அவசர வேலை (இப்போதெல்லாம் காலையில் எழுந்ததிலிருந்தே எல்லாமே அவசரமாகச் செய்ய வேண்டியிருக்கிறது-இரவில் அவசரமாகத் தூங்குவதுவரை)யாக அலுவலகத்திலிருந்து சிரியா சென்று வர பணித்ததால் இணையப்பக்கம் வரமுடியாமல் காணாமல் போய்விட்டேன் (என்னவோ அதற்கு முன்பு வினாடிக்கு வினாடி எழுதிக்கொண்டிருந்தாற்போல் என்னவொரு அலுப்பு!)
மஸ்கட்டிலிருந்து துபாய்க்கும், அங்கிருந்து சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸ் வரை எமிரேட்ஸ் ஏர்லைன் விமானத்திலும், டமாஸ்கஸ்ஸிலிருந்து அலிப்போ (Aleppo) என்ற இன்னொரு நகரத்திற்கு சிரியன் ஏர்லைனிலும் செல்வதற்காகப் பயணத்திட்டத்தை வகுத்துக் கொண்டு, கையில் மடிக்கணிணியையும் கேமராவையும் மட்டும் வைத்துக் கொண்டு, மூன்று நாள் பயணத்திற்கான ஆடை மற்றும் இன்னபிறவற்றையும் ஒரு பெரிய V.I.P. (வெட்டிவேலைக்குச் செல்லும் இளிச்சவாய்ப் பயணி!) சூட்கேஸில் போட்டு லக்கேஜ் கன்வேயரில் "த்ரூ-அன்-த்ரூ அலிப்போ ப்ளீஸ்" என்று மஸ்கட் விமான நிலையத்தில் கட்டிய ஆடையுடன் செக்கின் கவுண்ட்டரில் நான் சொன்னபோது எனக்குப் பின்னே ஒனிடா சைத்தான் நின்றுகொண்டு சிரித்ததை கவனிக்கவில்லை. கூட என் சக அலுவலக நண்பர். அவரும் இன்னொரு வெ.இ.ப. சூட்கேஸில் எல்லாவற்றையும் வைத்து லக்கேஜாகப் போட்டுவிட்டு, ஒரு டி-ஷர்ட்டுடனும், ட்ராக் ஸூட்டுடனும் கையை வீசிக்கொண்டு வந்தார்.
காலை பதினொரு மணி விமானத்தைப் பிடிக்கவேண்டியிருந்தது. எட்டு மணிக்கு துவங்க வேண்டிய ஒரு வாடிக்கையாளர் மீட்டிங் அவர் தாமதமாக வந்ததால் எட்டரைக்குத் துவங்கி ஒன்பதரை வரை முடியாமல் செல்லவே, நான் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு விடைபெற்று விமான நிலையத்திற்குக் காரில் பறந்து வியர்த்து விறுவிறுத்துப் போய் உள்ளே அமரும்போது 'பருவநிலை பிரச்சினைகளால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும்' என்ற அறிவிப்பு எரிச்சலூட்டியது. மஸ்கட்டிலிருந்து துபாய்க்குப் பறக்க ஒரு மணிநேரம் ஆகும். அங்கிருந்து டமாஸ்கஸுக்கு மதியம் இரண்டு மணிக்கு இன்னொரு விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்தது. ஒருவழியாக மஸ்கட்டிலிருந்து பனிரெண்டரைக்குக் கிளம்பி, ஒன்றரைக்கு துபாயின் பிரம்மாண்ட விமானநிலையத்தை அடைந்ததும் 'இறுதி அழைப்பு' ஒலித்துக் கொண்டிருந்த டமாஸ்கஸ் செல்லும் விமானத்தைத் தேடி மூச்சிறைத்து ஓடி அடைந்து உள்ளே அமர்ந்ததும் சில நிமிடங்களில் கதவடைத்து விமானம் கிளம்பிவிட்டது.
ஒரு இடைச் செருகல். விமானங்களுக்கு ரிவர்ஸ் கியர் கிடையாதாமே! கவனித்தீர்களென்றால் ஒரு சிறு வண்டி விமானத்தின் முன்புறம் இணைக்கப்பட்டு விமானத்தைப் பின்னே தள்ளி ஓடுதளத்தை அடைந்ததும் விடுவித்துச் செல்லும். அறிந்த நண்பர்கள் இதைப் பற்றி விளக்கினால் நலம்.
டமாஸ்கஸ்ஸை மாலை நான்கரைக்கு விமானம் அடைந்தது. விமானத்திலிருந்து ஏர்வே பால நடைபாதையில் கால் வைத்ததும் கண்களைத் தாக்கியது விமான நிலையத்தின் அழுக்கும், அழகான பெண்களும். சிரியர்கள் ஆண்களும் பெண்களும் அவ்வளவு நிறமாக அழகாக இருக்கிறார்கள். அதுவும் பெண்கள்! பொன்னிறக் கூந்தலுடன், எளிமையாக ஆடையுடுத்தி.. கண்களைக் கவர்கிறார்கள். குழந்தைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கொள்ளை அழகு! டமாஸ்கஸ் நேரம் இந்திய நேரத்திலிருந்து இரண்டரை மணிநேரம் பின் தங்கியிருக்கிறது. அலிப்போவிற்கான அடுத்த விமானம் இரவு பத்து மணிக்குத்தான் என்பதால் உள்ளேயே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தோம். என்ன காரணத்தாலோ நகருக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
மருந்துக்குக்கூட ஒரு நபர் கூட ஆங்கிலத்தில் பேசவில்லை- பேசத் தெரியவில்லை. எளிமையான வார்த்தைகளையும் புரிந்து கொள்ளாமல் தடுமாற, அவர்கள் அரபியில் எளிமையாகச் சொன்ன வார்த்தைகளைக் கூட புரிந்துகொள்ள முடியாமல் நாங்கள் தடுமாறினோம். மருந்துக்குக் கூட- என்பது சரிதான். இங்கு வந்து நான்கு வருடங்களாகியும் இன்னும் ஒரு வாக்கியம் கூட அரபியில் பேசக் கற்றுக் கொள்ளாத எங்கள் வியாதிக்கு அது மருந்துதான்.
சிரியன் ஏர்லைன் விமானம் கிட்டத்தட்ட நம்மூர் நகரப் பேருந்து போலிருந்தது. இருக்கை, கைப்பிடி எல்லாம் ஆடிக்கொண்டு ஒருமாதிரியான 'கைவிடப் பட்ட கேஸ்' போல காட்சியளித்தது. நேரம் பத்தரையாகியும் விமானம் கிளம்பியபாடில்லை. பயணிகள் பொறுமையிழந்துபோய் கத்த ஆரம்பித்தார்கள். பாரீஸ்ஸிலிருந்து வரவேண்டிய விமானத்தில் அலிப்போ செல்லவேண்டிய பயணிகள் சிலர் இருந்ததால் எங்கள் விமானம் காத்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக பதினொன்றரை மணிக்கு விமானத்தைக் கிளப்பி அலிப்போவிற்கு பனிரெண்டரைக்குச் சென்று இறங்கியதும், ஒருவர் குறும்பாகக் கைதட்ட மொத்த பயணிகளும் கைதட்டினார்கள் 'ஒரு வழியா வந்து சேத்தீங்களேப்பா' என்கிற தொனியில். பயணத்தின்போது தள்ளுவண்டியில் பணிப்பெண்கள் வந்து ஒரு சிறிய கிண்ணத்தைக் கொடுக்க, பயங்கரப் பசியிலிருந்த நாங்கள் 'ஸ்டார்ட்டர் முதலில் கொடுக்கிறார்கள்' என்று நினைத்துக் கொண்டு கிண்ணத்தைத் திறந்தால் ஒரு வெல்ல உருண்டை. தேங்காய்த் தூள் தூவியிருந்தது. சிலவினாடிகளில் அதைத் தின்றுவிட்டு, நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருந்தால், அப்புறம் அவர்கள் திரும்ப வரவேயில்லை. 'இன்னும் சில நிமிடங்களில் விமானம் அலிப்போவில் இறங்கும்' என்ற அறிவிப்பு தான் வந்தது. என்னதான் சிற்றுண்டி என்றாலும், வெறும் ஒரே ஒரு வெல்ல உருண்டை என்பதெல்லாம் அநியாயம். 'கெடைக்கிற காசுக்கு இம்புட்டுத்தான் கொடுக்க முடியும்' என்று சொல்லாமல் சொன்னார்கள்.
அலிப்போவிலும் மொழிப் பிரச்சினை. ஆனால் நாங்கள் சந்திக்க இருந்த வாடிக்கையாளரின் நிறுவனம் ஒரு புகழ்பெற்ற லாபநோக்கற்ற நிறுவனமாதலால் நிறுவனத்தின் பெயரைச் சொன்னதும், மரியாதையுடன் நடத்தி அனுப்பினார்கள். லக்கேஜ் பெட்டிகள் வரும் கன்வேயரருகே எங்கள் பெட்டிகளுக்காகக் காத்திருந்தோம். ஏறத்தாழ அனைத்துப் பயணிகளும் சென்றுவிட, எங்கள் பெட்டிகள் வரவில்லை. கன்வேயரின் துவக்கத்தின் நின்றிருந்த விமானநிலையப் பணியாள் கைகளை வீசி 'கலாஸ்' என்று விட்டுச் சென்றுவிட எங்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
நிலைய மேலாளரிடம் புகார் செய்தோம். மொழிப் பிரச்சினையினால் அபிநயித்து ஒருவழியாக அவருக்குப் புரியவைத்து அவர் புகாரைப் பதிந்து கொள்ள அதிகாலை இரண்டு மணியாகிவிட்டது. அவரிடம் பெயரைக் கேட்டுக்கொள்வதற்காக 'your name sir?' எனக்கேட்க அவர் 'your name? your name is ahmed' என்றார். அங்கும் இங்கும் ஆயிரக்கணக்கில் அஹ்மத் என்ற பெயர்கொண்டவர்கள் இருக்கிறார்கள். முழுப்பெயரையும் ஆங்கிலத்தில் கேட்டு பதில்பெறப் பொறுமை இல்லாததால் கிளம்பிவிட்டோம். காலை ஏழுமணிக்கு வாடிக்கையாளரைச் சந்திக்கவேண்டும். தற்காலிகமாக ஓரிரு ஆடைகள் வாங்கிக் கொள்ளலாம் என்றால் எந்தக் கடையும் திறந்திருக்கவில்லை. காலையில் பத்துமணிக்குத்தான் திறப்பார்கள் என்று சொன்னார்கள். சந்திப்பை ஒத்திப்போட மனதில்லாததால், மறுநாள் காலை அணிந்திருந்த அதே உடையுடன் சென்றோம்.
அலிப்போ சிரியாவின் இரண்டாவது பெரிய நகரம். சிரியாவின் வடக்கு சமவெளியில் அமைந்திருக்கும் மிகவும் புராதானமான நகரம். அருமையான வானிலை. இருபத்தைந்து டிகிரி செல்சியஸ், பெங்களூரிலிருந்த குளிர் தினங்களை நினைவூட்டியது. மேட்டுப் பாங்கான ஊராகையால் ஊட்டி போன்று சாலைகள் எழும்பியும் தாழ்ந்தும் செல்கின்றன. நவீன வாகனங்கள் எதையும் காணமுடியவில்லை. பழைய சிறு வாகனங்கள் ஒழுங்கின்றி ஒலியிழுப்பிக் கொண்டு, புகையுடன் விரைந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட நம்மூர் சந்தடியைக் கண்முன் நிறுத்தியது அது.
பெட்டி அன்று மாலை எப்படியும் வந்துவிடும் என்ற எங்கள் நம்பிக்கையில் இடி. வரவில்லை. துபாயிலேயே இருக்கிறதா டமாஸ்கஸ்ஸில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. மறுநாளும் நாற்றமடிக்கும் உடையுடன் இருக்கமுடியாதென்பதால், அருகிலிருந்த கடைக்குச் சென்று ஒரு செட் உடையும், உள்ளாடைகளும், காலணி உறைகளும், பற்பசை, பிரஷ் போன்ற உதிரிகளையும் வாங்கிக்கொண்டோம்.
மறந்துபோகும் முன்பு ஒன்றைச் சொல்லவேண்டும். சாதாரணமாக எத்தகைய நிகழ்வுகளின்போதும் மூளையானது அதன் பிரதான சிந்தனைத் தடங்களில், நமக்கு நிகழ்கின்ற சம்பவங்களைப் பதிவு செய்து கொள்வதோடு, அது தொடர்பான நமது பழைய நினைவுப் பதிவுகளையும் கிளறிப் பார்க்கும். காதலியைச் சந்திக்கிறபோது, சிந்தனையில் சிதறல்களாக, பழைய அல்லது முதல் சந்திப்பு தொடர்பான நிகழ்வுகள் நிழலாடுவது போல! சிரியாவில் இருக்கும்போது சென்றிருந்த வேலை சம்பந்தமாக சிந்தித்துக் கொண்டிருந்தபோதிலும், அவ்வப்போது 'சிரியா' என்ற வார்த்தையைத் தொடர்புபடுத்தி மனதில் அடிக்கடி 'கிரியா ஊக்கி' அல்லது 'சிரி சிரி முவ்வா' என்ற வார்த்தைகள் இடறிக்கொண்டிருந்தன. இது ஒரு அபத்தம் என்றாலும், அடிக்கடி நிகழ்கின்ற ஒரு அபத்தம். முன்பொருமுறை 'காத்தவராயன்' என்ற வார்த்தையைப் படித்தபோது நினைவின் ஓரத்தில் 'கொத்தவரங்காய்' என்ற வார்த்தை இடறியது. 'இது எனக்கு மட்டுமே நிகழ்கிறது. நான் தனியன். எனக்கு ஏதோ பிரச்சினை' என்று நினைத்துக் கொள்வதும் இன்னொரு அபத்தம். அப்புறம் இதைப் பற்றிப் பேசலாம். அலிப்போவில் இருக்கும்போதும் கேரளாவின் 'அலப்பி' அடிக்கடி நினைவு வந்தது. நான் "அலப்பியிலிருந்து அலிப்போவரை" என்றொரு மலயாளப் படம் அரபி சப்-டைட்டிலுடன் எடுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
(தொடரும்...)
நன்றி: மரத்தடி.காம்
4 comments:
சிரியாவா? அடிதடி குத்து வெட்டுன்னு எல்லாரும் பயமுறுத்தறாங்களே?
வித்தியாசமான நாட்டுக்குத்தான் போய்ட்டு வந்திருக்கீங்க.
//'இது எனக்கு மட்டுமே நிகழ்கிறது. நான் தனியன். எனக்கு ஏதோ பிரச்சினை' என்று //
தனியனல்ல. எனக்குமுண்டு! :)
சுந்தர், அருமையான கட்டுரை. படிக்கும் போது அங்கங்கே புன்னகை பூக்களைப் பூக்க வைத்திருக்கிறீர்கள்.நல்ல நடை. என்னவோ, பிறர் படுகிற அவதிகளைப் படிக்கும் போது இதையெல்லாம் சொல்லத் தோன்றுகிறது! :-))
அவர்கள் கேபின் பேகேஜ் எடுத்து செல்ல எதற்காக அனுமதிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? இந்த மாதிரி எல்லாம் ஆகும்னு தெரிஞ்சு தானே? இரண்டு செட் உடைகள் நிச்சயம் அதில் இருக்க வேண்டும். எனக்கு இதே மாதிரி ஒரு அனுபவம் சமீபத்தில் நேர்ந்தது. நல்ல வேளையாக நான் இந்தியா திரும்பும் போது அது நேர்ந்தது.
ரிவர்ஸ் கியர் கிடையாது. [இது புது செய்தி. எந்த ஒரு பெரிய விமானத்தையும் பின்னால் தள்ள ஒரு சிறிய வண்டி தேவை என்று ஒரு புது மொழி சொல்லலாம் போலிருக்கிறதே!]
சிரியா கிரியா இது நமக்கும் உண்டு. [இந்த மாதிரி கதை விடுகிறவர்களுக்கு ரொம்பத் தேவையான ஒன்று அது!] ஆனால் கொஞ்சம் வேற மாதிரி! சிரியா என்றவுடன் சிரிப்ரியா என்று ஞாபகத்தில் வரும். சிரி சிரி முவ்வா என்றவுடன் ஏனோ உம்மா என்று மனசு போட்டு குழப்பிக் கொள்கிறது! இது மாதிரி உங்களுக்கும் தோன்றுகிறதா? :-)
சுந்தர் வாழ்த்துக்கள்.இன்றைய இணைய தினமலரில், அறிவியல் ஆயிரம் பகுதியில் உங்கள் வலைப்பதிவைப் பற்றி வந்துள்ளது.
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.
//தினமலரில்//
அட. ஆமாம் உஷா. என்னவோ போங்க. எதுவுமே சரியில்லை வரவர!
லொங்கு லொங்குன்னு நாமளும் எழுதிப் பாக்கறோம். ஆனா 'படம்' காட்டினாத்தான் செல்லுபடியாகுது! :)
நன்றி.
Post a Comment