Friday, December 16, 2005

* அந்தம் * # 8


* அந்தம் * # 8

சொர்க்கத்தை உணர விரும்பினால், அதிகாலை கோவை-கொச்சின் எக்ஸ்ப்ரஸில் ஒரு மழை நாளில் கூப்பேயில் காதலிப்பவருடன் தூங்காமல் செல்லவேண்டும் போல. ரயில் நின்றதும் கலைந்த தேன்கூடு போல பயணிகள் உதிர, காத்திருந்தவர்கள் ஏறமுயல தள்ளுமுள்ளுகள் முடியக் காத்திருந்தோம். ரயிலுக்குக் காத்திருக்கையில், நிலா தோள் மீது சாய்ந்த கணம் முதல், வாழ்க்கை திடீரென்று எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்லத் துவங்கிவிட்டது போல் உணர்ந்தேன். அதன் பிந்தைய நிகழ்வுகள் கனவு போல் இருந்தன.

கருப்புச் சட்டமிட்ட கண்ணாடி அணிந்த பரிசோதகர், எங்களைப் பார்த்ததும் 'கூப்பேல வரவேண்டிய ஒருத்தங்க வர்லை. நீங்க எடுத்துக்கறீங்களா?' என்றது; நிலா மறுப்புச் சொல்லாதது; கீழ் படுக்கையில் நான் சன்னலோரம் அமர்ந்து அவள் அரையடி இடைவெளியில் இருக்க, கல்லூரியில் படித்தது முதல், ராகவன் ஆஸ்த்திரேலியாவுக்கு விமானம் ஏறியது முதல் விலாவாரியாக காற்றில் அலைபாயும் கூந்தலுடன் சொன்னது; மண வாழ்க்கையின் சில நிகழ்வுகளையும், நிகழாதவைகளையும் சொன்னபோது நான் திரும்பிக்கொண்டு பெருமூச்செறிந்து கண்ணீரை அடக்கியதில், ஓரங்களில் வழிந்து காற்றில் தெறித்து அவள் மீது பட்டதில், அவள் என் முகத்தைப் பிடித்துத் திருப்பிப் பார்த்து அழுதது; நான் அழாதேயென்று சொல்லி, அவள் கண்ணீரைத் துடைத்தது (இவ்வளவு மிருதுவாக கன்னம் இருக்குமா?) ஒரு மணி நேரம் ஒன்றும் பேசாமலேயே பார்த்துக் கொண்டிருந்தது; கடைசியில் அவள் என் தோள் மீது சாய்ந்து தூங்கியது, சரிந்து மடியில் தலைவைத்துப் படுத்துக்கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டது, நான் சன்னல் வழியே கடந்தோடிய பசுமைகளையும் பல லெவல் க்ராஸிங்குகளையும் வெறித்தவாறே, அவள் தலையை விரல்களால் கோதியது- எல்லாம் கனவு போல சுலபமாக நிகழ்ந்த நிஜம்.

காலையில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் வெளி வருகையில், இளஞ்சூரியனின் வெம்மை முகத்தில் படர்ந்து, நகரின் அவசரச் சத்தங்கள் கேட்டதும், நினைவுக்கு வந்து நிலாவைப் பார்த்தால், அவள் முகத்தில் செம்மை பரவியிருந்தது. என் ஜீன்ஸின் தையல் மடிப்பு, அவள் கன்னத்தில் அழுத்திக் கோடிட்டிருக்க, அதை ஒரு முறை கூந்தலை ஒதுக்கும் சாக்கில் வருடியதை கவனித்தேன். எனக்கு ஏனோ நெஞ்சம் நிறைந்திருந்தது. அவள் என்னவள் என முடிவு செய்திருந்தது இப்போது உறுதியாகி விட்டதைப்போல் உணர்ந்தேன். உரிமையுடன் அவள் தோள் உரசி நடந்து வெளி வந்து, இடைவெளியைக் குறைப்பதற்காக டாக்ஸியைப் புறக்கணித்து, ஆட்டோவில் நெருக்கி அமர்ந்து கொண்டு 'தாஜுக்குப் போவணும்' என்றதும், அந்த மலையாளி 'ச்செரி' என்றுவிட்டு எதுவும் பேசாமல் நல்ல, சீரான சாலைகளில் அதிகம் குலுக்கலில்லாமல் விரைந்து சென்றார்.

முந்தைய ஆட்டோ அனுபவங்களின் பாடமாக, ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை தயாராக வைத்துக் கொண்டு, தாஜ் அடைந்ததும் அவர் கையில் திணித்துவிட்டு, பொதிகளை இறக்கித் திரும்பு முன் நாற்பத்தியொரு ரூபாய் ஐம்பது பைசாவை திருப்பித் தந்துவிட்டு 'வரட்டெ' என்று அவர் சென்றதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

சிப்பந்தி பொதிகளை எடுத்துக்கொள்ள, வரவேற்பறையிலிருந்த ஆணிடம் விசிட்டிங் கார்டை நீட்டியதும், புன்னகைத்து விட்டு, தயாராக இருந்த சாவிகளைக் கொடுத்தான்.அடுத்த சில மணித்துளிகளில் தயாராகிவிட, ரிஸப்ஷனிலிருந்து உன்னி தொலைபேசியில் 'ஹவ் ஆர் யூ? ஹவ் வாஸ் த ட்ரிப்? வெல்கம் டு கொச்சி!' என்றான்.

கீழே சென்று பார்த்தால் அங்கமாலியிலிருந்து ராஜனும் வந்திருக்க, நிலாவை அறிமுகம் செய்துவிட்டு, உன்னியின் மாருதியில் ஏறிக்கொள்ள, அன்றைய தினத் திட்டங்களைப் பற்றி பேசியதில் கொச்சின் அலுவலகம் வந்துவிட்டது. பரபரவென்று அனைத்தையும் இணைத்துத் தயாராகிக் காத்திருந்த சில நிமிடங்களில், நானும் நிலாவும் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டு, புன்னகைத்துக் கொண்டோம். அங்கமாலி தொழிற்சாலையின் அனைத்துத் துறைத் தலைவர்களும் குழுமியிருக்க, உன்னி எங்களை அறிமுகம் செய்துவிட்டு, ஐந்து நிமிடம் மலையாள ஆங்கிலத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், நிலா ப்ரசண்டேஷனைத் தொடங்கினாள். இம்முறை அவளைத் தீர்க்கமாக கவனித்தேன். அழகான சீரான ஆங்கிலம். தாலாட்டும் குரல். தலையை ஆட்டி ஆட்டி, தோளில் கூந்தல் அதிர, கைகளை அபிநயித்து அவள் பேசியதை, பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அகராதியில் நிலாவிற்கு நேராக மென்மை என்று போட்டிருக்க வேண்டும்.

கூட்டம் முடிந்து அனைவரும் கலைய, உன்னி அவனது அறைக்கு எங்களை அழைத்துச் சென்று அமர்த்தி 'எத்தர நாள்?' என்றான். 'ஒரு வாரம்டா. இனிஷியல் பிரப்பரேஷன் பண்ணிட்டு திரும்ப போகணும். ஸ்காலா டிஸ்க்கு வந்ததும் சொல்லு. திரும்ப வந்து இம்ப்ளிமண்ட்டேஷனை ஆரம்பிச்சுரலாம். இன்னும் மூணு மாசத்துல உனக்கு கருப்பு வெள்ளை ·பாக்ஸ்ப்ரோவிலிருந்து விடுதலை!'

'ம். காத்துக்கிட்டு இருக்கேன். சரி. நீங்க கண்டினியூ பண்ணுங்க. நான் மதுரைக்கு இந்த மாசம் பி அண்ட் எல் அனுப்ச்சுட்டு வரேன்'

அடுத்த அரைமணியில் ராஜனுடன் அங்கமாலிக்குச் சென்று சர்வர் ரூமில் எர்த் ஸ்டேஷனையும் மக்ஸையும் சோதித்ததில் சாட்டிலைட் இணைப்பு சீராக இருந்தது.

நிலா ஒவ்வொன்றையும் பார்த்து என்ன என்று கேட்க, எளிமையாக விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன். டாமா ஃபோனை எடுத்துக்கொண்டு ராஜனிடம் 'மதுரைக்கு கோடு என்னப்பா?' என்று கேட்டதற்கு, 'ரீ டயல் போடு. போதும்' என்றான். அழுத்தியதில், ஒரே ரிங்கில் மறுமுனை எடுக்கப்பட்டு 'போய் சேந்துட்டியா. நல்லது' என்றான் அலோக்.

'குமார் இருக்காரா?'

'பெரியப்பா ரூம்ல. ஒரு நிமிஷம் இரு' என்றுவிட்டு நான் 'வேண்டாம்' என்று அலற அலற இசை ஒலித்து, 'ஹாய்ங். வாட் ஹேப்பண்டு? இஸ் ராஜன் ஹேப்பி?' என்றார் ஜார்ஜ்.

குமாரும் 'ஹாய்.. ஹவ் ஆர் யூ அன் நிலா?' என, ஸ்பீக்கர் ஃபோனில் போட்டிருக்கிறார்கள் எனத் தெரிந்தது.

'கொச்சின் ஆபிஸ்ல கிக் ஆ·ப் முடிச்சுட்டு இப்பத்தான் அங்கமாலி வந்தோம்'

'குட். ஸ்டே கம்·பர்ட்டபிளா இருக்கா?'

'பக்கா குமார். நோ ப்ராப்ளம். தேங்க்ஸ் டு ராக்கேஷ்'

'·பைன். வென் ஆர் யூ கமிங் பேக்?'

'நெக்ஸ்ட் மண்டே குமார்'

'ஓ.கே. டேக் கேர். டேக் கேர் ஆ·ப் நிலா' என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டிக்கும் தருணத்தில் 'ஹூஸ் நிலா?' என்று ஜார்ஜ் கேட்டது லேசாகக் காதில் விழுந்தது.

மறுபடியும் ரீ-டயலை அழுத்தி அலோக் எடுத்ததும் வள்ளென்று விழுந்தேன்.

'என்ன மயித்துக்கு ஜார்ஜ் ரூமுக்கெல்லாம் கொடுக்கற?'

அவன் சிரித்து 'சரி சொல்லுடா. என்ன விஷயம்?' என்றான். அலோக்குக்கு கோபமே வராது.

'சொனாட்டால பேசிட்டயா? எப்ப பேக்கேஜ் அனுப்புறாங்களாம்?'

'அட்வான்ஸ் போனதுக்கப்புறம் வரும்ன்றாங்க'

'அட்வான்ஸ் போயிருச்சா?'

'கோவிந்தா கிட்ட கேக்கணும்' என்றான் கோவிந்த்தை.

'கேட்டுத் தொலை. எனக்கு ஒரு வாரத்துல மொத்த டிஸ்க்கும் அங்கமாலிக்கு வரணும். வர்ற வரைக்கும் தலையணை பாயோட போயி சொனாட்டா ஆபிஸ்ல படுத்துக்கோ'

அலோக் 'சரி' என்று சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே இணைப்பைத் துண்டித்தான்.

'அது வரும்போது வரட்டுமே. நம்ம போயிட்டு திரும்ப வரலாம்' என்றாள் நிலா.

'எனக்கு திரும்பப் போகவே மனசில்லை கேட்டியா. சட்.. ராஜன் கொஞ்ச நேரம் எங்கூட பேசாதே. தொத்திக்குது'

நிலா களுக்கென்று சிரித்தாள் 'இங்கயே இருந்து என்ன செய்ய போறியாம்? யாராச்சும் பொண்ணு புடிச்சு வச்சுருக்கியா?'

'போய்ட்டு எதுக்கு வரணும்? டிஸ்க்கு வந்துட்டா இருந்து முடிச்சுட்டு போகலாமே?'

'அது சரி. ஆனா சொனாட்டால இருந்து அவ்ளவு சீக்கிரம் வராதுப்பா. எனக்குத் தெரியும்'

உண்மைதான். ஆனால் திரும்பப் போக மனது வரவில்லை. நிலாவுடன் அங்கேயே இருந்துவிடலாம் போலத் தோன்றியது. அன்றிரவு உன்னி டின்னருக்கு அழைத்திருந்தான். உன்னியின் மனைவி திருத்தமான முகத்துடன் இருந்தாள். ஐந்து நிமிடங்களில் நிலாவுடன் சினேகமாகி, இருவரும் கதைத்துக் கொண்டிருக்க, உன்னி என்னைச் சாக்காக வைத்து டக்கீலாவை எங்கிருந்தோ வாங்கி வந்து அவன் மட்டும் குடிக்க நான் சிக்கூ ரசத்தை உறிஞ்சினேன். முதல் நாள் தூங்காததும், தொடர்ந்த அலுவல் பளுவிலும் எனக்கு அசதியாக இருந்தது. உன்னியிடமிருந்து விடைபெறும்போது, அவன் மனைவி நிலாவின் காதில் கிசுகிசுக்க நிலா சிரித்துக்கொண்டு விடை பெற்றாள்.

எங்களை ஹோட்டலில் இறக்கிவிட்டு உன்னி விடைபெற, ரூமுக்குச் செல்ல முற்பட்டதும், நிலா என்னைப் பார்த்து, ' மாதவி என்ன சொன்னா தெரியுமா?' என்று கேட்க நான் தெரியாதென்று தலை ஆட்டினேன். 'ஷி தாட் ஐயாம் யுவர் ஒய்ப். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பொருத்தம்னு சொன்னா'

நான் மையமாகச் சிரித்தேன். நிலா கையசைத்துவிட்டு கதவை மூடிக்கொள்ள, நான் என் அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தேன். தூக்கம் தொலைந்து போயிற்று. தலையணையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு 'நிலா..நிலா' என்று முத்தமிட்டேன். லேசாகக் காய்ச்சல் அடிப்பது போல இருந்தது. கண்களை மூடிக்கொண்டு எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை. அழைப்பு மணியின் விடாத அலறலில் திடுக்கிட்டு எழுந்து சென்று கதவைத் திறந்தால் புத்தம் புதிதாக நிலா. விடிந்திருந்தது. நான் எரியும் கண்களைக் கடினப் பிரயாசையுடன் திறந்து அவளைப் பார்த்தேன். என்னைப் பார்த்து துணுக்குற்று, சட்டென்று அருகில் நெருங்கி நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

'ஹேய். என்ன ஆச்சு? இன்டர்காம் அடிச்சிப் பாத்தேன். நீ எடுக்கவேயில்லை. அதான் வந்தேன். ஒடம்பு சரியில்லையா?'

அவள் ஸ்பரிசம் எனக்கு ஆறுதலாயிருந்தது. அவள் கையை என் நெற்றியோடு அழுத்திக் கொண்டேன். அவள் என் தலையைக் கோதினாள். சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு மெதுவாகக் கேட்டேன் 'உன்னி வந்துட்டானா?'

'இல்ல. ராஜன் வந்துருக்கான். ரிஸப்ஷன்ல இருக்கான்'

'அப்படியா? ஒரு அஞ்சு நிமிஷம் இரு' என்று அவளை அமர்த்திவிட்டு, உடைகளுடன் குளியலறையில் புகுந்து மின்னல் வேகத்தில் தயாராகி வெளியே வந்து புன்னகைத்து 'போலாமா?' என்றேன்.

என்னை இமைக்காமல் பார்த்துவிட்டு 'நீ மனுஷனே இல்லை. ராட்சஸன்!' என்றாள்.

அடுத்த மூன்று நாட்களில் அலுவல் மும்முரத்தில் மூழ்கி, நான்காம் நாள் இரவில் தாஜில் சாப்பிடலாம் என்று முடிவாகி, என் அறையில் நானும் ராஜனும் நிலாவுக்காக காத்திருக்க, கதவைத் திறந்து வந்தவளைப் பார்த்து நான் ஆச்சரியத்தில் திகைத்தேன். வழக்கத்தைவிட இன்னும் பளிச்சாக- தேவதையை விட அழகான வார்த்தை ஒன்று சொல்லுங்களேன்- அதாகத் தோன்றினாள். முழங்கால் வரை இருந்த- அது என்ன- ஸ்கர்ட்- ஒரு ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்து வாசனையுடனும் புன்னைகையுடனும் வந்தவளைப் பார்த்த மாத்திரத்தில் நான் பேச்சிழந்தேன். இருந்தாலும் அறையில் ராஜனும் இருந்தது எனக்கு உறுத்தியது. அவனும் நெளிந்ததாகப் பட்டது. நிலா எனக்கே எனக்கு. எனக்கு மட்டுமே! நான் கட்டிலில் சாய்ந்து கொண்டு, தரையில் அமர்ந்திருந்தேன். நிலா என்னைப் பார்த்து 'ஏன் கீழ ஒக்காந்துட்டே? ஹாய் ராஜன் குட் ஈவ்னிங்' என்று சிரித்தாள். கீழே உட்கார முற்பட்டு, ஆடையின் சங்கடத்தை உணர்ந்து உடனே எழுந்து கட்டிலில் உட்கார்ந்தாள். அப்படியும் அவள் முழங்கால்களின் வெண்மை கண்ணைத் தாக்கியது. நான் அவளைச் செல்லமாக முறைக்க, என்னை ஏற்கனவே அவள் அப்படியே முறைத்துக் கொண்டிருந்தாள்.

'என்னடி இது ட்ரெஸ்?' என்றேன் கீழ்க்குரலில்.

'ஏன். நல்லா இல்லையா?' என்று என் காதில் கிசுகிசுக்க, 'நல்லா இருக்கு. ஆனா இவன் முன்னாடி இதெல்லாம் போட்டுக்கணுமா?' எனக் கேட்டதும், விழிகளை விரித்து 'அப்படித்தான் போட்டுப்பேன். நீ என்ன என்னை கன்ட்ரோல் பண்ற? என் ட்ரெஸ்ஸூ.. நான் போட்டுக்கறேன். ஒனக்கு என்னடா?' என்றாள்.

ராஜன் அசெளகரியமாக உணர்ந்திருக்க வேண்டும். டி.வி.யில் ஆழ்ந்தான். நான் மெளனமாக இருக்க, நிலா எழுந்து ராஜனிடம் 'ஐ வில் பி பேக் இன் ·பைவ் மினிட்ஸ்' என்று விட்டு வெளியேறி மறுபடியும் வேறு கால் முழுதும் மறைத்த ஜீன்ஸில் திரும்ப வந்து 'போதுமா?' என்று கண்ணால் வினவ, நான் ஆசுவாசப் புன்னகை செய்தேன்.

ராஜன் இப்போது எழுந்து 'எனக்கு பசிக்கலை. லேட்டா தான் லஞ்ச் சாப்பிட்டேன். ஐயாம் லீவிங். நாளைக்குப் பார்க்கலாம்' என கிளம்பிவிட்டான்.சற்று நேர அமைதிக்குப் பின் 'எனக்கு பசிக்கலை. உனக்கு?' என்றேன்.'எனக்கும் தான். ஜூஸ் மட்டும் சாப்பிடலாம்'

'சரி' சொல்லிவிட்டு ஜூஸ் ஆர்டர் செய்து விட்டு நிலாவிடம் 'ஸாரி நிலா' என்றேன்.

'எதுக்கு?'

'.....'

'நான் மொதல்ல போட்ருந்த ட்ரெஸ்ஸூக்கா?'

'.....'

'ஹேய். அதுக்கு ஏன் ஸாரி சொல்றே. கிளம்பறதுக்கு முன்னால அவசரமா மதுரைல வாங்கினது. நல்லா இருக்கும்னு போட்டுட்டு வந்துட்டேன். அப்புறம்தான் புரிஞ்சது அது ரொம்ப எக்ஸ்போஸ் பண்றதுன்னு. அதான் மாத்திட்டேனே'.

'......'

'ஹேய். என்னப்பா. சரி. அப்படியே இருந்தாலும் நீ ஏன் கஷ்டப்படறே. விட்டிருக்க வேண்டியதுதானே?'

'விட முடியாது நிலா'

'ஏன்?'

'ஏன்னு சொல்லத் தெரியலை. எனக்கு நீ அப்படி ட்ரெஸ் பண்ணது சங்கடமா இருந்தது'

நிலா என் கண்ணை ஊடுருவிப் பார்த்து 'ஏன்?' என்றாள் மறுபடியும்.

நான் மூலையில் மடக்கப்பட்ட எலி போல உணர்ந்தேன். அழைப்பு மணி ஒலித்ததும் நிலா சென்று திறந்ததும், சிப்பந்தி பவ்யமாக ட்ரேயை வைத்துவிட்டு அகன்றான்.

'எதுக்கு இப்போ லாப்டாப்பை தெறக்கற?'

'அலோக் சில டாக்குமண்ட்ஸ் அனுப்பிருக்கான். மெயில் செக் பண்ணனும். அதான்.'

'சரி. நான் மொதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு. ஏன்?'

அவ்வினாடியில் இயக்கங்கள் நின்று, உலகமே அமைதியாகிவிட்டது போன்றும், காதுகளில் சூடாகவும் உணர்ந்தேன். அவளைப் பார்க்காமல் மடிக்கணினியின் கேபிளை இணைத்துக் கொண்டே நிதானமாக 'நிலா. ஐ திங்க் ஐ லவ் யூ' என்றேன்.

கடைசியில் சொல்லியே விட்டேன் என்று நம்புவது கடினமாக இருந்தது. நிலா எந்தவித உணர்ச்சிகளும் முகத்தில் காட்டாமல் சில வினாடிகள் கழித்து 'யூ மஸ்ட் பி கிட்டிங்'

'இல்லை நிலா. ஐயாம் மேட்லி இன் லவ் வித் யூ. ஐ லவ் யூ. ஐ வாண்ட் டு பீ வித் யூ ·பார் த ரெஸ்ட் ஆ·ப் மை லை·ப்'. இன்னும் அவளைப் பார்க்காமலேயே- பார்த்தால் சொல்ல நினைத்தது எல்லாம் மறந்துவிடும்- தீர்க்கமாகச் சொன்னேன்.

அவள் லாப் டாப்பின் எல்ஸிடியை லொட்டென்று மூடி, சற்றே உயரம் குறைத்துக் குனிந்து என் கண்களைப் பார்த்து 'ஆர் யூ சீரியஸ்?' என்றாள் நிலா. இப்போது நான் நிமிர்ந்து அவள் கண்களை நேராகப் பார்த்துச் சொன்னேன் 'யெஸ். ஐ லவ் யூ ஹனி'

'முட்டாள். எனக்குக் கல்யாணம் ஆயிருச்சி'

'பரவாயில்லை'

'ஒனக்கு நிஜமாவே பைத்தியம்'

'பரவாயில்லை'

இப்போது ஒரு கனத்த மெளனம் நிலவ, நிலா ஜூஸை எடுத்து உறிஞ்சினாள்.

'நீ எடுத்துக்கோ'

'எனக்கு வேணாம் நிலா'

'பைத்தியம் பைத்தியம். மரியாதையா குடிக்கப் போறியா இல்லையா?'

'வேணாம் விட்டுடு'. அப்புறம் நான் ஒன்றும் பேசவில்லை.நிலா எழுந்து கதவருகே நின்று திரும்பி என்னைப் பார்த்தாள். இப்போது அவள் முகத்தில் புன்னகை இல்லை. தீர்க்கமாக என்னைப் பார்த்து 'கண்ணா. எனக்கு புரியுது. நீ ரொம்ப நல்லவன். ஐ லைக் யூ வெரி மச். நான் சந்திச்சவங்கள்ளையே நீ ரொம்ப வித்தியாசமானவன்- ராகவனை விடவும். ஆனா நாம ரெண்டு பேரும் வாழ்க்கைல ரொம்பத் தாமதமா சந்திச்சிருக்கோம். ஐயாம் ஸாரி' என்று சொல்லிவிட்டுச் செல்ல நான் மூடிய கதவை வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உலகம் அழிந்தது போல என் மனதில் பிரளயம். பெரிய தவறை செய்து விட்டேனா? இனிமேல் அவள் புன்னகையைப் பார்க்க முடியாதா? அவள் நட்பையும் இழந்துவிட்டேனா? நாளைக் காலை எந்த முகத்தோடு அவளைப் பார்ப்பேன்? என்று ஆயிரக்கணக்கில் கேள்விகள் தோன்ற, கால்கள் தொய்ந்து படுக்கையில் விழுந்தேன். விழியோரங்களில் வடிந்த கண்ணீர் காது மடல்களைச் சூடாக்கியது. விளக்குகள் அனைத்தையும் அணைத்து விட்டு, அப்படியே படுத்திருந்தேன்.

வாழ்வும் இருண்டுவிட்டது போல் உணர்ந்தேன்- நிலவில்லா இருண்ட வானம் போல.

தொடரும்...

2 comments:

மணியன் said...

தங்களின் நடையும் கதை சொல்கின்ற வண்ணமும் நன்றாக உள்ளது.

Sundar Padmanaban said...

நன்றி மணியன். மொத்தக் கதையையும் படித்த்விட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.