Monday, December 12, 2005

* அந்தம் * # 2



* அந்தம் * # 2

எனக்கு அடிவயிறு நடுங்கியது. இத்தனை அருகாமையில் ஒரு பெண்ணுடன் இருக்க நேரிட்டதில்லை. சுவாசம் லேசானதுபோல் இருந்தது. நிலா என் கண்களை ஊடுருவினாள். லேசாக விரிந்திருந்தன ஈர உதடுகள். நான் அவளைத் தின்று விடுவேன் என்று பயந்தேன். என் தோள்களைப் பற்றியிழுக்க என் காதுமடல்களில் சில்லென உணர்ந்தேன்.

‘வாடா’

‘நோ நிலா’

‘திரும்பச் சொல்லு’

‘ந்நோ.......ப்ச்...’

முதல் முத்தம். நான் கண்களை மூடிக்கொண்டேன். எங்கள் மூச்சில் வெம்மை பரவியது. மார்கழிக் குளிருக்கு இதைவிட இதம் இவ்வுலகில் எதுவும் இல்லை என்று தோன்றியது. நீண்ட முத்தத்திற்குப் பிறகு ஒரு மைக்ரோவினாடி அவள் உதடுகளை விடுவித்து, மறுபடியும் கவ்விக் கொண்டேன். அவளின் இதயம் துடிப்பதை துல்லியமாக உணர முடிந்தது. ‘என்னிடம் உள்ள அனைத்தையும் எடுத்துக்கொண்டு இவளைக்கொடு..’ என்று முகம்தெரியா இறைவனை வேண்டிக்கொண்டேன். என்னையறியாது கண்கள் மடைதிறந்ததும் உதடுகளை விலக்கிக்கொண்டேன். மூச்சிறைத்தது இருவருக்கும்.. அட.. அவள் கண்களும் கலங்கியிருந்தன..

‘நம்ம ரெண்டுபேரும் அப்படியே ஒண்ணாயிடலாம்.. செல்லம்’

‘நெஜம்மாவா?’

‘ம்ம்..’ இன்னும் இறுக்கினேன்.

‘ஸ்..ஆ.. விடுடா.. வலிக்குது’..

‘நோ மாட்டேன்’

‘நான் செத்துருவேன்’...சட்டென விடுவித்து நின்றேன்.

‘நீ இப்படிப் பேசினா நான் மறுபடியும் முத்தம் கொடுக்க வேண்டி வரும்’..

‘அய்யோ வேணாம்..’ என்று செல்லமாகச் சிணுங்கினாள்..

‘ஓ.கே. ம்.. என்ன பேசணும்.. சொல்லுடி..’

‘என்னை எப்ப கல்யாணம் பண்ணிப்பே?’

‘எத்தனை தடவை பண்றதுடி’

‘எப்போ பண்ணினே’

‘ஒன்ன பாத்த அன்னிக்கே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சு போச்சு’

‘இந்த ஐஸுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல.. ஒழுங்கா பதில் சொல்லு..’

‘இதுக்கு பதில் தெரிஞ்சா நான் இத்தன நேரம் சும்மாயிருந்திருப்பேனா? இன்னேரம் ரெண்டு குட்டிங்க பெத்துருக்க மாட்டோமா?’

நிலா வெட்கப்பட்டதைக் காணக் கண்கோடி வேண்டும். எனக்கு அவளை மறுபடியும் முத்தமிடவேண்டும் போல இருந்தது. அவளை மறுபடியும் இழுக்க என்னை நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள்.

‘எனக்கு இப்போவே இன்னொரு முத்தா வேணும்;.. கொடு’

‘எல்லாம் போதும்.. அவ்வளவுதான்..’

‘அயாங்ங்ங்....’

‘என்ன இது.. சின்னப்பிள்ளையாட்டம்..’

‘அப்படித்தான்..’

இந்த முறை சற்றுத் தெளிவாக முத்தமிட்டுக் கொண்டோம்.எல்லாக் காதலர்களுக்கும் தோன்றுவதுபோல எனக்கும் என்காதல் அசாதாரணமானது என்று தோன்றியது. என்னைப்போல் யாரும் காதலிக்க முடியாது என்று தோன்றியது. நான் கைகளைக் கீறிக் கொள்ளவில்லை. பச்சை குத்தவில்லை. பட்டினி கிடக்கவில்லை. ஆனால் இதெல்லாம் என் மனதில் நிகழ்ந்தன. நிலாவை ஒரு நாள் பார்க்காவிட்டால் எனக்கு அன்று எல்லாமே சூன்யமாக இருக்கும். அவளைப் பார்க்கும்போது அவள் மட்டுமே எனக்கு மொத்த உலகம். சுவாஸமும் நிலாவும் தவிர வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை என்று நினைத்தேன்.

‘நிலா.. நிலா..’

‘என்னப்பா?’

‘என்கூடவே இருந்துரேன்...’

‘எனக்கும் ஆசைதான்.... ஆனால் முடியாதுடா.. சீக்கிரம் என்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு போயேன்..’

‘செய்றேண்டா.. அதுவரைக்கும் எனக்குத் தூக்கமில்லை..’

எனக்கு ஏக்கமாக இருந்தது. இருள் சூழ்ந்து நகரில் விளக்குகள் எரியத்தொடங்கி விட்டன. அந்தி நேரம் எப்போதுமே எனக்கு ஒரு இனம்புரியாத சோகத்தைத் தரும். இப்போதும் சோகமாக இருந்தது.

‘நேரமாயிடுச்சு.. நான் கிளம்பறேன்..’

வேண்டாம் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் அவள் போகவேண்டும். கரும்பட்டியிலிருக்கும் அவள் வீட்டை அடைய நாற்பது நிமிஷம் ஆகும். அவள் நகரப்பேருந்தில் செல்வதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. நிலா மலரை விட மென்மையானவள். காற்று பட்டாலே சிவந்து விடுவேனென்று பயமுறுத்தும் மென்மை தேகம் கொண்டவள். இவள் பஸ்ஸில் சென்று இடிபட்டு நசுங்குவதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

‘என்னோட வாயேன்.. நான் டிராப் பண்றேன்’

‘என்ன வெளையாடறயா? நான் பஸ்ஸிலேயே போய்க்கிறேன்.. நீ வீட்டுக்குப் போ’

ஆட்டோவில் எங்கேயோ தனித்திருக்கும் கரும்பட்டிக்குப் போவது இன்னும் அபாயம். அதற்கு பஸ் பரவாயில்லை.நான் மனமில்லாமல் தலையசைத்தேன். நாங்கள் இருந்தது எங்கள் அலுவலகக் கட்டடத்தின் மொட்டைமாடியில் (ஐந்து மாடிகள்). உயரமான கட்டிடமானதால் மதுரை நகர் முழுதும் தெரியும். மீனாட்சி கோயிலின் மேற்கு கோபுரம் விளக்கு வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. நான் மானசீகமாக வணங்கிக்கொண்டேன். நகர் முழுதும் விளக்குகள் நட்சத்திரங்களாக மின்னிக் கொண்டிருந்தன. தரைவானில் நட்சத்திரங்கள். மெலிதான வாடைக்காற்று உடலை வருடிச்செல்ல நான் கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டேன். நிலா புடவையால் தலையில் முக்காடிட்டுப் போர்த்திக் கொண்டாள்.

‘வரேன்பா..’

‘....’

அருகே நெருங்கி என்னைத் தொடாமல் மெலிதாக முத்தமிட்டாள்.

‘I Love you sweet heart'

‘Me too; honey'

‘Bye’

‘என்னால் சொல்ல முடியாது செல்லம். Whenever I say bye to you, I die a little’

‘ஆஹா.. எங்கேயிருந்து சுட்டே இந்த டயலாக் எல்லாம்’ என்றாள் சிரித்து, ஆனால் கண்களில் நீருடன்.

நான் அமைதியாக இருந்தேன். உணர்ச்சிக் கொந்தளிப்பினால் என்னால் பேச முடியவில்லை.

‘நல்லாத் தூங்கு.. நாளைக்குத் தான் பாக்கப் போறோமே.. என்னவோ நான் ஒரேயடியா போற மாதிரி.. இப்படி படுத்தறயே.. நீ இப்படி உம்முன்னு இருந்தா எனக்கு கஷ்டமா இருக்கு.. கொஞ்சம் சிரியேன்..’

நான் சிரிக்க முயன்று தோற்றேன். கைகோர்த்து படியிறங்கி ஐந்தாவது மாடியில் பொத்தானை அழுத்தி லிஃப்டை அழைத்துவிட்டு, காத்திருந்தோம்.. லிப்ட் வந்ததும் புகுந்து ‘G’ யை அழுத்த, அதிசயமாக எங்கும் நில்லாமல் தரைத்தளத்திற்கு விரைந்தது. பெரும்பாலான அலுவலகங்கள் முடிந்து அனைவரும் வீட்டுக்குச் சென்றிருப்பார்கள். நாங்கள்தான் கடைசிபோல. இரு தளங்களுக்கு இடையே பயணிக்கும் நேரங்களில் அவசர முத்தங்கள் பறிமாறிக் கொண்டோம்.

‘ஒனக்கு போறவே போறதா..’ என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டாள்.

‘என் வாழ்நாள் போதாது கண்ணம்மா’

தரைத்தளத்தில் நான் உள்ளே நின்றுகொண்டு < > ஐ அழுத்திக்கொள்ள அவள் வெளியேறி நின்று கையசைத்தாள்.

‘ஸாரிடா.. நான் போகணும்... இன்னிக்கு பத்து மணிக்கு ஃபோன் வரும்..’

‘யார்ட்டயிருந்து?’

‘மறந்துட்டியா.. வேற யார்ட்டயிருந்து வரும்?.. எல்லாம்... ராகவன்ட்ட இருந்துதான்.. என்னோட புருஷன்..’

(தொடரும்...)

1 comment:

மஞ்சூர் ராசா said...

# 2 முழுவதும் உரையாடல்களினால் கதையின் வடிவம் மெல்ல மாறி வருகிறது. கடைசி வரி ஆவலை உண்டாக்குவதற்காகவேத் தோற்றுவிக்கப்பட்டதாக இருந்தாலும், நல்ல திருப்பம்.
தொடரும்