Sunday, November 13, 2005

வாமன


குள்ள மனிதர்கள் ஒரு வினோதம். பாக்கியராஜின் 'தவக்களை'யை மறந்திருக்க மாட்டோம். தவக்களையைப் போலவே சில குள்ளர்கள் எங்களூரிலும் இருந்தார்கள்.

குள்ளமாக இருப்பதன் செளகரியங்களும் அசெளகரியங்களும் ஆச்சரியமூட்டுபவை. ஆடை தைக்க துணி நிறைய தேவைப்படுவதில்லை. வீட்டினுள் தலையைக் குனிந்து நுழைய வேண்டியதில்லை. தரையிலிருக்கும் பொருட்களை நம்மைவிட விரைவாக எடுக்க முடியும். நம்மை விட அவர்களை குழந்தைகளுக்கு நிரம்பப் பிடிக்கும். உணவும் கொஞ்சம் சாப்பிட்டால் போதும் போல. எல்லாமும் அவர்களுக்கு சிக்கனம்.

ஆனால் அசெளகர்யங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை. பேருந்திலோ வேறு பயணிகளுக்கான வாகனங்களிலோ டக்கென்று உதவியில்லாமல் ஏறிவிட முடியாது. தியேட்டரில் முன்வரிசையிலோ அல்லது சீட்டில் நின்றுகொண்டோ படம் பார்க்கவேண்டும். கவுண்ட்டரில் இன்னொருவர் உதவியுடன் டிக்கெட் வாங்கவேண்டும். தனியாக சைக்கிள் செய்துகொள்ள வேண்டும். வேகமாக ஓட முடியாது. ரெடிமேட் ஆடைகள் கிடைக்காது. இன்னபிற வாழ்க்கைத் தொந்தரவுகள். சக மனிதர்களை எப்போதும் ஏறிட்டுப் பார்க்கவேண்டிய கட்டாயம். கூட்டத்தில் மாட்டிக்கொண்டால் தொலைந்து போகக் கூடிய அபாயம். அப்பப்பா..

தன் சோகத்தினால் மற்றவர்களைச் சிரிக்கவைப்பவர்கள் அவர்கள்.தெருவில் வித்தைகாட்டும் கூத்தாடிக் கும்பல்களில் குள்ளர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரே சக்கர சைக்கிளில் கைகளை விரித்து பாலன்ஸ் செய்து ஓட்டிக்கொண்டு போவார்கள். குள்ளர்கள் இல்லாத சர்க்கஸ் உண்டா? குள்ளர்களின் பால் நம் கவனத்தைக் கவர்ந்ததில் 'அப்பு'விற்கு கொஞ்சம் பங்குண்டு. ஒருமுறை கால்களை பின்புறம் மடக்கிக் கட்டிக்கொண்டு நின்று பாருங்கள். தவக்களை குள்ளமணி என்று பொம்மைகளாகவும் நகைக்கத்தக்க கோமாளிகளாகவும் மட்டுமே குள்ளர்களைத் தமிழ்த்திரையுலகம் சித்தரித்துவந்த வேளையில் அவர்கள் பொம்மைகள் இல்லை; விளையாட்டுக் காட்டும் கோமாளிகள் இல்லை; சின்ன உருவங்களுக்குள் இருக்கும் பெரிய மனிதத்தையும், அரிதாரம் பூசிய முகமூடி முகங்களுக்குப் பின்னே இருக்கும் கண்ணீரையும், சாமான்ய மனிதர்களுக்கான அதே உணர்வுகளும் அவர்களுக்கும் உண்டு என்பதையும் காண்பித்ததில் - அப்புவாக அபூர்வ சகோதரர்களில் - கமல் ஹாஸனுக்கும் பங்கு உண்டு.


குள்ளம் என்பதை விட, அவர்களின் விஸ்வரூபம் சில சமயம் பிரமிக்க வைக்கும்!

பழங்காநத்தம் தண்டல்காரன் பட்டித் தெருவில் பாண்டி என்றொரு குள்ளர் இருந்தார். வயது எவ்வளவென்று சொல்லமுடியாது. அவர் ஒரு குள்ள நாய் (ரயில் மாதிரி நீளமாக இருக்குமே!) வளர்த்திருந்தார். இருவரும் தெருவில் போகும்போது கிண்டலுக்கும் கேலிப்பேச்சுக்களுக்கும் குறைவிருக்காது. அவர் மனைவி சாதாரண மனிதர்களைப் போல உயரம். அது பாண்டிக்கு இன்னும் ஏச்சுபேச்சுக்களையே தந்தது. தெரு முக்கில் லுங்கியை மடித்துக்கட்டி உட்கார்ந்திருக்கும் இளவட்டங்கள், பாண்டியும் அவர் மனைவியும் சேர்ந்து போகும்போது, வக்கிர கமெண்ட்டுக்களை அள்ளி வீசுவார்கள். இருவரும் அவற்றைச் செவிமடுக்காமல் செல்வார்கள். பரிதாபம். இது முற்றிப்போய், ஒரு நாள் பாண்டியின் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு இருக்கும் சோழவந்தானுக்குச் சென்றுவிட்டார். பாண்டிக்கு இன்னும் சிரமமாகி விட்டது.

ஒரு மாலைப் பொழுதில் பாண்டி தெருவில் வந்து கொண்டிருந்தபோது, வாடிக்கைக் கும்பல் ஒன்று ஏதோ கமெண்ட் அடிக்க, பாண்டி நின்றார். அவர்களைப் பார்க்க, அவர்கள் சிரித்தார்கள். மெதுவாக நடந்து அவர்கள் அருகில் சென்றார். அவர்கள் குட்டிச்சுவர் மீது கால்களை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். பாண்டி அந்தச் சுவர் உயரம் கூட இல்லாதிருந்தார். அவர்களில் தலைவனாகத் தோன்றியவன் முன்னே சென்று நின்று அவனை உற்று நோக்க, அவன் 'என்ன பாண்டி! சம்சாரத்தைக் காணோம்' என நக்கலாகச் சிரித்தான். பாண்டி சட்டென்று அவன் கால்களுக்கிடையே கையைச் செலுத்தித் திருக, அவன் பெற்றவளை அலறி அழைத்தான்.

பாண்டியின் கைகள் உறுதியானவை. உழைத்துக் காய்த்து நரம்போடியிருப்பவை. அந்தச் சிலவிநாடிகளில் அவ்விளைஞன் நரகத்தைப் பார்த்தான். அருகில் அமர்ந்தவர்கள் 'ங்கோ.......' என்று பாண்டியைத் தாக்கி இழுக்க, பாண்டியை அசைக்க முடியவில்லை. 'விட்றா... விட்றா..' என்று அவன் அலறித்துடித்து மயங்கி விழ, பாண்டி அமைதியாகத் திரும்பி நடந்து போனார். ஸ்தம்பித்திருந்த தெரு, இயக்கம் பெற்று விட்ட இடத்தில் தொடர, நண்பர்கள் அவனைத் தூக்கிப் போனார்கள்.

மறுநாளிலிருந்து குட்டிச்சுவர் காலியாக இருந்தது.

***

நன்றி: மரத்தடி.காம்

No comments: