Tuesday, November 01, 2005

Daylight Savings


போன வெள்ளிக்கிழமை சாயங்காலம் அலுவலகத்திலருந்து வீட்டுக்குப் போனதும் வழக்கம்போல பொண்ணுகிட்ட என்னன்ன வீட்டுப்பாடம் கொடுத்துருக்காங்கன்னு கேட்டேன் (பின்ன..ஹோம்வொர்க் நான் செய்யலைன்னா மிஸ் திட்டுவாங்க!). ரெண்டு கேள்வி கேட்ருந்தாங்க.

1. Assume you have a friend visiting from another planet, explain why we turn our clock back by an hour this week-end
2. Given a choice, would you like to cancel turning the clock? What do you think are the benefits and disadvantages of daylight savings?

இது வரைக்கும் ஒழுங்கா ஏதோ கணக்குல வீட்டுப் பாடம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. நம்ம தான் ஸ்கூல்ல கணக்குன்னாலேயே ஆமணக்குன்னு ஓடிட்டோமே. இப்ப பொண்ணு மூலமாவாவது கணக்கு கத்துக்கலாம்னு வீட்டுப்பாடத்தை நெதமும் செஞ்சு கத்துக்கிட்டு இருக்கேன். திடீர்னு இப்படி டேலைட் சேவிங்-ன்னா.....

கூகுளே சரணம்னு அரைமணி நேரம் தேடிப் பாத்து - இங்க ஏப்ரல் மாசம் முதல் ஞாயித்துக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கடிகாரத்துல ஒரு மணி நேரம் கூட்டி வச்சுருவாங்களாம். அக்டோபர்ல கடைசி ஞாயித்துக் கிழமை காலைல 2 மணியாகும்போது ஒரு மணி நேரம் பின்னாடி திருப்பி வச்சுருவாங்களாம் - அப்டீன்னு கண்டுபிடிச்சேன்.

சரிதான்னு பொண்ணுக்கிட்ட முடிஞ்சவரைக்கும் விளக்கிச் சொல்லி, பதிலை எழுதவச்சுட்டுத் தூங்கப் பண்ணியேச்சு. என்ன பண்றது. அது இப்பத்தான் நேரம் பாக்கவே கத்துக்கிட்டு இருக்கு. நிமிசத்தைச் சரியா சொல்லிடும். ஆனா இன்னும் சின்ன முள்ளு பாத்து மணி சொல்றதுல குழப்பம் இருக்கு. முள்ளு ஆறைத் தாண்டிட்டா அது 06:45-ஐ 'ஏழு நாப்பத்தஞ்சு'ன்னு சொல்லுது. இதுல டேலைட் சேவிங்னு எனக்கே புரியாத விஷயத்தைப் புரிஞ்சுக்கச் சொன்னா அது என்ன பண்ணும் பாவம்.

வீட்டுக்காரம்மாட்டயும் இதப் பத்திச் சொல்ல அவங்களுக்கும் என்ன மாரியே ஒண்ணும் புரியலை. 'எதுக்கு?'ன்னு கேட்டாங்க. 'எதுக்கோ.. ஏப்ரல்ல ஆரம்பிச்சிட்டாய்ங்க.. இப்ப முடிக்கணும். அவ்ளோதான்'ன்னு சொல்லிட்டு சனிக்கிழமை ராத்திரி தூங்கப் போனேன்.

அவுங்க 'ரெண்டு மணிக்கு அலாரம் வைக்கணுமா?'

'அய்யோ வேணாம்மா. நாளைக்கு லீவுதானே. மெள்ள எந்திரிச்சு மாத்திக்கலாம்'

'மாத்தலைன்னா எதும் பிரச்சினை இல்லையே?'

'ஒண்ணும் பிரச்சினை இல்லை'

மறுநா காலைல முழிப்பு வந்ததும் டைம்பீஸ்ல நேரம் பாத்தா கரைக்ட்டா ஆறரை. மனசுக்குள்ள 'இப்ப ஆக்சுவலா மணி அஞ்சரைன்னு இருக்கணும். இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக் கிடப்பமே'ன்னு நெனச்சுக்கிட்டேன். 'வார நடுவுல இந்த நேரம் மாத்தறதைச் செய்யக் கூடாதா.. ஒரு மணி நேரம் கழிச்சு ஆபிஸ்க்குப் போலாமே'ன்னும் நெனச்சுக்கிட்டேன்.

ஒரு வழியா எந்திருச்சிப் பாத்தா கேபிள் பாக்ஸ்ல அதுவே நேரம் மாறிருக்கு. கைப்பேசிலயும் நேரம் மாறிருக்கு. கணிணியைத் தொறந்தா அதுலயும் நேரம் மாறித்தான் இருக்கு. எல்லாச் சானல்லயும் ஒண்ணும் நடக்காதமாரி நிகழ்ச்சிகளை ஓட்டிக்கிட்டு இருக்காய்ங்க.

சரின்னு சுவர்க் கடிகாரத்துலயும், மை.ஓவன்லயும், கார்லயும், டைம் பீஸ்லயும் நேரத்தை ஒரு மணி நேரம் பின்னாடி தள்ளி வச்சேன். என்ன காலைல ஏழரைக்குப் பசிக்க ஆரம்பிச்சிடுச்சு. ராத்திரி பத்து மணிக்கு தூக்கம் கண்ணச் சுத்துது!

இப்பப் பாருங்க திங்கக்கெழமை சாயங்காலம் நாலரை ஆவுது. அதுக்குள்ள வெளில இருட்டிக்கிட்டு வருது. முந்தி மாதிரி இருந்திருந்தா மணி அஞ்சரை ஆயிருக்கும். நானும் வீட்டுக்கு போயிருப்பேன்ல.

இருக்கறதே இருவத்தி நாலு மணி நேரம்தான். இதுல என்னத்த டேலைட் சேவிங்கு? சும்மா முன்னயும் பின்னயும் திருப்பி வச்சிக்கிட்டு.

எப்படியும் இருவத்தி நாலு மணி நேரம்தானே?

இதப் பாக்கறப்ப ஞாபகத்துக்கு வந்த சில விஷயங்கள்:

ஊர்ல அப்பா வேலைக்குப் போய்க்கிட்டு இருந்த கால கட்டத்துல கடிகாரத்துல அரைமணி நேரம் கூடுதலா வச்சிருப்பார். அப்பத்தான் தாமதமாகாம காரியங்களை நேரத்துக்குச் செய்ய முடியும்பார். கடிகாரம் அரைமணி நேரம் கூடுதலா ஓடுதுன்னு நல்லா நமக்குத் தெரியுமே. அப்றம் நேரம் பாக்கறப்பல்லாம் 'இது அரை மணி நேரம் பாஸ்ட்டு' மனசு சொல்லிக்கிட்டே இருக்குமே - என்னிக்காவது அது சரியான நேரத்துக்கு ஓடி, நம்ம அரைமணி நேரம் பாஸ்ட்-னு நெனச்சுக்கிட்டு எதையாவது கோட்டை விடப் போறோம்ன்னு நெனச்சுக்கிட்டே இருப்பேன்.

யார்ட்டயாவது நேரம் கேட்டா இப்படித்தான் பதில் வரும்:

"10:15 ஆவுதுங்க. பத்து நிமிசம் பாஸ்ட்டு"

"ஆறே முக்கால்ங்க. அஞ்சு நிமிசம் லேட்டா ஓடுது "

"இது நின்னு போச்சு போலருக்குங்க. அப்பலருந்து ஒம்பது மணின்னு காட்டுது. முக்கா மணி நேரம் வேகமா ஓடிக்கிட்டு இருந்துச்சுங்க"

இதுக்காகத் தான் நான் கடியாரமே கட்றதில்லை. "வாட்ச் கட்றதில்லையா?"ன்னு யாராச்சும் கேட்டா எங்கியோ படிச்ச 'நேரம் வீணாவதைப் பார்க்க விரும்பவில்லை'ன்னு அ.ஜீவித்தனமா பதில் சொல்லிட்டு நடையக் கட்டுவேன்.

பூமிய விட்டு மேல போயிட்டா நேரம் காலம்னுலாம் ஒண்ணும் கிடையாதுங்கறாங்க. மேல் கீழ் இடம் வலம்னு எந்தத் திசையும் கிடையாதுங்கறாங்க. இதுக்கு எதுக்கு பூமிய விட்டுப் போகணும்? மனுசய்ங்கள விட்டா வேற யாரு இதப் பத்திக் கவலப் படறா? நாய் பூனைக்கு நேரம் தெரியுமா? மாடு மட்டைங்களுக்குத்தான் நேரம் தெரியுமா?

என்னவோ போங்கப்பா. என்னத்தயோ பண்ணிக்கிட்டு எல்லாரும் நல்லா இருந்தா சரி.

***

2 comments:

rv said...

//அக்டோபர்ல கடைசி ஞாயித்துக் கிழமை காலைல 2 மணியாகும்போது ஒரு மணி நேரம் பின்னாடி திருப்பி வச்சுருவாங்களாம் //

உங்களுக்கும் எங்களப் போல கடசி ஞாயிறா? பல நாடுகள்ல முதல் ஞாயிறே மாத்திடறாங்க. ஒரு மணிநேரம் எக்ஸ்ட்ரா தூங்கலாமில்ல?ஆனா, மார்ச்சுல அதுக்கு பழிவாங்கிடுவாங்க.

நம்மூர்லே தேவையில்ல.. ஆனா இங்க மாதிரி வெயிற்காலத்திலேயும் பனிகாலத்திலேயும் சூரிய வெளிச்சத்தின் அளவு radical-ஆ மாறற இடங்களில் practical reasonsகளுக்காக DST தேவைன்னே எனக்கு தோணுது.

துளசி கோபால் said...

இங்கே எங்களுக்கு நேரம் மாத்தியாச்சு. என் புலம்பலும் ஆரம்பிச்சுடுச்சு. காலையிலே 11 மணிக்கே 12 மணின்னு சாப்பிடவந்துடறார். வேலையே ஆறதில்லை(-:
மார்ச் மூணாம்வாரம் பழையபடி மாறிடும்.