Wednesday, December 28, 2005

The Life of David Gale



*** The Life of David Gale ***

மனோஜ் நைட் ஷியாமளனின் The Sixth Sense படத்தின் இறுதிக் காட்சியில் ப்ரூஸ் வில்லிஸ் ஏற்கெனவே இறந்து போன ஒருவர் என்று புதிர் அவிழும் போது பகீரென்று இருந்ததே. ஆனால் The Life of DavidGale-லில் சொல்லப் பட்டிருக்கும் புதிர் வித்தியாசமானது. The Sixth Sense போன்று அமானுஷ்யங்களை வைத்துக் கொள்ளாமல் யதார்த்த வாழ்வில் நடக்கும், நடக்கச் சாத்தியங்களிருக்கிற சம்பவங்களைக் கொண்டு கதை பின்னப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் இறுதிக்காட்சி - ஓரளவுக்கு முன்னரே ஊகிக்க முடிந்தாலும் - பகீர் ரகம்.

அமெரிக்காவில் Capital Punishment எனப்படும் மரணதண்டனையை இரத்து செய்யக் கோரிப் போராடும் குழுவில் பிரதானமானவர் பேராசிரியர் டேவிட் கேல். முதல்வன் படத்தில் அர்ஜுன் ரகுவரன் சந்திக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பரபரப்பாய் பேசப்பட்டதே. அது போல இதில் (மரண தண்டனைக்கு வக்காலத்து வாங்கும்) டெக்ஸாஸ் ஆளுநரும் டேவிட் கேலும் சானல் நிகழ்ச்சி ஒன்றில் உரையாடுகிறார்கள்.

நறுக்கென்று நாலே வசனங்களில் இருக்கும் அந்தக் காட்சியில் ஆளுநர் டேவிட் கேலிடம் கேட்கும் ஒரு கேள்வியே பெரிய புதிராகப் பின்னப்பட்டு கடைசியில் அவிழ்க்கப்படுகிறது.

டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட் பிட்ஸி ப்ளூம் (Bitsey Bloom) என்ற பெயரில் நிருபராக கையில் வீடியோ கேஸட் ஒன்றுடன் சாலையில் ஓடிவரும் காட்சியோடு படம் துவங்குகிறது.

அலட்டிக்கொள்ளாத நடிப்புடன் டேவிட் கேல்-ஆக கெவின் ஸ்பேஸி நடித்திருக்கிறார்.

போராட்டக் குழுவின் சக உறுப்பினராக நண்பராக இருக்கும் கான்ஸ்டன்ஸ் என்ற பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் - யாரிடமும் அதுவரை வாய் திறவாத - டேவிட் கேல் தண்டனைக்கு மூன்று தினங்களுக்கு முன்னால் தன்னை வந்து சந்திக்கக் கோரி பிட்ஸிக்கு அழைப்பு விடுக்கிறார். தன்னை எதற்கு அழைக்க வேண்டும் என்று புரியாமல் - கற்பழிப்பு, கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனைக்குக் காத்திருக்கும் குற்றவாளியான டேவிட் கேல்-ஐ சந்திக்க உதவியாளர் ஒருவருடன் பிட்ஸி வர, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் சிறையில் தனியாக டேவிட் கேலைச் சந்தித்து உரையாடுகிறார்.

நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் டேவிட் கேல் சொல்ல - முதலில் அவற்றை நம்பிக்கையில்லாமல் கேட்டுக் கொள்ளும் பிட்ஸி பின்னணியின் தீவிரம் உறைக்கத் தொடங்கியதும் அதிர்ந்து போகிறார்.

டேவிட் கேல் வகுப்பில் அசட்டையான மாணவி பெர்லின். வகுப்பு முடிந்து அனைவரும் வெளியேறியதும் கேலை நெருங்கி காதோரம் "நல்ல Grade வாங்க நான் 'எதையும்' செய்யத் தயார்" என்று கிசுகிசுக்க, டேவிட் கேல் அவள் காதருகில் நெருங்கி கிசுகிசுக்கிறார் "'எதையுமா?', சரி உனக்கு நல்ல Grade நான் கொடுக்க வேண்டுமென்றால் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்" என்று சொல்லி, சற்று இடைவெளி விட்டு முடிக்கிறார் "ஒழுங்காகப் படி". உதாசீனம் செய்யப்பட்ட பெர்லின் இரவு விருந்து ஒன்றில் அதிகமாகக் குடித்துவிட்டு கழிவறைக்குச் செல்லும் கேலை மூலையில் மடக்கி, மயக்கி உறவு கொள்ள வைத்து விட, மறுநாள் போதை தெளிந்து எழும் கேலை போலீஸ் கைது செய்கிறது - பெர்லினைக் 'கற்பழித்த' குற்றத்திற்காக.

பின்பு குற்றமற்றவர் என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் வேலையிழந்ததோடு செல்லுமிடத்திலெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கப்பட்டு அவமானங்களைச் சந்திக்கிறார் டேவிட் கேல். அவர் மனைவி அவரை விட்டுப் பிரிந்து கேல் உயிருக்கு உயிராக நேசிக்கும் மகனையும் அழைத்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு (பாரீஸ்) சென்று விட, மனமுடைந்து போகிறார் கேல்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் குழு சகா கான்ஸ்டன்ஸ் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற, இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர். அதுவரை எந்தவித உறவுகளிலும் நாட்டமில்லாது வேலை வேலை என்று வருடங்களைக் கழித்த கான்ஸ்டன்ஸ்ஸூம், நொந்து போயிருக்கும் டேவிட் கேலும் - நெருங்கிய நட்பு என்ற எல்லையையும் மீறி - பலவீனமானதொரு பொழுதில் உறவு கொள்கின்னறனர்.

காலைப் பொழுதில் கான்ஸ்டன்ஸ் நிர்வாணமாகச் சமையலறையில் கால்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக மடக்கப்பட்டு விலங்கிடப்பட்டு, தலையை பாலித்தீன் பை ஒன்று முழுக்க மூடியிருக்க மூச்சுத் திணறிச் செத்துக் கிடக்கிறார். பிரேத பரிசோனையில் கைவிலங்கின் சாவி அவர் வயிற்றுக்குள் கிடந்ததையும் கண்டு பிடிக்கிறார்கள். டேவிட் கேல் போதையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றதைப் பார்த்தவர்கள் சாட்சி சொல்ல - குறிப்பாக கான்ஸ்டன்ஸ்ஸின் நெருங்கிய நண்பனும் மரணதண்டனையை ரத்துசெய்யக் கோரிப் போராடும் குழுவில் தீவிர உறுப்பினருமாகிய அந்தக் கவ்பாய் நபர் - போலீஸ் டேவிட் கேலை கான்ஸ்டன்ஸைக் கற்பழித்துக் கொலை செய்ததற்காகக் கைது செய்து நீதி மன்றத்தில் வழக்கு நடந்து மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விடுகிறார்.

தண்டனை நிறைவேற்றப்பட மூன்று தினங்கள் இருக்கையில் பிட்ஸி ப்ளூமை வரச் செய்து பேசுகிறார் - நான் நிரபராதி, எனக்குப் பின்னே பயங்கரச் சதி நடந்திருக்கிறது என்று சொல்கிறார். மூன்றாம் நாள் சந்திப்பு முடிந்ததும் பிட்ஸியிடம் விடை பெறும்போது அவர் சொல்வது "நாளை இந்நேரம் நான் இறந்திருப்பேன். உன்னை வரச் சொல்லி இதையெல்லாம் விவரித்ததற்குக் காரணம் என் மகனுக்கு அவன் தந்தை குற்றவாளி அல்ல என்ற உண்மையை உன் மூலம் தெரிவிக்கவே" என்கிறார்.

இருப்பதோ 24 மணி நேரம். அதற்குள் என்ன செய்வது என்று செய்வதறியாது திகைக்கிறார் பிட்ஸி ப்ளூம். பின்பு பரபரப்பாக நிகழும் சம்பவங்கள் பதற்றம் ஏற்படுத்துகின்றன. பிட்ஸி ப்ளூமையும் உதவியாளரையும் நிழலெனப் பின்தொடர்கிறார் கான்ஸ்டன்ஸின் கவ்பாய் நண்பர். கான்ஸ்டன்ஸின் மரணத்துக்குக் காரணம் என்னவென்று புரியாமல் அலையாயும் பிட்ஸி ப்ளூமின் அறையில் ஒரு வீடியோ கேஸட் விட்டுச் செல்லப்படுகிறது - அந்தக் கவ்பாய் நபரால். அதில் கைகள் கட்டப்பட்டு முகம் மூடப்பட்டுச் சாவதற்கு முந்தைய கான்ஸ்டன்ஸின் சில நிமிட மரண அவஸ்தை பதிவாகியிருக்கிறது. 'வீடியோ எடுக்கப் பட்டிருப்பதால் அது கொலை; டேவிட் கேலோ நிரபராதி என்று அழுகிறார். யார் வீடியோ எடுத்திருப்பார்கள்?' என்று தடுமாறும் பிட்ஸி ப்ளூமிற்கு உச்சக்கட்ட அதிர்ச்சி ஏற்படுத்தும் காட்சி கேமராவின் பின்புறத்திலிருந்து ஒரு நபர் கான்ஸ்டன்ஸின் உடலருகே சென்று மரணம் நிகழ்ந்துவிட்டதா என்று பார்ப்பது; அவர் - அந்தக் கவ்பாய் நபர்!!! அப்படியென்றால் டேவிட் கேலை சிக்க வைக்க கவ்பாய் நண்பர் கான்ஸ்டன்ஸைக் கொன்றிருக்கிறாரா?

மரணம் நிகழ்ந்த அறைக்கே சென்று ஆராய்ந்து வீடியோவையும் மறுபடி மறுபடி போட்டுப் பார்த்த பிட்ஸி ப்ளூமிற்குப் பொறி தட்டுகிறது. அது கொலையல்ல - தற்கொலை!!! அப்படியென்றால் அப்படியென்றால்... கான்ஸ்டன்ஸூம் அந்தக் கவ்பாய் நண்பரும் சேர்ந்து டேவிட் கேலைக் கொலைக் குற்றத்தில் மாட்ட வைத்திருக்கிறார்கள்!!!

டேவிட் கேல் நிரபராதி என்று நிரூபிப்பதற்காகக் கேஸட்டை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாகச் சிறைச்சாலைக்கு விரைய, நடுவழியில் கார் பழுதாகி நின்றுவிட, தலைதெறிக்க ஓடிவரும் பிட்ஸி ப்ளூமைக் கடந்து சாவகாசமாக வண்டியை ஓட்டிக் கொண்டு போகிறார் அந்தக் கவ்பாய் நபர்.

சிறைச்சாலைக்கு வெளியே இரண்டு கோஷ்டிகளாக மக்கள் கூடியிருந்து கோஷம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கோஷ்டி டேவிட்கேலுக்கான மரணதண்டனையை ஆதரித்தும், இன்னொரு கோஷ்டி எதிர்த்தும். ஒரு வழியாக அந்தக் கூட்டத்தை பிட்ஸி அடையவும் சிறை அதிகாரி வெளியே வந்து "டேவிட் கேலுக்கு நிச்சயக்கப்பட்ட நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது" என்று உணர்ச்சியற்ற குரலில் அறிவிக்க, அப்படியே உடைந்துபோய் கதறுகிறார் பிட்ஸி.

பின்பு அந்த வீடியோ கேஸட்டை வைத்து அவரது ஊடக நிறுவனத்தின் மூலமாக டேவிட் கேல் கொலையாளி அல்ல என்று அவர் நிரூபிக்கும் காட்சிகள் சிரத்தையின்றிக் காட்டப்படுகிறது. ஒரு நாள் பணியிலிருக்கும் பிட்ஸிக்கு கூரியர் மூலமாக ஒரு பொம்மை வருகிறது. டேவிட் கேலின் மகன் எப்போதும் வைத்திருக்கும் பொம்மை. அந்த பொம்மைக்குள் ஒரு வீடியோ கேஸட். கான்ஸ்டன்ஸ்ஸின் மரணம் பதிவு செய்யப்பட்ட - பிட்ஸி முன்பு பார்த்த - அதே கேஸட். ஆனால் சற்றுக் கூடுதல் காட்சிகளோடு... அந்தக் கடைசிக் காட்சியைப் பார்க்கும் நமக்கு மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

ஆளுநர் தொலைக்காட்சிச் சந்திப்பில் டேவிட் கேலிடம் கேட்கும் கேள்விக்கும் வீடியோவிலுள்ள இறுதிக் காட்சிக்கும் நேரடித் தொடர்பு - என்னவென்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

தூக்கத்தை விரட்டிய படம்!

***

Monday, December 19, 2005

இந்தியா Vs. வெஸ்ட் இண்டீஸ்


காவிரியைக் கடந்து அண்ணா சிலையில் இறங்கி மேலசிந்தாமணியின் தாழ்வாகச் செல்லும் சாலையில் படித்துறையை நோக்கி நடந்தேன். என் உற்ற நண்பன் கிச்சா வசிக்கும் பி.ஜி.ஐயர் காம்பவுண்டு மாதுளங்கொல்லை அக்ரஹாரத்தின் கடைசியில் இருக்கிறது. அங்கிருந்து ஒரு எம்பு எம்பினால் காவிரிப் படித்துறை.

காம்பவுண்டு என்றால் தெருமுக்கில் நம்மைப் பார்த்து இருக்கும் ஏழடி செங்கல் சுவர். இருசக்கர வாகனம் மட்டும் செல்லுமளவு இருக்கும் கதவைத் திறந்தால், இடப்புறம் தளை பரவிய வெற்றிடமும், வலப்பக்கம் வரிசையாக ஒரே அளவில் பத்து வீடுகளும். நடைபாதை நீண்டிருக்க மத்தியில் தரைமட்டத்தில் நன்னீர்க் குழாய்த் தொட்டி. முன்பெல்லாம் எந்நேரமும் பெண்கள் நீர் பிடிப்பார்கள். இப்போதெல்லாம் வாரத்துக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. காம்பவுண்டு கட்டி ஐம்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இருப்பவர்களும் சில தலைமுறைகளாக அங்கிருப்பவர்கள்தான்.

கடைகளைக் கடந்து அக்ரஹாரத்தில் நுழைந்தபோது வழக்கத்துக்கு விரோதமாக பரபரப்பெதுவுமின்றி வெறிச்சென்றிருந்தது. கிரிக்கெட் விளையாடும் பையன்கள் யாரையும் காணோம். இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமை வேறு. வீடுகளைக் கடக்கையில் இரைச்சலாக வந்த ஒலியில் புரிந்துபோயிற்று. டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறான்கள் பையன்கள். அதான் ஒருத்தனையும் தெருவில் காணவில்லை.

பி.ஜி.ஐயர் காம்பவுண்டில் நுழைந்து மூன்றாம் வீட்டை அடைந்து கதவிலிருந்த உலோக வளையத்தை தட்டினேன். அந்தக்காலத்துக் கதவு இன்னும் வலுவாக இருந்தது. உள்ளே டிவி இரைச்சலில் நான் தட்டியது கேட்டிருக்குமா என்று இன்னும் சற்று ஓங்கித் தட்ட, கதவு டக்கென்று திறந்து எச்சுமிப் பாட்டி 'யாரூ' என்றாள். கதவு திறந்த வினாடியில் டிவியின் ஒலி பலமடங்கு அதிகரித்துக் கேட்க, 'அடப்பாவிகளா. இவ்ளோ சவுண்டு வச்சுருக்காங்களே' என்று நினைத்துக்கொண்டே 'கண்ணன் பாட்டீ' என்றேன். எச்சுமிப்பாட்டி சம்பிரதாயமாக 'வாடாப்பா' என்றுவிட்டுத் திரும்பி 'அந்த எழவுச் சத்தத்தைக் கொறைக்கப் படாதா?' என்று சத்தமிட்டது யாருக்கும் கேட்டிருக்காது.

நான் உள்ளே நுழைய டிவியின் சத்தத்தையும் மீறிக் கிச்சாவின் குரல் கேட்டது. ஹாலில் ஒரு படையே தரையில் படுத்துக்கொண்டும், சோபாவில் சரிந்தும் ஆங்காங்கு பல நிலைகளில் அடைந்திருக்க, கிச்சா டிவிக்கு ஓரடி தூரத்தில் நின்று திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க அவன் முகத்தில் டிவியின் பிம்பம் கிட்டத்தட்ட தெரிந்தது.

அவ்வளவு சத்தத்திலும் நான் வந்ததை கிச்சா மட்டுமே கவனித்து 'வாடா மச்சி.. இங்க ஒக்கார்றா' என்று காட்டிய இடம் இரு சோபாக்களுக்கிடையே இருந்த எலிப்பொந்து இடைவெளி. நான் அதில் புகுந்துகொண்டு மாட்சை கவனித்தேன். இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பகலிரவு ஆட்டம் என்று காலை தினமலரில் படித்தது நினைவுக்கு வந்தது.

அதற்குள் இருள் பழகிவிட ஹாலில் இருந்தவர்களைப் பார்த்தேன். கிச்சா இன்னும் முழங்கால்களில் கைகளை ஊன்றி முகத்தை கிட்டத்தட்ட டிவியில் தாங்கி நின்று கொண்டிருக்க, சம்பு எனப்படும் சம்பத் வினோத கோணத்தில் ஈஸிச் சேரில் இருந்தான். ஆனந்த் தரையில் படுத்திருக்க, 'எட்டி'யும் 'கவ்பாயு'ம் தலை மட்டும் சோபாவில் வைத்து கால்களை நீட்டி டிவியைத் தொட்டுக்கொண்டு படுத்திருக்க, இன்னும் சில காம்பவுண்டுப் பையன்கள் விரவியிருந்தார்கள். எச்சுமிப் பாட்டி விழித்திருக்கையில் எட்வர்டும் கமால்பாயும் எப்படியென்று ஆச்சரியமாக இருந்தது. அநேகமாக படித்துறையிலிருந்து சுவரேறிக் குதித்து, கொல்லைப்புறத்து வழியாகக் கிச்சா கூட்டிக்கொண்டு வந்திருப்பான்.

கருப்பு வெள்ளை க்ரெளன் டிவியில் பளிச்சென்று இருந்தது படம். கிச்சா திடீரென்று 'கலர் டிவியிலும் அவா அப்படித்தான் இருப்பா' என்று அவனுக்குள் சொல்லிக்கொண்டான்.

'கிரிக்கெட் வெறியர்கள் சங்கம்' மேலசிந்தாமணியில் ரொம்ப பிரபலம். கிச்சாதான் அதற்கு தலைவர், பொருளாளர், செயலாளர் எல்லாம். நடு ரோடு, காம்பவுண்டுக்கு உட்பட்ட பகுதி, காவிரியின் நடுவே மணல் ஓடும் மைதானங்கள்; ஒன்றும் கிடைக்காவிட்டால் சிலசமயம் மொட்டைமாடியென்று ஆகாயத்தைத் தவிர அனைத்து இடங்களிலும் கிரிக்கெட் ஆடுவார்கள். பையன்கள் கிரிக்கெட் விளையாட டென்னிஸ் பந்தையும், மட்டைகளையும், மரக்குச்சிகளையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்களென்றால் காம்பவுண்டே அமளிதுமளியாகும்.

பத்து வீடுகளுக்கும் பொதுவாக நான்கு கழிவறைகளை வரிசையாக இடதுபுறம் கட்டி வைத்திருந்தார் பி.ஜி. ஐயர். நாள் முழுதும் யாராவது வாளியைத் தூக்கிக்கொண்டு போய் வந்துகொண்டு இருப்பார்கள். கோடி வீட்டு ரங்கி (ரங்கநாயகி) மாமி மீன் தலையால் நடந்து வருவதைப் போல இடையில் அகலமாகவும் தலையும் காலும் குறுகலாகவும் அசைந்தாடி வாளியைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்தால் போச்சு. அவள் வீட்டிலிருந்து கழிவறையை அடையவே ஐந்து நிமிடமாகும். அதுவரை விளையாட்டை நிறுத்தி வைக்கவேண்டும். பையன்களுக்குப் பொறுமையே இருக்காது. ஒருமுறை அவள் கடந்து கொண்டிருக்கையில் மாதேஷ் ஓடிவந்து பந்தைப் போட முயல, பந்து கையிலிருந்து விடுபடவிருந்த கடைசி வினாடியில் ரங்கிமாமியின் வாளியிலிருந்த மொத்தத் தண்ணீரும் அவன் முகத்தில் பளேரென்று இறங்க மாது சொத்தென்று விழுந்து அரண்டுபோய் எழுந்து ஓடினான். 'எழவெடுத்த பயலே. பொம்மனாட்டி வர்றது கண்ணுக்குத் தெரியலையோ?' என்று திட்டிக்கொண்டே போக பலத்த மெளனம் நிலவியது.

அவள் உள்ளே சென்று அமர்ந்ததும் கிச்சா கைக்குட்டையை மூக்கை மறைத்துக் கட்டிக்கொண்டுவிட, அந்த ஏரியாவில் ஃபீல்டு செய்யும் பையன்கள் விலகி கல்லிக்கும், ஸ்லிப்பிற்கும் சென்றுவிடுவார்கள். அது பேட்ஸ்மென்களுக்குப் பொற்காலம். ஃபீல்டர்கள் எதிரே இல்லாததால் போட்டு விளாசுவார்கள். பந்து வீசுபவனும் ஓடி வரும் நீளத்தைக் குறைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட நடந்து வந்து பந்து போடுவார்கள். ரங்கி இரைச்சலாக வாயு வெளிவிட்டுக்கொண்டே இருப்பாள்.

'ஆனண்டூ' என்று கிச்சா சைகை செய்ய ஆனந்த் குறிவைத்து அவள் அமர்ந்திருக்கும் அறையின் கதவில் பந்தை அடிக்க, தகரமானதால் பயங்கரமாகச் சத்தம் வரும், உள்ளேயிருந்து கடுமையான வசவுகள் காற்றில் வர வெளியில் ஓவென்ற சிரிப்புச் சத்தம் எழும். அவளால் சட்டென்று எழுந்து வெளியில் வந்துவிட முடியாது என்று ஆனந்துக்குத் தெரியும்.

ரங்கி மாமி கிட்டத்தட்ட அரைமணிநேரம் உள்ளே இருந்துவிட்டு எழுந்து கதவைத் திறந்து வெளியில் வரும்போது மைதானம் காலியாக இருக்கும். பையன்கள் காற்றில் மறைந்து விடுவார்கள். அவள் சென்று வீட்டில் மறையக் காத்திருந்து புதர், புற்றிலிருந்து ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். கிச்சா எங்கிருந்தோ உதயமாகி 'மாமி போய்ட்டாடா.. நாளைக்கு அஞ்சலைக்கு எக்ஸ்ட்ரா ரெண்டுரூவா கொடுத்து நல்லாக் கழுவிவிடச் சொல்லணும்' என்பான்.

'சே.. நம்ம பேட்டை தூக்கிக்கிட்டு வந்தா இவ வாளியைத் தூக்கிக்கிட்டு வந்துர்றாடா' என்பான் ஆனந்த்.

ரங்குமாமா எப்போதும் திண்ணையில் நின்றுகொண்டிருப்பார். வேஷ்டியைப் பின்புறம் தூக்கி பிருஷ்டத்தைச் சொறிந்துகொண்டே பேசுவார். அவர் இறங்கி வந்தால் கிச்சா "வந்துட்டார்ரா பீப்பீ" என்று சொல்ல பையன்கள் 'பீப்பீப்பீ' என்று பாடுவார்கள். அவர் எதையும் சட்டை செய்யாமல் நடந்து போவார். கிச்சாவின் அப்பாவை நாமக்கல்லுக்கு மாற்றியிருந்தார்கள். திரும்பவும் திருச்சிக்கு மாற்றல் வாங்க அலைந்துகொண்டு, வேலைக்காக நாமக்கல்லில் இருந்துகொண்டு வாராவாரம் வந்து செல்வார்.

ஆனந்த் எப்போதும் காம்பவுண்டுக்கு வெளியே மூன்று வீடுகள் தள்ளியிருந்த அம்பி மாமா இட்லிக் கடையிலேயே பழி கிடப்பான். அவன் ஆள் நிம்மி ப்ள்ஸ்டூ படித்துக்கொண்டு, கடைக்குப் பக்கத்து வீட்டில் இருந்தாள். காலையிலும், மாலையிலும் ஆனந்த் அங்கேயே கடையில் நின்று, இட்லி வாங்கித் தின்றுகொண்டே இருப்பான். அவள் போகும்போதும், வரும்போதும் சைகை செய்து பேச முயல்வான்.

சனியன்று கிச்சா அப்பா வந்து ஆனந்தை விசாரிக்க கிச்சா 'ஆனண்டு நாலாம் நம்பர் இட்லிக்கடைல பழியா கெடக்கறான். ஒன் சொத்தையெல்லாம் இட்லி வாங்கி அழிக்கப் போறான். பேசாம அவனுக்கு மொதல்ல கல்யாணம் பண்ணி வச்சுரு' என்று போட்டுக் கொடுக்க, அப்பா வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கிளம்ப, கிச்சாவின் அம்மா 'சே.. சின்னப் பையனைப் போய் இப்படிப் பேசறியேடா? அவன் கொழந்தை' என பரிந்துகொண்டு வந்தாள்.

கிச்சா 'அசத்து மாதிரி பேசாதேம்மா.. பெத்தாளே ஒங்கம்மா.. வயித்துல பெரண்டைய வச்சுதான் கட்டிக்கணும்'.

கடைசித் தம்பி சம்பத் ஒரு மாதமாக மேலசிந்தாமணி ரமணி ஐயங்காரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்க அப்போதுதான் ஸரிகமா தாண்டியிருந்தான். அதற்குள் அவனுக்கு பாடகர் ஜிப்பா போடவேண்டும் என்று ஆசை வந்து வாங்கிப் போட்டுக்கொள்ள கிச்சா தலையில் அடித்துக்கொண்டான். அப்பா தஞ்சாவூர் வீட்டிலிருந்து தம்புராவை கொண்டுவந்து வைக்க, கிச்சாவுக்கு எரிச்சல் மண்டியது. டிவி பக்கத்தில் நிறுத்தி வைத்திருந்த தம்புராவை வருடியபடி 'அப்பா.. ஒங்கப்பா சொத்தையெல்லாம் ஒவ்வொண்ணா டேஞ்சூர்லருந்து தள்ளிண்டு வரயா? இது என்னது? வீணையா? தம்புராவா?' என்று கம்பிகளை அழுத்தி மீட்டிப் பார்க்க, 'டொய்ங்' என்று ஒவ்வொன்றாய் அது வழிந்து விழ, அப்பா 'பாவீ' என்று அலறினார்.

கிச்சாவும் சும்மா இல்லை. அவனுக்கு எஸ்விஎஸ் அனுவை ரொம்பப் பிடிக்கும். அனு நிமிர்ந்து பார்க்கும் ஒரே ஆண் அவளது அப்பா மட்டும்தான். அவள் கடந்து போகும் போதெல்லாம் கிச்சா சன்னமாக 'கொஞ்சம் நிமிந்து பாரேண்டி.. ஒன் போன ஜென்மத்து ஆம்படையான் நிக்கறேன்' என்று சொல்ல, அவள் நடை வேகம் பிடிக்கும். கிச்சா ஓடிச்சென்று அம்மாவிடம் 'பொண்டாட்டி பாத்தாச்சு.. வைரத் தோடெல்லாம் சீதனமா கேட்டுடாதே.. போன ஜென்மத்துக் கல்யாணத்துலயே ஒனக்கு அதையெல்லாம் கொடுத்து ஓட்டாண்டியாகி இப்படி எப்படி குச்சு வீட்ல இருக்கா பாரு' என அம்மாவிற்கு கிச்சா கேலி செய்கிறானா இல்லை நிஜமாகச் சொல்கிறானா என்று குழம்பும்.

ஒரு தடவை அவனிடம் 'நெஜமாவே அனுவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா என்ன?' என்று நான் கேட்க, 'சும்மா வாயக் கெளறாதடா.. கேன.. என் பொண்டாட்டி போறா பாரு..ஏண்டா என்னைப் பாக்கவே மாட்டேங்கறாடா? ஃபேர் அண்ட் லவ்லி போட்டுக்கவா?' என்று கேட்டான். அனுவைப் பார்த்துவிட்டால் அன்று முழுதும் அவனுக்கு 'வெற்றி.. வெற்றி.' வசனம்தான். 'அப்ப்ப்ப்ப்ப்பா... பாத்துட்டேன்.. போறும்...' என்பான். அரைக்கண் கனாவில் இருக்கையில் அம்மா உலுக்கி 'போதுண்டா.. வந்து கொட்டிக்கோ' என்று சொல்ல கிச்சா 'ஒரு வார்த்தை சொல்லிடப்படாதே.. ஒனக்கு பத்திண்டு வருமே' என்று நொடித்துக் கொள்வான்.

இதற்குள் மேற்கிந்தியர்கள் விளையாடி முன்னூறுக்கு முடித்து, நம்மவர்கள் வந்தார்கள் சென்றார்கள் என்று முதல் மூன்று விக்கெட் விழுந்து, பூமியைப் பார்த்து பேட்டைச் சுரண்டிக்கொண்டு பெவிலியன் திரும்பிவிட எங்களுக்கு ஜூரம் போல உணர்ந்தோம். அந்திச் சூரியனின் ஒளி ஜன்னல் வழியாக டிவி முன் வட்டமாக விழ, ஒளிக் கதிரில் தூசி பறந்தது. டிவி வெள்ளை வெளேர் என்று எக்ஸ்போஸான புகைப்படம் மாதிரி லேசான அசைவு காட்ட, 'டேய்.. ஒரு எழவும் தெரியலைடா' என்று பையன்கள் இரைந்தார்கள்.

கிச்சா 'இர்றா சூர்ய பகவான் நம்ம மக்களை ஆசிர்வாதம் பண்ணட்டும். மேட்ச் இப்போ சூடுபிடிக்கும் பாரு' என்றான். ஒரு வழியாய் டிராவிட் உள்ளே வந்து நங்கூரமிட, டெண்டுல்கர் தொண்ணூற்றெட்டில் ஆடிக் கொண்டிருந்தார்கள். கிச்சா டிவியில் டெண்டுல்கர் முகத்தைப் பிடித்துக் கொஞ்சி, 'தலைவா.. செஞ்சுரி போட்டுர்றா.. சமயபுரத்துக்கு கோவணத்தோட நடந்து வந்து மொட்டை போட்டுக்கறேன்' என ஓவென்று சிரித்தார்கள்.

ஜானு சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்க, 'டீ.. அக்கா.. ஒரு டம்ளர் தூத்தம் கொண்டுட்டு இப்படி நடந்துவாடி.. ஒன் லக்கு எப்டீன்னு பாப்பம்..?' என்று கிச்சா அழைத்தான். 'சும்மார்றா.. எழவு அவுட்டாயித் தொலைச்சான்னா எந்தலைல விடியும்.. வேணாம்' என்று அவள் அவசரமாக மறுத்து விட்டாள். ஆனந்த் 'தலைவன் அடிச்சுருவாண்டா கிச்சா..பாரேன்' என்று சொல்லி கிச்சாவின் வயிற்றில் பால் வார்த்தான். சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த அவனைப் பார்த்து கிச்சா, 'டேய்.. இர்றா.. .அப்படியே இரு' என்று அதட்டிவிட்டு, 'தலைவன் செஞ்சுரி போடற வரைக்கும் யாரும் நவரப் படாது' என்று உத்தரவிட்டான்.

பக்கத்து வீட்டு அம்பி அதுவரை அடக்கி வைத்திருந்த சிறுநீரை கொல்லைப்புறத்திற்கு ஓடிச் சென்று கழித்துவிட்டு பெளலரைவிட வேகமாக திரும்ப ஓடிவந்தான்.

கிச்சா டெண்டுல்கரை விட அதிக பதட்டத்திலிருந்தான். கண்களை மூடிக் கும்பிட்டான். அடுத்த பந்துக்கு மைதானமும், ஹாலும் அமைதியாகக் காத்திருந்து வீச்சாளனின் ஒவ்வொரு தப்படிக்கும் ஹப் ஹப்-பென்று குரலெழுப்பிக் கைதட்ட போடப்பட்ட பந்து பூப்போலப் பறந்து ரொங்கிக் கொண்டே ஸ்டேடியத்துக்கு வெளியே சென்றதை ஐந்து கோணங்களில் மறுபடி மறுபடி காட்ட, சில நிமிடங்களுக்கு உலகமே இரைச்சலாக இருக்க, டெண்டுல்கரும், கிச்சாவும் வானத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.

கிச்சாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் டிவியை முத்தமிட்டான். ஆனந்தைக் கட்டிக்கொண்டு தட்டாமாலை சுற்றினான். பையன்கள் நெகிழ்ந்திருந்த கைலியையும், வேஷ்டியையும் எழுந்து இறுக்கிக் கட்டிக்கொண்டு, திரும்ப அவரவர் பொசிஷனுக்குத் திரும்பினார்கள்.

ஜானு எல்லாருக்கும் டீ போட்டு, சொம்பையும், ஒன்றனுள் ஒன்றாக அடுக்கிய கூம்பு டம்ளர்களையும் வந்து வைக்க குபீரென்று அதன்மேல் பாய்ந்தார்கள். 'எதாச்சும் பச்சணம் வச்சுருக்கையாடீ' என்று கிச்சா கேட்க, ஜானு பரணைத் துழாவினாள்.

கிச்சா சற்று உட்கார விரும்பி சோஃபாவில் புதைந்திருந்த சம்புவை 'எந்திர்றா' என்று அதட்ட சம்பு 'சும்மா தூங்கிக்கிட்டு இருக்கற சிங்கத்தைத் தட்டியெழுப்பாதடா..' என்று கீழ்க்குரலில் உறுமி டிவிக்குப் பார்வையைத் திருப்ப, அவன் மேல் கிச்சா மொத்தென்று அமர, சம்பு அலறினான்.

இந்தியா இருநூற்றைம்பதை நாற்பத்திரண்டு ஓவர்களில் தாண்ட, மறுபடியும் எல்லாரையும் பரபரப்பு பற்றிக்கொண்டது. 'இன்னும் அம்பத்தொண்ணு ரன்னு; நாப்பத்தெட்டு பாலு.. அடிச்சிரலாம்' என்று கங்குலியைப் போல் கிச்சா நம்பிக்கை தெரிவித்தான். டிராவிட் இன்னும் இருக்கிறான் என்பது அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. 'தூண்றா அவன்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க, நாற்பத்தொன்பது ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழந்து, இருநூற்று தொண்ணூற்றி நான்குக்கு வந்துவிட்டார்கள்.

கிச்சா 'ஆறு பந்துகள்; ஆறு ரன்கள்; அல்வா போல எடுக்கலாம்.. திராவிடா.. நானும் திராவிடன்.. கைவிட்றாதடா' என்று கெஞ்ச ஆரம்பிக்க, டிராவிட் முதல் பந்தில் ஒரு நான்கடித்துவிட்டு, அடுத்ததில் ஓங்கி அடிக்க முயற்சித்து பந்து தரையில் உருள ஒன்று ஓடினார்கள்.

'ரெண்டே ரெண்டு' என்று கிச்சா கூவினான். டிராவிட் எதிர்பக்கம் போய்விட கடைசியாள் மட்டை பிடித்து, அடுத்த மூன்று பந்துகளையும் தடவி கீப்பருக்கு வழிவிட, கிச்சாவுக்கும், மற்றவர்களுக்கும் ரத்தம் கொதித்தது. கிச்சா மூலையிலிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்துவந்து அவனை அடிப்பதுபோல் பாவனை செய்தான். கடைசி பந்துக்காக பாண்ட்டில் தேய்த்து நடக்கையில் ஒரு மினி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. 'டேய்.. எங்கடா எந்திரிக்கறே? ஒக்கார்ரா' என்று சம்பத்தை அதட்டினான் கிச்சா. ஆனந்த் தும்முவதற்காக மூக்கைத் தேய்க்க, தலையணையை அவன் முகத்தில் அமுக்கி 'அபசகுனமா தும்மாதடா சனியனே' என்று இரைந்தான். பந்து வீச்சாளன் மெதுவாக நடை பயில, கிச்சாவுக்கு இருப்புக் கொள்ளாமல் சட்டென்று எழுந்து பூஜையறைக்கு ஓடிப்போய் சூடம் கொளுத்தி, 'இந்தியா ஜெயிக்கணும்.... கிருஷ்ணா, ராமா, நாராயணா, ஆஞ்சநேயா.. . ' என்று கிணுகிணுவென்று மணியடிக்க, எச்சுமிப் பாட்டி நடுநிசி மணியோசையில் தூக்கம் கலைந்து எழுந்து 'கட்டேல போறவனே.. பிசாசுக்குப் பூஜை பண்றியா?' என்று இரைந்தாள்.

'டேய்.. நீ கும்பிட்டு முடிக்கறதுக்குள்ள மேட்ச் முடிஞ்சிடும்டா' என்ற எட்டி, எச்சுமிப்பாட்டியை ஒரு கணம் மறந்து மண்டியிட்டு 'பரமபிதாவே' என்று கூவினான். சம்பத் கவ்பாயைப் பார்த்து 'டே நீ ஒண்ணும் வேண்டலையா?' என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் 'அல்லா அல்லா.. நீ இல்லாத உலகே இல்லை' என்று தாளமிட, கிச்சா 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பாவிகளா.. பாட்டி காதுல விழுந்து தொலைக்கப்போகுது' என்று திரும்ப வந்து டென்ஷனில் கையில் சிக்கியதை எல்லாம் அங்குமிங்கும் எறிந்தான்.

சம்பத் எரிச்சலோடு எழுந்து டிவியை அணைத்தது கிச்சாவை உச்சகட்ட டென்ஷனுக்குக் கொண்டுசென்று இதயம் வெடித்துவிடுவான் போலிருந்தான். 'டே நாயே.. என்று சம்புவை அப்புறப்படுத்தி டிவியைப் போட்டால் டிராவிடும் கடைசி வீரனும் மேற்கிந்தியர்களுக்குக் கைகொடுத்துக்கொண்டிருக்க இரைச்சலில் கமெண்ட்ரி கேட்கவில்லை.

'அடிச்சானாடா?' என்று கிச்சா பையன்களைக் கேட்க ஒருவருக்கும் தெரியவில்லை. நான் அங்கே அப்போது ஒரு கொலை விழப்போகிறது என்று பயந்தேன்.

காமிரா இப்போது ஸ்டம்போடு ஓடிக்கொண்டிருந்த மேற்கிந்திய பவுலரைக் காட்ட ஓரத்தில் ஸ்கோர் போட்டதில் அவர்கள் ஒரு ரன்னில் ஜெயித்திருந்தார்கள். ஹாலில் ஒரு திடீர் மெளனம் குடிகொள்ள ஜானு 'என்னாச்சு?' என்று கேட்டாள்.

கிச்சா ஆஞ்சநேயரைப் பார்த்து 'நைவேத்தியம் போறலைன்னா கேக்கவேண்டியதுதானே?' என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு திரும்ப வந்தான்.

சூழ்நிலையில் மெலிதான சோகம் பரவ எனக்கும் சோகமாக இருந்தது. ஜானு எவ்வளவோ வற்புறுத்தியும் சாப்பிடாமல் அவரவர்கள் இருந்த இடத்திலேயே உறங்கிப்போக நானும் கிச்சாவும் நாலுமணிக்கு விழித்துக்கொண்டோம்.

ஜானு அதற்குள் எழுந்து காஃபி போட்டுக்கொண்டிருக்க வீட்டை விட்டு வெளியில் வந்தோம். மார்கழியாதலால் பக்கத்துவீடுகளில் பெண்கள் பலவயதுகளில் முன்னால் கோலமிட்டுக் கொண்டிருந்தார்கள். எச்சுமிப்பாட்டி திண்ணையில் கால்நீட்டி அமர்ந்திருந்தாள். பனி கவிந்திருக்க நதிக்கரையோரமாதலால் அதிகக் குளிராக இருந்தது. தோள்களைக் குறுக்கி கைகளைக் கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டுத் திண்ணையில் அமர்ந்து கோலத்தையும் பெண்களையும் வேடிக்கை பார்க்க, தூரத்தில் பாடல்களும் ஜல்ஜல் சத்தமும் கேட்க, எச்சுமிப்பாட்டி 'அவாளைப் பாரு.. காலைல நாலரைக்கு ஏந்து குளிச்சு பக்தியா பஜனை பண்ணிண்டு எங்க மாரி பெரியாவளை தரிசிச்சுண்டு நன்னா இருக்கா. நீங்களும் இருக்கேளே..' என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டாள்.

பஜனை கோஷ்டி குறுகிய காம்பவுண்டுக் கதவு வழியே ஒவ்வொருவராக வர கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் எழுந்து கொண்டார்கள். கிச்சாவுக்குக் கடுப்பாக இருந்தது. 'அவாள்ளாம் பஜனைக்கா வரா? நம்ம காம்பவுண்டுல கோலம் போடற பொண்களைப் பாக்கன்னா வரா?' என்றான் காஃபியை உறிஞ்சியபடியே. 'அபிஷ்டு.. ஒளராதே' என்று அதட்டினாள் எச்சுமிப்பாட்டி.

டம்ளரிலிருந்து எழுந்த ஆவியை இதமாக முகர்ந்ததில் எனக்கு மூக்கில் வியர்த்தது. பஜனை கோஷ்டி சென்றுவிட, பெண்கள் கோலமிட்டு வீட்டினுள் போய்விட, எச்சுமிப் பாட்டி கோழித் தூக்கம் போட்டுக்கொண்டிருக்க, வாசலில் நானும், கிச்சாவும் மெளனமாக அமர்ந்திருந்தோம். நேற்றைய தோல்வி அவனை நிறையவே பாதித்திருக்கும் என்று எனக்கும் வருத்தமாக இருந்தது. அவன் தோளை தொட்டு 'என்னடா டல்லா இருக்கே?' என 'ப்ச்ச்' என்றான்.

'இது ஸ்போர்ட்ஸ்டா. வெற்றி தோல்வி சகஜம். தோத்தவன் இப்போ சுகமா தூங்கிக்கிட்டு இருப்பான். கவலைப்படாத அடுத்த மேச்சுல ஜெயிச்சுருவாங்க' என்று ஆறுதல் கூற முற்பட்டேன். அவன் அலட்டிக்கொள்ளாமல் திரும்பி 'இந்தியாவோ மேற்கிந்தியாவோ.. ஏதோ ஒரு இந்தியா ஜெயிச்சா சரி' என்று பெருமூச்சுவிட்டு, தலையைக் குனிந்துகொண்டு மெதுவாகச் சொன்னான்...

'அனுவுக்கு நிச்சயம் ஆயிடுத்தாம்டா'.

***

நன்றி. மரத்தடி.காம்

Sunday, December 18, 2005

* Adieu Amigos!!! *



* Adieu Amigos!!! *

சொலவடை என்றாலே ஏனோ கடைவாயோரம் புளிக்கும் இலந்த வடையும் நினைவுக்கு வருகிறது. இலந்த வடை இருக்கட்டும்.

"பழமொழியெல்லாம் சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது" என்று ப.கே.ச.வில் கமல் அடிக்கடி சொல்வார். "வந்ததும் தெரியல போனதும் தெரியலை" என்றொரு அடிக்கடி புழங்கும் வழக்கு இருக்கிறதல்லவா. அதுபோலவே சென்ற திங்கட் கிழமை வந்ததும் தெரியவில்லை. ஒரு வாரம் போனதும் தெரியவில்லை.

தொலைவிலிருந்தாலும் தமிழை விடாதிருக்க தேர்வடம் போன்ற உறுதியான வடத்தில் நம்மைப் பிணைத்திருப்பது இன்றைய தமிழிணையம். குழுமங்கள், இணைய தளங்கள், வலைப்பதிவுகள் என்று அதற்குப் பல்வேறு பரிமாணங்கள் இருந்தாலும் தமிழ்மணம் அவற்றை ஒருங்கிணைத்துத் தனித்து நிற்கிறது என்றால் மிகையில்லை.

வலைப்பதிவு வந்த புதிதில் சுஜாதா அவற்றை 'டைரிக்குறிப்புகள் / கையெழுத்துப் பிரதிகள் போன்றவை' என்று குறிப்பிட்டதோடு நில்லாமல், 'யார் யார் எப்போ என்னென்ன எழுதிருக்காங்கன்னு ஒவ்வொண்ணா போய் தேட முடியாது. எழுதியிருப்பவற்றைத் தேடி எடுக்கவும் முடியாது. ஆனா வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வரிசைப்படுத்தினால் அது நிறைய விஷயங்களைச் சுலபமாக்கிவிடும். அப்படி யாராவது ஒருங்கிணைக்க முயற்சிப்பார்களா என்று தெரியலை' என்று சொல்லி சில வாரங்களிலேயே தமிழ்மணம் வந்துவிட்டது. இன்று வரை வளர்ந்துகொண்டும் இருக்கிறது. தமிழ் இணைய உலகிற்கு தமிழ் மணத்தின் இந்தப் பங்களிப்பு சிறந்த ஒன்று என்றும் குறிப்பிட விரும்புகிறேன்.


நட்சத்திர வாரங்கள் தீபாவளிப் பட்டாசுகளாகவே இதுவரை அமையப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இந்த வாரம் சலனமற்று நிதானமாக ஓடும் ஆற்று நீரில் அமிழ்ந்து கிடக்கும் அசைவற்ற கூழாங்கல் போலவே அமைதியாகக் கழிந்தது. இது எனக்கு உகந்ததே. அனாவசிய பதற்றமோ, பரபரப்போ இல்லாமல் மற்ற எல்லா வாரங்களையும் போலவே இவ்வாரமும் கழிந்ததில் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் இவ்வாரத்திற்கென எதுவும் மெனக்கெடவில்லையே என்று மூலையில் ஒரு வருத்தமிருக்கிறது.

ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் சிறப்பையும் அடையாளங் காண்பதற்காம தமிழ்மண வானில் ஒவ்வொரு வாரத்தையும் நட்சத்திர வாரமாக ஆக்கி, ஒரு நட்சத்திரத்தைப் பிடித்திழுத்து துருவ நட்சத்திரமாகவும் ஆக்கி, 'அட பளிச்சுன்னு தனியா தெரியுதே என்னன்னு பாப்போம்' என்று பார்ப்போர் கவனத்தைக் கவர வைத்து, அந்நட்சத்திரத்தின் எழுத்துத் திறனை அனைவரும் பார்க்கும்படியாக வைக்க மேடை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் காசி, மதி மற்றும் குழு நண்பர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். இது மிக நல்ல முயற்சி என்று வாயால் சொல்லுவதைவிட அனுபவித்தே பார்த்துவிட்டேன்.

ஒரு சிறிய தொகுப்பாக நட்சத்திர வாரத்தில் பதிந்தவற்றைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.

அகர முதல-வில்

நட்சத்திரங்களும் ஒரு ஜீரோ வாட் பல்பும்
Yeh he hai right choice baby!
அந்தம் # 1 அந்தம் #7
அந்தம் # 2 அந்தம் #8
அந்தம் # 3 அந்தம் #9
அந்தம் # 4 அந்தம் #10
அந்தம் # 5 அந்தம் #11
அந்தம் # 6 அந்தம் #12
மதுரெய்
டூரிங் டாக்கீஸ்
மூன்றாம் உலகத்திலிருந்து ஏழாம் உலகத்தைப் பற்றி
குண்டல கேசி
லஞ்சம் சரணம் கச்சாமி
சினிமா இனிமா
Coming to America!

ராஜ பார்வை-யில்

ஸீரோ டிகிரி
வஹிபா பாலைவனம்-மஸ்கட்
சிரியா # 1 சிரியா # 2

அகவிதைகளில்

குளவி
என்னால் ஏன் அழ முடியவில்லை
தட்டான்

அந்தம் இறுதி அத்தியாயம் எனது 100-வது பதிவு - என்பதில் எனக்கு ஒரு பிரத்யேக மகிழ்ச்சியும் பெருமையும். நூற்றியொரு தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றுவது போல இந்த நூற்றியோராவது பதிவோடு நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்.

படைப்புகளைப் படித்து மறுமொழியிட்ட/இடாத நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அடுத்தாக பளிச்சிடவிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் எதிர்கால நட்சத்திரங்களுக்கும் வாழ்த்துகள்.

உற்சாகமாக அடுத்த வாரம் தமிழ் மணத்தில் மீண்டும் சந்திப்போம். அதுவரை

Adieu Amigos!!

***

* அந்தம் * # 12 - இறுதிப் பாகம்




* அந்தம் * # 12 - இறுதிப் பாகம்

என் ரூமுக்குள் புகுந்து அப்படியே கட்டிலில் சில நிமிடங்கள் மித இருளில் கிடந்தேன். ஏஸியின் குளிர் உள்ளங்காலில் தாக்க, நான் சட்டென்று எழுந்து உடைகளைக் களைந்துவிட்டுச் சுடு நீர் ஷவரில் ஆவி பறக்கக் கண்மூடி நின்றேன். உச்சந் தலையிலிருந்து உடல் முழுவதும் ஊடுருவிய நீர் இதமாக இருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேல் அப்படியே இருந்துவிட்டு வெளியில் வந்ததும், உடலிலிருந்து புகை ஆங்காங்கே மெலிதாகக் கிளம்பியது. எனக்கு அசதியாக இருந்தது. டிவியில் வெட்டி நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்க சில நொடிகளில் வெறுத்து, ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டுக் கண்மூடியதில், கடற்கரை நினைவுகள் மனதில் அலையாக மோதியது. அங்கு கடிதத்தைக் கொடுத்தது தவறோ என்றும் நினைத்தேன்.

ராகவன் சென்று சில வாரங்கள் ஆகிவிட்டது. அவனிருந்த சமயங்களில் சிரிப்பு தொலைந்த முகத்துடன் அலுவலகத்தில் நிலா வளைய வந்ததும், என்ன கேட்டாலும் எதுவும் சொல்லாததும் எனக்கு மிகுந்த கவலையளித்தது. இப்பொழுதுதான் சில தினங்களாக ஏதோ சிரிக்கிறாள். பேசுகிறாள். இன்றைக்கு டின்னரின்போது கேட்டுவிட வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன்.

சடசடவென்ற சத்தத்தில் எழுந்து திரைச் சீலையை விலக்கிப் பார்க்க மழை பெய்து கொண்டிருந்தது. சென்னையில் மழையா என்று ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இந்த ஊரே பிடிக்காது. இங்கும் பேசும் தமிழும்தான். அடுத்த நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டதில் அந்தப் பகுதி இருளில் மூழ்க, நட்சத்திர ஓட்டலின் ராட்சத ஜென்ரேட்டர் ஓடத் துவங்கிய ஒலி கேட்டது. சில வினாடிகளில் வெளிச்சம் திரும்ப, வெளியில் இன்னும் பகுதி இருளாக இருந்தது. மழை கடுமையாக இருந்தது.

ஃபோன் ஒலிக்க எடுத்ததும் நிலா 'வர்லயா இன்னும்?' என்றாள். உடனே கிளம்பி மடிக் கணினியுடன் அவள் அறைக்குச் செல்ல, கதவு திறந்திருந்தது. நான் உள்ளே நுழைந்ததும், 'க்ளோஸ் த டோர் ப்ளீஸ்' எனக் குரல் வர, 'என்ன பண்றே?' என்று கதவை மூடிவிட்டு உள்ளே சென்று பார்த்தால், தரையில் மண்டியிட்டு கட்டிலின் மீதிருந்த மடிக் கணினியில் ஆழ்ந்திருந்தாள். 'ஒனக்கும் சேத்து டின்னர் சொல்லிட்டேன்' என்றாள்.

யாருக்கு வேண்டும் அது என்று நினைத்துக்கொண்டேன். மெல்லிய மேற்கத்திய சங்கீதம் ஒலிக்க, நான் 'என்ன பாட்டு?' என்றேன். ஒரே ஒரு கூடு விளக்கு லேசான மஞ்சள் ஒளியை அறையில் தெளித்துக்கொண்டிருந்தது.

'இங்க வா. ஹியர் திஸ் அவுட்' என்று ஒலிமென்பொருளின் மானியை லேசாக உயர்த்த, அந்த மந்திரக் குரலுக்கு என் மனம் சட்டென மயங்கியது. 'யாரு பாடறது நிலா? நரம்பு சுண்டுது'

'கென்னி ரோஜர்ஸ். அவரோட கன்ட்ரி ம்யூசிக் கேட்ருக்கையா?'

'இல்லையே'. எனக்கு எல்லாப் பாடல்களும் 'இங்கிலீஷ் பாடல்கள்'தான். அதில் ராக், பாப் என்று ஏதேதோ வகைகள் இருக்கிறது என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் பாடலை வைத்து எந்த வகையென்று சொல்லக் கூடிய அளவு என் மேற்கத்திய இசையறிவு இல்லை.

'கம் ஹியர். திரும்பப் ப்ளே பண்றேன். என்னையே மொறச்சுப் பாக்காம, கண்ண மூடிட்டுக் கேளு. ப்ளீஸ்' என்று விட்டு ஒலியைச் சில வினாடிகள் நிறுத்த, நான் அவளருகில் மண்டியிட்டு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன். அறை நிசப்தமாக, வெளியே மழையோசை மட்டும் சீராகக் கேட்டுக்கொண்டிருக்க, லேசான கரகரப்புடன் மெதுவாக, குறைந்த இசையுடன் அந்தப் பாடல் துவங்கியது.

Lady....
I'm Your Knight
In Shining Armor
And I Love You
You Have Made Me
What I Am And....
I Am Yours....

எனக்குள் ஏதோ நிகழ்ந்தை உணர்ந்தேன். நிலா கைகளை மெத்தை மீது வைத்து முகம் புதைத்திருக்க, அவள் கூந்தல் பரவியிருந்தது. கூந்தலுக்குக் கீழே லேசாகத் தெரிந்த தந்த முதுகில் சின்ன மச்சத்தை அந்த மங்கிய விளக்கொளியிலும் பார்க்க முடிந்தது.

My Love,
There's So Many Ways
I Want To Say
I Love You
Let Me Hold You
In My Arms For...
ever More....

நான் நெகிழ்ந்தேன். அந்தக் குரல் என்னை அவஸ்தைப்படுத்தியது. இனம் புரியாத அவஸ்தை. நிலாவின் மணிக்கட்டுகளில் மெலிதான தங்க வளையல்கள் நிற வித்தியாசம் தெரியாமல் லேசாக மின்னின.

You Have Gone And
Made Me Such A Fool
I'm So Lost In Your Love
And Oh, Oh, Oh,
We Belong Together
Won't You Believe
In My Song?

நிலா மிகமிக லேசாக என் பக்கம் முகத்தைத் திருப்ப, அவள் சிவந்த கன்னத்தையும் தீட்டிய புருவத்தையும் பாதி உதடுகளையும் பக்கவாட்டில் கண்டேன்.

Lady,
For So Many Years I Thought
I'd Never Find You
You Have Come Into My Life And....
Made Me Whole....
Forever
Let Me Wake To See You
Each And Every Morning
Let Me Hear You Whisper Softly
In My Ear....

என் இதயம் இளகியது. என் சுவாசத்தின் ஒலி எனக்கே கேட்டது. நான் அவள் கையை மெதுவாகப் பற்றினேன். அவள் அசையாமல் மூடிய கண்களுடன் அப்படியே இருந்தாள்.

And In My Eyes....
I See No One Else But You
There's No Other Love
Like Our Love
And Yes, Oh Yes,
I'll Always Want You Near Me
I've Waited For You
For So Long....

கண்ணில் நீர் எட்டிப் பார்க்க, நான் மெதுவாக அவள் விரல்களைப் பற்றி உயர்த்தி, மிக மென்மையாக உதடுகள் திறந்து எச்சில்பட முத்தமிட்டு விலக்காமல் வைத்துக் கொண்டேன்.

Lady,
Your Love's The
Only Love I Need
And Beside Me Is
Where I Want You To Be
'cause, My Love,
There's Somethin'
I Want You To Know
You're The Love Of My Life,
You're My Lady

எனக்கு மலையுச்சியில் நின்று வாய் திறந்து உச்சஸ்தாயியில் அலறியழத் தோன்றியது. மூச்சுத் திணறியது. என் கண்ணீர் அவள் கையைத் தொட்டதும் அவள் கண் திறந்து என்னைப் பார்த்தாள். அவள் கண்களும் கலங்கியிருந்தன.

Mmmmmmm...Ladyyyyyyy......



கென்னியின் குரல் மெதுவாகத் தேய்ந்து மறைந்தாலும், காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது. அவள் மெதுவாக எழுந்து நிற்க, நானும் மெதுவாக எழுந்தேன். அவள் இடையை மெதுவாக வளைத்து என்னருகில் இழுத்தணைத்து, பெரும் தாகத்துடன், அவள் இதழ்களை அடைந்த நொடியில், லேசாகக் கண்களைத் திறந்து பார்க்க, அவள் கண்களில் மிகுந்த அச்சத்தைப் பார்த்து துணுக்குற்றேன். சட்டென்று விலக்கி 'என்ன செல்லம்? என்ன ஆச்சு?' என, அவள் நடுங்கும் அழு குரலில் 'நான் பண்றது துரோகமில்லையா?' என்று சொல்லவும், அவள் கண்கள் மடை திறந்தன. அவள் அப்படியே கட்டிலில் அமர்ந்து முகம் பொத்தி வாய்விட்டு அழுதாள். எனக்கு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை விர்ரென்று இருக்க, நான் உடைந்து அவள் முன் சரிந்து, அவள் மடியில் முகம் புதைத்துக்கொண்டேன். அவளின் வெம்மை என்னைத் தாக்கியது. அப்படியே அமர்ந்து சுவரில் சாய்ந்து, என் முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக்கொண்டு குலுங்கினேன். ஒரு பக்கம் காதல் தீயில் எரிய, மற்றொரு பக்கம் குற்றவுணர்வு என்னைக் கொன்றது. கண் திறந்து அவளைப் பார்க்கக் கூசினேன்.

சில நிமிடங்கள் அங்கு மயான அமைதி நிலவியது. நிலா எழுந்து குளியலறைக்குச் சென்றதை உணர்ந்தேன். நிமிர்ந்து பார்க்கையில் நான் தனியனாய் கட்டிலுக்கும் சுவருக்கும் இடைபட்ட இடத்தில் அமர்ந்திருக்க மழையோசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. மஞ்சள் விளக்கின் ஒளியில் அந்த அறையில் ஏஸியையும் மீறி வெம்மை பரவியது போலிருந்தது. நான் மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டு பெருமூச்சு விட்டேன். அழைப்பு மணி ஒலிக்க, கதவைத் திறந்ததில் சிப்பந்தி சிறிய அலங்கார வண்டியில் இரவு உணவைப் பரப்பி வந்து 'குட் ஈவ்னிங் ஸார். மேடம் ஆர்டர்ட் ·பார் டின்னர்' என, அவனை உள்ளே அனுமதித்ததும், பணிவுடன் அனைத்தையும் வைத்துவிட்டு தோலட்டையில் பில்லை நீட்ட, என் அறை எண்ணை கிறுக்கிக் கையெழுத்திட்டுக் கொடுக்கவும், நன்றி சொல்லி கதவை மூடி மறைந்தான்.

நான் மறுபடியும் வந்து தரையில் அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டேன். குளியலறையில் நீர் புழங்கும் சத்தத்தைத் தொடர்ந்து கதவு திறக்கும் ஒலி கேட்டது. நிலா என் அருகில் வந்ததை, அவள் நிழல் என்மீது படர்ந்து கண்களுக்குள் வெளிச்சம் குறைந்ததில் உணர்ந்து கொண்டேன். என் தோள்களை அவள் பற்றியதும், நான் நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். சுத்த நீரில் குளித்த மலரைப்போல் அவள் முகம் இருக்க, மெல்லிய புன்னகை இதழோரங்களில் இழையோடியது. கண்கள் மட்டும் லேசாகச் சிவந்திருந்தன. நான் குனிந்த தலையுடன் தரையைப் பார்த்து எழுந்து நின்றேன். அவள் என் தாடையைப் பிடித்து நிமிர்த்த அவள் கண்களைச் சந்திப்பது சிரமமாயிருந்தது. அவள் புன்னகை மேலும் விரிந்து என்னை உற்று நோக்கினாள். அந்தப் பார்வையில் என் அனைத்துக் கிலேசங்களும் மறைய, நான் அவளைத் தீர்க்கமாகப் பார்த்தேன். திடுமென்று எனக்குள் மந்திரக்குரல் ஓடியது..

உருக்கிய ஒருகோடி விழிப் பொலிவில்
உயிர் நாடி கரைந்தோட
கருத்தா கனவிதுவா
ஏதொன்றும் அறிகிலேனே...

அவள் என் தலையைப் பற்றியிழுக்க, அவளை என்னுடன் சேர்த்துக்கொண்டு, நொடியில் இதழ்களைப் பிடித்து, ஆழ்ந்து முத்தமிட்டேன். அவள் கண்கள் மூடியிருக்க, என் கண்களும் என்னையறியாமல் மூடிக் கொண்டன.

மங்கையவள் தேனிதழில்
பொங்குகின்ற வெம்மையெனைப்
பெருந்தீயாய்ச் சுட்டெரிக்க,
உயிர்தேடி விழி மூடினேனே...

என் வாழ்நாளின் மிக நீண்டதொரு முத்தம் அது. இழையளவும் பிரியாத ஆவேச முத்தம். ஒருவரையொருவர் தின்பது போன்ற முத்தம். உயிர் உருகிப் பருகும் முத்தம்.

சர்ப்பமெனப் பிணைந்திணைந்து
ஓருடலாகிட விழைந்து,
ஆவி சேர அணைத்தவளை,
தாகந்தீரப் பருகினேனே...

நான் அவளுக்கும், அவள் எனக்கும் சுவாசித்த முத்தம். மீண்டும் மீண்டும் வேண்டுமென்று தோன்றிய முத்தம். முத்தம் இவ்வளவு இனிதா என்று அன்று வியந்தேன்.

விரகதாபக் கடல் பொங்கி,
உயிர்ப் பசியில் மதி மயங்கிட,
காற்றையும் மறுத்திங்கு -
ஓருயிரில் வாழ்ந்தோமே...

நெடுநேரம் நின்று கொண்டிருந்ததை உணர்ந்து மிக மெதுவாக அவளைத் தாங்கி கட்டிலில் சரிந்தேன்- இதழ் விலக்காமல்.

பலமிழந்த கால் தொய்ய,
மலரவளின் இடைபற்றி,
பூமஞ்சம் அதிராமல்,
புகையாகப் பரவினோமே...

அதிவேகத்தில் மனங்களிரண்டும் கை கோர்த்து முடிவில்லா ஒற்றையடிப் பாதையில் ஓடிக் கொண்டிருந்தது போன்று உணர்ந்தோம். விளக்கில் தொங்கிய நூலை இழுக்க, அறையில் இருள் பரவியது. திரைச்சீலைக்குப் பின் அவ்வப்போது மின்னலின் ஒளி விழுந்து கொண்டிருக்க மழை அடாது பெய்து கொண்டிருந்தது. நான் அவள் உதடுகளைச் சில வினாடிகள் விடுவித்தேன். அவள் படபடத்து 'எனக்கு இது போதுண்டா.. ஏழு ஜென்மத்துக்கும்... I love you sweet heart..' என, சிறு அவகாசத்தில் வேக மூச்சு வாங்கிக் கொண்டு, மறுபடியும் தேடுதலைத் தொடர்ந்தோம்.

பொய்யிருளில் புதைந்திடாது,
மெய்க்காதலில் கசிந்துருகி,
உளமுணர்ந்து, உயிருணர்ந்து,
உள்தேடிச் சென்றோமே...

அவள் மூச்சிறைத்தாள். நான் அவள் முகத்தில் இதழ்களால் பரவ அவள் என் கழுத்தில் முத்தமிட எனக்குச் சிலிர்த்தது. அவளை இறுக்கிக்கொண்டேன். பரவசத்திற்கும் வேதனைக்கும் இடைப்பட்ட உணர்வில் நாங்கள் தவித்தோம்.

காதலெச்சிலினில் நாங்கள்
புனித நீராடியதும்
கன்னங்கள் சிவந்திடவே
கண்மூடித் தவித்தோமே...

அந்தத் தேடலின் இயக்கத்தை விளக்க ஆயுள் போதாது. ஈர்ப்பு விசையில்லா அண்ட இருள்வெளியில் கால் பரவாது தவித்து பற்றிக்கொள்ள கிடைத்த ஒன்று நழுவிப் போகும்போது உயிர் நழுவும் தவிப்புடன் நிலா.. நிலா என்று மெளனமாக அலறினேன்.. அவள் குரல் எங்கோ கேட்டது. ஆவி சேர ஒருவரையொருவர் புதைத்துக் கொண்டு, இருள் வெளியில் மிதந்து, நாபிக் கமல அக்னி மேலெழ, மூச்சுப் பை நிறைந்து, அடிவயிறு நடுங்கி, கால்கள் பலமிழந்து, எலும்புகள் இறுகி, சுவாசம் உள்ளே முட்டிமோதி வெளியேறத் துடிக்க, நெஞ்சடைத்து கண்கள் அழுத்தத்தில் திணற, காதுகள் அடைத்துக் கொண்டு, உடலின் ஒவ்வொரு நரம்பும் நேர்க்கோட்டுக் கம்பிகளாக மாற யத்தனிக்க, உடல் வில்லாய் வளைந்து, ஆவியை உடலிலிருந்து அந்தக் கணத்தில் தனியாகி உணர முடிந்து, ஆவேச நதிகளின் சங்கமச்சுழல் வேகத்தில் நாங்கள் உயிர் அதிர..... ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..........

சிறுபந்தினில் திணித்திட்ட
பெருஞ்சக்தி திரண்டெழுந்து,
பேரூழிப் பெருவெள்ளமாய்,
மடையுடைத்துச் சீறிட,
இருள்வெளியில் வெடித்திட்ட,
பெருவெடிப்பின் சிதறல்போல்,
விடுபட்டுச் சிலிர்த்தெழுந்தன,
வல்லியதிரு ஆவிகள்.


**********

'ஓ மைகாட். டாக்டர்.. ஹி இஸ் ப்ளீடிங்..' என்று யாரோ அலறினார்கள். என்னைச் சுற்றி அவசரகதி சத்தங்களையும் இயக்கங்களையும் உணர்ந்தேன். உடல் லேசாக இருந்தது. கண்களைத் திறக்க முயற்சித்து, சூரியனை ஓரடி தூரத்தில் பார்த்தது போலிருக்க, ஒளி வெள்ளத்தைத் தாங்காமல் மூடிக் கொண்டேன். இப்போது உடலில் வலியற்று சுவாசம் மெல்லியதாக இருந்தது. எனக்கு அதுவும் இல்லாமல் இருக்க விருப்பமாயிருந்தது. சுற்றியும் சூழ்ந்து கொண்டு, ஏதேதோ செய்தார்கள். என் உடல் அங்குமிங்கும் அசைந்தது. கண்ணுள் இளஞ்சிவப்பு வெளிச்சம் குறைந்துகொண்டே வர, அந்தி சாய்ந்தது. முழுவதும் இருளாக, அந்த நீலக்கருமையில் முகத்தைத் தேய்த்துக் கொள்ளலாமென்று அவாவினேன். அண்ட வெளியின் நிசப்தம் என்னை மறக்கச் செய்ய, சூன்ய இருளில் எதையோ தேடி விழிகளைப் பிதுக்கி விழித்துப் பார்த்தேன். ஆங்காங்கே ஒன்றொன்றாகக் கண்சிமிட்டத் துவங்கி வினாடிகளில் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பெருகின நட்சத்திரங்கள். அதோ சற்று அதிகமாக ஒளிர்கிறது ஒரு நட்சத்திரம். பார்த்துக் கொண்டிருக்கையிலேயே பெரிதாகத் துவங்கி வினாடியில் முழு நிலவாக ஒளிவிட நான் கண்களை விரித்தேன். நிலா. நிலா எங்கே? சட்டென்று பதட்டம் தொற்றிக்கொள்ள சுற்று முற்றும் விழிகளைச் சுழற்றிப் பார்த்தால் ஒன்றையும் காணோம். கீழே குனிந்து என்னையே பார்த்துக் கொண்டால் ஆச்சரியம்! நான் காணவில்லை. எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது, என்னைத் தவிர. சுவாசிக்கிறேனா என்று கவனித்தால் இல்லை. தலையைத் தொடலாம் என்று கையைத் தூக்கினால் அட ஒன்றுமே இல்லை. எப்படிப் பார்க்கிறேன்? ஒரு கண்ணாடி இருந்தால் பரவாயில்லை என்று தோன்றியது. இப்படி நினைப்பது என்னுள் எங்கு நடக்கிறது என்று புரியவில்லை. பார்வை மட்டுமே நானா? எதைக் கொண்டு பார்க்கிறேன் என்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. என்னால் மீன் போல நீந்த முடிந்தது. எனக்கொன்றும் புரியவில்லை. நிலவை உற்றுப் பார்த்தேன். திடீரென்று பின்னிருந்து இழுத்தாற்போல் நிலவும், அனைத்து நட்சத்திரங்களும் அதீத வேகத்தில் பின்வாங்கி, ஒன்றாகச் சேர்ந்து ஒரு வெளிச்சப் பொட்டாகி, தேய்ந்து தொலை தூரத்தில் மறைய, எல்லாமே இருள். எத்திசையும் தெரியவில்லை. மேல்கீழ் புரியவில்லை. விழித்திருக்கிறேனா தூங்குகிறேனா என்று தெரியவில்லை. என்னுள் பதைபதைப்பு கூடியது. எனக்கு ஒன்றும் வேண்டாம். உன்னி, அங்கமாலி, நேந்திரம் சிப்ஸ், ஸ்காலா, குமார், ஜார்ஜ், அலோக், ராகவன், ரோட்கிங், ஆஸ்திரேலியா, கப்பல், கடல், அலைகள், வானம் எதுவுமே வேண்டாஆஆஆஆஆம். நிலா.. நிலா.. நிலா.. நிலா.. நீ மட்டும், நீ மட்டும் வந்து விடேன். நீ மட்டும்.



* அ ந் த ம் *

* அந்தம் * # 11



* அந்தம் * # 11

அது ஜனவரி 2.

மாலை கிளம்புமுன் நிலா வந்து 'நாளைல இருந்து நா லீவு. டூ வீக்ஸ்' என்றாள்.

'என்ன திடீர்னு?' என்று கேட்டுவிட்டு சட்டெனப் புரிந்து 'ஓ ராகவன் வரார்ல? கன்ஃபர்ம் ஆயிடுச்சா?' என்றேன்.

'ஆமா. அவன் பேரன்ட்ஸ் பழவந்தாங்கல்ல இருக்காங்க. அங்கதான் இருப்பான். நான் நாளைக்கு நைட்டு மெட்ராஸூக்குக் கிளம்பறேன். நாளன்னிக்கு நைட் ராகவன் மெட்ராஸ் வரான். அங்க இருந்துட்டு ரெண்டு வாரம் கழிச்சு ரெண்டு பேரும் இங்க வரோம். ஒரு மாசம் கழிச்சு அவன் கெளம்பறான்'

'ம்ம் சரி' என்று நான் தலைகுனிந்து கொண்டேன்.

'நான் மட்டும் ஆசையோட போறேன்னு நினைக்கறயா?' என்று என் முகத்தை நிமிர்த்தி கண்களை ஊடுருவ 'இல்லை' என்றேன்.

'போகாதேன்னு சொல்லு, போ மாட்டேன்'

'போகாதே..'

'போகணுமே.. வேற வழியே இல்லையே. ஒனக்கு ஏதாச்சும் தோணுதா?' என்று குழந்தை போல் கேட்டதும் மனதை கவலை சூழ்ந்து கொண்டது. மனம் முழுவதும் மந்திரம் போல் அவள் பெயரை மானசீகமாக உச்சாடனம் செய்து கொண்டிருக்க, நான் கூண்டிலிருந்து அவளை விடுவிக்க வழி தேடினேன். நான் செய்து கொண்டிருக்கும் காரியத்தின் விளைவுகள் சட்டென உறைத்தது. நிலா- மணமானவள்- என் சக பணியாளி. நானே இப்படித் தடம் பிறழலாமா? என்று என்னைக் கேட்ட மனசாட்சியை 'போடா பொறம்போக்கு, ஒனக்கு என்ன தெரியும்?' என்று திட்டினேன்.

'அதைக் கூண்டுன்னு ஏன் நினைக்கறே?'

'போடா கூமுட்டை. ஐ லவ் ஹர். அவ என்னோட பொண்டாட்டி. எங்க ரெண்டு பேருக்கும் அப்பயே கல்யாணம் ஆயிருச்சி'

'அவ ஒழுங்கா இருந்தா புருஷனோட. ஒனக்குத்தான் காமப் பித்து. அதான் பின்னாடி அலயுற. அவ சுலபமா பழகுறத பாத்து வந்துருவான்னு கணக்கு போட்டுட்ட. அவ தனிமைய பயன்படுத்திக்கப் பாக்குற. ஒரு தடவை படுத்து எழுந்துட்டேன்னா எல்லாம் சட்டுன்னு விலகிரும், சூரியன் பார்த்த மஞ்சு மாதிரி. எல்லாம் ப்ரேமை. இளவட்டத் துள்ளல்'

'ஷட் அப்'

'அரிப்பு'

'கெட் லாஸ்ட்'. எனக்குச் சினம் தலைக்கேறியது. தலையை உலுக்கிக்கொள்ள நிலா கவலையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என் சிந்தனையின் தீவிரத்தை என்னால் தாங்க முடியவில்லை. மூச்சு வேகமானது.

'என்னாச்சுடா?'

'க்ரைஸிஸ் மேனேஜ்மென்ட். ஒண்ணும் இல்ல விடு'

'எனக்கு போகப் பிடிக்கலை'

'போகாதே. என்னோட வா. என் சொந்தூருக்குப் போயிரலாம். திருஈய்ங்கோய் மலைக்குப் பின்னாடி சின்ன கிராமம். ஒரு பய கண்டுபிடிக்க முடியாது. தேவைன்னா மலைக்கு மேல கூட போயிக்கலாம்'

'ராகவன் கண்டுபிடிச்சுருவான். என்ன தான் மொதல்ல கொல்வான். அப்புறம் ஒன்ன'

'என்னைக் கொல்லட்டும். ஆனா ஒன்ன தொட விட மாட்டேன்'

'நா ஒன்ன சந்திருச்சுருக்கவே கூடாது'

'நோ அப்படி சொல்லாதே. நாந்தான் ஒன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேன்'

நிலா கோபத்துடன் 'யூ இடியட். டோன்ட் யூ லவ் மீ?'

'யெஸ். ரொம்ம்ம்ப'

'என்ன மறக்கச் சொன்னா மறந்துடுவியா?'

'செத்துருவேன் நிலா'

'தென் ஷட் அப்'

'........'

அங்கே கனத்த அமைதி நிலவியது, மனங்களில் சூறாவளியுடன்.

'நாளைக்கு எந்த டிரெயின்?'

'முத்து நகர். எட்டரை மணிக்கு'

'நானும் வரேன்'

'வழியனுப்பவா? வேண்டாம்'

'இல்லை மெட்ராஸூக்கு வரேன்'

'ச். ஒனக்கு பைத்தியமா? வேணாம். அப்பா கூட வரார்'

'என்னால ஒன்ன பாக்காம இருக்க முடியாது நிலா. நானும் வரேன்'

'என்னாலயும் தான். ஆனா நீ வராதே. ஒனக்கு கஷ்டம் வந்தா என்னால தாங்க முடியாது'

'என்னாலயும் ஒனக்கு கஷ்டம் வந்தா தாங்க முடியாது. நா ஒங்கூட இருக்கேன் நிலா'

அவள் விரக்தியுடன் சிரித்து 'லெட்ஸ் ஸ்டாப் ட்ரீமிங். ஓ.கே? நான் நாளைக்கு போகணும். அதான் நிஜம். நம்ம என்ன பண்ணாலும் மாத்த முடியாது. கீப் கொயட். ஒரு மாசம் கழிச்சு அவன் போனதும் நம்ம டிஸ்கஸ் பண்ணலாம். சரியா?' என்றாள்.

எனக்கு வேறு வழியில்லை என்று தெரிந்தும், மனம் கேட்கவில்லை. தவித்தேன். மறுநாள் இரவு ரயில் நிலைய முருகன் இட்லிக் கடையில் பார்சல் வாங்கி அவள் அப்பாவிடம் கொடுக்க, அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. டிரெயின் கிளம்ப இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்க, உள்ளே சென்று, அவர்களருகில் அமர்ந்து பொதுவாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

'இந்த தடவயாவது மருமகப் பிள்ளைட்ட நம்மூர்லயே இருந்துருங்கன்னு சொல்லணும். எத்தினி நாளைக்கு வருசத்துக்கு ஒரு மாசக் கணக்குல வாழறது? எனக்கும் பேரம் பேத்தி பாக்கணும்னு இருக்காதா? என்ன சொல்றீங்க தம்பி?'

நான் மையமாகச் சிரித்து வைத்தேன். 'பேரம்பேத்திதானே? பாத்துட்டா போச்சு'

'தம்பி சொல்றத கேட்டுக்கம்மா. இந்த வருசமாச்சும்..' என்றவரை மறித்து 'அப்பா. கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? இப்போ கொழந்தைக்கு என்ன அவசரம்?'

'இப்படித்தான் தம்பி. நா எப்போ சொன்னாலும் என் வாய அடச்சுப்புடுறா. என்ன ஒண்ணு, இத்தன நாள் இவளுக்கு மருமவன் ஊர்ல இல்லாதப்போ மொகத்துல சிரிப்பே இருக்காது. ஒங்க கம்பெனிக்கு வந்தப்புறம்தான் அவள நா ரொம்ப சந்தோஷமா பாக்குறேன். ஒங்கள மாதிரி நல்லவங்க கூட இருக்குறது எனக்கு நிம்மதி தம்பி' என்றதில் நான் இரட்டை அர்த்தம் கற்பனை செய்து கொண்டு மகிழ்ந்துகொண்டேன்.

நிலாவும் என்னைப் பார்த்து புன்னகைத்து 'ஆனா இந்தாளு ரொம்ப மோசம்பா' என்றாள்.

'ச்.. அப்படியெல்லாம் பேசக்கூடாது. அது நம்ம வீட்டுத் தம்பி. அவர அப்படிச் சொல்லாதம்மா' என்றார்.

'ஏதேது விட்டா என்ன வெளில போச்சொல்லிருவீங்க போல இருக்கு?' என்றாள் செல்லக் கோபத்துடன்.

'அதான் என்னிக்காவது ஒரு நாளைக்கு மாப்பிள்ளையோட போப்போறியே! தம்பி நம்ம வீட்டுல கூட இருந்துக்கலாம்' என்றார்.

கீழே இறங்கிக்கொண்டு, இருள் ப்ளாட்பாரத்தில் சன்னலை ஒட்டி நின்று நிலாவையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் கிளம்பும் சமயத்தில் கையை வெளியே நீட்ட, நான் அந்த மலரைப் பற்றி முத்தமிட்டேன். அவள் கையாட்டல் மறைந்து, ரயிலின் கடைசிப் பெட்டியின் சிவப்புப் புள்ளியும் இருளில் தேய்ந்து மறைய, நான் நெடுநேரம் அது சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனம் என்னை விட்டுச் சென்றது போல் உணர்ந்தேன். அடுத்த பதினைந்து நாட்கள் எல்லாமே அர்த்தமில்லாமல் மகா அறுவையாக இருந்தது. நான் ஒருமுறை கொச்சினும் ஒரு முறை திருவனந்தபுரமும் செல்ல நேர்ந்தது. சொனாட்டாவின் வரலாற்றில் இவ்வளவு வேகமான ராப்பிட் இம்ளிமன்டேஷன் நடந்ததில்லை என்று கெளதமின் மின்னஞ்சலைக் காட்டி குமார் கை குலுக்கி 'நீ மனுஷனே இல்லடா. க்ரேட். கலக்கிட்ட. கொச்சின் உன்னி ஃபோன் பண்ணான். சந்தோஷமா நஷ்டக் கணக்கு ப்ரிண்ட் எடுத்து கோவிந்துக்கு அனுப்ச்சி, சிஸ்டம் நல்லா இருக்குன்னு ஆனந்த கண்ணீர் விட்டு அழுதான்' என்றார். ட்ரெயினிங்கின் போது, அதுவரை கருப்பு வெள்ளை வாழ்க்கை நடத்திய ஆட்கள், வின்டோஸில் அட்டகாசமான வர்ணங்களுடன் ஸ்காலாவைப் பார்த்ததும், காதலாகி மானிட்டரை அணைத்துக் கொண்டதையும், முதன் முறையாக எலி பிடித்ததையும் சொல்ல, அறை அதிர சிரித்தார்கள்.

'யூ நோ ஜார்ஜ்? இவன் டிரெயினிங் அப்ப move the mouse to the right top corner of the screen and click the 'x' to close the window-ன்னு சொல்லிருக்கான். ஒரு யூஸர் என்ன பண்ணான்னு தெரியுமா? மெளஸைத் தூக்கி நெசமாவே மானிட்டர் வலதோர மூலை மேல வச்சு அமிக்கிட்டு ஒண்ணும் ஆலயேன்னு கேட்டிருக்கான்' என்று சிரிப்பினூடே சொல்ல ஜார்ஜ் வயிற்றைப் பிடித்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறி ஐந்து நிமிடங்கள் சிரித்துவிட்டு கண்ணில் நீருடன் திரும்ப வந்து அமர்ந்தார். எனக்கு அசுவாரசியமாக இருந்தது.

அங்கமாலி ப்ளான்ட் மேனேஜர் ரகசியமாக என்னிடம் 'யாரோ ஆஞ்சலீனாவாமே. கம்ப்யூட்டர்ல அவளோட படம்லாம் கெடைக்கும்னு சொல்றாளே. எங்கன்னு தெரியுமோ?' என்று கேட்டதையும் ஜார்ஜிடம் கேட்டுக்கொண்டு அனுப்புகிறேன் என்று சொன்னதையும் சொல்லவில்லை. சொன்னால், ஜார்ஜுக்கு நெஞ்சுவலி வருமென்று தெரியும்- மேலும் சிரித்து. ப்ளான்ட் மேனேஜருக்கு ஐம்பதுக்கு மேல் ஆகி, ஆஞ்சலீனா ஜோலி வயதில் பெண் இருக்கிறாள்.

இப்படியான ஒரு அவசரக் காலையில் அலுவலக வேலையில் முழ்கியிருக்க, தோளில் கை விழுந்ததும் திரும்பப்பார்த்து அசந்துபோனேன். பிளேடு விளம்பரத்துக்கு வரும் மாடல் மாதிரி, அகன்ற தோள்களுடனும், ஆறடி உயரத்தில், மழுமழு பச்சைத் தாடையுடன், ரோஸ் உதட்டுப் புன்னகையுடன் என்னைப் பார்த்து அந்த ஆள் 'நைஸ் டு மீட் யூ. ஐயாம் ராகவன்' என்றதும் நான் திடுக்கிட்டேன். அதற்குள் இரண்டு வாரங்கள் ஓடிவிட்டதா என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவன் பரந்த முதுகின் பின்னிருந்து நிலா வெளிப்பட்டு 'ஹாய். செளக்கியமா?' என்றாள். என்னிடம் வந்து என் கையை பிடித்துக் குலுக்கி விட்டு ராகவனைப் பார்த்து 'ஹி இஸ் த ஒன் ஐ டாக்டு டு யூ' என, எனக்குக் குழப்பமாக இருந்தது. என்ன சொல்லியிருப்பாள்? ராகவன் சினேகத்துடன் கை நீட்ட, பற்றிக் குலுக்கினேன். எங்கள் உள்ளங் கைகளுக்குள் ஒரு கல் இருந்திருந்தால் பொடியாகியிருக்கும்.

'ஜிம் போறீங்களா' என்று கேட்டுவிட்டுப் புன்னகைத்தான். 'இல்ல எப்பயோ போனது' என்றேன். அவர்கள் குமாரின் அறைக்குள் செல்ல நான் திரும்பி மானிட்டரில் ஆழ்ந்தேன். மனம் எங்கோ ஊசலாடியது. பத்து நிமிடங்கள் கழித்து மறுபடியும் தோள் தட்டப்பட, திரும்பினால் இம்முறை நிலா. ராகவன் குமாரின் அறைக்குள் இன்னும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருக்க, 'எப்படி இருக்கே?' என்றாள். 'இருக்கேன். நீ?'

'ம்ம். ஐ மிஸ்டு யூ'

'மீ டூ'

'ஒங்கிட்ட நிறைய பேசணும்.'

'நானும்தான்'

'ஆபிஸ்ல எவ்ளோ நேரம் இருப்பே?'

'எவ்ளோ நேரம் இருக்கணும்?' என்று கேட்ட என்னைக் கனிவுடன் பார்த்தாள். அவள் மனம் துடித்ததை உணர முடிந்தது.

'நான் பத்து மணி வாக்குல ஃபோன் பண்ணவா?'

'சரி. ஆனா வீட்டுல இருந்து எப்படி பண்ணுவ? ராகவன் இருப்பாரே?'

'அவனும் அப்பாவும் ஒம்பதரைக்கு அண்ணா நகர் ரிலேட்டிவ் வீட்டுக்கு போவாங்க. நான் வர்லைன்னுட்டேன். வர்றதுக்கு ரெண்டு மணியாயிடும். பத்து மணிக்கு ஒனக்கு நான் ஃபோன் பண்றேன்'

'வேண்டாம். நீ பண்ணாதே. நான் பண்றேன்'

'சரி'ராகவன் குமாரிடம் சிரித்துக்கொண்டே வெளியே வந்து கைகுலுக்கி விடைபெற்று, என்னைப் பார்த்து கையசைத்துவிட்டு நிலாவின் கையைப் பற்றி கிட்டத்தட்ட இழுத்துச் செல்ல, எனக்கு வலித்தது. அவள் திரும்பி என்னைப் பார்த்து வருகிறேன் என்று தலையாட்டிச் சென்றாள்.

குமார் வந்து தட்டி 'என்னப்பா. ஒன் வில்லன் வந்தாச்சு போலருக்கே?'

'குமார் ப்ளீஸ்.. போதும்..'அவர் என் தோளை அணைத்துக்கொண்டு 'ஸாரி. தப்பா நெனைக்காதேடா. ஐயாம் வொரீட் அபவுட் யூ. என்னோட சிறந்த தோழனை இழக்க விரும்பல. அதான். கொஞ்சம் யோசிப்பா. இந்த நிலா இல்லைன்னா இன்னொரு நிலா' என, நான் மெளனித்தேன்.

'ஒனக்கு ஏதாவது உதவி தேவைன்னா கேளு. எதா இருந்தாலும்' என்று திரும்பச் செல்ல நான் எட்டு மணிவரையில் இருந்துவிட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறி, ரோட்கிங்கை உதைத்துத் தேனி ரோடில் செலுத்தி, அடுத்த அரைமணி நேரத்தில் நிலா வீட்டைக் கடந்து சில நூறு மீட்டர் தள்ளி இருந்த டீக்கடையில் நிறுத்திவிட்டு, கடைக்கு வெளியே இருந்த மரப்பலகையில், மொய்த்த காட்டுக் கொசுக்களை விரட்டாமல் பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்தேன். கடையை ஒட்டியே ஒரு சிறு ஷெட்டில் மேலும் சில பெஞ்சுகள் போடப் பட்டிருக்க, ஈரம் தோய்ந்து ஈக்களும் மொய்த்துக் கொண்டிருந்தன. சாலையோர மினி மோட்டல் போலும்.

'என்ன சாப்பிடுறீங்க தம்பி? சூடா பொரோட்டா சால்னா தரட்டுங்களா?'

'வேண்டாம்ணே. செலமான்ல இருந்து வர்ரேன். இன்னும் போவணும். ஒரு டீ மட்டும் தாங்க' என்றதும் 'அம்புட்டு தொல வண்டிலயா வந்தீங்க? பஸ்ஸூல வந்துருக்கலாம்ல?' என்றார்.

'பஸ் டைரக்ட் கெடயாதுண்ணே. அடச்சுக்கிட்டு வரணும். இதான் வசதி'

'அது சரி. எங்க போறிங்க? தேனிக்கா?'

'இல்ல கரும்பட்டிக்குண்ணே'

'கரும்பட்டி இதேன். யாரப்பாக்கணும்?'

'சாமிநாதன்னு.. யுனிவர்சிடில வாஜ்ஜாரா இருந்தார்ல. தெரியுமா?'

'ஓ ஐயாவ கேக்குறீங்களா? அவரு வீடு அங்கிட்டுல்ல இருக்கு' என்று நான் வந்த வழியைக் கைகாட்டி நிலாவின் வீட்டைக் காட்டினார். 'அதோ மஞ்ச லைட் எரியுதுல்ல? ரோட்ட ஒட்டி.. அதேன் அவுரு வீடு'

'அப்படியா. ரொம்ப நன்றிண்ணே. நல்ல வேளை. ஒங்க கடைல நிறுத்துனேன். இல்லாட்டி தேனிக்குல்ல போயிருப்பேன்?' என்றதை அவர் மகிழ்ச்சியுடன் ஆமோதித்து 'புதுப்பாலு போட்ருக்கேன். ஒரு அஞ்சு நிமிசம் இருக்கறீங்களா? புதுத்தூளு போட்டு இஸ்ட்ராங்கா ஒரு டீ தாரேன்' என்று வேலையில் கவனமானார்.


ஒன்பதரை மணியளவில் வெள்ளை அம்பாஸடர் வந்து நிற்க, நிலாவின் வீட்டிலிருந்து ராகவனும், அவள் தந்தையும் ஏறிக்கொண்டு சென்றது நிழலாகத் தெரிய, நான் டீயையும் சில பிஸ்கெட்டுகளையும் முடித்திருந்தேன். கடைக்காரரிடம் நன்றி சொல்லி பணம் கொடுத்துவிட்டு, வண்டியைக் கிளப்பி நிலா வீட்டின்முன் நிறுத்த, நிலாவின் முகம் ஜன்னலில் தெரிந்தது. நான் ஒரு புன்னகையுடன் காத்திருக்க, கதவு திறந்து நிலா 'ஓ மை காட். ஓ மை காட். உள்ள வா' என்று படபடத்து உள்ளே வந்ததும் 'ஒனக்கு எவ்ளோ தைரியம்? ஐ கான்ட் பிலீவ் திஸ்' என்றாள் புன்னகைத்து.

அவளுடன் இருப்பதே சுகம் என்பதால் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவளால் இன்னும் நான் அங்கிருப்பதை நம்பமுடியாமல் வெட்கமும் பயமும் கலந்து நிலைகொள்ளாமல் இருந்தாள். வீட்டில் சந்தடி சாக்கில் அடிக்கடி அவளை முத்தமிட 'ஸ்... பாட்டி இருக்காங்க.. நீ இவ்ளோ தைரியசாலின்னு தெரியாம போச்சே' என்று சிணுங்கினாள். பாட்டியை விழுந்து வணங்கிவிட்டு, அவருக்கு பிடித்த பழைய பாடல் ஒன்றைப் பாடி; அவர் அணைப்பைப் பெற்றுவிட்டு, நிலாவிடம் பனிரெண்டு மணிக்கு விடைபெற்றுக் கிளம்பினேன்.

தொடரும்...

Saturday, December 17, 2005

* இவை காணவில்லை *

ராஜபார்வை என்ற வலைப்பதிவில் ஐந்தாறு முறை தொடர்ந்து முயன்றும் பஹ்ரைனைப் பற்றிப் போட்ட ஒரு பதிவைக் காண முடியவில்லை. என்னாயிற்று என்று தெரியவில்லை.

இன்னும் இரண்டு பதிவுகள் போட்டிருக்கிறேன். அவற்றின் சுட்டி இதோ:

"ஸீரோ டிகிரி"

"மெர்க்குரிப் பூக்கள்-33 : வஹிபா பாலைவனம்"

***

* அந்தம் * # 10



* அந்தம் * # 10

காலையில் நிலாவின் வாடிய முகத்தைக் கண்டு துணுக்குற்றேன்.

'என்ன ஆச்சு செல்லம்?' என் குரலில் தொனித்த உரிமையில் எனக்கு மகிழ்வாக இருந்தது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிவிட்டது நாங்கள் சந்தித்து. நான் அவளை என் மனைவியாகவே கருதிப் பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவள் கன்னங்கள் சிவப்பதையும், கண்களின் ஒளியும் கண்டு ஆனந்தம் பெருகும். ஒவ்வொரு நொடியும் அவளையே சிந்தித்தேன். அவளருகாமையில் என்னுள்ளே எப்போதும் ஒரு மின்சாரம் ஓடிக் கொண்டிருக்கும்.

'ஒண்ணும் இல்லப்பா' என்றவளின் கண்ணில் பொய்யிருக்க, அவளை அழைத்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வெளியேறினேன். எங்கள் அலுவலகம் இருந்தது ஒரு சதுரக் கட்டடம், நடுவில் உள் சதுரமாக இடைவெளி விட்டு கட்டப்பட்டிருப்பதால், எல்லா தளங்களையும் எல்லா தளங்களிலிருந்தும் பார்க்க முடியும். ஒவ்வொரு தளத்திலிருந்த அலுவலகங்களிலிருந்து, புகை பிடிப்பதற்காகவும், அரட்டை அடிப்பதற்காகவும், வெளியே வந்து கைப்பிடிக் கம்பியைப் பிடித்துக் கொண்டோ சாய்ந்து கொண்டோ மேலேயும் கீழேயும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். காரிடாரில் நடந்து கைப்பிடிக் கம்பியை பிடித்து நாங்கள் குனிந்து கீழே பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம் ஒருவரையொருவர் ஒட்டிக் கொண்டு.

'சொல்லு கண்ணம்மா.. என்ன ப்ராப்ளம்? ஏன் டல்லா இருக்கே?'

'நேத்திக்கு ராகவன் ஃபோன் பண்ணினான்'

'ம்..'

'நெக்ஸ்ட் வீக் வெகேஷன்ல வரானாம் ஒரு மாசம்'

'அப்படியா?' நான் வயிற்றில் சங்கடமாக உணர்ந்தேன்.

'முன்னாடில்லாம் ஒவ்வொரு வருஷமும் அவன் எப்போ வருவான் எப்போ வருவான்னு காத்து ஏங்கிக் கிடப்பேன். ஆனா இப்போ ஏன் வரான்னு தோணுதுடா' என்றாள் கசியும் கண்களுடன்.

'செல்லம். ப்ளீஸ். அழாதே.. என்ட்ட வந்துடு'

'முடியாதுடா. நீ நெனைக்கற மாதிரி அவ்ளோ ஈஸியில்ல அது'

'ஏன்?'

'ராகவன பத்தி ஒன்ட்ட எவ்ளோ சொல்லிருக்கேன்? நான் ஒன்ட்ட வந்துட்டா அவன் பாத்துட்டு சரின்னு போயிடுவானா?'

'........'

'எனக்கு பயமாயிருக்குடா. அவன் முரடன். முரட்டுத்தனமா என்ன லவ் பண்றவன். எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இன்னொரு ஆள் இருக்கறத அவனால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. அவன் என்ன செய்வான்னு என்னால நெனச்சுப் பார்க்க முடியலப்பா'

'என்ன பண்ணுவார்? அடிப்பாரா? அடிக்கட்டும். நா.....'

நிலா என்னை மேலும் பேச விடாமல் தடுத்தாள் 'ஒனக்கு ஒரு சின்னக் கீறல் விழுந்தா கூட நான் செத்துருவேன்'

'சே. சே. அப்படி பேசாத கண்ணம்மா. ப்ளீஸ் அழாதே.. ப்ளீஸ்' அவளை எப்படி ஆறுதல் படுத்துவதென்றே தெரியாமல் திணறினேன். தொடல்களில்லாத காதல் ஒரு நரக வேதனை. அதுவும் பொதுவில் இத்தகைய தருணங்களில் அணைத்து ஆறுதல் படுத்தத் துடிக்கும் மனதை கட்டுப்படுத்துவதற்கு அதீத பிரயத்தனம் செய்யவேண்டும். அன்றும் செய்தேன். எவ்வளவு வார்த்தைகளை விரயம் செய்தாலும் கிடைக்காத துளி ஆறுதல், ஒரு இதமான அணைப்பில் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், அதைச் செய்ய இயலாததை நினைத்து மனம் அரற்றியது. துடிக்கும் மனதையும் கைகளையும் கட்டுப்படுத்தத் திணறினேன்.

பாண்டி வந்து 'சார். குமார் சார் கூப்டறார்' என்று அழைக்கவும் திரும்பினோம். குமார் வந்து சில தகவல்கள் கேட்க, வேலையில் மூழ்கினேன். அவள் கைப்பையை எடுத்துக்கொண்டு 'வர்ரேன். அப்பா சீக்கிரம் வரச்சொன்னார். ஃபோன் பண்ணு' என்று கிளம்பினாள். எனக்கு எல்லாமே வெறுமையாகத் தோன்றியது.

குமார் வந்து தோளில் தட்டி 'டேய்.. நாளைக்கு நைட் என்ன ப்ளான்?'

'எதுக்கு?'

'ஆங். ஒன் மச்சினிக்கு கல்யாணமாமே.. அட சே. நாளைக்கு என்ன தேதி?'

'என்ன தேதி? டிசம்பர் முப்பத்தொண்ணு... அய்யோ.. புது வருஷம் பொறக்கப்போகுது'

'யப்பா. கண்டுபிடிச்சிட்டான்யா. எங்க ஒன்னோட ஆளு நிலா? அலோக்கு நீயும் இங்க வா'

'ஸ்ஸ்... குமார்'

'என்ன உஸ்ஸூ? அவ ஒன் ஆளு இல்லங்கிறியா? அ... அ.... சரி.. எனக்கு என்ன.. நீயாச்சு அவளாச்சு. எதாச்சும் கையெழுத்து எங்கயாச்சும் போடணும்னா சொல்லு. வரேன்'

எனக்கு வெட்கமாக இருக்கவே தலையைக் கவிழ்ந்து கொண்டேன்.

'பார்ரா வெக்கத்த. அலோக். நாளைக்கு எல்லாரும் என் வீட்டுக்கு வந்துடுங்க. பார்ஸன்ல எரநூத்தி பத்துல இருக்கேன். அனிதாவும் மாமியார் வீட்டுல இருந்து திரும்ப வந்தாச்சு. ஷி வில் டேக் கேர் ஆ·ப் த டின்னர். ஸோ.. லெட்ஸ் பார்ட்டீ'.

'நா ஒயினும் பியரும் கொண்டு வரேன்' என்றான் அலோக்.

குமார் 'நாளைக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு எல்லாரும் பில்டிங் கீழ வந்துருங்க. நா பிக்கப் பண்ணிக்கறேன்', என நான் மையமாக தலையசைத்தேன். அலோக் ஃபோனை ஒத்தி, 'நிலா..' எனத் தொடங்கி, பேசி வைத்துவிட்டு 'ஷி வில் ஜாயின் அஸ் ஹியர் அட் செவனோ க்ளாக். ஸீ குமார். ஹி இஸ் ஸ்மைலிங் நவ்' என்றான் சிரித்துக்கொண்டே.

மறுநாள் மாலை அலோக் இன்னும் வந்திருக்கவில்லை. ரோட்கிங்கை இழுத்து அதன் தாங்கியில் நிறுத்திவிட்டு, திரும்பிய கணம் கண்ணில் மின்னலடித்தது. நிலா தூய வெண்மேக சுரிதாரில் ஆகாய நீல எம்ராய்டரி மலர்கள் சிரிக்க, அதைவிட பளீரென்று என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவள் கண்களும் சிரிக்க, கன்னங்கள் லேசான சிவப்புப் பூச்சில் இன்னும் சிவந்திருந்தன. நான் கீழே விழாமலிருக்க வண்டியின் இருக்கையைப் பிடித்துக் கொண்டேன். நட்சத்திரங்களில்லா கருவானில் முழு நிலவைப் பார்த்தது போல், அச்சூழ்நிலை இயக்கங்களனைத்தும் மறைந்துபோய், என் கண்களுக்கு என் நிலா தவிர ஒன்றும் தெரியவில்லை. என்னில் வேறு எதையும் என்னால் உணர முடியவில்லை. லேசான இடைவெளியில் பளீரிட்ட வெண் சங்குக் கழுத்தில், மெலிதான தங்கச் சங்கிலி ஒன்று மேலும் அழகூட்ட, காதுகளில் வெண் முத்துகள் புன்னகைத்தன. இறைவன் ரசித்து வரைந்த ஓவியம் போல, வானிலிருந்து எனக்காக வந்தவளைப் போல, அவள் தோன்றினாள்.

'ஹேய். குட் ஈவ்னிங்' என்று கைகுலுக்கி 'என்ன அப்படி பாக்கற?' என்றாள்.

எனக்கு பேச்சு வரவில்லை. மெதுவாக அவள் கன்னங்களைத் தாங்கி, கண்களுக்குள் ஊடுருவி, என்னிடம் இழுத்து, ஆழ் மூச்சு வாங்கிக்கொண்டு, ஒரு நீள்முத்தம் கொடு....

'ஹலோ. எங்க இருக்கே? பகல்லயே கனாவா? இங்க பாருப்பா. ஏன் அப்படி பாக்கற. எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு' என மேலும் சிவந்தாள். என் நாடித் துடிப்பு அதிகமானதை உணர்ந்தேன். அலோக்கும் வந்துவிட மூவரும் முக்கியமில்லா விஷயங்களை நேரத்தைக் கொல்வதற்கு பேசிக் கொண்டிருக்கையில், குமார் வந்து ஸென்னை நிறுத்தி, 'ஹாய் கய்ஸ். கம்மின்' என்றார். அலோக் செயற்கையான அவசரம் காட்டி முன்னிருக்கையில் அமர, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பின்னிருக்கைகளில் பரவினோம். நான் மெதுவாக, அவள் கையைப் பற்றி இருக்கையுடன் அழுத்திக்கொள்ள, அவள் அவர்களிருவரையும் கண்களால் காட்டி, சட்டென்று விலக்கிக் கொண்டாள். அனிதா எங்களை வரவேற்று பழரசம் கொடுத்ததை மந்த கதியில் உறிஞ்சினோம். 'நான் ஊர்ல இல்லாதப்ப ஒங்க பாஸ் ஆபிஸ் பொண்ணுங்கள சைட் அடிச்சாரா?' என்று நிலாவிடம் கேட்க அவள் 'ஆமாமா. கொஞ்சம் அடக்கி வைங்க' என்று சொல்ல, குமார் 'எனக்கு இது தேவையா?' என்று என்னைப் பார்த்துக் கேட்க சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்தது.

ஹாலில் சோபாக்களை விலக்கி, சிறு மெத்தைகளும், திண்டுகளும் பரப்பியிருந்தது. நானும் அலோக்கும் ஒன்றில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொள்ள, அனிதாவும் நிலாவும் அடுத்ததில் அமர்ந்து கொண்டார்கள். குமார் கிச்சனுக்குச் சென்றுவிட, அலோக் பையை திறந்து வெளியே வைத்த பாட்டில்களை அனிதா எடுத்துக்கொள்ள, அலோக்கும் உதவுவதற்குக் கூடச்சென்றுவிட, நாங்கள் தனித்திருந்தோம். நொடிக்கும் குறைவான அவகாசத்தில், மண்டியிட்டு அவளை அடைந்து முத்தத்தைப் பதித்து திரும்ப, அவள் அதை எதிர்பார்க்காமல், வெட்கமடைந்து முகத்தை மூடிக்கொண்டாள். நாங்கள் அவரவர் மெத்தைகளின் ஓரங்களில் அமர்ந்து அருகருகே ஆகிக்கொண்டோம். அவர்கள் திரும்ப வந்து அனைத்தையும் நடுவில் பரப்பி அமர்ந்துகொள்ள, சிரிப்புகளும், கேலிகளும், கிண்டல்களும் பரவத் தொடங்கின.

மெலிதான சங்கீதம் காற்றில் பரவியிருக்க, மாலைக் குளிரிலும், மங்கல் விளக்குகளிலும், அச்சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. லதா மங்கேஷ்கரின் ஏதோ ஒரு மெலடிக்கு, நிலாவும் கூடச் சேர்ந்து பாடினாள். அவள் தலையை லேசாக ஆட்டி, தொடையில் தாளமிட்டுப் பாட, நாங்கள் கைகளால் தாளமிட்டோம். அலோக், ஒலியைக் குறைத்து வைக்க, இப்போது, நிலாவின் குரலும், எங்கள் கைத்தட்டுத் தாளங்களும் மட்டுமே ஒலிக்க, துள்ளும் குரலில் பாடல் தொடர்ந்தது. பளீரிடும் பல்வரிசை மெலிதாகத் தெரிய, புன்னகையுடன் அவள் பாடினாள். முடித்ததும் 'ஓ.....' என்று அனைவரும் கைகளை உயர்த்திப் படபடவென்று தட்ட, அனிதா எழுந்து வந்து நிலாவை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு 'என்ன அழகா பாடறே தங்கம்' என்றாள். எனக்குப் பெருமையாக இருந்தது. அவள் என்னவள்.

அடுத்ததாக ஒலித்த ஒரு டூயட்டிற்கு, குமாரும் அனிதாவும் அணைத்துக்கொண்டு சுழன்று ஆட, நாங்கள் உற்சாகப் படுத்தினோம். நிலாவைப் பார்த்து பெருமூச்சு விட அவள் அழகு காட்டினாள். சில நிமிடங்களில் குமார் அனிதாவை விடுவித்துவிட்டு, என்னையும் நிலாவையும் பார்த்து 'கமான் கய்ஸ். கம் அன் டான்ஸ்' என நானும் நிலாவும் 'அய்யோ' என்று அலறினோம். அனிதா அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி நடுவில் நிற்கவைக்க, என்னை அலோக்கும் குமாரும் எளிதாக ஜெயித்தார்கள். நிலாவுடன் எதிரெதிரே நிற்கும் அந்தக் கணத்தை எதிர்பார்க்கவில்லை. 'கமான்' என்று குரல்கள் மந்திரங்கள் போல ஒலிக்க, என்னை முதுகில் யாரோ தள்ளினார்கள். நிலாவும் தள்ளப்பட, எங்களிருவருக்கும் இப்போது நூலிழை இடைவெளி மட்டுமே இருக்க, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். என் உடல் நடுங்கியதை உணர முடிந்தது. அவள் இடையை மெதுவாக வளைத்து என்னுடன் சேர்த்துக்கொண்டு, அவள் இடக்கையை பிடித்துக்கொள்ள, 'வாவ்வ்வ்வ்... கமான்' என்றார்கள். அவளின் பிரத்யேக வாசனையில் கிறங்க, என் சுவாசத்தின் வெம்மையில் அவள் மேலும் சிவந்தாள். மெல்லிய அதிர்வில்லா நடனத்தில், நிமிடங்கள் யுகங்களாக மாறாதா என்று ஏங்க, அவை நொடிகளாகக் கரைய, 'போதும்.. வருஷம் முடிஞ்சிரப்போவுது.. விடுங்கப்பா' என்று குமார் கிண்டலடிக்க ஓவென்று சிரித்தார்கள்.

நிலா சட்டென்று என்னை விலக்கி, திரும்பச் சென்று அமர்ந்து தலை கவிழ்ந்து கொண்டாள். நான் ஸ்தம்பித்திருந்தேன். குமார் தற்காலிகமாகக் காணாமல் போனார். திடும்மென்று விளக்குகள் அணைந்து வினாடிகளில் எரிய குமார் 'ஹேப்பி ந்யூ இயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று அலற 'ஹோய்' என்ற கூச்சல் எழுந்தது. நகரில் ஆங்காங்கே வெடிச்சத்தங்கள் கேட்டன. குமாரும் அனிதாவும் முத்தமிட்டுக் கொண்டனர். வாழ்த்துகள் பரிமாறப்பட்டு, சற்று நேரத்தில் பாட்டில்கள் திறக்கப்பட்டு கோப்பைகள் நிரப்பப்பட, நிலா ஒரு ஒயின் கோப்பையை எடுத்துக்கொண்டதைப் பார்த்து 'குடிப்பியா? சொல்லவே இல்லையே?' என்றேன். அவள் 'மொடாக்குடி இல்லை. சும்மா ஒரே பெக். அவ்ளோதான். ஒயின் ஒண்ணும் பண்ணாது. ராகவன் பழக்கிவிட்டான். ஸ்வீட் டேஸ்ட். நீயும் ட்ரை பண்ணேன்' என, நான் அன்பாக மறுத்துவிட்டு பெப்ஸியை உறிஞ்சினேன்.

'ராகவன் எப்போ வரார்?'

'சிக்ஸ்த்'. அவள் முகத்தில் இப்போது புன்னகை தொலைந்திருந்தது. நான் பேச்சை மாற்றினேன். ஒயின் குடித்ததாலா என்று தெரியவில்லை. அவள் முகம் லேசாக வீங்கியிருந்தது போல ஒரு பிரமை. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.

'ஹேய். ஆர் யூ ஆல் ரைட்?'

'யெஸ். ஐயாம் வெரி ஹேப்பி டுடே'

'புது வருஷம் நமக்கு புது வாழ்க்கையைக் கொடுக்கட்டும்'

'ம்ம். நடக்குமா தெரியலை'

'ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்'

'மி டூ'.

மணி இரண்டாகியிருக்க நாங்கள் சோர்வடைந்திருந்தோம். குமார் எழுந்து 'வாட்ஸ் த ப்ளான்?' என அனிதா 'அவங்க இங்க இருந்துட்டு காலைல போகட்டும். அன்-டைம் இப்போ' என்றாள்.அலோக் அப்படியே மெத்தை மேல் சரிந்து தூங்கிவிட்டிருக்க, நான் விழித்திருந்தேன். நிலாவும் என்பக்கம் தலை வைத்துப் படுத்திருக்க, குமார் 'தூங்கலயா? தூக்கம் வராதே? சரி. டேக் ரெஸ்ட். காலைல பாக்கலாம்' என்று சிரித்துவிட்டு, அனிதாவுடன் உள்ளே சென்று மறைந்தார். திடீரென்று அலோக்கை வெறுத்தேன். சனியன் பிடித்தவன். வீட்டுக்குப் போய் தொலைந்திருக்க கூடாதா என்று நினைத்தேன். குழந்தை போல் தூங்கும் நிலாவை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக அவள் கூந்தலை வருட, என் கையை சட்டென்று பிடித்துக் கொண்டாள். அட.. தூங்கவில்லை!

மிக மெதுவாகக் குனிந்து அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டேன். அவள் திரும்பி என்னைப் பார்க்க, நான் அவள் தாடையை வருடி, இதழ்களைக் கவ்விக்கொண்டேன்.

தொடரும்...

**

* அந்தம் * # 9


* அந்தம் * # 9

சட்டென்று ஒலித்த தொலைபேசிக்கு திடுக்கிட்டு விழித்து, இருளில் கையை வீசித் தேடி எடுத்துப் பேசுமுன் அம்முனையிலிருந்து நிலா 'நாந்தான்' என்றாள். எனக்கு எதுவும் பேசத்தோன்றவில்லை. அமைதியாக அடுத்து வரும் வார்த்தைகளுக்காகக் காத்திருக்க நிலா 'என் மேல கோவமா?'

'....'

'ப்ளீஸ் என்னை நீ புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்'

'....'

'என்ட்ட நீ பேசமாட்டியா?' அவள் குரல் முகவாய்க்கட்டையைப் பிடித்துக் கொஞ்சியது. நான் வார்த்தைகள் குழற 'ஐயாம் சாரி நிலா..'

'இட்ஸ் ஓகேஏஏஏஏ... லீவ் தட்'

'ஐயாம் ஸாரி நிலா. ஸாரி. ஸாரி.. ஸாரி.. ஸாரி.. ஸாரி'

'அய்யோ.. விடேன்.. ஸீ. நம்ம ரெண்டு பேரும் ரொம்ப நல்ல நண்பர்களா இருக்கலாம். சியரப் ப்ளீஸ். நீ வருத்தப்பட்டா என்னால தாங்க முடியலை. நல்லா தூங்கு. நாளைக்கு லாஸ்ட் டே இன் கொச்சி. மிச்ச வேலையையும் முடிச்சுட்டு ரயிலேறணும். டேக் ரெஸ்ட். ஓகே? குட் நைட்'

நான் பதிலிறுக்காமல் இருக்க சிறிது தாமதத்திற்குப் பின் மறு முனை மெலிதாக வைக்கப்பட்டது. அந்த இரவு ஒரு யுகமாகக் கழிந்தது. அடுத்த நாள் வந்ததும் போனதும் தெரியாமல் மாலையில் ராஜனும் உன்னியும் இரயில் நிலையத்தில் கைகுலுக்கி விட்டு, ராஜன் பாலித்தீன் பை ஒன்றைக் கொடுத்து 'அலோக்குக்கு.. நேந்திரம் சிப்ஸ்' என்று விடைபெற்றுக் கொண்டார்கள். வெளியில் ஒட்டியிருந்த லிஸ்ட்டைச் சோதித்ததில், கூபே இருந்ததை கவனித்து பரிசோதகரிடம் மாற்றக் கேட்டுக்கொண்டதில், அவர் 'இட்ஸ் ஃபுல். டேக் யுவர் சீட்ஸ். திரிஸ்ஸூர்ல பாக்கறேன்' என்றார். நிலா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிரயாணம் பெரும்பாலும் மெளனத்தில் கழிய, ஓரிரு முறை அவள் ஏதோ கேட்டதற்கு, சன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டு பதில் சொன்னேன். அவள் முகம் சுருங்கியதைப் பார்த்து மனம் வலித்தது.

கோவையில் அதே திருவள்ளுவர் விமானத்தில் ஏறி, அதே வ.இ.ப.பெ., கிட்டத்தட்ட அதே இருக்கைகளில் எங்களை அமர்த்த, நான் சன்னலருகில் அமர்ந்து கொண்டு வெளியே நோக்கத் துவங்கினேன். விமானத்தின் உள் நிலவிய லேசான வெம்மை, உணவு வாசம், நனைத்து நீட்டப்பட்ட கைக்குட்டை, பழரசம், சாக்லெட், அவ்வப்போது குழப்ப இரைச்சல் அறிவிப்புகள் அனைத்தையும் புறக்கணித்து எதிலும் கவனமில்லாமல் சன்னல் வழி நோக்க, 'மிஸ். கேதரின். இஸ் த ·ப்ளைட் ஆன் டைம்?' என நிலா கேட்டது காதில் விழுந்தது. பெண்கள், மற்ற பெண்களின் விம்மிய சட்டைப் பெயர்களைப் படித்தால் தப்பில்லை போலும்.

'வெயிட்டிங் ·பார் எ பாஸஞ்சர்' என கேத்தரின் சொன்னதும், ஏதோ உள்ளுணர்வு உறுத்த வாசலை நோக்கியதில், அதே கரைவேட்டி ஒரு சல்யூட் அடித்து விட்டு உள்ளே வந்து நிலா அருகில் அமர்ந்து, பீடா வாயுடன் நிலாவைப் பார்த்து சிரித்து 'நீவ்ங்வ்கவ்ளா? நவ்ல்வ்லா இவ்ருவ்க்வ்கீவ்ங்வ்கவ்ளா?' எனக் கேட்க நிலா கலவரமடைந்து என்னிடம் 'ஹேய். ப்ளீஸ் என்ன காப்பாத்துடா' என்றாள்.

உடையப்போகும் அணை போலிருந்த வாயை வைத்துக் கொண்டு, என்னையும் பார்த்து சிரித்து மீண்டும் 'வ்'வ முயல்வதற்குள் 'நல்லா இருக்கேண்ணே! கொஞ்சம் தலவலி. அதான் தூங்கப்போறோம். மருத வந்ததும் உசுப்புறீங்களா?' என்று கேட்டுவிட்டு கேதரினை அழைத்து ஒரு போர்வையை வாங்கி நிலாவிடம் கொடுத்துவிட்டு சன்னலில் குட்டித் தலையணை வைத்து சாய்ந்து கொண்டு கண்களை மூடிக்கொள்ள, நிலா போர்த்திக்கொண்டு என் தோள்மீது முழுவதுமாகச் சாய்ந்துகொண்டு நிமிடங்களில் தூங்கிப்போனாள்.

குறுக்கேயும் நெடுக்கேயும் போய் வந்து கொண்டிருந்த கரைவேட்டியை கேதரின் எச்சரித்து அமரச்செய்யவும், விமானம் இறங்கப்போகிறது என்ற அறிவிப்பும் வர, நான் வலது தோளை லேசாக உயர்த்த, நிலா எழுந்தாள்.

கரும்பட்டியில் நிலாவை இறக்கிவிட்டு டாக்ஸியில் திரும்பும்போது பின்னால் திரும்பிப் பார்த்ததில், அவள் வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருக்க, நான் திரும்பிக் கொண்டு பெருமூச்சு விட்டேன். சாரல் அடித்துக் கொண்டிருக்க, நகரை மேகக்குடை மறைத்து இருள் சூழ்ந்திருந்தது. 'பகல்ல லைட் போட்டு ஓட்ட வேண்டிருக்கு சார்' என்ற டிரைவரை ஆமோதித்தேன். மறுநாள் அலுவலகத்தில் குமாரிடம் முடித்த வேலைகளைப் பற்றி ஒப்புவித்துக் கிளம்புமுன் 'நிலா எங்க?' என்றார்.

'வர்லயா?'

'இல்லை. ஒடம்பு கிடம்பு சரியில்லையா?'

'தெர்லயே. ஃபோன் பண்ணி கேட்டு சொல்றேன்' என்று வெளியேறி, அலோக்கிடம் கேட்டுக் கொண்டதில் அவன் வினோதமாக என்னைப் பார்த்து விட்டு, நிலாவை ஃபோனில் முயற்சித்துவிட்டு 'இட்ஸ் ரிங்கிங். நோ ரெஸ்பான்ஸ்' என்றான். எனக்கு லேசாக உறுத்தியது. மனம் நிலை கொள்ளாமல் தவிப்பதை வெளிக் காட்டிக் கொள்ள முடியாத அவஸ்தையினால் எனக்கு என் மீதே கோபமாக வந்தது. தொடர்ந்த அலுவல் பளுவில் மூழ்கியிருக்கையில், முதுகு தட்டப்பட்டுத் திரும்பினால் 'ஹாய்.. என்ன பேயறைஞ்ச மாதிரி எல்ஸிடிய மொறச்சு பாத்துகிட்டு இருக்கே?' என்று புன்னகையுடன் நிலா.

'ஸாரி. அசதில அடிச்சுப் போட்டமாதிரி தூங்கிட்டேன். நீ காலைலயே வந்துட்டியா?' என்று என்னைக் கேட்க நான் பதில் சொல்லாமல் தலையசைத்தேன்.

அலோக் வந்து 'பொட்டி நெக்ஸ்ட் வீக் சொனாட்டால இருந்து வந்துடும்' என்று தகவல் சொல்ல குமார் 'இந்த தடவ நானும் பெரியப்பாவும் வரோம். கிக் ஆ·ப்புக்குத்தான் வர முடியலை! லெட்ஸ் ப்ளான் ·பார் திஸ் ட்ரிப்' என 'நான் வர்லை குமார் இந்த தடவ அலோக் போகட்டும்' என்றேன். ஒரு நிமிடம் அந்த இடம் ஸ்தம்பித்து அனைவரும் என்னைப் பார்க்க எனக்குக் கூசி, தலை கவிழ்ந்து கொண்டேன்.

'ஒனக்கு பைத்தியம் புடிச்சுருச்சா?' என்றார் குமார். என்றான் அலோக். என்றாள் நிலா.

ஒரு வாரம் ஒரு யுகமாகக் கழிய, நான் உள்ளுக்குள் மறுகினேன். இரவு பகல் தெரியவில்லை. தூக்கம் மறந்து அவள் நினைவில் உருகினேன். அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் இருப்பது போன்ற பெரிய துன்பம் எதுவும் இல்லை. என்னைப் புன்னகைக்கச் செய்ய நிலா செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைய, அவள் ஏழாவது நாள் மதியம் சோகத்துடன் அரை நாள் விடுப்பெடுத்துச் சென்றாள். நான் இருக்கையைப் புறக்கணித்து மேசையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருக்க, அலோக் வந்து உலுக்கி 'வாட்ஸ் ராங் வித் யு?' என்றான். நான் தலை குனிந்து கொண்டேன்.

'ஏன் இப்படி பண்றே?'

'என்ன பண்ணினேன்.?'

'அவ வந்து எங்கிட்ட அழுதுட்டு போனா'

'அழு... வாட்? வொய்?'

'எனக்கு என்ன தெரியும்? முட்டாள். நீ அவள அப்செட் பண்ணிட்டே'

'இல்லடா. நா...'

'ஷட் அப். ஒனக்கு என்ன ஆச்சு?. போம்போது நல்லா தானே பேசிக்கிட்டு போனீங்க? என்ன ஆச்சு அங்க?'

எனக்கு திக்கென்றது. இது சரியில்லை; நிலாவுக்கு அனாவசியமாக தொல்லை ஏற்படுத்துகிறேன் என்றும் தோன்றியது. அலோக் நல்லவன். எல்லோரும் அப்படி இல்லை. நாங்கள் கவனிக்கப்படுகிறோம் என்று புரிந்ததும் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. இப்பொழுதே நிலாவைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கினேன்.

'அலோக்.. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைடா'

'ஒண்ணும் சொல்ல வேண்டாம். அவ ரொம்ப வருத்தப் படறா. யூ நோ. ஷி லைக்ஸ் யூ வெரி மச். ப்ளீஸ் டோன்ட் ஹர்ட் ஹர்'.

'....'

'வி ஆர் ஆல் கோயிங் டு கொச்சின்'

'அப்ப இங்க யாரு பாத்துக்கறது?'

'ஒண்ணும் ஆவாது. எல்லாம் பக்கா. காம்பாக்லருந்து ஒரு ஆள அனுப்ச்சிருக்காங்க. ஹ்யூக்ஸ்லயும் இருந்து ஒரு ஆளு. குமார் ஏற்பாடு பண்ணிட்டார்'

திங்களன்று விமானத்தில் இருந்தபோது, சன்னலோரத்தை மறுபடியும் ஆக்கிரமித்துக் கொள்ள, அடுத்து அலோக்கும், வலதோரத்தில் நிலாவும் அமர்ந்து கொண்டோம். அதை அடுத்த வரிசையில் குமாரும் ஜார்ஜும் அமர்ந்து கதைத்துக் கொண்டு வர, அலோக்கும் நிலாவும் சொளசொளவென்று பேசிக் கொண்டிருக்க, நான் அமைதியாக இருந்தேன். என் கவனத்தை பலமுறை அவள் கவர முயன்று தோற்க, அலோக் என்னைக் கடுமையாக முறைத்தான். நான் கண்டுகொள்ளவில்லை. விமானமே சற்று கூடுதல் இரைச்சலாக இருப்பது போன்று தோன்றியது. இயற்கை உபாதைக்காக அலோக் எழுந்து செல்ல, எனக்கு பரபரவென்று இருந்தது. 'நிலாவிடம் பேசுடா' என்று மனசாட்சியும் என்னுடன் சண்டையிடத் தொடங்குகையில், நிலா எழுந்து அலோக் இருக்கையில் அமர, எனக்கு ஜிவ்வென்று இருந்தது. இந்த அருகாமை கிடைக்காமல் இவ்வளவு நாட்களாக நொந்திருந்தேன். அவள் பக்கம் திரும்பவில்லை.

நிலா லேசாக இடித்து 'என்கூட பேச மாட்டியா?' என ஹஸ்கியில் கேட்க, நான் பதில் சொல்லவில்லை.

'இத பார்றா. ஒனக்கு இவ்ளோ கோவம் வருமா?' என்றதற்கும் மெளனித்தேன், புன்னகைப்பதை பிரயாசையுடன் அடக்கிக்கொண்டு. விமானத்தின் சக்கரங்களை பைலட் விடுவித்ததை காலடியில் அதிர்வில் உணரமுடிந்தது.

'எனக்கு முடியலைடா? ப்ளீஸ் என்னால தாங்க முடியலை. இதுக்கு மேல முடியாது. ப்ளீஸ்.. ' என்ற அவள் கெஞ்சலில் நான் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் உடைந்தேன். கண்கள் கசிய அவளை நோக்குகையில் அவள் கண்களிலும் நீரைக் கண்டு நெகிழ்ந்தேன்.

அவள் என் தாடையைப் பிடித்து, கண்களைத் தீர்க்கமாக ஊடுருவி, உதடுகள் பிரித்து மெதுவான குரலில் ஆனால் தெளிவாகச் சொன்னாள் 'ஐ லவ் யூ ஹனி'.

அந்தக் கணத்தில் காலம் இயக்கத்தை நிறுத்தி நான் ஒரு யுகம் வாழ்ந்தேன். என் இதயம் வேகமாகத் துடித்தது. தலை உச்சி திடும்மென்று லேசாகி, காதுகள் அடைத்துக் கொண்டன. அவள் கண்களை உற்றுப்பார்த்தேன். அதில் சலனமில்லை. அதன் உண்மை என்னை அடித்தது. எனக்கு நெஞ்சு அடைத்து நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. ஒரு நிமிஷம் வண்டிய நிறுத்துப்பா என்று பைலட்டிடம் சொல்லி, இறங்கி நிலாவைத் தூக்கிக்கொண்டு ஓட வேண்டும் என்று தோன்றியது. இறங்கியதும் கோயம்புத்தூர் பக்கத்தில் ஏதாவது ஆளில்லா தீவுக்கு சென்று கண் காணாமல் நிலாவுடன் மிச்ச வயதை வாழ வேண்டும் என்றிருந்தது. குமாரையும் ஜார்ஜையும் பார்த்து, ஒங்க வேலையுமாச்சு மயிராச்சு என்று சொல்ல வேண்டும் போல இருந்தது. சத்தமாக பெருங் குரலெடுத்து அழ வேண்டும் என்று இருந்தது. அவளை ஆவி சேர அணைத்துக் கொண்டு முத்தங்களில் நனைக்க வேண்டும்; எனக்குள் புதைத்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது. பல வருடங்கள் இரும்புச் சங்கிலிகளில் கட்டப்பட்டிருந்து, சட்டென்று விடுவிக்கப்பட்டதைப் போல இருந்தது. ராகவனின் பெயரும், புகை முகமும் லேசாக எட்டிப்பார்க்க, 'போ.. இனிமே இந்த பக்கம் வராதே. நிலாவ நான் பூப்போல பாத்துப்பேன்.' என்று மனதில் சத்தமிட்டேன். இவள் என்னுடையவள் என்று அணத்துக் கொண்டு அருகில் வரும் அனைவரையும் முறைக்க வேண்டும் போல இருந்தது. காற்று கூட அவள் மீது என்னைக் கேட்டுத்தான் இனிமேல் படவேண்டும் என்று நினைத்தேன். நான் நத்தை ஓடாக இருக்க, அவள் என்னுள் அடைந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. சுற்றியிருக்கும் அனைத்தும் அவளுக்கு துன்பம் தருவன; அவளுக்கு நான் அரணாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். காமமும் காதலும் சேர்ந்து கசிந்துருகி, உடல் நடுங்கி, காது மடல் சூடாகி, நிலாவின் கையை இறுக்கிக் கொள்ள அதில் மின்னதிர்வு உணர்ந்தேன். அவள் மடியில் முகம் புதைக்கத் துடித்தேன். அவளை மட்டும் சுவாசிக்க விரும்பினேன்.

'வானத்துல பறக்கற மாதிரி இருக்கு நிலா' என்றேன். அவள் சட்டென்று சிரித்து 'இப்போ என்ன பண்றோமாம்?' என்றாள்.

'சார்... தல வலியா? மாத்திரை ஏதும் வேணுமா?' என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் பாண்டி நின்றிருந்தான். அலுவலகக் காவலாளி. மணி பனிரெண்டு ஆகியிருக்க, ஆயாசத்துடன் எழுந்து கணினியை தூங்கச் செய்துவிட்டு, 'வேண்டாம் பாண்டி. கெளம்பறேன்' என்று சொல்லிவிட்டு வெளியில் வந்து ரோட்கிங்கை தெரு அதிர விரட்டினேன். சாலையோர புரோட்டாக் கடைகளில் வியாபாரம் சூடாக இருக்க, பெட்ரோமாக்ஸ் விளக்குகள் கண்ணைக் கூசச் செய்தன. நடுநிசிக் குளிர் உடலில் ஊடுருவ, அறையில் நுழைந்து அப்படியே கட்டிலில் விழுந்து கண்களை மூடிக்கொண்டேன். சட்டையிலும் உதடுகளிலும் நிலாவின் வாசனை மிச்சமிருந்தது.

தொடரும்...

பி.கு.:- கடைசிப்பாரா சற்றே குழப்புகிறதா? நான்காவது அத்தியாயத்தில் ஆரம்பித்த டார்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருள் இந்த அத்தியாயத்தின் கடைசிக்கு முந்தைய பத்தியில் எரிந்து முடிந்தது. (அப்பா. பெருமூச்சு விட்டது நீங்கள் மட்டுமல்ல. நானும்தான்!).

Friday, December 16, 2005

* Coming to America * (இது திரைப்பட விமர்சனம் அல்ல)



* Coming to America *

இது எடி மர்பி நடித்து நீண்ட காலத்திற்கு முன்பு வந்த திரைப்படத்தின் விமர்சனம் அல்ல (இதைத் தழுவி தமிழில் வந்த மை டியர் மார்த்தாண்டன் படம் பற்றியதும் அல்ல)

1999 இறுதியில் பெங்களூரிலிருந்து புலம்பெயர்ந்து மஸ்கட்டுக்கு வந்து ஐந்தரை வருடங்களாகியிருந்தது.

'நம்மூர் அப்போது இருந்தது போலவே இப்போதும் இருக்கும்' என்ற பிரமை எனக்கு மட்டுமா அல்லது புலம்பெயர்ந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் அப்படித் தோன்றுமா என்று தெரியவில்லை. எதுவும் மாறியிருக்காது என்ற பிம்பத்துடன் ஒவ்வொரு வருடாந்திர விடுமுறையின் போது ஊருக்கு வரும்போதும் பார்க்கும் மாற்றங்கள் ஒவ்வொரு முறையும் என்னை மலைக்க வைத்திருக்கின்றன. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கும். இந்தியாவில் இல்லாமலிருந்த இழந்த கால இடைவெளி மனதை உறுத்தும்.

மஸ்கட்டின் மொட்டை மலைத்தொடர்களும் காற்றில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் புழுதியும், அழகான சாலைகளும், சாலையோரப் பூங்காக்களும், இன்னும் அசுத்தமாகிவிடாத கடற்கரையோரங்களும், அதீத வெப்பமும் நிறைந்த வாழ்க்கை பழகிவிட்டது. வாழ்நாளில் பெரும்பகுதியை மஸ்கட்டில் கழித்த எனது குழந்தைகளுக்கும் அது கிட்டத்தட்ட சொந்த ஊர் போன்றாகி விட்டது. ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறை போனால் இறங்கிய சில நிமிடங்களில் நம்மூருக்கு முழுதாக என் மனமும் உடலும் திரும்பி இணைந்து கொள்ள, குழந்தைகள்தான் ஒவ்வொரு முறையும் அவஸ்தைப் படுவார்கள். மழை, வெள்ளம், சூறாவளி, கொலை, குத்து, அரசியல், சினிமா என்று எந்தவித பரபரப்புகளும் இல்லாது, காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியனுடன் வாழ்க்கை என்னவோ நகராமல் அங்கேயே நின்றிருப்பது போன்று கடந்த ஒரு வருடமாகவே தோன்றிக் கொண்டிருந்தபடியால், புலம் பெயர வேண்டும் என்று தீர்மானிக்கத் தொடங்கினேன். முன்பு வசித்த பெங்களூருக்கே திரும்பப் போய்விடலாம் என்பது நானும் என் மனைவியும் எடுத்த ஒரு மனதான முடிவு. ஆனால் வேலை? என் நிறுவனத்தின் இந்தியக் கிளை இருப்பதோ சென்னையில். சென்னை எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஊர் (ஏனென்று கேட்காதீர்கள் - தெரியாது - பிடிக்கவில்லை - அவ்வளவுதான்).

மாற்றல் என்றால் சென்னைக்கு மாற்றுவார்கள். பெங்களூருக்குப் போகவேண்டுமென்றால் வேலையை விட்டுவிட்டு அங்கிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை தேடவேண்டும். ஆனால் தற்போதைய வேலையை விட்டுவிட எந்தவித முகாந்திரமும் எனக்கில்லை. குழப்பத்தில் ஆழ்ந்திருக்கையில் திடீரென்று அழைத்து எங்களது அமெரிக்கக் கிளைக்கு மாற்றுவதாக தலைவர் சொன்னபோது எனக்குள் எந்தவித பரவசமும் ஏற்படவில்லை. ஏற்கெனவே ஸ்ரீரங்கத்தில் தனித்திருக்கும் பெற்றோர்களைப் பற்றி ஏகமாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் அமெரிக்காவுக்குப் போவதாவது என்று எதிர்மறை எண்ணங்களே எழுந்தன. விஷயம் கேள்விப்பட்ட சக பணியாளர்கள் வாழ்த்திவிட்டு குழந்தைகளுக்குச் சிறந்த படிப்பு கிடைக்கும்; அதற்காகவாவது அங்கு போ என்று ஏகமாக அறிவுரைகள் சொன்னார்கள். மனதேயில்லாமல் மூட்டை முடிச்சுகளைச் சுமந்து இரண்டு வார விடுமுறை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டு, நல்ல நாள் ஒன்றைப் பார்த்து சென்னைக்குக் கிளம்பினேன்.


கூட்டைக் கலைத்துவிட்டு மறுபடியும் புதிய மரம் தேடி ஓடி முதலிலிருந்து கூடுகட்ட வேண்டிய பறவையின் மனநிலையே எனக்கு இருந்தது.

அமெரிக்கா என்றதும் ஹாலிவுட் படங்களில் பார்த்திருந்த பிரம்மாண்டமும், வானுயர்ந்த கட்டிடங்களும், படகுக் கார்களும், அழகுப் பெண்களும் (சுஜாதா : "அமெரிக்காவில் எல்லாம் பெரிசு. அவர்களுக்கிடையே நம்மூர் மென்பொருள் இன்ஜினியர்கள் கண்ணுக்கே தெரிவதில்லை"), மூச்சுக்கு முன்னூறு தடவை ஆங்கில நாலெழுத்துக் கெட்டவார்த்தை பேசும் அமெரிக்கர்கள் என்று மனதில் கற்பனைக் காட்சிகள் விரிய யோசித்துக் கொண்டே விமான நிலையத்துக்குச் சென்றால் அந்த அர்த்த ராத்திரி வேளையிலும் உள்ளேயும் வெளியேயும் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது. புறப்படும் இடத்துக்குச் சென்று அரைத் தூக்கத்துடன் பொதி வண்டியைத் தேடியெடுத்து என்னை மறைக்கும் அளவிற்கிருந்த பொதிகளை ஏற்றிக்கொண்டு உள்ளே சென்றேன். ஒவ்வொருவரின் கண்களும் அந்நேரத்திலும் ஒளிர்ந்ததாக எனக்குத் தோன்றியது பிரமையா? அக்கண்களில் பலவித உணர்ச்சிகள்.

பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு விமான நுழைவுச் சீட்டு வாங்கிக்கொள்ளும் அனைத்து செக்-இன் கவுண்ட்டர்களிலும் கூட்டம். "இவ்வளவு பேர் வெளிநாட்டுக்குப் பிரயாணம் செய்கிறார்களா?" என்று ஆச்சரியமாக இருந்தது. லாரி லோடு அளவுக்குப் பொதிகளைச் சுமந்துகொண்டு வந்து அதிகப்படி கட்டணமில்லாது எடுத்துக் கொள்ள ஊழியர்களிடம் இறைஞ்சும் ஆத்மாக்கள் அன்றும் இறைஞ்சிக்கொண்டிருக்க, ஊழியர்கள் பொறுமையிழந்து எரிந்து விழத் தொடங்கினார்கள்.


எழுபது கிலோ அனுமதி. அதுவும் 2 x 35கிலோ என்று இரண்டே பொட்டிகளாக இருக்கவேண்டுமாம். 7 x 10 ல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்களாம். முன்னால் இரண்டு பெரிய பெட்டிகளையும் இரண்டு குட்டி அட்டைப் பெட்டிகளையும் வைத்திருந்தவர் விவரம் தெரிந்ததும் வரிசையிலிருந்து விலகி எல்லாவற்றையும் பிரித்து சதுரங்கக் காய்களைப் போல மாற்றி மாற்றி வைத்து ஒரே பெரிய பெட்டியில் துணிமணியனைத்தையும் அடைத்து, குட்டியாக இருந்த இரண்டு அட்டைப் பெட்டிகளைப் பிரித்து அதிலிருந்த சிறு க்ரைண்டரையும் மிக்ஸியையும் இரண்டாவது பெட்டியில் வைத்து இரண்டையும் கன்வேயரில் வைக்க அட... அறுபத்தெட்டு கிலோ இருந்தது. புன்னகையுடனும் வியர்வையுடனும் கிளம்பிப் போனார்.

எனக்கு 72 கிலோ. ஆனால் அந்த யுவதி ஒன்றும் சொல்லாமல் புன்னகை மாறாமல் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு சீட்டைக் கொடுக்க, நான் கடவுச் சீட்டுச் சோதனைக்குச் சென்றேன். அதிகாரிகள் எல்லாரும் தீவிர முகங்களுடன் இருந்தனர். முதல்பக்கத்தைத் திறந்ததும் பிறந்த இடத்தைப் படித்துவிட்டுச் சட்டென்று நிமிர்ந்து புன்னகையுடன் 'வத்றாப்பா? நா ஸ்ரீவில்லிப்புத்தூர்' என்று வழியனுப்பி வைத்தார் அந்த அதிகாரி.

எல்லா சோதனைகளையும் கடந்து விமானத்திற்காகக் காத்திருக்கும் இடத்தில் நிறைந்திருந்த பயணிகளின் ஊடாக நடந்ததில் நள்ளிரவு தாண்டிய நேரத்திற்கான வினோதக் காட்சிகள். தூங்கி அடுத்தவர் தோளில் வழிந்து கொண்டிருந்தவர்கள். அப்போதுதான் எழுந்தது போல் புத்துணர்ச்சியுடன் ஓடியாடிக் கொண்டிருந்த குழந்தைகள். கோட் மாட்டிக்கொண்டு ஒரு பக்கம் சிலர் அமர்த்தலாக நடை பயின்று கொண்டிருக்க, அரைக்கால் சட்டை, கலர் பனியனுடன் காதுகளில் குண்டலங்கள் போன்று இயர் ·போன்களை மாட்டிக்கொண்டு இசை கேட்டபடியே சிலர். ஏகப்பட்ட பேர் அந்நேரத்திலும் மொபைல் பேசிக்கொண்டே இருந்தார்கள். இலவச உள்ளூர் தொலைபேசிக்கு ஒரு வரிசை எப்போதும் இருந்தது.

லுப்தான்ஸாவில் ஏறுவதற்கு ஏகப்பட்ட முஸ்தீபுகள். ஒழுங்குபடுத்தி வரிசைக் கிரமமாக அனுப்பினார்கள். குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு முன்னுரிமையாம். ஒரு பத்து வயது பையனைத் தோளில் சுமந்து கொண்டு ஒரு தம்பதி முண்டிக்கொண்டு ஓடியது.

பசித்தவனுக்கு ரொட்டி கொடுப்பதற்கு முன் பிரியாணியை கண்ணில் மட்டும் காட்டி எடுத்துக்கொள்வது போல, லுப்தான்ஸாவில் முன்வாசல் வழியாக ஏற்றி உயர் வகுப்பு ஆடம்பர இருக்கைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடச் செய்துவிட்டு விமானத்தின் வாலில் இருக்கும் தரை டிக்கெட்டில் அமரச் செய்தார்கள். நீண்டு அகண்ட விமானம். உயர்ந்த புஷ்டியான பணிப்பெண்கள்.

ஓர இருக்கை ஆசாமிகள் முன்னும் பின்னும் திடீரென்று எட்டி எட்டிப் பார்த்தது எதேச்சையா இல்லை கடந்து செல்லும் பணிப்பெண்களின் இடையை உரசுவதற்கா என்று தெரியவில்லை. பிரியாணிப் பிரயாணிகள் இருந்த பகுதியை திரை போட்டு மூடிவிட உணவு வண்டியை எதிர்பார்த்து தரை டிக்கெட் பயணிகளெல்லாம் ஏங்க ஆரம்பித்தோம்.

விமானம் எழுந்து உயரத்தை அதிகரித்துக் கொண்டே சென்று நிலையாகச் செல்லத் துவங்குவதற்குள் ஏகக் களேபரம். பக்கத்து இருக்கை ஆசாமி காதுகளில் பஞ்சை அடைத்துக்கொண்டு கையோடு கொண்டு வந்திருந்த மப்ளரை வைத்து தலையைப் போர்த்திக்கொண்டு விரிந்த U வடிவத் தலையணையை கழுத்துக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு சில நொடிகளில் தூங்கிப் போனார். வயலில் கத்தும் தவளைகள் போல இருக்கை வரிசைகளுக்கிடையில் கண்ணுக்குத் தெரியாத குழந்தைகள் சத்தமாக அழுதுகொண்டே இருந்தன.

நிறைய விமானப்பயணம் செய்திருந்தாலும் அதிகபட்சம் ஏழு மணிநேரம் ஒரே சமயத்தில் போயிருக்கிறேன். இந்த நெருக்கடியிலா இருபது மணி நேரம் பயணிக்கப் போகிறோம் என்று கிலியாக இருந்தது. இரண்டு இருக்கைகளுக்கும் பொதுவான ஒரு கை. அதில் முழங்கையை வைத்துக் கொள்ள பக்கத்து இருக்கைப் பயணியுடன் போட்டா போட்டி. அந்த ஆள் தலை சொரிவதற்காகவோ, சாப்பாட்டுத் தட்டை வாங்குவதற்காகவோ கையை எடுத்த அடுத்த நொடியில் நான் என் முழங்கையை வைத்து ஆக்கிரமித்துக் கொள்ளவேண்டும். சரியான அவஸ்தை.

இந்தியாவிலிருந்து - குறிப்பாகச் சென்னையிலிருந்தும் ஹைதராபாத்திலிருந்தும் வண்டி வண்டியாக அமெரிக்காவுக்கு வந்து இறங்குகிறோம் போல. என்னோடு சென்னையில் ஏறியவர்கள் எல்லாம் ·ப்ராங்பர்ட்டில் பிரிந்து லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிகாகோ என்று மற்ற நகரங்களுக்குப் பிரிந்துபோய்விட, பாஸ்டனுக்கான விமானத்தில் இந்தியர்கள் அரிதாக இருந்தனர்.

இறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே எந்தெந்த படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்; எவ்வகையான சோதனைகள் மேற்கொள்ளப் படும் என்பதை குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்கிற மாதிரியே முடிந்த வரை எளிமையாக ஒலி ஒளி மூலம் பரப்பினாலும் அதீத பில்டப் கொடுக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அந்த எளிமையே குழம்பச் செய்கிறது. ஏதோ சொர்க்கத்துக்குச் செல்லும் விமானத்தில் சீட்டு வாங்கிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டுவிடுகிறது.

நான் ஏதோ வானுயர்ந்த கட்டிடங்களின் மத்தியில் சர்ரென்று பறந்து விமானம் இறங்கப் போகிறது என்று நினைத்தேன். மதியம் ஒரு மணிக்கு பாஸ்டனின் லோகன் பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கிய போது தூரத்தில் தெரிந்த நான்கைந்து உயர கட்டிடங்களைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. நம்மூரில் விமான நிலையத்தை அத்துவானக் காட்டில் வைத்திருப்பார்களே அது போல இதுவும் ஊரை விட்டுத் தள்ளி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இறங்கினேன். இதைவிட அதிமான கட்டிடங்கள் துபாயிலும் அபுதாபியிலும் இருக்கின்றன.

விமானத்தின் உள்ளே படம் காட்டிய அளவு குடியேற்றத்திற்கான காரியங்கள் அவ்வளவு கடினமாகவோ பயமுறுத்தும் விதமாகவோ இல்லை. நட்பான அதிகாரிகள். ஓரிரண்டு கேள்விகள். 'போய்க்கோ' என்று கடவுச்சீட்டில் குத்தி அனுப்பிவிட்டார்கள். இது "மஸ்ஸாசூசெட்ஸ்" இல்லையாம். "மேஸசூஸெட்ஸ்"ஆம். இதே போல சாவுக்கும் சேவுக்கும் இடைப்பட்ட ஒலியில் chance-ஐயும், பாவுக்கும் பேயிற்கும் இடைப்பட்ட ஒலியில் past-ஐயும் லாவுக்கும் லேவுக்கும் இடைப்பட்ட ஒலியில் Last-ஐயும் உச்சரிக்கவேண்டும்.

கிளம்பும்முன் ஆளாளுக்கு Jet Lag என்பதைப் பற்றிச் சொல்லி சென்று இறங்கி இரண்டு நாட்களுக்கு நடமாடவே முடியாத விஷயம் அது என்பதாக என்னை பயமுறுத்தி வைத்திருந்தார்கள். எனக்கு இப்போது jet lag வரப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். Jet Lag என்றால் விமானத்திலிருந்து இறங்கி தரையில் கால் பாவாமல் கொஞ்ச நாள் மிதப்போம் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் நிகழவில்லை. நீண்ட நேரப் பிரயாணத்தினாலும் விமானத்தில் ஒன்றும் சாப்பிடாததினாலும் அயர்வாக இருந்தது. எனக்கு படுக்கையில் கால் கைகளை நீட்டிப் படுத்து வெளிச்சமில்லாது இருந்தால் மட்டுமே தூக்கம் வரும். பக்கத்து இருக்கை ஆசாமி போல சொடக்கு போட்டதும் எந்த அபத்தமான நிலையிலும் தூங்கும் வரத்தை இறைவன் எனக்குக் கொடுக்கவில்லை. உட்கார்ந்த நிலையில் நான் கனவில் கூட தூங்கியதில்லை. கண்கள் எரிந்தன. இரவு முழுதும் தூங்காதிருந்தாலும் மறுநாள் காலையில் - அதாவது பகற்பொழுதில் - என்னால் தூங்க முடியாது. இரவு வேண்டும்.

உலகிலேயே கழுதைக்கு அடுத்தபடியாகப் பொதி சுமப்பது வெ.நா.வா. இந்தியர்கள் என்பது என் கருத்து (போட்டி - முன்னாள் சகோரர்களான பாக்கிஸ்தானியர்கள். வளைகுடா நாடுகளிலிருந்து PIA மூலமாக பாக்கிஸ்தானுக்குச் செல்லும்போது அவர்கள் சுமக்கும் பொதிகளின் அளவை நீங்கள் பார்க்கவேண்டும்) என் பொதிகளைச் சுமந்து வெளியே வந்து ·ப்ராமிங்ஹாம் (Framingham) என்ற இடத்துக்குச் செல்லும் லோகன் எக்ஸ்பிரஸ் பேருந்தைப் பிடித்து உட்கார்ந்தாகி விட்டது. ஓட்டுனர் ஒரு பெண்மணி. அவரே இறங்கி பொதி ஏற்றும் கதவைத் திறந்து பெட்டிகளை எடுத்துப் போட்டு வண்டியும் ஓட்டுகிறார். ஆஜானுபாகாக இருந்தார்.

காற்றில் லேசான குளிர் ஆறுதலாக இருந்தது. பேருந்து கிளம்பி பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் சுற்றுமுற்றும் இருந்த கட்டிடங்கள் தேய்ந்து இரண்டு பக்கமும் மரங்கள் மரங்கள்.. எங்கு பார்த்தாலும் பச்சை. பழைய ஆங்காங்கே டொக்கு விழுந்த சாலைகள். ஆங்காங்கே செருகி வைத்தாற்போல மர வீடுகள்.

எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லை என்று வெளியில் சொல்லிக் கொள்ளலாமேயொழிய குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளும், சேருமிடம் பற்றிய ஏதோ ஒரு பிம்பமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்துதான் தீரும். எனக்குள்ளும் ஒரு பிம்பம் இருந்தது. அது விமான நிலையத்தில் விரியத் தொடங்கி 20 மைல் தொலைவில் இருக்கும் நேட்டிக் (Natick) கில் இருந்த விருந்தினர் மாளிகையை - அட... ஒரு அடுக்குமாடிக் குடித்தனம்ங்க - அடைந்ததும் விரிந்து சோப்புக் குமிழ்போல வெடித்தே விட்டது. இதுதான் அமெரிக்காவா? என்ற கேள்வி உறுத்தாமலில்லை.

இந்தியாவிலிருந்து நேரடியாக அமெரிக்கா வருபவர்களுக்கு இது சொர்க்கமாக இருக்கலாம். இதைவிட நல்ல வழுவழு சாலைகள் வளைகுடா நாடுகளில் இருக்கின்றன என்று தோன்றியது. அமெரிக்கா என்னை வசீகரிக்கவில்லை என்று தோன்றியது.

விலைவாசி எல்லாமே மூன்றிலிருந்து நான்கு மடங்கு. இரண்டு படுக்கையறை ·ப்ளாட்டுக்கு ஆயிரத்து முன்னூறு டாலர் வாடகை அநியாயம். மஸ்கட்டில் ஒரு கடற்கரை வில்லாவே கிடைக்கும். மஸ்கட்டுக்கு வந்த புதிதில் எந்தப் பொருளின் விலையைப் பார்த்தாலும் அதை இந்திய ரூபாயில் கணக்கிட்டுப் பார்ப்பது வழக்கமான ஒரு பழக்கம். இங்கு வந்த பிறகு எல்லாவற்றையும் ஓமானி ரியாலில் கணக்கிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இயந்திர மயம். அதுதான் மலிவாம். மனிதர்கள் ஈடுபடவேண்டிய எந்த வியாபார நடவடிக்கைகளுக்கும் அதீதமாகச் செலவாகுமாம். உண்மைதான். மணிக்கணக்கில் அல்லவா உழைப்பு விலை பேசப் படுகிறது. எல்லாவற்றுக்கும் பண மதிப்பீடு வைத்துக்கொண்டு 24 மணி நேரத்தை வாழும் இந்த வாழ்க்கைச் சித்தாந்தம் எனக்கு இன்னும் புரிபடவில்லை.

தோராயமாக மணிக்கு ஐம்பது டாலர்கள் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால் என்னுடைய ஒருநாள் வாழ்க்கையில் நான்:

  • 400 டாலர்கள் மதிப்பிற்கு தினமும் தூங்குகிறேன்
  • அலுவலகம் செல்ல நூறு டாலர்கள் செலவழித்துத் தயாராகிறேன்
  • 400 டாலர்கள் நேரத்திற்கு வேலை பார்க்கிறேன்
  • மதிய உணவுக்கான ஒரு மணி நேரத்தில் 50 டாலர்களை இழக்கிறேன்
  • மாலை வீட்டுக்குச் சென்று குடும்பத்தாருடன் - இரவு உணவு உள்பட - சேர்ந்திருப்பதற்கு 300 டாலர்கள் செலவழிக்கிறேன்.
வந்து இரண்டு மாதம் ஆகிறது. இங்குள்ள "எல்லாமே எண்கள்" என்ற வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியிருக்கிறது. சிறைக் கைதிகளைப் போன்று இங்கிருக்கும் அனைத்து மக்களுக்கும் Social Security Number என்ற எண்ணைக் கொடுத்து அடையாளம் காண்கிறார்கள். இந்த மாதிரியான எண் அடையாளம் இல்லாதவர்கள் அமெரிக்காவில் மனிதர்களே இல்லை.

  • வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் - Your SSN please..
  • வாடகைக்கு வீடு வேண்டும் - Your SSN please
  • காப்பீடு எடுக்க வேண்டும் - Your SSN please
  • கடனட்டை வேண்டும் - Your SSN please
  • ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டும் - Your SSN please

என்று எல்லாவற்றிலும் எல்லாவற்றிற்கும் SSN கட்டாயமாக்கியிருக்கிறார்கள். விண்ணப்பித்த தினத்திலிருந்து - எந்தப் பிரச்சினையுமில்லாத பட்சத்தில் - மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் SSN வந்து விடும். முதல் ஒரு மாதத்தை ஓட்டுவது மிகவும் கடினம். எல்லா இடங்களிலும் முட்டிக்கொண்டு நிற்க வேண்டும்.


Credit History என்று இன்னொரு அவஸ்தை. நல்ல Credit History இல்லாதவர்களுக்கு கடனட்டையோ வங்கிக்கடனோ கிடைக்காது. "நான் வருமானத்திற்குள் செலவு செய்யும் ஆசாமி; ஆதலால் கடன் எதுவும் வாங்கவில்லை. கடனட்டையை உபயோகிப்பதில்லை" என்று பெருமையுடன் சொன்னதையெல்லாம் புறங்கையால் தள்ளுபடி செய்துவிட்டார்கள். இந்தியாவில் பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கி இன்று வரை Active-ஆக வைத்துக் கொண்டிருக்கும் Citi Bank கடனட்டையைக் காட்டிப் பார்த்தேன். "நான் citi bank-இன் மதிப்புக்குரிய நீண்ட கால வாடிக்கையாளர்" என்று அவர்களின் பெங்களூர் அலுவலகத்திலிருந்து கடிதம் வாங்கியும் காட்டிப் பார்த்தேன். அமெரிக்காவில் வழங்கப்பட்ட கடனட்டையையும் அதற்குரிய நடவடிக்கைகளை மட்டும்தான் Credit History கணக்கிற்கு எடுத்துக் கொள்வார்களாம். மகா எரிச்சலாக இருந்தது. நேற்றுதான் இங்கு வந்து இறங்கியிருப்பவனுக்கு என்ன அமெரிக்க வரலாறு இருக்க முடியும்?

"மன்னியுங்கள். எங்களால் எதுவும் செய்ய இயலாது" என்று உணர்ச்சியில்லாமல் அவர்கள் சொன்னபோது "இதெல்லாம் நமக்குத் தேவையா? மரியாதையாக மஸ்கட்டிலேயே இருந்திருக்கலாம். அல்லது இந்தியாவுக்குப் போயிருக்கலாம்" என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. "அமெரிக்கா மட்டுமே உலகம் என்று அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என்பது உண்மைதான்" என்றும் நினைத்துக் கொண்டேன்.

ஆனாலும்..

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற ரீதியில் கொஞ்சூண்டு நிலப்பரப்பில் புழங்கிவிட்டு அமெரிக்காவைப் பற்றிய பிம்பத்தை வரைந்து கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

காலம் போகட்டும். என்னுடைய அமெரிக்க வாழ்வு குறித்த அனுபங்களும் சிந்தனைகளும் மாறலாம்.

அப்போது வருகிறேன் - என் அப்போதைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள.

***