய்துவிடும். அப்போதெல்லாம் கையில் ஒரு கழியோடு அமர வேண்டியிருக்கும். இரவென்றால் இன்னும் சிக்கல். கூட்டு ரங்கன் ஒருமுறை அவ்வாறு குப்பைச் செடிகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கையில், பின்புறம் ஏதோ உறுத்த முதலில் ஏதோ செடி என்று அசட்டையாக இருந்தான். உறுத்தலுடன் மூச்சு விடும் சத்தமும் கேட்கவே, திரும்பிப் பார்த்தவன், பிடரி சிலிர்த்து நின்ற பன்றியைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு ஓடியதைப் பார்த்து நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம்.

குறவர்கள் என்றழைக்கப்பட்ட காக்கி சிராயும், சட்டையும், தலையில் துண்டு அணிந்த மனிதர்கள் பெரிய கேரியர் உள்ள சைக்கிளில் நான்கு கால்களும் வாயும் இறுகக் கட்டப்பட்ட பன்றிகளைக் கொண்டு செல்வதை அவ்வப்போது பார்த்திருக்கிறேன். பன்றிகள் பெருகிப் போன காலங்களில் அவர்கள் நீண்ட கழியின் முனையில் இரும்புக் கம்பி வளையங்களுடன் வந்து பன்றிகளைப் பிடிப்பார்கள். தப்பிக்க ஓடும் பன்றிகளின் வேகம் பிரமிக்க வைக்கும். அவர்களால் அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது. கூடவே ராஜபாளைய நாய்கள் வைத்திருப்பார்கள். அவைகள் பன்றிகளைத் துரத்தி பிடரியில் கவ்வி மடக்கி வீழ்த்தும். நாய்களையும் சில முரட்டுப் பன்றிகள் சிலிர்த்து நின்று எதிர்க்கும்.

பன்றிகளின் தொகையைக் குறைக்க அவர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் நெஞ்சை அதிர வைத்து இதயத்தை உலுக்கும். பொதுபொதுவென்று திரியும் குட்டிகளைத் தூக்கித் தரையில் அடித்துக் கொல்வார்கள். 'ம்க்க்க்' என்று ஒரே அலறலுடன் அவை மடியும் காட்சிகளைப் பார்த்து பல நாட்கள் உறக்கம் வராமல் தவித்திருக்கிறேன். ஆண் பன்றிகளை காயடித்து விடுவார்கள் - அனஸ்தீஷியா இல்லாமல்.

இந்த வேட்டை முடிந்த சில மாதங்களுக்கு கொல்லைப்புறம் வெறிச்சொடியிருக்கும். 'ம்ஈஈஈஈஈ ம்ஈஈஈஈஈ' என்று பாடிக்கொண்டே வரும் பன்றிக்குட்டிகள் காணாமல் போயிருக்கும். 'ம்ர்ர்ர் ம்ர்ர்ர்' என்று உறுமலுடன் உலவும் பன்றிகள் உயிர்பயத்தில் அடர்ந்திருந்த முட் செடிகளின் மறைவில் பதுங்கியிருக்கும்.

காட்டுப்பன்றிகளை மேற்குத்தொடர்ச்சிமலையில் இருக்கும் காட்டழகர் கோயிலுக்குச் செல்லும் வழியில் சில முறை பார்த்திருக்கிறேன். கடைவாயிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் கூரான பற்களுடன்.

***

நன்றி : மரத்தடி.காம்

Thursday, November 10, 2005

கூர்ம


ஆமையைப் பற்றி ஏற்கெனவே ஒருமுறை எழுதியிருந்த நினைவு. இருந்தாலும் இன்னும் கொஞ்சம்.

விவசாயக் கிணறுகள் அளவில் பெரியவை. ஆழத்திலும் தான். உள்ளே இறங்கிச் செல்ல படிகள் இருக்கும். நீரின் அளவை எத்தனைப் படிகள் நீரினுள் இருக்கிறது என்பதை வைத்துச் சொல்வோம். அதிகபட்சமாக எந்தளவு நிரம்பியது என்பதைக் கிணற்றின் உட்சுவர்களில் இருக்கும் கரும்பச்சை பாசி வட்டத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். கட்டாயமாக மீன்கள் உண்டு. ஓரிரண்டு ஆமைகளும் உண்டு. அவை சாதாரணமாக கண்ணில் தென்படாது. மதிய நேரத்தில் சத்தம் போடாமல் கிணற்றில் எட்டிப் பார்த்தால் ஆமைகள் நீந்திக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சிறு சத்தம் கேட்டாலும் அவை மின்னல் வேகத்தில் நீரினுள் சென்று மறைந்து விடும். நிலத்தில்தான் அதன் வேகம் குறைவு.

என் நண்பன் ஜீவா பெரிய நீச்சல் காரன். காசைத் தூக்கிப் போடச் சொல்லிவிட்டு, மெதுவாக பல்தேய்த்து முடித்து பம்ப்செட்டில் வாய் கொப்பளித்து விட்டு சாவதானமாக மேலிருந்து சொருக்கடித்து ஒரு முழு நிமிடமும் நீரினுள் காணாமல் போய் பின்பு செத்தான் என்று நினைக்கையில் குபீரென்று மேலெழுந்து வருவான் கையில் காசுடன்.

ஒரு மதிய வேளையில் பதுங்கிப் பூனை போல் சென்ற ஜீவா குபீரென்று சொருக்கடித்து ஒரு ஆமையைப் பிடித்தே விட்டான். எவ்வளவோ கெஞ்சியும் அதை விடுவிக்க மறுத்து விட்டான். ஆமை அது கைப்பற்றப் பட்ட விநாடியில் அதன் ஓட்டிற்குள் அடங்கிக் கொண்டு விட்டது. பையன்கள் ஓவென்று இரைந்துகொண்டு அதை ஊருக்குள் ஊர்வலமாகக் கொண்டு சென்றார்கள். சக தோழர்களுக்கு அதைப் பெருமையுடன் காட்டினார்கள்.

'என்னங்கடா.. வெறும் ஓட்டை தூக்கிட்டு வந்து படம் காட்றீங்க' என்று யாரோ ஒரு புண்ணியவான் கிண்டலடிக்க, ரோஷமடைந்து, ஆமையை தலை காட்டச் செய்ய பகீரத பிரயத்தனங்கள் செய்து பார்த்தார்கள். ஜீவா அதை தரையில் போட்டு காலால் அழுத்திக்கொண்டு, ஆமை கழுத்தை உள்ளிழுக்கும் சிறிய இடைவெளியைப் பிடித்திழுத்து ஓட்டை இரண்டாகப் பிரிக்க எத்தனித்தான். அது அசைந்து கொடுக்கவில்லை.

மதிய நேரமாகி விட்டபடியால் பையன்கள் தளர்ந்து போய் பசியில் இன்னும் ஆவேசமைடைந்தார்கள். தெருவில் கிடந்த செங்கற்களை எடுத்து பலங்கொண்ட மட்டும் ஆமை ஓட்டில் அடித்துப் பார்த்தார்கள். ஜீவா துண்டில் அதைப் போட்டு இறுகக் கட்டி தரையில் அடித்தும் பார்த்தான். ஓடு சலனமில்லாமல் இருந்தது. நான் ஆமை காலி என்று நினைத்தேன். இவ்வளவு நேரம் கைதட்டி ஊக்குவித்தவர்கள் எல்லாம் இப்போது ஜீவாவைத் திட்டத் தொடங்கியிருந்தார்கள். 'பாவம் உன்னைச் சும்மா விடாது. அடுத்த ஜென்மத்துல ஆமையாப் பொறப்பே' என்று பயமுறுத்தினார்கள்.

மாலையில் கூட்டமாக அதே கிணற்றுக்குச் சென்று ஜீவா வெறுப்புடன் அதை தூக்கியெறிய, நீர் பட்ட அடுத்த நொடியில் கால்களும் தலையும் முளைத்து நீரினுள் ஓடி விட்டது அந்த ஆமை.

இயக்கத்தின் வேகம் குறைக்கப் பட்டதால் அதை ஈடு கட்ட அதிக ஆயுளைக் கொடுத்திருக்கிறார் போலும் இறைவன்!

***

நன்றி: மரத்தடி.காம்

மச்ச



'டேய்.. இது கெளுத்தி மீனு' என்று கருஞ்சாம்பல் நிறத்தில் ஈர பளபளப்புடன் அதைத் தூக்கிக் காட்டியபோது நான் பிரமித்தேன். மீன் 'பாஹ்.. பாஹ்' என்று வாய் திறந்து மூடி; உயிருக்கு ஏங்க, நான் 'விட்ருடா.. பாவம்' என்று சொன்னது வீணாயிற்று. முத்துலிங்கம் தூண்டில் முள்ளை அதன் வாயில் நுழைத்து நெற்றியில் வெளிவரச் செய்ய, எனக்கு லேசாக நடுமூக்கினுள் வலிப்பது போன்ற ஒரு பிரமை.

தூண்டில் சுண்டி எறியப்பட்டு தண்ணீருள் நைலான் நூல் ஆழ்ந்து செல்ல, சில வினாடிகளில் அது வெடுக் வெடுக் என்று உள்ளிழுக்கப்பட்டு, முத்துலிங்கம் தூண்டிலை வெளியே இழுக்க, இப்போது கொழுத்த மீன் ஒன்று ஊசலாடிக் கொண்டிருந்தது. மீனைப் போலவே இப்போது முத்துலிங்கத்தின் கண்களும் பளபளத்தன. 'ஐ.. கெண்டை மீனு மாட்டிக்கிச்சுடோய்..' என்று குஷியாகிவிட்டான். 'வாடீ.. வா' என்று மீனைப் பார்த்துச் சொன்னான். இதே போல பையன்கள் சண்டையிட்டுப் பிரியும்போதும், முறைத்துக் கொள்ளும்போதும் 'இருடீ.. இரு.. ஒன்னய அப்பறம் கவனிச்சுக்கறேன்' என்றும் 'ஒனக்கு இருக்குடீ' என்றும் 'டீ' போட்டுப் பேசுவது வினோதம்.

இப்போது நீண்ட நேரமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த கெண்டை மீனிடம் கடுப்பில் இருந்த முத்துலிங்கம் அது மாட்டியதில் உற்சாகமடைந்திருந்தான். கரையில் வைத்திருந்த தகர டப்பாவில் அரை டஜனுக்கும் மேல் மீன்கள், அரபு நாடுகளில் இருக்கும் நம் உழைக்கும் வர்க்கத்தினர் வசிக்கும் லேபர் கேம்ப்பைப் போலவே, இட நெருக்கடியில் கடைசி மூச்சுகளை விட்டுக்கொண்டிருக்க, இப்போது மாட்டிய கெண்டையை தூண்டிலிலிருந்து விடுவித்து டப்பாவில் போட்டுவிட்டுக் கிளம்பினான். கெண்டையின் போஷாக்கு குழம்பாகி முத்துலிங்கத்திற்குச் சென்று சேரும். முத்துலிங்கம் போஷாக்காக இருந்தான்.

அர்ஜுனா நதிக் கரையோரம் ஒரு சாண் அளவே தண்ணீர் இருந்தது. ஆற்று நடுவில் முழங்காலளவு இருந்தால் அதிகம். மதிய வெயிலுக்கு கரையோரத்தில் தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும். மீன்கள் கூட்டம் கூட்டமாக அசையாது சில வினாடிகள் இருந்து, நாங்கள் அசைந்த போதோ மேலே காகம் பறந்தாலோ சட்டென்று ஆற்றுக்குள் ஓடி விடும். கரைக்கு அப்பால் பச்சை மைதான வயல்வெளிகளில் ஆங்காங்கே நாரைகளும் கொக்குகளும் நண்டுகளுக்காக தவம் கிடந்தன. நீரளவு குறைவாகையால் மீன்கள் எளிதாகச் சிக்கும் கோடைக்காலம் அது.

யாரும் பிடிக்காவிட்டாலும், காய்ந்த ஆற்றில் மீன்களும் காய்ந்து கருவாகிக் கிடப்பதைக் கண்டிருக்கிறேன். மழைக்காலம் ஆரம்பித்து மறுபடியும் நீர்வரத்து துவங்குகையில், எங்கிருந்தோ மீன் கூட்டம் வந்துவிடும். சிப்பாய்களைப் போல் ஒழுங்கான வரிசையில். எப்போதாவது 'விலாங்கு மீன்' என்ற சொல்லப்பட்ட பாம்பு போல் நீண்ட மீன்கள் காணப்படும்.

குளத்திலோ கிணற்றிலோ, ஆற்றிலோ, கடலிலோ குளிக்கையில் அசைவில்லாது நிற்கும் தருணங்களில், பாதங்களில் மொசுமொசுவென்று மீன்கள் பொக்கைவாய்களுடன் கடிக்கும். 'கால்ல இருக்கற அழுக்க சாப்பிடுதுடா' என்பார்கள் நண்பர்கள். ஆனாலும் கூச்ச உணர்வினால் கால்களை உதறிக்கொள்வேன். மீன்களின் முத்தங்களைத் தவிர்ப்பதற்காக, கால்களை அசைத்துக்கொண்டே இருப்பதுண்டு. விவசாயக் கிணறுகளையும், குளங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் மீன்களுக்கு பெரும்பங்கு உண்டு.

குளோரின் அதிகமாக சேர்க்கப்பட்ட காலங்களில் சில கிணறுகளில் வெண்வயிற்றை வானுக்குக் காட்டி செத்து மிதக்கும் மீன்கள். முதன்முதலில் மீன் சாப்பிட்டது மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது. என் நண்பன் ராஜாங்கத்தின் வீட்டில் மீன் குழம்பு பிரமாதமாக சமைப்பார்கள். சாப்பிடும்போது குற்ற உணர்வு உறுத்தும். 'சே.. இதே சுவையில் சைவ உணவு சமைக்க முடியாதா?' என்று நினைத்துக்கொள்வேன். முதல் தடவை உண்டபோது அதிலிருந்த கூரான முட்கள் பயமுறுத்தின. ராஜாங்கம் எலும்பையைம் சதையையும் அடித்து நொறுக்கிச் சாப்பிடுகையில், நான் 'எங்கே தொண்டையில் சிக்கிவிடுமோ?' என்ற பயத்தில் முள்ளெலும்புகளைத் தனியாகப் பிரித்து பிரித்து, நாவால் நிரடிப் பார்த்து சாப்பிட்டு முடிக்கையில் மாலை நேரம் வந்துவிட்டது. அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மதுரையில் அசைவ உணவுக்கா பஞ்சம்! கோனார் கடை என்ன! அண்ணா நகர் சுகுணா சிக்கன் என்ன! முனியாண்டி விலாஸ் என்ன! சாலையோர அக்கா கடைகள் என்ன! எங்கு திரும்பினாலும் நாவில் நீரூறச் செய்யும் சுவையுடன் அசைவ உணவுகள் நிறைந்து கிடக்கும் ஊர் அது.

'போன்லெஸ் சிக்கன்'-ஐ பஜ்ஜி என்று கற்பனை செய்து கொண்டு சாப்பிடுவேன்.

'மீன் நீஞ்சறது?'

'சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்கணும்'

'வாட் டு யூ மீன்?'

'ஐ மீன் வாட் ஐ மீன்'

'என்ன எழவு இது? எல்லாரும் மீன் மீன்னு பேசிண்டிருக்கா?'

மேற்சொன்ன வசனங்களும் அதிரடி நகைச்சுவைக் காட்சிகளும் இடம்பெற்ற மை.ம.கா.ராஜன் படம் நினைவுக்கு வருகிறது.

ஒரு சுபயோக தினத்தில் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி ஏழாண்டுகளாகின்றன.

மீன் உணவுகளைப் பார்த்ததும், மனக்கண்ணில், கடைசி மூச்சுக்காக 'பாஹ் பாஹ்' என்று வாய்திறந்து மூடும் மீனின் பளபளப்புக் கண்கள் நிழலாடும்.

***

Monday, November 07, 2005

என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!



தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
சிறு வயதில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்- தாத்தாவின் தயவால். கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். எல்லாச் சிறுவர்களைப் போலவே எம்.ஜி.ஆர். படங்களும், ரஜினி படங்களும் மட்டும் பிடிக்கும். சட்டையில் பட்டன் போடாமல் முடிச்சு போட்டுக்கொண்டு கண்களை மறைக்குமளவு முடியுடன் எல்லாவற்றையும் ஓரப்பார்வையில் மட்டுமே பார்த்துக்கொண்டு (ரஜினி ஸ்டைல்!) அலைந்திருக்கிறேன்.

கொல்லைப்புறத்தில் கனன்று கொண்டிருக்கும் வெந்நீர் விறகடுப்பை விசிறியால் வீசும் பாவ்லா செய்துகொண்டு, பழைய பேப்பரை சிகரெட் போல் சுருட்டி நெருப்பில் காட்டி, இழுத்துப் புகைவிட முயற்சி செய்து கண்களில் நீர் வர இருமியிருக்கிறேன். பாயும் புலி வந்த போது, ஒரு சட்டியில் மணலை நிரப்பி, விரல்களை விறைப்பாக வைத்து 'யாஹ் யாஹ்' என்று கராத்தே அலறலுடன் அதில் செலுத்தி நகக்கண் பிய்ந்திருக்கிறது.

காய்ந்த வேப்பம் முத்துகளை, மடக்கிய விரல் முட்டியில் வைத்து சட்டென்று அடித்துப் பார்க்க, வேப்பம் முத்து ஓடு உடைந்து முட்டியில் ரத்தக் கோடு போட்டிருக்க அதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்போம், வலியை அடக்கிக்கொண்டு.

'கமல் படமா? அய்யோ ஒரே அழுவாச்சியா இருக்கும்டா.. சிவாஜியா.. அய்யோ அவரு சிரிச்சிக்கிட்டே அழுவாரு!'- இது எங்கள் மத்தியிலிருக்கும் பொதுவான அபிப்ராயம். ஆனாலும் கமல் படங்களைப் பார்த்துவிடுவேன்.

பொழுதுபோக்குக்காகவே படம் பார்த்த காலமது. பின்பு ஒரு சினிமாவை உருவாக்க எவ்வளவு சிரமங்கள் படுகிறார்கள் என்று சற்று அறிந்ததும், ரசனை சற்று மேம்பட்டது. ஆர்வம் எழுந்து, நல்ல படங்கள் எவை என்று கேட்டு, படித்து அறிந்து பார்க்கத் தொடங்கினேன்.

"வடிவேலன் மனசு வச்சான்"... என்று மயிலுடனும் ஸ்ரீதேவியுடனும் ஆடிக்கொண்டும், "நடிகனின் காதலி நாடகம் ஏனடி" என்று ஒரு ஸீ-த்ரூ சட்டையைப் போட்டுக் கொண்டு பாடிக் கொண்டும் இளைஞனாக இருக்கும்போதே முதிர்ச்சியுடன் நடித்த; முதிர்ந்தும் இளமைத் துள்ளலுடன் நடித்துக்கொண்டிருக்கும் கமல் ஹாசன் அமைதியாக ஆர்ப்பாட்டமின்றித் திரையுலகில் கடந்து வந்திருக்கும் பாதை மிகவும் நீளமானது; சாதித்திருப்பதும் அபாரமானது.
அவர் தன்னை வருத்திக்கொண்டு; மெனக்கெட்டுச் செய்யும் பாத்திரங்கள். இந்தியத் திரையுலகின் மிகச் சில முத்துகளில் ஒருவராக கமல் இருப்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

விக்ரம், புன்னகை மன்னன் படங்கள் கமலின் மீதான ஈர்ப்பை அதிகப் படுத்தின என்றால், 1987-ல் வந்த நாயகன் படம் என் ரசனையை ஒரேயடியாகத் திருப்பிப் போட்டது. காஞ்சிபுரத்தில் தீபாவளியன்று நாயகன் பார்த்ததை மறக்கமுடியாது. அப்படத்தின் தாக்கம் சில மாதங்கள் தொடர்ந்தது. அப்படத்தின் வித்தியாசமான சுவரொட்டிகள் இன்னும் நினைவில் நிற்கின்றன- ஒன்று, கருப்பு வெள்ளையில் கமல் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கும் ஆளுயர சுவரொட்டி. இன்னொன்று, கமலின் முண்டாசு கட்டி முழுவதும் வண்ணக்கோலங்கள் இருக்கும் முகம் மட்டும் தெரியும் சுவரொட்டி. (அதற்குப் பிறகு சுவரொட்டியிலேயே வித்தியாசமாக வந்தது கோபுர வாசலிலே திரைப்படத்தின் சுவரொட்டி.)


1987-ல் நாயகன். கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருந்தேன். பள்ளிவரை வகுப்பில் ரஜினி பெரும்பான்மை பெற்றிருக்க, கல்லூரியில் கமல் பெரும்பான்மை பெற்றிருந்தார். 1988-ல் சத்யா வந்தபோது இளைஞர் வட்டாரமே அதிர்ந்து பிரமித்தது. படத்தில் சண்டைக்காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன. அது இளமை முறுக்கேறித் துள்ளிய ஒரு படம். படம் பார்த்ததும் உடனடியாகச் செய்தது இவை: கையில் ஒரு இரும்பு வளையத்தை மாட்டிக் கொண்டு அவ்வப்போது கல்லூரியில் எதிரிகளாகக் கருதியவர்களைப் பார்க்க நேரும் போதெல்லாம், வளையத்தை முழங்கைக்குச் சற்று முன்பு வரை ஏற்றி இறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக்கொள்வது; உடற்பயிற்சி நிலையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, தினமும் அதிகாலையில் சென்று பயிற்சி செய்தது; அரும்பு மீசைக்கு தேங்காய் எண்ணை விட்டு தடிமனாக வளருகிறதா என்று பார்த்தது, தாடியே வராததால் எரிச்சல்பட்டது மற்றும் இதய தேவதை அமலாவை மானசீகமாகக் காதலித்தது!

நான் உடனடியாகக் கமல் ரசிகனாக மாறிவிட்டேன். ரஜினியின் மனிதன் அடிவாங்கி, பின்பு ஊர்க்காவலன், சிவா என்று குப்பை வண்டிகளாக வந்து கொண்டிருக்க அப்புறம் ரஜினி பக்கம் திரும்பவில்லை. ரஜினி ரசிகன் என்ற நிலை நீர்த்துப்போய் விட்டது. இருந்தாலும், தளபதி வந்த புதிதில் கரும்பச்சை நிறச் சட்டை அணிந்து திரிந்து கொண்டிருந்தோம். அனுபவமும் வயதும் கூடியதும் இந்த ரஜினி கமல் எதிர்ப்புநிலைகளெல்லாம் காணாமல் போய் நல்ல சினிமாக்களை ரசிக்க ஆரம்பித்தாகிவிட்டது. இருந்தாலும் நான் அதி-தீவிர கமல் ரசிகன். என்ன படம் பார்க்கும்போது 'தானைத் தலைவர் டாக்டர் கமல் ஹாசன் வாழ்க' என்று மனசுக்குள் கோஷம் போட்டுக்கொண்டு பேப்பர் புஷ்பாஞ்சலியை மானசீகமாக மனதில் தூவிக்கொள்வதோடு சரி!

கமல் படங்களை வினாடி வினாடியாக ரசித்துக்கொண்டிருக்கிறேன். முன்பு சிறுவயதில் விட்டுப்போன அவருடைய சிறந்த படங்களையும் பார்த்துவிட்டேன் (சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், etc.) அவருடைய ஒவ்வொரு நடிப்பசைவும் கிட்டத்தட்ட அத்துப்படியாகி விட்டது.

தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த முயலும் அவருடைய முயற்சி செயற்கரியது என்றால் மிகையாகாது. மேக்கப்பிற்காக அவர் மெனக்கெடுவது, படும் சிரமங்கள்.. அப்பப்பா.. அப்புவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமே!

குணா படம் வெளிவருவதற்கு முன்பே, கொடைக்கானலுக்கு (வழக்கம்போல் யெஸ்டியில்!) சென்று அந்த குகைகளைப் பார்த்துவிட்டு வந்தோம். நேரில் சென்றால் மட்டுமே படக்குழுவினர் பட்டிருக்கும் சிரமங்களை உணரமுடியும். ஒளிப்பதிவில் இந்தியாவிலேயே முதன்முதலில் 'ஸ்டெடிகாம்' பயன்படுத்தப் பட்ட படமாமே அது. இது போன்று நிறைய 'முதன்முதலில் செய்யப்பட்ட' விஷயங்கள் தமிழ்த் திரைப்படங்களில் அடிக்கடி காணமுடிகிறது. 'உன்னை நானறிவேன்' பாடல் தொடங்கும் போதும் முடியும் போதும் கேமரா கோணங்களைத் தொடர்ந்து சென்று பாருங்கள்- பாடல் தொடங்குகையில் வாசல் வழியாகக் கட்டிலில் படுத்திருக்கும் கமலைக் காட்டி, அவரைத் தாண்டி ஜன்னலின் வழியாக வெளியேறி, கீழே கூடாரங்களில் நடக்கும் காமக் கூத்துகளையும், கஸல் பாடல்களையும் கடந்து சென்றுவிட்டு, பின்பு மாடியேறி, மறுபடியும் வாசல் வழியாகக் கட்டிலில் முடியும் காமிரா! எத்தனை ரசிகர்களுக்கு இச்சிரமங்கள் புரிந்திருக்கும் என்ற கேள்வி மனதில் எழாமலும் இல்லை.

கோயிலில் கொள்ளையடித்துவிட்டுத் தப்பி ஓடும்போது, ஓட்டுனரின் நெஞ்சில் தங்க வேல் பாய்ந்ததும், அவர் நிலைகுலைந்து, ஸ்டியரிங்கின் மேல் விழுந்துவிட, கார் தண்ணீரில் பாய்ந்து மூழ்கிப் போகும். மறு நாள், எஸ்.பி.பி. மற்ற காவலர்கள் சகிதம் ஆஜராக, க்ரேன் மூலமாகக் காரை நீரிலிருந்து தூக்க, வண்டியில் ஓட்டுனர் மட்டும் இறந்து கிடப்பார். இந்த காட்சியில் ஒரு தவறு இருக்கிறது.

இந்தியன் இன்னொரு மைல்கல். பொக்கைவாய்க்காரர்கள் அடிக்கடி நாக்கை வாய்க்குள்ளேயே சுழட்டிக்கொண்டிருப்பார்கள். அதையும் துல்லியமாகச் செய்திருந்தார் கமல். 'பச்சைக் கிளிகள் தோளோடு' பாடல் நினைவிருக்கிறதா?. வீட்டு முற்றத்தில் எதிரும் புதிருமாக அப்பா கமலும் பிள்ளை கமலும் அபிநயித்துக்கொண்டே ஒருவரையொருவர் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கடந்து செல்வார்கள். பின்புறம் சுவரோரத்தில் ஒரு பழைய கண்ணாடி பீரோ இருக்கும். இந்த காட்சியிலும் ஒரு பெருந்தவறு இருக்கிறது. கண்டுபிடித்துத் தனியஞ்சல் அனுப்புவோருக்குப் பரிசாக என்னால் முடிந்த அளவு ஒரு வாழ்த்துப்பா பாடி அனுப்புகிறேன்!

இந்தியன் கடைசிக் காட்சிகளில் நிழல்கள் ரவியை நாற்காலியில் கட்டிப்போட்டுவிட்டு, நேதாஜியின் ராணுவ உடையில், கையில் கத்தியுடன் ரவியைச் சுற்றிவந்து அவர் பேசும் கத்தியை விடக் கூர்மையான வசனங்கள் இன்னும் ஞாபகத்தில் உள்ளன. "வெளிநாடுகள்ளாம் நம்மை விட எப்படி முன்னேறியிருக்கு! ஏன்?" என கமல் கேட்க நி.ரவி அதற்கு "அங்க லஞ்சம் இல்லை" என, அதற்கு ஒரு பதில் வரும் பாருங்கள் "இருக்கு.. அங்கயும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க செஞ்ச தப்ப மறைக்கத்தான் லஞ்சம் கொடுக்குறாங்க. ஆனா நம்ம ஊர்ல... கடமையைச் செய்றதுக்கே லஞ்சம் வாங்குறீங்களேடா?" என்பார் ரெளத்திரத்துடன்.. எத்தனை சத்தியமான வார்த்தைகள்! படத்திலேயே டாப் எது என்றால் செந்திலின் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியின் வேடம். அதில் கொஞ்சமும் மிகையில்லை. அப்படியே தோலுரித்துக் காட்டியிருந்தார்கள். கவுண்டமணியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.

கமல் முகத்தில் வயது தெரிகிறது என்றார்கள். 'அக்கடா' என்ற பாடலில் ஒரு காட்சியில் தாவி பக்கவாட்டில் இரு பாதங்களையும் ஒட்டித் தட்டிக்கொள்ளும் ஒரு அசைவு (கமல் அனேகமாக எல்லா நடனப் பாடல்களிலும் இதைச் செய்வார்) இருக்கும். அதை ஒருமுறை செய்ய முயற்சித்துப் பாருங்கள்- எதற்கும் கீழே பஞ்சு மெத்தையைப் போட்டுக்கொள்ளுங்கள்.
ஹே ராம்! என்று எழுத நினைக்கையிலேயே புல்லரிக்கிறது! நரம்பைச் சுண்டும் அந்த இசை! ஒட்டுவேலைகள் எதுவும் இல்லாமல்; பூச்சுகளும் அதிகமில்லாமல், மிகவும் பொருத்தமாக முகம், உடலமைப்பு என்று எல்லாமே பொருந்தியிருந்தது அவருக்கு! கீழே இருக்கும் படங்களில் எனக்குக் கமல் தெரியவில்லை!


மை.ம.கா.ராஜன் ஒரு நகைச்சுவை வெடிகுண்டு என்றால் சதிலீலாவதி நகைச்சுவை அணுகுண்டு! படத்தின் நகைச்சுவையை முழுவதுமாகக் கேட்டுச் சிரிக்க, ஒருமுறை பார்ப்பது போதாது. சதிலீலாவதியை இருபது தடவையாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாக ஒரு நகைச்சுவை வசனம் காதில் விழும். அநியாயத்திற்கு நம்மைச் சிரிக்கவைக்கும் படம் அது (கமல்: "டே அருணு.." ரமேஷ்: "டே நீயா.. இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?" கமல்: "ம்ம்..? சாமி கும்புடறேன்" - டூயட்டை விட ரமேஷ் அரவிந்த் இதில் கலக்கியிருந்தார்!)

மதுரை மதி தியேட்டரில்தான் எப்போதும் கமல் படங்களை வெளியிடுவார்கள். சிங்கார வேலன் வந்த புதிதில் அடிக்கடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு மேலும் சிரிக்க முடியாமல் வெளியில் ஓடியிருக்கிறேன். நுணுக்கமான சில வசனங்கள் - சென்னைக்குப் புறப்படும்போது ஆளாளுக்கு ஒரு மூட்டையைக் கொடுத்து வழியனுப்ப வாலாட்டிக்கொண்டு ஓடி வரும் நாயிடம் "என்னமோ நாத்தம் அடிக்குதே.. எதாச்சும் கவ்விக்கிட்டு வந்துட்டியா?" என்று கேட்டுவிட்டுப் புறப்படுவார். அங்கேயே அந்தக் கருவாட்டு மணம் ஆரம்பித்து சென்னையில் ரயில் நிலையத்தில் ஆட்டோ பிடிப்பதிலிருந்து போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கியிருப்பார்கள்.

சலங்கை ஒலி... இன்றும் பார்க்கலாம். நாட்டியம், கலை என்று எல்லாவற்றையும் மீறி, 'அடுக்கடுக்கான தடைகளைக் கடந்து செல்ல போராடும்' அந்த இளைஞனின் மனோபாவம் என்னைக் கட்டிப் போட்டது. பொறுமையற்று நிலைகுலையும் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய அப்படத்தில் இருக்கிறது. இறுதிக் காட்சியின் 'வேதம் பாடல்' திரைக் கலைஞர்களும் திரைக்குப் பின்னால் வேலை பார்த்த கலைஞர்களும் முழுத்திறமை காட்டிய - குறிப்பாக உச்சஸ்தாயியில் மயங்க வைத்த எஸ்.பி.பி - பாடல். அந்தச் சமையலறை நடனம்! மஞ்சு பார்க்கவி மேடையில் 'பால கனக மய'வுக்கு ஆடிக்கொண்டிருக்க இங்கு கரண்டிகளை வைத்துக்கொண்டு இவர் ஆடும் நடனம்!

சிப்பிக்குள் முத்து-வில் வயதான பாத்திரத்தை விட - இளைஞனாக வரும் பாத்திரமே எனக்குப் பிடித்தது. அது என்னவோ தெரியவில்லை வரிசையாக தெலுங்கில் சிறந்த படங்களாகச் செய்தார். நல்ல வேளை குணாவும் மகாநதியும் தமிழில் வந்தன.

மகாநதி குறித்து சொல்லவே யோசனையாக இருக்கிறது. மறுபடியும் அதன் தீவிரத்தில் உள்ளிழுக்கப்பட்டு விடுவேன் என்று பயமாக இருக்கிறது. "கொஞ்சமாவது மனுசனுக்கு சந்தோஷம் கிடைக்காதா?" என்று ஆதங்கப்பட்டு அழ வைத்த படம். அவர் விட்டிருந்தாலும் வில்லனை நாமே வெட்டியிருப்போம் போன்று ரெளத்திரம் வரவைத்த படம். ஒரு தந்தையாக இன்னும் எச்சரிக்கையாக இருக்கவைத்த படம்!

பேசும் படம் இன்னொரு முத்து. சத்யாவுக்கும் பேசும்படத்திற்கும் வெற்றிவிழாவுக்கும் என் மனதில் சிறப்பு இடங்கள் - ரசனையை மீறிய தனிப்பட்ட காரணங்களுக்காக! :)

சொல்லிக்கொண்டே போகலாம்தான். அடுத்த பிறந்த நாள் வந்துவிடும்!

நகைச்சுவை என்ற பெயரில் வரிசையாக நிறைய குப்பைப் படங்களைச் செய்தது ஏனென்று தெரியவில்லை. ஒரு வித அயர்வு தெரிகிறது - சொந்தப் பிரச்சினைகளின் தாக்கமாக இருக்கலாம். எனக்கென்னவோ அவர் சற்று ஒதுங்கி ஒடுங்கியிருப்பது போன்ற பிரமை. இந்தத் தொய்வு தற்காலிகமாக இருக்கட்டும். அன்பே சிவத்தில் ஆசுவாசப் படுத்தியது மாதிரி, விருமாண்டியில் பரீட்சித்தமாதிரி, புதிய சிந்தனைகளுடன் அவர் மறுபடி வீறுகொண்டு எழட்டும்.

நீங்கள் மடைதிறந்து பாயும் வெள்ளமாக உங்கள் சிறந்த நடிப்பை இன்னும் பல பரிமாணங்களில் எங்களுக்குக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் கமல் ஸார்! உங்களுக்கு போட்டியாக யாரும் கிடையாது. நீங்களே உங்களுக்கு போட்டி!

வாருங்கள் - வேட்டையாடுங்கள் - விளையாடுங்கள்!

நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நிறைய கலைத் தாகத்தையும் உங்களுக்கு அளிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!


நீங்கள் என்றும் சந்தோஷம் கொண்டிருப்பீர்கள்! பிறந்த நாள் வாழ்த்துகள்.

அன்புடன்
சுந்தர்.

படங்கள் : கூகுள் தேடல்