Friday, December 16, 2005

* அந்தம் * # 7



* அந்தம் * # 7

மறுநாள் மதியம் குமாரிடம் சென்று மாக் செஷன்க்குக் கூப்பிட, கான்ப்ரன்ஸ் ஹாலில் குழுமி, நான் திரையில் வரவேற்கும் ஸ்லைடுடனும், அனைத்து இணைப்புக்களுடனும், கையில் குறிப்பேடுடன் நிலாவுடனும் தயாராக இருக்க, குமார் உள்ளே வந்து 'யூ ஸிட் டவுன், லெட் ஹர் ட்ரை' என்றார்.

'ஸார்.. நான் ப்ரசன்டேஷன் எல்லாம்..' என்று இழுத்தவளைக் கையமர்த்தி 'ஸ்டார்ட்' என, நிலா லேசாகச் செருமிக்கொண்டு தொடங்கினாள். நான் குமாருக்கும் அலோக்குக்கும் இடையில் அமர்ந்து, இருட்டறையில் ப்ரொஜக்டரின் ஒளிக்கோடுகளால் பிரதிபலித்த திரையையும் நிலாவின் முகத்தையும் கவனிக்க, குயில் பேச ஆரம்பித்தது. என்ன பேசினாள் என்ன கேட்டார்கள் எதுவும் பதியாமல், நான் அடுத்த நாள் பயண திட்ட யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.

ஒரு மணி நேரம் கழித்து அறையின் விளக்குகள் ஒளிர்ந்து குமாரும், அலோக்கும் எங்கள் இருவரையும் கைகுலுக்கி 'பர்·பெக்ட் வொர்க். கங்கிராட்ஸ் அன் ஆல் தெ பெஸ்ட்' என விடைபெற, நான் நிலாவைக் கண்ணில் காதலுடன் பார்த்தேன். அவள் ஸ்லீவ்லெஸ் சுரிதாரணிந்து, மேகத் துப்பட்டா தவழ, தோளில் புரண்ட கரும் பழுப்புக் கூந்தலுடன், கண்ணில் மின்னினாள்.

'ஹேய்.. என்ன அப்படி பாக்கறே?'

'ஒண்ணும் இல்லை.. இட் வாஸ் அன் எக்ஸலன்ட் ப்ரசன்டேஷன்..'

'பொய்யி.. நீ எதோ கனால இருந்தே.. என்ன ஆச்சு?'

'ஒண்ணும் இல்ல நிலா.. ' என்றுவிட்டு கரண, உபகரணங்களையும், கேபிள் சிக்கல்களையும் சுருட்டித் தோல் பையில் திணித்துக்கொண்டு, அவளைத் தொடர்ந்து வெளியேறினேன். ராக்கேஷ் எனக்கு அடுத்த க்யூபிக்கிளை துப்புரவு செய்து அனைத்து அலுவலக உதிரிகளுடன் தயாராக்கி வைத்திருக்க, நிலா அதற்குள் இடத்தை அலங்கரித்திருந்தாள். மானிட்டரின் மேல் ஒரு சிறு குரங்கு பொம்மையும், மேசையின் மேல் சில மலர் கொத்துக்களும், மினியேச்சர் பொம்மைகளும் பரவியிருக்க, லேசாக மல்லிகை வாசம் அடித்தது. இவர்களுக்கு எங்கிருந்து இத்தகைய அழகு யோசனைகள் வருகிறதோ என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டேன்.

'ஸோ.. நாளைக்குக் கெளம்பறோம். இல்லையா?'

'யெஸ்.'

'அரேஞ்மென்ட்ஸ்லாம்'

'ராக்கேஷ் பண்ணிட்டான். டிக்கட் மஜ்ஜானம் வந்துரும்'

'அப்பா மொதல்ல கவலைப்பட்டார்.. ஒன்னோட போறேன்னு சொன்னதும்தான் சமாதானமானார்'

'ம்.ம்.' சிலநாட்களில் கவலைப்படப் போகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

சனி மதியம் மதுரையின் மயான விமான நிலையத்தில் திருவள்ளுவர் பேருந்தின் உட்புறத்தை அப்படியே கொண்டிருந்த இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அமர்ந்து பெல்ட்டை இறுக்கிக்கொண்டு, இரு இருக்கைகளுக்கு இடையே இருந்த ஒரே கைப்பிடியில் நானும் நிலாவும் முழங்கைகளை ஒட்டிக்கொள்ள, எனக்கு அவள் இதம் ஆனந்தமாக இருந்தது.

கடைசிப் பயணி தாமதமாக கரைவேட்டியை தூக்கிப்பிடித்துக் கொண்டு உள்ளே நுழைய, விமானப் பணிப்பெண் அவருக்குச் என் வலதுபக்க சீட்டைக் காட்டிவிட்டு, கடுப்புடன் கதவை மூட விமானம் அதிர்ந்து கிளம்பியது. எனக்கென்னவோ அது கற்காலத்தில் வாங்கப்பட்ட விமானம் என்றும், இன்னும் புறக்கணிக்காமல் இந்த மாதிரி அடுத்த தெரு தூரத்தில் இருக்கும் ஊர்களுக்கு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் தோன்றியது. பைலட்டிடம் சம்பள பாக்கி இருக்கா என்று கேட்க வேண்டும்.

ரன்வேயில் ஓடிய தருணத்தில் பணிப்பெண் அபிநயனத்தில் செய்து காண்பித்ததை கரைவேட்டியைத் தவிர யாரும் கவனிக்காமல் ஜன்னலுக்கு வெளி நோக்கியும், சம்பாஷணைகளிலும் ஈடுபட்டிருந்தனர். சில நிமிட காதடைப்புக்குப் பின், பணிப்(பேரிளம்)பெண் ஒருத்தி தட்டில் ஈரக் கைக்குட்டைகளை அடுக்கி வந்து, இடுக்கியில் பிடித்து சினேகமில்லாமல் நீட்ட, ஒன்றை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டேன். நிலா மறுத்துவிட்டு ஜன்னலைப் பார்த்துத் திரும்பிக்கொண்டாள். வட இந்தியப் பணிப்பெண்ணின் விம்மிய சட்டையில் அவள் பெயரைப் படிக்க முயன்று அவள் முறைத்ததும், நான் நிலாவை நோக்கித் திரும்பினேன். நிலாவின் வெண்கழுத்தையும் காதில் ஊசலாடிக்கொண்டிருந்த அணியையும் பார்த்தேன். மாசு மறுவற்ற முகம். இவளைத் தனியாக விட்டுவிட்டு எங்கோ கப்பலில் இயந்திரங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் அவள் கணவனை நினைத்துக் கோபம் வந்தது. ஒருவிதத்தில் இது விதியின் விளையாட்டுப் போலவும் தோன்றியது. நான் ஏன் இவளைச் சந்திக்க வேண்டும். காதல் வயப்பட வேண்டும் அதுவும் அவள் மணமானவள் என்று தெரிந்த பின்னரும். இது சரியா, தவறா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். நிலா சட்டென்று திரும்பி, அவளையே பார்த்துக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு புன்னகைத்தாள்.

'ஹேய் ஒனக்கு என்ன ஆச்சு? எப்போ பாத்தாலும் கனாலயே இருக்கே? அங்க பாரு' என்று ஜன்னலுக்கு வெளியே சுட்ட, நான் அவள் பக்கவாட்டில் இன்னும் சாய்ந்து அவள் காட்டிய திசையில் நோக்கினேன்.

'எவ்ளோ அழகு! அங்க பாரு அந்த ஏரி சர்க்கிள் ஷேப்புல சுத்தி பச்சையா எப்படி இருக்கு!'

'ஆமா.. நிலா மாதிரி இருக்கு'

'ம்ம்?'

'நிலா மாதிரி வட்டமா இருக்கு. ஒன் மொகம் கூட அப்படித்தான் இருக்கு நிலா?'

நிலா வெட்கப்பட்டாள். அந்த அருகாமை என்னை ஏதோ செய்தது. அவள் உதடுகளைக் கவ்வ வேண்டும் என்ற அவாவைப் பிரயாசையுடன் அடக்கினேன்.

'வுட் யு லைக் டு ஹேவ் சம் ட்ரிங்க்ஸ்?' என்று வ.இ.ப.பெ. கரடி வந்து கேட்க, எனக்கு எரிச்சலாக வந்தது.

'பட்ட ஒரு பாக்கெட்டு கிடைக்குமா?'

'வாட்?'

'நிலா இந்த அக்கா கிட்ட இங்லீஷ்ல நான் கேட்டத கேளேன்.. அவிய்ங்களுக்கு நான் கேட்டது புரியலை போல' என்று நான் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டேன். நிலா இந்த அதிரடியைத் தாங்கமுடியாமல் கண்ணீர் வரச் சிரித்து, என் தொடையைக் கிள்ளி 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. சும்மா இரு' என்று பற்களிடையே சொல்லி, அவளிடம் 'வாட்டர் ப்ளீஸ்' என்று சொல்லிவிட்டு என்னிடம் 'ஏன் இப்படி பண்றே?' என்றாள் கண்களை அகல விரித்து.

'அய்யோ.. என்ன பண்ணிட்டேன். அந்த அக்கா என்ன வேணும்னு கேட்டாங்க.. அதான்' என்று நான் தொடர்ந்தேன்.

'அக்கா..... ஓ மை காட்....ஸ்டாப் இட் ப்ளீஸ்.. எனக்கு சிரிச்சுச் சிரிச்சு மூச்சு வாங்குது' என்று கண்களில் நீரைத் துடைத்துக் கொண்டாள்.

நான் 'யக்கா.. இங்க பாருங்க.. இந்த புள்ள அழுவுது.. பசிக்குது போல' என்று அலறி அழைக்க, பணிப்பெண்ணுக்கு நான் விளையாடுகிறேனா அல்லது நிஜமா என்று சந்தேகம் வலுத்து, மொழிப் பிரச்சனையில் தடுமாறி, மறுபடி நிலாவிடம் தண்ணீரைக் கொடுத்துவிட்டு, 'கேன் ஐ ஹெல்ப் யூ?' எனக் கேட்க, நிலா வேண்டாமெனத் தலையாட்டி விட்டு அதற்கு மேல் முடியாமல், முன்னிருக்கை பின்னிருந்த பலகையை இழுத்து, அதில் தலையைக் கவிழ்ந்து கொண்டாள். அவள் சிரிப்பில் முதுகு குலுங்க நான் வேண்டுமென்றே கவலையுடன் பணிப்பெண்ணைப் பார்த்தேன். அவள் 'டோன்ட் டிஸ்டர்ப் ஹர்' என்று சொல்லிவிட்டு அகன்றாள்.

சில நிமிடங்கள் கழித்து நிலா எழுந்தாள். அவள் முகம் சிரித்துச் சிரித்துச் சிவந்திருந்தது- ஜன்னலுக்கு வெளியே தெரிந்த கீழ்வானம் போல.

'நீ சரியான காட்டான்' என்றாள் செல்லக் கோபத்துடன். சற்று அமைதிக்குப்பின் 'இந்த மாதிரி சிரிச்சு எவ்ளோ வருஷம் ஆச்சு தெரியுமா?' என்றாள். அவள் பார்வையில் தெரிந்த கனிவைக் கவனித்தேன். எனக்கு மகிழ்வாக இருந்தது.

'எனக்கு புரியவேயில்லை. இப்ப என்ன நடந்து போச்சுன்னு இப்படி சிரிக்கற?'

'நீங்க என்னண்ணே சொல்றீங்க?' என்று வலது வரிசை ஓரத்தில் இருந்த கரைவேட்டியிடம் கேட்க, 'அதானே.. என்னம்மா ஒடம்பு கிடம்பு சரியில்லையா? வயத்த பொரட்டுதா? மொத தடவ அப்படித்தான் இருக்கும் நான் வேணாச்சு இஞ்சி மொரப்பா தாரேன். சாப்டியன்னா வவுத்த பொரட்டாது' என்று சினேகத்துடன் நீட்ட நான் வாங்கி நிலாவிடம் 'இந்தா சாப்பிடு' என்றேன்.

நிலா அதைப் பார்த்ததும் 'உவ்வேக்' என அலற, 'சீக்கிரம் சாப்பிடும்மா.. வாந்தி வராது.. சே.. என்ன ப்ளைட்டுய்யா இது.. ஒரு ஜன்னல தெறக்க முடியல. எல்லாத்தையும் பைல துப்ப சொல்றானுவ.. அசிங்கம் புடிச்ச பயலுவ' என்றது கரை வேட்டி.

இதற்கு மேல் அவளைப் படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்து, 'சரிடா.. ஸாரி' என்று அவள் தலையில் லேசாகத் தட்டிவிட்டு, முன்னே செருகியிருந்த தினமணியில் பார்வையை ஓட்ட, கோவையை நெருங்கி விமானம் தாழ்வாகப் பறந்தது. சாலைகளில் மழை ஈரத்தில், தீப்பெட்டி வாகனங்கள் கோடு போட்டுக்கொண்டு சென்று கொண்டிருக்க, ஆங்காங்கே வெளிச்சப் பொட்டுக்களுடன் கட்டடங்கள் பரவியிருக்க, விமானம் அதீத இரைச்சலுடன் இறங்கியது.

கொச்சின் ரயிலைப் பிடிக்க டாக்ஸியில் நிலையத்திற்கு விரைந்தோம். பசிக்க ஆரம்பித்து விட்டபடியால் அருகிலேயே வயவயவென்றிருந்த அன்னபூர்ணாவில் சாப்பிட்டுவிட்டு (க்யூவில் நின்றே பாதி ஆயுள் காலி), ரயில் நிலையத்தில் முதல் ப்ளாட்பாரத்தில் சூட்கேஸ் மேல் அமர்கையில் மணி பதினொன்று ஆகிவிட்டிருந்தது.

'வண்டி எப்ப வரும்?'

'எத்தன தடவ கேப்ப? ஒன்ட்ரைக்குத்தான்'

'சே.. போர்..'

'வேணாட்டி யக்காவ கூப்பிடவா?'

'அய்யோ சாமி.. என்ன விட்டுடுப்பா..' என்று நினைத்து குனிந்து கும்பிட்டுவிட்டு மறுபடியும் சிரித்தாள்.

'என் மூஞ்சிய பாத்துக்கிட்டே இரு. நேரம் போறதே தெரியாது'

'ம்..ம்.. அப்படியா? அப்படி என்ன இருக்கு?' அவள் கண்சிமிட்டாமல் என்னைப் பார்த்தாள். ஏதோ முதன்முறையாக அப்படிப் பார்த்துக்கொள்வது போல் தோன்றியது.

'என் கண்ல என்ன தெரியுது?' இதற்கு பதில் சொல்லாமல் புன்னகைத்தாள். இந்த புன்னகைதான் என்னைக் கொல்கிறது.

'நீ ஏதோ ஒரு நெனப்புல இருக்கே. யார் கூடயாவது லவ்வா?'

'அடிக் கள்ளி' என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். 'சே சே. அதெல்லாம் ஒண்ணும் இல்லை'

'உண்மைய சொல்லணும்னா நான் யாரோடயும் இவ்வளவு ·ப்ரீயா பேசினதும் இல்ல. பழகினதும் இல்ல'

'ம்ம் நானும் தான்'

'நீ ஏதோ ஒரு விதத்துல வித்தியாசமா இருக்கே'

'எந்த விதத்துல?'

'எனக்கு சொல்லத் தெரியலைப்பா'

'சொல்லேன்.'

'தெரியலை. ஆனா ஐ லைக் யூ'

'...' சட். இதையே தமிழ்ல சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

'எனக்கே ஆச்சரியமா இருக்கு. நாம சந்திச்சு ரெண்டு மூணு நாள் தான் ஆயிருக்கு. ஆனா ரொம்ப வருஷம் பழகிய ·பீலிங்'

'எனக்கும் அதே அதே'

'போன ஜன்மத்துலயும் ரெண்டு பேரும் பழகிருக்கோம் போல தோணுது'

'...' நிலா தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.

'ஹலோ என்ன மேடம்?'அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்த போது கண்களில் ஈரத்தைக் கவனித்தேன். கண்களைத் துடைக்க வேண்டுமென்று துடித்த கைகளைக் கட்டுப்படுத்தினேன்.

'என்ன ஆச்சும்மா?'

'ஒண்ணும் இல்லை'

'இல்ல. பின்ன ஏன் கண்ல தண்ணி? சொல்லு. என்ன?'

'ஐம் திங்கிங் ஆ·ப் ராகவன்'

'ராக... ஓ.. புரியுது..' நான் என் உணர்வுகளைக் காட்டிக்கொள்ளவில்லை.

'அவன் இப்படிப் பண்ண கூடாது'

'.....'

'யூ நோ ஹவ் மச் ஹி லவ்ஸ் மீ' என்று சொல்லி விட்டு, கைப்பையை பிரித்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினாள். 'நேத்திக்கு வந்தது'

'எனக்கு புரியுது நிலா. உன்னை யாராலயும் வெறுக்க முடியாது. திஸ் இஸ் பர்ஸனல். வேண்டாம்'

'சும்மா படி. நான் யார்க்கிட்டயும் காட்ட மாட்டேன். ஒங்கிட்ட காட்டணும்னு தோணுது. ப்ளீஸ்.. படியேன்.. எனக்காக'

அவளின் அந்த கடைசி வார்த்தைக்காக, கடிதத்தை வாங்கிப் பார்த்தேன். லேசான நறுமணம் வீசியது. என் வாழ்நாளில் அத்தகைய அழகான கையெழுத்தைப் பார்த்ததில்லை. சற்று தடிமனான, சீரான எழுத்துக்கள். அதில் கொட்டிக் கிடந்த காதலையும் பிரிவின் ஏக்கத்தையும் படித்து எனக்கு மூச்சு தடுமாறியது. எண்ணப் புயலில் சிக்கிய படகு போலானது என் மனம். திடீரென்று நான் பயந்தேன். என் காதலால் இவள் வாழ்வை நாசமாக்கப் போகிறேன் என்று மனமூலையில் குரல் கேட்டது. அதைப் புறக்கணித்து, கடிதத்தை முழுவதும் படித்து முடிக்கையில், அந்த முகம் தெரியா ராகவனிடம் ஒரு இனம் புரியாத சினேகமும், விரோதமும் கலந்த உணர்வு ஏற்பட்டது. இந்தப் புகை நினைவுகள் எல்லாம் நிமிர்ந்து நிலாவைப் பார்க்கும் வரைதான்.

'எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. உண்மைய சொல்லணும்னா ஒன்ன என் தோள்ல சாச்சுக்கிட்டு ஆறுதல் சொல்லணும்னு தோணுது நிலா..' நான் பேசுவதை என்னாலேயே நம்ப முடியவில்லை. அதை விட நம்ப முடியாமல் நிலா என் தோளில் கை வைத்து சாய்ந்து கொண்டாள். ஒலி பெருக்கியில் புரியாத குழப்ப அறிவிப்பு ஒலிக்க, ப்ளாட்பாரம் அதிர கொச்சின் எக்ஸ்ப்ரஸ் வந்து நின்றது.

தொடரும்...

2 comments:

துளசி கோபால் said...

ஜாக்கிரதை! கல்யாணமான பொண்ணு.
அவ்வளோதான் சொல்வேன்.

ஆமாம், உள்ளூர் ஒன்னரையணா ஃப்ளைட்டுக்கெல்லாம் ஈரக்கைகுட்டை தராங்களா?
அடிச் சக்கை!

Sundar Padmanaban said...

ஆமா துளசிக்கா. சில சமயம் wet paper towel.