ஆமையைப் பற்றி ஏற்கெனவே ஒருமுறை எழுதியிருந்த நினைவு. இருந்தாலும் இன்னும் கொஞ்சம்.
விவசாயக் கிணறுகள் அளவில் பெரியவை. ஆழத்திலும் தான். உள்ளே இறங்கிச் செல்ல படிகள் இருக்கும். நீரின் அளவை எத்தனைப் படிகள் நீரினுள் இருக்கிறது என்பதை வைத்துச் சொல்வோம். அதிகபட்சமாக எந்தளவு நிரம்பியது என்பதைக் கிணற்றின் உட்சுவர்களில் இருக்கும் கரும்பச்சை பாசி வட்டத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். கட்டாயமாக மீன்கள் உண்டு. ஓரிரண்டு ஆமைகளும் உண்டு. அவை சாதாரணமாக கண்ணில் தென்படாது. மதிய நேரத்தில் சத்தம் போடாமல் கிணற்றில் எட்டிப் பார்த்தால் ஆமைகள் நீந்திக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சிறு சத்தம் கேட்டாலும் அவை மின்னல் வேகத்தில் நீரினுள் சென்று மறைந்து விடும். நிலத்தில்தான் அதன் வேகம் குறைவு.
என் நண்பன் ஜீவா பெரிய நீச்சல் காரன். காசைத் தூக்கிப் போடச் சொல்லிவிட்டு, மெதுவாக பல்தேய்த்து முடித்து பம்ப்செட்டில் வாய் கொப்பளித்து விட்டு சாவதானமாக மேலிருந்து சொருக்கடித்து ஒரு முழு நிமிடமும் நீரினுள் காணாமல் போய் பின்பு செத்தான் என்று நினைக்கையில் குபீரென்று மேலெழுந்து வருவான் கையில் காசுடன்.
ஒரு மதிய வேளையில் பதுங்கிப் பூனை போல் சென்ற ஜீவா குபீரென்று சொருக்கடித்து ஒரு ஆமையைப் பிடித்தே விட்டான். எவ்வளவோ கெஞ்சியும் அதை விடுவிக்க மறுத்து விட்டான். ஆமை அது கைப்பற்றப் பட்ட விநாடியில் அதன் ஓட்டிற்குள் அடங்கிக் கொண்டு விட்டது. பையன்கள் ஓவென்று இரைந்துகொண்டு அதை ஊருக்குள் ஊர்வலமாகக் கொண்டு சென்றார்கள். சக தோழர்களுக்கு அதைப் பெருமையுடன் காட்டினார்கள்.
'என்னங்கடா.. வெறும் ஓட்டை தூக்கிட்டு வந்து படம் காட்றீங்க' என்று யாரோ ஒரு புண்ணியவான் கிண்டலடிக்க, ரோஷமடைந்து, ஆமையை தலை காட்டச் செய்ய பகீரத பிரயத்தனங்கள் செய்து பார்த்தார்கள். ஜீவா அதை தரையில் போட்டு காலால் அழுத்திக்கொண்டு, ஆமை கழுத்தை உள்ளிழுக்கும் சிறிய இடைவெளியைப் பிடித்திழுத்து ஓட்டை இரண்டாகப் பிரிக்க எத்தனித்தான். அது அசைந்து கொடுக்கவில்லை.
மதிய நேரமாகி விட்டபடியால் பையன்கள் தளர்ந்து போய் பசியில் இன்னும் ஆவேசமைடைந்தார்கள். தெருவில் கிடந்த செங்கற்களை எடுத்து பலங்கொண்ட மட்டும் ஆமை ஓட்டில் அடித்துப் பார்த்தார்கள். ஜீவா துண்டில் அதைப் போட்டு இறுகக் கட்டி தரையில் அடித்தும் பார்த்தான். ஓடு சலனமில்லாமல் இருந்தது. நான் ஆமை காலி என்று நினைத்தேன். இவ்வளவு நேரம் கைதட்டி ஊக்குவித்தவர்கள் எல்லாம் இப்போது ஜீவாவைத் திட்டத் தொடங்கியிருந்தார்கள். 'பாவம் உன்னைச் சும்மா விடாது. அடுத்த ஜென்மத்துல ஆமையாப் பொறப்பே' என்று பயமுறுத்தினார்கள்.
மாலையில் கூட்டமாக அதே கிணற்றுக்குச் சென்று ஜீவா வெறுப்புடன் அதை தூக்கியெறிய, நீர் பட்ட அடுத்த நொடியில் கால்களும் தலையும் முளைத்து நீரினுள் ஓடி விட்டது அந்த ஆமை.
இயக்கத்தின் வேகம் குறைக்கப் பட்டதால் அதை ஈடு கட்ட அதிக ஆயுளைக் கொடுத்திருக்கிறார் போலும் இறைவன்!
***
நன்றி: மரத்தடி.காம்
No comments:
Post a Comment