மதுரைன்னதும் மொத கியாபகத்துக்கு வர்றது பொரோட்டாக் கடையும் டீக்கடையும்தான். பொரோட்டாவை அப்புறம் சாப்டலாம். இப்போதானே எந்திரிச்சிருக்கோம். அதனால டீ சாப்ட்டு அப்றமேட்டு பொரோட்டாவும் சால்னாவும் சரியா?
மொதக்கயே என் ப்ரண்டு ராஜாங்கம் பழங்கானத்தத்துல இருக்கான்னு சொன்னேன்ல? அவன் காலைல எங்க ஏரியா (ஜெய்கிண்ட் புரம்)ல இருக்கற ஜிம்முக்கு அஞ்சு மணிக்கு வந்துருவான். நா வீட்ல இருந்து பொடி நடையா (அதாங்க நடக்கறப்போ தூசுப்பொடி பறக்கற மாரி நடந்தா அதுக்குப் பேரு 'பொடி நடை') நடந்து கரெக்டா போயிருவேன். பாதி நேரம் அவனப் பாத்துக்கிட்டு மீதி நேரத்துல என்னால முடிஞ்ச அளவுக்கு ஒழச்சுட்டு அவங்கூட யெஜ்டில அவன் வீட்டுக்குப் போவேன் (ரொம்ப நாளா ஒரு சந்தேகம். யெஜ்டிய ஓட்றதே எக்ஸைஸ் பண்ற மாரிதான். தனியா எதுக்கு ஜிம்முக்கு வேற வரணும்?)
பழங்கானத்தத்துக்குள்ள போனாக்கா தண்டக்காரன் பட்டின்னு (தண்டல்காரன் பட்டி மருவி தண்டக்காரன் பட்டியா ஆயிடுச்சி) ஒரு சின்ன ஏரியா இருக்கு. அங்கிட்டுத் தான் அவன் வீடு. ரோட்லயே ஒரு அம்மன் கோயிலு இருக்கு. அதுக்கு ஆப்போஸிட்ல ஒரு சந்து. சந்துக்குள்ள லெப்ட்டுல ரெண்டு கடை குமாரோடது. ஒண்ணு எண்ணை கடை. வெளில வரிசையா எண்ணை டின்னு. இன்னொன்ணு பலசரக்கு கடை. அரிசி மூட்டை வரிசை இருக்கும். உள்ள குமார் வாயில அரிசியை மென்னுக்கிட்டே வியாவாரம் பாத்துக்கிட்டு இருப்பான்.
எப்படி அம்புட்டு சாமானுக்கும் வெல கரெக்டா கியாபகத்துல வச்சுருக்கான்னு ஆச்சரியமா இருக்கும். காதுல ஒரு குட்டிப் பென்சிலு. கடைக்கு வர்ர பொம்பளையாளுங்க சொல்லச் சொல்ல பரீச்ச அட்டைல வச்சுருக்கற (கட் பண்ண) பேப்பர்ல கிடுகிடுன்னு எழுதிட்டு சாமான எடுத்துப் போடுவான். ரைட் ஸைடுல ஜெயராஜ் அண்ணனோட எலக்ட்ரிகல் கடை. ஒயர் ஒயரா தொங்கிக்கிட்டு இருக்கும். எப்பவும் ஒரு ஃபேன பிரிச்சுப் போட்டு (காயில் போயிருச்சி) வைண்டிங்னு தாமிரக் கம்பிய சுத்திக்கிட்டே இருப்பாரு. ஒரு டெஸ்டர். ஒரு கொறடு. ஸ்க்ரூ ட்ரைவர். அப்றம் பத்த வப்பாங்களே.. அதுக்குப் பேரு என்ன? ஆங். சால்டரிங்கு. அத ஈயக்கம்பி நுனில வச்சு உருக்கி உருக்கி வயர ஒட்டிக்கிட்டே இருப்பாரு.
குமார் கடைய தாண்டினா வரிசையா ஒரே மாரி நாலு வீடு. நாலும் ராஜாங்கத்தோடது. மொத மூணு வீடுங்கள்ல அவனோட மூணு சித்தப்பா. நாலாவது வீட்ல ராஜாங்கம் இருப்பான். அவன் அப்பாதான் மூத்தவரு. மூணாவது வீட்ல முருகேசு சித்தப்பா (பஸ்ட் ப்ளட் புகழ்!). ராஜாங்கம் வீட்ல டெய்லி சாப்டுவேன். அவங்க அம்மா வக்கற கொழம்பு ரொம்ப நல்லா இருக்கும். 'அய்யிரு வீட்டுப் பையன் இதைச் சாப்டறியே. ஒங்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?'ன்னு கேப்பாங்க. ராஜாங்கம் 'இவென் அய்யரே இல்லம்மா'ன்ட்டு, என்னப் பாத்து 'டே. நீயாடா அய்யன்?'ம்பான். நான் வாய்ல கொழம்பு சோறோட 'இல்ல'ன்னு இளிச்சுக்கிட்டே தலயாட்டுவேன். அத விடுங்க.
சந்துலயிருந்து வெளில ரோட்டுக்கு வந்து லெப்ட்ல திரும்புன ஒடனே ஒரு டீக்கடை இருக்கு. ராஜாங்கத்தோட மாமா அந்த டீக்கட வச்சுருக்காரு. அவருதான் அவங்க வீட்டுலயே வெள்ள வெளேர்னு இருப்பாரு. எப்பப் பாத்தாலும் அப்பத்தான் குளிச்ச மாரி பளிச்சுன்னு இருப்பாரு. கட முன்னாடி ஒரு சின்ன மரம். மரத்தச் சுத்தி ரவுண்டா சிமிண்ட்டுல மேடை கட்டிருக்கும். அதுல பெருசுங்க ஒக்காந்துக்கிட்டு எப்பவும் டீயடிச்சுக்கிட்டே பேப்பர் படிச்சுக்கிட்டு இருப்பாங்க. கடைல ஒரு சூப்பரு அசம்பிள்டு செட் வச்சுருக்காரு. பெருசா ரெண்டு ஸ்பீக்கரு வெளில நிப்பாட்டி வச்சுருப்பார். எப்பவும் பாட்டு ஓடிக்கிட்டே இருக்கும்.
கடைக்கு எதிர்ல செட்டியார் ரைஸ் மில். அங்க தான் ராஜாங்கத்தோட அப்பா வேலை பாக்குறாரு. வேலைன்னா என்னா. முழுப் பொறுப்பும் அவரோடதுதான். செட்டியார் இல்லாட்டி அவர் பையன் எப்பவாச்சும் வந்துட்டு போவாங்க. ரைஸ்மில்ல ஒட்டி ஜெகதா தியேட்டரு (இப்ப பேர மாத்திட்டாய்ங்க). டீக்கடையோட விசேசம் என்னன்னா ஜெகதால என்ன படம் ஓடுதோ அந்த படத்தோட ஆடியோ டேப்ப எப்படியாச்சும் கொண்டுவந்து வச்சுருப்பாரு. படம் முடிஞ்சு மக்கள் வெளில வர்ரப்போ அந்த படத்தோட பாட்ட போட்டுவிடுவாரு. மக்களுக்கு படத்துல பாத்த பாட்டெல்லாம் கியாபகத்துக்கு வரும்னு நெனைக்கிறேன்.
நானும் ராஜாங்கமும் அபூர்வ சகோதரர்கள் செகண்ட் ஸோ பாத்துட்டு டீ குடிக்க கடைக்கு வந்தப்போ கேட்ட 'ஒன்ன நெனச்சேன்..' இன்னும் நல்லா கியாபகத்துல இருக்கு. நைட்ல எவ்ளோ மெலோடி தெரியுமா அந்த பாட்டு? நா சொல்றதெல்லாம் பழங்கானத்தத்துல பஸ் ஸ்டாண்டு வர்ரதுக்கு முன்னாடி. பழங்கானத்தத்துலதான் மதுர தினமலர் ஆபிஸு இருந்திச்சி.
டீக் கடைக்கு வெளில ஒரு வாழத் தாரு தொங்கிக்கிட்டே இருக்கும். நானும் ராஜாங்கமும் ஜிம்முல இருந்து வந்ததும் நெதம் ஒரு டீயும் வாழப் பழமும் சாப்டுவோம். அப்றம் நைட்டு ரைஸ் மில்லுல தூங்கப் போறதுக்கு முன்னாடி, ஒரு டீ, வாழப்பழம். எங்களுக்கு எப்பவும் புதுப் பாலு புதுத்தூளு போட்டு தருவாரு ராஜாங்கம் மாமா. இப்ப பஸ் ஸ்டாண்டு வந்து அந்த எடமே ஒரே தூசியாயி, நெறய ட்ராபிக்காயிப் போச்சு.
நட்ராஜ் தியேட்டர் எதுக்க இன்னொரு டீக்கட இருக்கு. அங்கன பாத்தீங்கன்னா எப்பவும் கூட்டம் இருக்கும். வெளில பஜ்ஜியும் ஆம வடையும் போட்டுக்கிட்டு இருப்பாரு ஒரு ஆளு. ஒரு நாயும் படுத்துக் கெடக்கும். வரிசையா எல்லா பேப்பரோட தலைப்புச் செய்திங்கள்லாம் தொங்க விட்ருப்பாங்க. ஒண்ணு ரெண்டு பேரு பேப்பர் வாங்கி படிச்சாக்கா, சுத்தி ஒரு கூட்டமே மாட்ரிக்ஸ் மாதிரி எல்லாக் கோணங்கள்லயும் அவங்கவங்க கண்ணுக்குத் தெரியறத படிச்சுக்கிட்டு இருபாங்க. பேப்பர வாங்குனவரு, அவங்களப் பத்திக் கவலப் படாம, அவரு பாட்டு பக்கத்த திருப்பிக்கிட்டே இருப்பாரு. இவங்களும் வாங்கிப் படிச்சா என்னன்னு தோணும்.டீ மாஸ்டரு வேலை எவ்ளோ கஷ்டம்னு பாத்தவங்களுக்குத் (டீ போட்டவங்களுக்கு?) தான் தெரியும். முண்டா பனியன் போட்டுக்கிட்டு, லுங்கிய பெரிய பச்ச பெல்ட்ட வச்சு இறுக்கிக் கட்டிருப்பார். அப்பப்போ லுங்கிய மடிச்சு மடிச்சு தொப்பைக்கு கீழ கட்டினாலும், அது விழுந்துகிட்டே இருக்கும். ஒரு கைல அலுமினிய கப்பு. இன்னொரு கைல டீ க்ளாஸு. கை ரெண்டையும் விரிச்சி சர்ருன்னு ஆத்துவாரு பாருங்க. ஒரு துளி கூட சிந்தாம ஆத்துவாரு எங்களப் பாத்துக்கிட்டே.
ஒரு சின்ன பையன் அப்பப்ப வந்து அஞ்சாறு டீ எடுத்து அடுக்கிக்கிட்டு வெளில சப்ளைக்கு போய் வந்துகிட்டே இருப்பான். வடைல இருக்குற பச்ச மிளகா துண்ட கடிச்சு அந்த காரத்தோட சூடா ஒரு டீ குடிச்சா.. ஆஹா.. அதோட ருசி எங்கயும் கிடைக்காதுங்க. வடயோட மிச்சத்த அந்த நாய்க்குப் போடறதுக்கு மனசே வராட்டாலும், நம்மளயே ஆசயோட பாத்துக்கிட்டு இருக்கற அதோட பளபள கண்ணுக்காகவே கொஞ்சம் பிச்சிப் போடுவேன். சில பேரு கல்லு முறுக்கத் திங்க முடியாம, நாய்க்கு போட்டு, அது தெரியாத்தனமா அத முழுங்கி தொண்டைல சிக்கிக்கிட்டு காரிக்கிட்டு இருக்கும். பாவம். சில சமயம் பசி தாங்காம, மிச்சம் போடற வாழப்பழத்த கூட திங்கும் அந்த நாய். டீக்கிளாஸ கழுவி வெளில கொட்ற தண்ணியும் அது மேல விழுவும். ஓடிப்போயி ஒடம்ப உலுக்கிவிட்டுட்டு திரும்பவும் வந்து ரோசமேயில்லாம அரமனசோட ஈரத்தரைல ஒக்காரும்.
ராஜாங்கம் மாமா கடைக்கு முன்னாடி நாயெல்லாம் இல்ல. ஆனா ஒரு ஆடு இருக்கும். ராஜாங்கத்தோட ஆடு அது (அவன் மேஷ ராசின்னு சொன்னேன். நெனைவிருக்கில்லே?). வாழப்பழம் சாப்பிடறவங்க ஒரு சின்ன டப்பால தோலப் போட்டுடுவாங்க. ஆடு வாழத்தோல திங்கும். ஒருதடவ பழத்த பிச்சு கொடுத்துப் பார்த்தேன். ஆட்டோட வாய் வளையாம நேரா இருக்கா.. அதனால பழம் வாயில நிக்காம வழுக்கி விழுந்திருச்சி.
டீக்கடை வெளில எப்பவுமே தண்ணி தெளிச்சி விட்ட மாரி ஈரமா இருக்கும். வெளில மூங்கில் ஊனி, கீத்துல 'தட்டி' போட்ருப்பாங்க நெழலுக்காக. மக்கள் வெயில்னா நிழல்ல நின்னுக்கிட்டே டீ குடிக்கலாம்ல. மூங்கில் கம்புல துண்டு கயிறு ஒண்ணு மொனைல கங்கோட எப்பவும் தொங்கிக்கிட்டே இருக்கும். தம்மடிக்கற ஆளுங்க கொளுத்திக்கறதுக்காக. இப்பல்லாம் ஒரு சுச்சு போர்டு வச்சு சுச்சு போட்டு பத்த வச்சுக்கறாங்க.
கடை எவ்ளோ அழுக்கா இருந்தாலும், பாய்லர் பளபளன்னு இருக்கும். மாஸ்டர் மொதல்ல க்ளீனா அத தொடச்சுட்டுத் தான் வேலையவே ஆரம்பிப்பார். காலைல போனாக்கா எதாச்சும் சாமி பாட்டு போட்டுட்டு, ஊதுபத்தி எல்லாம் கொளுத்தி மங்களகரமா இருக்கும். புதுப் பாலு, புதுத்தூளு.. பாய்லர் மூடி நடுவுல இருந்து அப்பப்போ பொறிப்பொறியா செதறும் பாருங்க. கொஞ்சம் பயமா இருக்கும் மேல தெறிச்சுருமோன்னு. வெளில போலிஸ் இல்லாட்டி கார்ப்பரெஷன் காரங்க வராத சமயத்துல, பெஞ்சு போட்ருப்பாங்க. வேற எதுக்கு. வேலை வெட்டி இல்லாதவங்க அரட்டை அடிக்கத்தான்.
ஒரே பாலு, ஒரே தூளு. இருந்தாலும் வெதவெதமா டீ போடுவாரு மாஸ்டர். ஸ்ட்ராங் டீ, டபுள் ஸ்ட்ராங் டீ, பால் டீ (இது பால ஊத்தி மேலாப்புல கொஞ்சம் டீத்தண்ணிய ஊத்திவிடறது), ப்ளாக் டீ, இஞ்சி டீ, மெளகு டீ, ஆடையோட டீ (சாதா டீ போட்டுட்டு, மேல கொஞ்சம் பாலாடைய பிச்சிப் போடுவாரு)ன்னு வெதவெதமா டீ கெடைக்கும்.
திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டு எதுக்க கே.பி.என். பஸ் நிக்கும். அதுக்கு எதுக்க ஒரு டீக் கடை இருக்கு. அங்க டீய விட, வெளில இவ்ளோ பெரிய சட்டில இருக்கற பாதாம்பால் தான் ஃபேமஸ். சட்டி ஒயரம் கம்மி, ஆனா பெருசு, ஒரு ஆளு உள்ள படுக்கலாம் போல. பாதம் பால் லேசான மஞ்சள் கலர்ல கொதிக்காம ஆனா பயங்கர சூடா இருக்கும். மேலாப்புல ஒரு இஞ்சுக்கு ஆடை கட்டியிருக்கும். பெரிய நீளமான கரண்டி வச்சு ஆடையை தொளச்சு பால் எடுத்து க்ளாஸ்ல ஊத்தி கொஞ்சம் ஆடையையும் போட்டு, ஏலக்கா, பாதாம்னு தடபுடலா இருக்கும். இதக் குடிக்கறதுக்கு ஒரு கோஷ்டி எப்பவும் இருக்கு.
இது தவிர க்ரைம் ப்ராஞ்ச் எதுக்க தள்ளுவண்டில 'ஜில் ஜில் ஜிகர்தண்டா'ன்னு ஐஸ், கலர்லாம் போட்டு ஏதோ விப்பாங்க. நான் இதுவரைக்கும் குடிச்சதில்ல.இப்படி தடுக்கிவிழுந்தா மூணு டீக்கடை எல்லா எடத்துலயும் இருக்கு. எல்லா எடத்துலயும் ஒரே மாரி தான் கிட்டத்தட்ட ருசி இருக்கும். தெரிஞ்ச ஆளா இருந்தா வடிகட்டில இருக்கற பழய தூள கொட்டிட்டி புதுத்தூளு போடுவாங்க. இல்லாட்டி அதுலயே வென்னி ஊத்தி ஊத்தி டீ வந்துக்கிட்டே இருக்கும். இதுல கொட்டைப் பாக்கு தூளு, மரத்தூளுல்லாம் கலக்கறாங்கன்னு சொல்லிக்கிட்டாங்க. யாருக்குத் தெரியும். சாமிப் படத்த மாட்டி, பாட்டு போட்டுக்கிட்டு இப்படி அளும்பு பண்ணா நிச்சயமா ஒரு நாளு அதுக்கு தண்டனை கெடைக்காம போகாதுல்ல?
மாப்பிள்ளை வினாயகர் தியேட்டர்ல ரெண்டாம் ஆட்டம் பாத்துட்டு, ஒரு மணி போல நாங்க பத்து பேரு அஞ்சு யெஜ்டி வண்டில கொடைக்கானலுக்குக் கெளம்பிப் போனோம். போனது டிசம்பர் மாசம். மதுரைலயே சரி குளிரு. கொடைக்கானல் கேக்கவே வேணாம். இருட்டுல நூத்திருவது கிலோமீட்டர் தூங்காம ஓட்டிக்கிட்டுப் போயி, குளிர்ல கை காலெல்லாம் வெறச்சுப் போயி, நாலு மணிவாக்குல மூஞ்சிக் கல் போய்ச் சேந்தோம்.
மூஞ்சிக்கல் முக்குல இருக்குற டீக்கடை தெறந்திருந்திருச்சி. வண்டிலருந்து எறங்கக்கூட முடியலை. கை காலெல்லாம் ஒதறுது. வாயி மூக்குல இருந்து சிகரெட் இல்லாமயே பொகையா வருது! ஒரு வழியா கடைக்குள்ள நொழஞ்சா, கடைக்காரரு, கம்பளியப் போத்திக்கிட்டு, தலைல காத மறச்சு குல்லாவோட ஒக்காந்துக்கிட்டே தூக்கத்துல சாமியாடிக்கிட்டு இருந்தாரு. அவர்ட்ட இருந்து கம்பளியையும் குல்லாவையும் பிடுங்கலாம் போல இருந்திச்சி.
அவர எழுப்பிச் சொன்னோம் 'அண்ணே ஆளுக்கு ரெண்டு டீ போடுங்க!'
***
நன்றி: மரத்தடி.காம்
No comments:
Post a Comment