Sunday, December 18, 2005

* Adieu Amigos!!! *



* Adieu Amigos!!! *

சொலவடை என்றாலே ஏனோ கடைவாயோரம் புளிக்கும் இலந்த வடையும் நினைவுக்கு வருகிறது. இலந்த வடை இருக்கட்டும்.

"பழமொழியெல்லாம் சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது" என்று ப.கே.ச.வில் கமல் அடிக்கடி சொல்வார். "வந்ததும் தெரியல போனதும் தெரியலை" என்றொரு அடிக்கடி புழங்கும் வழக்கு இருக்கிறதல்லவா. அதுபோலவே சென்ற திங்கட் கிழமை வந்ததும் தெரியவில்லை. ஒரு வாரம் போனதும் தெரியவில்லை.

தொலைவிலிருந்தாலும் தமிழை விடாதிருக்க தேர்வடம் போன்ற உறுதியான வடத்தில் நம்மைப் பிணைத்திருப்பது இன்றைய தமிழிணையம். குழுமங்கள், இணைய தளங்கள், வலைப்பதிவுகள் என்று அதற்குப் பல்வேறு பரிமாணங்கள் இருந்தாலும் தமிழ்மணம் அவற்றை ஒருங்கிணைத்துத் தனித்து நிற்கிறது என்றால் மிகையில்லை.

வலைப்பதிவு வந்த புதிதில் சுஜாதா அவற்றை 'டைரிக்குறிப்புகள் / கையெழுத்துப் பிரதிகள் போன்றவை' என்று குறிப்பிட்டதோடு நில்லாமல், 'யார் யார் எப்போ என்னென்ன எழுதிருக்காங்கன்னு ஒவ்வொண்ணா போய் தேட முடியாது. எழுதியிருப்பவற்றைத் தேடி எடுக்கவும் முடியாது. ஆனா வலைப்பதிவுகளை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வரிசைப்படுத்தினால் அது நிறைய விஷயங்களைச் சுலபமாக்கிவிடும். அப்படி யாராவது ஒருங்கிணைக்க முயற்சிப்பார்களா என்று தெரியலை' என்று சொல்லி சில வாரங்களிலேயே தமிழ்மணம் வந்துவிட்டது. இன்று வரை வளர்ந்துகொண்டும் இருக்கிறது. தமிழ் இணைய உலகிற்கு தமிழ் மணத்தின் இந்தப் பங்களிப்பு சிறந்த ஒன்று என்றும் குறிப்பிட விரும்புகிறேன்.


நட்சத்திர வாரங்கள் தீபாவளிப் பட்டாசுகளாகவே இதுவரை அமையப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இந்த வாரம் சலனமற்று நிதானமாக ஓடும் ஆற்று நீரில் அமிழ்ந்து கிடக்கும் அசைவற்ற கூழாங்கல் போலவே அமைதியாகக் கழிந்தது. இது எனக்கு உகந்ததே. அனாவசிய பதற்றமோ, பரபரப்போ இல்லாமல் மற்ற எல்லா வாரங்களையும் போலவே இவ்வாரமும் கழிந்ததில் தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனாலும் இவ்வாரத்திற்கென எதுவும் மெனக்கெடவில்லையே என்று மூலையில் ஒரு வருத்தமிருக்கிறது.

ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் சிறப்பையும் அடையாளங் காண்பதற்காம தமிழ்மண வானில் ஒவ்வொரு வாரத்தையும் நட்சத்திர வாரமாக ஆக்கி, ஒரு நட்சத்திரத்தைப் பிடித்திழுத்து துருவ நட்சத்திரமாகவும் ஆக்கி, 'அட பளிச்சுன்னு தனியா தெரியுதே என்னன்னு பாப்போம்' என்று பார்ப்போர் கவனத்தைக் கவர வைத்து, அந்நட்சத்திரத்தின் எழுத்துத் திறனை அனைவரும் பார்க்கும்படியாக வைக்க மேடை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் காசி, மதி மற்றும் குழு நண்பர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். இது மிக நல்ல முயற்சி என்று வாயால் சொல்லுவதைவிட அனுபவித்தே பார்த்துவிட்டேன்.

ஒரு சிறிய தொகுப்பாக நட்சத்திர வாரத்தில் பதிந்தவற்றைக் கீழே பட்டியலிட்டிருக்கிறேன்.

அகர முதல-வில்

நட்சத்திரங்களும் ஒரு ஜீரோ வாட் பல்பும்
Yeh he hai right choice baby!
அந்தம் # 1 அந்தம் #7
அந்தம் # 2 அந்தம் #8
அந்தம் # 3 அந்தம் #9
அந்தம் # 4 அந்தம் #10
அந்தம் # 5 அந்தம் #11
அந்தம் # 6 அந்தம் #12
மதுரெய்
டூரிங் டாக்கீஸ்
மூன்றாம் உலகத்திலிருந்து ஏழாம் உலகத்தைப் பற்றி
குண்டல கேசி
லஞ்சம் சரணம் கச்சாமி
சினிமா இனிமா
Coming to America!

ராஜ பார்வை-யில்

ஸீரோ டிகிரி
வஹிபா பாலைவனம்-மஸ்கட்
சிரியா # 1 சிரியா # 2

அகவிதைகளில்

குளவி
என்னால் ஏன் அழ முடியவில்லை
தட்டான்

அந்தம் இறுதி அத்தியாயம் எனது 100-வது பதிவு - என்பதில் எனக்கு ஒரு பிரத்யேக மகிழ்ச்சியும் பெருமையும். நூற்றியொரு தேங்காய் உடைத்து வேண்டுதலை நிறைவேற்றுவது போல இந்த நூற்றியோராவது பதிவோடு நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்.

படைப்புகளைப் படித்து மறுமொழியிட்ட/இடாத நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அடுத்தாக பளிச்சிடவிருக்கும் துருவ நட்சத்திரத்திற்கும் எதிர்கால நட்சத்திரங்களுக்கும் வாழ்த்துகள்.

உற்சாகமாக அடுத்த வாரம் தமிழ் மணத்தில் மீண்டும் சந்திப்போம். அதுவரை

Adieu Amigos!!

***

9 comments:

ramachandranusha(உஷா) said...

இந்த வாரம் "மெல்லிய தென்றலாய்" இதமாய் வந்துப் போனது.

Kasi Arumugam said...

மற்றவேலைகள் நேரத்தைப் பிடுங்கிக்கொண்டதால் உங்கள் இடுகைகளை தொடர்ந்து வாசிக்க, மறுமொழிய முடியவில்லை. ஆனாலும் சுகமான தென்றலாக இருந்த உங்கள் நடை எல்லார் மனதையும் மென்மையாகத் தழுவிச் சென்றிருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் சுந்தர்.

Anonymous said...

மொத்தம் 21 பதிவ சத்தமில்லாமப் போட்டுட்டு (பல பதிவு குறிப்பா 'அந்த(ம்)க்' கதை மறு பதிப்பாக இருந்தாலும்).., மெனக்கெடலன்னு சொல்றதா?., தன்னடக்கம்?., ஒரு வார இதழ் வாசிச்ச மாதிரி 'கலந்து கட்டி' இருந்தது பதிவுகள்.

நீங்களெல்லாம் ஒரு இரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் மாதிரியப்பு.... விரைவு இரயில், சரக்கு ரயில் மாதிரி ஆயிரம் இரயில்கள் வரலாம். சில நேரங்களில் வரும் சிறப்பு இரயில் மாதி இந்த நட்சத்திர வாரம். எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்க்கும் அந்த மாஸ்டர் மாதிரி, தவறாது அடுத்து அமைதியான பதிவுகள் வரும் உங்களிமிருந்து.....

துளசி கோபால் said...

சுந்தர், தமிழ்நாட்டுலே என்னவோ ஏரிங்கஎல்லாம் உடைஞ்சு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுன்னு பேப்பர்லே படிச்சுட்டுத் திரும்பிப் பார்த்தா நட்சத்திரப்பதிவுன்னு 'மடமட'ன்னு போட்டுத் தாக்கிட்டீங்களே! ஹப்பா... 21 பதிவா?

நல்லா இருந்தது.


'அந்தம்'லேதான் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள்:-))))

Sundar Padmanaban said...

நன்றி உஷா.

காசி-> நானும் அப்படியே நம்புகிறேன். உங்களுக்கு நன்றி.

அப்டிப்போடு. நன்றி.

//அமைதியான பதிவுகள் வரும் உங்களிமிருந்து.....
//

கட்டாயமாக வரும். எழுத்தைப் பொருத்தவரை 'அந்தமே' எனக்கு 'ஆதி'!

துளசிக்கா. நன்றி.

//'அந்தம்'லேதான் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள்:-))))
//

Well. இதைப் பத்திக் கொஞ்சம் சொல்லணும். ஆத்மார்த்தமான அன்பையும், காதலையும் (ரெண்டும் வேற வேற) வெளிப்படுத்தறதுக்கான சிறந்த வழி முத்தம். நம்மூரில் ஏனோ ஒரு இறுக்கமான சூழ்நிலையிலேயே குழந்தைகள் வளர்கிறார்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருக்கிறது. முத்தம் என்றாலே அது ஒரு கெட்ட காரியம் போன்ற எண்ணத்தைச் சிறுவயதிலேயே தோற்றுவித்துவிடுகிறோமோ என்றும் தோன்றுகிறது. பெற்றோர் பிள்ளைகள் உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்திக் காட்டுவதில் வட இந்தியர்கள் சிறந்தவர்கள் என்பது என் கருத்து. இரு நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் அட்டகாசமாக வரவேறுக் கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்துவார்கள். இதே போன்று வளைகுடா நாடுகளிலும் இங்கும் கூட சந்தித்துக்கொள்ளும்போது தழுவி வரவேற்று அன்பை வெளிப்படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.

நம்மூரில் - வாழ்க்கைப் பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம் - ஒரு வயது வந்த பிள்ளையும் தந்தையும் என்னவோ அவ்வளவாக முகம் கொடுத்து, வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில்லை. விலகியே நிற்கிறார்கள். தகவல் தொடர்பே பெரும்பாலும் தாய் மூலமாக நடைபெறுகிறது.

குட்டிப்பெண் துர்கா திடீரென்று என்னை இழுத்து பூ மாதிரி மென்மையாக முத்தமிடும்போது மலைபோன்று பயந்த கவலைகளும் கஷ்டங்களும் ஒரு நொடியில் காணாமல் போய்விடும். அதே போன்று என்னதான் வார்த்தைகளாலும், பரிசுப் பொருட்களாலும், வாழ்த்தட்டைகளாலும் வெளிப்படுத்தினாலும் காட்டமுடியாத காதலை ஒரே முத்தத்தில் காட்டிவிட முடியும் என்பதும் என் நம்பிக்கை (அனுபவமான்னு கேட்டு என்னை வெட்கமடையச் செய்யாதீர்கள்:) ).

நன்றி.

குமரன் (Kumaran) said...

//இந்த வாரம் சலனமற்று நிதானமாக ஓடும் ஆற்று நீரில் அமிழ்ந்து கிடக்கும் அசைவற்ற கூழாங்கல் போலவே அமைதியாகக் கழிந்தது//

உண்மைதான் சுந்தர். வழக்கமாய் நட்சத்திர வாரங்களில் இருக்கும் ஆரவாரம் இந்த வாரத்தில் இல்லை. வந்ததும் தெரியலை; போனதும் தெரியலை. அனாவசிய ஆரவாரம் செய்யாத உங்கள் குணத்தைத் தான் அது காட்டுகிறது. 100வது பதிவிற்கும், நட்சத்திர வாரத்திற்கும், அதில் போட்ட 21 பதிவுகளுக்கும் வாழ்த்துகள்.

மணியன் said...

இந்த வாரம் கதை,கவிதை,கட்டுரை என்று உங்கள் எல்லா பரிமாணங்களையும் காட்டி விட்டீர்கள். தங்கள் ஆக்கங்களுக்கு தொட்டிலாயமைந்த மரத்தடிக்கு நன்றிகள்.
'அந்தம்'தான் ஆதி என்று நம்பமுடியவில்லை. உங்கள் எழுத்தும் நடையும் முதிர்ந்த எழுத்தாளரெனக் காட்டுகிறது.வாழ்த்துக்கள் !!

Sundar Padmanaban said...

நன்றி குமரன்.

மணியன். அந்தமே ஆதியாக என் எழுத்து முயற்சிகளைத் தொடர்கிறேன்.

ஊக்கமளித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்.

வானம்பாடி said...

உங்களின் எல்லாப் பதிவுகளையும் படித்தேன், ரசித்தேன், பின்னூட்டிடாததற்கு சோம்பலே காரணம். நல்ல கலவையான வாரம். அருமையாக எழுதுகிறீர்கள், நன்றி.