Tuesday, December 13, 2005

* டூரிங் டாக்கீஸ் *

* டூரிங் டாக்கீஸ் *

வத்ராப்பின் ஆஸ்தான ராமகிருஷ்ணா தியேட்டரில் என் தாத்தா கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் டிக்கெட் கொடுக்கும் பணியில் இருந்தார்! தாத்தாவின் அப்பா (முத்தாத்தா) பெரிய நிலச்சுவான்தாராக இருந்தவர். அவர் சேர்த்து வைத்ததை எல்லாம் என் தாத்தா இளமையில், தன் தயாள குணத்தால், தொலைத்துவிட்டு, தனது ஆறு பெண் குழந்தைகளுடனும், இரு பையன்களுடனும், மனைவியுடனும், முத்தாத்தா காலத்தில் மாட்டுக் கொட்டகையாக இருந்த இடத்தில் இருந்த மாடுகளை விற்றுவிட்டுக் குடியேறினார்.

அங்கேதான் நான் பிறந்தேன். சாணத் தண்ணீரில் செவ்வனே கழுவப்பட்ட மண்தரையுடன் கூரை வேய்ந்த 'வீடு' அது. மண் சுவர்களில் சுண்ணம் அடித்திருக்கும். கூரை வீட்டை நினைக்கையில் எகிப்து பிரமிடுகளின் வடிவம் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு வேளை எகிப்தியர்களுக்குத் தெரிந்திருந்த அதே நுட்பம் நம்மக்களுக்கும் தெரிந்திருந்து அதனடிப்படையில்தான் கூரையையும், ஓலையையும் குளிர் சூழ்நிலைக்காக முக்கோணமாக வேய்ந்தார்களா?

செல்வந்தருக்கு மகனாகப் பிறந்ததால், என் தாத்தாவை (அவர் பெயர்தான் எனக்கு) ஊரில் எல்லோரும் 'ராசா சாமி' என்று அழைத்தார்கள். கூரை வீட்டுக்குக் குடிபெயர்ந்து, டூரிங் கொட்டாயில் டிக்கெட் கொடுத்தாலும், அவர் ராசா சாமி என்றே அழைக்கப் பட்டார். நடுத்தெருவில் (தெரு பெயர்!) கடைசியில் இருந்த பெருமாள் கோயிலின் பக்கவாட்டிலிருக்கும் சொர்க்கவாசலின் நேர் எதிரே இருந்தது எங்கள் கூரை வீட்டு வாசல். பெருமாள் சொர்க்கவாசல் புறப்பாடு நடக்கும் சமயங்களில் எங்கள் வீட்டுத் திண்ணையில் இடம் பிடிக்க லேசான அடிதடி நடக்கும். ஒவ்வொரு முறையும் திவ்ய தரிசனம்! ஊரின் வடமேற்கு மூலையில் ராமகிருஷ்ணா கொட்டாய் இருந்தது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் மாட்னி ஆட்டம் உண்டு. மற்ற நாட்களில் மாலை மற்றும் இரவுக் காட்சிகள் நடக்கும்.

தாத்தா வீட்டிலிருந்து மாலை ஐந்தரை மணிக்கு வேலைக்குக் கிளம்பி விடுவார். அவர் சென்ற அரைமணியில், வடமேற்கு திசையிலிருந்து 'விநாயகனே வினை தீர்ப்பவனே' என்ற பாடல் காற்றில் மிதந்து ஊரை நிரப்பும். பாடல் தொடங்கும் முன்பும், இரு பாடல்களுக்கு இடையே உள்ள இடைவெளியிலும் 'வொய்ங்...' என்று காதைப் பிளக்கும் இரைச்சல் ஒலிக்கும். Noise reducer கண்டுபிடிக்கப்படாத காலம். அதிலிருந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலிருந்து பாடல்கள் ஒரு மணிநேரம் ஒலிபரப்பப்படும். 'தரை மேல் பிறக்க வைத்தான்' ஆரம்பித்தால் அதிலிருந்து ஐந்தாவது நிமிடம் சிலைடு போடுவார்கள் என்று அர்த்தம். அதுவரை சினிமா போகும் உத்தேசத்துடன் தெருவில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் மக்கள் சட்டென்று தியேட்டர் திசை நோக்கி நடக்கத்தொடங்கி; ஐந்தாவது நிமிடத்தில் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே இருப்பார்கள்.

தாத்தா ஆண்கள் கவுண்ட்டரில் டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். டிக்கெட் வாங்கிவிட்டு கவுண்ட்டர் வரிசையிலிருந்து வெளியே வரும் வாயிலிலேயே மணி என்பவர் நின்றுகொண்டு, டிக்கெட்டில் பாதியைக் கிழித்துக்கொண்டு மீதியை கையில் திணித்து விடுவிப்பார். நான் வத்ராப்பில் இருந்த வரை எங்கள் வீட்டில் யாரும் டிக்கெட் எடுத்ததே இல்லை.

ரஜினி படங்கள் வரும் சமயங்களில் வீட்டிலிருந்து நைசாக நழுவி ஆறரை மணிவாக்கில் கொட்டாய்க்குச் சென்று கவுண்ட்டர் பொந்து வழியாக எட்டிப் பார்த்து 'தாத்தா.. நான்தான்' என்றால், அவர் முகம் மலர்ந்து உடனே 'மணீஈஈஈஈஈ' என்று குரல் கொடுப்பார். மணி அந்த மூலையிலிருந்து 'ஓவ்....' என்று பதில் குரல் கொடுக்க, தாத்தா 'நம்ம பேரன் வரான். உள்ள விடு..' என்று கட்டளையிடுவார். நான் பெருமையுடன் ஆட்களைக் கடந்து மணியின் முகத்தைப் பார்க்காமல் அவரையும் கடந்து கவுண்ட்டர் அறைக்குள் புகுந்து தாத்தாவின் அருகில் உட்கார்ந்து கொள்வேன். கவுண்ட்டர் மேசையின் மேல் ஒருபக்கம் சில்லறைக் காசுகள் சிதறிக் கிடக்கும். ஒரு ரூபாய் காசுகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருப்பார். பத்து பத்தாக. மேசை டிராயர் லேசாகத் திறந்திருக்க உள்ளே கசங்சிய ரூபாய் நோட்டுக்களும் ஆங்காங்கே சிதறியிருக்கும். தாத்தா மூன்று நிறங்களில் டிக்கெட் கட்டுக்களை பரப்பி வைத்திருப்பார். சேர் டிக்கெட். பெஞ்ச் டிக்கெட். தரை டிக்கெட். ஓரத்தில் சிறிய காலி குங்கும டப்பாவில் ஸ்பான்ச் துண்டு நனைத்து வைக்கப் பட்டிருக்கும். தாத்தா லாவகமாக சில்லறை வாங்கி கையில் பரப்பி ஒரே பார்வையில் எண்ணி மேசையில் வைத்துவிட்டு, ஆள்காட்டி விரலால் பஞ்சைத் தொட்டு, விருட்டென்று டிக்கெட் கிழித்து, பொந்தில் நீட்டியிருக்கும் கைகளில் திணிக்க, கை இழுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த கை நீளும். விதவிதமான கைகள். விதவிதமான நிறங்களில். நான் அமைதியாக தாத்தாவின் கை ஜாலங்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

மணி தரை டிக்கெட் காரர்களை மட்டும் டிக்கெட் கிழித்து பாதியைத் தந்து அனுப்புவார். சேர், மற்றும் பெஞ்ச் டிக்கெட் காரர்களை டிக்கெட்டை மட்டும் பார்த்துவிட்டு விடுவார். அதற்கு சேர் செக்ஷன் வாசலிலும், பெஞ்ச் செக்ஷன் வாசலிலும் இரு ஆட்கள் நின்றிருப்பார்கள். மணியே எல்லா டிக்கெட்டுக்களையும் கிழித்தால் யார் எந்த இடத்தில் உட்கார்வார்கள் என்று தெரியாதல்லவா? அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. சேர் ஒண்ணரை ரூபாய். பெஞ்ச் ஒரு ரூபாய். தரை டிக்கெட் 75 காசுகள் (1980-83 களில்!).

கவுண்ட்டரின் உள்ளே எரியும் மஞ்சள் விளக்கு வினாடி நேரம் மங்கி விட்டு மறுபடி எரிய, படம் போட புரொஜக்டரை ஸ்டார்ட் செய்து விட்டார்கள் என்று தெரியும். தாத்தா 'நீ உள்ள போ' என்று சொல்லிவிட்டு மேசையின் மேலிருந்த சில்லறையிலிருந்து 25 காசு நாணயத்தை எடுத்து என்னிடம் கொடுத்து அனுப்புவார். இடைவேளையில் ஏதாவது வாங்கித் தின்ன.

அரங்கத்தில் நுழைய கதவெல்லாம் கிடையாது. நாங்கள் யாரும் டிக்கெட் எடுக்காவிட்டாலும், கட்டாயமாக தரை டிக்கெட் பகுதியில் தான் உட்கார வேண்டும் என்பது தாத்தாவின் கட்டளை. நாங்கள் அதை என்றும் மீறியதில்லை. தரை டிக்கெட்டில் உள்ளே நுழைந்து தரையில் அமர திரையில் சிலைடுகள் ஓடிக் கொண்டிருக்கும். அமிர்தாஞ்சன், சையது பீடி, மற்றும் பலப்பல. என்ன சிலைடு என்று பார்க்காமல், எத்தனை சிலைடு என்று எண்ணிக் கொண்டிருப்பேன். சில சிலைடுகள் (செட்டியாருக்கு வேண்டப்பட்ட கடையாக இருந்தால்) திரும்ப வரும்.

அரங்கினுள் நடுநாயகமாக ஒரு மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருக்க, ஆங்காங்கே நீளக் குழாய்கள் உத்திரத்திலிருந்து தொங்க, மின் விசிறிகள் ஒட்டடையுடனும் தூசியுடனும் சோகையாக ஓடிக் கொண்டிருக்கும். குருவிகள் அங்குமிங்கும் பறந்துகொண்டிருக்க, மின் விசிறியில் அடிபட்டு விடப் போகிறதே என்று கவலையாக இருக்கும்.

சிலைடுகள் முடிந்து, தமிழக அரசின் செய்தித்துறையின் செய்திச் சுருள் ஓடி முடியும் வரை மஞ்சள் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். செய்திப் படத்தின் பின்னணியில் ஒலிக்கும்; அந்த ஆணின் குரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மென்மையான குரல்! இதேபோல திருச்சி விவிதபாரதியில் அனைத்து விளம்பரங்களுக்கும் ஒரு ஆணின் குரல் கம்பீரமாக ஒலிக்கும். அந்தக் குரலும் நினைவில் நன்கு பதிந்திருக்கிறது. இப்போதும் வசந்த் அண்ட் கோவிற்கு குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

சிறு வியாபாரிகள் ஆங்காங்கே ஒரு கூடைத் தட்டில் பலவித தின்பண்டங்கள் ஏந்தி குறுக்கேயும் நெடுக்கேயும் நடந்து விற்பனை செய்வர். பெரும்பாலோர் வாயில் பீடியுடன் கைகளைத் தலைக்குப் பின் கட்டிக்கொண்டு படுத்துக் கொண்டிருப்பர். மொத்தம் மூன்று இடைவேளைகள் (ஒரு புரொஜக்டர் என்பதால்). மெயின்(?) இடைவேளைக்கு முன்பு ஒரு சிறிய இடைவேளை. அப்புறம் ஒரு சிறிய இடைவேளை. தரை டிக்கெட்டில் ஆண்கள் தனியேயும் பெண்கள் தனியேயும் அமர்ந்திருக்க நடுவில் இரண்டடிச் சுவர் ஒன்று திரையிலிருந்து, தரை டிக்கெட் முடியும் வரை போடப் பட்டிருக்கும். இந்தப் பிரிவினை பெஞ்ச் மற்றும் சேர்ப் பகுதிகளுக்குக் கிடையாது.

விளக்கு அணைந்து படம் துவங்கியதும் இருளில் சுவருக்கு இப்புறமும் உட்கார்ந்திருக்கும் ஆண்கள் அப்புறம் உட்கார்ந்திருக்கும் பெண்களிடம் சில்மிஷங்கள் செய்வார்கள் என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். அந்தக் கால கட்டங்களில் வந்த திரைப்படங்களில் சிவாஜி படமாகட்டும், ரஜினி படமாகட்டும் ஜெயமாலினியின் நடனம் கட்டாயம் உண்டு (இப்போது மும்தாஜ்!). சாஸ்திரி வாத்தியார் பையன் அம்பி என் நண்பன். சினிமாவே பார்த்ததில்லை அவன். நானும் அவனும் ஏதோ ஒரு படத்திற்குச் சேர்ந்து போனோம். நடுவில் ஜெயமாலினி நடனம் வந்த போது, அம்பி சட்டென்று முகத்தை கைகளால் மூடிக் கொண்டான். நான் அவனை வினோதமாகப் பார்த்தேன். விரலிடுக்களின் வழியாகப் பார்க்கிறானோ என்று சந்தேகமாக இருந்தது. இடைவேளை விட்டதும் எழுந்து என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டான். இடைவேளை சமயத்தில் தியேட்டரின் மெயின் கதவுகளுக்கு நடுவே இருக்கும் ஒரு சிறிய கதவு மாத்திரம் திறந்திருக்கும். வீட்டுக்கு போக நினைப்பவர்கள் போய்க் கொள்ளலாம்.

இடைவேளையின் போது 10 பைசாவிற்கு முறுக்கு வாங்கித் தின்றுவிட்டு, எங்கும் நகராமல் அமர்ந்திருப்பேன். வெளியில் இப்புறம் ஆண்கள் நின்று கொண்டேயும், அப்புறம் பெண்கள் உட்கார்ந்தும் சிறுநீர் கழிப்பார்கள். ஊருக்கு வெளியே இருந்த தியேட்டராததால், வயல்வெளிகளிலிருந்து காற்று சில்லென்று அடிக்கும். இடைவேளையில் மக்கள் வாங்கித் தின்ற தின்பண்டங்களின் மிச்சங்களை எறிந்திருக்க, ஓரிரு நாய்கள் அவற்றைத் தின்று கொண்டிருக்கும். நான் முறுக்கு தின்னும் போது ஒரு நாய் என்னையே ஆவலாகப் பார்த்துக்கொண்டிருந்தது. மனது கேட்காமல் முறுக்கின் கடைசிச்சுற்றிலிருந்து ஒரு பகுதியை உடைத்து நீட்ட கவ்விக்கொண்டு ஓடிப் போனது.

தினமும் இரவு பத்து மணிக்கு ஒருமுறை மின்சாரம் போய் திரும்ப வரும் ஓரிரு நிமிடங்களில். திரையில் படம் மங்கிக் கரைய மொத்த தியேட்டரும் இருளில் மூழ்கும். நான் அசையாமல் விட்டத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். சிலர் தயாராக கையில் டார்ச் லைட்டுடன் தான் படம் பார்க்க வருவார்கள். மின்சாரம் போனதும். ஆங்காங்கே டார்ச்சின் ஒளிக் கீற்றுக்கள் பாய்ந்து கொண்டு விட்டத்தில் ஒளி வட்டங்கள் தெரியும். ஒளிக்கீற்றுக்கள் ஊடே நிறைய பூச்சிகள் பறப்பதைக் காணலாம்.

தாத்தா இடைவேளைக்குள் டிக்கெட், வரவு சரிபார்த்து செட்டியாரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டுக்குச் சென்று விடுவார். படம் முடிந்து கும்பல் கும்பலாக டார்ச் ஒளியில் அவரவர் தெருவை நோக்கி நடக்க, தியேட்டரிலி ருந்து பாடல் காற்றில் பரவும். இரவுக் காட்சிக்காக.

நான் வீடு திரும்பும் போது தாத்தா சொர்க்க வாசல் படிகளில் விசிறியுடன் அமர்ந்திருப்பார், ஒரு தலையணையுடன். என்னைக் கண்டதும் 'படம் நல்லா இருந்துச்சா' என்பார். நான் தலையை ஆட்ட 'போய் சாப்பிட்டு வா' என்பார். நான் சத்தம் போடாமல் வரிசையாகப் படுத்துக்கொண்டிருந்தவர்களை மிதிக்காமல் தாண்டிச் சென்று அம்மாவின் காதில் 'அம்மா' என மெதுவாக அழைக்க, அம்மா தூங்காமலிருப்பார்கள். சட்டென்று எழுந்து மங்கலாக வைத்திருந்த ஹரிக்கேன் விளக்கின் சாவியைத் திருகி பிரகாசமாக எரியச் செய்து, தட்டிட்டுச் சோறிடுவார்கள். ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து தாத்தாவின் அருகில் அமர்வேன். தலையணையை மேல்படி ஓரத்தில் வைத்துவிட்டு துண்டு விரித்திருப்பார். நான் படுத்துக் கொள்ள லேசாக தட்டிக் கொடுத்துவிட்டு, 'தூங்கு..என்ன?' என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவார். இரவுக் காட்சிக்கு டிக்கெட் கொடுக்க.

தாத்தாவிற்கு ஐம்பது ரூபாய் சம்பளம். தினமும் நாலணா கொடுத்து, நடுத்தெருவிலிருந்த ஒரே கடையில், கடலை மிட்டாய், அப்பளப்பூ, கல்கோனா அல்லது எள் மிட்டாய் வாங்கிக் கொள்ளச் சொல்வார்.

மறுநாள் அம்பியை வகுப்பில் பார்த்தபோது, 'நான் பெரிய பாவம் செய்துட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது' என்றான். நான் அதற்கு முன்பு நிறைய படங்களில், குறிப்பாக விட்டலாச்சார்யா படங்களில் ஜெயமாலினியை பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனாலும் அம்பியை வருந்தச் செய்துவிட்ட குற்ற உணர்வு மறுநாள் முழுவதும் இருந்தது.

மனம் பழைய நினைவுகளில் மூழ்கிப் போய்விட்டது. மன்னிக்கவும். என் இளைய பருவத்தின் பெரும்பகுதியை என் தாத்தாவுடன்தான் கழித்தேன். முன்பே எழுதியிருந்த மாதிரி, எனக்குத் தெரிந்தவவை அனைத்தையும் (நீச்சலிலிருந்து..) அவர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார். வீட்டிலேயே அதிக காரம் சாப்பிடக் கூடியவர் அவர் மட்டும்தான். நிறைய புகையிலைப் போடுவார். பின்பு பற்கள் பெரும்பாலும் விழுந்துவிட்டதால் நிறுத்தி விட்டார். பக்கவாதம் வந்ததால் நடக்க முடியாமல் கடந்த ஐந்து வருடங்களாக உட்கார்ந்தே இருப்பார். 'நடக்க முடிலையே' என்று அவ்வப்போது என்னிடம் மட்டும் அழுவார். நான் சமாதானப் படுத்துவேன். அவரது 93 வது வயதிலும் கண்ணாடி அணியாமல் தினமலர் படித்துக்கொண்டிருந்தார். சென்ற ஜனவரியில் வருட விடுமுறையில் சென்றிருந்த போது முகம் மலர வரவேற்றார். பேசச் சிரமப் பட்டு வாய்குழறிய போதும், என்ன பேசினார் என்று அனுமானித்துக் கொண்டு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். அக்ஷராவும், அர்ப்பிதாவும் மடியில் அமர்ந்து கொண்டு விட, அவருக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. கழட்டி வைத்திருந்த சட்டைப் பையைத் துழாவி நாணயங்களை எடுத்து, குழந்தைகள் கையில் கொடுத்தார். 'கொள்ளுத் தாத்தா' என்று அவர்கள் அழைக்க ஆனந்தத்தில் அழுதார். அக்ஷரா 'என்ன தாத்தா ஒக்காந்துக்கிட்டே இருக்கீங்க.. ஏந்திரிங்க தாத்தா' என்று கையைப் பிடித்து இழுக்க 'முடிலம்மா' என்றார்.

என்னிடம் இருந்ததைப் போலவே கொள்ளுப் பேத்திகள் மீதும் அவருக்குக் கொள்ளைப் பிரியம்.

கடந்த சில மாதங்களாக எழுந்து அமர முடியாமல் படுக்கையிலேயே இருந்தார். சென்ற மாதம் 18 ம் தேதி, முக்கியமான அலுவலக கான்ஃபரன்ஸில் இருந்த போது அவர் இறந்த செய்தி வந்தது. நான் செயல் இழந்து, என் அலுவலக அறையில் நுழைந்து பூட்டிக் கொண்டு சில மணி நேரங்கள் அழுதேன். அவர் இறந்த துக்கத்தோடு, ஊருக்குச் செல்லமுடியவில்லையே என்ற துக்கமும் என்னை வருத்தியது. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப மறுக்கிறது மனம்.

அவர் சாகவே மாட்டார் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.

தாயகத்திலிருந்து தொலைவில் இருப்பதற்குக் கொடுக்கும் மிகப் பெரிய விலை இது. பணம் சம்பாதிக்க (மட்டும் இல்லாவிட்டாலும் அதற்காகவும் தானே?) வந்து பணத்தால் சம்பாதிக்க முடியாதவற்றை இழக்கிறோம் என்று நினைக்கும் போது துக்கம் நெஞ்சை அடைக்கிறது.

தாத்தா அவரை இறுதியில் பார்க்க வராததற்காக என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன். அவர் என் மனதில் என்றும் வாழ்வார்.

***
எழுதியது : 21-அக்-2002 இல்

நன்றி : மரத்தடி.காம்

19 comments:

Jayaprakash Sampath said...

படிச்சதுதான். இப்ப படிக்கிறப்ப இன்னும் என்னமோ ஆவுது.. இதுக்கெல்லாம் பின்னூட்டம் தந்து கட்டுப்படியாகாது. தனிப்பதிவுதான் :-)

துளசி கோபால் said...

ஆமாம் சுந்தர். முந்திப் படிச்சதா இருந்தாலும் இப்பப் படிக்கறப்பவும் மனசுக்குப் பாரமாப் போச்சு.

வெளிநாட்டிலே இருக்கறதோட விளைவு இதுதான், ஒரு நல்லது கெட்டதுக்குச் சட்னு ஓட முடியாது.

தாத்தா சாவு நல்ல கல்யாணச் சாவுதான். மனசைத் தேத்திக்குங்க.

Sundar Padmanaban said...

ப்ரகாஷ்ஜி,

//இப்ப படிக்கிறப்ப இன்னும் என்னமோ ஆவுது.. //

ஆமாம். எனக்கும்.

/தனிப்பதிவுதான்/

போட்டுத் தாக்குங்க!

துளசிக்கா நன்றி.

Jayaprakash Sampath said...

pOttacchu :-)

Unknown said...

//அவர் சாகவே மாட்டார் என்றே நம்பிக் கொண்டிருந்தேன்.//

தாத்தாக்கள் ஒரு பெரிய குரு மாதிரி. எல்லாருக்கும் இது போன்ற அனுபவம் இருந்திருக்கும். படிக்கும் போது என்னவோ இனம் புரியாத சோகம் வருகிறது.


//தாயகத்திலிருந்து தொலைவில் இருப்பதற்குக் கொடுக்கும் மிகப் பெரிய விலை இது. பணம் சம்பாதிக்க (மட்டும் இல்லாவிட்டாலும் அதற்காகவும் தானே?) வந்து பணத்தால் சம்பாதிக்க முடியாதவற்றை இழக்கிறோம் என்று நினைக்கும் போது துக்கம் நெஞ்சை அடைக்கிறது.//

ம்ம்..என்ன செய்வது...எல்லாத்திற்கும் ஒரு விலை உண்டு. நாம் பணத்திற்காக கொடுக்கும் விலை இதுவோ? குற்றவுணர்வெல்லம் வேண்டாம். துளசி சொன்னது போல் தாத்தாவின் மறைவு கல்யாணச்சாவுதான்.

SnackDragon said...

பிரகாசின் பதிவிலிருந்து இங்கு வந்தேன். இதுவும் அழகான பதிவு.

Venkat said...

சுந்தர் - அருமையான பதிவு. என்னையும் பிரகாஷ்தான் அனுப்பிவைச்சார்.

ம்ம்ம்.. போற போக்க பாத்தா நானும் கும்மோணத்துக் கொட்டாயப் பத்தி எளுதிடுவேன் போல இருக்கு.

Sundar Padmanaban said...

நன்றி கார்த்திக்ராம்ஸ்.

வெங்கட். யோசிக்காம எழுதிடுங்க. இதுக்கெல்லாம் நேரங்காலம் பாக்கக்கூடாது :)

ப்ரகாஷ்ஜி. உங்கள் தொடர்பதிவுக்கும் நன்றி.

மணியன் said...

மனம் மிகவும் கனத்துப் போச்சு. சின்னச் சின்ன விதயங்களையும் ஞாபகம் வைத்து எழுதியிருக்கிறீர்களே ! இப்போது அம்பி எப்படியிருக்கிறார் ? ஒரு ஆவல், உங்கள் அல்லது அம்பியின் தனிவாழ்க்கையில் நுழைவு என்றால் மன்னிக்க.

கானகம் said...

Since this happennes in every NRIs life every one feels like as if it happenned in thier life.. or they may wish it should not happen to them.. I believe this may be the reason for the replies or comments for this article.. Jeyakumar - Doha - Qatar

Sundar Padmanaban said...

நன்றி மணியன்.

அம்பி எனக்கு முன்பாகவே சென்னை கிளம்பிப் போயாகிவிட்டது. தொடர்புகள் இல்லை. சமீபத்தில் வத்திராயிருப்பைச் சேர்ந்த சிலர் அமெரிக்காவில் சில இடங்களில் வேலைசெய்துகொண்டிருப்பதை அறிந்தேன். யார் கண்டது அம்பியும் இங்கே எங்காவது பொட்டி தட்டிக் கொண்டிருக்கலாம். சாத்தியங்கள் அதிகம்.

வத்திராயிருப்பு நண்பர்களுடனான எனது தொடர்பு, நான் முசிறிக்குப் போனதும் அறுந்துவிட்டது. :(

நன்றி ஜெயக்குமார்.

b said...

அன்பின் சுந்தர்,

மணலைக் குவித்து வைத்து அதன்மேல் அமர்ந்து புளிச்சு புளிச்சுன்னு பக்கவாட்டில் எச்சில் துப்பி "திரிசூலம்" பார்த்த என் பழைய நினைவுகளைக் கிளறி இருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது ஆக்கம். வாழ்த்துக்கள்!

குமரன் (Kumaran) said...

சுந்தர், அம்பி கலசலிங்கத்தில் படித்தவரா? எனக்கு ஒரு அம்பியைத் தெரியும்; பெருமாள் கோவில் வாசலில் இருக்கும் கிணற்றின் வலப்பக்கம் (கோவிலை நோக்கி நின்றால் இடப்பக்கம்) அவருடைய வீடு. பெயர் நினைவுக்கு வரவில்லை; ஆனால் அவர் பெயரும் அவர் தந்தை பெயரும் ஒன்றே என்பது நினைவுக்கு வருகிறது.

Sundar Padmanaban said...

//பெருமாள் கோவில் வாசலில் இருக்கும் கிணற்றின் வலப்பக்கம் (கோவிலை நோக்கி நின்றால் இடப்பக்கம்) அவருடைய வீடு.//

அய்யோ குமரன். அதே அம்பிதான். அவன் அப்பா இந்து மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார். பின்னாளில் தலைமையாசிரியராகவும் இருந்தார் என்று கேள்விப்பட்டேன். பெயர் சங்கரநாராயணன் என்று நினைக்கிறேன் - சரியாக நினைவில்லை. கண்டிப்பானவர் என்பதால் அவர் இருக்கும்போது நான் அம்பி வீட்டுக்குப் போக மாட்டேன். அம்பி புல்லாங்குழலும் மோர்சிங்கும் வாசிப்பான். நான் எட்டாவது முடித்ததும் முசிறிக்குச் சென்றுவிட்டேன் (1984). அவன் கலசலிங்கத்தில் படித்திருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது.

கிணற்றுக்கு வலதுபுறம் (அம்பி வீட்டுக்கு முன்னால்) மூலையிலிருக்கும் வீட்டில் பாபு என்ற நண்பனும் இருந்தான். அவன் அம்மா பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக இருந்தார்கள். அவன் அப்பாதான் இளமையிலேயே அகாலமாக மறைந்தார்.

அதற்குப் பக்கத்துவீட்டுத் திண்ணையில்தான் நான் வாடிக்கையாகக் கல்கோனா வாங்குவது வழக்கம்! :)

குமரன் (Kumaran) said...

ஆமாம் சுந்தர் அவர் பெயர் சங்கர நாராயணன் தான். எனக்கு ஒரு வருடம் சீனியர் கலசலிங்கத்தில். நான் வத்ராப்பில் இருக்கும் இரண்டு வருடங்களும் நானும் அவரும் நிறைய சேர்ந்து சுத்தியிருக்கிறோம். சினிமா போகும் போது மட்டும் வரமாட்டார். ஜெயமாலினியைப் பார்த்தவுடன் கண்ணை மூடிக்கொண்டார் என்று படித்தவுடனே அவராய்த் தான் இருப்பார் என்று எண்ணினேன். எப்படியோ அவருடைய கண்டிப்பான தந்தை என்னிடம் மிக்க அன்பாய் இருந்தார்; நான் அவர் இருக்கும்போது நிறைய தடவை அவர் வீட்டுக்குச் சென்றுள்ளேன். நிறைய சமஸ்கிருதப் புத்தகங்கள் (தமிழ் மொழிபெயர்ப்புடன்) அவரிடம் தான் இரவல் வாங்கிப் படித்தேன். :-)

குமரன் (Kumaran) said...

நான் பிராமணன் இல்லை என்று தெரிந்தும் என்னை அடுப்பங்கரை வரைக்கும் விட்டிருக்கிறார் அம்பியின் அப்பா.

Sundar Padmanaban said...

குமரன். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என்னுடைய நண்பனோடு நீங்களும் நண்பனாக இருந்தீர்கள்; கூடப் படித்தீர்கள் என்பதை அறிந்து மிக மிக மகிழ்ச்சியடைந்தேன்.

அம்பியின் அப்பா பள்ளியில் கண்டிப்பான ஆசிரியர் என்று பெயரெடுத்தவர். வீட்டைப் பொருத்தவரை கண்டிப்பு எதுவும் கிடையாதுதான். ஆசிரியர் என்பதால் நான் ஒரு மரியாதை கலந்த பயத்துடன் அவருடன் அவ்வளவாக அவருடன் எதுவும் பேசியதில்லை.

//நிறைய சமஸ்கிருதப் புத்தகங்கள் //

ஆமாம். இப்போது நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு சமஸ்க்ருத பண்டிதரும் கூட.

அம்பி இப்போது எங்கிருக்கிறான் என்ற விபரம் எதுவும் தெரியுமா?

மிக்க நன்றிகள். உங்களை இணையம் மூலம் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. தமிழ்மணத்திற்கும் நன்றிகள்.

குமரன் (Kumaran) said...

இல்லை சுந்தர். அம்பி இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியாது.

Anonymous said...

கனத்த பதிவு!