* மதுரய் *
மதுரைய "மருதை"ன்னு யாரும் மதுரைல சொல்றதில்ல. வத்திராயிருப்புல "மருதைக்குப் போறீயளா?" ன்னு கேக்குறத கேட்ருக்கன். வத்ராப்பு பொறந்து வளந்த ஊருதான். ஆனா ரொம்ப வருஷம் இருந்தத வச்சுப் பாத்தாக்கா எனக்கு மதுரெதான் சொந்தூரு மாரி.
ஒருஒரு ஊருக்கும் இருக்கறாப்ல மதுரெய்க்கும் பாஷதேன் வித்தியாசம்.
'அவிய்ங்க வராய்ங்களா?'ன்னு மொதமொதல்ல அவிய்ங்க கேட்டப்ப நா ஏதோ ஒட்டகச் சிவிங்கியைப் பத்தித்தான் கேக்குறாய்ங்கன்னு நெனச்சு 'ஆங்ங்?'ன்னு திருப்பிக் கேட்டுக்கிட்டு க்ளியர் பண்ணிக்கிட்டேன். அப்றம் ஒரு மாசத்துல பாஷ பழகிருச்சி. காலேஜ்ல சேந்து இன்னும் பாஷய நல்லாக் கத்துக்கிட்டு கண்டமானிக்கும், குண்டக்கமெண்டக்கவும் பேசமுடிஞ்சிச்சி. ஊர் பழகினதும் அங்கிட்டும் இங்கிட்டும் ஈஸியா போய்ட்டு வந்துட்டுருக்க முடிஞ்சிச்சு.
நம்மளவிட வயசுல மூத்தவய்ங்களச் சந்திச்சாக் கூட, அவிய்ங்க 'வாங்கண்ணே'ன்னுதான் கூப்பிடுவாய்ங்க. மொதல்ல கிண்டல் பண்றாய்ங்கன்னு நெனச்சேன். அடுத்த கேள்வியே 'டீ சாப்பிர்றீயளா?'ன்னு கேப்பாய்ங்க. மதுரய்ல டீக் கடைக்குப் பஞ்சமேயில்லை. தடுக்கி விழுந்தா டீக்கடை முன்னாடி படுத்திட்ருக்கற நாய் மேலதான் விழணும். ஒரு விதத்தில பாத்தா மதுரெயத் 'தூங்கா நகர'மா வச்சிருக்குறதுல தியேட்டருங்களுக்கப்புறமா இந்த டீக்கடைய்ங்களச் சொல்லலாம்.
எல்லாத்துலயும் 'ய்'யைச் சேத்து சொய்ங் சொய்ங் என்று பேசுறவய்ங்க 'டேய்'ங்கறதுல மட்டும் 'ய்'ங்காம 'டே'ன்னு கூப்பிடுவாய்ங்க. திடீர்னு 'அங்கிட்டு பார்றா அட்டுப் பார்ட்டி போவுது' ன்னு ராசாங்கம் கையக் காமிக்கற எடத்துல பாத்தாக்கா பாவமா கெராமத்துலருந்து வந்து படிக்கற நோஞ்சான் பொண்ணு ஒண்ணு நடந்து போய்க்கிட்ருக்கும். 'டே அப்படிச் சொல்லாதடா பாவம்டா'ன்னு சொன்னாலும் கேன கேக்கமாட்டான். 'இங்கிட்டுப் பார்றா. கான்வெண்ட்டு வருது'ன்னு க்ளாஸ்ல இங்லீஷ்ல பேசற ஒரே சென்மம் தேவியக் காட்டுவான். இப்படி லந்து பண்ணிக்கிட்டே இருந்தா ஒரு நாளைக்கி சேத்து வச்சு ஆப்படிக்கப் போறாய்ங்கடின்னும் சொல்லிப் பாத்துட்டேன்.
'வொக்கேஷனல் க்ரூப்'ன்னு உருப்படாத க்ரூப்பைப் படிச்சிட்டு யாருமே சேராத டுபுக்கு காலேஜுலதான் நெறயப் பசங்க சேருவாய்ங்க. அந்தக் க்ரூப்பு பேரக் கேட்டாலே எதோ கெட்ட வார்த்தை மாரிதான் கேக்கும். மதுரய்லருக்குற எல்லாக் காலேஜுக்கும் ஒரு பட்டப் பேரு இருக்கு. எந்த பேசிஸ்லன்னு கேக்காதீங்க. அங்க நெறய வருசம் படிக்கற பயஹளத்தேன் கேக்கணும்.
நா படிச்சது மதுரெ சிட்டிலருந்து திர்ப்ரங்குன்றம் ரோட்டுல போனாக்கா, மன்னர் காலேஜுல ரைட் சைடு திரும்பி, தார் காணாமப் போன ரோட்டுல 'குண்டுங்குழியும் டயருக்கு மெத்தை'ன்னு அடைச்சிக்கிட்டு வர்ற பசங்க பாட, ஒருக்களிச்சிச் சாஞ்சி ஊர்ந்துக்கிட்டு போற பாண்டியன் சிட்டி பஸ்ஸூ (நம்பரு 9) சேர்ற செளராஷ்ட்ரா காலேஜு. மலெ உச்சில அழகா ஒக்காந்திருக்குற காலேஜு அது. திருப்பரங்குன்றத்திலருந்து பார்த்தாக்கா ஏரியத் தாண்டிக் கம்பீரமா நிக்கும். நல்ல கலர்ல காலேஜு பூரா ரொம்பிருக்கற செளராஷ்ட்ரா மக்கள் கூட்டத்துல மைனரிட்டியா இருந்த சின்னக் கும்பல்ல ஒருத்தனா நா படிச்சேன். கோ-எஜுகேஷன்னு பேருக்கு வச்சிக்கிட்டு க்ளாஸ் தவிர மத்த எல்லாடத்துலயும் பசங்க, பொண்ணுங்கள பிரிச்சே வச்சிருந்தாய்ங்க. இந்தப் பைஞ்சு வருசத்துல மாறிடுச்சான்னு தெரிலை.
ராகிங்க பத்தி ஆளாளுக்குப் பேசி பயமுறுத்தி வச்சிருந்தாய்ங்க. என்னப் பண்ணப் போறாய்ங்களோன்னு பயந்துக்கிட்டே ஜிம் பாடி ராசாங்கத்தோடதான் போனேன். அங்கிட்டும் இங்கிட்டும் ஒக்காந்துக்கிட்ருக்கற சீனியர்ஸ் யாரும் கூப்ட்ருவாய்ங்களோன்னு ஒளிஞ்சி ஒளிஞ்சிதான் போனேன். ராசாங்கத்தப் பாத்தோ என்னவோ பசங்க ஒண்ணும் பண்ணலை. க்ளாஸுக்குள்ள போனதும் கடசீ பெஞ்சுல எம்பக்கத்துல ஒக்காந்துக்கிட்ருந்த பையன் - முரளி - 'நீ பவ்வா?'ன்னு கேட்டான். நான் 'பவ்வுன்னா?' என்னன்னு தெரியாம முழிக்க, 'நீ செளராஷ்ட்ராவா?' என்று கேட்டுட்டு 'இல்லை'ன்னதுந்தான் கிட்டக்கயே ஒக்கார விட்டான். அவனும் 'இல்லை'யாம். இங்கிட்டு ராக்கிங் உண்டான்னு கேட்டதுக்குச் சிரிச்சான். இங்க பூரா அப்பிராணிங்க. நானும் நீயும் செஞ்சாதான் உண்டுன்னான். ரெண்டாம் வருசம் போனதுந்தான் பயம் தெளிஞ்சி புதுசா வர்றவங்கள ஓட்டிக்கிட்டுருந்தோம். எப்படியோ மூணு வருசம் போனதே தெரியலை. மத்த காலேஜுல பசங்க எல்லாம் சொதந்தரமா இருக்க, நாங்க ஸ்கூல் ரேஞ்சுலதான் அடக்கமாத்தேன் இருந்தோம். சேட்டை பண்ணா டிஸ்மிஸ்னு பயமுறுத்தி வச்சிருந்தாய்ங்கள்ள.
மதுரைல சில வார்த்தைங்களுக்கு பல அர்த்தம் இருக்குது. 'அவென போட்டுத்
தள்ட்டாய்ங்க'ன்னா போட்டுத் தள்ட்டாய்ங்கன்னுதேன் அர்த்தம். அதேதை அசிங்கமாவும் யூஸ் பண்ணுவாய்ங்க. பேசறப்போ சாக்கிரதையா இருக்கோணும். ஏடாகூடமா அர்த்தம் தெரியாம வாயக் கொடுத்தோம்னு வைங்க. போட்ருவாய்ங்கள்ள?
முன்னக் காட்டிலும் இப்போ வண்டிங்க சாஸ்தியாருச்சி. தூசியும் சாஸ்தியாயிருச்சி. அவட்டர்லாம் இப்ப சிட்டி கணக்கா புது வீடுங்க நெறய வந்து சனத்தொகையும் கூடிப் போச்சி. தண்ணிக்கு எப்பயும் கஷ்டந்தேன். கந்தக பூமில்ல? நேதாஜி ரோடும் டவுன்ஹால் ரோடு மாதிரி ரொம்ப சந்தடியாயிடுச்சு. நிறைய ஒன்வே ஆக்கிருக்காய்ங்க. ஆர்ய பவன் பை நைட்ல வேற ஏதோ ஓடிக்கிட்டு இருக்கு. அங்கங்க நிறையவே மாறிருக்கு.
பாக்கறதுக்கு ஊர்ல எத்தினியோ விசயம் இருக்குதுங்க. பொழுது போறதே தெரியாது. எல்லாத் தெசைலயும் எதாச்சும் ஒரு கோயிலு இருந்துக்கிட்டே இருக்கு. கொஞ்சம் அழுத்திப் பெரியகொளம் ரோட்டைப் பிடிச்சீங்கன்னா கும்பக்கரைக்குப் போயிரலாம். இல்லை மலையேறி கொடைக்கானலுக்குப் போலாம். இங்கிட்டு திர்ப்பரங்குன்றம். அங்கிட்டு மாரியம்மன் தெப்பக்கொளம். நடு செண்ட்டர்ல மீனாட்சி கோயிலு. கொஞ்ச தூரத்துலயே பெருமாள் கோயிலு. அந்தப் பக்கம் நாயக்கரு மஹாலு. பத்தாததுக்கு நெறைய்ய தியேட்டருங்க.
புதுசா ஐகோர்ட்டெல்லாம் வந்துருக்காம். அடுத்த வாட்டி போம்போது மீனாட்சியப் பாக்கணும். சில்லுன்னு கல்லுபட தெப்பக்கொளத்துப் படில ஒக்காரணும்.
வருசாவருசம் வைகை மணல்ல எறங்கற அழகரு இந்த வருசமாவது தண்ணில எறங்கட்டும். அதான் மழை போட்டுத் தாக்கியிருக்குல்ல.
என்னதான் சொல்லுங்க. மதுரெ மதுரெதான்.
***
20 comments:
சுந்தர்,
அட்டகாசமா மருதையைப்பத்தி எழுதிட்டய்ங்க. நானும் அந்தப் பக்கம் எல்லாம் இருந்திருக்கேன்.
திர்ப்பரங்குன்றத்துலேதான் சின்னப்புள்ளயா இருக்கறப்ப 'மொட்டை' போட்டாய்ங்க. கோபாலோட ஊரும்
'போடி'ன்றதாலெ மருதைக்கு அப்பப்ப போறதும் வாரதும்மாத்தான் இருக்கு.
Nice post on Madurai. I love the city where i have lived most of my childhood and teen years before moving to US. Good madurai accent
நானும் மதுரையில் பள்ளியிறுதியும் பல்கலைகழக புகுமுகமும் முடித்தேன். அந்த மண்வாசத்தை அழகாக படம் பிடித்துள்ளீர்கள்.
சுந்தர்,
உங்க இன்றைய பதிவ படிச்சப்ப பழைய நினைவுகள் வருதுங்க..
நா அங்க ரெண்டு வருஷம்தான் இருந்தேன். மதுரைய சுத்துன கழுதையும் விடாதுலம்பாங்க எங்க ஊர்ல. அது எவ்வளவு உண்மை. அங்கதான் முதல் முதலா குருதை வண்டியில போனேன். விடியற்காலைல பொளுது விடியறதுக்கு முன்னால சுடச்சுட பூ மாதிரி இட்லியும், மிளகுப்பொடி சட்னியும், கருப்பட்டி காப்பியும்.. இன்னமும் நாக்கும் தொண்டையும் கரிக்குதுய்யா..
சுந்தரு,
கலக்கிப்புட்டீயப்பூ...
அப்படியே எங்கூரப் பக்கம் போயி எங்காத்தா மீனாச்சி கோயிலு வாசல்லயே ஒக்காந்து கேட்ட மாதிரி இருந்துச்சப்பு...
நம்ம மக்க சும்மா வந்துக்கிருக்காய்ங்கன்னாலே லந்து தாங்காது, அதுலயும் ஒரு திருவிழா நல்லநாளு பெரியநாளுன்னு வந்திருச்சுன்னு வய்ங்க... பிரிச்சு மேஞ்சுபிட்டுப் போயிக்கேயிருப்பாய்ங்க...
ரவைக்கு (இதுக்கு ராத்திரின்னு ஒரு பேரும் வச்சிருக்காய்ங்களாம் மத்த பய ஊருல) எத்தனை மணிக்குப் போனாலும் கவுச்சிக்காரவுகளுக்குப் பொரோட்டா சால்னாவும் சைவக்காரவுகளுக்குச் சுடச்சுட இட்டிலியும் அவிச்சிப் போடுற ஊரு இந்த நாட்டுல எங்கயிருக்குன்னு காட்டுங்க பாப்பம்...
கள்ளழகரு அருளால நெறைய எழுதுங்க ராசா!
அன்புடன்,
பிரதீப்
எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது
எனக்கும் சொந்த ஊரு வத்திராயிருப்புதானய்யா.... ரெம்ப நெருங்கிட்டோம் போல இருக்குதே..... எங்க தாத்தா பாட்டி அப்பா இருந்தது எல்லாம் தெக்குத் தெருதான்.அம்மாவுக்கு மீனாட்சி புரம்...... ஆனா எல்லாம் இப்ப இருக்கிறது மருதையில........
அடங்கொக்க மக்கா... என்னய்யா இப்படி பட்டையக் கெளப்புறீங்க...?
சுந்தர். சூப்பர் பதிவு. நானும் ஒரு பவ்வுதான். (முரளியிடம் சொல்லிவிடாதீர்கள். போட்றபோறார்).ஆனால் சௌராஷ்ட்ரா கல்லூரியில் படிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. வத்ராப்ல பொறந்து நீங்க மதுரைக்கு வந்து படிச்சிருக்கீங்க. நான் மதுரையில பொறந்து கலசலிங்கத்துல படிக்கிறப்ப வத்ராப்ல நடுத்தெருவில ஒரு வீட்டில ரெண்டுவருஷம் தங்கியிருந்திருக்கேன். தெக்குதெரு மச்சான் முத்துகுமரனைப் பத்தி சொல்லலாம்னு நெனைச்சேன். அதுக்குள்ள அவரே முந்திக்கிட்டார்.
//தெக்குதெரு மச்சான் முத்துகுமரனைப் பத்தி சொல்லலாம்னு நெனைச்சேன். அதுக்குள்ள அவரே முந்திக்கிட்டார்//
ஊர் பயலுகளப் பாக்கிரதே பெரும்பாடா இருக்கு. பாத்த ஆள விட்டுடுவோமா என்ன.....
சந்தோஷமா இருக்கு...நல்லா இருங்க...நிறைய எழுதுங்க நம்ம ஊரு பத்தி..
ஆஹா, எல்லாரும் வந்திட்டீயளா? இன்னும் வடிவேலு மட்டும் பாக்கின்னு நெனக்கேன் :-))
இப்படிக்கு மதுரையை பார்க்காத துர்பாக்கியசாலி.
மதுரையப் பத்திப் புட்டு வெக்கிறீங்க. ஏன்? அங்க சாமி வந்து புட்டு தின்னதாலயா! :-)
நல்லாத்தான் சொல்லீருக்கீங்க. மதுரையும் எனக்குப் புடிச்ச ஊருதான். சின்ன வயசுல டீ.ஆர்.வோ காலணீல இருந்தோம். நான் இருந்தது ஒரு வருசம்தான்.
பழைய படத்துக்கெல்லாம் கூட்டீட்டுப் போவாங்க. அப்ப விஜயலட்சுமி தேட்டர்ல சந்திப்புங்குற படத்தப் பாத்துட்டு வந்தோம்.
அதுல ஆனந்தம் விளையாடும் வீடுன்னு ஒரு பாட்டு. அந்தப் பாட்டு அந்த வயசுல நெஞ்சுல அப்படியே பதிஞ்சிருச்சு.
டீ.ஆர்.வோ காலணில இருந்தோம். தேட்டர்ல இருந்து வர்ர வழியில மாரியம்மன் கோயில் பக்கத்துல போலீஸ் கிரவுண்டு இருக்கும்.
படம் பாத்துட்டு வர்ர வழியில அதப் பாத்ததுமே ஒரு பாட்டு பாடினேன்.
போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
இது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
நான்கு சுவர் கொண்டு உருவான கிரவுண்டு
இது போலீஸ்கள் விளையாடும் கிரவுண்டு
பல நாய் கொண்டு விளையாடும் போலீஸ்...
இதுக்கு மேல நினைவில்லை.
அந்தப் பாட்டு,
ஆனந்தம் விளையாடும் வீடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
இது ஆனந்தம் விளையாடும் வீடு
ஒரு நூல் கொண்டு உருவான பாவை......
நம்மூராளுங்க கொள்ளப்பேரு இருக்கீங்க போலருக்கே. ரொம்ப சந்தோஷமப்பா.
துளசிக்கா, தெய்வா, மணியன் நன்றி.
ஜோஸப் ஸார். //மதுரைய சுத்துன கழுதையும் விடாதுல// அப்படிப் போடுங்க அருவாளை. :)
ப்ரதீப். நன்றி.
//எத்தனை மணிக்குப் போனாலும் கவுச்சிக்காரவுகளுக்குப் பொரோட்டா சால்னாவும் சைவக்காரவுகளுக்குச் சுடச்சுட இட்டிலியும் அவிச்சிப் போடுற ஊரு இந்த நாட்டுல எங்கயிருக்குன்னு காட்டுங்க பாப்பம்...
//
அது!!!!!!!!!!! ஏற்கெனவே நெறைய மதுரையைப் பத்தி எழுதிட்டதாலே பல விஷயங்களை இதுல சொல்லலை. அக்கா கடை, மாமியா மெஸ், முருகன் இட்லி கடை, முனியாண்டி விலாஸ், கோனார் கடைன்னு ஒண்ணையும் விடாம ஏற்கெனவே மத்த பதிவுகள்ல சொல்லிட்டேன் ப்ரதீப்.
முத்துக்குமரன். நீங்களும் வத்றாப்பா? :)
//எங்க தாத்தா பாட்டி அப்பா இருந்தது எல்லாம் தெக்குத் தெருதான்//
அட... என்னோட தாத்தா பாட்டியும் தெக்குத்தெருதான்! (அம்மாவோட பெற்றோர்:) தெரு முக்குப் பால்பண்ணைக்கு எதுத்த வீடு!
நன்றி ப்ரகாஷ்!
குமரன்.
//நானும் ஒரு பவ்வுதான். (முரளியிடம் சொல்லிவிடாதீர்கள். போட்றபோறார்)//
அட நீங்க வேற. 'இல்லை'ன்னு சொன்னான்ல, மக்கா நாளே பவ்வு ப்ரெண்ட்ஸோட பேசிக்கிட்ருந்தான். என்னடான்னு கேட்டா 'நானு பவ்வுதான்'ன்னான். அட நாயே. அப்றம் ஏண்டா நேத்திக்கு அப்படிச் சொன்னே?ன்னு கேட்டேன். 'தமிழ்லயோ இங்கிலீஷ்லயோ பேச சான்ஸே கெடைக்க மாட்டெங்குதுடா. அதான்....'ன்னான். ஆளாளுக்குப் போட்டுச் சாத்தினோம் அவனை! பதிலுக்கு தாகத்துக்குத் தண்ணி வேணும்னு எப்படி செளராஷ்ட்ரால (பொண்ணுங்கக்கிட்ட) கேக்கறதுன்னு அவன்ட்ட கேட்டு 'து மோ கொஞ்சுவோ?'ன்னு அவன் சொன்னதப் போய்ச் சொல்லி ஒத வாங்காத கொறயா திரும்பி ஓடி வந்தோம்ல? அப்டீன்னா 'எனக்கு ஒரு முத்தம் தருவியா?'ன்னு அர்த்தமாமே!!! :((
//நான் மதுரையில பொறந்து கலசலிங்கத்துல படிக்கிறப்ப வத்ராப்ல நடுத்தெருவில ஒரு வீட்டில ரெண்டுவருஷம் தங்கியிருந்திருக்கேன்.//
அடப்பாவிஹளா! நான் இருந்ததே நடுத்தெருதாங்க. பெருமாள் கோயிலு சொர்க்கவாசலுக்கு எதுக்க இருக்கற கூரை வீடு!!! தாத்தா ரொம்ப பிரபலம். அவரத் தெரியாத பயலுவ ஊர்ல யாரும் இல்லை. எப்டீன்னு கேக்கறீஹளா? நெறைய எழுதியேச்சு. அடுத்த பதிவையும் பாருங்க!
குமரன் / முத்துக்குமரன் - நல்லவேளை இப்பதிவுமூலமாகவாவது நம்மூர்க்காரர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இணையத்தில் நுழைந்து முதன்முதலில் எழுதியது கிருஷ்ணன்கோயில் சந்திப்பைப் பற்றி. நிறைய வத்திராயிருப்பு பற்றியும் மதுரை பற்றியும் பதிவுகள் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் எனது பழைய பதிவுகளைப் பாருங்கள். தங்கள் மறுமொழிகளுக்கு நன்றிகள்.
தருமி. நன்றி.
உஷா! பின்ன? மதுரைக்கு எங்களுக்கு இருக்கற ஒரே கனெக்சன் எங்க வைகைப்புயல் வடிவேலு அண்ணந்தானே! அவரு பண்ற அளப்பறையைத் தாங்கமுடியலை :)
ராகவன் - டிஆர்வோ காலனியா. ரொம்ப சந்தோஷம். மதுரைல ஒரு சந்தையும் பாக்கிவிடாம எல்லாத்துலயும் புகுந்து வந்துருக்கோம்ல? :)
சதயம் -
//பொளப்புக்கு அங்கிட்டு இங்கிட்டு போனாலும் ஊருன்னு வரும்போது தாயா புள்ளயா சேந்துக்குவாய்ங்கன்றது எம்புட்டு நெசம்//
அண்ணே. அப்படி இருந்தாத்தேன் மனுசன். நாளபின்ன ஒரு ஆத்திரம் அவசரம்னா நம்மூர்க்காரந்தான முன்னாடி வந்து நிப்பான்?
//வேரையும்,விழுதையும் மதுரைய்ல பொதச்சிட்டு கொப்புங்கொலையுமா அங்க இங்க சுத்னாலும்,வீரத்லயும்,ஈரத்லயும் மதுரக்காரன் மதுரக்காரந்தான்.
//
நெசந்தேன்.
அனைவருக்கும் நன்றி.
அடுத்த பதிவும் மண்ணின் மணத்துடன் வருகிறது!
யப்போய்.. நெறயபேர் நம்மூராலுங்க...
சுந்தர்.. நம்மூர் பாஷைல.. அந்த சின்ன சின்ன வார்த்தை வித்தியாசங்களையும் தெளிவா காட்டிருக்கீங்க..
உங்க காலேசைதாண்டிதான் நாங்க எங்க காலேசுக்கு போயாகனும்.. அதான் தியாகராசர் காலேஜ்...
அப்டிக்கா ஊரு பக்கம் போய் வந்த மாதிரி இருந்தது.
-
செந்தில்/Senthil.
ஏம்ப்பா, இவ்வ்ளோ மருதைக்காரங்க இருந்துக்கிட்டுத்தானா, நம்ம தருமி,' இங்கே யாராவது மருதைக்காரவுக இருக்காய்ங்களா?' கேட்டப்ப மூச்சுக்காட்டாம இருந்தீங்க?
//நம்ம தருமி,' இங்கே யாராவது மருதைக்காரவுக இருக்காய்ங்களா?' கேட்டப்ப மூச்சுக்காட்டாம இருந்தீங்க//
துளசிக்கா, எல்லாப் பதிவுகளையும் படிக்க முடியறதில்லை. சில சமயங்கள்ல நல்ல படிவுகளையும் இதனால தவற விட்டுடறோம். தருமி கேட்ருக்கறதே நீங்க சொல்லித்தான் தெரியுது. நான் வத்திராப்பு / மதுரைக் காரன்னு மூணுவருஷமா அதப் பத்தி எவ்வளவோ எழுதியிருந்தும், இப்போ நட்சத்திர வாரத்துல தான் குமரன், முத்துக்குமரன்க்கு தெரிய வந்துருக்கு. என்ன பண்றது!
இப்பவாவது தெரிஞ்சுக்கிட்டோம்னு சந்தோஷப்படவேண்டியதுதான்.
உண்மைதான் சுந்தர். உங்க தசாவதாரப் பதிவுகள்ல சில பதிவுகள் படிச்சிருக்கேன். எல்லாமே படிச்சதில்லை.
துளசி அக்கா. தருமி ஐயா அந்த கேள்வியைக் கேட்டது நான் வலைப் பதிய ஆரம்பிக்கிறதுக்கு முன்னால. அதனால அப்ப சொல்ல முடியலை. நான் வலைப் பதிய ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தருமி ஐயா மின்னஞ்சல்ல கேட்டு தெரிஞ்சிகிட்டாரு.
அடடே.... நாங்களும் மதுர பக்கந்தான். கொஞ்சம் சோடிச்சுகிட்டு வரலாம்னு கேப்பு விட்டா.... இத்தன அளப்பறையா?., இம்பூட்டு பேர் மதுரயா????!!!. வலைல மாயவரந்தான் அதிகம்னு நினைச்சேன். நம்மதானா?!!
யாத்ரீகன்,
//உங்க காலேசைதாண்டிதான் நாங்க எங்க காலேசுக்கு போயாகனும்.. அதான் தியாகராசர் காலேஜ்//
மறதி சாஸ்தியாருச்சு போலருக்கே ஒங்களுக்கு. நீங்க சொல்றது செளராஷ்ட்ரா ஸ்கூலு. அதத்தாண்டி மாரியம்மன் தெப்பக்கொளத்துக்கு இங்கிட்டு தியாகராசர் காலேஜு. ரைட்டா? என் நண்பன் அங்கதான் பிஎஸ்ஸி மேத்ஸ் படிச்சான். ஆண்டுவிழால்லாம் பிரமாதமா நடக்கும்.
செளராஷ்ட்ரா காலேஜு அங்கிட்டு திருப்பரங்குன்றம் எதுக்க இருக்கு.
நீங்க ஒருவேளை தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட்டைச் சொல்றீங்களா? அதான் மன்னர் காலேஜ் பக்கத்துல வந்துருச்சு. முன்னாடி நம்ம ஆண்டாள் புரத்துல இருந்துச்சு. அங்கதான் நான் எம்பியே பண்ணேன்!
அப்டிப் போடு,
//வலைல மாயவரந்தான் அதிகம்னு நினைச்சேன்.//
தின்னவேலிக் காரவுஹளும் இருக்காஹ. அப்டியே ஸைலண்டா இருந்துக்கிட்டு அல்வா கொடுத்துருவாஹ. மதுரைன்னா என்ன தின்னவேலின்னா என்ன.. எல்லாம் பாண்டியங்கதானே. நம்மள்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு!! :)
சூப்பர் பதிவு
Post a Comment