அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Tuesday, December 13, 2005
* அந்தம் * # 4
* அந்தம் * # 4
சட்டென்று எல்லாம் வடிந்தது போன்று இருந்தது. ராகவன் நான் கேட்க விரும்பாத பெயர். பார்க்க விரும்பாத நபர். அப்படி ஒருவர் பிறக்காமலேயோ அல்லது பிறந்திருந்தாலும் நிலாவைப் பார்க்காமலேயே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்கவைக்கும் ஒரு ஆள்.
நான் மூடியிருந்த லிஃப்டில் சிலையாய் நின்றிருந்தேன். சற்று முட்டாள்தனமாக உணர்ந்தேன். மறுபடியும் மேலேறி ஆளில்லா அலுவலகத்தில் காவலாளியின் வணக்கத்திற்குத் தலையசைத்து இருக்கையில் அமர்ந்ததும் தனிமை என்னை ஆக்ரமித்துக்கொண்டது. மடிக்கணினியில் இயற்கை ஸ்கிரீன் சேவர் காட்சிகளை மாற்றிக் கொண்டிருக்க, தலை கவிழ்ந்து கண்களை மூடிக்கொள்ள நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.
பேக்மேன் விளையாட்டின் வழித்தடம் போன்ற மதுரையின் சதுரத் தெருக்களின் வழக்கமான காலை இரைச்சல் போக்குவரத்தில் ஊடாடி அலுவலகம் வந்தடைந்து குமாருக்கு காலை வணக்கம் சொல்லிவிட்டு இருக்கையில் அமரும் முன் குமார் விளித்தார். குமார் என் பாஸ்.
‘என்ன குமார்?’
பேப்பர் கொத்து ஒன்றை என்னிடம் நீட்டி ‘சிவி பாரு. இந்த கேண்டிடேட்டை இண்டர்வியூ பண்ணு!’.
‘யார் பாஸ். இது?’
‘சொனாட்டா ஹைதராபாத்துல ஸ்காலா சப்போர்ட்ல இருக்கா. நல்ல கேண்டிடேட்னு கெளதம் சொன்னான். பாரேன். சரிவரும்னா எடுத்துரலாம்’.
‘பாஸ். ஒண்ணும் பிரிபேர் பண்ணல. என்ன கேக்கறது. நீங்களே பாத்துருங்களேன்’.
‘முடியாதுடா. எனக்கு பெரியப்பாவுடன் மீட்டிங் இருக்கு. அலோக் வந்துட்டானா? அவனையும் சேத்துக்கோ.. ரெண்டு பேரும் பாருங்க. பாத்துடா.. பொண்ணு’ என்று நமுட்டுச் சிரிப்புடன் பெரியப்பாவின் மெகா கேபினுக்குள் செல்ல நான் அலோக்கைத் தேடினேன். குமாரால் பெரியப்பா என்றழைக்கப்பட்டது எங்கள் நிறுவனத்தின் சிஇஓ. ஜார்ஜ். பூர்வீகம் கொல்லம். மதுரையில் இருபது வருஷங்கள் டி.வி.எஸ்ஸில் பல பெரும் பதவிகளை வகித்துவிட்டு எங்கள் கம்பெனிக்கு போன வருடம் பொறுப்பெடுத்துக் கொண்டார். ‘அவிய்ங்க வாராய்ங்க’ என்று மதுரைத் தமிழ் சாதாரணமாகப் பேசுவார். அவ்வப்போது சொல்லும் ‘சிம்Bளி’யை வைத்துத்தான் அவர் மலையாளி என்று கண்டுகொள்ள முடியும்.
அலோக் வந்து ‘மார்னிங் மச்சி’ என்றான். அவன் கற்றுக்கொண்ட சில தமிழ் வார்த்தைகளில் மச்சியும் ஒன்று.
‘மார்னிங்டா... வா ஒரு இண்டர்வ்யூ பண்ணனும்’ என்றதும் மறு பேச்சில்லாமல் வந்தவனைப் பார்த்து நான் ஆச்சரியப் படவில்லை. எங்கள் ஐ.டி. டீமின் அஸ்திவாரம், தூண் எல்லாம் அவன் தான். தகவல் தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருப்பவன். அமெரிக்கத் தாய் கம்பெனியிலிருந்து வந்திருந்த ஆடிட்டன் (‘அவனுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு!’- அலோக்) சர்வர் ரூமில் புத்தர் போல் அமர்ந்திருந்த மெகா காம்பாக் எண்ட்டி சர்வரைப் பார்த்ததும், முன்னே ஒரே சமயத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த ப்ளக்-அண்ட்-ப்ளே ஹார்ட் டிஸ்க்குகளை கவனித்து ‘நிசமாவே ரெய்ட்ல போட்ருக்கீங்களா?’ என அலோக்கை வினவ, அலோக் சட்டென்று ஒரு டிஸ்கை உருவி அமெரிக்கன் கண்முன்னே நீட்டிவிட்டு மறுபடியும் செருகினான்.
‘மகா பாவி.. இப்படியா டக்குன்னு உருவறது. க்ராஷாயித் தொலைச்சிருந்தா என்ன ஆயிருக்கும்? எனக்கு ஒரு நிமிஷம் பல்ஸ் நிண்ட்ருச்சி.. மைக்ரோசாப்ட் வேற’ என்றார் குமார், அமெரிக்கன் போனதும்.
‘ஒண்ணும் ஆயிருக்காது பாஸ். எல்லாம் பர்ஃபெக்டா வச்சுருக்கம்ல’ என்றான் அலோக் அலட்டிக் கொள்ளாமல்.
நாங்களெல்லாம் கன்சல்டிங் பெயரில் பவர்பாயிண்ட்டில் மேம்போக்காக ஜல்லியடித்துக் கொண்டிருக்க அலோக் நிஜமாகவே தகவல் தொழில் நுட்ப மென்பொருள் வன்பொருள் இரண்டிலும் விற்பன்னன். விரல் சொடுக்கும் நேரத்தில் மடிக்கணிணியிலிருந்து பெரிய சர்வர்கள் வரை பிரித்துப் போட்டு அதன் உள் உதிரிகளை ஆராய்ந்து பழுது கண்டுபிடித்து விடுவான். எங்கள் அனைத்துக் கிளைகளுக்கும் கார்ப்பரேட் ஹெல்ப்டெஸ்க்கின் தலைவன் அவன்.
அங்கமாலியிலிருந்து ராஜன் தொலைபேசி வழியாக ‘நெட்வொர்க் எர்ரர் அக்கர்டுன்னு வருதுடா.. வண்டி வெயிட்டிங். இன்வாய்ஸ் என்ட்ரி பண்ணியாச்சு. பிரிண்ட் எடுக்க முடியலை’ என்று புலம்ப இங்கே அலோக் கூலாக சாட்டிலைட் லிங்க்கை சோதித்துவிட்டு ‘ராஜன்.. ஒண்ணுமில்லை. டாமா தொங்கிருச்சுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்விட்ச்சை அணைச்சுட்டுப் போடேன். சரியாயிரும். மதுரைக்கு ஏதாவது வண்டி வந்தா ரெண்டு கிலோ நேந்திரம் சிப்ஸ் அனுப்பு’ என்பான்.
நாங்கள் இருவரும் மீட்டிங் ரூமிற்குள் நுழைய குமார் கொடுத்த சிவியில் பெயரைப் பார்த்தேன். ஆர்.நிலா என்று போட்டிருந்து, இருந்த சிறிய புகைப்படத்தில் நிலா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அறையுள் சென்று அமர்ந்து பரஸ்பரம் அறிமுகித்துக் கொண்டோம். கைகுலுக்கும்போது அவளது விரல்கள் லேசாக நடுங்கியதை உணர்ந்தேன். நான் சிவியைப் படித்து முடித்து, அலோக்கின் கையில் கொடுத்துவிட்டு முதன்முறையாக நிலாவைப் பார்க்கையில் எனக்குள் எங்கோ ஒரு மின்னலடித்ததை உணர்ந்தேன்.
எங்கள் நிறுவனத்தையும் வேலையின் தன்மையைப் பற்றியும் சுருக்கமாக விளக்கிவிட்டு ‘உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் நிலா.. நிலா.. தமிழா நீங்கள்?’‘ஆமாம். ரெண்டு வருஷமா ஹைதராபாத்தில சொனாட்டால வொர்க் பண்றேன். பேரண்ட்ஸ் இங்கதான் கரும்பட்டில இருக்காங்க’. இவ்வளவு இனிய குரல் கொண்ட பெண்ணை முதன்முதலில் சந்திக்கிறேன்.
‘ஓ அப்படியா! அப்போ சுத்தத் தமிழச்சின்னு சொல்லுங்க. அதுவும் மதுரைத் தமிழச்சி’
நிலா லேசாகப் புன்னகைத்து ‘படிச்சதெல்லாம் கான்வென்ட்ல. ஃபுல்லா இங்கிலீஷ் மீடியம். தமிழ் எழுத படிக்கத் தெரியாது. பேச மட்டும் செய்வேன்’.
எனக்கென்னவோ அவள் பேசுவது புல்லாங்குழல் இசையில் குயில் பாடுவதைப் போலக் கேட்டது.
அலோக் ‘லெட்ஸ் டாக் ன் இங்கிலீஷ் ப்ளீஸ்’ என்று சொல்லிவிட்டு கேள்விகள் கேட்கத் துவங்க, நான் அமைதியாக நிலா முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் முக அபிநயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. சீரான ஆங்கிலத்தில் உரையாடல் நிகழ, கண்ணாடிச் சுவர்களை மீறிய மதுரையின் சந்தடிப் போக்குவரத்து இரைச்சல்கள் லேசாகக் கேட்டன. நேர்காணல்களில் நான் எப்போதாவதுதான் பேசுவேன். நேர்காணப் படுபவர்களை சுதந்திரமாகப் பேசவிட்டு கவனிப்பதில் நேரம் செலவிடுவேன். இன்றும் அப்படியே. அவ்வப்போது அலோக் கேள்விகள் கேட்டான். ஒரு மணி நேரம் கழித்து பின்னர் முடிவைத் தெரிவிக்கிறோம் என்று சொல்லிவிட்டு கைகுலுக்கி விடைபெற்றதில் நான் முழுவதுமாகத் தொலைந்து போனது எனக்கே தெரிந்தது. நிறைய பெண்களை நேர்காணல் செய்திருந்தாலும், சந்தித்திருந்தாலும் எனக்கு இது நிகழ்ந்ததில்லை. இந்த அனுபவம் புதியது. அவளை மறுபடியும் உடனே பார்க்க விரும்பினேன்.
குமார் ஜார்ஜிடமிருந்து விடுபட்டு வந்து ‘என்ன ஆச்சு.. பாத்தியா?’ என வினவ, அலோக் மத்தியமாகப் புன்னகைத்து ‘ஆவரேஜ்’ என்றான்.
‘எதுல?’
‘ஷி ஸ் நாட் அன் ஐடி ப்ரொபஷனல். ஸ்காலால ட்ரெயினிங் எடுத்துட்டு ஹெல்ப்டெஸ்க் சப்போர்ட் கொடுத்துட்டுருக்கா. டிபேஸும் பாக்ஸ்ப்ரோவும் கொஞ்சம் அக்சஸ்ஸூம் தெரியும். ஆனா இதெல்லாம் நம் சோலிக்கு ஆவாது’
‘தென்?’
‘எக்ஸலெண்ட் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்’
‘தென்?’
‘வெரி பாஸிடிவ் அட்டிட்டியூட்’
‘குட்.. தென்?’
‘அம்பட்டுதேன்’
‘வாட்?’
‘ஐ ஸெட் தட்ஸ் ஆல்’
‘தமிழ விட்டுர்றா அலோக்’ குமார் என்னைப் பார்த்து ‘நீ என்னடா சொல்றே?’ என்றார்.
‘அவன் பொண்ணு மூஞ்சிய பாத்துக்கிட்டு இருந்தான்’ என்றான் அலோக்.
குமார் ‘சரி நீ போடா.. ராஜன் ரெண்டு வாட்டி ஃபோன் பண்ணிட்டான். எதுக்கும் அங்கமாலிக்கு ஒரு ட்ரிப் அடிச்சுட்டு வந்துடு. அடிக்கடி லிங்க் ப்ராப்ளம் வருது’ எனவும் அலோக் அகன்றான்.
நான் உணர்ச்சியற்று முகத்தை வைத்துக்கொள்ளச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன்.
‘குமார். நீங்க எந்தமாதிரி ஆள எதிர் பார்க்கிறீங்க?’
‘நெக்ஸ்ட் மன்த் கேரளால இன்னும் ரெண்டு ப்ளாண்ட் டேக் ஓவர் பண்றோம். ஜார்ஜ் மொத நாள்ல இருந்து ஸிஸ்டம் ரெடியாயிருக்கணும்னு சொல்றாரு. நீ ஒண்டியா எப்படி ரோலவுட் பண்ணுவே?. உனக்கு சப்போர்ட் வேணும். இந்த கேண்டிடேட்.. பேரு என்ன.. ஆங்.. நிலா.. நல்லா இருந்தா எடுத்துக்கலாம்.’
‘குமார். அலோக் சொன்ன மாதிரி அவங்க டெக்கியெல்லாம் இல்ல. ஆனா காமர்ஸ் பேக்ரவுண்ட். எக்ஸலண்ட் ஃபங்ஷனல் நாலட்ஜ்; கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்; அட்டிட்டியூட்; வில்லிங் டு லேர்ன் அண்ட் வில்லிங் டு ட்ராவல். எடுக்கலாமா வேணாமாங்கறத நீங்கதான் முடிவு செய்யணும்’
‘லிஸன்.. என்னைப் பொருத்தவரை மொத்த தகுதியையும் ரெண்டா பிரிச்சுப் பார்ப்பேன். ஒண்ணு கத்துகிட்டு சேர்த்துகிட்ட ஸ்கில்ஸ்; ரெண்டாவது கூடப்பொறந்த குணங்கள். மொதலாவது எப்ப வேணா நடக்கும். அதுல முன்ன பின்ன இருந்தா ப்ராப்ளம் இல்ல. ட்ரெயினிங் கியினிங் குடுத்து சரி பண்ணிரலாம். ஆனா ரெண்டாவதுல காம்ப்ரமைஸ் பண்ணவே கூடாது. எல்லா ஸ்கில்ஸ்ஸூம் இருந்து அட்டிட்டியூட் சரியில்லைன்னா வேலைக்காவாது. இப்போ சொல்லு. எடுக்கலாமா?’.
நான் அமைதி காத்தேன்.
‘ஐ வாண்ட் டு மீட் ஹர். ஆஸ்க் ஹர் டு ஸீ மி டுமாரோ மார்னிங்’ என்று சொல்லிக் கையசைக்க நான் வெளிவந்து என் இருக்கையில் அமர்ந்து யோசனையிலாழ்ந்தேன். நிலாவிடம் மறுபடியும் பேசப் போகிறேன்; அவள் குரலைக் கேட்கப் போகிறேன் என்ற நினைப்பே என்னை சிலிர்க்க வைத்தது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நிலாவின் சிவியிலிருந்த பிபிஎல் மொபைல் நம்பரை டயலியதில் மறுமுனையில் குயில் ‘ஹலோ சொல்லுங்க சார். அதுக்குள்ள ஒங்க கால் எதிர்பாக்கல’ என்றது.
‘என் பாஸ் குமார் உங்களைச் சந்திக்கணுமாம். நாளைக்குக் காலைல ஒம்பது மணிக்கு ஆபிஸ்க்கு வர முடியுமா?’.
‘கட்டாயம் வரேன் சார்’.
‘தேங்க்யூ. ஸீ யூ டுமாரோ’
‘தேங்க்யூ சார். பை’
இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் நான் ரிஸீவரை வைக்காமல் சில வினாடிகள் அசையாதிருந்தேன். நிலா.. நிலா.. நாளை இப்போதே வராதா என்று ஏங்கினேன். மறுநாள் காலை அலுவலகத்தில் நுழைந்த போது ரிஷப்ஷனில் நிலா என்னைப் பார்க்க புன்னகைகளைப் பரிமாறிக் கொண்டோம். குமார் வந்து அவளை அழைத்துச் சென்று பதினைந்து நிமிடங்கள் கழித்து அதே புன்னகையுடன் வெளியே வந்து ‘தாங்க்ஸ்’ சொல்லி விடை பெற்றுச் சென்றாள்.
குமார் என்னைப் பார்த்து புன்னகைக்காமல் ‘கால் அலோக் அண்ட் கம் டு மை ரூம்’ என்றார்.
***
தொடரும்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சுந்தர்
நடை ரொம்ப நல்லா இருக்கு.
கதைப்பின்னல் இன்னும் கொஞ்சம் தெளிவா இருந்திருக்கலாம்னு தோணுது.
நிலா! நன்றி.
முதல் கதை என்பதால் நிறைய சொதப்பியிருப்பேன். இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ. முயற்சி செய்கிறேன்.
சுந்தர்.
Post a Comment