Friday, November 04, 2005

சிரியா - 2

மறுநாள் மாலையும் டமாஸ்கஸ்ஸிலிருந்து அலிப்போ வந்த விமானத்தில் பெட்டிகள் வரவில்லை. ஒரு நாளைக்கு ஒரு சவாரி மட்டுமே அடிக்கும் விமானம் அது.


அன்றிரவு ஒரு டாக்ஸியில் ஏறி (டாக்ஸி ட்ரைவர் 'கேஸ்ஸே ஹே' என்று பலமுறை கேட்டுக்கொண்டே இருந்தார்) நகரின் மையத்தில் இருக்கும் ஸிட்டாடல் (Citadel) என்ற ஒரு பழமையான கோட்டைக்குச் சென்றோம். இரவில் விளக்குகளின் மஞ்சள் ஒளியில் மிகவும் ரம்யமாகக் காட்சியளித்தது ஸிட்டாடல். பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கணக்கிட்டிருக்கிறார்கள். ஜெர்ட்ரூட் பெல் எனப்படும் ஆங்கிலேயப் பெண்மணி, சாஸரில் மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் தேனீர் கோப்பையின் அமைப்பிற்கு இதனை ஒப்புமைப்படுத்தியிருக்கிறார். பனிரெண்டு மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளுக்கிடையே மங்கோலியர்களின் படையெடுப்புக்கு ஆளானது இந்த ஸிட்டாடல்.வெளியில் நின்று பார்த்தாலே அதன் வரலாற்றுக்குள் நுழைந்துவிட்ட பிரமை ஏற்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமான அமைப்பு. குழப்பும் வழித்தடங்கள் (எதிராளிகளை, தாக்குபவர்களைக் குழப்புவதற்காக அப்படி வடிவமைத்துள்ளார்களாம்).

அலிப்போ நகரமே ஸிட்டாடலைச் சுற்றி அமைக்கப்பட்ட புராதான நகரம். குறுகிய சாலைகளும், புராதான கட்டிடங்களும் வரலாற்றைப் பறைசாற்றுகின்றன. ஸிட்டாடலிலிருந்து வெளியே செல்லச் செல்ல, விரிவடையும் சாலைகளையும், சற்று நவீன கட்டடங்களையும் (புது அலிப்போ) காணலாம்.


மூன்றாம் நாள் மாலை வேலை முடிந்தது. எனக்கு நான்காம் நாள் காலை ஏழு மணிக்கு அலிப்போவிலிருந்து டமாஸ்கஸ்ஸுக்கு விமானம். கூட வந்திருந்த சகா மூன்றாம் நாள் மாலையே ஆறு மணிக்கு இருந்த விமானத்தைப் பிடித்து டமாஸ்கஸ் சென்று, டமாஸ்கஸ்ஸிலிருந்து இரவு பதினொன்றரைக்கு பாரீஸ் செல்லும் விமானத்தைப் பிடிக்கவேண்டும். ஆனால் பெட்டியில்லாமல் அவரால் செல்லமுடியாது. பாரீஸ் பயணத்திற்குத் தேவையான அனைத்தும் அவர் பெட்டியில் வைத்திருந்தார். ஒரு வழியாக வேலை முடிந்து விடுதிக்குத் திரும்பும்போது, பெட்டிகள் வந்துவிட்டன என்ற செய்தி கிடைத்ததும், அவர் ஆனந்தக் கூத்தாடி, விடுதிக்கே வராமல் நேரடியாக விமான நிலையத்திற்கு ஓடி, டமாஸ்கஸ் விமானத்தைப் பிடித்துச் சென்றார்.

அன்றைய இரவும் குளிரில் கழிந்தது. உறங்கும் முன், மறுநாள் காலையில் ஏழுமணி விமானத்திற்காக ஐந்து மணிக்கே விடுதியில் அறையைக் காலி செய்துகொண்டு கிளம்பவேண்டும் என்பதால், வரவேற்பறை ஊழியரிடம் 'வேக்கப் கால்' நான்கரைக்கு என்று சொல்லிவிட்டுத் தூங்கினேன். அவர் அதைப் புரிந்துகொண்டாரா இல்லையா என்பதை நிச்சயம் செய்து கொள்ளாதது என் தவறு.

அது ஒரு நான்கு நட்சத்திர விடுதி என்றாலும், நம்மூரில் இருப்பதைப் போன்று, அறையிலிருக்கும் தொலைபேசியிலேயே எழுப்பும் அழைப்பிற்கு ப்ரோக்ராம் செய்துகொள்ளும் வசதிகள் இல்லை. பெரும்பாலும் உள்ளூரிலேயே தயாரிக்கப் பட்ட சாதனங்கள் உபயோகிக்கிறார்கள். இறக்குமதிக்கு நிறைய கெடுபிடிகள் இருப்பதால், எல்லாமும் உள்ளூர் சமாச்சாரங்கள்.

பொதுவாக அலாரம் இல்லாவிட்டாலும், நினைத்த நேரத்திற்கு எழுந்து விடும் பழக்கம் உள்ளவன் நான். இருந்தாலும், இரண்டு இரவுகள் சரியாக உறங்காததினாலும், பயணக் களைப்பினாலும், அன்று அடித்துப் போட்டவாறு தூங்கிவிட்டேன். மறுநாள் அறையில் பரவிய சூரிய வெளிச்சத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால், மணி ஒன்பது ஆகியிருந்தது. அலிப்போவிலிருந்து அந்த காலை விமானத்தை விட்டால் டமாஸ்கஸ்ஸுக்கு வேறு விமானம் கிடையாது. டமாஸ்கஸ்ஸிலிருந்து துபாய் செல்லும் எமிரேட்ஸ் விமானம் மாலை ஐந்தரை மணிக்கு. வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு பிரச்சினையைச் சொன்னதும் 'கவலைப் படாதீர்கள். எங்கள் நிறுவன வாகனம் தினமும் டமாஸ்கஸ்ஸுக்கு இரு முறை செல்கிறது. டமாஸ்கஸ் அடைய மூன்றரை மணிநேரம் ஆகும். நிறைய நேரமிருக்கிறது. வண்டி அனுப்பிவைக்கிறேன்' என்று பால் வார்த்தார். அவருக்கு பலமுறை நன்றிகூறிவிட்டு அறையைக் காலிசெய்துவிட்டு நிறுவன வாகனத்தில் டமாஸ்கஸ்ஸிற்குப் பயணித்தேன்.

சிரியாவில் ஆண்களும் பெண்களும் சகட்டு மேனிக்குப் புகைக்கிறார்கள்.சாலைப்பயணத்தில் இருபுறமும் ஓடும் காட்சிகள்; மலைப்பாங்கான நிலப்பரப்புகள், நம்மூரின் பல இடங்களை நினைவுபடுத்துகிறது. விவசாயத்தை அபிவிருத்தி செய்யக் கடும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மஸ்கட், துபாயில் பயணம் செய்யும்போது பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன செயற்கை கட்டுமானங்கள் இல்லாது, புராதானங்கள் நிரம்பிய, பசுமை விரவிய அலிப்போ, ஒரு மாறுதலான அனுபவமாக மகிழ்ச்சி தந்தது.அங்கிருந்து மூன்றரை மணி நேர சாலைப் பிரயாணத்தில் டமாஸ்கஸ்ஸை அடைந்துவிடலாம். நூறு நூற்றைம்பது கிலோ மீட்டர் தூரத்திற்குள் துருக்கி, லெபனான், இராக் நாடுகளின் எல்லையை அடைந்துவிடலாமாம்.

அடடா.. இன்னும் சில மணி நேரங்களில் மஸ்கட் அடைந்துவிடுவோம்.. மறுபடியும் வெப்பத்தில் வாடி வதங்கப்போகிறோம் என்ற எண்ணமே, அலிப்போவைப் பிரியும் துயரை அதிகப்படுத்தியது. இருந்தாலும் அலிப்போ வரும்போது டமாஸ்கஸ் நகருக்குள் சென்று பார்க்கமுடியாத குறையை இப்போது சாலை வழியாகப் பயணிப்பதால் தீர்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் பட்டுக் கொண்டேன்.

வழித்தடங்களில் இருந்த அறிவிப்புப் பலகையொன்றில் 'பாக்தாத்' என்ற பெயரைப் பார்த்ததும், ரியர் வ்யூ கண்ணாடியில் பின்னால் எதுவும் அமெரிக்க டாங்கி வருகிறதா என்று பார்த்தேன்.


(தொடரும்...)

நன்றி : மரத்தடி.காம்

No comments: