Sunday, October 30, 2005

O-----------O----------Signs----------O-----------O

Image courtesy : www.imdb.com
நேற்று நைட் சியாமளனின் 'ஸைன்ஸ்' திரைப்படத்தை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. நம்மூரில் 'மிட்நைட் சியாமளி' என்று தமிழாக்கம் செய்யப்பட்ட மலையாளக் கொத்துபுரோட்டா திரைப்படம் இன்னும் வராதது ஆச்சரியம்! ஸைன்ஸ்ஸில் வரும் சோளக்கொல்லை வட்ட வடிவங்களைப் பார்த்ததும் மனதில் பொறியடித்தது. 'இதை எங்கேயோ பார்த்திருக்கோமே?' என்று! நினைவுகளைக் கிளறியதில் ஆஹா.. கிடைத்துவிட்டது.

ஐந்தாம் வகுப்பு முடியும் வரை பேனாவைத் தொட்டதில்லை. தொடக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தோம்.ஆறாம் வகுப்பு சேர்ந்ததும் மரக்கலரில் இருக்கும் ஒரு மை பேனாவை அப்பா முதன்முதலில் வாங்கிக் கொடுத்தார். அதோடு ஒரு மை பாட்டிலும். தினமும் சிரத்தையாக பேனாவைத் திறந்து மைஅளவைச் சோதித்து நிரப்பிக்கொள்வேன். மை நிரப்பியால் (இங்க் பில்லர்) நிரப்புகையில் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் கவனம் இருக்கும். பிரில் பிராண்டு மிகவும் பிரபலம்.

சிலேட்டுப் போல் எழுதி அழிக்கவே வேண்டியிராத ரூல்டு மற்றும் அன்ரூல்டு ஒரு குயர் நோட்டுகளில் பூப்போல ரொங்கிக்கொண்டே எழுதுவதில் ஒரு சுகம். நீலம் மிகவும் பிடித்த நிறம் என்பதால், பேனாவின் முனை நீர் மைப் பொட்டிட்டுக் கோடிடுவதை எழுதுகையில் பார்த்துப் பரவசம் அடைவது வாடிக்கை. தப்பாக எழுதவே மாட்டேன். தப்பித் தவறி தவறாக எழுதிவிட்டாலும் அதை கொச்சா முச்சாவென்று அடிக்காமல் எழுத்தின் குறுக்காக ஒரு கோடிடுவேன். அடித்தலும் திருத்தலும் கூட அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். யாருடைய கையெழுத்து அழகு என்று வகுப்பில் ஒரு (ஆரோக்கியமான) போட்டியே நடக்கும்.

கையெழுத்துகளில் எத்தனை வகைகள்! வகுப்பில் கூடப் படித்த மகேஷிற்கு வாய் நிறைய பற்களோடு சிங்கப் பற்களும் உண்டு. அவன் எழுதும் எழுத்துக்களின் சதுர முனைகளில் எப்போதும் ஒரு கொக்கி வெளியே வளைந்திருக்கும். கூடலிங்கத்தின் எழுத்துக்களில் சதுர வடிவமே இருக்காது, முனை மழுங்கி தெலுங்கு எழுத்துக்கள் போல் நெளி நெளியாக எழுதுவான். ரமேஷிடம் கன்னட ஜிலேபி எழுத்துகளின் தாக்கம் இருக்கும். சிலர் ஸ்பிரிங் போன்று இடைவெளியில்லாமல் எழுத்துக்களை இணைத்து எழுதுவார்கள். சிலர் வார்த்தைகளுக்கிடையே விடும் இடைவெளியில் கால்பந்தே விளையாடலாம். பரீட்சை எழுதுகையில் விஷயம் போதாமல், நீட்டி எழுதிப் பழகி, நிசமாகவே நீட்டி எழுதுவார்கள் சிலர். அவர்கள் நூறு பக்கங்களில் எழுதியதை அச்சிட்டால், கையடக்க பிட் நோட்டீஸ் அளவுக்குத் தான் தேறும்! சிலர் அநியாயத்திற்கு ஒல்லி எழுத்துகளில் எழுதுவார்கள். சிலர் பூசணி எழுத்துகள். சிலர் ரூல்டு பக்கத்தில் எழுதும்போது எழுத்தின் உயரத்தில் இரண்டு கோடுகள் அடைபடும். சிலர் நுணுக்கி நுணுக்கி பூதக்கண்ணாடி வைத்துப் படிக்கும் படி எழுதுவார்கள்- இந்த ஆசாமிகள் தான் இப்போது அரிசியில் ராமர் பட்டாபிஷேகம் வரைந்து, அஞ்சலட்டையில் ராமாயணம் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

சிலர் நோட்டைப் புரட்டிப் பார்த்தால், எழுதியதை விட, அடித்தது நிறைய இருக்கும். சிலர் ஆணித்தரமாக எழுதியதில் காகிதம் பின்புறம் புடைத்திருக்கும். இன்னும் சில பக்கங்களில் அதன் அழுத்தத்தைக் காணலாம். முகப்பில் சாமி படங்கள் ஒட்டியிருக்கும். சிலரின் அக்காமார்கள் பூ வரைந்து கொடுத்திருப்பார்கள். சிலவற்றின் நடுவே மயிலிறகு இருக்கும்- ஒன்றிரண்டு அரிசி மணிகளோடு- தின்று குட்டி போடுவதற்காக! சிலதில் காய்ந்த இலைச்சருகுகள். சிலவற்றில் கைரேகைகள்- பேனா கழுத்தில் ஒழுகுவதால். பிள்ளையார் சுழி- முதல் பக்கத்தில் மட்டும். சிலர் ஒவ்வொரு பக்கத்திலும் கட்டாயமாக சுழி போடுவார்கள். கடைசிப் பக்கங்களில் சிலர் ராம ஜெயம் எழுதியிருப்பார்கள்.

பந்துமுனை எழுதுகோல் (அட.. பால்பாயிண்ட் பேனாங்க!) பள்ளியில் தடை செய்யப்பட்டிருந்த வஸ்து. யாராவது தப்பித்தவறி கொண்டு வந்தால் போச்சு. வளைகுடா நாடுகளுக்கு நிகரான தண்டனைகள் உண்டு. அதை பயன்படுத்தி எழுதியிருந்தாலோ போயே போச்சு! 'எழுத்து கோழி கிண்டுனமாதிரி ஆயிரும்டா' என்பார் ஆசிரியர். மை பேனாவால் எழுதுவது கடிவாளம் இட்ட குதிரை மாதிரி- ஓடுவது சீராக இருக்கும் என்பார். மை பேனாவில் ஒரே அவஸ்தை தினமும் நிரப்ப வேண்டியிருப்பது தான். சிலசமயம் மரை கழன்று விட்டால் (அட.. பேனாவிற்குங்க) இன்னும் அவஸ்தை. அடிக்கடி இறுக்கம் தளர்ந்து மை வியர்வையில் கை நனையும். குளம்பு தேய்ந்த மாட்டுக்கு லாடம் அடிப்பது போல, மரை கழன்ற பேனாவிற்கு, நூல் சுற்றி மரை கொடுப்போம். சிலசமயம் நூல் மரையின் இறுக்கம் தாளாமல், பேனா பிளந்துவிடும். அல்லது திறக்க முடியாமலே போகும். பற்களால் கடித்துத் திறந்தது பலமுறை நேர்ந்திருக்கிறது. எங்கள் பேனாக்களின் கழுத்துப் பகுதியில் பற்களின் தடங்களைப் பார்க்கலாம். நாங்களும், நீலகண்டர் போல், வாயெல்லாம் மையாக நீலம் பாரித்துக் காட்சியளித்திருக்கிறோம்.

கருநீல கால்சராயும் வெள்ளைச் சட்டையும் பெரும்பாலான கிராமப் பள்ளிகளின் சீருடை. வெண்சட்டையும் தூள்நீலம் போட்டு ஆகாய நீலமாக இருக்கும். ஏப்ரல் ஒன்றை எப்படியாவது நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து சரியாக மறந்து விடுவேன். ஆனால் அம்மா ஞாபகம் வைத்திருந்து, போகிக்கு கழித்துக்கட்டும் நிலையிலிருக்கும் ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ளச் செய்வார்கள். வெளியில் வந்து சில அடி நடந்ததும் பின்கழுத்தில் ஜிலீரென்றிருக்கும். திரும்பினால் பக்கத்துவீட்டு மணி கையில் மூடி திறந்த பேனாவுடன் ஈயென்று இளிப்பான். தொட்டுப் பார்த்தால் நீல மை பிசுபிசுக்கும். சட்டையில் கோடிட்டிருப்பதை சட்டை செய்யாமல் மேலும் நடப்பேன். நீலம், சிவப்பு, கருப்பு என்று மாலை வரை மை அடிக்கும் படலம் தொடரும். மறந்து போய் பளீருடையில் வந்து தொலைத்தவர்கள், அன்று முழுவதும் ஓடி ஒளிந்து கொண்டே இருப்பார்கள்.

முரட்டுப் பையன்கள் கத்திரிக்காயை பாதியாக நறுக்கி வைத்துக் கொண்டு அதில் மாட்டுவண்டிச் சக்கரத்தின் அச்சாணியில் வழியும் கரு மையை அப்பிக்கொண்டு முதுகில் அச்சிடுவார்கள். லேசில் போகாது, நிரந்தரக் கறையாகிவிடும். புதுச்சட்டையில் கத்திரிக்காய் அச்சு வாங்கியவர்கள் கலங்கிய விழிகளோடு வீடு திரும்புவார்கள்.

பேனா சரியாக எழுதவில்லையென்றால் நிப்பை பலகையில் அழுத்தி பாம்பின் நாவு போல் பிளக்கச் செய்து, மை துளிர்த்ததும் திரும்ப எழுதினால் பட்டையாக எழுதும். வகுப்பின் ஆண்டிறுதி நாட்களில் சிலர் மையில்லாப் பேனாவினால் டெஸ்க்கில் நிரந்தரமாக பெயர் பொறித்து வைப்பார்கள்.

தாத்தா விதவிதமான பேனாதாங்கிகள் (Pen Stand!) வைத்திருந்தார். தாங்கிகளில் இரண்டு பேனா மூடிகள் திறந்திருக்கும். ஒரு சிறிய தேதிச் சீட்டு (ஒன்றிலிருந்து முப்பத்தொன்று எண்கள் ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும்) செருகி வைக்கும் பகுதி. ஒன்றாம் தேதி முடிந்ததும் சீட்டை எடுத்து முப்பத்தொன்றின் பின்னால் செருகி வைக்க இரண்டாம் தேதி தொடங்கும். அப்புறம் மைக்கூடு வைக்க ஒரு வட்ட வடிவ பள்ளம். நீளத்தூரிகை போன்ற குச்சிப்பேனாவை மையில் முக்கி முக்கி எழுதுவார்களாம். ஒரு தடவை முக்கினால் ஒரு வரி எழுதலாம். பேனாவில் மை நிரப்ப இடம் இல்லையாததால் மூடியும் தேவையிருக்கவில்லை. எழுதிவிட்டு தாங்கியில் உள்ள மூடியில் செருகி வைத்துவிடுவார்களாம். எழுத்தாணி கொண்டு ஓலையில் எப்படி எழுதியிருப்பார்கள் என்று ஓலைச்சுவடி ஒன்றைப் பார்த்துப் பிரமித்தேன். சீத்தலைச் சாத்தனாரும் நினைவுக்கு வந்தார் (சாத்தான் குளத்தை "சாத்தனார் குளம்" என்று பெயர் மாற்றம் செய்யக்கூடாதா?).

தேதி என்றதும் நினைவுக்கு வருகிறது. வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாள்கள் என்று எண்ணிக்கை படித்தபோது, முப்பது நாள்களுள்ள மாதங்களுக்கும், முப்பத்தொரு நாள்களுள்ள மாதங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அடிக்கடி குழம்புவேன். பிப்ரவரிக்கு குழப்பமே இருந்ததில்லை. தாத்தாவிடம் சொன்னதும் கைவிரல்களை குத்துச்சண்டைக்குச் செல்வதைப் போன்று மடக்கிக்கொள்ளச் சொன்னார். மடக்கியதும் ஆள்காட்டி விரலில் தொடங்கினார். அந்த விரலின் முட்டி ஜனவரியாம். ஆட்காட்டி விரல் முட்டிக்கும் நடுவிரல் முட்டிக்கும் இடையே உள்ள பள்ளம் பிப்ரவரியாம். நடுவிரல் முட்டி மார்ச்சாம். இப்படியே போனால் சுண்டுவிரல் முட்டி ஜூலையில் முடிய, மறுபடி ஆட்காட்டி விரல் முட்டி ஆகஸ்ட்டுக்கு வைத்துக்கொண்டு மோதிர விரல் முட்டியில் டிசம்பரை முடித்தார். முட்டியில் முடியும் மாதங்கள் அனைத்தும்முப்பத்தொரு நாட்களுள்ள மாதங்கள். முட்டிகளுக்கு இடையே உள்ள பள்ளங்களில் விழும் மாதங்கள் அனைத்தும், பிப்ரவரி தவிர, முப்பது நாட்களுள்ள மாதங்கள் என்றார். பிரமித்துப் போனேன். 'மறந்தா முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்' என்றார் சிரித்துக் கொண்டே!

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை சாய்மானம் இல்லா உட்காரும் பெஞ்சுகளும், மேசைகளும். ஒரு பெஞ்சில் மூன்று பேர் அமரலாம். ஒரு வகுப்பில் மூன்று பெஞ்சு வரிசைகள். பெஞ்சுகளில் சாய்மானம் இருந்தால் தூங்கிவிடுவோமாம். ஆனால் மேல்நிலை வகுப்பு பெஞ்சுகளில் குறுக்குச் சட்டம் வைத்து சாய்மானம் இருக்கும். அவை என் தாத்தா காலத்தில் செய்யப்பட்டவை. வயதானதால் கரும்பழுப்பாகி, பலவித கிறுக்கல்களுக்கும் செதுக்கல்களுக்கும் ஆளாகி இருக்கும்.

மேசைகள் தட்டையாக இல்லாமல், சாய்வு மேசைகளாக இருக்கும், எழுத வசதியாக இருக்குமென்பதால். சாய்வின் உச்சியில் பேனாவை வைத்து, அவை சரசரவென்று உருண்டு விழும் தருவாயில் பிடிப்போம். மேசை முழுக்க சாய்வாகவும் இருக்காது. முடிவில் இரண்டு அங்குலத்திற்கு தட்டையாக முடியும். அந்தத் தட்டைப் பிரதேசத்தில் பேனா வைத்துக் கொள்ளவும், மைக்கூடு வைத்துக் கொள்ளவும் பள்ளங்கள் செதுக்கப் பட்டிருக்கும்.
மூன்று வட்டங்களும், மூன்று கோடுகளும்- 'ஸைன்ஸ்'-ஸில் வரும் பள்ளங்களும், கோடுகளும் போல!

நன்றி : www.maraththadi.com

இங்கயும் வந்தாச்சு வந்தாஆஆஆச்சு...

நேத்து நைட்டு சரியான ஊத்து போல.. இன்னிக்குக் காலைல பாக்கும்போதே ஆகாசம் நல்ல 'மப்போட' தான் இருந்துச்சு. சரி பார்க்கலாம்னு மக்களோட ஒரு ட்ரைவ் போனா மொதல்ல லேசா தூற ஆரம்பிச்சு, இப்ப ஒரு மணி நேரமா 'பனி விழும் மலர் வனம்' தான். :)

குழந்தைகளுக்கு பனி விழறதைப் பாக்கறது இது முதல் அனுபவம். ஒரே குதூகலம்தான். ஸ்வெட்டரையும், ஜெர்க்கினையும், குல்லாவையும், கையுறைகளையும் போட்டுவிட்டுட்டு வெளில போய் வெளையாடுங்கன்னு அனுப்பிட்டேன். சின்னவ தலையைக் குனிஞ்சுக்கிட்டு பூ மாதிரி விழற பனியையே உத்து உத்து பிரமிப்பா பாத்துக்கிட்டு இருக்கா. பெரியவ தரைல விழறதை உதைச்சு ஐஸ் பறக்குதான்னு பாக்கறா. பனி தரையைத் தொட்டதும் தண்ணியாயிடுது. Wet Snow-வாம். இப்பக் கொஞ்ச நேரமா மரம் மட்டை எல்லாமும் நரைச்சுப் போன மாதிரி பனி மூட ஆரம்பிச்சுருக்கு.

இங்கிட்டெல்லாம் ஒரு அஞ்சு மாசத்துக்கு சூரியனை மறந்துடணுமாமே! வீட்டுக்காரம்மா இப்பவே அதை நெனச்சு நடுங்கறாங்க.

படங்களை இன்னும் கொஞ்ச நேரத்துல ராஜ பார்வைல பதியறேன்.

பாக்கலாம் - அமெரிக்கா!

அங்கே பூகம்பம், மழை, வெள்ளம்... இங்கே அடுத்தடுத்து மூணு சூறாவளிகள். இப்ப சத்தமேயில்லாம பனி பெஞ்சாலும், இந்த அந்தி இருளைப் பாக்கும்போது மனதோரத்துல என்னவோ கொஞ்சம் கவலை தொக்கிக்கிட்டு இருக்கறதை உதாசீனப் படுத்த முடியலை. என்னவோ தெரியலை. சின்ன வயசுலருந்தே இருள் சூழ்ந்து வரும் அந்திப் பொழுதைப் பார்த்தால் மனசுக்குள்ள இனம் புரியாத சோகம் இருக்கும். 'இன்னொரு நாளையும் தொலைத்து விட்டோம்'ங்கற குற்ற உணர்வான்னு தெரியலை.
கடவுள் நம்மைக் காப்பாராக!
***

Saturday, October 29, 2005

அறிவிப்பு : இன்னொரு வலைப்பதிவு!

இங்கேயே ஒன்றும் எழுதிக் கிழிக்கவில்லை. இருந்தாலும் 'மனம் ஒரு குரங்கு' என்பதை மனதில் கொண்டு இன்னொரு சிறிய பதிவைத் தொடங்கியிருக்கிறேன்.

நண்பர்கள் 'சித்திரம் பேசுதடி' பாடலைக் கேட்டுக்கொண்டே படிக்க...மன்னிக்கவும்.. பார்க்கவும்!

http://raajapaarvai.blogspot.com

நன்றி.

அன்புடன்
சுந்தர்.

சில குறிப்புகள் - வங்கி

** வங்கி **

[அக்டோபர் 30, 2002]


என்னை மனதளவில் பாதித்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் பணிசெய்து கொண்டிருந்தேன். சிந்தாமணியில் உள்ள ஒரு வங்கிக்கு ஏதோ ஒரு அலுவலாகச் சென்று என் தந்தையின் வரவிற்காக வங்கியின் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். ஜன சந்தடி மிகுந்த தெரு அது. சைக்கிள்களும், டூ வீலர்களும் நெரிசலாக நிறுத்தப்பட்டிருக்க, தெரு முழுவதும் மனிதத் தலைகள் வியாபித்திருந்தன. சேலை மட்டும் அணிந்த மூதாட்டி கூன் முதுகுடனும், இடுங்கிய கண்களுடனும் மெதுவாகக் கம்பு ஊன்றி நடந்து வந்தார். உழைப்பின் அயர்ச்சி உடலில் தெரிந்தது. கையில் ஒரு தூக்குச் சட்டி. நான் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன்.


பள்ளிச் சீருடையுடன் எதிரே வந்த ஒரு சிறுவன் மூதாட்டியை அடைந்து ‘பாட்டீ!’ என்று விளிக்க, அவர் சிறுவனை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு அணைத்துக் கொண்டார். அவர் கண்களில் ஈரத்தை கவனித்தேன்.


‘நல்லாருக்கியா தம்பி’ என்று கேட்டுவிட்டு நடுங்கும் கையால் சிறுவனின் தலையை வருட, சிறுவன் தலையசைத்தான்.

‘ஒன் அப்பன் எப்டி இருக்கான்?’

‘நல்லா இருக்காரு பாட்டி’


‘அவ எப்டி இருக்கா?’ என்று பாட்டி (மருமகளைப் பற்றி) வினவ, சிறுவன் மெளனமாக இருந்தான்.

‘ஒன்னயும் அடிக்கிறாளா?’

மெளனம்.

‘நல்லாப் படி ராசா’

‘சரி பாட்டீ’


பாட்டி சட்டென்று தூக்குச் சட்டி திறந்து ஒரு கை நீர் சாதத்தை ஊட்ட பையன் உள்ளங்கையால் கீழுதட்டைத் தடுத்து சோறு சிதறாமல் விழுங்கினான். போதும் என்று தலையாட்டினான்.


‘நான் வாரேன். நீ எங்கிட்ட பேசுறத பாத்தா ஒன்னய அடிப்பா.. நீ போ ராசா. என்ன தான் வெரட்டிட்டாளே அவ.. நீயாவது சூதானமா இருந்துக்கப்பா’


பையன் ஒன்றும் பேசாமல் அமைதி காக்க, பாட்டி மெதுவாக கம்பூன்றி நடந்து சென்றார். வலக்கையில் முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் நடுவே தூக்குச் சட்டி ஊசலாடிக் கொண்டிருந்தது. சிறுவன் பாட்டியையே சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, கண்களில் நீர் சிதற ஓடிப் போனான்.

நான் சிலையாக நின்றிருந்தேன்.


ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோயிலினுள்ளேயும் நிறைய வயசாளிகளைக் காணலாம். சிலர் கடலையோ முறுக்கோ விற்றுக் கொண்டிருப்பர். பெரும்பாலானோர் அழுக்கான அல்லது கிழிந்த உடைகளுடன் கால் நீட்டி அமர்ந்து போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருப்பர். பசி தாங்காத சிலர் நடுங்கும் கைகளை அருகே வருவோரிடம் நீட்டி யாசகம் கேட்பர். குடும்பத்தால் கைவிடப்பட்டு இப்படி அனாதையாகத் தெருவில் இருக்கும் இத்தகைய வயசாளிகளைக் காண்கையில் இதயம் வலித்து கண்ணீர் எட்டிப் பார்க்கும். என் தாத்தாவையோ அல்லது பாட்டியையோ அந்நிலையில் காண நேரிட்டது போல இதயம் பதறும். எப்படி மனது வந்தது என்று உள்ளம் அரற்றும். இந்நிலை மாற வேண்டும் என்று இறைவனை இறைஞ்சிக் கொள்வேன்.


தனிக் குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலச் சூழ்நிலையில், கிட்டத்தட்ட பதினைந்து பேர் வரை வாழ்ந்த வத்திராயிருப்பு கூரைவீட்டை நினைத்துப் பார்க்கிறேன். குறைந்த வருவாயிலும் அத்தனை பெரிய குடும்பத்தை வழிநடத்திய தாத்தா மற்றும் அப்பாவின் மனத்துணிவை நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது. விறகடுப்பிலும் கரியடுப்பிலும் அயராது சமைத்துப் போட்ட பாட்டியின் உடல் வலு வியக்க வைக்கிறது.


அக்ஷராவுக்கு காய்ச்சல் என்றால் பதறி மருத்துவமனைக்கு ஓடி செய்வதறியாது தவிக்கும் என்னையும் என்னைப் போன்றவர்களையும் நினைக்கும் போது, உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் பலவீனப்பட்டுப் போன தலைமுறையை உணர முடிகிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்!.

***

சில குறிப்புகள் - வரப்புயர

** வரப்புயர **

[செப்டம்பர் 24, 2002]

நாம் சரியானது எது என்று தெரியும் வரை தவறானதைச் செய்து கொண்டே இருப்போம், அது தவறு என்று உணராமலே. ‘மனிதர்கள் அனைவரும் அண்ணாந்து பார்க்காவிட்டால் வானம் என்று ஒன்றே கிடையாது’ என்று ரிலேட்டிவிடி தியரி பற்றிய ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். இது புரிந்து கொள்ளச் சற்று கடினமாக இருந்தாலும் சில வாழ்க்கை நடைமுறைகளை ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது புரிகிறது; சரியென்றும் தோன்றுகிறது. எளிதான உதாரணம் கூற வேண்டுமாயின் நம் ஊர்ச் சாலைகளைப் பற்றிச் சொல்லலாம்.

எனக்கு மஸ்கட் வந்து பார்க்கும் வரை, ‘நல்ல’ சாலைகள் என்றால் என்னவென்று தெரியாது. அன்றாடம் நாம் பயணிக்கும் நமது ஊர்ச் சாலைகளுக்குப் பழகிப்போனதால் (என் உடலில், பயண அதிர்வுகள் இன்னும் இருக்கிறது), நல்ல சாலைகளில் பயணம் செய்து அறியாததினால், நாம் நம் சாலைகளின் தரத்தினை ஒப்புக் கொண்டு விட்டோம். சாலைகள் மட்டுமல்ல. நமக்குக் கிடைக்கும் அனைத்தையும்- அரசியல்வாதிகளிலிருந்து நாம் சாலையில் துப்பும் எச்சில் வரை.

இங்கே கிடைக்கும் கல்வியையும், கல்விமுறைகளையும் பார்க்கும் போது, நாம் இப்படிப் படிக்கவில்லையே என்ற உணர்வு வாட்டுகிறது. நான் படித்ததெல்லாம், தேர்வுகளுக்காக மட்டுமே. தேர்வு தொடங்க மணியடிக்கும் அந்தக் கடைசி விநாடி வரை, முழுவருடமும் திறக்காமல் வைத்திருந்த புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களை வேகமாகப் புரட்டிவிட்டு, சிலவற்றை தற்காலிக ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அது தொடர்பான கேள்விகள் ஏதாவது எங்காவது கேள்வித் தாளில் தென்படுகிறதா என்று மேய்ந்துவிட்டு, தென்பட்டால் தாமரையாகவும், தென்படாவிட்டால் தொட்டாற்சிணுங்கியாகவும் முகத்தை வைத்துக்கொண்டு, ஒரு பெருமூச்சு விட்டு எழுதத் தொடங்குவேன்.

சில கேள்விகளுக்கு விடைகளை தற்காலிக ஞாபகத்திலிருந்து எடுக்கப் போராடி ‘புத்தகத்தின் நடுப்புறத்தில் வலதுபுற பக்கத்தில் மேல் இரண்டு பத்திகளில் இதன் விடையை படித்தோமே’ என்பது வரை ஞாபகம் வந்து, அந்த விடைக்கான ஒரு வார்த்தை கூட கடைசிவரை பிடிபடாமலேயே புகைபோல் மறைவதை ஆற்றாமையுடனும், இயலாமையுடனும் மனக்கண்ணால் பார்த்து வருத்தப்படுவேன். தினமும் படித்திருந்தால் இது நேர்ந்திருக்காதே என்று யோசிப்பேன். இந்த யோசனை ஒவ்வோரு முறை தேர்வு எழுதும் போதும் என் மனதில் தோன்றும். எதற்காகப் படிக்கிறோம் என்றும், எப்படிப் படிக்க வேண்டும் என்பதும் படித்து முடித்து வேலைக்கு அலையும் வரை தெரிவதில்லை. மறுபடியும் முதலிலிருந்து படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியதுண்டு. கடிகார முள்ளை பின்னோக்கித் திருப்பி விடலாம். காலத்தைத் திருப்ப முடியுமா? ஆண்டுத் தேர்வு எப்போது முடியும், கோடை விடுமுறை எப்போது தொடங்கும் என்று மனம் ஏங்கிக் கொண்டிருக்குமே தவிர, தேர்வில் எப்படி எழுதப் போகிறோம் என்று யோசித்ததில்லை. ஒரு ஆண்டு முழவதும் படிக்காமல் விட்டதை, தேர்வு சமயத்தில் ஒரேயடியாகப் படித்து எழுதி முடித்து அப்பாடா என்று உட்கார முடியாது. கடைசித் தேர்வு எழுதிய நாளன்று இரவு தூங்குகையில் இன்னும் இரண்டு தேர்வுகள் மீதம் இருக்கின்றன, ஒன்றும் படிக்கவில்லையே என்பது போன்ற கனவுகள் வந்து அடிவயிறு கலங்கிப் போய் நடுநிசியில் வியர்த்து எழுந்து கொள்வது உண்டு. கல்லூரி முடிந்து இரண்டாவது வாரத்தில் வேலையில் சேர்ந்தாலும், அந்த இருவார காலத்தில் அனைத்து இரவுகளிலும் ‘இன்னும் தேர்வு மீதமிருக்கிறது’ என்ற கனவுகள் தினம் தோறும் வந்து சித்திரவதை செய்தது உண்டு.

பெரும்பாலான நமது மக்களுக்கு ‘வெளிநாடு’ என்பது கனவில் மட்டுமே நினைக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. திரைப்படங்களில் வெளிநாட்டில் படமாக்கப் பட்ட பாடல் காட்சிகளை வாயைத் திறந்து கொண்டு பார்க்கப் பழகி, அந்த கதாபாத்திரங்களோடு ஒன்றிப் போய், அன்றைய இரவுகளின் கனவுகளில் அதே இடங்களில் ஆடிப் பாடி, விடிந்ததும், சுருக்கம் நீக்கப்படாத, பொத்தான்கள் தொலைந்திருக்கும் ஆடையையும், தேய்ந்த செருப்பையும் அணிந்து கொண்டு, முந்தைய தினம் சமைத்து பானை நீரில் இட்ட மிஞ்சிய சோற்றை விழுங்கிவிட்டு, அவன் அப்பா உபயோகப்படுத்திவிட்டு கொடுத்திருக்கும் மிதிவண்டியை அதன் உறையில்லா காய்ந்த கல் போன்ற தோல் இருக்கையில் அமர்ந்து, மிதித்துக்கொண்டு தொழிற்சாலையை நோக்கிப் போவான்- புன்சிரிப்புடனும், நெற்றியில் திருநீறுடனும். அவனுக்கு வருத்தமில்லை. சோகமில்லை. அவனுக்கு வாழ்க்கையில் கிடைத்திருப்பது அனைத்தும் அவனுக்குப் போதுமானதாக இருக்கிறது. ஏனென்றால் அதைவிடச் சிறந்தனவற்றை அவன் பார்த்ததில்லை. அப்படியே அவன் பார்த்திருந்தாலும், அவற்றை அடைய அவனுக்குத் தகுதியிருக்கிறது என்று ஒரு போதும் நம்பியதில்லை. அவற்றுக்காக ஓரு போதும் ஏங்கியதில்லை. இப்படியே நாற்பதோ ஐம்பதோ வருடங்கள் உழைத்துக் கடைசியில் செத்தும் போகிறான்- எதை இழந்தான் என்று அறியாமலே. அவனுடைய உலகம் சிறியது; தேவைகளும் தான். அவன் போல் எத்தனை கோடி மக்கள்!

சிறந்தனவற்றைப் பார்த்த நன்மக்கள் ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?’ என்று தன்னையும் மற்றவர்களையும் கேள்வி கேட்டுவிட்டு ஆற்றாமையுடன் போய்விட்டார்கள். எல்லாம் இருக்கிறது, ஆனால் ஒன்றும் இல்லை என்ற நமது மக்களின் நிலை பரிதாபகரமானது. அடிப்படைத் தேவைகளுக்காக வாழ்நாள் முழுதும் உழைத்துச் சோர்ந்து போனவர்களும், கல்விக்காக, திருமணங்களுக்காக, ஏன்.. சிலசமயங்களில் உண்டு வாழ்வதற்காகக் கூட கடன் வாங்கி விட்டு, கடனையும் வட்டியையும் துரத்தித் துரத்தித் தேய்ந்து போனவர்களும் தான் அதிகம். இவர்களுக்கு எங்கே சாலைகளின் தன்மையைப் பற்றியும், ஆள்பவர்களின் தரத்தைப் பற்றியும யோசிக்கத் தோன்றும்?

‘வரப்புயர நீர் உயரும்’ உண்மைதான். ஆனால் நம்மக்கள் வரப்பு தாண்டி தலைதூக்க அவர்கள் வாழ்நாள் போதுமானதாக இல்லை. ஆனால் கோல் உயர்ந்து கோனும் உயர்ந்திருக்கிறார்கள். இந்த முரண்பாடு உறுத்துகிறது, முட்படுக்கையில் படுத்திருப்பது போல்

***

Wednesday, October 26, 2005

என் அப்பாவின் சைக்கிள் - # 4 (Final)

அதற்கப்புறம் கஜினி முகமது கணக்காய் கணக்கில்லாமல் முயன்றதில் சைக்கிள் கைக்குள் அடங்கியது.

மதுரை பெரியார் மேம்பாலத்தை ஒட்டி இருந்தது நாங்கள் வசித்த காம்பவுண்டு. 'பீம நிலையம்' என்று முகப்பில் எழுதியிருக்கும். வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தால், பாலத்தின் உச்சியிலிருந்து கீழ் நோக்கி விரைந்து வரும் வாகனங்களைக் காணலாம். பாலத்திற்கு அந்தப் பக்கத்தில் மதுரைக் கல்லூரியில் பரந்த விளையாட்டு மைதானம். அந்தக் கோடியில் கோடுகளாகத் தெரியும் மதுரை-ராமேஸ்வரம் ரயில்வழித்தடம். புகை கக்கிக் கிடந்த ரயில்களினால் பாலத்தின் அடிப்பக்கம் கருமை பரவியிருக்கும். தண்டவாளத்தைத் தாண்டி பாலத்தைக் கடக்கையில் ரயில் வாசனை காற்றில் எப்போதும் இருக்கும். அந்த வழித் தடத்தை ஒட்டியே ஒருகாலத்தில் 'கிருதுமால் நதி' என்று ஒன்று இருந்ததாம். இப்போது இரு புறமும் நெரிசலாக வீடுகள் கட்டி, ஒரு ஒற்றையடிப் பாதையில் சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது. நிறைய பன்றிகள் உலவும்.

பைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது கனவு. கல்லூரியில் பைக் வைத்திருந்தவர்கள் வெகு சில பணக்கார மாணவர்கள் மட்டுமே. நான் சைக்கிளுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்தேன். இருந்த ஒரே ஹம்பர் சைக்கிளையும் என் தந்தை எடுத்துச் சென்றுவிடுவார். முழுதும் மூடியிருக்கும் செயின் கவர் இருப்பது அதன் விசேஷங்களில் ஒன்று. மற்ற சைக்கிள்களில் பேருக்கு ஹாக்கி ஸ்டிக் வடிவத்தில் ஒன்றை வைத்திருக்க, பாண்ட்டின் ஓரங்களில் எப்போதும் க்ரீஸ் கறை அப்பும். என் அண்ணன் குமார் அந்தச் செயின் கவரில் Jaunty lender என்று எழுதினான். அப்படியென்றால் என்னவென்று ஒரு ஏழெட்டு வருடங்கள் கழித்து அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.

அப்பாவை ஏமாற்றி சைக்கிளை வெளியில் எடுப்பது இயலாத காரியம். இன்னொன்று அங்கிருந்து கல்லூரிக்குச் சைக்கிளில் செல்வது என்பது நடவாத (ஓட்டாத) காரியம். கிட்டத்தட்ட பனிரெண்டு கி.மீ. மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் சென்று மலை மீது வீற்றிருக்கும் செளராஷ்ட்ர கல்லூரிக்குச் செல்ல வேண்டும். அதற்கு படிக்கட்டு பயணப் பேருந்தே மேல். பால் கார்டு போன்ற பஸ் பாஸ் ஒன்று- சீசன் டிக்கெட் வைத்திருந்தேன். ஆனால் கட்டுப்படியாகவில்லை. அதைவிட எப்போதாவது டிக்கெட் எடுத்தால் போதும் என்ற தினப்படி பஸ் பயணமே வசதியாயிருந்தது.

பின்னாளில் என் அப்பாவுடன் அந்த ஹம்பரும் ரிட்டையராகிவிட, என் கைக்கு வந்தது. ஸ்போர்ட்ஸ் சைக்கிளாக அதை எளிதாக மாற்றினேன். ஒன்றுமில்லை. இரண்டு சக்கரம், பெடல், இருக்கை, ·ப்ரேம் தவிர அனைத்தையும் கழற்றிப் போட்டேன். ஹேண்டில் பாருக்கு முன்னால் ஒரு வயர்க் கூடையை மாட்டி வைத்திருந்தார். கைப்பிடியில் பிரிபிரியாக ரெக்ஸின் தொங்கும் அலங்காரக் கைப்பிடியை மாட்டியிருந்தார். இருக்கைக்கும் ஹேண்டில் பாருக்கும் இடைப்பட்ட கம்பியில் ஒரு குழந்தை சீட் ஒன்றும் இருந்தது. தவிர பக்க வாட்டில் ஒரு தகரப் பெட்டியொன்று. எல்லாவற்றையும், முழு செயின் கவர் உட்பட, கழற்றி வைத்ததும் சைக்கிளை ஒரு விரலால் தூக்க முடிந்தது. நம்பினால் நம்புங்கள். கிட்டத்தட்ட எலும்புக் கூடு மாதிரி இருந்த அதை வைத்துக் கொண்டு, அங்கிருந்து ஒரு அதிகாலை வேளையில் 'ராஜாங்கம் வீட்டுக்குப் போய்ட்டு வர்றேன்' என்று சொல்லிவிட்டு, 75 கி.மீ. மிதித்து வத்திராயிருப்புக்குச் சென்றேன். தாத்தாவும் பாட்டியும் அப்போது அங்கு இருந்தார்கள்.

போய்ச் சேர்ந்ததும் இரு கால்கள் இடுப்பில் இணையும் இடத்தில் மரணவலி. கால்களை அகற்றி வைத்துதான் நடக்க முடிந்தது. தாத்தா 'பரவாயில்லை. நாளைக்குக் காலை 'ஜெயக்குமார்'ல போயிடு. சைக்கிளை லக்கேஜா மேல போட்டுக்கலாம்' என்றார். நான் பிடிவாதமாக மறுத்து மறுநாள் அதிகாலை கிளம்பி, எதிர்காற்றில் மிதித்து மாலை மதுரை வந்து சேர்ந்தேன். அதற்கப்புறம் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு சைக்கிளைப் பார்த்தாலே அலர்ஜியாக இருந்தது.

சில மாதங்கள் கழித்து, என் ஓவியத் திறனைச் சோதிக்க, அந்த எலும்புக்கூடு சைக்கிளுக்கு வெள்ளை வர்ணம் அடித்தேன். எனக்கே அதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

பீம நிலையம் காம்பவுண்டு மிகவும் குறுகியது. மொத்தம் நான்கு வீடுகள். அவரவர் வீட்டுச் சைக்கிளை இரவு பிரதானக் கதவை மூடுமுன்னர் எடுத்து உள்ளே நடைபாதை வராண்டாவில் நிறுத்தி விடுவார்கள். ஒரு நாள் ராஜாங்கம் வீட்டுக்குச் சென்று விட்டு நள்ளிரவு திரும்ப, பிரதான கதவு பூட்டப்பட்டிருந்ததால், யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சைக்கிளை வெளியே கம்பிக் கதவருகில் நிறுத்தி, பழைய சைக்கிள் செயின் ஒன்றால் அதன் சக்கரத்தையும் கதவையும் இணைத்துப் பூட்டிவிட்டு மொட்டைமாடிக்குச் சென்று தூங்கிவிட்டேன்.

காலை எழுந்து வந்து பார்த்தபோது அந்தப் பழைய சைக்கிள் செயின் மட்டும் கம்பிக்கதவில் தொங்கிக் கொண்டிருந்தது.

(முற்றும்)

நன்றி: www.maraththadi.com

என் அப்பாவின் சைக்கிள் # 3

இப்படியாய் என் முதல்நாள் வாடகை சைக்கிள் பயணம் முடிவுக்கு வந்தது.

சில வாரங்கள் கழித்து நடந்த தேர்வுகளில், வழக்கம்போல் சூழ்ந்துகொண்டு 'முக்கியமான கேள்வி குறிச்சுக் கொடுடா' என்ற கும்பலுக்கு பதில்சொல்லி அனுப்பியதில், கிட்டத்தட்ட நான் குறித்துக் கொடுத்த கேள்விகள் பெரும்பாலும் வந்துவிட, அவர்கள் நன்றி சொல்லிச் சென்றார்கள். எதிர்வீட்டு அம்பி என் உதவிக்கு பிரதியுபகாரமாய், அவன் அப்பாவின் பெரிய சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்து எனக்குக் கற்றுக் கொடுக்க முன்வந்தான்.

'பேலன்ஸ் இல்லாட்டி காலி. அதனால இங்க தெருவுல வேண்டாம். ஸ்கூல் க்ரவுண்டுக்குப் போயிடலாம். நீ எந்த திசைல வண்டி ஓட்னாலும் கவலை இல்லை' என்று சொல்லிவிட்டுப் பள்ளி மைதானத்துக்கு என்னைக் கேரியரில் அமர்த்திச் சென்றான். அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட்டேன். எங்கள் உயரத்திற்கு பெடலை முழுச்சுற்று சுற்ற முடியாது. என்னிடமிருந்து ஐம்பதடி தூரத்திலிருந்து அம்பி சைக்கிளை படுவேகமாக உருட்டி ஒரு தாவு தாவி அமர்ந்து கொள்ள அந்த வேகத்தில் சைக்கிள் ஓடி வர, கால் எட்டும் வரை நீட்டி மிதித்து விட்டு, பெடல் மறுபடியும் கைக்கு (காலுக்கு) வருவதற்குக் காத்திருந்து மிதித்து ஓட்டினான் அம்பி. என் அருகில் வந்ததும் நான் அவனையும் சைக்கிளையும் துரத்தி கேரியரில் குதித்து அமர வேண்டும். நான் எவ்வளவு முயன்றும் என் இடுப்பை கேரியரில் ஏற்ற முடியவில்லை. வழுக்கி வழுக்கி தரைக்கே மறுபடியும் நான் வந்துகொண்டிருந்ததால் அம்பிக்கு எரிச்சல் வந்துவிட்டது. போதாக்குறைக்கு நான் கேரியரில் தொற்றும் முயற்சியில் சைக்கிளைக் கிட்டத்தட்ட உடைந்த டைட்டானிக் கப்பலின் ரேஞ்சுக்கு ஆட்டியதில் அவனுக்குக் கிலி வந்துவிட்டது.

சைக்கிளை எங்கள் வீட்டுத் திறந்த திண்ணையை ஒட்டி நிறுத்தி, 'மொதல்ல நீ உக்கார்றா.. ரெண்டு பக்கமும் காலைப் போட்டு' என்றான். நான் அமர்ந்ததும், அவன் அமர்ந்துகொண்டான். இருவருக்கும் தரை எட்டவில்லை. அப்படியே திண்ணையில் இடதுகாலை வைத்து ஒரு உந்து உந்தி அப்படியே அரை பெடல் போட்டுக் கொண்டு பள்ளி மைதானத்திற்கு ஓட்டிக்கொண்டு சென்றான். ஓட்டுகையில் தான் 'அதிலிருந்து இறங்குவதெப்படி?' என்று இருவருக்கும் உறைத்தது. மைதானத்தை அடையும் முன் திட்டங்கள் வகுத்துக் கொண்டோம். அதன்படி மைதானத்தில் நுழைந்ததும் முதலில் நான் அப்படியே தாவிக் கால்களை விரித்து சைக்கிளை முன் தள்ளி விட்டு குதித்து இறங்க வேண்டும். பின்பு கொஞ்சதூரத்தில் அம்பி இருக்கையிலிருந்து வழக்கம்போல் குதித்து இறங்கி சைக்கிளைப் பிடித்து நிறுத்தி விடுவான். திட்டம் என்னவோ கேட்பதற்குச் சுலபமாகத்தான் இருந்தது.

மைதானத்தில் நுழைந்ததும் துரத்திய நாய்க்குப் பயந்து இருவரும் கால்களை முடிந்த அளவு உயரத்தில் வைத்துக் கொள்ள, மிதிவிசை போதாமல் சைக்கிள் கிட்டத்தட்ட நிற்கும் நிலைக்கு வந்துவிட்டு, அம்பி ஹேண்டில் பாரை ஆட்டி ஆட்டி விழாமல் தடுத்துக் கொண்டிருந்தான். தெய்வாதீனமாக ஓடிவந்த பன்றிக்குட்டியைத் துரத்திக்கொண்டு நாய் சென்றுவிட, இருவரும் நின்றுவிட்ட சைக்கிளை இடதுபுறமாகச் சாய்த்து கால்களை ஊன்றிக்கொண்டு நின்றோம். கேரியர் கம்பிகள் அழுத்தியதில் பின் தொடைகளில் கோடுகள் விழுந்திருந்தது.

நான் தயாரானேன்.

'எடுத்த எடுப்புல என்ன மாரி ஓட்ட முடியாது' என்றான் அம்பி.

'பின்ன?'

'மொதல்ல கொரங்குப் பெடல் போடக் கத்துக்கோ. அப்றம் சீட்ல ஒக்காந்து ஓட்டப் பழகலாம்

''கொரங்குப் பெடலா?'

'ஆமா. இதோ பாரு' என்று சொல்லிவிட்டு வலதுகாலை ஃப்ரேமிற்கிடையில் நுழைத்து அடுத்த பெடலில் வைத்துக்கொண்டு சைக்கிளை ஒரு கோணத்தில் சாய்த்து, கிட்டத்தட்ட சர்க்கஸ் போல 'ரய்க்க் ரய்க்க்' என்று ஓட்டிக் காண்பித்தான்.

'நான் பிடிச்சுக்கறேண்டா' என்ற அவன் உறுதியை நம்பி ஓட்டக் களமிறங்கினேன். முதலில் இடது காலை பெடலில் வைத்துக்கொண்டு வலது காலால் தரையை உந்தி, சைக்கிள் நகரத்தொடங்கியதும், வலது காலை பெடலில் வைத்து 'ரய்க்க்க்.. ' என்று செல்ல வேண்டும். நான் உந்திவிட்டு, வலது காலை தூக்கி, சைக்கிளைச் சாய்த்த வினாடியில் அது பொத்தென்று வலது பக்கம் விழுந்தது. அம்பி 'பரவால்ல. மறுபடியும் ஓட்டு' என்று பெரிய மனதுடன் சொல்லிவிட்டு, வலதுபுறம் நின்று சைக்கிளைப் பிடித்துக்கொண்டான். அடுத்த அரைமணி நேரத்தில் நான் 'கொரங்குப் பெடல்' நிபுணனாக மாறிவிட்டேன்.

'இப்போ அரை பெடல் போடாம முழுப் பெடல் சுத்திப் பாரு' என்றான் அம்பி. முதலில் முயற்சித்ததில் இடுப்புப் பகுதியில் ஒரு வலி. பின்பு பழகிப் போய், அதையும் விரைவாகக் கற்றுக் கொண்டேன். இரண்டுமணி நேரம் குரங்கு சைக்கிள் ஓட்டியது.

'நாளைக்கு சீட்ல ஒக்காந்து ஓட்லாம்' என்று அம்பி சொல்லியதும் திரும்பினோம். அன்று கனவில் என் ஆஞ்சநேயர் சைக்கிளை ஓட்டிக்கொண்டு சென்றார்.

மறுநாள் மாலை அம்பியுடன் மறுபடியும் மைதானத்திற்குச் சென்றோம்.

'நான் புடிச்சுக்கறேன். சீட்ல ஒக்காரு' என்று சைக்கிளை அம்பி கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

நான் ஏறி அமர்ந்ததும் கீழே பார்த்தேன். இரண்டு நூறுமாடிக் கட்டடங்களுக்கிடையே ஒரு கம்பியைக் கட்டி அதில் நடந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படி உணர்ந்தேன். என் கீழே தரை வெகுதொலைவில் இருந்தது. பெடல் ஒரு காலுக்கு மட்டுமே எட்டியது. உடல் லேசாகிவிட்டது போன்ற ஒரு உணர்ச்சி.

'சரி. இப்ப அந்தப் பெடலை மிதி'

நான் மிதித்தேன். அடுத்த வினாடி பெடல் நழுவிக் கீழே போக, இந்தப்புறம் இருந்த பெடல் மேலே வர அதையும் மிதித்துக் கீழே அனுப்பினேன். சைக்கிள் நகர்ந்தாலும், பயங்கரமாக இரண்டுபக்கமும் மாறி மாறிச் சாய்ந்தது. அம்பி மிகப் பதட்டமாக இருந்தான்.

'டேய்.. டேய்.. இடுப்ப நெளிக்காதடா.. நேர வச்சுக்கோ' என்று சொல்லிக்கொண்டேயிருந்தான். நான் என்ன வேண்டுமென்றா இடுப்பை நெளித்தேன்? சைக்கிள் ஒருபுறம் சாய்ந்தாலே இடுப்பு தன்னால் மறுபக்கம் நெளிகிறது. அம்பி ஒருமணிநேரம் என்னோடு போராடினான். ஒரு வழியாக நான் சைக்கிளைச் சாய்க்காமல் ஓட்டத் தொடங்க, அம்பி பிடித்துக்கொண்டிருக்கிறான் என்ற தைரியத்தில் பெடல் போடும் வேகத்தை அதிகரித்தேன்.

'எப்படிடா?''சூப்பர். சீக்கிரம் கத்துக்கிட்டியே'

'இப்ப பயமில்லாம இருக்கு.. பெடலும் வேகமாப் போடறேன். இல்ல?'

'........'

'அம்பீ...' என்று அழைத்து பதில் வராததால் திரும்பிப் பார்க்க, தூரத்தில் அம்பி நின்று டாட்டா காட்டினான். அவ்வளவுதான். அதுவரை கற்ற சமநிலைப்படுத்துதல் எல்லாம் மறந்துபோக, நான் ஹேண்டில் பாரை பயங்கரமாக ஆட்டி 'டமால்' என்று கீழே விழுந்தேன்.

(தொடரும்...)

நன்றி: www.maraththadi.com

என் அப்பாவின் சைக்கிள் - # 2

நான் ஓட்டியது ஒரு பொன்னிற வர்ண சைக்கிள். தெருவை இரண்டு சுற்றுகள் முடித்ததும், சைக்கிள் ஓட்ட முடியும் என்ற நம்பிக்கை பலமடங்கு அதிகரித்து விட்டது. நம்பிக்கையின் ஆதார காரணம் கால்களைத் தரையில் ஊன்ற முடியும் என்பதுதான். உற்சாகத்தின் உச்சத்தில் சைக்கிளை சற்று வேகமாக மிதிக்கத் தொடங்கினேன்.. சில நொடிகளுக்கு ஒருமுறை கால்களைத் தரையில் ஊன்றி சமநிலை செய்துகொண்டு ஜோராக ஓட்டினேன்.

நடுத்தெருவிலிருந்து விலகி, தெற்குத் தெருவில் ஒரு வட்டம் அடிக்கலாம் என்ற பேராசையில், தெற்குத் தெருவில் நுழைய அங்கே ஒரே ரகளையாக இருந்தது. பல பையன்கள் பலவித சைக்கிள்களை ஓட்டிக்கொண்டு அங்குமிங்கும் பறந்து கொண்டிருக்க, எனக்கு அங்கு ஏன் வந்தோம் என்று ஆகிவிட்டது. போதாக்குறைக்கு சைக்கிள் வேறு மந்திரம் போட்டாற்போல் தெருவில் எங்கெங்கெல்லாம் கற்கள் நீட்டிக்கொண்டிருக்கிறதோ, அவற்றின் மீது, நான் வேண்டாம் வேண்டாம் என்று என் கைகளுக்குக் கட்டளையிட்டும், மிகச்சரியாக ஏறி, இறங்கிச் சென்று கொண்டிருந்தது. நம்மை மீறிய ஏதோ சக்தி சைக்கிளைச் செலுத்துகிறது என்ற பிரமை இருந்தது.

தெற்குத் தெருவில் சைக்கிளிலிருந்து இறங்கிக்கொண்டு, ஆரவாரப் பையன்களைக் கடந்ததும், மறுபடியும் ஏறி, பெடல்களைச் சுழற்ற சைக்கிள் வேகம் பிடித்து கடைத்தெருவை நோக்கிச் சென்றது. அப்போது பார்த்து ஏதோ ஒரு வீட்டிலிருந்து ரொம்ப நேரமாகக் குலைத்துக் கொண்டிருந்த நாய் ஒன்று எப்படியோ வீட்டுக்காரப் பெண்மணியை ஏமாற்றிக் கதவிடுக்கின் வழியாக வெளிக் கிளம்பி, தெருவில் அம்பு போல் பாய்ந்தது. அந்த திடீர்ச் சுதந்திரத்தில் அதற்குத் தலைகால் புரியவில்லை போலும். குதித்துத் துள்ளாட்டம் போட்டது. 'ம்க்க்.. ம்க்க்க்' என்று கொஞ்சல் வேறு..

எனக்கு சைக்கிளின் முன்சக்கரத்தின் முன் இருக்கும் சாலையைத் தவிர வேறு எதிலும் பார்வையைத் திருப்ப இயலவில்லை. ஆனால் கண்ணோரத்தில் மங்கலாக நாயொன்று குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டுகொண்டேன். தரையில் நின்றிருந்தால் எளிதாகச் சமாளித்துவிடலாம். ஆனால் அமர்ந்திருப்பதோ சைக்கிள்மீது. அதுவும் கால்கள் ஊன்றாமல் சற்று வேகமாக ஓட்டிக்கொண்டிருக்கிறேன். விதி சைக்கிள் கேரியரில் உட்கார்ந்துகொண்டு என்னைப் பார்த்து சிரிக்க, நாய் சரியாக சைக்கிள் முன் வந்து நின்றுகொண்டு 'வள்வ்' என்று குலைத்தது. நான் நிறுத்தப் போவதில்லை என்பதைக் கடைசி வினாடியில் அது உணர்ந்துகொண்டு அது விலகுவதற்குள் முன்சக்கரம் அதன் பாதத்தில் ஒரு முறை ஏறி இறங்க, ஏதோ லாரி ஏறியது போல் அது 'காள் காள்' என்று கத்தி ஊரைக் கூப்பிட்டது.

ஒரு வழியாகச் சமாளித்து விழாமல் நிற்க, வீட்டுக் கதவு திறந்து ஒரு மாமி வெளிப்பட்டு, கத்திக்கொண்டிருந்த நாயையும் என்னையும் பார்த்து சந்தேகத்துடன் 'என்ன ஆச்சு?' என்றாள். நான் 'ஒண்ணுமில்லை மாமி..' என்று ஆரம்பிப்பதற்குள் பக்கத்து வீட்டு முன் இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த வாண்டு ஒன்று 'மணி கால் மேல சைக்கிள் ஏறித்து' என்று சொல்லி வைக்க, மாமி 'அய்யோ' என்றாள்.

மணி அதற்குள் காதுகளைப் பின்புறம் திருப்பி ஒட்டிக்கொண்டு, வாலைப் பின்னங் கால்களுக்கிடையில் நுழைத்துக்கொண்டு படு வேகமாக மாமியை அடைந்து அவள் கால்களுக்கிடையில் ஒண்டிக்கொள்ள, மாமி அதன் காலைத் தூக்கிப் பார்த்து சோதித்தாள். லேசாகச் சிவந்திருந்தது போலும். அதற்குள் மணி மாமியின் முகத்தை ஒரு ரவுண்டு நக்கி முடித்திருந்தது.

'கல்லெறியறது போதாதுன்னு இப்போ சைக்கிளை ஏத்தறேளா?' என்றாள் மாமி. நான் 'தெரியாம..' என்று ஆரம்பிக்க, எங்கிருந்தோ வந்த பந்து ஒன்று நாயின் அருகில் விழுந்து தெறிக்க, அது அதிர்ச்சியில் 'வள்' என்று கத்திவிட்டுத் தலைதெறிக்க ஓடியது. மாமி என்னை விட்டுவிட்டுப் பந்தை எடுத்துக்கொண்டு என் பின்னால் பந்தை எடுக்க வந்த பையனை 'வாடா வா.. இன்னிக்கு என்ன பண்றேன் பாரு' என, பையன் பத்தடி தூரத்தில் நிச்சயமில்லாமல் நின்றான். நான் இதுதான் சமயம் என்று வேகம் பிடித்தேன். தெருக்கோடியில் லாரி ஒன்று நின்று தெருவை அடைத்துக்கொண்டிருந்ததை கவனித்தேன். அரைபாடி லாரி. நான் சைக்கிளை நிறுத்தவேண்டும் என்பதை உணர்ந்து பிரேக்கைப் பிடிக்க, கிட்டத்தட்ட கைப்பிடியோடு ஒட்டுமளவிற்கு பிரேக்கைப் பிடித்தும், சைக்கிளின் வேகத்தில் எந்த பின்னேற்றமும் இல்லை. பாழாய்ப்போன கடைக்காரன் பிரேக் பிடிக்காது என்பதைச் சொல்லவில்லை.

போதாக்குறைக்கு அந்த இடத்தில் தெரு சற்று இறக்கமாக இருக்க, சைக்கிளின் வேகம் அதிகரித்தது. நான் 'அய்யய்யோ' என்று அலறலுடன் லாரியின் பின்புறத்தை அடைந்து அதன் பின்புற கதவைப் பிடித்துத் தொங்க, சைக்கிள் என்னிடமிருந்து விடுபட்டு லாரிக்குள் சென்று விழுந்தது.

லாரியின் கதவிலிருந்து இறங்கி, மண்டியிட்டு உள்ளே நுழைந்து சைக்கிளை வெளியே இழுத்து வந்தேன். அதை நிமிர்த்திப் பார்க்க சற்று புழுதி அப்பியிருந்ததைத் தவிர வேறு சேதம் எதுவும் இல்லாததுபோல் தோன்றியது. ஒருமணி நேரம் முடிய இன்னும் சில நிமிடங்கள் இருக்க, நான் கடைத்தெருவில் திரும்பி பஷீர் கடைக்கு விரைந்தேன். 'இது என்ன ஒரு கம்பி மட்டும் நீட்டிக்கொண்டிருக்கிறதே!' என்று சோதித்ததில் கைப்பிடிக்குக் கீழே ப்ரேக் உடைந்து கம்பி தொங்கிக்கொண்டிருந்தது. நான் சைக்கிளை நிறுத்தி அந்தக் கம்பியை நிமிர்த்து வைத்துப் பார்த்ததில் அது தொக்கிக்கொண்டு அசையாது நின்றது. நான் அலுங்காமல் நலுங்காமல் சைக்கிளை மெதுவாக உருட்டிக்கொண்டு போய் கடையில் நிறுத்திவிட்டு, பஷீரிடம் பாக்கி எட்டணாவை வாங்கிக்கொண்டு திரும்பிப் பார்க்காது வீட்டுக்குச் சென்று சமையலறையில் சென்று சில் தரையில் படுத்துக்கொள்ள லேசாகக் காய்ச்சல் அடிப்பது போல் இருந்தது. அப்படியே தூங்கிப் போனேன்.

மாலை எழுந்து வெளியில் வர திண்ணையில் தாத்தா யாரோடோ உரத்துப் பேசிக்கொண்டிருந்தார். லேசாக எட்டிப் பார்த்ததில் பஷீரின் முகம் தெருவில் தெரிய, தலையை உள்ளிழுத்துக்கொண்டேன்.

'என்ன பாய்? என்ன ஆச்சு'

'ஒண்ணுமில்லிங்க சாமி.. நம்ப தம்பி சைக்கிள் எடுத்திச்சு'

'ஆமா.. நாந்தான் சொன்னேன். திருப்பி விட்டுட்டான்ல?'

'விட்ருச்சி சாமி.. ஆனா.. '

'என்ன வாடகை தர்லயா?'

'அதெல்லாம் தம்பி கொடுத்திருச்சு.. ஆனா வண்டில ப்ரேக்கு ஒடஞ்சிருக்கு..'

'அதனால..?'

'புது ப்ரேக்கு கம்பி ரெண்ட்ரூவா ஆகும்.. அதான்..'

'அவந்தான் ஒடச்சானா? வேற யாராவது ஒடச்சிருக்கப் போறான்'

'இல்லீங்க.. தம்பி எடுத்ததுக்கப்புறம் வேற யாரும் வண்டிய எடுக்கலை'

'அதுக்கு முன்னாடி'

'அப்ப நல்லா இருந்துச்சு.. '

'அப்படியா சரி.. இந்தா..' என்ற தாத்தாவின் குரல் கேட்க, அவர் பணம் கொடுப்பதை உணர்ந்து வருத்தமாக இருந்தது.

அது திரையரங்கத்தில் மூன்று காட்சிகளுக்கும் டிக்கெட் கொடுக்கக் கண்விழித்து உழைக்கும் அவரது இரண்டுநாள் சம்பளம்.

(தொடரும்...)
நன்றி: www.maraththadi.com

என் அப்பாவின் சைக்கிள் - # 1

தெருவில் சர் சர்ரென்று அங்குமிங்கும் சைக்கிள் விட்டுக் கொண்டு செல்லும் என் வயது பயல்களைக் கண்டால் பொறாமையாக இருக்கும். அவரவர் வீட்டில் ஹெர்குலிஸ், அட்லஸ் என்று விதவிதமாக சைக்கிள்கள் கரும்பச்சை வர்ணங்களில் ஜொலிக்க, அவர்களின் தந்தைகள் சைக்கிள்களை எடுத்து ஓட்ட அனுமதித்திருந்தார்கள்.

நாங்கள் வசித்த சூழ்நிலைக்குச் சைக்கிள் எல்லாம் "பிளைமுத்து" கார் ரேஞ்சுக்கு இருந்ததால் திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. தாத்தா என்னை கவனித்திருக்க வேண்டும். அழைத்து ஒரு ரூபாய் கொடுத்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஒரு ரூபாய் பெரிய தொகை அப்போது.

கடைத்தெருவில் பஷீர் கடையில் வரிசையாகப் பல உயரங்களில் சைக்கிள்கள் நிற்கும். சிறுவர்களுக்கே மூன்று உயரங்களில் வெவ்வேறு சைக்கிள்கள். இருப்பதிலேயே சிறியதொன்றை எடுத்துக்கொண்டு ஓட்ட முயன்றேன். முட்டி தட்டியது. அதற்குச் சற்றுப் பெரியதொன்றை, இருக்கையில் அமர்ந்து கால்களை நீட்டினால் தரையைத் தொட முடியவேண்டும், எடுத்துக்கொண்டு, தரையைத் தேய்த்துத் தேய்த்துக் கிளம்பினேன். ஒரு மணி நேரத்திற்கு எட்டணா வாடகை. அது ஒரு சரித்திரப் பயணம்.

சைக்கிள் கற்றுக்கொள்ள வசதியாக தெருக்கள் பெரும்பாலும் நேர் கோடுகளில் இருந்தன. நான் கடைத்தெருவிலிருந்து தரையைத் தேய்த்து ஒருவழியாக எங்கள் தெருவுக்குள் திரும்பினேன். இடது காலை ஊன்றிக் கொண்டு, கைகளை விறைப்பாக வைத்து கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு, வலது காலால் பெடலை அதன் வட்டப் பாதையின் உச்சியில் வைத்துக் கொண்டு, லேசாகக் குனிந்து ஒரு மிதி.. அய்யகோ.. பெடல் 11:59-ல் இருந்ததால் பின்னோக்கி அதிவேகமாகச் சுழன்று என் கெண்டைக் காலைத் தாக்கி 'விர்.விர்'ரென்றது. இதைப் பார்த்துத்தான் வால்ட் டிஸ்னி தலையில் அடி வாங்கிய டாம் பூனைக்கு சிவப்புக் கொம்பு வரைந்திருக்க வேண்டும்.

ஓரிரு நிமிடங்கள் ஆசுவாசப் படுத்திக்கொண்டு, பெடலை இந்தமுறை சரியாக வைத்துக் கொண்டு, ஒரு அரைவட்ட மிதி மிதித்ததில் சைக்கிள் நகர்ந்து சென்றது. இடதுகாலை தூக்கி பெடலில் வைத்துக் கொள்ள முடியாமல் தெருவில் ஆங்காங்கே பதிந்து நீட்டிக் கொண்டிருந்த கல் ஒன்றைத் தடுக்கி கட்டை விரல் நகத்தைப் பெயர்த்துக் கொண்டேன். இப்படியாவது சைக்கிள் கற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா என்று கழிவிரக்கமாகிக் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

தண்ணி குடிக்காம நீச்சல் கத்துக்க முடியாது; முட்டிய பேத்துக்காம சைக்கிள் வராது' என்று தாத்தா சொன்னது நினைவில் வந்தது. போதாக் குறைக்கு நண்பன் கிச்சாமி எதிரே படு வேகத்தில் கைகளை பக்க வாட்டில் விரித்துக் கொண்டு 'ஹாய்' என்று காற்றாய் கடந்துபோக, நான் விழுப்புண்களுக்கு அஞ்சாது பயணத்தைத் தொடர்ந்தேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அரை வட்டச் சுழல் முழுமையடைந்து இப்போது பெடலை ஒரு முழு வட்டம் அடிக்க முடிந்தது. தெருமுனை வரை வேறு தடங்கல்களின்றி வந்தேன்.

தெருமுனை பெருமாள் கோயிலுக்குப் பின் நல்ல தண்ணீர் பொதுக் குழாய் இருந்தது. நிறைய பெண்கள் நாள் முழுதும் குடங்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது ஒரு மாமா மேல் சட்டையில்லாது அண்டாவில் நீர் நிரப்பி, வேட்டி நனைய, கால்களை டைமண்ட் வடிவத்தில் விரித்து நடந்து, தூக்கிக் கொண்டு போவார். தெருவில் ஒன்றிரண்டு மாடுகளுக்கும் நாய்களுக்கும் அடுத்தபடியாக, பெண்கள் குடங்களுடன் அலைந்து கொண்டிருப்பார்கள். நான் தெருமுனையை அடைத்து சைக்கிளை 'தலகாணித் தெரு'வுக்குத் திருப்ப முயற்சிக்கையில் எதிரே அம்புஜம் இடுப்பில் தளும்பிய குடத்துடன் (கவனிக்க: தளும்பிய இடுப்பில் அல்ல) வந்ததைக் கவனிக்கவில்லை. 'டேய்..டேய்.. அம்பி..' என்ற அவளது அலறலை நான் கவனிக்குமுன் தாமதமாகிவிட்டது. அடுத்த சில கணங்களில் நாங்கள் மோதிக்கொள்ள, பலவித சத்தங்களுக்கிடையே நான் தலைசுற்றி விழுந்தேன்.

நான் எழுந்திருக்கையில் எதிரே அம்புஜம் முழங்காலைப் பிடித்து இரைச்சலுடன் எழுந்து கொண்டாள். கீழே குடம் சில சுற்றுக்களை முடித்து, பூமியின் கோணத்தில் சாய்ந்திருக்க, தரையில் நீர் ஓடி ஈரமாகியிருந்தது. அம்புஜத்தின் சேலையும்தான். பின்பு கிறீச்சுக் குரலில் அவள் வைததெல்லாம் என் காதில் விழவில்லை. நான் கிழே கிடந்த சைக்கிளையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் முன்சக்கரம் ஒரு திசையில் இருக்க, அதன் எதிர்த்திசையில் ஹேண்டில் பார் திரும்பியிருந்தது. ப்ரேமிற்கிடையே காலை வைத்து அதை நிமிர்த்தும் முயற்சியில் மறுபடியும் கீழே போட்டேன்.

அம்புஜம் குடத்திலிருந்த மண் கலந்த மீதித் தண்ணீரைக் கொட்டிவிட்டு அதன் அடிப்பாகத்தைச் சோதித்தாள். ஒருபுறம் உள்வாங்கி நெளிந்திருக்க மறுபடி காச்சு மூச்சென்று கத்த ஆரம்பித்தாள். அருகிலேயே எங்கள் வீடு. தாத்தா ஆபத்பாந்தவனாக வந்து 'கண்டார..' என்று வைது அவளை விரட்ட, தெருவில் என் எதிரிகளின் பட்டியல் அன்று துவங்கியது. அவர் திட்டத் தொடங்கினால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். நடுவீட்டில் வேட்டியை மடித்து நின்றுகொண்டு 'வக்காள..' என்று ஆரம்பித்தால் அனைவரும் திசைக்கொன்றாய் ஓடுவோம். இங்கு என்னுடன் பணிபுரியும் அமெரிக்கன் பேசும் ஐந்து வார்த்தைகளுள்ள வாக்கியத்தில், இரண்டு வார்த்தைகள் மட்டும் சொல்லவந்ததைச் சொல்ல, மீதி வாக்கியத்தில் F-இல் துவங்கும் ஆங்கில நாலெழுத்துக் கெட்டவார்த்தை நிரம்பியிருக்கும். இதற்கு எந்த விதத்திலும் குறையாது என் தாத்தா தமிழில் பேசுவார். தாத்தாவுக்கு ஊரில் மிகுந்த மரியாதை இருந்தது. 'ராஜா சாமி' என்றே அழைப்பார்கள்.

தாத்தா சைக்கிளை நிமிர்த்திப் பிடித்துக் கொண்டார். நான் முழங்கால்களில் அப்பியிருந்த புழுதியைத் துடைத்துக் கொள்ள எரிந்தது. சிவப்புக் கோடுகளாய் சிராய்த்திருக்கத் திண்ணையில் அமர்ந்து கொண்டேன். தாத்தா தேங்காயெண்ணையைத் தடவி விட்டு, தட்டிக் கொடுத்து 'இனிமே சைக்கிள் ஓட்றது ரொம்ப சுலபம்' என்று சொல்லி அனுப்பினார். பயணம் தொடர்ந்தது.

(தொடரும்...)

நன்றி : www.maraththadi.com

Saturday, October 15, 2005

அன்புள்ள திரு. சு.ரா.

Image hosted by TinyPic.com
அன்புள்ள திரு. சு.ரா.

நேற்றுதான் உங்களைச் சந்தித்தது போல இருக்கிறது. ஒரு மாதம் கூட ஆகவில்லை உங்களைச் சந்தித்து. நன்றாக சுறுசுறுப்பாகத்தானே இருந்தீர்கள். உங்களுடைய கரங்களின் மென்மை இன்னும் என் உள்ளங்கையில் பொதிந்திருக்கிறது.

அதற்குள் கடவுள் உங்களை அழைத்துக் கொண்டாரா?.

ஐயா.. உணர்வுகளைச் சொல்ல வார்த்தைகளில்லை.

//ஆனால் ஒன்று நிச்சயம். இப்போதும் நான்தான் அழிந்து இருக்கிறேனே தவிர, என் கனவுகள் அழியவில்லை. அவை ஒரு நாளும் அழியா. மற்றொரு ஜீவன், இதே கனவுகளைச் சூலுற்று, பேணி வளர்த்து, அவற்றை இந்த மண்ணில் அர்ப்பணித்து அவற்றைச் செழுமைப்படுத்தித் தன்னையும் விகசித்துக் கொள்ளும். என்னிலிருந்து மற்றொருவனிடம் தொற்றும் கனவை எந்த ஆயுததாரிகளாலும் அழிக்க முடியாது. நான்தான் ராஜா என்ற எண்ணத்தில் இவர்கள் என்னை அழித்தால் நான் அழிந்து போவேன். ஆனால் நான்தான் என் கனவு என்று நினைத்து என்னை அழிக்க முற்பட்டால் ஏமாந்து போவார்கள். இதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஒரு மாட்டைக் கொல்வதற்கும் ஒரு மனிதனைக் கொல்வதற்கும் வித்தியாசம் இதுதான்.

- ஜே.ஜே. சில குறிப்புகளில் நீங்கள் சொன்னது//

என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய உங்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ஐயா... உங்கள் கனவுகளை நாங்கள் சூலுற்று, பேணி வளர்த்து இந்த மண்ணுக்கும் மொழிக்கும் அர்ப்பணம் செய்கிறோம்.

அஞ்சலிகளுடன்
சுந்தரராஜன்.

Friday, October 14, 2005

பொய்க்கூ


கோவில் வாசலில் குங்குமக் கடை
முன்னே பூ விற்கிறாள் -
விதவைப் பெண்.


image courtesy : http://www.flickr.com/photos/anita/

Thursday, October 13, 2005

பந்தயத்தில் முயலும் ஆமையும்

('இதைப் போன ஜென்மத்திலேயே படிச்சுட்டோம்' என்கிற ஆத்மாக்கள் அடுத்த வலைக்குத் தாவுக)

Image hosted by TinyPic.com
image courtesy : Disney
முயலும் ஆமையும் யார் வேகமா ஓடறாங்கன்னு பாக்க ஒரு பந்தயம் நடத்துச்சுங்களாம். துப்பாக்கித் தோட்டா மாதிரி கிளம்பின முயல் கொஞ்சதூரம் போனப்பறம் திரும்பிப் பாத்துட்டு ஆமையைக் காணாம சரி.. அது வர்றதுக்கு எப்படியும் ரொம்ப நேரமாவும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அப்றம் ஜெயிச்சு முடிச்சுக்கலாம்னு நினைச்சு மரத்தடில ஒக்காந்து கண்ணசந்து தூங்கிருச்சி. தவழ்ந்து வந்த ஆமை நிறுத்தாம அப்படியே மெதுவா முயலைத் தாண்டிப் போயி பந்தயத்துல ஜெயிச்சிருச்சி. முழிப்பு வந்ததும் முயல் தோத்துட்டோம்ங்கறத தெரிஞ்சிக்கிச்சி.


அப்டீன்னு கதையச் சொல்லி "மெதுவா ஓடினாலும் ஸ்திரமா ஓடினா போட்டில ஜெயிக்கலாம்" (Slow and Steady wins the race)ங்கற நீதியப் படிச்சிருக்கோம். ஆனா கதை இன்னும் முடியலையாம்.

நொந்து போன முயல் யோசன பண்ணிப் பாத்ததுல தோத்துப் போனதுக்கு மூல காரணங்கள் "அதீத நம்பிக்கை, அஜாக்கிரதை, சோம்பல்" தான்ங்கறத உணர்ந்துக்கிச்சாம். ஜெயிச்சிருவோம்னு மப்புல தூங்காம முயல் ஓடியிருந்தா ஆமையால ஜெயிக்கவே முடியாதுங்கற உண்மைய புரிஞ்சிக்கிட்டு திரும்ப ஆமைகிட்ட போயி இன்னொரு தடவை பந்தயத்துக்குக் கூப்பிட்டுச்சாம். ஆமையும் ஒத்துக்கிட்டு பந்தயத்தை ஆரம்பிச்சது. முயல் முழு சக்தியையும் உபயோகிச்சா ஒரே மூச்சுல பந்தய தூரத்த ஓடி முடிச்சு ஜெயிச்சிருச்சு. ஆமை வந்து சேர ரொம்ப நேரம் ஆச்சு.

இதனால நாம தெரிஞ்சுக்கிட்ட நீதி: "வேகமாவும் அதே சமயத்துல தொடர்ச்சியாவும் ஓடறது, மெதுவா ஸ்திரமா ஓடறதக் காட்டிலும் பல மடங்கு வெற்றியத் தரும்" (Fast and consistent will always beat the slow and steady. It's good to be slow and steady; but it's better to be fast and reliable)
இருங்க, கதை இன்னும் முடியலை.

தோத்துப் போன ஆமை யோசிச்சதுல இந்த மாதிரியான பந்தயக் களத்துல ஓட்டப்பந்தயத்துல முயல ஜெயிக்கவே முடியாதுங்கறது புரிஞ்சது. அதுக்கு ஒரு யோசனை தோணுச்சு. முயல் கிட்ட போயி இன்னொரு தடவ போட்டிக்கு வரயா?ன்னு கேட்டது. முயலுக்கு ஆச்சரியம். ஒத்துக்குச்சு. இந்த தடவ முந்தி ஓடின வழிய விட்டுட்டு ஆமை சொன்ன வழில ஓடிச்சுங்க ரெண்டும். முயல் படு வேகமா ஓடிச்சு. ஆனா குறுக்க ஒரு நதி ஓடறத பாத்ததும் என்ன செய்யறதுன்னு தெரியாம நின்னுடுச்சு, போட்டி முடியறதுக்கு நதியத் தாண்டி இன்னும் கொஞ்ச தூரம் போகணும். நதிக்கரைல ஒக்காந்துக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சது முயல். மெதுவா வந்து சேந்த ஆமை முயலைக் கண்டுக்காம தண்ணிக்குள்ள இறங்கி, நீந்தி அந்தப் பக்கம் போயி, மிச்ச தூரத்தையும் தாண்டி ஜெயிச்சிருச்சு.

இப்ப என்ன நீதின்னா "மொதல்ல ஒன்னோட திறமை எதுலங்கறத புரிஞ்சிக்கிட்டு அதுக்குத் தகுந்தாப்ல போட்டியோட இடத்தைத் தீர்மானிச்சுக்கோ" (First identify your core competency and then change the playing field to suit your core competency).

அட இருங்க ஸார். கதை இன்னும் முடியலை.

அந்தச் சமயத்துல முயலும் ஆமையும் நல்ல நண்பர்களா ஆயிடுச்சு. ரெண்டும் சேந்து பேசினதுல கடைசியா ஓடின போட்டிய ஒரு குழுவா ஓடிப் பாக்கலாம்னு முடிவு பண்ணி திரும்ப ஆரம்பிச்சதுங்க. ஆரம்பிச்ச இடத்துல இருந்து நதிக்கரை வரைக்கும் ஆமையை முயல் தூக்கிட்டு ஓடிச்சு. அப்றம் முயலை ஓட்டுல ஏத்திக்கிட்டு ஆமை அந்தக் கரைக்கு நீந்திக் கொண்டு போய் விடவும் திரும்பவும் ஆமையைத் தூக்கிக்கிட்டு முயல் பந்தய தூரத்த ஓடி முடிச்சது. ரெண்டுக்கும், அதுக்கு முன்னாடி ஒருத்தரையொருத்தர் ஜெயிச்சப்ப பட்ட சந்தோஷத்த விட பலமடங்கு சந்தோஷம் இப்போ.

கட்டக்கடைசீயா என்ன சொல்ல வர்றாங்கன்னா "தனிப்பட்ட திறமைகள் மிகவும் நல்லதே. அப்படிப்பட்ட தனித் திறமைகளை ஒன்றிணைத்துக் குழுவாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இல்லாத பட்சத்தில் நம்மைவிட வேறு வகையில் வேறு யாராவது திறமையாகச் செயல்பட்டு, நமது செயல்திறன் குறைந்து போகும் சாத்தியங்கள் அதிகம்". ("It's good to be individually brilliant and to have strong core competencies; but unless you're able to work in a team and harness each other's core competencies, you'll always perform below par because there will always be situations at which you'll do poorly and someone else does well. )
அம்புட்டுத்தான்.

என்னமோ போங்கப்பா. எனக்கு 'முயலாமை'ன்னாலே ஆகாது.

Wednesday, October 12, 2005

பிணக்குவியல் மீது நிற்கும் பிடிவாதச் சாத்தான்கள்

இந்தப் பக்கத்தில் இந்திய மீட்புக் குழுவினர் கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் பகுதிகள் அனைத்தையும் அடைந்து வேகமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாக் ஆக்கிரமிப்புப் பகுதியில்?

நடுக்கியெடுக்கும் குளிர். காத்துக்கொள்ள போர்வைகள் கிடையாது. இருக்க இருந்த இடங்கள் அழிந்தன. உணவில்லை. குடிக்கத் தண்ணீரில்லை. பிணங்கள் இடர்பாடுகளின் அடியில். காயங்களுக்கு மருந்துகளில்லை. உதவி இன்னும் கிடைக்கவில்லை. லட்சக்கணக்கான மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
image source : www.bbcnews.co.uk
என்னதான் அரசியல் நிலைப்பாடுகள், பழம்பகை என்று இருந்தாலும் இந்த மாதிரி பேரழிவு சமயத்தில் கூட அரசியலை முன் வைத்து "மீட்புப் பணியில் இணைந்து செயல்படலாம்" என்று ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியாவின் உதவியை நிராகரித்த பாகிஸ்தானின் தலைமையைப் பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை.
ஒரு பக்கம் "உதவுங்கள்" என்று உலக நாடுகளிடம் கோரிக்கை. மற்றொரு பக்கம், இணைந்து செயல்படும் சாத்தியம் இல்லை என்று அறிவிப்பு. பாதிப்பு எல்லைக்கருகில் - காஷ்மீரில் - இருபக்கமும். அந்தப் பக்கம் மிக மிக அதிக பாதிப்பு. இங்கிருந்து எளிதாக ஹெலிகாப்டர்களையும் மற்ற உதவிகளையும் இந்தியா செய்ய முடியும். தயாராக இருக்கிறது. ஆனால் ஏற்கத்தான் மனதில்லை.
"எல்லைக் கோட்டருகில் மக்கள் யாரும் வசிக்கவில்லை" என்ற சப்பைக்கட்டு. வீம்புக்காக "அவர்கள் எங்களுக்குச் செய்வதாகச் சொன்ன உதவிகளை அவர்களுக்கு நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். எங்களை எந்நேரமும் இந்தியா இதற்காக அணுகலாம்".

பிணக்குவியல் மீது நின்று கொண்டு பிடிவாதத்தைத் தளர்த்தாத சாத்தான்கள். விலை - அப்பாவி காஷ்மீரிகள். வெட்கக்கேடு.

இந்த மாதிரித் தலைவர்களை மட்டும் விழுங்கும் பூகம்பம் வந்தால் நன்றாக இருக்கும்.

Saturday, October 08, 2005

*** இலையுதிர் காலம் ***

'என்னவோ வித்தியாசமா இருக்கே' என்று விஷயம் பிடிபடாமல் தலையைச் சொரிந்து யோசித்துக்கொண்டே இருந்தேன். 'அப்பா இங்க பாருங்க மஞ்சள் மரம்' என்று துர்கா சொன்னபோதுதான் வித்தியாசம் என்னவென்று உறைத்தது.

போனவாரம் வரைகூட பச்சையாக இருந்த அந்த மரத்தின் இலைகள் இப்போது மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தன. பச்சை பசேலென்று இருந்த சுற்றுவட்டாரம் ஆங்காங்கே மஞ்சளும் ஆரஞ்சும் சிவப்புமாக இலைகள் நிறம் மாறி கலவையாக மாறிவிட்டது. கோடைக் காலத்திற்கும் பனிக்காலத்திற்கும் இடைப்பட்ட இலையுதிர்காலம் துவங்கிவிட்டது.

பச்சை இலைகளெல்லாம் மாயாஜாலம் போல நிறம் மாறுகின்றன. ஒருவித செம்மஞ்சளாக தீப்பிடித்தாற்போல பிரத்யேக நிறத்துடன் கொள்ளை அழகாக இருக்கின்றன இலைகள். மரத்துக்கே வித்தியாசமான அழகு வந்து அந்த இடமே அழகாகக் காட்சியளிக்கிறது.

கடந்த ஆறுவருடங்களாக வருடம் முழுதும் வெயிலான மத்திய கிழக்கிலிருந்து தினம் தினம்.. ஏன் மணிக்கு மணி பருவம் மாறிக்கொண்டிருக்கும் அமெரிக்காவிற்கு வந்ததில் வாழ்க்கையைச் சற்று பின்னோக்கி சில வருடங்களுக்குத் தள்ளி வைத்தது போல இருக்கிறது. மஸ்கட்டில் மதியச் சாப்பாட்டிற்கு வீட்டிற்குச் சென்றால், வண்டியின் ஸ்டியரிங்கில் கையே வைக்க முடியாமல் கொதிக்கும். கைக்குட்டையே போட்டுப் பிடித்துக் கொண்டு குளிர் சாதனத்தை முழுவீச்சில் இயக்கினாலும் வீட்டை அடையும் வரை அனல்காற்று பொசுக்கி எடுத்துவிடும். நாசித் துவாரங்கள் உலர்ந்து போய் நா வறண்டு 24 மணிநேரமும் குளிர்சாதனம் ஓடிக் கொண்டிருக்கும் வீட்டுக்குள் நுழைந்ததும்தான் 'அப்பாடா' என்று இருக்கும். உடல் அயர்ந்து போகும்.

பத்து வருடங்களுக்கு முன்பு கூட நல்ல மழை பெய்துகொண்டு காவிரியும் வைகையும் கொஞ்சமாவது தண்ணீரோடு ஓடிக்கொண்டுதான் இருந்தன. பசுமை ஒரேயடியாகக் காணாமல் போகாமல் பெங்களூர் மகாத்மா காந்தி சாலையில் பெரிய மரங்களெல்லாம் நிழல் தந்தும் குளிர்வித்துக்கொண்டும்தான் இருந்தன. மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலை கண்ணுக்குக் குளிர்ச்சியாக பச்சைப் பசேலென்று இருக்கும். மழைக்காலங்களில் வாய்கால்கள் நிரம்பி சில இடங்களில் சாலையின் குறுக்காகவே தண்ணீர் ஓடியதை அனுபவித்துத்தான் இருக்கிறேன்.
கொஞ்சம் கொஞ்சமாக நாம் இயற்கையை தேய்த்துக்கொண்டே இருப்பதை எல்லா இடங்களிலும் நன்றாகவே உணர முடிகிறது.

இங்கு எல்லாமே மரவீடுகள். மரங்கள் நிறைய இருப்பதால் மரவீடு கட்டுவது கல் வைத்துக் கட்டுவதைவிட மலிவாம். அது சரி. மலிவு என்பதற்கு அமெரிக்கர்கள் அகராதியில் அர்த்தமே வேறு போல.

உத்தரகோளார்த்தம் (அட.. Northern Hemisphere ஐயா!) முழுவதும் பகற்பொழுது சுருங்கிக் கொண்டே வர, தட்பவெப்பநிலையிலும் சூடு குறைந்து கொண்டே வர, மரங்கள் பனிக் காலத்துக்குத் தயாராகத் தொடங்கிவிடுகின்றன. அவற்றின் பிரதான வேலை பாம்பு சட்டையை உரித்துப் போடுவதைப் போல, மொத்த இலைகளையும் உதிர்த்து விட்டு மொட்டை மரங்களாகி விடுவது. இலையுதிர்த்தல் என்றால் ஜகன் மோகினி குலுக்கியது போல குலுங்கிக்கொண்டு உதிர்ப்பதில்லை. இலைகளெல்லாம் வர்ண ஜாலங்கள் காட்டுகின்றன. பச்சையிலைகள் எல்லாம் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று மாறுவதில் மொத்த இடமும் வர்ணங்களின் ரகளைதான்.

இலைகள் மரங்களுக்கு இயற்கை அளித்துள்ள உணவு உற்பத்தித் தொழிற்சாலைகள். மரங்கள் நீரை வேர்கள் மூலமாகவும், காற்றிலிருந்து கரியமிலவாயுவையும் உட்கொள்கின்றன. இப்படிக் கிடைத்த நீரையும் க.மி.வாயுவையும் சூரியஒளியைக் கொண்டு சர்க்கரைச் சத்தாக மாற்றிக் கொள்கின்றன. இந்தச் சர்க்கரைச் சத்தைச் சாப்பிட்டே வளர்வதும், பூப்பதும், காய்ப்பதும், விதைகளை உருவாக்குவதும், நம் நாயக நாயகிகள் மரத்தைச் சுற்றி ஆடுவதும் நடக்கிறது. உன்னால் முடியும் தம்பியில் சீதா மரத்தடியில் படுத்திருக்க பூமழை பொழியுமே.

நீரையும், க.மி.வாயுவையும் ஒளியைக்கொண்டு கலந்துகட்டும் நிகழ்வை Photosynthesis (ஒளிக்கலவை என்று சொல்வோமா?) என்று சொல்கிறார்கள். இந்த ஒளிக்கலவையை நிகழ்த்துவது இலைகளிலிருக்கும் Chlorophyll என்ற நிறமி. இந்த நிறமியே இலைகளுக்கு பச்சை நிறத்தைக் கொடுக்கிறது.

இலைகளில் காணப்படும் இரண்டாவது நிறமி carotene. இது நீலத்தையும் பச்சையையும் உறிஞ்சிவிட்டு, மஞ்சளைப் பிரதிபலிக்கிறது. Chlorophyll ம் carotene-ம் ஒரே இலையில் கூட்டு சேர்ந்தால் அவை சிவப்பையும், நீலப்பச்சையையும், நீலத்தையும் காலிசெய்துவிடுகின்றன. இலையில் விழும் ஒளி பிரதிபலிப்பது பச்சையை. caroteneனானது Chlorophyll க்கு ஒரு அடியாள் போலத்தான் செயல்படுகிறது. அது உறியும் ஒளிச்சக்தியை Chlorophyll க்குக் கடத்தி விடுகிறது. அடியாள் என்பதால் carotene வலுவானதாக இருக்கிறது. Chlorophyll அழுகிப் போனாலும் carotene தேமேயென்று இலைகளில் நிலைத்திருக்கும். Chlorophyll இல்லாத carotene இலையை மஞ்சள் நிறமாக ஆக்கிவிடுகிறது.

மூன்றாவது வகை நிறமியானது anthocyanins. இது நீலம், நீலப்பச்சை, பச்சை ஆகிய நிறங்களை விழுங்கிவிடுவதால் காட்டுவது சிவப்பு நிறத்தை. இலைத் திசுக்களின் அமிலத்தன்மையின் அளவைப் பொருத்து, சிவப்பைக் கூடுதலாகக் காட்டும்; இல்லாவிட்டால் ஒரு மாதிரி அடர் ஊதாவைக் காட்டும். anthocyanins தான் ஆப்பிளின் சிவப்புத் தோலுக்கும், திராட்சையின் நிறத்திற்கும் காரணம். இலைத்திசுக்களிலிருக்கும் சர்க்கரையும், புரதங்களும் சேர்ந்து உருவாவது anthocyanins. அது உருவாவதற்குத் தேவையானது அதிக அளவு சர்க்கரையும் ஒளியும். அதனால் தான் ஒளிபடும் ஆப்பிள் பழங்கள் சிவப்பாகவும், நிழலில் வளர்பவை பச்சையாகவும் இருக்கின்றன.

கோடை முடிந்ததும், சூரிய ஒளியும் வெம்மையும் குறைவதை வைத்து மரங்கள் குளிர்காலம் வரப்போவதை 'அறிந்து' கொள்கின்றன. குளிர்காலத்தில் 'உணவு தயாரிக்க'ப் போதுமான வெளிச்சமும் தண்ணீரும் கிடைக்காதென்பதால், மரங்கள் ஓய்வுக்குத் தயாராகின்றன. 'உணவுத் தொழிற்சாலைகளை' நிறுத்தவும் தொடங்குகின்றன. Chlorophyll குறைவின் காரணமாக அதுநாள் வரை அமுங்கிக் கிடந்த மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் வெளித் தெரிய இலைகளின் நிற மாற்றம்.

நிற மாற்றத்தால் இலையுதிர்காலமே களைகட்டி வர்ணங்கள் இறைக்கப்பட்ட இடம்போல சுற்றுப் புறமே கண்ணுக்கு இனிதாக மாறுகிறது.

அலைபாயுதே-யில் வரும் "பச்சை நிறமே.. பச்சை நிறமே" நினைவில் வந்து போகிறது.

நியூ இங்கிலாந்து, மிச்சிகன், விஸ்கான்ஸின் ஆகிய மூன்று பிரதேசங்களிலும் இந்த வர்ண ஜாலங்கள் ஏகமாக விளையாடுவதால் இதை ரசிக்கவே மக்கள் படையெடுத்து வருகின்றனராம். எந்தெந்த இடங்களில் நிறமாற்றங்கள் அதிக அளவு இருக்கின்றன என்று செய்தி சொல்வதற்காகவே நேரடித் தொலைப்பேசி எண்களும் உண்டு. இவ்வகைப் பயணங்களுக்கு வருடாவருடம் மக்கள் செலவழிப்பது முன்னூறு கோடி டாலர்களுக்கு மேலாம். அம்மாடி.!

வாரயிறுதியில் இப்படி நிறம் மாறிய இலைகளின் அழகைப் பார்ப்பதற்கென்றே மூட்டைகட்டிக்கொண்டு வெளியே கிளம்பிவிடுகிறார்கள். நாளைக்கு நானும் எங்கேயாவது ஊருக்கு வெளியே சென்று பார்க்கவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். முன்பெல்லாம் இலையுதிர்காலங்களில் இலைச்சருகுகள் சரசரக்க மாந்தோப்பு தென்னந்தோப்புகளில் ஓடி விளையாடியபோதும், உலர்ந்த இலைகளை எடுத்து உடைத்து விளையாடியபோதும், ஆலிலைகளையும் அரசிலைகளையும் அள்ளி விளையாடியபோதும், களத்து மேட்டிலிருந்து பார்க்கும் போது அறுவடை முடிந்த வயல்வெளிகள் அறுக்கப்பட்ட மஞ்சள் புற்களோடு இருக்க, தங்கத்தால் செய்ததோ என்று சந்தேகிக்க வைத்த நெற்குவியல்களில் குதித்து விளையாடியபோதும் இப்படி 'இலையுதிர்காலங்களை' கவனிக்க வேண்டும் என்று தோன்றாமல் போய்விட்டதே என்று ஏக்கமாக இருக்கிறது.

அருகிலிருக்கும் போது சிலவற்றின் அருமையை உணராது, தொலைவில் வந்ததும் புலம்புவது வெ.நா.வாழ் இந்தியர்களின் கடவுச் சீட்டின் கடைசிப் பக்கத்தில் எழுதியிருக்கும் விதி போல. இவற்றில் அம்மா, அப்பா, ஆட்டுக்குட்டியிலிருந்து தலைமேல் விழும் இந்த இலைகளும் அடங்கும்.

***

பி.கு. படங்களைத் தேடித் தந்த கூகுளுக்கு நன்றி