நேற்று நைட் சியாமளனின் 'ஸைன்ஸ்' திரைப்படத்தை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. நம்மூரில் 'மிட்நைட் சியாமளி' என்று தமிழாக்கம் செய்யப்பட்ட மலையாளக் கொத்துபுரோட்டா திரைப்படம் இன்னும் வராதது ஆச்சரியம்! ஸைன்ஸ்ஸில் வரும் சோளக்கொல்லை வட்ட வடிவங்களைப் பார்த்ததும் மனதில் பொறியடித்தது. 'இதை எங்கேயோ பார்த்திருக்கோமே?' என்று! நினைவுகளைக் கிளறியதில் ஆஹா.. கிடைத்துவிட்டது.
ஐந்தாம் வகுப்பு முடியும் வரை பேனாவைத் தொட்டதில்லை. தொடக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தோம்.ஆறாம் வகுப்பு சேர்ந்ததும் மரக்கலரில் இருக்கும் ஒரு மை பேனாவை அப்பா முதன்முதலில் வாங்கிக் கொடுத்தார். அதோடு ஒரு மை பாட்டிலும். தினமும் சிரத்தையாக பேனாவைத் திறந்து மைஅளவைச் சோதித்து நிரப்பிக்கொள்வேன். மை நிரப்பியால் (இங்க் பில்லர்) நிரப்புகையில் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் கவனம் இருக்கும். பிரில் பிராண்டு மிகவும் பிரபலம்.
சிலேட்டுப் போல் எழுதி அழிக்கவே வேண்டியிராத ரூல்டு மற்றும் அன்ரூல்டு ஒரு குயர் நோட்டுகளில் பூப்போல ரொங்கிக்கொண்டே எழுதுவதில் ஒரு சுகம். நீலம் மிகவும் பிடித்த நிறம் என்பதால், பேனாவின் முனை நீர் மைப் பொட்டிட்டுக் கோடிடுவதை எழுதுகையில் பார்த்துப் பரவசம் அடைவது வாடிக்கை. தப்பாக எழுதவே மாட்டேன். தப்பித் தவறி தவறாக எழுதிவிட்டாலும் அதை கொச்சா முச்சாவென்று அடிக்காமல் எழுத்தின் குறுக்காக ஒரு கோடிடுவேன். அடித்தலும் திருத்தலும் கூட அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். யாருடைய கையெழுத்து அழகு என்று வகுப்பில் ஒரு (ஆரோக்கியமான) போட்டியே நடக்கும்.
கையெழுத்துகளில் எத்தனை வகைகள்! வகுப்பில் கூடப் படித்த மகேஷிற்கு வாய் நிறைய பற்களோடு சிங்கப் பற்களும் உண்டு. அவன் எழுதும் எழுத்துக்களின் சதுர முனைகளில் எப்போதும் ஒரு கொக்கி வெளியே வளைந்திருக்கும். கூடலிங்கத்தின் எழுத்துக்களில் சதுர வடிவமே இருக்காது, முனை மழுங்கி தெலுங்கு எழுத்துக்கள் போல் நெளி நெளியாக எழுதுவான். ரமேஷிடம் கன்னட ஜிலேபி எழுத்துகளின் தாக்கம் இருக்கும். சிலர் ஸ்பிரிங் போன்று இடைவெளியில்லாமல் எழுத்துக்களை இணைத்து எழுதுவார்கள். சிலர் வார்த்தைகளுக்கிடையே விடும் இடைவெளியில் கால்பந்தே விளையாடலாம். பரீட்சை எழுதுகையில் விஷயம் போதாமல், நீட்டி எழுதிப் பழகி, நிசமாகவே நீட்டி எழுதுவார்கள் சிலர். அவர்கள் நூறு பக்கங்களில் எழுதியதை அச்சிட்டால், கையடக்க பிட் நோட்டீஸ் அளவுக்குத் தான் தேறும்! சிலர் அநியாயத்திற்கு ஒல்லி எழுத்துகளில் எழுதுவார்கள். சிலர் பூசணி எழுத்துகள். சிலர் ரூல்டு பக்கத்தில் எழுதும்போது எழுத்தின் உயரத்தில் இரண்டு கோடுகள் அடைபடும். சிலர் நுணுக்கி நுணுக்கி பூதக்கண்ணாடி வைத்துப் படிக்கும் படி எழுதுவார்கள்- இந்த ஆசாமிகள் தான் இப்போது அரிசியில் ராமர் பட்டாபிஷேகம் வரைந்து, அஞ்சலட்டையில் ராமாயணம் எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன்.
சிலர் நோட்டைப் புரட்டிப் பார்த்தால், எழுதியதை விட, அடித்தது நிறைய இருக்கும். சிலர் ஆணித்தரமாக எழுதியதில் காகிதம் பின்புறம் புடைத்திருக்கும். இன்னும் சில பக்கங்களில் அதன் அழுத்தத்தைக் காணலாம். முகப்பில் சாமி படங்கள் ஒட்டியிருக்கும். சிலரின் அக்காமார்கள் பூ வரைந்து கொடுத்திருப்பார்கள். சிலவற்றின் நடுவே மயிலிறகு இருக்கும்- ஒன்றிரண்டு அரிசி மணிகளோடு- தின்று குட்டி போடுவதற்காக! சிலதில் காய்ந்த இலைச்சருகுகள். சிலவற்றில் கைரேகைகள்- பேனா கழுத்தில் ஒழுகுவதால். பிள்ளையார் சுழி- முதல் பக்கத்தில் மட்டும். சிலர் ஒவ்வொரு பக்கத்திலும் கட்டாயமாக சுழி போடுவார்கள். கடைசிப் பக்கங்களில் சிலர் ராம ஜெயம் எழுதியிருப்பார்கள்.
பந்துமுனை எழுதுகோல் (அட.. பால்பாயிண்ட் பேனாங்க!) பள்ளியில் தடை செய்யப்பட்டிருந்த வஸ்து. யாராவது தப்பித்தவறி கொண்டு வந்தால் போச்சு. வளைகுடா நாடுகளுக்கு நிகரான தண்டனைகள் உண்டு. அதை பயன்படுத்தி எழுதியிருந்தாலோ போயே போச்சு! 'எழுத்து கோழி கிண்டுனமாதிரி ஆயிரும்டா' என்பார் ஆசிரியர். மை பேனாவால் எழுதுவது கடிவாளம் இட்ட குதிரை மாதிரி- ஓடுவது சீராக இருக்கும் என்பார். மை பேனாவில் ஒரே அவஸ்தை தினமும் நிரப்ப வேண்டியிருப்பது தான். சிலசமயம் மரை கழன்று விட்டால் (அட.. பேனாவிற்குங்க) இன்னும் அவஸ்தை. அடிக்கடி இறுக்கம் தளர்ந்து மை வியர்வையில் கை நனையும். குளம்பு தேய்ந்த மாட்டுக்கு லாடம் அடிப்பது போல, மரை கழன்ற பேனாவிற்கு, நூல் சுற்றி மரை கொடுப்போம். சிலசமயம் நூல் மரையின் இறுக்கம் தாளாமல், பேனா பிளந்துவிடும். அல்லது திறக்க முடியாமலே போகும். பற்களால் கடித்துத் திறந்தது பலமுறை நேர்ந்திருக்கிறது. எங்கள் பேனாக்களின் கழுத்துப் பகுதியில் பற்களின் தடங்களைப் பார்க்கலாம். நாங்களும், நீலகண்டர் போல், வாயெல்லாம் மையாக நீலம் பாரித்துக் காட்சியளித்திருக்கிறோம்.
கருநீல கால்சராயும் வெள்ளைச் சட்டையும் பெரும்பாலான கிராமப் பள்ளிகளின் சீருடை. வெண்சட்டையும் தூள்நீலம் போட்டு ஆகாய நீலமாக இருக்கும். ஏப்ரல் ஒன்றை எப்படியாவது நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்து சரியாக மறந்து விடுவேன். ஆனால் அம்மா ஞாபகம் வைத்திருந்து, போகிக்கு கழித்துக்கட்டும் நிலையிலிருக்கும் ஒரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொள்ளச் செய்வார்கள். வெளியில் வந்து சில அடி நடந்ததும் பின்கழுத்தில் ஜிலீரென்றிருக்கும். திரும்பினால் பக்கத்துவீட்டு மணி கையில் மூடி திறந்த பேனாவுடன் ஈயென்று இளிப்பான். தொட்டுப் பார்த்தால் நீல மை பிசுபிசுக்கும். சட்டையில் கோடிட்டிருப்பதை சட்டை செய்யாமல் மேலும் நடப்பேன். நீலம், சிவப்பு, கருப்பு என்று மாலை வரை மை அடிக்கும் படலம் தொடரும். மறந்து போய் பளீருடையில் வந்து தொலைத்தவர்கள், அன்று முழுவதும் ஓடி ஒளிந்து கொண்டே இருப்பார்கள்.
முரட்டுப் பையன்கள் கத்திரிக்காயை பாதியாக நறுக்கி வைத்துக் கொண்டு அதில் மாட்டுவண்டிச் சக்கரத்தின் அச்சாணியில் வழியும் கரு மையை அப்பிக்கொண்டு முதுகில் அச்சிடுவார்கள். லேசில் போகாது, நிரந்தரக் கறையாகிவிடும். புதுச்சட்டையில் கத்திரிக்காய் அச்சு வாங்கியவர்கள் கலங்கிய விழிகளோடு வீடு திரும்புவார்கள்.
பேனா சரியாக எழுதவில்லையென்றால் நிப்பை பலகையில் அழுத்தி பாம்பின் நாவு போல் பிளக்கச் செய்து, மை துளிர்த்ததும் திரும்ப எழுதினால் பட்டையாக எழுதும். வகுப்பின் ஆண்டிறுதி நாட்களில் சிலர் மையில்லாப் பேனாவினால் டெஸ்க்கில் நிரந்தரமாக பெயர் பொறித்து வைப்பார்கள்.
தாத்தா விதவிதமான பேனாதாங்கிகள் (Pen Stand!) வைத்திருந்தார். தாங்கிகளில் இரண்டு பேனா மூடிகள் திறந்திருக்கும். ஒரு சிறிய தேதிச் சீட்டு (ஒன்றிலிருந்து முப்பத்தொன்று எண்கள் ஒன்றன்பின் ஒன்றாக வைக்கப்பட்டிருக்கும்) செருகி வைக்கும் பகுதி. ஒன்றாம் தேதி முடிந்ததும் சீட்டை எடுத்து முப்பத்தொன்றின் பின்னால் செருகி வைக்க இரண்டாம் தேதி தொடங்கும். அப்புறம் மைக்கூடு வைக்க ஒரு வட்ட வடிவ பள்ளம். நீளத்தூரிகை போன்ற குச்சிப்பேனாவை மையில் முக்கி முக்கி எழுதுவார்களாம். ஒரு தடவை முக்கினால் ஒரு வரி எழுதலாம். பேனாவில் மை நிரப்ப இடம் இல்லையாததால் மூடியும் தேவையிருக்கவில்லை. எழுதிவிட்டு தாங்கியில் உள்ள மூடியில் செருகி வைத்துவிடுவார்களாம். எழுத்தாணி கொண்டு ஓலையில் எப்படி எழுதியிருப்பார்கள் என்று ஓலைச்சுவடி ஒன்றைப் பார்த்துப் பிரமித்தேன். சீத்தலைச் சாத்தனாரும் நினைவுக்கு வந்தார் (சாத்தான் குளத்தை "சாத்தனார் குளம்" என்று பெயர் மாற்றம் செய்யக்கூடாதா?).
தேதி என்றதும் நினைவுக்கு வருகிறது. வருடங்கள், மாதங்கள், வாரங்கள், நாள்கள் என்று எண்ணிக்கை படித்தபோது, முப்பது நாள்களுள்ள மாதங்களுக்கும், முப்பத்தொரு நாள்களுள்ள மாதங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அடிக்கடி குழம்புவேன். பிப்ரவரிக்கு குழப்பமே இருந்ததில்லை. தாத்தாவிடம் சொன்னதும் கைவிரல்களை குத்துச்சண்டைக்குச் செல்வதைப் போன்று மடக்கிக்கொள்ளச் சொன்னார். மடக்கியதும் ஆள்காட்டி விரலில் தொடங்கினார். அந்த விரலின் முட்டி ஜனவரியாம். ஆட்காட்டி விரல் முட்டிக்கும் நடுவிரல் முட்டிக்கும் இடையே உள்ள பள்ளம் பிப்ரவரியாம். நடுவிரல் முட்டி மார்ச்சாம். இப்படியே போனால் சுண்டுவிரல் முட்டி ஜூலையில் முடிய, மறுபடி ஆட்காட்டி விரல் முட்டி ஆகஸ்ட்டுக்கு வைத்துக்கொண்டு மோதிர விரல் முட்டியில் டிசம்பரை முடித்தார். முட்டியில் முடியும் மாதங்கள் அனைத்தும்முப்பத்தொரு நாட்களுள்ள மாதங்கள். முட்டிகளுக்கு இடையே உள்ள பள்ளங்களில் விழும் மாதங்கள் அனைத்தும், பிப்ரவரி தவிர, முப்பது நாட்களுள்ள மாதங்கள் என்றார். பிரமித்துப் போனேன். 'மறந்தா முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்' என்றார் சிரித்துக் கொண்டே!
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை சாய்மானம் இல்லா உட்காரும் பெஞ்சுகளும், மேசைகளும். ஒரு பெஞ்சில் மூன்று பேர் அமரலாம். ஒரு வகுப்பில் மூன்று பெஞ்சு வரிசைகள். பெஞ்சுகளில் சாய்மானம் இருந்தால் தூங்கிவிடுவோமாம். ஆனால் மேல்நிலை வகுப்பு பெஞ்சுகளில் குறுக்குச் சட்டம் வைத்து சாய்மானம் இருக்கும். அவை என் தாத்தா காலத்தில் செய்யப்பட்டவை. வயதானதால் கரும்பழுப்பாகி, பலவித கிறுக்கல்களுக்கும் செதுக்கல்களுக்கும் ஆளாகி இருக்கும்.
மேசைகள் தட்டையாக இல்லாமல், சாய்வு மேசைகளாக இருக்கும், எழுத வசதியாக இருக்குமென்பதால். சாய்வின் உச்சியில் பேனாவை வைத்து, அவை சரசரவென்று உருண்டு விழும் தருவாயில் பிடிப்போம். மேசை முழுக்க சாய்வாகவும் இருக்காது. முடிவில் இரண்டு அங்குலத்திற்கு தட்டையாக முடியும். அந்தத் தட்டைப் பிரதேசத்தில் பேனா வைத்துக் கொள்ளவும், மைக்கூடு வைத்துக் கொள்ளவும் பள்ளங்கள் செதுக்கப் பட்டிருக்கும்.
மூன்று வட்டங்களும், மூன்று கோடுகளும்- 'ஸைன்ஸ்'-ஸில் வரும் பள்ளங்களும், கோடுகளும் போல!
நன்றி : www.maraththadi.com
1 comment:
VERY NICE
Post a Comment