Monday, December 12, 2005

* அந்தம் * # 1

ஆதியிலேயே 'அந்தம்'ங்கறானே என்று நீங்கள் யோசிக்கலாம். எனது எழுத்தனுபவத்தைப் பொருத்தவரையில் இணையத்தில் இணைந்து வாசிப்பில் கவனம் செலுத்தியும், மரத்தடியில் அவ்வப்போது டைரிக் குறிப்புகளாக நினைவலைகள் மட்டுமே (சுலபமாக) எழுதிக்கொண்டும் சமர்த்தாகத்தான் இருந்தேன்.


ஆனால் "நாமும் செய்துபார்த்தால் என்ன?" என்று நாம் எல்லாரையும் பாதிக்கும் சிண்ட்ரோம் ஒன்று இருக்கிறதே? அது என்னையும் விடவில்லை. 'அவனவன் ஸ்டைலாக தம்மடிக்கிறானே; இதுக்காகவே களுக்கென்று சிரித்து ஓரப்பார்வை வீசிவிட்டுப் போகிறார்களோ?' என்று குறுகுறுத்து 'நாமும் அடித்துப் பார்க்கலாம்' என்று முதன்முதலாகக் கொல்லைப்புறத்தில் விறகடுப்பு வெந்நீர் அண்டா முன் குனிந்தமர்ந்து ஊதுகுழலால் ஊதும் சாக்கில் காகிதத்தில் சிகரெட் செய்து கொளுத்தி, உறிஞ்சி கண்ணில் உடனடி நீருடன் இருமித் தவித்தேன். ஓரப்பார்வைக்கெல்லாம் இந்த எழவைக் குடிப்பது மிகவும் அதிகம் என்று அதோடு முதலும் கடைசியுமாக புகைப் பிடித்தலைத் தலைமுழுகியாகிவிட்டது.


இதுபோன்று "நாமும் செய்து பார்த்தால் என்ன?" என்ற வரிசையில் விபரீத முயற்சியாக எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாது மரத்தடியில் திடீரென்று எழுதியது 'அந்தம்' என்ற இந்த முதல் கதை.


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? எனக்கும் இந்தக் கதை - அதன் பல்வேறு குறைபாடுகளையும் மிஞ்சி - எப்போதும் பொன் கதை. அதை உங்கள் வாசிப்பிற்கு - உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் முதன்முதலாக என் குழந்தையை கையிலேந்திக் காட்டியபோது அடைந்த பரவசத்துடன் - இங்கு பதிகிறேன். இனி அந்தம்.

***

அந்தம் # 1



இனிமேல் அவளைப் பார்க்கப் போவதில்லை என்று நினைத்துக் கொண்டேன். நிலா கையசைத்து விட்டு வீட்டினுள் சென்று மறைந்து விட்டாள். அவள் கரிய விழிகள் மேலும் இருண்டது போல் இருந்தது. நான் வாசலில் இறங்கி நடக்கத் தொடங்கினேன். நெடுஞ்சாலையிலிருந்த பேருந்து நிறுத்தத்தின் அருகேயே இருந்தது நிலாவின் வீடு. சாலையை அடைந்ததும் ஒரு கணம் நின்று இருபுறமும் நோக்கினேன். வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சென்று இருந்தது. பேருந்து நிறுத்தம் என்பதற்கு அடையாளமாக ஒரு சிறிய இரும்புக் குழாய் ஊன்றப் பட்டு அதன் உச்சியில் படம் வரைந்து, ‘கரும்பட்டி’ என்று எழுதியிருந்தது. அந்தப் பகுதியில் நிலாவின் வீட்டை விட்டால் சற்றுத் தொலைவில் சில ஓட்டு வீடுகள் சிதறியிருக்க ஆங்காங்கே ஆடுகளும் மாடுகளும் புல் மேய்ந்து கொண்டிருந்தன. அனைத்தும் சேர்ந்ததுதான் கரும்பட்டி. மதுரையிலிருந்து தேனி செல்லும் வழியில் இருபதாவது கிலோமீட்டரில் தனித்திருந்தது கரும்பட்டி.

நான் வந்த பேருந்து திரும்பி வர இன்னும் ஒரு மணி நேரமாவது ஆகும். காத்திருக்கப் பிடிக்காவிட்டாலும் வேறு வழியில்லை. ஒரே இடத்தில் நிற்கப் பிடிக்காமல் மெதுவாகச் சாலையோரம் நடந்தேன். தார்ச் சாலை ஓரங்களில் சரிவாக இறங்கி செம்மண் பரவியிருந்தது. புற்களும் குப்பைச் செடிகளும் நிரம்பியிருந்தன. அந்தி வேளை முடிந்து இருள ஆரம்பித்திருந்தது. கருமேகங்கள் அந்தப் பகுதியில் அடர்த்தியாக கவிந்திருக்கக் கீழ்வானத்தில் மின்னல் அவ்வப்போது மின்னிக் கொண்டிருந்தது. மேகக் கூட்டத்தின் மேலே பெரும் பாறைகள் உருண்டு செல்வதைப் போல தொடர்ந்து இடி இடித்துக் கொண்டிருந்தது எனக்கு மழை பெய்யாமல் மின்னல் இடி மட்டும் தோன்றினால் சற்று பயமாக இருக்கும். பிரளயத்திற்கு இயற்கையின் முன்னேற்பாடுகள் போன்று தோன்றும் மழையின்றி ஏற்படும் இடி மின்னல்கள். கோடையிடி என்று இதைத்தான் கூறுவார்கள் என்று நினைக்கிறேன். என் மனமும் பிரளயமாக இருந்தது.

ஆடு ஒன்று நெருங்கி என் கால் சட்டையை முகர்ந்து பார்த்து விட்டு நகர்ந்தது. புல் வாசத்தை எதிர்பார்த்ததோ என்னவோ. அதற்கு எதையும் கேட்கப் பிடிக்காதது போல் காதுகள் நீளமாக கன்னங்களை ஒட்டி மூடித் தொங்கிக் கொண்டிருந்தன. குறு வால்; அவ்வப்போது சுண்டிக் கொள்ள ஆடு சுறுசுறுப்பாக மேய்ந்து கொண்டிருந்தது. உடலுக்குப் பொருந்தாத கனத்த மடிகள் தொங்கிக் கொண்டிருந்தன. இடையனான சிறுவன் சோம்பலாக, சற்றுத் தொலைவில் இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். ஒல்லிய கரிய உடலுடன் அரைக்கால் சட்டையுடன் தலையில் முண்டாசு கட்டி, நீண்ட குச்சியைத் தோளில் சாய்த்திருந்தான். மழைத்துளிகள் விழத் துவங்க, ‘பா.. பா...க்கெ..க்கெ’ என்று ஆடு போல் ஒலியெழுப்பி, ஓட முயன்ற ஆடுகளைக் குச்சியை நீட்டி மடக்கி வழி நடத்தி அருகிலிருந்த சிறிய வெட்ட வெளியில் ஒன்று சேர்த்தான். அரைத் தேங்காய் மூடியைக் கவிழ்த்தது போல் இருந்த ஓலைகள் வேயப்பட்ட பெரிய மூடியை உயர்த்தி, ஆடுகளை உள்ளே செலுத்திவிட்டு மூடினான். அவை மூச்சு விட இடைவெளி இருக்குமா என்று யோசித்தேன். ஒரு குழம்பிய நிறமுடைய நாய் ஆட்டுக் குடிசை மூடியை ஒரு சுற்று சுற்றி விட்டு அருகேயே படுத்துக் கொண்டது. இடையன் சென்று விட்டான். நான் வான் நோக்கினேன். ஓரிரு மழைத் துளிகள் கண்ணில் விழ இமைகளை மூடினேன். கண்களுக்கு திடீரெனப் புகுந்த மழை நீர் பிடிக்கவில்லை போலும். லேசாகக் கனத்தன.

அரைபாடி லாரி ஒன்று இரைச்சலாகப் புகையெழுப்பியபடி கடந்து சென்றது. மழை பிடித்துக் கொண்டது. சாலையில் ‘சடசட’வென்று இரைச்சலாகத் துளிகள் விழுந்து மழை வலுவானது. ஓலை மூடிக்குள்ளிருந்து ஆடுகள் ‘பே..பே’ என்று மாற்றி மாற்றிக் கத்திக் கொண்டிருந்தன. மழையில் நனைவது எனக்குச் சுகம் தான். ஆனால் மனம் குழம்பியிருந்தது. திரும்பி நிலாவின் வீட்டைப் பார்க்க, சன்னல் கதவு சட்டென்று மூடிக்கொண்டது. இவ்வளவு நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் போலும். உள்ளே அழுது கொண்டிருப்பாள். வீட்டின் வெளியில் ஒரு சிறிய மங்கிய விளக்கு எரிந்து கொண்டிருந்தது. நகரை விட்டு இவ்வளவு தள்ளி வந்து ஏன் இருக்க வேண்டும் என்று ஆயிரமாவது முறையாக நினைத்துக் கொண்டேன். நிலாவின் பெற்றோர்கள் வேலை முடிந்து எட்டு மணியளவில் வீடு திரும்புவார்கள். மழையினால் இன்னும் சற்றுத் தாமதமாக வரலாம். அவர்கள் வருமுன் அந்த இடத்தை விட்டுச் செல்ல விரும்பினேன். பார்த்தால் விட மாட்டார்கள். கட்டாயமாக மறுபடி வீட்டுக்குள் சென்று சாப்பிட்டு விட்டுதான் கிளம்ப முடியும். எனக்கு பசியிருந்தாலும் சாப்பிட விருப்பமில்லை. நிலாவின் முகத்தை மறுபடியும் பார்க்கத் தயக்கமாக இருந்தது. பேருந்து வராதா என்று ஏங்கினேன்.

தூரத்தில் இரு விளக்குகள் ஒளிர்ந்து நெருங்கி வர, பேருந்துதான். வண்டி இடப்பக்கம் அபாயகரமாகச் சாய்ந்திருக்க ஆட்கள் இரு வாசல்களிலும் அடர்த்தியாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். படிக்கட்டுகள் சாலையை அவ்வப்போது தொட்டு பொறி பறந்தது. ஓட்டுனர் கை நீட்டிய என்னைப் புறக்கணித்து நிறுத்தாமல் சென்றார். யாராவது இறங்க வேண்டியிருந்தால்தான் பேருந்து நிற்கும். இப்போதைக்கு கரும்பட்டியில் இறங்க நிலாவின் பெற்றோரை விட்டால் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. என்னைக் கடந்த பேருந்திலிருந்து குரல்கள் உயர்ந்து ஒலிக்க யாரோ ஒரு பெண்மணி ‘கன்டக்டரு.. நா எறங்கணும்’ என்று அலறும் குரல் கேட்டது. சில பயணிகள் பெண்ணின் குரலை எதிரொலிக்க நடத்துனர் எரிச்சலுடன் நீண்ட விசில் கொடுத்தார். பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு ஐம்பதடி தூரத்தில் நின்றது. நான் ஓடினேன். படியிலிருந்த பயணிகள் உதிர்ந்து வழிவிட ஒரு பெண் ஆடை கலைந்து கசங்கி இறங்கினாள். கரும்பட்டியின் ஓட்டு வீடுகளில் வசிக்கும் பெண் போலும். வழி திரும்ப மூடிக் கொள்வதற்குள் நான் பேருந்தை அடைந்து உள்ளே புகுந்தேன். மழை ஈரமும் வியர்வையும் கலந்து ஒருவித நாற்றம் பரவியிருக்க பேருந்தினுள் காற்று அடைபட்டு வெப்பமாகவும் புழுக்கமாகவும் இருந்தது. நான் நகர முடியாமல் நெருக்கப் பட்டு எந்தப் பிடிப்புமில்லாமல் நின்று கொண்டேன். நெருக்கிய ஆட்களின் உடல் வெம்மையினால் சற்றே நெளிந்தேன. காசைப் போட்டால் கீழே விழாது. அவ்வளவு கூட்டம். என்னிலிருந்து சற்றே தள்ளியிருந்த நடத்துனர் என்னைப் பார்த்து ‘எங்க போவணும்? காசக் கொடுத்து விடுங்க’ என்றார். நான் சில்லறையாகக் கொடுத்தனுப்பியதை நடத்துனர் உள்ளங்கையில் சட்டென்று பரப்பி எண்ணிவிட்டு, விரலில் எச்சில் தொட்டு பயணச் சீட்டை கட்டிலிருந்து கிழித்து, கட்டை விரலால் நசுக்கிக் கொடுத்தனுப்பினார். சீட்டு ஓரத்தில் லேசாக ஈரத்துடனும் நடுவில் பாதி கிழிந்திருந்தது. சட்டைப் பையில் திணித்துக் கொண்டேன்.

வண்டி நிதான வேகத்தில் செல்ல நான் சன்னல் மூலம் கடந்தோடிய மரங்களையும் வீடுகளையும் விளக்குக் கம்பங்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது விசில் ஒலிக்க வண்டி சில வினாடிகள் நின்றுவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தது. எவ்வளவு பேர் இறங்கினார்கள் அல்லது ஏறினார்கள் என்று பார்க்க முடியவில்லை. ஆனால் நெரிசல் குறையாமல் நான் அசையாமல் நின்றிருந்தேன்.

பேருந்து நிலையத்தில் வண்டி நுழைந்து நின்றது. நான் எல்லோரும் இறங்கி முடிக்கக் காத்திருந்தேன். மதுரையிலும் நல்ல மழை போலும். வண்டியின் கீழ்ப் படிக்கட்டு வரை நீர் தேங்கியிருந்து குப்பைகள் ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தன. பயணிகள் விட்டுச் சென்ற காலடித்தடங்களைப் பின்பற்றி கடைசிப் படிக்கட்டில் ஒரு கணம் தயங்கிவிட்டு நீரில் கால் வைத்து இறங்கினேன். சற்று முயற்சித்துத் தாண்டி பயணிகள் நிற்கும் மேடைக்குத் தாவினேன். பயணிகள் காத்திருக்க அமைக்கப்பட்ட சிமிண்ட் கூரை வேய்ந்த அந்த ஷெட்டுக்கள் போலவே வரிசையாக நான்கு ஷெட்டுக்கள் நிலையத்தில் இருந்தன. இரண்டு ஷெட்டுக்கள் இடையே இரு வரிசையாக பேருந்துகள் வந்து செல்லும். ஷெட் உள்ளே நிறைய கடைகள் பரவியிருக்க மையத்தில் இருந்த அங்கீகரிக்கப்பட்ட கடையில் நீராவி பறக்கும் பாய்லரின் பின்னால் மாஸ்டர் கைகளை விரித்து டீயம் காப்பியும் ஆற்றிக்கொண்டிருக்க, கடைமுன் குளிரில் இதம் தேடி பயணிகள் கண்ணாடி டம்ளர்களை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு விளிம்பில் ஊதி நெற்றியை வெம்மையாக்க முயற்சிசெய்து கொண்டிருந்தார்கள். பழக்கூடைகளைப் பரப்பி கீழே அமர்ந்திருந்த வியாபாரிகள் மழையினால் ஒழுகும் கூரையிலிருந்து சரக்குகளைக் காப்பாற்ற பாலித்தீன் சாக்குப்பையால் மூடிவிட்டு கன்னங்களைக் கைகளால் தாங்கி குத்தவைத்து அமர்ந்திருந்தார்கள். மந்தமான வியாபாரத்தால் சோகம் கப்பிய முகங்களில் இரவு உணவைப் பற்றிய கவலை தெரிந்தது. உள்கூரையில் நனைந்த காகங்களும், சில புறாக்களும் ஒண்டியிருக்க, ஓரிரு வெளவால்கள் அங்கிங்கும் அதிவேகத்தில் பறந்தன. மின்சாரம் வந்துவிட்டால் வெளவால்கள் காணாமல் போய்விடும்.

நீர் வடிய இரண்டு நாளாகும். நகரம் அமைக்கப்பட்டபோது மழை நீர் ஓடிச் சென்று வடிய அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால்கள் அடையாளம் இழந்து அதன்மேல் வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. தீப்பெட்டி அளவில் வீடுகள். தெருக்களிலும் சாலைகளிலும் நீர் திசைதெரியாது தவித்து வெளியேறத் திணறும். மண்ணும் குப்பைகளும் கலந்து அழுக்கு நுரைத் துளிகளுடன், வாகனங்களின் ஓட்டத்திலும், நடமாடும் மனிதர்களின் பாதங்களிலும், ஊடாடி அலைபாயும். இரண்டு நாட்கள் மாநகராட்சி ஊழியர்கள் நீரை பாதாளச் சாக்கடைமூடியைத் திறந்து ஊற்றியாக வேண்டும். சில இடங்களில் மோட்டார் வைத்து வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். எனக்குக் காலணி நனைந்தால் வெறுப்பாக இருக்கும். மழைக் காலத்தில் லேசில் காயாது. குப்பை கலந்த நீர் உள்ளே புகுந்து கொள்ள சொதசொதவென்று இருக்கும். நடக்கவே பிடிக்காது. யோசிக்காமல் யாரோ கீழே எறிந்திருந்த பிளாஸ்டிக் பையை எடுத்துக் காலணிகளை கழற்றி உள்ளே போட்டுக் கொண்டேன். கால்சட்டையை முழங்கால் வரை மடித்து விட்டு சட்டென்று மறுபடியும் நீரில் இறங்கி நடந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.

சிறிய மழைக்கே மின்சாரம் போய்விடும். வழக்கம் போல் மின்சாரம் இல்லை. மிதந்து சென்ற வாகனங்களின் வெளிச்சத்தில் மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் ஓரத்தில் நடந்தேன். உடைந்த கண்ணாடியோ குழியோ இருந்தால் என்ன செய்வது என்று பயம். எங்கேயாவது தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்தால் என்ன செய்வது என்று யோசித்தவாறே கட்ட பொம்மன் சிலையைக் கடந்து நெரிசலான சந்தில் புகுந்து நடந்தேன். மின்சாரத்தால் அடிபட்டு பறவையைப் போல சாக எனக்கு விருப்பமில்லை. அதற்கு நிலாவின் மென்கரங்களால் கழுத்து நெறிபட்டோ, அல்லது விஷம் அருந்தியோ சாகலாம். நிலாவின் கண்களைப்பார்த்துக் கொண்டே. சந்து இருட்டாக இருந்தது. நான் தரையைப் பார்த்து நீர்க்குட்டைகளில் கால் வைக்காமல் நடந்தேன். சந்தின் முடிவில்; திரும்பி, சட்டென்று எதிர்பட்ட ஆளின் மீது மோதிக்கொள்வதைத் தவிர்க்க நின்றேன். மசமசவென்ற இருட்டில் நின்ற அந்த கணத்தில் அடிவயிறு திடீரென்று சூடாக, குனிந்து பார்த்தால் இருட்டிலும் லேசாகப் பளபளத்து செருகியிருந்தது அந்தக் கத்தி. நடந்ததை உணர்ந்து அந்த ஆளின் முகத்தைப் பார்க்க முயல்வதற்குள் அவன் கத்தியை இழுத்துக் கொண்டு தப் தப்பென்று நீர் தெறிக்க ஓடினான். நான் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டேன். உள்ளங்கையில் சூடு பரவ, விரலிடுக்குகள் வழியாக ரத்தம் வழிவதை உணர்ந்தேன். நா உலர்ந்து உச்சந்தலை சூடாகி, மொத்த இடுப்பிலும் வலி பரவியது. கால்கள் பலமிழந்து துவள, அப்படியே சரிந்தேன். கண்கள் மசமசத்து மூட நினைவு தப்பியது.

***

தொடரும்...

3 comments:

Kasi Arumugam said...

சுந்தர்,
<<div align="justify"> ஃபய்ர்ஃபாக்ஸில் தொல்லை பண்ணுதுங்க. ப்ளாக்கரின் இடுகை எழுதும் இடைமுகத்தில் உள்ள justify பொத்தானை அழுத்தாமல் போடுங்கள்.
நன்றி.

மஞ்சூர் ராசா said...

சுந்தர்,
உங்கள் முதல் பொன் கதைக்கு வாழ்த்துக்கள்.
ஆரம்பத்திலேயே ஏகமான விவரிப்புகளுடன் கடைசி வரி தொடரும் போட்டு ஒரு தொலைக்காட்சி தொடருக்குறிய நடையில் கதையின் ஓட்டம் தொடங்கியுள்ளது. எதிர்ப்பார்ப்புகளுடன் காத்திருக்கும்

Sundar Padmanaban said...

//justify பொத்தானை அழுத்தாமல் //

காசி, ஓரங்கள் ஒழுங்காக இருக்கும் என்று Justify செய்தேன். அடுத்த பதிவிலிருந்து அதைத் தவிர்க்கிறேன்.

நன்றி.

அன்புடன்
சுந்தர்.