அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Wednesday, December 14, 2005
* அந்தம் * # 5
* அந்தம் * # 5
அது நிஜமாகவே ஒரு ஆளா இல்லை பிரமையா என்று குழம்பினேன்.
‘டாக்டர் பயங்கர கைராசிக்காரரு. பாத்தீங்களா ஊசி போட்டு நீங்க கண் சிமிட்டக்கூட இல்லை. பாப்பாக்கு போடற மாதிரி பாத்து போடுவார். வலிக்கலைல?’ என்று காமாட்சி பஞ்சைத் தேய்க்க, டாக்டர் புன்னகைத்து நகர்ந்தார். எனக்கு அவள் சொன்ன 'பயங்கர’ வார்த்தைப் பிரயோகத்தின் மறு அர்த்தத்தை நினைத்து சிரிப்பு வந்தது. இந்த டயலாக்கைக் கேட்டால் கற்பனையைத் தட்டி விட்டு விகடனில் அட்டகாசமாகக் கார்ட்டூன் போட்டுவிடுவார்கள்.
'எனக்கு தூக்கம் வருது சிஸ்டர்.’
'தூங்குங்க.. ஊசிக்கு இன்னும் தூக்கம் வரும். ரொம்ப பேசாதீங்க’ என விலகினாள்.
'மணி. என் பர்ஸ் பாத்தீங்களா?’ நான் கேட்கக் காத்திருந்ததுபோல் மணி பாலீத்தீன் கவரை உயர்த்திக் காட்டி 'எல்லாம் பத்திரமா இருக்கு சார். ஒங்கள வண்டில தூக்கிப் போட்டுக்கிட்டு இதையும் எடுத்து வச்சிட்டேன். அட.. ஏன் சார் அழறீங்க.. கவலைப்படாதீங்க சார்.. சீக்கிரம் குணமாயிடுவீங்க.. நாளைக்கு வீட்டுக்கு அனுப்பிருவோம்னு டாக்டர் சொன்னாரு சார்.’
நான் கண்களை மூடிக்கொள்ள நீர்க்கோடுகள் காது மடல்களில் முடிந்து லேசாகக் கூசியது. ராகவனால் இதைச் செய்திருக்கமுடியும் என்று நம்புவது கடினமாக இருந்தது.
'தூங்குங்க சார். ஒன் அவர் கழிச்சு வரேன்’ என்ற மணியின் குரல் தீனமாக கேட்டது.
'சீக்கிரம் படிடா. I am dying out of curiosity'
‘இரு படிக்கறேன்’ என்று சொல்லிவிட்டு காற்றில் படபடத்த கடிதத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு படிக்கத் தொடங்கினேன்.
‘என் இனிய தேவதையே’
‘அட.. யாராம் அது?’ என்று கேட்டவளுக்கு முத்தத்தில் பதில் தந்து தொடர்ந்தேன்.
‘உன் நினைவுகளால் உறக்கமின்றித் தவித்து, இறுதியில் எண்ணங்களை எழுத்து வடிவத்தில் கொண்டு வந்து விடவேண்டுமென்ற உறுதியோடு இதை எழுதுகிறேன். என்ன ஆச்சரியம்! உனக்கு எழுத வேண்டும் என்று நினைத்தவுடன் சோர்வடைந்த கண்களுக்கு எங்கிருந்தோ புத்துணர்ச்சி வந்து விட்டது. உற்சாகத்துடன் எழுதத் தொடங்குகிறேன். அன்புள்ளவளே.. என்ன செய்தாய் என்னை? எங்கிருந்து வந்தது இந்தக் காதல்? உன் சிறிய இதழ்களில் நெளியும் இனிய புன்னகை மூலம் என்னைச் சிறை பிடித்தாயா? அல்லது அந்தக் காந்த கண்களின் மூலம் என் இதயத்தைக் கரைந்து போகச் செய்தாயா? இது இயற்கையான நிகழ்வா? கனவா? எனக்கொன்றும் புரியவில்லை. என் நெஞ்சம் முழுவதும் நீயே நிறைந்திருக்கிறாய். உன்னை நினைத்து ஏங்குகிறேன். உன் நினைவில் வாடுகிறேன். உன்னோடு வாழும் நாளை எதிர் நோக்கி என் உயிர் காத்திருக்கிறது. மலர்களினும் மென்மையானவளே. உன்னைக் கண்ணிமை போலக் காத்து, கண்ணீர் அறியாமல் என்றும் மகிழ்ச்சியோடு வைத்திருக்க நான் துடிக்கிறேன். உன்னைப் போல ஒரு பெண்ணை மனைவியாக அடைய நான் மிகப்பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும். உன்னருகில் இருந்து, உன்னுடன் கலந்து, என் உயிரினும் மேலாக உன்னை நேசித்து, இறுதிவரை இன்புற்று வாழ வேண்டும் என்று நினைக்கிறேன்.”
“ஹலோ.. என்ன பேச்சையே காணோம். நான் படிக்கறது புரியுதா?’
‘ப்ளீஸ்..டோண்ட் ஸ்டாப் இட்..’ என்று நிலா என்னை அழுத்தினாள். என் தோள் சட்டையில் விழுந்த சில துளிகளைப் பார்த்ததும் எனக்கு பேச்சு வரவில்லை.
‘படிடா.. ப்ளீஸ்.. ‘
‘இந்த நேசம் சில ஆண்டுகளுக்குப் பின் இருக்குமா? வயதான பின்பும் இப்படியே இருப்பாயா? என்று கேட்டாய். கடற்கரையில் நீ நின்றால் கடல் அலை போன்று ஓடி வந்து உன் காலடியைத் தழுவிக் கொள்வேன். அலைகள் பின்னோக்கிச் செல்வது பின்வாங்க அல்ல. மேலும் உறுதியோடு வெள்ளமாக வந்து உன்னை அணைத்துக் கொள்ளத்தான். அலைகள் விடாமுயற்சிக்கு உதாரணம். அவை என்றும் ஓய்வதில்லை. என் காதலும் அது போலத்தான் இருக்கும். அது காலத்தால் அழிந்து விடாது. அளவில் குறைந்து போகாது. கடைசி வினாடி வரை வெளிச்சம் சிந்தி உருகி மடியும் மெழுகு போல் நான் உன்னை நினைத்து என் காதலை உயிர் மூச்சு இருக்கும் வரை உன்னிடம் பகிர்ந்து கொண்டு மடிய விரும்புகிறேன். மெழுகு உருகினாலும் அது சிந்தும் வெளிச்சம் குறைந்து போகாது. காலம் விரைந்து சென்றாலும் அது என் காதலை அழித்து விடாது. உயிரே.. என் கண்ணீருக்கு விடை எப்போது? நாம் இருவரும் சேரும் நாள் எப்போது? எத்தனை நாட்கள் இந்த வேதனை? உன் அன்புக் கைகளில் என்னைத் தாங்கித் தாலாட்டுப் பாடும் நாள் எப்போது? ஆவி சேர உன்னை அணைத்துக் கொள்வது எப்போது? உன் வெப்ப மூச்சை உணர்வது எப்போது? உன் இதழமுதம் பருகுவது எப்போது? உன்னில் நான் கரைந்து போவது எப்போது? சொல் கண்ணம்மா. என் நினைவுகள் உன்னைத் தேடி அலைகின்றன. உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் மரண வேதனை அனுபவிக்கிறேன், தாயைப் பிரிந்த கன்று போல. என்னை விட்டுச் செல்லாதே. நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என் செவிகளில் ஒவ்வொரு வினாடியும் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. உன் தேன் குரல் என்னைத் தாலாட்டுகிறது. நீ என்னருகில் இருந்தால் போதும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. தூய வானம் போன்ற உன் முகத்தைக் காணத் தவிக்கிறேன். தேவதையே. விரைந்து வா என்னிடம். உனக்கு நட்சத்திரங்களின் எண்ணிக்கை அளவுக்கு என் அன்பு முத்தங்கள். உயிர்க்காதலுடன். உனக்குச் சூரியனாக இருக்க விரும்பும் உனது நான்.”
நிலா தீனக்குரலில் ‘முடிச்சுட்டியா?’
‘இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு. அதையும் படிச்சுடறேன்.’
‘ம்..’
‘தாய் மொழியில் எழுதுவது பெரும் சுகம். மனதில் நினைப்பதை மட்டுமல்லாமல் மனதையே வெளியிலெடுத்து எழுதி விடலாம். எண்ணங்களில் இருப்பதை அப்படியே எழுத முடிவதில் ஒரு ஆத்ம திருப்தி. வேற்று மொழியில் எழுதும் போது நிறைய சமரசம் செய்ய வேண்டியிருக்கிறது. வார்த்தைகளைத் தேடிக் கிடைக்காமல், கிடைத்ததை எழுதும் கட்டாயம் ஏற்படுகிறது. அன்னிய மொழி தாய்மொழியின் நிழல் போல. நிழல் நிஜங்களாவதில்லை. இங்கு நான் எழுதியிருக்கும் யாவும் நான் நினைத்த நிஜங்கள். நிழல்களல்ல. - அவ்வளவுதான் நிலா. சாரிடா. ரொம்ப போரடிச்சிட்டேனா? நாடக வசனம் மாதிரி இருந்ததா?’
இல்லையென்று தலையசைத்தாள்.
‘என்ன?’
‘என்ன என்ன?’
‘ஒண்ணும் சொல்லலை?’
‘இத இங்க படிச்சிருக்க வேணாமோன்னு தோணுது.... சரி.. வா.. போலாம்’
‘எங்க.. ?’
‘நேரமாயிடுச்சு.. ரூமுக்குப் போலாம்.. காலைல மதுரை பிளைட் பிடிக்கணும்ல?’எழுந்து மணலைத் தட்டிவிட்டு மெதுவாகத் தோள் உரசி நடந்து காத்திருந்த டாக்ஸியில் புகுந்து கொள்ள, டிரைவர் பணிவாக ‘போலாங்களா?’ என்று கேட்டுவிட்டு சோழாவுக்கு விரைந்தார். எனக்கு ஏனோ லேசான ஏமாற்றமாக இருந்தது. ஷெரட்டனின் பிரம்மாண்ட ரிஸப்ஷனில் கனத்த சாவிகளை ஒடிசலான பெண்ணிடம் வாங்கிக்கொண்டு விரைவு லிஃப்டில் மூன்றாம் தளத்தை அடையவும், நிலா 301-ல் புகுந்துகொண்டு கதவடைக்குமுன் ‘நீ 308-ல தான இருக்க? டின்னர் எட்டு மணிக்கு வச்சுக்கலாமா?’ என்றாள்.
‘சரி.. எங்க.. டும்புக்ட்-லயா.. தக்ஷின்லயா?’
‘ரெண்டுலயும் வேண்டாம்’
‘பின்ன?’
‘என் ரூமுக்கு வந்துடு.. ரூம் சர்விஸூக்கு சொல்லிரலாம்’
***
தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment