Thursday, November 10, 2005

மச்ச



'டேய்.. இது கெளுத்தி மீனு' என்று கருஞ்சாம்பல் நிறத்தில் ஈர பளபளப்புடன் அதைத் தூக்கிக் காட்டியபோது நான் பிரமித்தேன். மீன் 'பாஹ்.. பாஹ்' என்று வாய் திறந்து மூடி; உயிருக்கு ஏங்க, நான் 'விட்ருடா.. பாவம்' என்று சொன்னது வீணாயிற்று. முத்துலிங்கம் தூண்டில் முள்ளை அதன் வாயில் நுழைத்து நெற்றியில் வெளிவரச் செய்ய, எனக்கு லேசாக நடுமூக்கினுள் வலிப்பது போன்ற ஒரு பிரமை.

தூண்டில் சுண்டி எறியப்பட்டு தண்ணீருள் நைலான் நூல் ஆழ்ந்து செல்ல, சில வினாடிகளில் அது வெடுக் வெடுக் என்று உள்ளிழுக்கப்பட்டு, முத்துலிங்கம் தூண்டிலை வெளியே இழுக்க, இப்போது கொழுத்த மீன் ஒன்று ஊசலாடிக் கொண்டிருந்தது. மீனைப் போலவே இப்போது முத்துலிங்கத்தின் கண்களும் பளபளத்தன. 'ஐ.. கெண்டை மீனு மாட்டிக்கிச்சுடோய்..' என்று குஷியாகிவிட்டான். 'வாடீ.. வா' என்று மீனைப் பார்த்துச் சொன்னான். இதே போல பையன்கள் சண்டையிட்டுப் பிரியும்போதும், முறைத்துக் கொள்ளும்போதும் 'இருடீ.. இரு.. ஒன்னய அப்பறம் கவனிச்சுக்கறேன்' என்றும் 'ஒனக்கு இருக்குடீ' என்றும் 'டீ' போட்டுப் பேசுவது வினோதம்.

இப்போது நீண்ட நேரமாகப் போக்குக் காட்டிக் கொண்டிருந்த கெண்டை மீனிடம் கடுப்பில் இருந்த முத்துலிங்கம் அது மாட்டியதில் உற்சாகமடைந்திருந்தான். கரையில் வைத்திருந்த தகர டப்பாவில் அரை டஜனுக்கும் மேல் மீன்கள், அரபு நாடுகளில் இருக்கும் நம் உழைக்கும் வர்க்கத்தினர் வசிக்கும் லேபர் கேம்ப்பைப் போலவே, இட நெருக்கடியில் கடைசி மூச்சுகளை விட்டுக்கொண்டிருக்க, இப்போது மாட்டிய கெண்டையை தூண்டிலிலிருந்து விடுவித்து டப்பாவில் போட்டுவிட்டுக் கிளம்பினான். கெண்டையின் போஷாக்கு குழம்பாகி முத்துலிங்கத்திற்குச் சென்று சேரும். முத்துலிங்கம் போஷாக்காக இருந்தான்.

அர்ஜுனா நதிக் கரையோரம் ஒரு சாண் அளவே தண்ணீர் இருந்தது. ஆற்று நடுவில் முழங்காலளவு இருந்தால் அதிகம். மதிய வெயிலுக்கு கரையோரத்தில் தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும். மீன்கள் கூட்டம் கூட்டமாக அசையாது சில வினாடிகள் இருந்து, நாங்கள் அசைந்த போதோ மேலே காகம் பறந்தாலோ சட்டென்று ஆற்றுக்குள் ஓடி விடும். கரைக்கு அப்பால் பச்சை மைதான வயல்வெளிகளில் ஆங்காங்கே நாரைகளும் கொக்குகளும் நண்டுகளுக்காக தவம் கிடந்தன. நீரளவு குறைவாகையால் மீன்கள் எளிதாகச் சிக்கும் கோடைக்காலம் அது.

யாரும் பிடிக்காவிட்டாலும், காய்ந்த ஆற்றில் மீன்களும் காய்ந்து கருவாகிக் கிடப்பதைக் கண்டிருக்கிறேன். மழைக்காலம் ஆரம்பித்து மறுபடியும் நீர்வரத்து துவங்குகையில், எங்கிருந்தோ மீன் கூட்டம் வந்துவிடும். சிப்பாய்களைப் போல் ஒழுங்கான வரிசையில். எப்போதாவது 'விலாங்கு மீன்' என்ற சொல்லப்பட்ட பாம்பு போல் நீண்ட மீன்கள் காணப்படும்.

குளத்திலோ கிணற்றிலோ, ஆற்றிலோ, கடலிலோ குளிக்கையில் அசைவில்லாது நிற்கும் தருணங்களில், பாதங்களில் மொசுமொசுவென்று மீன்கள் பொக்கைவாய்களுடன் கடிக்கும். 'கால்ல இருக்கற அழுக்க சாப்பிடுதுடா' என்பார்கள் நண்பர்கள். ஆனாலும் கூச்ச உணர்வினால் கால்களை உதறிக்கொள்வேன். மீன்களின் முத்தங்களைத் தவிர்ப்பதற்காக, கால்களை அசைத்துக்கொண்டே இருப்பதுண்டு. விவசாயக் கிணறுகளையும், குளங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் மீன்களுக்கு பெரும்பங்கு உண்டு.

குளோரின் அதிகமாக சேர்க்கப்பட்ட காலங்களில் சில கிணறுகளில் வெண்வயிற்றை வானுக்குக் காட்டி செத்து மிதக்கும் மீன்கள். முதன்முதலில் மீன் சாப்பிட்டது மதுரையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது. என் நண்பன் ராஜாங்கத்தின் வீட்டில் மீன் குழம்பு பிரமாதமாக சமைப்பார்கள். சாப்பிடும்போது குற்ற உணர்வு உறுத்தும். 'சே.. இதே சுவையில் சைவ உணவு சமைக்க முடியாதா?' என்று நினைத்துக்கொள்வேன். முதல் தடவை உண்டபோது அதிலிருந்த கூரான முட்கள் பயமுறுத்தின. ராஜாங்கம் எலும்பையைம் சதையையும் அடித்து நொறுக்கிச் சாப்பிடுகையில், நான் 'எங்கே தொண்டையில் சிக்கிவிடுமோ?' என்ற பயத்தில் முள்ளெலும்புகளைத் தனியாகப் பிரித்து பிரித்து, நாவால் நிரடிப் பார்த்து சாப்பிட்டு முடிக்கையில் மாலை நேரம் வந்துவிட்டது. அவர்கள் சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மதுரையில் அசைவ உணவுக்கா பஞ்சம்! கோனார் கடை என்ன! அண்ணா நகர் சுகுணா சிக்கன் என்ன! முனியாண்டி விலாஸ் என்ன! சாலையோர அக்கா கடைகள் என்ன! எங்கு திரும்பினாலும் நாவில் நீரூறச் செய்யும் சுவையுடன் அசைவ உணவுகள் நிறைந்து கிடக்கும் ஊர் அது.

'போன்லெஸ் சிக்கன்'-ஐ பஜ்ஜி என்று கற்பனை செய்து கொண்டு சாப்பிடுவேன்.

'மீன் நீஞ்சறது?'

'சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்கணும்'

'வாட் டு யூ மீன்?'

'ஐ மீன் வாட் ஐ மீன்'

'என்ன எழவு இது? எல்லாரும் மீன் மீன்னு பேசிண்டிருக்கா?'

மேற்சொன்ன வசனங்களும் அதிரடி நகைச்சுவைக் காட்சிகளும் இடம்பெற்ற மை.ம.கா.ராஜன் படம் நினைவுக்கு வருகிறது.

ஒரு சுபயோக தினத்தில் சாப்பிடுவதில்லை என்று முடிவெடுத்து அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி ஏழாண்டுகளாகின்றன.

மீன் உணவுகளைப் பார்த்ததும், மனக்கண்ணில், கடைசி மூச்சுக்காக 'பாஹ் பாஹ்' என்று வாய்திறந்து மூடும் மீனின் பளபளப்புக் கண்கள் நிழலாடும்.

***

2 comments:

யாத்ரீகன் said...

என்ன ஒரு பொருத்தம்...

இன்றுதான் எனக்கும் கிட்டத்திட்ட இதே போன்று ஒரு நிகழ்ச்சி...

Sundar Padmanaban said...

யாத்ரீகன், என்ன நிகழ்ச்சின்னு சொல்லுங்களேன்!

நன்றி.