Wednesday, December 14, 2005

* அந்தம் * # 6



* அந்தம் * # 6

'ஒங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு?' என்றார் குமார். நான் கேள்விக்குறியுடன் பார்க்க அலோக்கும் அதே.

'நல்ல கேண்டிடேட்டை விட்டிருப்போம். ஷி இஸ் எக்ஸலண்ட். காலைல வந்து அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கச் சொல்லியிருக்கேன். அலோக் ரெண்டு வாரம் இண்டக்ஷன் கொடுத்துட்டு இவன்ட்ட விட்டுரு'. எனவும் நான் மனதில் விசிலடித்தேன்.

'என்ன ஆச்சுடா.. ஆபிஸ்ல, அதும் எம்முன்னாடியே விசிலடிக்கிறியா?' என குமார் ஆச்சரியப்பட, நான் நாக்கைக் கடித்துக் கொண்டேன். அலோக் முனக குமார் 'என்னடா?' என்றார்.

'ஏற்கனவே ஒரு நாளைக்கு நூறு சப்போர்ட் கால் வருது. இதுல இன்னொரு ஆள ட்ரெயின் பண்ணணுமா?'

'நீ ஒண்ணும் பண்ண வேணாம். சும்மா ஒங்கூட ஒக்காந்துருப்பா. ஒன்னோட ஜால வித்தைகளையெல்லாம் பாத்தா ஒண்ணும் கேக்கத் தோணாது' என்று குமார் சொன்னதற்கு அலோக் வெட்கப்பட்டான். அவன் புகழ்மொழிகளைக் கேட்டால் பெண் போல் வெட்கப் படுவான்.

'ரெண்டு வாரம் தாண்டா. அதுக்கப்புறம் இதோ உக்காந்திருக்கானே. இவன் பாடு. அவள் பாடு.. சரியா? போ..' என்றதும் அலோக் வெளியேற, என்னை அமர்த்தி 'இரு' என்றார்.

'சொல்லுங்க குமார்'

'என்னடா கான்ஸ்டிபேஷன் வந்த மாதிரி ஒக்காந்துருக்க? எதும் ப்ராப்ளமா?'

'ஒண்ணும் இல்லையே'

'சரி. எங்கியோ ஏதோ இடிக்குது. அப்றம் சொல்றேன். நாளைக்கு அவள் வந்ததும் ஆபிஸ்-ல எல்லாத்தையும் இன்ட்ரொடியூஸ் பண்ணிடு. காலைல கெளதம் வருவான். நம்மளும் ஸ்காலாதான் இம்ளிமன்ட் பண்ணப்போறோம்'

'ஸ்காலாவா.. சாப்னு சொல்லிகிட்டு இருந்தீங்க?'

'ஆல் இண்டியா ரோலவுட்டுக்கு பட்ஜட் நாப்பது கோடின்னேன். ஜார்ஜ் நெஞ்ச பிடிச்சுக்கிட்டு உயிரோட வெளையாடாதேன்னார். அட்லாண்ட்டாவுக்குச் சொன்னா காயடிச்சுருவாங்க. அதனால நாலு கோடிக்குள்ளே முடிச்சுக்கோன்னு சொல்லிட்டாரு. நாலு கோடில என்னத்த சாப்? அதான் ஸ்காலாவுக்கு மாறியாச்சு'. குமாரின் முகத்தில் லேசான ஏமாற்றம் தெரிந்தது. எனக்கும் ஏமாற்றம்தான்.

'சரி. ஏதோ இடிக்குதுன்னீங்களே. என்னது அது?'

'நீ அந்தப் பொண்ண லவ் பண்றியா என்ன?'

நான் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. 'என்னங்க குமார். என்ன என்னவோ கேட்டுக்கிட்டு?'

'அ.. அ.. சும்மா சொல்லுடா.. கொழந்தப் பையா..'

'ரப்பிஷ்' என உதட்டசைத்தாலும் என் முகத்தில் பொய் இருந்தது. குமார் எமகாதகர். கண்டுபிடித்து விடுவார்.

'டேய். அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சி. புருஷன் ஆஸ்திரேலியால ஏதோ க்ரூயிஸில இருக்கான். மெரைன் இன்ஜினியர் போல.'

'அப்படியா. சிவியில ஒண்ணும் போடலியே?'

'அதோட என் அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னும் சொல்ல வேண்டியதுதானே?'

நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.

'சரி. சரி. போய் வேலையப் பாரு. எர்ணாகுளம் பைலட் ஸைட். சாயங்காலத்துக்குள்ள ப்ராஜக்ட் ப்ளான் போட்டு கொண்டு வா. கிக் ஆ·ப்-க்கு ஜார்ஜும் வரேன்னிருக்கார்'

'எப்போ ஸ்டார்ட் பண்றோம் குமார்?'

'ம்..? நேத்திக்கு.. நீ வேற.. உன்னி எர்ணாகுளத்துல இருந்து டெய்லி ஃபோன் பண்ணி பாயைப் பிராண்டறான். ஒரு வாரத்துல ஆரம்பிக்கிற மாதிரி ப்ளான் இருக்கட்டும்.'

'சரி' என்றுவிட்டு அவர் ரூமிலிருந்து வெளியே வந்து என் இருக்கையில் அமர்கையில் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது. மறுநாள் காலையில் நிலாவைத் தரிசித்து, அவளை அழைத்துக்கொண்டு அலுவலகத்தைச் சுற்றி அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தேன். அக்கவுண்ட்ஸ் கோவிந்த் பார்த்ததும் அசந்தர்ப்பமாக, '·பியான்ஸியா?' என்று இளிக்க 'ஸ்...' என்று அவனை அதட்டி விட்டு, நிலாவை ஓரக்கண்ணால் கவனிக்க, அவள் புன்னகை மறையாமல் கைகுலுக்கி விட்டு (இவனுக்கு கும்பிடு போட்டாலே ஜாஸ்தி. கை வேற குலுக்கணுமா.. என்று மனதில் புலம்பிக்கொண்டேன்) அடுத்த டெஸ்க்குக்கு நகர்ந்தாள். நான் கோவிந்த்தைப் பார்த்து பல்லைக் கடித்துவிட்டு அவள் கூட நகர்ந்தேன். அறிமுகப் படலம் முடிந்து அமர்கையில் நானும் நிலாவும் ஏராளமான வருஷங்கள் பழகிய உணர்வு இருந்தது.

'சார்.. என்ன ஒக்காந்துட்டீங்க? நான் எங்க ஒக்கார்றதாம்?' என்று அவள் கேட்டதும், அனிச்சையாக என் தொடையைத் தட்டிவிட்டுச் சில வினாடிகள் தாமதித்து எழுந்தேன். பின்புறம் களுக்கென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. அலோக். நிலா அதை கவனிக்காமல் அலுவலகத்தை நோட்டமிட்டுக் கொண்டு, கடந்து சென்றவர்களைப் பார்த்து புன்னகை செய்து கொண்டிருந்தாள்.

அட்மின் ராக்கேஷைத் தேடியதில் அவன் இருக்கையில் இல்லை. சீட்டு எழுதி அவன் டேபிளில் ஒட்டிவைத்து விட்டு, மறுபடி என் இருக்கைக்கு வந்தால், நிலா அதில் உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எழ முயல, நான் அமர்த்தி, 'பரவாயில்லை. ஒக்காருங்க. எவ்ள நேரம் நிப்பீங்க. எனக்கு குமாரோட ஒரு மீட்டிங் இருக்கு. திரும்ப வர ஒன் அவர் ஆகும். அதுக்குள்ள ராக்கேஷ் உங்களுக்கு க்யூபிக்கிள் ரெடி பண்ணிக் கொடுத்துடுவான்.' என்று சொல்லிவிட்டு குமாரின் அறைக்குள் சென்றேன்.

'முடிஞ்சதா?

''எது?'

'அறிமுகப்படலமெல்லாம்....'

'ஆச்சு.. ஏன் சிரிக்கிறீங்க குமார்?'

'மாட்டிக்கிட்டேடா நீனு.. பாத்துக்கோப்பா.. நான் அவ்ளவுதான் சொல்வேன்'

'என்ன சொல்றீங்க. புரியலை'

'போய் கண்ணாடில மூஞ்சி பாரு. நல்லா சிவந்திருக்கு. கடுவாப்புலி மாதிரி எப்பவும் உர்ருன்னு இருப்பே. இன்னிக்கு ஒரே சிரிப்பா இருக்கே... கண்ணா.. ஒரே நாள்ல இப்படி மாறுவேன்னு என்னால் நம்பவே முடியலைடா'

'திருப்பித் திருப்பி அதையே சொல்லாதீங்க குமார். இந்தாங்க ப்ராஜக்ட் ப்ளான். ஓகே சொல்லிட்டீங்கன்னா உன்னிக்கு அனுப்பிடறேன்.'

'சரி. மண்டே ஸ்டார்ட் பண்ணிரலாம். அலோக்கிட்ட பொட்டி, டிஸ்க்கு எல்லாம் ரெடியான்னு கேட்டுக்கோ. லிங்க் ரெடியான்னும் கேட்டுக்கோ. ஒரு நாள் முன்னாடி போயி எல்லாம் பத்திரமா சரியா இருக்கான்னு செக் பண்ணிக்க. உனக்கு இந்த வீக் எண்டும் காலி. நாளைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு சனிக்கெழம கிளம்பு. கோயம்புத்தூர்க்கு பறந்துட்டு அங்கருந்து நடு ராத்திரி ட்ரெயின் பிடிச்சேன்னா சண்டே காலைல கொச்சின் போயிரலாம். டாஜ்-ல ரூம் போட்டுக்கோ'

'சரி குமார். அலோக் வரானா?'

'இல்ல. அவன் இங்கருந்து பாத்துக்கிடட்டும். எதும் ப்ராப்ளம்னா அவன் இருக்கணும். நிலாவை கூட்டிட்டுப்போ. ஒனக்கு அவதான் இனிமே எல்லாம் போல' என்று சொல்லி சிறிய இடைவெளி விட்டு 'நான் ஸ்காலாவைச் சொன்னேன்ப்பா' என்றார் புன்னகையுடன். நான் வானத்தில் பறந்து கொண்டிருந்தேன். நிலாவிடம் பயண திட்டங்களைச் சொன்னதும் விழிகள் விரிய கேட்டுவிட்டு, 'வவ்.. அவ்ளோ சீக்கிரம் எனக்கு வேலை ஆரம்பிச்சிடுச்சா!' என்று குதூகலித்தாள்.

'நிலா.. கிக் ஆ·ப் ப்ரசண்டேஷன் நைட்டு ரெடி பண்ணிடறேன். நாளைக்கு ஒரு மாக் செஷன் வைக்கணும்'

'ஓ ஷ்யூர். எங்க ஒர்க் பண்ணப் போறீங்க?'

'இங்கதான். க்விக்கா டின்னர் முடிச்சிட்டு வந்து ஒக்காரணும்.'

'ஆமாமா.. சீக்கிரம் போயி சாப்பிடுங்க.. இல்லாட்டி பொண்டாட்டி கோச்சுக்கப் போறாங்க'

'பொண்டாட்டியா? எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலைங்க'

'ஆஹா. கொடுத்து வச்ச ஆசாமிதான்' என்று புன்னகைத்தாள். தேவதையின் புன்னைகை..

'சரி. நாளைக்குப் பார்க்கலாம் நிலா'.

'என்ன கழட்டி விடறீங்க? ப்ரசண்டேஷன் ப்ரிபேர் பண்ணனும்னு சொன்னீங்களே. நானும் உக்கார்றேன்.'

'ரொம்ப நேரமாயிடும் நிலா'

'பரவாயில்லை. எனக்கு லேட் அவர்ஸ் வேலை செஞ்சி பழக்கம்தான். ப்ராப்ளம் இல்லை'.

நான் இவையெல்லாம் இயல்பானவை, தற்செயலானவை என்று நம்ப மறுத்தேன். எங்களுக்குள் ஏதோ பூர்வ பந்தம் இருக்கிறது.

'சரி. அப்ப சாப்பிடப் போலாமா? எங்க போறது?'

'ஆர்ய பவன் பை நைட். அங்க போலாமா?'

'போலாம்' என்று எழுந்து கீழே இறங்கி ஆட்டோவில் தொற்றி, நெரிசலான நேதாஜி சாலையில் பயணித்து ஆர்யபவனை அடைந்தோம். கசகசவென மக்கள் எங்கும் வியாபித்திருக்க, இந்தியாவின் மக்கள் தொகையைப் பற்றி அந்த நேரத்தில் லேசாகக் கவலைப்பட்டேன். முதல் மாடியில் ஏஸி ஹால் நிரம்பியிருக்க, பத்து நிமிஷக் காத்திருத்தலில் இடம் கிடைத்து அமர்ந்ததும் தான் பசிக்கவே இல்லை என்பதை உணர்ந்தேன். சர்வர் பையனின் வழக்கமான ஒப்புவித்தலைத் தவிர்த்து, பொங்கல் வடை ஆர்டர் செய்துவிட்டு, கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து அமர்ந்து எதிர் நோக்கியதில் நிலா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

'என்னவோ ப்ரீ ஆக்குபைடா இருக்கீங்களே?' என்று கேட்டதும் எனக்கு திக்கென்றது. இன்று ஆளாளுக்கு என் மனதைச் சுலபமாகப் படிக்கிறார்களே என்று சலித்துக்கொண்டேன். முதலில் குமார். இப்போது இவள். இரண்டு சூழ்நிலையிலும் அவளே காரணம் என்று அவளிடம் சொல்லமுடியுமா என்ன?

'ஒண்ணுமில்லைங்க'

'மொதல்ல இந்த 'ங்க'வை கட் பண்றீங்களா?'

'சரிங்க.. நீங்களும் கட் பண்ணுங்கங்கங்கங்க' என்றதற்கு கலகலவென்று சிரித்து தலையாட்டினாள். எனக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.

'ஆக்சுவலா எனக்கு பசிக்கல நிலா!'

'எனக்கும் தான்..'

'அப்றம் எதுக்கு இங்க வந்தோம்?'

'சும்மா பேசிக்கிட்டு இருக்கலாம்' இப்போது ஒரு அசாதாரண அமைதி எங்களுக்குள் நிலவ, எனக்கு அச்சூழ்நிலையின் அபத்தத்தில் வெட்கமாக இருந்தது. அடுத்த ஒருமணி நேரம் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. என்ன பேசினோம் என்றும் நினைவில்லை. எலி கொறித்தாற்போல் பெயருக்குக் கொறித்துவிட்டு ஓட்டலை விட்டு வெளியேறி, செப்டம்பர் மாத இரவின் சில்லிப்பில் காலாற நடந்து, அலுவலகத்தை அடையும் வரை ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஏஸியின் ரீங்காரம் மட்டும் கேட்டுக்கொண்டிருக்க அலுவலகத்தின் ஒரு கோடியில் கோவிந்த் மட்டும் காகிதக் குவியலில் ஆழ்ந்திருந்தான்.

'என்னப்பா? வேலையா?' என்று கேட்டுவிட்டு நிலாவைப் பார்த்ததும் என்னைப் பார்த்து புன்னகைத்தான். நான் கண்ணால் அவனிடம் 'சும்மா இரு' என்று எச்சரிக்க தலையாட்டிக் கொண்டு மறுபடியும் வேலையில் மூழ்கினான். பவர்பாயிண்ட்டை திறந்து வைத்துக்கொள்ள 'நான் அடிக்கிறேன். நீங்க.. சாரி.. நீ சொல்லு' என்று நிலா கணினி முன் அமர, நான் கோப்புக்களைப் பிரித்து வைத்துக்கொண்டேன். அடுத்த இரண்டு மணி நேரத்தில் நாங்கள் கிட்டத்தட்ட முடித்துவிட, சிறு இடைவேளையில் அவள் பேன்ட்ரிக்குச் சென்று அட்டகாசமாக டீ போட்டுக் கொண்டு வந்தாள். மூன்று டீ. ஒன்றை கோவிந்த்துக்கு கொடுக்க அவன் முகம் பிரகாசமானது. 'தேங்க்ஸ்' சொல்லிவிட்டு 'வேலை முடிஞ்சு போச்சு. கிளம்பறேன். நாளைக்குப் பார்க்கலாம்' என்று சொல்லி, டீயைக் குடித்துவிட்டுக் காணாமல் போனான். நாங்கள் இருவர் மட்டுமே தனித்திருக்க, எனக்கு ரொம்ப நெகிழ்வாக இருந்தது. ஒரே நாளில் வாழ்க்கை இவ்வளவு மாறும் என்று கற்பனை கூட செய்ததில்லை. சிறிது நேரத்தில் அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்ததும் தான் அவள் கரும்பட்டிக்கு போக வேண்டும் என்று உறைத்தது.

'நான் ஆட்டோல போய்க்கிறேன். இல்லாட்டி நைட் சர்வீஸ் பஸ் வரும். அதுல போய்க்கிறேன்.' என்றவளை அவசரமாக மறுத்தேன்.

'என்ன வெளையாடறயா? எவ்ளோ தூரம்.. சே·ப்டி கெடையாது. வா நான் ட்ராப் பண்றேன்'

'அய்யோ ஒனக்கு சிரமம் வேண்டாம். கவலைப்படாதே. என்னை யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க'

'முடியாது. சாரி. நான் விட மாட்டேன். ஒன்னய அனுப்பிட்டா அப்புறம் ராத்திரி பூரா தூங்காம அவஸ்தை படணும். என்னால முடியாது சாமி. பேசாம வா' என்று அவள் பதிலுக்குக் காத்திராமல், பார்க்கிங்குக்கு நடந்து, என் ரோட்கிங்கை வெளியிலிழுத்து நிறுத்த, 'வவ்.. ஜாவாவா? எனக்கு ரொம்ப பிடிக்கும் இதோட பீட்' என்றாள்.

'ஜாவாவோட பேரன் இது. யெஸ்டி ரோட் கிங். 250 ஸிஸி.' என்று அதை உதைக்க அது உறுமிவிட்டு சீரான தட்ம்..தட்ம்ம். ரிதத்திற்கு மாறியது. நிலா அமர்ந்துகொண்டு என் தோளைப் பிடித்துக்கொள்ள நான் மிக கவனத்துடன் ஓட்டினேன். என் வண்டியில் ஒரு பெண்ணுடன் செல்வது அது தான் முதல் முறை. அதிக பட்ச கவனத்துடன் ஓட்ட 'என்ன கம்முன்னு வரே?' என காதோரத்தில் அவள் மூச்சு விட எனக்குப் புல்லரித்தது. நள்ளிரவின் சில்லிப்பு உடலை நடுக்க, முதுகில் இதமாக அவளை உணர்ந்தேன். லேசாகப் பின்னால் சாயவேண்டும் என்ற அவாவை துரத்திவிட்டு சாலையில் கண் பதித்து ஓட்டினேன். அவள் வண்டியின் பீட்டிற்கு ஏதோ ஒரு வேகப் பாடலை ஹம் செய்ய, எனக்கு திடீரென்று எல்லாமே சொர்க்கமாக இருந்தது. கரும்பட்டி இன்னும் சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளிப் போகாதா, எல்லா மனித, இயந்திர இரைச்சல்களும் ஓய்ந்திருக்கும் இந்த இரவு நீடிக்காதா என்று ஏக்கமாக இருந்தது. விடியலின் அவசர வாழ்க்கைத் துவக்கத்தை நினைக்கையில் வெறுப்பாக இருந்தது.

'எங்க இருக்கு ஒங்க வீடு. விட்டா தேனி வந்துரும் போல'

'இதோ இன்னும் ஒரு கிலோமீட்டர்தான். வந்துடும்'

நான் 'சே. அதுக்குள்ளயா' என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

'அதோ லெ·ப்ட்ல ஒரு தனி வீடு தெரியுதா? வெளில யெல்லோ லைட் எரியுது பாரு.. அதான்'

வண்டியை ரோட்டோரத்திலேயே சாய்த்து நிறுத்திவிட்டு, வாசலை அடைந்து அழைப்பு மணியை அழுத்த, வினாடிகளில் கதவு திறந்து வேட்டி பனியனுடன் வெளிப்பட்ட அந்த நடுத்தர வயது நபர், 'வாம்மா.. வாங்க தம்பி' என வரவேற்றார். கை கூப்பி 'வணக்கம் சார்... நான்....' எனத் தொடங்கும்முன் கையமர்த்தி 'தெரியும் தம்பி. ஒங்களப்பத்தி நிலா சொல்லிச்சு' எனப் புன்னகைத்தார்.

'உள்ள வாங்களேன்.. காப்பி சாப்பிடுங்க' என்ற நிலாவின் 'ங்க' வில் எச்சரிக்கை உணர்வு கலந்திருந்தது.

'அய்யோ... ரொம்ப நேரமாயிடுச்சுங்க.. காப்பியோட தொரத்திடலாம்னு நினைக்காதீங்க... ஒரு நாளைக்கு சாப்பாட்டுக்கே வரேன்'

'கட்டாயம் ஒரு நாள் வாங்க தம்பி.. நிலா ரொம்ப நல்லா சமைப்பா.. ஒரு தடவை சாப்ட்டுப் பாத்தீங்கன்னா வேற எந்த சாப்பாட்டையும் தொட மாட்டீங்க'

'ம்ம்... அப்படியா?' என்று சொல்லிவிட்டு, நிலா அருகில் இருக்கையில் பசிக்கவே பசிக்காதே என நினைத்துக் கொண்டேன்.

'கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க'

'நான் எடுத்துக்கிட்டு வரேன்பா நீங்க தூங்குங்க' என்று நிலா சொல்ல, அவர் 'திரும்பப் போம்போது பாத்து ஓட்டுங்க தம்பி. ஹைவேல தாறு மாறா ஓட்டுவானுங்க. இன்னொரு நாள் சாவதானமா வீட்டுக்கு வாங்க' என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று மறைந்தார். நான் வாசலில் எரிந்து கொண்டிருந்த மஞ்சள் பல்பின் லேசான வெப்பத்திலும் வெளிச்சத்திலும் காத்திருக்க, நிலா வந்து கொடுத்த தண்ணீரைக் குடித்து முடிக்கும் வரை அவள் என்னையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். விளக்கின் வெளிச்சம் அவளை இன்னும் தெளிவாகக் காட்ட, அவள் சூரியன் போன்று பிரகாசமாகத் தோன்றினாள். என் நிழல் அவள் மீது படிந்திருக்க, அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று என் மனம் பரபரத்தது.

'எவ்ளோ தாகம்!'

'ஆமாம்'

'அப்புறம்'

'ஒண்ணும் இல்லை நிலா.. ரொம்ப தேங்க்ஸ்'

'எதுக்கு?'

'தண்ணி கொடுத்ததுக்கு'

'இதுக்கெல்லாமா தேங்க்ஸ் சொல்வாங்க? ஆக்சுவலா நாந்தான் தேங்க்ஸ் சொல்லணும். இந்த நேரத்துல இவ்ளோ தூரம் வந்து ட்ராப் பண்ணிருக்கீங்க'

'ம்.. என் கடமை அது'

'பேசாம இங்கேயே தூங்கிட்டுக் காலைல போங்களேன்'

'வேணாம் நிலா. நான் கிளம்பறேன்' என்று இரு அடி பின்னகர்ந்து திரும்பி நிச்சயமில்லாமல் மெதுவாக நடந்து வண்டியை நிமிர்த்தி உதைக்க, அதன் சத்தத்தில் மிரண்டு சில நாய்கள் குலைத்தன. திரும்பி அவளைப் பார்க்க அவள் கையசைத்தாள். ரோட் கிங் முதல் கியரில் எகிறிக் கிளம்பியது.

***
தொடரும்...

No comments: