தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
சிறு வயதில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்- தாத்தாவின் தயவால். கணக்கு வழக்கில்லாமல் பார்த்திருக்கிறேன். எல்லாச் சிறுவர்களைப் போலவே எம்.ஜி.ஆர். படங்களும், ரஜினி படங்களும் மட்டும் பிடிக்கும். சட்டையில் பட்டன் போடாமல் முடிச்சு போட்டுக்கொண்டு கண்களை மறைக்குமளவு முடியுடன் எல்லாவற்றையும் ஓரப்பார்வையில் மட்டுமே பார்த்துக்கொண்டு (ரஜினி ஸ்டைல்!) அலைந்திருக்கிறேன்.
கொல்லைப்புறத்தில் கனன்று கொண்டிருக்கும் வெந்நீர் விறகடுப்பை விசிறியால் வீசும் பாவ்லா செய்துகொண்டு, பழைய பேப்பரை சிகரெட் போல் சுருட்டி நெருப்பில் காட்டி, இழுத்துப் புகைவிட முயற்சி செய்து கண்களில் நீர் வர இருமியிருக்கிறேன். பாயும் புலி வந்த போது, ஒரு சட்டியில் மணலை நிரப்பி, விரல்களை விறைப்பாக வைத்து 'யாஹ் யாஹ்' என்று கராத்தே அலறலுடன் அதில் செலுத்தி நகக்கண் பிய்ந்திருக்கிறது.
காய்ந்த வேப்பம் முத்துகளை, மடக்கிய விரல் முட்டியில் வைத்து சட்டென்று அடித்துப் பார்க்க, வேப்பம் முத்து ஓடு உடைந்து முட்டியில் ரத்தக் கோடு போட்டிருக்க அதைப் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்போம், வலியை அடக்கிக்கொண்டு.
'கமல் படமா? அய்யோ ஒரே அழுவாச்சியா இருக்கும்டா.. சிவாஜியா.. அய்யோ அவரு சிரிச்சிக்கிட்டே அழுவாரு!'- இது எங்கள் மத்தியிலிருக்கும் பொதுவான அபிப்ராயம். ஆனாலும் கமல் படங்களைப் பார்த்துவிடுவேன்.
பொழுதுபோக்குக்காகவே படம் பார்த்த காலமது. பின்பு ஒரு சினிமாவை உருவாக்க எவ்வளவு சிரமங்கள் படுகிறார்கள் என்று சற்று அறிந்ததும், ரசனை சற்று மேம்பட்டது. ஆர்வம் எழுந்து, நல்ல படங்கள் எவை என்று கேட்டு, படித்து அறிந்து பார்க்கத் தொடங்கினேன்.
"வடிவேலன் மனசு வச்சான்"... என்று மயிலுடனும் ஸ்ரீதேவியுடனும் ஆடிக்கொண்டும், "நடிகனின் காதலி நாடகம் ஏனடி" என்று ஒரு ஸீ-த்ரூ சட்டையைப் போட்டுக் கொண்டு பாடிக் கொண்டும் இளைஞனாக இருக்கும்போதே முதிர்ச்சியுடன் நடித்த; முதிர்ந்தும் இளமைத் துள்ளலுடன் நடித்துக்கொண்டிருக்கும் கமல் ஹாசன் அமைதியாக ஆர்ப்பாட்டமின்றித் திரையுலகில் கடந்து வந்திருக்கும் பாதை மிகவும் நீளமானது; சாதித்திருப்பதும் அபாரமானது.
அவர் தன்னை வருத்திக்கொண்டு; மெனக்கெட்டுச் செய்யும் பாத்திரங்கள். இந்தியத் திரையுலகின் மிகச் சில முத்துகளில் ஒருவராக கமல் இருப்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
விக்ரம், புன்னகை மன்னன் படங்கள் கமலின் மீதான ஈர்ப்பை அதிகப் படுத்தின என்றால், 1987-ல் வந்த நாயகன் படம் என் ரசனையை ஒரேயடியாகத் திருப்பிப் போட்டது. காஞ்சிபுரத்தில் தீபாவளியன்று நாயகன் பார்த்ததை மறக்கமுடியாது. அப்படத்தின் தாக்கம் சில மாதங்கள் தொடர்ந்தது. அப்படத்தின் வித்தியாசமான சுவரொட்டிகள் இன்னும் நினைவில் நிற்கின்றன- ஒன்று, கருப்பு வெள்ளையில் கமல் முதுகைக் காட்டிக்கொண்டு நிற்கும் ஆளுயர சுவரொட்டி. இன்னொன்று, கமலின் முண்டாசு கட்டி முழுவதும் வண்ணக்கோலங்கள் இருக்கும் முகம் மட்டும் தெரியும் சுவரொட்டி. (அதற்குப் பிறகு சுவரொட்டியிலேயே வித்தியாசமாக வந்தது கோபுர வாசலிலே திரைப்படத்தின் சுவரொட்டி.)
1987-ல் நாயகன். கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருந்தேன். பள்ளிவரை வகுப்பில் ரஜினி பெரும்பான்மை பெற்றிருக்க, கல்லூரியில் கமல் பெரும்பான்மை பெற்றிருந்தார். 1988-ல் சத்யா வந்தபோது இளைஞர் வட்டாரமே அதிர்ந்து பிரமித்தது. படத்தில் சண்டைக்காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தன. அது இளமை முறுக்கேறித் துள்ளிய ஒரு படம். படம் பார்த்ததும் உடனடியாகச் செய்தது இவை: கையில் ஒரு இரும்பு வளையத்தை மாட்டிக் கொண்டு அவ்வப்போது கல்லூரியில் எதிரிகளாகக் கருதியவர்களைப் பார்க்க நேரும் போதெல்லாம், வளையத்தை முழங்கைக்குச் சற்று முன்பு வரை ஏற்றி இறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக்கொள்வது; உடற்பயிற்சி நிலையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து, தினமும் அதிகாலையில் சென்று பயிற்சி செய்தது; அரும்பு மீசைக்கு தேங்காய் எண்ணை விட்டு தடிமனாக வளருகிறதா என்று பார்த்தது, தாடியே வராததால் எரிச்சல்பட்டது மற்றும் இதய தேவதை அமலாவை மானசீகமாகக் காதலித்தது!
நான் உடனடியாகக் கமல் ரசிகனாக மாறிவிட்டேன். ரஜினியின் மனிதன் அடிவாங்கி, பின்பு ஊர்க்காவலன், சிவா என்று குப்பை வண்டிகளாக வந்து கொண்டிருக்க அப்புறம் ரஜினி பக்கம் திரும்பவில்லை. ரஜினி ரசிகன் என்ற நிலை நீர்த்துப்போய் விட்டது. இருந்தாலும், தளபதி வந்த புதிதில் கரும்பச்சை நிறச் சட்டை அணிந்து திரிந்து கொண்டிருந்தோம். அனுபவமும் வயதும் கூடியதும் இந்த ரஜினி கமல் எதிர்ப்புநிலைகளெல்லாம் காணாமல் போய் நல்ல சினிமாக்களை ரசிக்க ஆரம்பித்தாகிவிட்டது. இருந்தாலும் நான் அதி-தீவிர கமல் ரசிகன். என்ன படம் பார்க்கும்போது 'தானைத் தலைவர் டாக்டர் கமல் ஹாசன் வாழ்க' என்று மனசுக்குள் கோஷம் போட்டுக்கொண்டு பேப்பர் புஷ்பாஞ்சலியை மானசீகமாக மனதில் தூவிக்கொள்வதோடு சரி!
கமல் படங்களை வினாடி வினாடியாக ரசித்துக்கொண்டிருக்கிறேன். முன்பு சிறுவயதில் விட்டுப்போன அவருடைய சிறந்த படங்களையும் பார்த்துவிட்டேன் (சலங்கை ஒலி, மூன்றாம் பிறை, வாழ்வே மாயம், etc.) அவருடைய ஒவ்வொரு நடிப்பசைவும் கிட்டத்தட்ட அத்துப்படியாகி விட்டது.
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த முயலும் அவருடைய முயற்சி செயற்கரியது என்றால் மிகையாகாது. மேக்கப்பிற்காக அவர் மெனக்கெடுவது, படும் சிரமங்கள்.. அப்பப்பா.. அப்புவிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமே!
குணா படம் வெளிவருவதற்கு முன்பே, கொடைக்கானலுக்கு (வழக்கம்போல் யெஸ்டியில்!) சென்று அந்த குகைகளைப் பார்த்துவிட்டு வந்தோம். நேரில் சென்றால் மட்டுமே படக்குழுவினர் பட்டிருக்கும் சிரமங்களை உணரமுடியும். ஒளிப்பதிவில் இந்தியாவிலேயே முதன்முதலில் 'ஸ்டெடிகாம்' பயன்படுத்தப் பட்ட படமாமே அது. இது போன்று நிறைய 'முதன்முதலில் செய்யப்பட்ட' விஷயங்கள் தமிழ்த் திரைப்படங்களில் அடிக்கடி காணமுடிகிறது. 'உன்னை நானறிவேன்' பாடல் தொடங்கும் போதும் முடியும் போதும் கேமரா கோணங்களைத் தொடர்ந்து சென்று பாருங்கள்- பாடல் தொடங்குகையில் வாசல் வழியாகக் கட்டிலில் படுத்திருக்கும் கமலைக் காட்டி, அவரைத் தாண்டி ஜன்னலின் வழியாக வெளியேறி, கீழே கூடாரங்களில் நடக்கும் காமக் கூத்துகளையும், கஸல் பாடல்களையும் கடந்து சென்றுவிட்டு, பின்பு மாடியேறி, மறுபடியும் வாசல் வழியாகக் கட்டிலில் முடியும் காமிரா! எத்தனை ரசிகர்களுக்கு இச்சிரமங்கள் புரிந்திருக்கும் என்ற கேள்வி மனதில் எழாமலும் இல்லை.
கோயிலில் கொள்ளையடித்துவிட்டுத் தப்பி ஓடும்போது, ஓட்டுனரின் நெஞ்சில் தங்க வேல் பாய்ந்ததும், அவர் நிலைகுலைந்து, ஸ்டியரிங்கின் மேல் விழுந்துவிட, கார் தண்ணீரில் பாய்ந்து மூழ்கிப் போகும். மறு நாள், எஸ்.பி.பி. மற்ற காவலர்கள் சகிதம் ஆஜராக, க்ரேன் மூலமாகக் காரை நீரிலிருந்து தூக்க, வண்டியில் ஓட்டுனர் மட்டும் இறந்து கிடப்பார். இந்த காட்சியில் ஒரு தவறு இருக்கிறது.
இந்தியன் இன்னொரு மைல்கல். பொக்கைவாய்க்காரர்கள் அடிக்கடி நாக்கை வாய்க்குள்ளேயே சுழட்டிக்கொண்டிருப்பார்கள். அதையும் துல்லியமாகச் செய்திருந்தார் கமல். 'பச்சைக் கிளிகள் தோளோடு' பாடல் நினைவிருக்கிறதா?. வீட்டு முற்றத்தில் எதிரும் புதிருமாக அப்பா கமலும் பிள்ளை கமலும் அபிநயித்துக்கொண்டே ஒருவரையொருவர் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் கடந்து செல்வார்கள். பின்புறம் சுவரோரத்தில் ஒரு பழைய கண்ணாடி பீரோ இருக்கும். இந்த காட்சியிலும் ஒரு பெருந்தவறு இருக்கிறது. கண்டுபிடித்துத் தனியஞ்சல் அனுப்புவோருக்குப் பரிசாக என்னால் முடிந்த அளவு ஒரு வாழ்த்துப்பா பாடி அனுப்புகிறேன்!
இந்தியன் கடைசிக் காட்சிகளில் நிழல்கள் ரவியை நாற்காலியில் கட்டிப்போட்டுவிட்டு, நேதாஜியின் ராணுவ உடையில், கையில் கத்தியுடன் ரவியைச் சுற்றிவந்து அவர் பேசும் கத்தியை விடக் கூர்மையான வசனங்கள் இன்னும் ஞாபகத்தில் உள்ளன. "வெளிநாடுகள்ளாம் நம்மை விட எப்படி முன்னேறியிருக்கு! ஏன்?" என கமல் கேட்க நி.ரவி அதற்கு "அங்க லஞ்சம் இல்லை" என, அதற்கு ஒரு பதில் வரும் பாருங்கள் "இருக்கு.. அங்கயும் லஞ்சம் இருக்கு. ஆனா அங்க செஞ்ச தப்ப மறைக்கத்தான் லஞ்சம் கொடுக்குறாங்க. ஆனா நம்ம ஊர்ல... கடமையைச் செய்றதுக்கே லஞ்சம் வாங்குறீங்களேடா?" என்பார் ரெளத்திரத்துடன்.. எத்தனை சத்தியமான வார்த்தைகள்! படத்திலேயே டாப் எது என்றால் செந்திலின் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியின் வேடம். அதில் கொஞ்சமும் மிகையில்லை. அப்படியே தோலுரித்துக் காட்டியிருந்தார்கள். கவுண்டமணியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
கமல் முகத்தில் வயது தெரிகிறது என்றார்கள். 'அக்கடா' என்ற பாடலில் ஒரு காட்சியில் தாவி பக்கவாட்டில் இரு பாதங்களையும் ஒட்டித் தட்டிக்கொள்ளும் ஒரு அசைவு (கமல் அனேகமாக எல்லா நடனப் பாடல்களிலும் இதைச் செய்வார்) இருக்கும். அதை ஒருமுறை செய்ய முயற்சித்துப் பாருங்கள்- எதற்கும் கீழே பஞ்சு மெத்தையைப் போட்டுக்கொள்ளுங்கள்.
ஹே ராம்! என்று எழுத நினைக்கையிலேயே புல்லரிக்கிறது! நரம்பைச் சுண்டும் அந்த இசை! ஒட்டுவேலைகள் எதுவும் இல்லாமல்; பூச்சுகளும் அதிகமில்லாமல், மிகவும் பொருத்தமாக முகம், உடலமைப்பு என்று எல்லாமே பொருந்தியிருந்தது அவருக்கு! கீழே இருக்கும் படங்களில் எனக்குக் கமல் தெரியவில்லை!
மை.ம.கா.ராஜன் ஒரு நகைச்சுவை வெடிகுண்டு என்றால் சதிலீலாவதி நகைச்சுவை அணுகுண்டு! படத்தின் நகைச்சுவையை முழுவதுமாகக் கேட்டுச் சிரிக்க, ஒருமுறை பார்ப்பது போதாது. சதிலீலாவதியை இருபது தடவையாவது பார்த்திருப்பேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதிதாக ஒரு நகைச்சுவை வசனம் காதில் விழும். அநியாயத்திற்கு நம்மைச் சிரிக்கவைக்கும் படம் அது (கமல்: "டே அருணு.." ரமேஷ்: "டே நீயா.. இங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க?" கமல்: "ம்ம்..? சாமி கும்புடறேன்" - டூயட்டை விட ரமேஷ் அரவிந்த் இதில் கலக்கியிருந்தார்!)
மதுரை மதி தியேட்டரில்தான் எப்போதும் கமல் படங்களை வெளியிடுவார்கள். சிங்கார வேலன் வந்த புதிதில் அடிக்கடி வயிற்றைப் பிடித்துக்கொண்டு மேலும் சிரிக்க முடியாமல் வெளியில் ஓடியிருக்கிறேன். நுணுக்கமான சில வசனங்கள் - சென்னைக்குப் புறப்படும்போது ஆளாளுக்கு ஒரு மூட்டையைக் கொடுத்து வழியனுப்ப வாலாட்டிக்கொண்டு ஓடி வரும் நாயிடம் "என்னமோ நாத்தம் அடிக்குதே.. எதாச்சும் கவ்விக்கிட்டு வந்துட்டியா?" என்று கேட்டுவிட்டுப் புறப்படுவார். அங்கேயே அந்தக் கருவாட்டு மணம் ஆரம்பித்து சென்னையில் ரயில் நிலையத்தில் ஆட்டோ பிடிப்பதிலிருந்து போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கியிருப்பார்கள்.
சலங்கை ஒலி... இன்றும் பார்க்கலாம். நாட்டியம், கலை என்று எல்லாவற்றையும் மீறி, 'அடுக்கடுக்கான தடைகளைக் கடந்து செல்ல போராடும்' அந்த இளைஞனின் மனோபாவம் என்னைக் கட்டிப் போட்டது. பொறுமையற்று நிலைகுலையும் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய அப்படத்தில் இருக்கிறது. இறுதிக் காட்சியின் 'வேதம் பாடல்' திரைக் கலைஞர்களும் திரைக்குப் பின்னால் வேலை பார்த்த கலைஞர்களும் முழுத்திறமை காட்டிய - குறிப்பாக உச்சஸ்தாயியில் மயங்க வைத்த எஸ்.பி.பி - பாடல். அந்தச் சமையலறை நடனம்! மஞ்சு பார்க்கவி மேடையில் 'பால கனக மய'வுக்கு ஆடிக்கொண்டிருக்க இங்கு கரண்டிகளை வைத்துக்கொண்டு இவர் ஆடும் நடனம்!
சிப்பிக்குள் முத்து-வில் வயதான பாத்திரத்தை விட - இளைஞனாக வரும் பாத்திரமே எனக்குப் பிடித்தது. அது என்னவோ தெரியவில்லை வரிசையாக தெலுங்கில் சிறந்த படங்களாகச் செய்தார். நல்ல வேளை குணாவும் மகாநதியும் தமிழில் வந்தன.
மகாநதி குறித்து சொல்லவே யோசனையாக இருக்கிறது. மறுபடியும் அதன் தீவிரத்தில் உள்ளிழுக்கப்பட்டு விடுவேன் என்று பயமாக இருக்கிறது. "கொஞ்சமாவது மனுசனுக்கு சந்தோஷம் கிடைக்காதா?" என்று ஆதங்கப்பட்டு அழ வைத்த படம். அவர் விட்டிருந்தாலும் வில்லனை நாமே வெட்டியிருப்போம் போன்று ரெளத்திரம் வரவைத்த படம். ஒரு தந்தையாக இன்னும் எச்சரிக்கையாக இருக்கவைத்த படம்!
பேசும் படம் இன்னொரு முத்து. சத்யாவுக்கும் பேசும்படத்திற்கும் வெற்றிவிழாவுக்கும் என் மனதில் சிறப்பு இடங்கள் - ரசனையை மீறிய தனிப்பட்ட காரணங்களுக்காக! :)
சொல்லிக்கொண்டே போகலாம்தான். அடுத்த பிறந்த நாள் வந்துவிடும்!
நகைச்சுவை என்ற பெயரில் வரிசையாக நிறைய குப்பைப் படங்களைச் செய்தது ஏனென்று தெரியவில்லை. ஒரு வித அயர்வு தெரிகிறது - சொந்தப் பிரச்சினைகளின் தாக்கமாக இருக்கலாம். எனக்கென்னவோ அவர் சற்று ஒதுங்கி ஒடுங்கியிருப்பது போன்ற பிரமை. இந்தத் தொய்வு தற்காலிகமாக இருக்கட்டும். அன்பே சிவத்தில் ஆசுவாசப் படுத்தியது மாதிரி, விருமாண்டியில் பரீட்சித்தமாதிரி, புதிய சிந்தனைகளுடன் அவர் மறுபடி வீறுகொண்டு எழட்டும்.
சொல்லிக்கொண்டே போகலாம்தான். அடுத்த பிறந்த நாள் வந்துவிடும்!
நகைச்சுவை என்ற பெயரில் வரிசையாக நிறைய குப்பைப் படங்களைச் செய்தது ஏனென்று தெரியவில்லை. ஒரு வித அயர்வு தெரிகிறது - சொந்தப் பிரச்சினைகளின் தாக்கமாக இருக்கலாம். எனக்கென்னவோ அவர் சற்று ஒதுங்கி ஒடுங்கியிருப்பது போன்ற பிரமை. இந்தத் தொய்வு தற்காலிகமாக இருக்கட்டும். அன்பே சிவத்தில் ஆசுவாசப் படுத்தியது மாதிரி, விருமாண்டியில் பரீட்சித்தமாதிரி, புதிய சிந்தனைகளுடன் அவர் மறுபடி வீறுகொண்டு எழட்டும்.
நீங்கள் மடைதிறந்து பாயும் வெள்ளமாக உங்கள் சிறந்த நடிப்பை இன்னும் பல பரிமாணங்களில் எங்களுக்குக் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன் கமல் ஸார்! உங்களுக்கு போட்டியாக யாரும் கிடையாது. நீங்களே உங்களுக்கு போட்டி!
வாருங்கள் - வேட்டையாடுங்கள் - விளையாடுங்கள்!
நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நிறைய கலைத் தாகத்தையும் உங்களுக்கு அளிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
நீங்கள் என்றும் சந்தோஷம் கொண்டிருப்பீர்கள்! பிறந்த நாள் வாழ்த்துகள்.
அன்புடன்
சுந்தர்.
படங்கள் : கூகுள் தேடல்
8 comments:
அடடே கமலுக்கு பிறந்த நாளா..??
ச..ர்ரியான கமல் வெறியரா இருப்பீங்க போல..
வாழ்த்துக்கள் -உங்க மூலமா அவருக்கு.!!!! :-)
I do not understand anything but it seems very good.
Congratulations
சுந்தர்
அதெப்படி கமலின் அன்பெ சிவத்தை,அபுர்வ சகோதர்கள்,காதலா காதலா வையும் மறந்தீர்கள் ??
நானும் உங்களை மாதிரி ரஜினியில் ஆரம்பித்து கமலுக்கு மாறியவன்..கமல் படங்களை ஒரு எதிர் பார்ப்போடு பார்த்து நிறைய தடவை ஏமாந்தவன்..(விதி விலக்குகள் உண்டு..)
இருந்தாலும் சிவாஜி(நடிகர் திலகம்)க்குப் பிறகு இருக்கும் திறமை வாய்ந்த நடிகர்.பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்
//அதெப்படி கமலின் அன்பெ சிவத்தை,அபுர்வ சகோதர்கள்,காதலா காதலா வையும் மறந்தீர்கள் ??//
அன்பே சிவத்தை மறக்கறதாவது? அதான்
//அன்பே சிவத்தில் ஆசுவாசப் படுத்தியது மாதிரி, விருமாண்டியில் பரீட்சித்தமாதிரி, புதிய சிந்தனைகளுடன் அவர் மறுபடி வீறுகொண்டு எழட்டும்.
//
ன்னு சொல்லிருக்கேனே! :)
அபூர்வ சகோதரர்களைப் பத்தி வேணும்னுதான் குறிப்பிடலை. ஏன்னா அது இன்னொரு பதிவுல வருது! :)
காதலா காதலா-வைத்தான்
//நகைச்சுவை என்ற பெயரில் வரிசையாக நிறைய குப்பைப் படங்களைச் செய்தது ஏனென்று தெரியவில்லை. //
ங்கற லிஸ்ட்ல சேத்துட்டேன்!! மன்னிப்பீராக!
பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.
நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் போன நவம்பரில் கமலைப் பற்றி எழுதிய இப்பதிவையும் பாருங்கள். 116 பின்னூட்டங்கள் வந்தன.
அதற்கு மட்டும் இப்பதிவைக் கூறவில்லை. தமிழ்மணத்தில் நடந்த பல விஷயங்களுக்கு இதிலிருந்து க்ளூ கிடைக்கும்.
பார்க்க: http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பின் சுந்தர்,
மீண்டும் ஒருமுறை பிடித்த பூங்காவிற்குள் நுழைந்து வந்தது போல இருந்தது இந்த பதிவு. மிக்க நன்றி.
ஆயிரம் படங்கள் வந்தாலும் "குணா" என்றும் எனக்கு டாப்3ல் ஒன்.
எம்.கே.
//நேசமுடன் வெங்கடேஷ் அவர்கள் போன நவம்பரில் கமலைப் பற்றி எழுதிய இப்பதிவையும் பாருங்கள். 116 பின்னூட்டங்கள் வந்தன//
நன்றி. பார்த்தேன் டோண்டு ஸார். நல்ல வேளை எனக்கு அந்த மாதிரி 116 பின்னூட்டங்களெல்லாம் வரவில்லை. கட்டுரையை விட்டுவிட்டு ஜாதிக்குள்ளும் காமத்திற்குள்ளும் குதித்துக் குட்டையைக் குழப்பியிருக்கிறார்கள். :((
நன்றி.
Post a Comment