அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Saturday, December 17, 2005
* அந்தம் * # 10
* அந்தம் * # 10
காலையில் நிலாவின் வாடிய முகத்தைக் கண்டு துணுக்குற்றேன்.
'என்ன ஆச்சு செல்லம்?' என் குரலில் தொனித்த உரிமையில் எனக்கு மகிழ்வாக இருந்தது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகிவிட்டது நாங்கள் சந்தித்து. நான் அவளை என் மனைவியாகவே கருதிப் பேசிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவள் கன்னங்கள் சிவப்பதையும், கண்களின் ஒளியும் கண்டு ஆனந்தம் பெருகும். ஒவ்வொரு நொடியும் அவளையே சிந்தித்தேன். அவளருகாமையில் என்னுள்ளே எப்போதும் ஒரு மின்சாரம் ஓடிக் கொண்டிருக்கும்.
'ஒண்ணும் இல்லப்பா' என்றவளின் கண்ணில் பொய்யிருக்க, அவளை அழைத்துக் கொண்டு அலுவலகத்திலிருந்து வெளியேறினேன். எங்கள் அலுவலகம் இருந்தது ஒரு சதுரக் கட்டடம், நடுவில் உள் சதுரமாக இடைவெளி விட்டு கட்டப்பட்டிருப்பதால், எல்லா தளங்களையும் எல்லா தளங்களிலிருந்தும் பார்க்க முடியும். ஒவ்வொரு தளத்திலிருந்த அலுவலகங்களிலிருந்து, புகை பிடிப்பதற்காகவும், அரட்டை அடிப்பதற்காகவும், வெளியே வந்து கைப்பிடிக் கம்பியைப் பிடித்துக் கொண்டோ சாய்ந்து கொண்டோ மேலேயும் கீழேயும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். காரிடாரில் நடந்து கைப்பிடிக் கம்பியை பிடித்து நாங்கள் குனிந்து கீழே பார்த்துக் கொண்டு நின்றிருந்தோம் ஒருவரையொருவர் ஒட்டிக் கொண்டு.
'சொல்லு கண்ணம்மா.. என்ன ப்ராப்ளம்? ஏன் டல்லா இருக்கே?'
'நேத்திக்கு ராகவன் ஃபோன் பண்ணினான்'
'ம்..'
'நெக்ஸ்ட் வீக் வெகேஷன்ல வரானாம் ஒரு மாசம்'
'அப்படியா?' நான் வயிற்றில் சங்கடமாக உணர்ந்தேன்.
'முன்னாடில்லாம் ஒவ்வொரு வருஷமும் அவன் எப்போ வருவான் எப்போ வருவான்னு காத்து ஏங்கிக் கிடப்பேன். ஆனா இப்போ ஏன் வரான்னு தோணுதுடா' என்றாள் கசியும் கண்களுடன்.
'செல்லம். ப்ளீஸ். அழாதே.. என்ட்ட வந்துடு'
'முடியாதுடா. நீ நெனைக்கற மாதிரி அவ்ளோ ஈஸியில்ல அது'
'ஏன்?'
'ராகவன பத்தி ஒன்ட்ட எவ்ளோ சொல்லிருக்கேன்? நான் ஒன்ட்ட வந்துட்டா அவன் பாத்துட்டு சரின்னு போயிடுவானா?'
'........'
'எனக்கு பயமாயிருக்குடா. அவன் முரடன். முரட்டுத்தனமா என்ன லவ் பண்றவன். எங்க ரெண்டு பேருக்கு நடுவுல இன்னொரு ஆள் இருக்கறத அவனால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது. அவன் என்ன செய்வான்னு என்னால நெனச்சுப் பார்க்க முடியலப்பா'
'என்ன பண்ணுவார்? அடிப்பாரா? அடிக்கட்டும். நா.....'
நிலா என்னை மேலும் பேச விடாமல் தடுத்தாள் 'ஒனக்கு ஒரு சின்னக் கீறல் விழுந்தா கூட நான் செத்துருவேன்'
'சே. சே. அப்படி பேசாத கண்ணம்மா. ப்ளீஸ் அழாதே.. ப்ளீஸ்' அவளை எப்படி ஆறுதல் படுத்துவதென்றே தெரியாமல் திணறினேன். தொடல்களில்லாத காதல் ஒரு நரக வேதனை. அதுவும் பொதுவில் இத்தகைய தருணங்களில் அணைத்து ஆறுதல் படுத்தத் துடிக்கும் மனதை கட்டுப்படுத்துவதற்கு அதீத பிரயத்தனம் செய்யவேண்டும். அன்றும் செய்தேன். எவ்வளவு வார்த்தைகளை விரயம் செய்தாலும் கிடைக்காத துளி ஆறுதல், ஒரு இதமான அணைப்பில் கிடைத்துவிடும் என்று தெரிந்தும், அதைச் செய்ய இயலாததை நினைத்து மனம் அரற்றியது. துடிக்கும் மனதையும் கைகளையும் கட்டுப்படுத்தத் திணறினேன்.
பாண்டி வந்து 'சார். குமார் சார் கூப்டறார்' என்று அழைக்கவும் திரும்பினோம். குமார் வந்து சில தகவல்கள் கேட்க, வேலையில் மூழ்கினேன். அவள் கைப்பையை எடுத்துக்கொண்டு 'வர்ரேன். அப்பா சீக்கிரம் வரச்சொன்னார். ஃபோன் பண்ணு' என்று கிளம்பினாள். எனக்கு எல்லாமே வெறுமையாகத் தோன்றியது.
குமார் வந்து தோளில் தட்டி 'டேய்.. நாளைக்கு நைட் என்ன ப்ளான்?'
'எதுக்கு?'
'ஆங். ஒன் மச்சினிக்கு கல்யாணமாமே.. அட சே. நாளைக்கு என்ன தேதி?'
'என்ன தேதி? டிசம்பர் முப்பத்தொண்ணு... அய்யோ.. புது வருஷம் பொறக்கப்போகுது'
'யப்பா. கண்டுபிடிச்சிட்டான்யா. எங்க ஒன்னோட ஆளு நிலா? அலோக்கு நீயும் இங்க வா'
'ஸ்ஸ்... குமார்'
'என்ன உஸ்ஸூ? அவ ஒன் ஆளு இல்லங்கிறியா? அ... அ.... சரி.. எனக்கு என்ன.. நீயாச்சு அவளாச்சு. எதாச்சும் கையெழுத்து எங்கயாச்சும் போடணும்னா சொல்லு. வரேன்'
எனக்கு வெட்கமாக இருக்கவே தலையைக் கவிழ்ந்து கொண்டேன்.
'பார்ரா வெக்கத்த. அலோக். நாளைக்கு எல்லாரும் என் வீட்டுக்கு வந்துடுங்க. பார்ஸன்ல எரநூத்தி பத்துல இருக்கேன். அனிதாவும் மாமியார் வீட்டுல இருந்து திரும்ப வந்தாச்சு. ஷி வில் டேக் கேர் ஆ·ப் த டின்னர். ஸோ.. லெட்ஸ் பார்ட்டீ'.
'நா ஒயினும் பியரும் கொண்டு வரேன்' என்றான் அலோக்.
குமார் 'நாளைக்கு சாயங்காலம் ஏழு மணிக்கு எல்லாரும் பில்டிங் கீழ வந்துருங்க. நா பிக்கப் பண்ணிக்கறேன்', என நான் மையமாக தலையசைத்தேன். அலோக் ஃபோனை ஒத்தி, 'நிலா..' எனத் தொடங்கி, பேசி வைத்துவிட்டு 'ஷி வில் ஜாயின் அஸ் ஹியர் அட் செவனோ க்ளாக். ஸீ குமார். ஹி இஸ் ஸ்மைலிங் நவ்' என்றான் சிரித்துக்கொண்டே.
மறுநாள் மாலை அலோக் இன்னும் வந்திருக்கவில்லை. ரோட்கிங்கை இழுத்து அதன் தாங்கியில் நிறுத்திவிட்டு, திரும்பிய கணம் கண்ணில் மின்னலடித்தது. நிலா தூய வெண்மேக சுரிதாரில் ஆகாய நீல எம்ராய்டரி மலர்கள் சிரிக்க, அதைவிட பளீரென்று என்னைப் பார்த்துச் சிரித்தாள். அவள் கண்களும் சிரிக்க, கன்னங்கள் லேசான சிவப்புப் பூச்சில் இன்னும் சிவந்திருந்தன. நான் கீழே விழாமலிருக்க வண்டியின் இருக்கையைப் பிடித்துக் கொண்டேன். நட்சத்திரங்களில்லா கருவானில் முழு நிலவைப் பார்த்தது போல், அச்சூழ்நிலை இயக்கங்களனைத்தும் மறைந்துபோய், என் கண்களுக்கு என் நிலா தவிர ஒன்றும் தெரியவில்லை. என்னில் வேறு எதையும் என்னால் உணர முடியவில்லை. லேசான இடைவெளியில் பளீரிட்ட வெண் சங்குக் கழுத்தில், மெலிதான தங்கச் சங்கிலி ஒன்று மேலும் அழகூட்ட, காதுகளில் வெண் முத்துகள் புன்னகைத்தன. இறைவன் ரசித்து வரைந்த ஓவியம் போல, வானிலிருந்து எனக்காக வந்தவளைப் போல, அவள் தோன்றினாள்.
'ஹேய். குட் ஈவ்னிங்' என்று கைகுலுக்கி 'என்ன அப்படி பாக்கற?' என்றாள்.
எனக்கு பேச்சு வரவில்லை. மெதுவாக அவள் கன்னங்களைத் தாங்கி, கண்களுக்குள் ஊடுருவி, என்னிடம் இழுத்து, ஆழ் மூச்சு வாங்கிக்கொண்டு, ஒரு நீள்முத்தம் கொடு....
'ஹலோ. எங்க இருக்கே? பகல்லயே கனாவா? இங்க பாருப்பா. ஏன் அப்படி பாக்கற. எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு' என மேலும் சிவந்தாள். என் நாடித் துடிப்பு அதிகமானதை உணர்ந்தேன். அலோக்கும் வந்துவிட மூவரும் முக்கியமில்லா விஷயங்களை நேரத்தைக் கொல்வதற்கு பேசிக் கொண்டிருக்கையில், குமார் வந்து ஸென்னை நிறுத்தி, 'ஹாய் கய்ஸ். கம்மின்' என்றார். அலோக் செயற்கையான அவசரம் காட்டி முன்னிருக்கையில் அமர, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, பின்னிருக்கைகளில் பரவினோம். நான் மெதுவாக, அவள் கையைப் பற்றி இருக்கையுடன் அழுத்திக்கொள்ள, அவள் அவர்களிருவரையும் கண்களால் காட்டி, சட்டென்று விலக்கிக் கொண்டாள். அனிதா எங்களை வரவேற்று பழரசம் கொடுத்ததை மந்த கதியில் உறிஞ்சினோம். 'நான் ஊர்ல இல்லாதப்ப ஒங்க பாஸ் ஆபிஸ் பொண்ணுங்கள சைட் அடிச்சாரா?' என்று நிலாவிடம் கேட்க அவள் 'ஆமாமா. கொஞ்சம் அடக்கி வைங்க' என்று சொல்ல, குமார் 'எனக்கு இது தேவையா?' என்று என்னைப் பார்த்துக் கேட்க சூழ்நிலையின் இறுக்கம் தளர்ந்தது.
ஹாலில் சோபாக்களை விலக்கி, சிறு மெத்தைகளும், திண்டுகளும் பரப்பியிருந்தது. நானும் அலோக்கும் ஒன்றில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொள்ள, அனிதாவும் நிலாவும் அடுத்ததில் அமர்ந்து கொண்டார்கள். குமார் கிச்சனுக்குச் சென்றுவிட, அலோக் பையை திறந்து வெளியே வைத்த பாட்டில்களை அனிதா எடுத்துக்கொள்ள, அலோக்கும் உதவுவதற்குக் கூடச்சென்றுவிட, நாங்கள் தனித்திருந்தோம். நொடிக்கும் குறைவான அவகாசத்தில், மண்டியிட்டு அவளை அடைந்து முத்தத்தைப் பதித்து திரும்ப, அவள் அதை எதிர்பார்க்காமல், வெட்கமடைந்து முகத்தை மூடிக்கொண்டாள். நாங்கள் அவரவர் மெத்தைகளின் ஓரங்களில் அமர்ந்து அருகருகே ஆகிக்கொண்டோம். அவர்கள் திரும்ப வந்து அனைத்தையும் நடுவில் பரப்பி அமர்ந்துகொள்ள, சிரிப்புகளும், கேலிகளும், கிண்டல்களும் பரவத் தொடங்கின.
மெலிதான சங்கீதம் காற்றில் பரவியிருக்க, மாலைக் குளிரிலும், மங்கல் விளக்குகளிலும், அச்சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. லதா மங்கேஷ்கரின் ஏதோ ஒரு மெலடிக்கு, நிலாவும் கூடச் சேர்ந்து பாடினாள். அவள் தலையை லேசாக ஆட்டி, தொடையில் தாளமிட்டுப் பாட, நாங்கள் கைகளால் தாளமிட்டோம். அலோக், ஒலியைக் குறைத்து வைக்க, இப்போது, நிலாவின் குரலும், எங்கள் கைத்தட்டுத் தாளங்களும் மட்டுமே ஒலிக்க, துள்ளும் குரலில் பாடல் தொடர்ந்தது. பளீரிடும் பல்வரிசை மெலிதாகத் தெரிய, புன்னகையுடன் அவள் பாடினாள். முடித்ததும் 'ஓ.....' என்று அனைவரும் கைகளை உயர்த்திப் படபடவென்று தட்ட, அனிதா எழுந்து வந்து நிலாவை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு 'என்ன அழகா பாடறே தங்கம்' என்றாள். எனக்குப் பெருமையாக இருந்தது. அவள் என்னவள்.
அடுத்ததாக ஒலித்த ஒரு டூயட்டிற்கு, குமாரும் அனிதாவும் அணைத்துக்கொண்டு சுழன்று ஆட, நாங்கள் உற்சாகப் படுத்தினோம். நிலாவைப் பார்த்து பெருமூச்சு விட அவள் அழகு காட்டினாள். சில நிமிடங்களில் குமார் அனிதாவை விடுவித்துவிட்டு, என்னையும் நிலாவையும் பார்த்து 'கமான் கய்ஸ். கம் அன் டான்ஸ்' என நானும் நிலாவும் 'அய்யோ' என்று அலறினோம். அனிதா அவளை வலுக்கட்டாயமாக எழுப்பி நடுவில் நிற்கவைக்க, என்னை அலோக்கும் குமாரும் எளிதாக ஜெயித்தார்கள். நிலாவுடன் எதிரெதிரே நிற்கும் அந்தக் கணத்தை எதிர்பார்க்கவில்லை. 'கமான்' என்று குரல்கள் மந்திரங்கள் போல ஒலிக்க, என்னை முதுகில் யாரோ தள்ளினார்கள். நிலாவும் தள்ளப்பட, எங்களிருவருக்கும் இப்போது நூலிழை இடைவெளி மட்டுமே இருக்க, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். என் உடல் நடுங்கியதை உணர முடிந்தது. அவள் இடையை மெதுவாக வளைத்து என்னுடன் சேர்த்துக்கொண்டு, அவள் இடக்கையை பிடித்துக்கொள்ள, 'வாவ்வ்வ்வ்... கமான்' என்றார்கள். அவளின் பிரத்யேக வாசனையில் கிறங்க, என் சுவாசத்தின் வெம்மையில் அவள் மேலும் சிவந்தாள். மெல்லிய அதிர்வில்லா நடனத்தில், நிமிடங்கள் யுகங்களாக மாறாதா என்று ஏங்க, அவை நொடிகளாகக் கரைய, 'போதும்.. வருஷம் முடிஞ்சிரப்போவுது.. விடுங்கப்பா' என்று குமார் கிண்டலடிக்க ஓவென்று சிரித்தார்கள்.
நிலா சட்டென்று என்னை விலக்கி, திரும்பச் சென்று அமர்ந்து தலை கவிழ்ந்து கொண்டாள். நான் ஸ்தம்பித்திருந்தேன். குமார் தற்காலிகமாகக் காணாமல் போனார். திடும்மென்று விளக்குகள் அணைந்து வினாடிகளில் எரிய குமார் 'ஹேப்பி ந்யூ இயர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்று அலற 'ஹோய்' என்ற கூச்சல் எழுந்தது. நகரில் ஆங்காங்கே வெடிச்சத்தங்கள் கேட்டன. குமாரும் அனிதாவும் முத்தமிட்டுக் கொண்டனர். வாழ்த்துகள் பரிமாறப்பட்டு, சற்று நேரத்தில் பாட்டில்கள் திறக்கப்பட்டு கோப்பைகள் நிரப்பப்பட, நிலா ஒரு ஒயின் கோப்பையை எடுத்துக்கொண்டதைப் பார்த்து 'குடிப்பியா? சொல்லவே இல்லையே?' என்றேன். அவள் 'மொடாக்குடி இல்லை. சும்மா ஒரே பெக். அவ்ளோதான். ஒயின் ஒண்ணும் பண்ணாது. ராகவன் பழக்கிவிட்டான். ஸ்வீட் டேஸ்ட். நீயும் ட்ரை பண்ணேன்' என, நான் அன்பாக மறுத்துவிட்டு பெப்ஸியை உறிஞ்சினேன்.
'ராகவன் எப்போ வரார்?'
'சிக்ஸ்த்'. அவள் முகத்தில் இப்போது புன்னகை தொலைந்திருந்தது. நான் பேச்சை மாற்றினேன். ஒயின் குடித்ததாலா என்று தெரியவில்லை. அவள் முகம் லேசாக வீங்கியிருந்தது போல ஒரு பிரமை. கண்கள் கலங்கிச் சிவந்திருந்தன.
'ஹேய். ஆர் யூ ஆல் ரைட்?'
'யெஸ். ஐயாம் வெரி ஹேப்பி டுடே'
'புது வருஷம் நமக்கு புது வாழ்க்கையைக் கொடுக்கட்டும்'
'ம்ம். நடக்குமா தெரியலை'
'ஐ லவ் யூ ஸ்வீட் ஹார்ட்'
'மி டூ'.
மணி இரண்டாகியிருக்க நாங்கள் சோர்வடைந்திருந்தோம். குமார் எழுந்து 'வாட்ஸ் த ப்ளான்?' என அனிதா 'அவங்க இங்க இருந்துட்டு காலைல போகட்டும். அன்-டைம் இப்போ' என்றாள்.அலோக் அப்படியே மெத்தை மேல் சரிந்து தூங்கிவிட்டிருக்க, நான் விழித்திருந்தேன். நிலாவும் என்பக்கம் தலை வைத்துப் படுத்திருக்க, குமார் 'தூங்கலயா? தூக்கம் வராதே? சரி. டேக் ரெஸ்ட். காலைல பாக்கலாம்' என்று சிரித்துவிட்டு, அனிதாவுடன் உள்ளே சென்று மறைந்தார். திடீரென்று அலோக்கை வெறுத்தேன். சனியன் பிடித்தவன். வீட்டுக்குப் போய் தொலைந்திருக்க கூடாதா என்று நினைத்தேன். குழந்தை போல் தூங்கும் நிலாவை வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். மெதுவாக அவள் கூந்தலை வருட, என் கையை சட்டென்று பிடித்துக் கொண்டாள். அட.. தூங்கவில்லை!
மிக மெதுவாகக் குனிந்து அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டேன். அவள் திரும்பி என்னைப் பார்க்க, நான் அவள் தாடையை வருடி, இதழ்களைக் கவ்விக்கொண்டேன்.
தொடரும்...
**
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சுந்தர்,
சுவாரஸ்யமா எழுதறீங்க. இன்னும் கொஞ்சம் வேகமா நகரலாம். 'ஒகே. வீ காட் த பாய்ன்ட். வாட் நெக்ஸ்ட்' அப்படின்னு சொல்லணும் போலிருக்கு.
நிலா மணமானவள்னு தெரிஞ்ச பின்னும் குமார், அலோக், அனிதா எல்லாரும் ஓவரா என்கரேஜ் பண்றது கொஞ்சம் யதார்த்தமா இல்லை.
(தொண தொணன்னு குறை சொல்லிக்கிட்டே இருக்கேனோ?)
// 'ஒகே. வீ காட் த பாய்ன்ட். வாட் நெக்ஸ்ட்//
இன்னும் ரெண்டே அத்தியாயத்தோட முடிஞ்சுடும்! மெகா சீரியல் ரேஞ்சுக்கு இழுக்க மாட்டேன்.
Well. Point taken. எந்தவித முன்னேற்பாடுகளுமில்லாது எழுதப்பட்ட திடீர் கதை இது. அதனால் Structure, flow, emphasis என்று நிறைய குறைபாடுகள் இப்போது வாசிக்கும்போது கண்ணில் படுகின்றன. இது ஒரு Fantasy என்று சொல்லி மழுப்பிவிட முடியும். நிறைய நிஜம் கலந்து கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்டது இது. எந்த சதவீதத்தில் என்று மட்டும் கேட்காதீர்கள் :)
//தொண தொணன்னு குறை சொல்லிக்கிட்டே இருக்கேனோ?)
//
நீங்க வெற. பொறுமையாப் படிச்சுச் சொன்னதுக்கு நன்றி. நிறைய தொணதொணங்க! வரவேற்கிறேன்.
//குமார், அலோக், அனிதா எல்லாரும் ஓவரா என்கரேஜ் பண்றது கொஞ்சம் யதார்த்தமா இல்லை.
//
கதைல இது மட்டும் Fantasy வகையைச் சேர்ந்தது. அதாவது Obsession-ல இருக்கறவங்களுக்குச் சுற்றியிருப்பது எல்லாமே சாதகமா இருக்கற மாதிரி, சாதாரண நிகழ்வுக்கும் சாதகமான அர்த்தம் கற்பிச்சுக்குவாங்க. இல்லையா? (அனுபவத்துல சொல்றேன்). அதுமாதிரி கதாநாயகனுக்கு எல்லாமே சாதகமா நிகழ்றமாதிரி, சுலபமா நிகழ்ற மாதிரி - அறிவை மறைக்கும் நம்பிக்கை! அதனாலதான் படர்க்கைல இல்லாம தன்மை ஒருமைல கதை சொல்லப்பட்டிருக்கு. ஆனாலும் திருத்தவேண்டியது ஏராளம்.
உங்கள் தொடர்ந்த மறுமொழிகளுக்கு நன்றிகள்.
Post a Comment