Friday, November 18, 2005

கல்கி (யப்பாடி. ஒரு வழியா முடிச்சாச்சி)



'கலி முத்திடுத்துடா' என்ற வசனத்தை நூற்றுக்கணக்கான தடவைகள் கேட்டிருப்போம். அநியாயம் நடந்தாலே 'கலி முத்திருச்சு'. இரண்டாம் ஆட்டம் திரைப்படத்திற்குச் சென்றுவிட்டு வந்தால் பாட்டி 'கலி முத்திடுத்து..' என்பாள். 'முற்றிப்போக கலி என்ன பீர்க்கங்காயா?' என்று பாட்டியிடம் கிண்டலடிப்பதுண்டு.

கல்கி பகவான் கைகளை பக்கவாட்டில் விரித்து நிற்கும் புகைப்படம் இல்லாத வீடுகளில்லை அப்போது எனலாம். எங்கு நோக்கினும் எதில் நோக்கினும் கல்கி. 'கல்கி ட்ரெஸ்' என்று ஒன்றை ஜவுளிக்கடைகளில் விற்காததுதான் பாக்கி. மற்ற எல்லாம் நடந்தது. அந்த கருமையும் வெண்மையும் கலந்த நீண்ட தாடியும் சாந்தமான கண்களும் சாமியார்களுக்கு ஒரு அமைதி சொரூபத்தைக் கொடுக்கின்றன என்பது உண்மைதான். பார்க்கிற பாமரர்களும் லேசான பயத்துடன் அவர்கள் எதைச் சொன்னாலும் 'ஆமாம் சாமி' போடத் தயாராகவே இருக்கின்றனர்.

எந்தவித ஆன்மீகப் பின்னணியும் இல்லாது திடீரென்று வானத்திலிருந்து குதித்து வந்தது போல் தோன்றுவார்கள். 'அவதாரம்னா அப்படித்தான்.. சொல்லிக்கிட்டா வரும்?' என்று கேள்வி கேட்டார்கள். அதற்காக அப்படித் தோன்றியவர்கள் மீது நம்பிக்கையோ அவநம்பிக்கையோ வளர்த்துக் கொள்ளவில்லை. அவதார புருஷர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்- பல விஷயங்களுக்கு முன்னுதாரணமாக- என்பது நெசமே.

'உயிர்களிடத்து அன்பு வேணும்' என்பதை நம்மில் எவ்வளவு பேர் மதிக்கிறோம் என்று தெரியவில்லை. பெரும்பாலான இளைஞர்களுக்கும், வழுக்கை பயத்திலிருக்கும் முற்காலத்தில் இளைஞர்களாக இருந்தவர்களுக்கும் 'மயிர்களிடத்தில் அன்பு வேணும்' என்று இருக்கிறார்கள். கண்ணாடியின் முன் செலவழிக்கும் நேரத்தில் ஒரு பங்காவது சக உயிர்களிடத்து அன்பு செலுத்துவதில் செலவழிக்கிறோமா என்று யோசிக்கையில் நெருடுகிறது.

மழையில் நனைந்த காலங்கள், புல் நுனியின் பனித் துளியை ருசித்த காலங்கள், வயல் சேற்றில் முழங்கால் வரை புதைந்து நடந்த காலங்கள், மலைகளினூடே வெறுங் கால்களுடன் நடந்த காலங்கள், தன்னந் தனியே பனி பெய்த நள்ளிரவுகளில், நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துப் படுத்திருந்த காலங்கள், கரை புரண்டோடும் ஆற்று நீரில் மூழ்கி, கூழாங் கற்களைச் சேகரித்த காலங்கள், ஆற்று மணல் வெளிகளில் சிறுவர்கள் சிறு குழிகளில் சேகரித்து விட்டுப்போன மீன்களை, நீர் சூடேறிச் சாகுமுன், ஆற்றில் விட்ட காலங்கள்.. அந்தக் காலங்கள் திரும்ப வாராதா என்று ஏங்குகிறேன்.

பிரச்சினைகள் அறியாத பருவத்தில், என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த இயற்கையையும், அதன் வாசனையும் உணர்ந்து, அதனில் ஒன்றாகவும் உணர்ந்த காலங்கள் போய், வாழ்க்கையின் நடைமுறை இன்னல்களிலிருந்து தப்பிக்க நடத்தும் போராட்டத்தில் முழு நேரமும் செலவழிக்கப்பட்டுவிட, சுற்றத்தை கவனிக்க, தொடர்ந்து தவறிக் கொண்டேயிருக்கிறேன் என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு மாய உலகத்தில் எதையோ துரத்திக்கொண்டு ஓடிக் கொண்டேயிருக்கிறோம் என்றும் தோன்றுகிறது. ஒன்றிலிருந்து பனிரெண்டு வரை வரையறை செய்திருந்தாலும், கடிகார முள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. நம் வாழ்வைப் பற்றிய பெரும்பாலானோரின் கற்பனையும் அப்படியே. ஆனால் நம் வாழ்வு வரையறுக்கப்பட்ட காலகட்டத்திற்குட்பட்டது. அதைத் தாண்டி நம் உயிர்முள் ஓடமுடியாது. கலாசார, வாழ்க்கை மற்றும் வளர்ப்பு முறைகளை வைத்து சக உயிர்களிடத்து ஒவ்வொருவரின் அணுகுமுறை மாறுபடுகிறது. நற்குணங்களும் தீய சங்கதிகளும் எல்லாரிடத்திலும் விரவியிருக்கின்றன. அந்தத் தருணத்தில் தலைதூக்கும் குணாதிசயங்களின் விகிதாச்சாரம் மாறுபட்டுக் கொண்டேயிருக்கிறது- ஆயுள் முடியும் வரை.

'எனக்குள்ள தூங்கிக்கிட்டு இருக்கற மிருகத்த எழுப்பிடாத' என்று வசனம் பேசுவதெல்லாம் இந்த ரீதியில்தான் என்று படுகிறது. சாது வீரனாக மாறுவதும், வீரன் கோழையாகிப் பதுங்குவதும், சிலர் பிறந்ததிலிருந்தே கோபக் கனல் பொங்க இருப்பதும், சிலர் என்ன இன்னல் வந்தாலும் புத்தர் போன்றிருப்பதும்- ஏதோ ஒன்று- அந்த விகிதாச்சாரத்தை நிர்ணயிக்கிறது. அந்த ஒன்றும் நம்முள்ளேயே இருக்கிறது என்று நம்புகிறேன்.

அந்நியன் போன்ற பல குணாதிசயங்கள் நாம் ஒவ்வொருவரிடமும் கட்டாயம் இருக்கின்றன. சில சந்தர்ப்பம் கிடைக்கையில் வெளிப்படுகின்றன. சில அமுக்கப்பட்டு உள்ளே ஒடுங்கிக் கிடக்கின்றன. திருடன் அகப்படும்போது அவனைக் கட்டிவைத்து அடித்துக் கொல்வது உள்ளே அதுவரை தேக்கியிருந்த ஆங்காரம்; சமூகக் கோபம்; ஆற்றாமை அல்லது இயலாமை. எரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்பதும் ஒருவித குணாதிசயம். கட்ரினா பேரழிவிலோ சுனாமி பேரழிவிலோ பிணங்களிடமிருந்து பணம் பொருள்களைக் கொள்ளையடிப்பதும் ஒருவித குணாதிசயம். கலவரங்களின்போது சொத்துகளைத் தீயிட்டுக் கொளுத்தி, உடைத்துச் சேதம் செய்வதும், அடைசல் பேருந்துகளில் பெண்களின் பின்புறங்களை உரசுவதும், இணையத்தில் நிர்வாணப் படங்களைத் தனியறையில் ரசிப்பதும், ஒவ்வொருவருள்ளிருக்கும் வக்கிரங்களின் வெளிப்பாடே. வக்கிரமும் ஒருவகை குணம். வெளிப்படும் விகிதாசாரத்தை வைத்து வெளிப்படுத்துபவன் நல்லவனாகவோ கெட்டவனாகவோ பார்ப்பவர்கள் கண்ணோட்டத்தில் தீர்மானிக்கப் படுகிறான்.

ஒரு விதத்தில் பார்த்தால், நாமனைவரும் ஒவ்வொரு அவதாரம்தான். நமக்குள்ளே பல அவதாரங்கள்.

முற்றும்.

நன்றி : மரத்தடி.காம்

1 comment:

Anonymous said...

கல்கி பகவான் என்பது ஒரு சுத்த ஏமாற்றுக்கூட்டம். ஏற்ததாழ பத்து வருடங்களுக்கு முன்பு சித்தூரில் ஆசிரமம் தொடங்கினர். மக்களின் எண்ணங்களைச் சீர் செய்யும் பணி என்று கூறிக்கொண்டு பள்ளி/கல்லூர்களுக்கு குறி வைத்த்னர். சென்னை அண்ணா நகரிலும், பூந்தமல்லி அடுத்த நேமத்திலும் இவர்களுக்கு ஆலயம் அமைத்துக்கொண்டனர். சன் டி.வி. ஒரு முறை காட்டிய சிறப்பு தொகுப்பில், அவரது குறிப்பு:

1) இயல் பெயர்: விஜயகுமார்
2) இவர்து சகா: சங்கர் (சங்கர பகவத் பாதா ஆச்சாரி என்று கூறிக்கொள்கிறார். ஆனால் சமீப காலமாக, விமல கீர்த்தி என்ற பெயர் அடி படுகிறது.

சிறிது நாட்கள் குரு வேஷம் போட்டவர்கள், அப்புறம் தான் கடவுள் என்று பீற்றிக்கொண்டு கொக்கரிக்க தொடங்கியுள்ளனர். இப்போது விஜயகுமாரின் மனைவி பத்மாவதி, 'அம்மா பகவான்' என்று கை தூக்கி அருள் தருகிறாளாம். அவளைப்பார்த்தால், அஷ்ட் தரித்திர மூதேவியைப்போலவும், சிவப்பு விளக்கு பகுதியின் பெண் தாதா போலவும் உள்ளது.

மிக சமீபத்தில், தாம்பரத்தில் ஒரு பிரமாண்ட கூட்டம் ஒன்று நட்த்தின்ர்.
காவல் துறையின் கைகள் கட்டிப்போடப்பட்ட நிலையில், இந்த கள்வாணிப்ப்யல்கள் நாட்டை ச்சூறையாடும் போக்கு அதிகரிக்காத்தான் செய்யும்.