Wednesday, November 16, 2005

பலராம



உடல் வலிமை எவ்வளவு அவசியம் என்று பல சந்தர்ப்பங்களில் உணர்ந்தது உண்டு. பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த விளையாட்டுத்தனம், கல்லூரியில் நுழைந்ததும் தொலைந்து போய், பெரிய மனிதத் தோரணையை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொள்ளும் இளைஞர்கள் அநேகம் பேர். அதற்குத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வழிகள் பல. எளிதான வழி சிகரெட்.

ஃபில்ட்டர் சிகரெட் ஒரு பணக்கார அடையாளம். மற்றவர்கள் பஸ் டிக்கெட்டிற்கே சிங்கியடித்துக்கொண்டு சீசன் டிக்கெட்டில் வரும் அப்பாவி மாணவர்கள். டிக்கெட் எடுக்காத கும்பல் இன்னொரு வகை- 'என்னண்ணே.. சீட்டுக்குத் தானே டிக்கெட்டு.. நாங்க நின்னுக்கிட்டு இல்ல வர்றோம்? அப்புறம் எதுக்கு டிக்கெட் வாங்கணும்?' என்று அளப்பரை பண்ணும் இளவட்டங்கள். கல்லூரிக்காக வரிசையாக வரும் பேருந்துகளில் மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள் போல், முதல் நிறுத்தத்தில் இருந்து அடுத்த நிறுத்தம் வரை ஒரு பேருந்து. அடுத்ததில் இறங்கிக்கொண்டு, பின்னால் வரும் அடுத்த பேருந்தில் பயணம். கடைசியாக வரும் பேருந்தில் கல்லூரிக்குப் போய்ச் சேர்வார்கள்- இலவசமான பிரயாணம்.

ஒரே ஒரு நோட்டு, ஒரு டிபன் பாக்ஸ் என்ற சீருடை(?)யுடன் வரும் படிக்கட்டுப் பையன்கள் செய்வது இன்னும் விசேஷம்.. படிக்கட்டு ஜன்னலில் கம்பிகளுக்குப் பின்னே அவர்களின் 'கிளி'கள் அமர்ந்திருக்க, 'கொஞ்சம் இத வச்சுக்கறீங்களா? காலேஜ் வந்ததும் வாங்கிக்கறேன்' என்று மறுமொழிக்குக் காத்திருக்காமல், நோட்டையும், டிபன் பாக்ஸையும் ஜன்னல் வழியாக அவர்களின் மடியில் தவழ விட்டுவிட்டு, படிக்கட்டில் தொத்திக் கொள்ளும் மாணவர்கள் ஏராளம். சும்மாவா? தகவல் பரிமாற்றத்திற்கு அதைவிட சிறப்பான, நேரடி வசதி வேறு எதுவும் இல்லை. அப்பெண்கள் நோட்டின் இடையே இருக்கும் அவர்களுக்கான கடிதங்களையோ, வாழ்த்து அட்டைகளையோ எடுத்துக்கொள்ள, காலேஜ் சென்று இறங்கியதும் பொருட்கள் திரும்ப மாணவனிடம் கொடுக்கப் படும். அவள் கடந்ததும், நோட்டைத் திறந்து முகர்ந்து அவளைத் தேடுவான். அய்யய்யோ தடம் மாறி எங்கெங்கோ செல்கிறேன். நிற்க.

ஆரோக்கியமான வாழ்வென்பது எவ்வளவு சிறப்புடையது என்று ஒவ்வொருவரும் உணருகின்ற சமயங்களில், நம்மில் பெரும்பாலானோர் ஏற்கெனவே அதைத் தொலைத்துவிட்டு, மருத்துவ மனைகளிலும், மாத்திரைகளிலும் அதைத் தேடிக்கொண்டிருப்போம். கல்வி நிலையங்களில் உடற்பயிற்சி பாடங்களுக்கு முப்பத்து மூன்று சதவீத 'இட ஒதுக்கீடு' கோர வேண்டியது இன்றைய கட்டாயம். இல்லாவிட்டால் 'பூஞ்சை அடைந்த கண்ணினாய் வா வா' என்று எதிர்கால மன்னர்களைப் பார்த்துப் பாடவேண்டியதுதான்.

என் நண்பன் ராஜாங்கத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அந்த வயதில், அவன் உடலமைப்பு எங்களுக்கு அற்புதமாகத் தோன்றியது. உடற்பயிற்சி நிலையத்தில் பத்து வயதிலேயே சேர்ந்து உழைத்து, உருண்டு திரண்ட புஜங்களுடனும், பரந்த தோள்களுடன் அட்டகாசமாக இருப்பான். எந்த உடையணிந்தாலும் அழகாக இருக்கும். அடிக்கடி கையை மடக்கிக் காட்டச் சொல்லி நச்சரிப்போம். பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும்போது, கம்பியைப் பிடித்திருக்கும் கரங்களில் தசைகள் முறுக்கேறியிருப்பதைப் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பேன். அவன் இருக்கும் இடங்களில் பிரதானமாக அனைவரது கவனத்தையும் கவர்ந்திருப்பான்.

அந்த உடல்வலிமை பல சந்தர்ப்பங்களில் பயன்பட்டிருக்கிறது. ஒரு விதத்தில், குடிக்காத, புகைக்காத நண்பர் வட்டத்தில் இருந்தது எவ்வளவு நன்மை பயத்திருக்கிறது என்று நினைத்துப் பார்க்கிறேன். 'சூழ்நிலை' ஒருவரை எந்த அளவுக்கு மாற்றி விடுகிறது என்பதையும் பார்த்திருக்கிறேன்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, சென்ற வருடம் ராஜாங்கத்தைச் சந்தித்தபோது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. கூட்டத்தில் தனித்துத் தெரிந்த ராஜாங்கம் காணாமல் போயிருந்தான். அவனும் ஒரு சாதாரண மனிதனாக, என்னுடைய அளவுகளில் இருக்க, 'என்னடா ஆச்சு?' என்றேன்.


'கல்யாணம்' என்றான்.

**

நன்றி : மரத்தடி.காம்

1 comment:

வானம்பாடி said...

//'என்னடா ஆச்சு?' என்றேன்.

'கல்யாணம்' என்றான்.//


:)))))))))))))))))