Thursday, December 15, 2005

* சினிமா இனிமா *



வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில் அமளிதுமளிப் பட்டது. மக்கள் எங்கும் நிறைந்திருக்க, அனைவரும் முயற்சியில்லாமலே நகர்ந்தனர்- கூட்டம் நெருக்கியடித்தது. மந்திரங்கள் ஒலிபெருக்கிகளில் முழங்க, ஆங்காங்கே கற்பூரம் எரிந்துகொண்டிருந்தது. சுவரில் எண்ணைப் பிசுக்குடன் கருவட்டம் இருக்க, அதற்குக் கீழும் யாரோ கற்பூரம் கொளுத்தி வைத்திருந்தார்கள். கடந்தவர்கள் எரியும் கற்பூரத்தைப் பார்த்ததும், கண்ணில் ஒற்றிக்கொண்டனர். சுவரில் இருந்த கருவட்டத்தையும் தொட்டு வணங்கிச் சென்றனர்- 'ஏதோ சாமி..'

சிலர் ஒலியில்லாமல் எதையோ முணுமுணுக்க, சிலர் குசலம் விசாரித்துக்கொள்ள, சிலர் அரட்டையடித்தபடி இருக்க- கூட்டம் நகர்ந்தது. பொறுமையிழந்த சிலர் உரக்கக் கத்த, சிலர் முண்டியடித்தனர். கூட்டத்தை ஒழுங்கு படுத்த நின்றிருந்த காவலாளிகளும் ஆங்காங்கே கூட்டத்தில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தனர்.

ராஜனுக்கு வெறுப்பாக இருந்தது. நெரிசலில் மூச்சு முட்டியது. காற்றில்லாமல் புழுங்கியது. வியர்வையில் உடல் நனைந்திருக்க, நாற்புறமும் நெருக்கிக்கொண்டிருந்த மனிதர்களும் வியர்த்திருக்க, அவனுக்குக் கசகசவென்று அருவெறுப்பாக இருந்தது. நடுவில் இருந்ததால் ஒதுங்கி நிற்க முடியவில்லை. அவன் சும்மா நின்றிருக்க, கூட்டம் அவனை நகர்த்திக்கொண்டு போனது. ஒரு மணி நேரம் கழித்து, கோபுர நுழைவாயில் கதவைத் தாண்டி வெளியே தள்ளப்பட்டதும், சட்டென்று காற்று உடலைத் தழுவிக் கொள்ள, ராஜனுக்கு அப்பாடா என்றிருந்தது.

வெளிப் பிரகாரத்தில் கூட்டமில்லையாததால், நிதானமாக ஒருமுறை வலம் வந்தான். கோயிலின் தென்கிழக்கு மூலையில் குதிரை லாயம் ஒன்று இருந்தது. இரண்டு ஒட்டகங்களும், சில நோஞ்சான் குதிரைகளும் இருக்க, அவற்றின் கழிவுகளின் நாற்றம் பரவியிருந்தது.

வெளியே நின்றிருந்த யானை அபார அலங்காரத்துடன் இருந்தது. முன்னெற்றியில் பட்டையாக நாமம் வரைந்து, தலையின் மேல் பளபளவென்று பீதாம்பரம் மின்னியது. முதுகில் சிவப்பு ஜரிகையுடன் பெரிய ஜமுக்காளம் விரித்தது போல் பரப்பியிருக்க, பாகன் அங்குசத்தால் தலையில் லேசாகத் தட்டி, கால்கட்டை விரலால் அதன் கழுத்தில் அழுத்தி அதனுடன் பேசிக்கொண்டிருந்தான். கீழே பிரம்மாண்ட அலுமினியப் பாத்திரத்தில் அப்போது பொங்கிய சோறு ஆவிபறக்க நிறைந்திருக்க, இன்னொரு ஆள் அதை அள்ளி, கால்பந்து அளவிற்கு உருட்டி உருட்டி ஏந்த, யானை தும்பிக்கையை உயர்த்தி உருண்டைகளைக் கவ்விக்கொண்டது. ராஜன் லேசாகத் தெரிந்த அதன் பெரிய பற்களையும், வெளிர்ரோஜா வாயையும் பார்த்தான். யானையின் அழகில் சில நிமிடங்கள் லயித்திருந்தான். சோற்றுருண்டை முடிந்ததும், இன்னொரு பாத்திரத்தில் குவிந்திருந்த தேங்காய்ச் சில்லுகளையும், வாழை மற்றும் பலாப்பழங்களையும் அள்ளி அள்ளிக் கொடுக்க யானை அசராமல் சாப்பிட்டது. கடைசியாக, பெரிய வாளியில் நல்ல தண்ணீர் நிறைத்து அதன்முன் வைக்க, சில வினாடிகளில் தண்ணீரை உறிஞ்சிக் காலி செய்தது யானை.

ராஜன் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான் 'இதைப் பராமரிப்பது எவ்வளவு செலவு பிடிக்கும் விஷயம்! கோயிலாக இருப்பதால் சமாளிக்கிறார்கள்' என்று நினைத்துக் கொண்டான். 'யானை என்ன கம்பீரமான மிருகம்! நம்மால் காணமுடிகிற உயிரினங்களில் எவ்வளவு பெரியது!' என்று எண்ணினான். 'எவ்வளவு பலம்! இவ்வளவு சக்தி கொண்ட ஒரு மிருகத்தை, எவ்வளவு சாதுவாக்கி, ஒரு சிறு குச்சியில் கட்டுப்படுத்திவைக்கிறான் மனிதன்' என்று நினைத்துப் பூரித்தான். பெருமாள், யானையின் மீது பட்டுக் குடை கீழ் கம்பீரமாக நான்கு வெளி வீதிகளில் பவனி வரும் அழகே அழகு. அதன் அசைந்தாடும் நடையைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.

'பேரு என்ன அண்ணாச்சி' என்று பாகனை வினவ, 'கணேசன்' என்று மறுமொழி கூறிவிட்டு, அதன் தலையைப் பெருமையுடன் வருடினான் பாகன். அவன் என்னவோ நோஞ்சானாக, அழுக்கு உடைகளுடன் இருந்தான்.

***

வீட்டு வாசலில் மணிச் சத்தம் கேட்டதும், ராஜன் செய்தித் தாளை மூடி வைத்து எட்டிப் பார்த்தான். பையன்கள் இருவரும் 'அப்பா.. யானை. யானை' என்று கூச்சலிட்டு வீட்டிற்குள் அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடினார்கள். பெரியவன் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொள்ள, சிறியவன் சமையலறையிலிருந்து சில வாழைப்பழங்களை பிய்த்தெடுத்துக்கொள்ள வாசலுக்கு ஓடினார்கள். ஜானகி 'என்னாங்க.. ஒர்ரூவா காயின் இருக்கா?' என்று கேட்டுவிட்டு, அவன் பதிலை எதிர்பார்க்காமல், ஆணியில் தொங்கிய அவன் சட்டையில் கைவிட்டு எடுத்துக்கொண்டு அவளும் வாசலுக்கு விரைய, ராஜன் பின் தொடர்ந்தான். 'கணேசன்' தான். அவர்கள் வரிசையாக வாசலில் நின்றார்கள்.

ஒரே உறிஞ்சலில் வாளித் தண்ணீர் காணாமற் போயிற்று. சர்வ அடக்கமாகக் கைகள் கட்டி, உடல் குறுகி, ஒரு கையால் வாயைக் கிட்டத்தட்ட மூடிக்கொண்டு குனிந்த மறுகணம் தண்ணீர் சரேலென்று அருவியாக முகத்தில் அறைய, 'யேய்....' என்ற ஆரவாரம் எழுந்தது. சிறியவன் தயங்கித் தயங்கி ஒரு ரூபாய் நாணயத்தை நீட்ட, யானை தும்பிக்கை நுனியை வளைத்து வாகாகக் காண்பிக்க அந்தப் பள்ளத்தில் நாணயத்தைப் போட்டான். பாகனின் கைக்கு ஒரு ரூபாய் நாணயம் போய்ச் சேர்ந்ததும் கணேசன் ஒவ்வொருவர் தலையிலும் தும்பிக்கையை வைத்து ஆசிர்வாதம் செய்தது. அதன் பாரத்தில் தலைகள் இன்னும் குனிந்தன.

ராஜன் முகத்தைத் துடைத்துக் கொண்டு யானையைப் பார்த்தான். காலையில் கண்ட அலங்காரங்கள் எதுவும் இல்லாமல், யானை முழு நிர்வாணமாக இருந்தது. அதன் இடையெலும்பு மூட்டுப் பகுதியில் தோல் தேய்ந்திருந்தது. கால் நகங்கள் பெயர்ந்திருந்தன. தோல் முழுதும் சீரில்லாக் கோடுகள் நிரம்பியிருக்க, வால் கடிகார பெண்டுலம் போல் மெதுவாக அலைந்தது. கண்களில் பூளையுடன் நீர் வழிந்து காய்ந்திருந்தது.

பாகன் 'இருவது ரூபாய்ங்க' என்று கணேசனின் வாலைத் தூக்கி வைத்துக்கொள்ள, ஜானகி 'என்னங்க.. யானை முடில வளையம் செஞ்சு போட்டுக்கிறீங்களா? ரொம்ப நல்லது' என, வேண்டாம் என்று அவசரமாக மறுத்தான். வாலின் நுனியில் மயிர் ஆங்காங்கே பிடுங்கப் பட்டிருக்க, வால் பல் போன சீப்பு போல் இருந்தது.

கழுத்தில் கட்டிய மணியின் சீரான ஒலியுடன், கணேசன் தனது பெரும் இடையசைத்து அடுத்த வீட்டை நோக்கி நடந்தது. சாலையில் தார் இளகியிருந்த ஒரு இடத்தில் காலை வைத்துவிட்டு, சட்டென்று எடுத்துத் தேய்த்துவிட்டுச் செல்ல, சிறுவர்கள் கூட்டம் பின் தொடர்ந்தது. ராஜனுக்கு உள்ளங்கால் குறுகுறுத்தது. ஒவ்வொரு வீட்டிலும் கணேசனிடம் தலையைக் குனிந்து ஆசிர்வாதம் வாங்கி, தும்பிக்கை நீரில் குளித்தார்கள். கட்டணக் குளியல். கட்டண ஆசிர்வாதம்.

வீட்டினுள் திரும்புகையில் திண்ணையில் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ராஜனின் தந்தை சிவதாணு குவிலென்ஸ் கண்ணாடியின் மூலம் பார்த்து பொதுவாகச் சொன்னார் 'ஹூம்.. எத்தனை பலசாலி அது. ஒரு மிதி மிதிச்சா மண்ணோடு மண்ணாயிடுவோம்.. அதுபாட்டுக்கு ஒழுங்கா சிவனேன்னு காட்டுல இருக்கறத சும்மா இருக்க விடாம, புடிச்சுக் கொண்டாந்து கோயில்ல கட்டிக் கூத்தடிக்கறானுங்க. சரி. அதோடு நிறுத்தறாங்களா, இப்போ பிச்சையெடுக்க வேற வச்சுட்டாங்க; இவனுங்க உருப்படுவானுங்களா? கோயிலுக்கு வருமானமா இல்லை? முழுமுதற் கடவுள்னு வேற சொல்லி வச்சிட்டு இதவிடப் பெருசா கடவுளை அவமானப்படுத்த முடியாது'... இன்னும் ஏதேதோ அவர் சொன்னது ராஜன் காதில் விழவில்லை..

**

செய்தி : "லண்டனில் திரையுலகக் கலைஞர்களின் மாபெரும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி.."

செய்தி: "லண்டனில் நிகழ்ச்சி நடைபெறுவதை எதிர்த்து, புறக்கணிக்கக் கோரி தமிழர்களில் ஒரு சாரார் அறிக்கை"

மரத்தடி: "மரத்தடி இணைய தளத்திலும், குழுவிலும் சினிமா அபத்தங்களைப் பற்றி 'சினிமா இனிமா' (copyrighted!!!) என்ற தலைப்பில் நண்பர்கள் எழுதலாம்"

மரத்தடி: "அப்படியே ஊர் ஊரா (முன்னாடி மலேசியா, இப்போ துபாய், லண்டன்) போய் என்னன்னமோ சொல்லி பிச்சை எடுக்குறாங்களே. அதையும் பத்தி எழுதுங்க."

**

எழுதியாச்சுங்க!!

**

நன்றி : மரத்தடி.காம்

1 comment:

யாத்ரீகன் said...

>> 'அப்பா.. யானை. யானை' என்று கூச்சலிட்டு வீட்டிற்குள் அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடினார்கள்

சின்ன வயசுல அதுல அப்படி ஒரு சந்தோசம்.. ஆனா இப்போலாம் இப்படி வர்ரதில்லைனு கேள்விப்பட்டேன்..

-
செந்தில்/Senthil