Monday, December 12, 2005

* நட்சத்திரங்களும் ஒரு ஜீரோ வாட் பல்பும் *

* நட்சத்திரங்களும் ஒரு ஜீரோ வாட் பல்பும் *

நிகழ்வுகள் நினைவில் பதியத் தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்த எத்தனையோ முதல் நிகழ்வுகள் நம் எல்லாருக்கும் முக்கியமே - அவை நல்லவையோ கெட்டவையோ.

முதல் 'ங்கா'வும், முதல் தப்படியும், முதல் பொய்யும், முதல் ஏமாற்றமும், அப்போதுவரை சிரித்துக் கொஞ்சி அன்பு பாராட்டியவர்கள் முதன்முதலில் திடீரென்று சினந்து சத்தம்போட்டு அதட்டிய முதல் திட்டலும், முதல் தோல்வியும் நினைவிலில்லாவிட்டாலும் இவை தவிர ஏகமாக முதல்-கள் நினைவிலிருக்கின்றன. வாழ்வின் அங்கமான மிக முக்கிய முதல் நிகழ்வுகள் - முக்கியம் என்னைப் பொருத்தவரை.

முன்பெல்லாம் மிகவும் கடினமான கேள்வியாக எனக்குப் பட்டது "முதன்முதலில் நிகழ்ந்தவைகளில் முக்கிய முதன்முதல் நிகழ்வு எது?" என்பதுதான். அம்முக்கிய நிகழ்வு அப்போது என் வாழ்வில் நடைபெற்றிருக்கவில்லை. ஆனால் இப்போது விடை சொல்ல வினாடி நேரம் கூட தேவைப்படாது.

உங்களுக்கு எது மிக முக்கிய முதன்முதல் நிகழ்வு? (முதல் முக்கலெல்லாம் இதில் சேர்த்தியில்லை) - இரண்டே வார்த்தைகளில் சொல்லுங்கள் பார்க்கலாம் - விடையின் முதல் வார்த்தை 'முதல்' என்றிருக்க வேண்டியது கட்டாயம் :).

முதல் ரயில் பயணம் எனது 17-வது வயதில்தான் என்று சொன்னால் நம்புவதற்குச் சற்று கடினமாகத்தான் இருக்கும். அதுவும் ரயில் நிலைய மேலாளராக இருக்கும் என் தாய்மாமன் தயவினால் மதுரையிலிருந்து ஏறக்குறைய 20 கி.மீ. தூரமே இருக்கும் சிலைமான் என்ற சிற்றூருக்கு. இருசக்கரம், முச்சக்கரம், பேருந்து உள்ளிட்ட அதுவரை செய்த எல்லா வாகனப் பயணங்களும் இரைச்சலுடன் துவங்குபவை. ரயிலில் கட்டை இருக்கையில் ஒருவித பரபரப்புடனும் பரவசத்துடனும் அமர்ந்திருக்கையில் சட்டென்று நிசப்தமாக பிளாட்பாரம் பின்வாங்கிப் போகத் துவங்கியதை உணர்ந்ததும் அடக்க முடியாத ஒரு புன்னகை என் முகத்தில் விரிந்தது. அப்பயணம் முழுதும் கதவருகே நின்றுகொண்டே பயணம் செய்தேன். காலுக்குக் கீழே உள்வாங்கியிருந்த படிகளுக்கும் கீழே கரகரவென்று அடைசலாக ஓடிய - இரு தண்டவாளங்களுக்கிடையே நிரப்பப்பட்ட சரளைக்கற்களையும், கட்டைகளையும் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன்.

ரயில் நிலையத்தைத் தாண்டி பெரியார் பாலம் வழியே ஜெய்ஹிந்துபுரம் லெவல் கிராசிங்கைக் கடந்து அமிர்தம் தியேட்டர் கிராசிங்கையும் கடக்கையில் இருபுறம் ரயில் கடக்கக் காத்திருந்த - மாட்டுவண்டி முதல் பேருந்து வரை பலதரப்பட்ட வாகனங்களில் - கூட்டத்தைப் பார்த்துக் கையாட்டினேன். அக்கூட்டத்தில் ஒருவனாக எத்தனையோ முறை ரயில் கடக்கக் காத்திருந்து நின்றிருக்கிறேன். கடந்து செல்லும் ரயில்களின் ஜன்னல்களில் விரைந்து மறையும் முகங்கள். கையாட்டும் சிறுவர்கள். இப்போது அச்சிறுவர்களின் உற்சாகத்தோடு நான் கையாட்டுகிறேன் - யோசிக்கையில் வினோதமாக இருந்தது.

சீரான இசையுடன் செல்லும் ரயில் சிறு பாலங்களின் மீது செல்லும்போது ஒலிச்சத்தம் மாறும். தண்டவாளத்தையொட்டி அதுவரை வந்த நிலம் திடீரென்று காணாமல் போக ரயில் அந்தரத்தில் பறப்பது போன்று ஜிலீரென்று இருக்கும். பாலத்தின் கீழ் ஆழத்தில் தெரிந்த ஆற்றுமணலும் கூழாங்கற்களும் சற்றுத் தொலைவில் சோகையான கோடாக ஓடிக்கொண்டிருந்த நீரில் துவைத்துக் கொண்டிருக்கும் சலவைத்தொழிலாளர்களும், ஓரமாக அவசரத்திற்கு ஒதுங்கியவர்களும், சில பன்றிகளும் - சில நொடிகளே தெரியும் காட்சிகள் மாறி மறுபடியும் நிலம் அதிவேகமாகப் பின்னோக்கி விரையும். அரைமணி நேரமே நீடித்த அம்முதற் பயணம் இன்றும் நினைவில் இருக்கிறது.

இதுபோலவே முதல் விமானப் பயணமும். ஜன்னலோர இருக்கைதான் வேண்டும் என்று கேட்டு வாங்கி அமர்ந்துகொண்டு அதிர்ந்து ஓடி தரையிலிருந்து எழும்பி லேசாகக் காற்றில் எழும்பு உயர்ந்ததையும், இறங்கும்போது சக்கரம் ஓடுபாதையைத் தொடும் அந்த வினாடியை எதிர்பார்த்து மூச்சிழுத்துக்கொண்டு காத்திருந்ததும் இன்றும் நினைவிலிருக்கிறது. இதுபோன்ற எத்தனையோ முதல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்தான்.

ஆனாலும் சில விஷயங்களைச் சொல்லாமலிருப்பதுதானே அழகு!
காசி / மதி இருவரில் யாரோ அல்லது இருவருமோ பக்கத்தில் நின்றுகொண்டு சிரித்த சைத்தானைக் கவனிக்காமல் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்று தெரிந்திருந்தும் - ஜீரோ வாட் பல்பான என்னை இந்த வார நட்சத்திரமாக்கிவிட்டார்கள். உண்மையைச் சொன்னால் சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை.

வகுப்பில் "ஆண்டவா இவர் நம்மை எதுவும் கேள்விகள் கேட்டுவிடக்கூடாது" என்று எல்லாக் கடவுளரையும் வேண்டிக்கொண்டிருக்கும் சமயம் திடீரென்று எழுப்பிக் கேள்வி கேட்கும் ஆசிரியர் முன்பு 'வசமாக மாட்டிக்கொண்டோமே' என்று பலியாடு போன்று எழுந்து நிற்கும் உணர்வே என்னிடம் விஞ்சி நிற்கிறது இப்போது.

தப்பாகக் கூட பதில் சொல்லிவிடலாம். பேசா மடந்தையாக இருந்தால் அடி பின்னி எடுத்து விடுவார் என் தமிழாசிரியர் மா.இ. ஐயா. ஆதலால் பேசா மடந்தையாக இருக்க மாட்டேன் தப்புத் தப்பாகவாவது எதனையாவது உளறி வைப்பேன் என்று உறுதியளித்து, தமிழ் பேசக் கற்றுத்தந்த அன்னை தந்தையருக்கும், எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்த ஆசான்களுக்கும் எளிய எனது பதிவுகளைச் சமர்ப்பணமாக்குகிறேன்.

தவறிருந்தால் பொறுத்தெல்லாம் அருளாதீர்கள். தவறு என்று தெரியாமலேயே போய்விடும். குட்டிக்/குத்திக் காட்டுங்கள்.

முதன்முறையாக நட்சத்திரமாக வலைப்பதிவுலகில் இந்த வாரம் உங்களைச் சந்திக்கிறேன். ஒருவாரம் ஒரு யுகமாகக் கழியுமா? சில வினாடிகளாகக் கழியுமா என்று அடுத்த திங்கள் தெரிந்து விடும். :)

நட்சத்திர வாரமென்ற இச்சுழற்சி முறை வாய்ப்பு மிகுந்த பாராட்டுதல்களுக்குரிய முயற்சி. இவ்வார வாய்ப்பளித்ததற்கு எனது நன்றிகளும் - எதிர் வாரங்களின் நட்சத்திரங்களுக்கு வாழ்த்துகளும்.

புதிதாக எழுதும் முயற்சிகளோடு, சில மீள்பதிவுகளையும் செய்ய இருக்கிறேன் (வலைப்பதிவில் வராத, குழுமங்களில் எழுதிய). அவற்றைச் சிலர் ஏற்கெனவே படித்திருக்கலாம் - அவர்கள் இம்மீள்பதிவுகளைப் பொறுத்தருள்க.

பதிவுகளை இவ்வாரம்

*அகரமுதல* - இது கிட்டத்தட்ட எனது டைரிக்குறிப்புகள் போன்ற (முதல்) வலைப்பதிவு.
*ராஜபார்வை* -நான் எடுத்த புகைப்படங்களுக்கான வலைப்பதிவு
*அகவிதைகள்* - கவிதை என்ற பெயரில் நான் செய்யும் அட்டூழியங்களுக்கான வலைப்பதிவு

ஆகிய எனது வலைப்பதிவுகளில் இடுகிறேன்.

நன்றிகள்.

அன்புடன்
சுந்தர்

***

24 comments:

ramachandranusha(உஷா) said...

vaangka, vaangka

முத்துகுமரன் said...

வணக்கம் சுந்தர். முதலில் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துகள். உங்கள் அக கவிதைகளை சிலவற்றை வாசித்திருக்கிறேன். அப்புறம் துபாய் பற்றிய கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். இந்த வலைப்பதிவிற்கு இதுதான் முதல்முறை...

அப்புறம் நீங்க மருதக்காரர் என்பதில் மகிழ்ச்சியே.....

Muthu said...

WELCOME SUNDAR...

G.Ragavan said...

வாங்க சுந்தர் வாங்க.

இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

ஜோ/Joe said...

நட்சத்திர வாழ்த்துக்கள் சுந்தர்!

Maravandu - Ganesh said...

kalakkunga sundar

துளசி கோபால் said...

வாங்க சுந்தர். இந்த வாரம் ஒரே ஜோர்தான் போங்க.
எதிர்பார்ப்பு கூடிக்கிட்டு வருது.

குழலி / Kuzhali said...

வாழ்த்துகள் சுந்தர், கலக்குங்க

மணியன் said...

வாழ்த்துக்கள்

டிபிஆர்.ஜோசப் said...

வாங்க சுந்தர், வாழ்த்துக்கள்.

இந்த வாரம் முழுசும் உங்க இனிமையான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்க சொந்த ஊரைப் பற்றி எழுதுங்கள். இப்போது பணிபுரியும் இடத்தைப் பற்றியும் எழுதுங்கள். உங்கள் விருப்பு வெறுப்புகளை பற்றி எழுதுங்கள்.. ஒரு வாரமும் ஜாலியாய் போய்விடும்.

Thangamani said...

//ரயிலில் கட்டை இருக்கையில் ஒருவித பரபரப்புடனும் பரவசத்துடனும் அமர்ந்திருக்கையில் சட்டென்று நிசப்தமாக பிளாட்பாரம் பின்வாங்கிப் போகத் துவங்கியதை உணர்ந்ததும் அடக்க முடியாத ஒரு புன்னகை என் முகத்தில் விரிந்தது.//

ரொம்பத் துல்லியமா இந்த வினாடியச் சொல்லியிருக்கீங்க. அதே போல பாலத்துக் காட்சிகளும். நல்ல ஆரம்பம்.

நிலா said...

சுந்தர்,
உங்களுக்குத் தமிழ் சொல்லித் தந்தவர் பாராட்டுக்குரியவர். உங்கள் தமிழ் மிக அழகாக இருக்கிறது. கருத்தில் பக்குவம் இருக்கிறது. வாழ்த்துக்கள்

சிங். செயகுமார். said...

நட்சத்திரம் சுந்தருக்கு வாழ்த்துக்கள்!

Anonymous said...

vaazhthukkal Sundar!!!

Sundar Padmanaban said...

வாழ்த்தி வரவேற்ற நண்பர்களுக்கு நன்றிகள்.

என் எழுத்து முயற்சிகளைத் தொடர இறைவன் அருள்புரியட்டும்.

அன்புடன்
சுந்தர்.

Anonymous said...

பதிவுகளை இடுகையில் align=justify செய்யாதீர்கள். மொஸில்லா உலாவியில் எழுத்துக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன. IEக்கு மாற்றி மாற்றிப் படிக்கவேண்டியதாயிருக்கிறது.

rv said...

வாழ்த்துகள் சுந்தர்.

யாத்ரீகன் said...

மருதக்காரரே.. வாழ்த்துக்கள்.. :-)

-
செந்தில்/Senthil

[ 'b u s p a s s' ] said...

அண்ணே..
நீங்க மொத மொத மருத - போடி வண்டிலயா போனீங்க?

கலக்குங்க...

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் சுந்தர்.

வானம்பாடி said...

// தண்டவாளத்தையொட்டி அதுவரை வந்த நிலம் திடீரென்று காணாமல் போக ரயில் அந்தரத்தில் பறப்பது போன்று ஜிலீரென்று இருக்கும்.//

வித்தியாசமான, அழகான கற்பனை.

தருமி said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

சுந்தர் வாழ்த்துக்கள். தாமதமாக வந்துவிட்டேன். இப்படித்தான் 'ஜோ' அவர்களின் வாரத்தையும் தாமதமாகவே படிக்க முடிந்தது. உங்கள் வாரம் சலசலப்பில்லாமல் ஓடும் சிற்றாற்றைப்போல்., இனிய தென்றல் போல் மென்மையானது. மற்ற பதிவுகளையும் படித்துவிட்டு வருகிறேன்.

Sundar Padmanaban said...

மற்ற நண்பர்களுக்கும் நன்றிகள்.

அப்டொப்போடு,

//தாமதமாக வந்துவிட்டேன். இப்படித்தான் 'ஜோ' அவர்களின் வாரத்தையும் தாமதமாகவே படிக்க முடிந்தது.//

பரவாயில்லைங்க. என்ன அவசரம். பதிவு எங்க போயிடப்போகுது. மெதுவாப் படிச்சுட்டுச் சொல்லுங்க.

// உங்கள் வாரம் சலசலப்பில்லாமல் ஓடும் சிற்றாற்றைப்போல்., இனிய தென்றல் போல் மென்மையானது. //

நன்றி. உங்களது இந்த அபிப்ராயம் மாறாமலிருக்கும்படி நான் தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள்.

அன்புடன்
சுந்தர்.