Friday, November 04, 2005

சிரியா - 3


டமாஸ்கஸ் அலிப்போவைவிட பல மடங்கு சந்தடியாக, நெருக்கடியாக இருந்தது. சாலையோரம் கார்ப்பெட்டுகளை விரித்து ஆங்காங்கே விற்கிறார்கள். நம்மூரில் காஷ்மீர் கடைகள் திடீரென்று தோன்றுமே அது போல.

ஒரு விதத்தில் அலிப்போவை ஒப்பிடும்போது டமாஸ்கஸ் ஏமாற்றமளித்தது என்றே சொல்ல வேண்டும். ஊரெங்கும் சாலைகளைத் தோண்டிப்போட்டுச் செப்பனிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் விமானநிலையம் செல்லும் சாலை மட்டும் சீராக, சுத்தமாக இருந்தது. இல்லா விட்டால் சுற்றுலாவுக்கு ஒருவரும் வரமாட்டார்களே!

விமானநிலைய நுழைவு வரி கட்டவேண்டும் என்று தெரியாமல் போர்டிங் கார்ட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால் இம்மிக்ரேஷனில் நிறுத்தித் திருப்பி அனுப்பினார்கள். வரி கட்டும் கவுண்ட்டர் நிலையத்தின் நுழைவுவாயிலில் இருந்தது. ஆனால் வெளியே வருவது அவ்வளவு எளிதாக இல்லை. விட மறுத்தார்கள். ஒருவழியாக அவர்களுக்குப் புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கையிலிருந்ததோ டாலர். சிரியன் பவுண்ட் இருநூறு வரியாகக் கட்டவேண்டும். சிரியன் பவுண்ட் கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பில் இருக்கிறது. ஒரு டாலருக்கு ஐம்பது சி.பவுண்ட்.
நான் அல்லாடுவதைப் பார்த்த கன்வேயர் ஆள் என்னை ஓரங்கட்டி சட்டையிலிருந்து கத்தை கத்தையாக பலவித வெளிநாட்டுக் கரன்ஸிகளை எடுக்க, எனக்கு நம்மூர் விமான நிலையங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் நடமாடும் மணி (money) எக்சேஞ்ச் மனிதர்கள் நினைவுக்கு வந்தார்கள். அவரிடம் முகம்கொடுக்க மறுத்து, தப்பித்து நிலையத்தினுள்ளே இருந்த எக்சேஞ்ச் ஒன்றைக் கண்டுபிடித்து சிரியன் பவுண்ட் மாற்றிக்கொண்டு அவசர அவசரமாக வரிகட்டி உள்ளே நுழைந்து காத்திருக்கும் அறையில் அமர்கையில் 'அப்பாடா' என்று இருந்தது.

அலிப்போவிலிருந்து கிளம்பும்போது கிடைத்த எனது பெட்டியை அப்படியே பிரிக்காமல் டமாஸ்கஸ்ஸில் 'த்ரூ-டு-மஸ்கட்' என்று கன்வேயரில் தள்ளினேன். ஏனென்றால் டமாகஸ்ஸிலிருந்து துபாய்க்கும், துபாயிலிருந்து மஸ்கட்டுக்கும் செல்வது எமிரேட்ஸ் ஏர்லைன் விமானங்களில் என்பதால் சொதப்பல் நடக்க வாய்ப்பில்லை.

டமாஸ்கஸ்ஸிலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக, எக்காரணங்களும் சொல்லப்படாமல், துபாய் விமானம் கிளம்பி துபாயை அடையும்போது இரவு ஒன்பதே முக்கால். அங்கிருந்து பத்தரைக்கு மஸ்கட் விமானம். நிலையத்தின் இன்னொரு கோடிக்கு ஓடி- வரி விலக்களிக்கப்பட்ட கடைகளில் சிகரெட்டையும், சாராயத்தையும் தவிர வேறு எதையும் யாரும் வாங்குவதாகத் தெரியவில்லை- குழந்தைகளுக்குச் சாக்லெட் வாங்கிக்கொண்டு மஸ்கட் செக்-இன் செய்யும்போது கவனமாக 'பொட்டிய மாத்திட்டீங்களாப்பா? போகும்போது ரொம்ப படுத்திட்டீங்க' என்று கேட்டுக்கொண்டேன். புஷ்டியான புன்னகையுடன் 'சிரமத்திற்கு மன்னிக்கவும். அது எங்கள் தவறல்ல. சிரியன் விமான நிறுவனத்தின் தவறு. டமாஸ்கஸ்ஸிலிருந்து அவர்கள் விமானத்திற்கு (அலிப்போவிற்கு) மாற்றி எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். எங்களிடம் அந்தப் பிரச்சினை இல்லை. நீங்கள் அங்கிருந்து வந்ததும், இப்போது பயணம் செய்யப்போவதும் எமிரேட்ஸ் ஏர்லைன் என்பதால் எல்லாம் சுபம்தான். உள்ளே சென்று அமருங்கள்' என்று சொன்னதும், நிம்மதியடைந்து உள்ளே சென்று கலீஜ் டைம்ஸ்ஸில் ஆழ்ந்து போனேன்.

மஸ்கட்டுக்கு பதினொன்றரைக்கு வந்தடைந்தது விமானம். கிட்டத்தட்ட அதே நேரத்தில் நான்கைந்து விமானங்கள் வந்திருந்ததால், கடவுச்சீட்டுச் சோதனை செய்யும் இடத்தில் பெரிய கூட்டம். அதைத் தாண்டவே ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. வரிசையில் எனக்குப் பின் யாருமில்லாது கிட்டத்தட்ட கடைசிப் பயணியாக இருந்தேன்.

மஸ்கட் ட்யூட்டி ஃப்ரீயில் சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. சும்மா பார்வையிட்டுவிட்டு பெட்டியை எடுத்துக்கொள்வதற்காகக் கன்வேயருக்குச் சென்றேன் ஒரு ட்ராலியுடன். அணைத்து வைத்திருந்த கைத்தொலைபேசியை இயக்கிக்கொண்டதும் கம்பெனி காரின் ஓட்டுனர் அழைத்து ஒரு மணிநேரமாக வருகையில் காத்திருப்பதாகச் சொல்ல இரட்டிப்பு மகிழ்ச்சி. தூக்கம் வேறு கண்ணைச் சுழற்றியது.சீக்கிரம் வீடு சென்று சேர்ந்து குழந்தைகளையும் மனைவியையும் பார்க்கவேண்டும் என்ற உந்துதலில் பெட்டிகளை எடுக்க ட்ராலியைத் தள்ளி விரைந்து சென்றேன்
.
கன்வேயரின் அருகே பயணிகளுக்கு உதவிக்கொண்டிருந்த அந்த ஓமானி 'அஸ்ஸலாமு அலேக்கும்' என்று முகமன் தெரிவித்துவிட்டு கைகளைக் குறுக்காக வீசி 'கலாஸ்' என்றுவிட்டு என் பதிலுக்குக் காத்திராமல் சென்றார்.

முற்றும்.

நன்றி: மரத்தடி.காம்

2 comments:

சுபமூகா said...

கடைசி பத்தி உங்கள் அதீதக் கற்பனை என்று தோன்றுகிறது ;-)

Sundar Padmanaban said...

//கடைசி பத்தி உங்கள் அதீதக் கற்பனை என்று தோன்றுகிறது//

சுபமூகா. டமாஸ்கஸ்ஸிலிருந்து கிளம்பும்போதே ஒரு மணி நேர தாமதம். துபாயில் மஸ்கட் விமானத்தைப் பிடிக்க 45 நிமிடங்களே இருந்தன; இறுதி அழைப்பும் விட்டுவிட அவசர அவசரமாய் ஓடிப்போய் ஏறினேன். ஆனால் அவர்கள் பெட்டிகளை மாற்ற அவகாசம் இல்லாததால் மாற்றவில்லை. சிப்பந்திகள் விமானத்தை நேரத்துக்குக் கிளப்புவதிலேயே குறியாக இருந்தபடியால் பெட்டிகள் மாற்ற முடியாமை குறித்து அவர்கள் கவலைப் படவில்லை. மஸ்கட் வந்ததும் பெட்டிகள் வரவில்லை என்று தெரிந்ததும் கடுப்புடன் அதிகாரிகளைக் கேட்டதில் அவர்கள் சொன்ன பதிலும் கால அவகாசம் போதாமையே. மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலையில் துபாயிலிருந்து மஸ்கட் வந்த முதல் விமானத்தில் பெட்டிகள் வர; அதை வீட்டில் கொண்டுவந்து ஒப்படைத்தார்கள். :)

ஆக மொத்தம் மஸ்கட்டில் பூட்டுப் போட்ட பெட்டிகளை திரும்பவும் மஸ்கட் வந்து சேர்ந்ததும்தான் திறந்து பார்க்க வேண்டியிருந்தது!
கற்பனை சற்றும் கலக்காத அக்மார்க் நிஜச் சம்பவம் இது. நம்புவதற்குச் சற்றுக் கடினமான விஷயம்தான்.

இதே போல நம்புவதற்குக் கடினமான செல்பேசி சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வும் இருக்கிறது. ஒரு பதிவு போடுகிறேன்.

நன்றி.

அன்புடன்
சுந்தர்.