Sunday, November 13, 2005

நரசிம்மா



'அவர் தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்' என்று அதீத மேக்கப்புடன் ப்ரகலாதனாக நடிக்கும் சிறுவன் வசனம் பேச, தொந்தியும் தொப்பையுமாக செயற்கை கூந்தல், மீசை, மை அப்பிய கண்களுடன், தரையிலிருந்து முகம் நோக்கி ஃபோக்கஸ் செய்யப்பட்ட சிவப்பு விளக்கின் வெளிச்சத்தில், தண்டாயுதத்தால் அட்டைத் தூணை இரண்யன் பிளக்க, உள்ளே இருந்து புகை மூட்டத்தின் நடுவே அசைவே இல்லாத சிங்க முகத்துடன் இருமாமல் நரசிம்மர் வந்து படிகளில் அமர்ந்து இரண்யனின் வயிற்றை ஒட்டு நகங்களால் கிழித்து, சிவப்புச் சாயத்தில் நனைத்த பாவாடை நாடாவை (குடல்) உருவி வதம் செய்வார். இந்தக் கதை மிகவும் பிரபல்யம்.

மென்பொருள் உருவாக்கும் திட்டங்களுக்கு (Software Development Projects) ஒப்பந்தம் எழுதுவது ஒரு கலை. அதிலும் அரசு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில், பேரமோ அல்லது பேச்சுவார்த்தையோ கிடையாது. டெண்டர் வரும்போதே, 'இது இது வேணும்.. இது இதுக்கு இம்புட்டுத்தான் கொடுக்க முடியும்' என்று கறாராகச் சொல்லியிருப்பார்கள். இத்தகைய நிறுவனங்களுக்கு மென்பொருள் செய்ய ஆர்டர் எடுக்க முக்கிய தேவை ஒரு தலையாட்டி பொம்மையும் நிறைய லஞ்சப் பணமும்தான். இத்தகைய காண்ட்ராக்ட்டுக்களைத் தயாரித்து, பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு மனதாக கையெழுத்துப் போடுவதற்குள் மென்பொருள் விற்கும் நிறுவனத்தின் விற்பனையாளர்களுக்கு நாக்கு தள்ளிவிடும்.

பேச்சுவார்த்தை நடக்கும் சமயங்களில் வாடிக்கையாள நிறுவனத்தில் பழந் தின்று கொட்டை போட்டிருக்கும் சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த நபர்கள் திமிருடன் கொழுப்பெடுத்துப் போய் எடுத்தெறிந்து பேசும் சமயங்களில் எல்லாம் கோபம் தலைக்கேறும்; கொலை வெறி கிளம்பும்; அடக்கிக்கொண்டு பல்லை இளித்து 'கொஞ்சம் பாத்து செய்ங்க சார்' என்று வழிய வேண்டும். இதே வேலையாக இருப்பவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி வருவது உறுதி.

'ஒங்க சாஃப்ட்வேருக்கு அஞ்சு வருஷம் கியாரண்டி/வாரண்டி கொடுக்கணும்'

'முடியாது சார். ஆரக்கிளே கொடுக்கறதில்லை. ஒரு வருஷம் தான் முடியும்'

'அப்ப.. ஒரு வருஷத்துக்கு அப்புறம் பூச்சி எதுவும் (bug) வராதுன்னு எழுதிடலாமா?'

'ஒலகத்துல எந்த சாஃப்ட்வேர் வெண்டாரும் அப்படி எழுதிக் கொடுக்க மாட்டாங்க'

'என்ன சார் பேசறீங்க? நான் காசு கொடுத்து நீங்க செஞ்சு கொடுக்கற சாஃப்ட்வேருக்கு நீங்க தானே பொறுப்பாளி? ஒங்களோட இண்ட்டலிஜென்ஸுக்குத்தானே காசு? அதுக்கு பொறுப்பெடுத்துக்க முடியாதுன்னா எப்படி?'

'பொறுப்பெடுத்துக்க முடியாதுன்னு சொல்லலியே. ஒரு வருஷம் பொறுப்பெடுத்துக்கறோம். அஞ்சு வருஷம் வேணும்னாலும் பொறுப்பெடுத்துக்கறோம். காசு கூடும்'

'இது என்ன அநியாயமா இருக்கு? குறையுள்ள ப்ராடக்ட்ட கொடுத்துட்டு குறைதீர்க்க காசு கேட்டா எப்படி?'

இப்படியே வாக்குவாதம் வளர்ந்து ஒரு கட்டத்தில் அந்தப் பழம் 'நானும் மெய்ன் ப்ரேம்ல ப்ரோக்ராம் எழுதிருக்கேன். பத்து வருஷம் அய்ட்டில இருந்திருக்கேன். எனக்கும் டெக்னாலஜி தெரியும். சும்மா சாக்குபோக்கு சொல்லாதீங்க' என்று எகிறுவார்.

'அப்டிங்களா. ரொம்ப நல்லது. ஆனாலும் நாங்க வழக்கமா ஒரு வருஷம்தான் கொடுக்கறது'

'எனக்கு அஞ்சு வருஷம் வேணும். நீங்க கோட் பண்றது பண்ணுங்க. மத்த வெண்டார்ஸ் என்ன சொல்றாங்கங்கறத பாத்துட்டு முடிவு பண்ணுவோம். அப்புறம் வருத்தப்படாதீங்க' என்பார் அந்த ஆள்.

ஒப்பந்தத்தில் இருக்கும் ஆங்கில வாக்கியங்களைப் படித்தால் தலை சுற்றும். ஒரு பத்திக்கு ஒரே ஒரு வாக்கியம் இருக்கும். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியாது. ஒரு சில வார்த்தைகளில் நேரடியாகச் சொல்ல வேண்டியதை, என் தலையையும் பக்கத்தில் நிற்பவனின் தலையையும் சுற்றி எதிரே இருப்பவனின் பிடரியைத் தொடும் வண்ணம் நீஈஈஈளமாக எழுதியிருப்பார்கள். அதை படித்து முடிக்கும் முன்னே 'ஷேக்ஸ்பியர் டோல்டு' என்று தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெரும்பாலும் லீகல் டிபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் ஒப்பந்தம் எழுதுவதால், சட்டம் படித்தவர்கள் மீது கோபமாக வரும்! They make simple things very complicated என்று சக அலுவலர்கள் புலம்புவார்கள்.
அரசு காண்ட்ராக்ட்கள் அனைத்திலும் 90% பணம் கொடுத்துவிட்டு, 10% நிறுத்தி வைத்துவிடுவார்கள். இதைத் தெரிந்து கொண்டு அனைத்து நிறுவனங்களும் கொட்டேஷன் கொடுக்கும்போதே 110% விலை வைத்து தான் கொடுப்பது வழக்கம். '10% கொடுக்கலைன்னா மயிரா போச்சு' என்று இருந்து விடுவார்கள்.
ஒரு வழியாக காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு ப்ராஜக்ட் டீம் களத்தில் இறங்கும்போது தான் தெரியும். அது பெரிய சாக்கடை என்று. 'அய்யய்யோ இதற்கு பாழும் கிணற்றில் விழுந்திருக்கலாமே' என்று தோன்றும். சேல்ஸ் டீம் 'ஆர்டர் எடுத்துக் கொடுத்ததோட எங்க வேலை முடிஞ்சு போச்சு' என்று நக்கலாகச் சிரிப்பார்கள். சுடலாம் போலத் தோன்றும். ப்ராஜக்ட் தொடங்கி, சில வாரங்களும், மாதங்களும் கடந்ததும், உணர்ச்சிகளெல்லாம் மரத்துப்போய், கிட்டத்தட்ட ஒட்டகம் மாதிரி போய் வந்து கொண்டிருப்பார்கள் ப்ராஜக்ட் மெம்பர்கள். சில பேருக்கு வீட்டு ஞாபகம் வந்து வாட்டி வதைக்கும். ப்ராக்ஜக்ட் மேனேஜரை முற்றுகையிட்டு விடுமுறை கேட்பார்கள். ப்ராஜக்ட் நடுவில் யாராவது விடுமுறை கேட்டாலே உஷாராகி விடுவார் அவர். அப்படியும் என்னன்னவோ தகிடுதத்தம் பண்ணி எமெர்ஜன்ஸி லீவு எடுத்துக்கொண்டு செல்பவர்கள் அப்படியே முங்கி விடுவார்கள்- சிறையிலிருந்து விடுதலை கிடைத்த உணர்வுடன்!
மூன்று மாதங்களில் முடிக்க வேண்டிய சில ப்ராஜக்டுகள் ஐந்து வருடங்களாக இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன சில நிறுவனங்களில். 'ஈரைப் பேனாக்கி.. பேனை யானையாக்கும்' வித்தையில் கில்லாடிகளான வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்றால், யானையைப் பேனாக்கி பேனை ஈராக்கி கடைசியில் கடுகளவு கொடுக்கும் சில விற்பனை எத்தர்களும் இருக்கிறார்கள். இருவரில் யாராவது ஒருவர் இளிச்சவாயர்களாக இருந்து தொலைப்பது விதி.! இருவரும் எத்தர்களாக இருக்கும் பட்சத்தில், ப்ராஜக்ட் முடிவது என்பது பிரபஞ்சத்தின் எல்லையைப் பார்ப்பது போல்தான்.
இருக்கும் கடுப்பையெல்லாம் சேர்த்து வைத்து, லைவ் ரன் முடிந்து சில மாதங்களில் ஒளப்படியாகும்படி சில ஸ்க்ரிப்ட்டுகளை ஓட வைத்துவிட்டு வந்துவிடுவார்கள் (கஸ்டமர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பக் காரர்கள் இல்லாத செளகரியத்தில்!).
திடீரென்று ஒரு காலை வேளையில் சிஸ்டம் புட்டுக்கொள்ளும் போது தொலைபேசிகள் பறக்கும். 'இதோ வந்துர்ரோம்' என்று ஒருவாரமாவது இழுத்தடித்து அப்புறம் போய் சரி செய்து கொடுப்பார்கள். 'அடடா. ப்ராஜக்ட் காண்ட்ராக்ட்-ல அவ்ளோ கேர்ஃபுல்லா இருந்துட்டு, போஸ்ட் இம்ப்ளிமெண்டேஷன் காண்ட்ராக்ட்ல கோட்டை விட்டு விட்டோமே' என்று அவர்களின் கொள்முதல் மேலாளர் வயிறெரிந்து போவதைப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார்கள்.
நீதி: 'நீ என்னதான் சாமர்த்தியமா வரம் வாங்கிருந்தாலும்; ஒனக்கும் ஆப்பு இருக்கு மச்சி'
(தொடரும்)

4 comments:

சிவா said...

நடக்கும் கூத்துக்களை நன்றாக சொல்லிருக்கீங்க சுந்தர்.

Anonymous said...

அங்கேயும் பாடுதானா? நான் என்னவோ கம்பெனி தருகிற மென் பொருளை ஸ்டைலா கோட் சூட் போட்டுக் கொண்டு போய் அலுங்காமல் கிளையண்ட் இடத்தில் லோட் பண்ணி விட்டு வரும் வேலை என நினைத்துக் கொண்டிருந்தேன்.

G.Ragavan said...

சுந்தர்......எங்க கம்பெனியில் ஒரு புராஜெக்ட் இப்படித்தான் ஓடிக்கிட்டு இருக்கு. நீங்க சொல்றதயெல்லாம் படிக்கும் போது அந்த புராஜெக்ட்ல நடக்குறதெல்லாம் நினைவிற்கு வருகிறது.

Sundar Padmanaban said...

//அங்கேயும் பாடுதானா?//

//எங்க கம்பெனியில் ஒரு புராஜெக்ட் இப்படித்தான் ஓடிக்கிட்டு இருக்கு//

ஒய்யாரக் கொண்டையாம். உள்ளே பார்த்தால் ஈறும் பேனுமாம்-ங்கற பழமொழி இந்த தகவல் தொழில்நுட்பத் துறைக்கு நன்கு பொருந்தும். Most volunerable-னும் சொல்லலாம். இருந்தாலும் 'செய்யும் தொழிலே தெய்வம்'ங்கறதையும் மனசுல வச்சுக்கிட்டு, கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்துகொண்டு கல்லெறியக்கூடாதுங்கறதையும் மனசுல வச்சுக்கிட்டு, ரொம்பவும் தோண்டாம விடறேன். :))

ஓய்வு பெற்ற பின் பெரிய நாவல் எழுதறதா உத்தேசம்!!! :))