Saturday, October 29, 2005

சில குறிப்புகள் - வங்கி

** வங்கி **

[அக்டோபர் 30, 2002]


என்னை மனதளவில் பாதித்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் பணிசெய்து கொண்டிருந்தேன். சிந்தாமணியில் உள்ள ஒரு வங்கிக்கு ஏதோ ஒரு அலுவலாகச் சென்று என் தந்தையின் வரவிற்காக வங்கியின் வாசலில் காத்துக் கொண்டிருந்தேன். ஜன சந்தடி மிகுந்த தெரு அது. சைக்கிள்களும், டூ வீலர்களும் நெரிசலாக நிறுத்தப்பட்டிருக்க, தெரு முழுவதும் மனிதத் தலைகள் வியாபித்திருந்தன. சேலை மட்டும் அணிந்த மூதாட்டி கூன் முதுகுடனும், இடுங்கிய கண்களுடனும் மெதுவாகக் கம்பு ஊன்றி நடந்து வந்தார். உழைப்பின் அயர்ச்சி உடலில் தெரிந்தது. கையில் ஒரு தூக்குச் சட்டி. நான் அவரையே கவனித்துக் கொண்டிருந்தேன்.


பள்ளிச் சீருடையுடன் எதிரே வந்த ஒரு சிறுவன் மூதாட்டியை அடைந்து ‘பாட்டீ!’ என்று விளிக்க, அவர் சிறுவனை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு அணைத்துக் கொண்டார். அவர் கண்களில் ஈரத்தை கவனித்தேன்.


‘நல்லாருக்கியா தம்பி’ என்று கேட்டுவிட்டு நடுங்கும் கையால் சிறுவனின் தலையை வருட, சிறுவன் தலையசைத்தான்.

‘ஒன் அப்பன் எப்டி இருக்கான்?’

‘நல்லா இருக்காரு பாட்டி’


‘அவ எப்டி இருக்கா?’ என்று பாட்டி (மருமகளைப் பற்றி) வினவ, சிறுவன் மெளனமாக இருந்தான்.

‘ஒன்னயும் அடிக்கிறாளா?’

மெளனம்.

‘நல்லாப் படி ராசா’

‘சரி பாட்டீ’


பாட்டி சட்டென்று தூக்குச் சட்டி திறந்து ஒரு கை நீர் சாதத்தை ஊட்ட பையன் உள்ளங்கையால் கீழுதட்டைத் தடுத்து சோறு சிதறாமல் விழுங்கினான். போதும் என்று தலையாட்டினான்.


‘நான் வாரேன். நீ எங்கிட்ட பேசுறத பாத்தா ஒன்னய அடிப்பா.. நீ போ ராசா. என்ன தான் வெரட்டிட்டாளே அவ.. நீயாவது சூதானமா இருந்துக்கப்பா’


பையன் ஒன்றும் பேசாமல் அமைதி காக்க, பாட்டி மெதுவாக கம்பூன்றி நடந்து சென்றார். வலக்கையில் முழங்கைக்கும் மணிக்கட்டுக்கும் நடுவே தூக்குச் சட்டி ஊசலாடிக் கொண்டிருந்தது. சிறுவன் பாட்டியையே சில கணங்கள் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, கண்களில் நீர் சிதற ஓடிப் போனான்.

நான் சிலையாக நின்றிருந்தேன்.


ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோயிலினுள்ளேயும் நிறைய வயசாளிகளைக் காணலாம். சிலர் கடலையோ முறுக்கோ விற்றுக் கொண்டிருப்பர். பெரும்பாலானோர் அழுக்கான அல்லது கிழிந்த உடைகளுடன் கால் நீட்டி அமர்ந்து போவோர் வருவோரைப் பார்த்துக் கொண்டிருப்பர். பசி தாங்காத சிலர் நடுங்கும் கைகளை அருகே வருவோரிடம் நீட்டி யாசகம் கேட்பர். குடும்பத்தால் கைவிடப்பட்டு இப்படி அனாதையாகத் தெருவில் இருக்கும் இத்தகைய வயசாளிகளைக் காண்கையில் இதயம் வலித்து கண்ணீர் எட்டிப் பார்க்கும். என் தாத்தாவையோ அல்லது பாட்டியையோ அந்நிலையில் காண நேரிட்டது போல இதயம் பதறும். எப்படி மனது வந்தது என்று உள்ளம் அரற்றும். இந்நிலை மாற வேண்டும் என்று இறைவனை இறைஞ்சிக் கொள்வேன்.


தனிக் குடும்பங்கள் பெருகிவிட்ட இக்காலச் சூழ்நிலையில், கிட்டத்தட்ட பதினைந்து பேர் வரை வாழ்ந்த வத்திராயிருப்பு கூரைவீட்டை நினைத்துப் பார்க்கிறேன். குறைந்த வருவாயிலும் அத்தனை பெரிய குடும்பத்தை வழிநடத்திய தாத்தா மற்றும் அப்பாவின் மனத்துணிவை நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது. விறகடுப்பிலும் கரியடுப்பிலும் அயராது சமைத்துப் போட்ட பாட்டியின் உடல் வலு வியக்க வைக்கிறது.


அக்ஷராவுக்கு காய்ச்சல் என்றால் பதறி மருத்துவமனைக்கு ஓடி செய்வதறியாது தவிக்கும் என்னையும் என்னைப் போன்றவர்களையும் நினைக்கும் போது, உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் பலவீனப்பட்டுப் போன தலைமுறையை உணர முடிகிறது.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள்!.

***

5 comments:

rv said...

சுந்தர்,
நல்ல பதிவு.

தாத்தா பாட்டிகள் - சொல்ல என்ன இருக்கிறது? அவர்கள் நம் பெற்றோரை விட நம்மேல் அன்பைப் பொழிபவர்கள்.

என் தந்தை வழியில் இழந்துவிட்டேன். ஆனால், தாய்வழியில் இன்னும் என் வீட்டிலேயே இருக்கிறார்கள் என்பது இன்றளவும் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. என் அப்பாவை (இந்திய மாமனார்-மாப்பிள்ளை ஈகோ கலாச்சாரத்தைக் கருத்தில் கொள்ளும் போது)நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது.

Sundar Padmanaban said...

இராம்.

நன்றி.

என் தந்தைவழித் தாத்தா பாட்டியைச் இரண்டு வருடங்களும்மு முன்பு இழந்தேன். நான் தாத்தா செல்லம். அவரை இறுதியாகப் பார்க்க முடியாமற் போனது இன்னும் என் நெஞ்சை அறுக்கும் விஷயம்.

நம் பெற்றோரைப் பேற்றோர்கள் கூட இருப்பது எவ்வளவு பெருமைபடத் தக்க விஷயம் என்பதை நான் அறிவேன். பார்ப்பவர்களெல்லாம் அவர்களை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுச் செல்லாமல் இருந்ததே இல்லை. தாத்தா நல்ல ஆரோக்கியத்துடன் 92 வயது வரை வாழ்ந்தார். பாட்டியும் அவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 70 வருடங்கள் மணவாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். பிரமிப்பாக இருக்கிறது.

மரத்தடியில் நிறைய எழுதியிருக்கிறேன். இன்னும் எழுதுவேன்.

டிபிஆர்.ஜோசப் said...

It is really nice Sundar.

I still fail to understand as to how women who are known for their tender and love treat another women especially their mother in law like this.

I've seen such incidents in several families including those who are well educated and well placed.

Women (why? even some men do the same thing) never realise that the same thing might happen to them one day.

ramachandranusha(உஷா) said...

சுந்தர் முன்பே படித்தது என்றாலும் மீண்டும் இவைகளை தனிப்பதிவாய் தொகுப்பது நல்ல முயற்சி. அப்படியே இந்த வாசகி விருப்பம்- அந்த பேஜர், டை நினைவுகளை இங்கு போடுங்கள் :-)

Sundar Padmanaban said...

//மீண்டும் இவைகளை தனிப்பதிவாய் தொகுப்பது நல்ல முயற்சி//

உஷா. இதைக் "கற்பனை வறட்சி"ன்னும் சொல்லலாம். :) புதிதாக எதுவும் எழுதத் தோன்றவில்லை. வலைப்பதிவுகளில் செய்தி வாசிப்பது எனக்கு ஒத்து வராது. அதனால் கொஞ்சம் பழைய கஞ்சி. மரத்தடி.காம்-இலேயே எல்லாம் அழகாகத் தொகுக்கப் பட்டுள்ளன. இருந்தாலும் மரத்தடியில் இல்லாதாருக்காக இங்கு அதை மறுபதிவு செய்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட கட்டுரைகளைக் கட்டாயம் பதிகிறேன்.

நன்றி.

ஜோஸப் ஸார். இது உளவியல் மனவியல் சம்பந்தப் பட்ட மற்றும் ஆண்களின் கண்ணோட்டம் சம்பந்தப் பட்ட விஷயம் என்பது என் கருத்து. பெரிய விவாதமாக உருவெடுக்கக் கூடிய கருத்தைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பேசலாம். உங்கள் கருத்துகளைத் தாருங்களேன். நன்றிகள்.

அன்புடன்
சுந்தர்.