அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Tuesday, December 13, 2005
* அந்தம் * # 3
* அந்தம் * # 3
கண் விழித்தபோது மருந்து நெடி மூக்கைத் துளைத்தது. ஆஸ்பத்திரி. நெஞ்சுவரை பச்சைப் போர்வை போர்த்தப்பட்டு, இடது கையில் ரத்தம் ஏறிக்கொண்டிருந்தது. திடீரென்று தீயாய் தாகம் எடுப்பதை உணர்ந்து ‘தண்ணி’ எனப் பேச வயிறை எக்கியதில் உடலில் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்ததைப் போன்று உச்சி வரை வலித்தது. வலது கையை வாயிலருகில் கொண்டு வந்து சைகை காட்ட முயன்று அது கட்டுப்பாடில்லாமல் காற்றில் அலைந்தது எனக்கு வினோதமாக இருந்தது.
அது பொது வார்டு போல. வரிசையாகக் கட்டில்கள் போடப்பட்டிருக்க விதவிதமான நோயாளிகள் படுத்திருந்தார்கள். பக்கத்துப் படுக்கையில் படுத்திருந்த பையனின் உடலைவிட அவன் கால் தடிமனாக இருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது. வலது கோடியிலிருந்து தொடர்ச்சியாக ஒருவர் இருமிக் கொண்டிருந்தார். எதிரே ஜன்னலில் குரங்கு ஒன்று யாரோ நோயாளியிடம் திருடிய ரொட்டியைத் தின்று கொண்டிருக்க, உறவினர்களுடன் வந்த சிறுவர்கள் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜன்னலுக்கு வெளியே நிறைய மரங்கள் அடர்ந்திருக்க மதிய வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது.
‘டாக்டரம்மா சாரு முழிச்சுட்டாருங்க’ என்று குரல் கொடுத்தது.. அட ஆட்டோ டிரைவர் மணி. காக்கிச்சட்டை மற்றும் கைலியுடன் என்னைப் பார்த்து கவலையுடன் புன்னகைத்தான். சரியாயிடுச்சா என்று என்னை சைகையில் கேட்டதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்தது.
வெள்ளையில் உடையில் வந்த தடித்த பெண் நர்ஸாக இருக்க வேண்டும். என்னை நாடித் துடிப்பு பார்க்க, நான் சைகையில் தண்ணீர் கேட்டேன்.
‘மயக்கம் தெளிஞ்சு கொஞ்ச நேரத்துக்கு அப்படித்தான் இருக்கும். ஒண்ணும் எடுத்துக்கக் கூடாது. தண்ணி கிண்ணி குடிச்சா.. தொப்புள் வழியா எல்லாம் வெளியே வந்துரும். நல்லதுல்ல.. ரெண்டு கொடல்லயும் ஓட்டை விழுந்துருச்சி.’ அவள் சட்டையின் பேட்ஜ் காமாட்சி’ என்றது.
மணியின் ஆடைகளில் ரத்தக் கறைகளைப் பார்த்தேன். என் ரத்தம். சுவாசம் மட்டும் நான் என்பது போலவும் என் உடல் தனியாகக் கிடப்பது போலவும் உணர்ந்தேன். தூங்க வேண்டும் போல் இருக்க நான் கண்களை மூடிக்கொண்டேன்.
‘நிலா...நிலா.. உனக்குத் தெரியுமா.. நான் இங்கே படுத்திருப்பது.. எப்போது என்னைப் பார்க்க வருவாய்? உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது.. வந்துவிடேன்.. இப்போவே..'
நெற்றியில் இளஞ்சூடான காற்று வருட, மூடியிருந்த இமைகளில் இருள்பரவ நான் கண்விழித்தேன். நிலா க்ளோசப்பில் என்னைப் பார்த்துப் புன்னகைத்து ‘சாரிடா ரொம்ப லேட்டாயிருச்சு.. தூங்கிப் போயிட்டியா?’ என்று கேட்டுவிட்டு நான் பதில் சொல்லத் தொடங்கிய இடைவெளியில் சட்டென்று இதழ் பதித்து விலக, எனக்கு பதில் மறந்துவிட்டது.
எழுந்து அமர்ந்து கைகளைத் தட்டி மணலை உதற, நிலா என் சட்டையைத் தட்டினாள். இன்னும் இருட்டவில்லை. கடற்கரையில் கூட்டம் வழக்கத்தை விடக் குறைவாக இருந்தது. நாங்கள் இருந்த பகுதியில் வேறு யாரையும் காணோம். சில மீனவப் பையன்கள் அலைகளில் விளையாடிக்கொண்டிருக்க ஒரு மூதாட்டி சற்றுத் தொலைவில் கையில் பையுடன் அமர்ந்திருந்தாள்.
‘என்னய பாக்காம என்ன வேடிக்கை பாக்குற?’
நான் பதில் சொல்லாமல் வெளிச்சத்திலேயே காணப்பட்ட பிறை நிலவையும் மின்னிய ஓரிரு நட்சத்திரங்களையும் பார்த்து நிலாவையும் சூரியனையும் ஒரே நேரத்தில் யாராவது புகைப்படமெடுத்திருக்கிறார்களா என்று யோசித்தேன்.
‘ஹேய்.... என்ன பலமான யோசனை?’
‘நிலாவையும் சூரியனையும் ஒரே சமயத்துல பாத்துருக்கையா?’
‘வாட்?’
‘ஒண்ணுமில்ல’
நிலா என் தலையைக் கலைத்தாள்.
‘என்ன இன்னும் தூக்கம் போகலியா? கொஞ்சம் கண்ணத் தொறந்து என்னப் பாருடா?’
பார்த்தேன். இந்தப் புன்னகையா காரணம்? இந்த சிரிக்கும் கண்களா காரணம்? இந்த குயில் குரலா காரணம்? இந்த கரும்பழுப்புக் கூந்தலா காரணம்? அவள் மெல்லிய காதுமடல்களில் தோடுகள் ஊசலாடிக் கொண்டிருந்தன. கன்னத்தில் நாணயம் அளவுக்கு சிவந்திருக்க, மெதுவாக அதை வருடினேன்..
‘ஸ்.. ஆ....’ என்று என் விரலைப் பிடித்துக்கொண்டு வெட்கப்பட்டாள்.
‘என்ன இது? எதனால ஆச்சு?’
‘எதனாலயா? காலைல ஆபிஸ் வந்த ஒடனே அஞ்சலி பாத்துட்டு லவ் ஃபைட்டான்னு கேட்டு என்னை ஒருவழி பண்ணிட்டா.. இப்டியா கடிப்பே... மொரட்டுப் பயலே...’.
அவள் சிரிப்பில் ஒழுங்கான பல்வரிசை என்னை மயக்கியது.
‘அப்படி பாக்காதே எனக்கு பயமாருக்கு’
‘ஒன்ன ஏன் இவ்வளவு லேட்டா சந்திச்சேன்னு கோவமா வருது நிலா’
நிலா பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு விரலால் மணலில் கோலமிட்டாள்.
‘நீ ஏண்டி என்ட்ட சொல்லல?’
‘என்ன சொல்லல?’
‘இத மாதிரி நான் பொறந்தாச்சு.. இந்தூர்ல.. இந்த இடம்.. வெயிட் பண்றேன்.. சீக்ரமா வந்து என்ன தூக்கிட்டுப் போன்னு சொல்லியிருக்க வேணாம்?’
‘நான் சொன்னனே... நீதான் இந்தக் காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்ட‘ என்று என் காதைத் திருக எனக்கு அவள் ஸ்பரிசம் ஆனந்தமாக இருந்தது. இந்த தேவதை எனக்கு வேண்டும். இவள் மென்கரங்களில் என் முகத்தைத் தாங்க வேண்டும். இவள் இதம் எனக்கு வேண்டும். இவளுக்காக எல்லாவற்றையும் ஏன் என்னையும் இழக்கத் தயார்.
‘செல்லம். உனக்கு நான் ஒரு லெட்டர் எழுதிருக்கேன்.‘ என்று பையிலிருந்து மடித்த காகிதத்தை எடுத்ததை கண்கள் மின்னப் பார்த்தவள், ‘தமிழ்ல‘ என்றதும் ‘ஐயோ எனக்கு படிக்கத் தெரியாதே‘ என்று கொஞ்சினாள்.
‘ம்ஹ¤ம். படிக்கத் தெரியாத பொண்ணையெல்லாம் காதலிக்கிறேன் பாரு... ஸ்... ஆ...கிள்ளாதே.. வலிக்குது’
‘நீதான் இங்லீஷ்லேயே நல்லா எழுதறயே.. எனக்கும் அதிலேயே எழுதேன். பிளீஸ்.. நான் வீட்டுக்கு எடுத்துட்டு போயி என் பெட்ரூம்ல படுத்துக்கிட்டு படிச்சுப் பாக்கணும்.’
‘இங்லீஷ் எல்லாம் வேணாம். நெறைய எழுதியாச்சு. என்ன எழுதினாலும் தமிழ்ல எழுதறமாதிரி வராது.. என் மனசுல இருக்குறத அப்டியே கொட்டிருக்கேன்.. படிக்கிறேன் கேளு.. நல்ல வேளை தமிழ் பேசவாவது தெரியுதே..’
'ம்... ஓ.கே.. சீக்ரம் படி..' என்று சொல்லிவிட்டு பின்புறம் வந்து அணைத்துக்கொண்டு என் தோளில் முகத்தைத் பொதித்து, கடிதத்தைப் பார்த்தாள். எனக்கு ஒரு விநாடி எல்லாம் வெறுமையாக இருந்தது. அவளின் மென்மையில் நான் நெகிழ்ந்து கொண்டிருந்தேன். அந்த இனிய சுகந்த மணம் என்னை அடித்தது.
‘படிக்கறதுக்கு முன்னாடி புள்ளையார் சுழி போட்டுக்கறேன்‘ என்று சொல்லி சட்டென்று என் கன்னத்தை விலக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்- மென்மையாக. அவள் என்னை இறுக்கிக் கொண்டாள். அலைகள் ஓசையிட்டுக் கொண்டிருந்தன. இடது கையால் கடிதத்தைப் பிடித்துக்கொண்டு, வலது கையால் அவளின் கன்னத்தை மெதுவாக வருடி படிக்கத் தொடங்கினேன்.
சட்டென்று கண்கள் மங்கி, பார்வை சிறிதாகி, எவ்வளவோ விழித்துப் பார்த்தும், இருள் சூழ்ந்து அடைத்துக்கொள்ள என்னால் எதையுமே பார்க்கமுடியவில்லை. வெளிச்சப் பொட்டு கூட இல்லா ஒரு மாபெரும் சூன்யத்தில் அந்தரத்தில் இருக்கும் உணர்வில் உடல் நடுங்க நான் கண்களை மூடிக்கொண்டேன்.
'பிடிச்சுக்கங்க சிஸ்டர் துள்றாரு.. இன்னும் மயக்கம் ஃபுல்லா தெளியல போல..'
எனக்கு கண்விழிக்க பயமாக இருந்தது. நிஜம் நிழல் பிரித்தறிய கடினப் பிரயாசைப் பட்டு அலையோசைக்கும் ஆஸ்பத்திரி நெடிக்கும் இடையே அல்லாடிக் கொண்டிருந்தேன்.
'நிலா.. நிலா..'
'யாருங்க காமாட்சி நிலா.. யாராவது வந்துருக்காங்களா?'
‘இல்லைங்க டாக்டர்... யார்னு தெர்ல.. இந்த ஆட்டோ டிரைவர்தான் கொண்டுவந்தாரு’
'நம்ம ரெகுலர் கஷ்டமருங்க டாக்டரு சார்'
கண்ணிமைகளுக்குள் வெளிச்சம் பரவ லேசாகத் திறந்து பார்த்ததில் காமாட்சி சிஸ்டர் என் கையைப் படுக்கையில் அழுத்திக்கொண்டிருக்க, டாக்டராகப்பட்ட அந்த வழுக்கை நபர் என் புஜத்தில் ஊசியேற்றிக் கொண்டிருந்தார்.
ஜன்னலில் இருந்த குரங்கைக் காணாமல் அதுவரை என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அந்த நபர் சட்டென்று விலகி மறைந்தான்.
**
தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
'SUBA'(SureshBala) voda ezhuthu nadai maathiri irukku..Unga perum 'su'-'pa' thaane..
//'SUBA'(SureshBala) voda ezhuthu nadai maathiri irukku//
possible. முதல் கதையல்லவா? நான் படிச்ச எழுத்தாளர்களுடைய தாக்கம் கட்டாயம் இருக்கும். இன்னும் பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், சுஜாதான்னு வந்தாலும் வருவாங்க :)
நன்றி.
Post a Comment