அன்பு வணக்கம். வற்றா இருப்பிலிருந்து எழும்பிச் சிதறும் நினைவலைகளையும், கற்பனைக் குதிரையின் பயணத் தடங்களையும் உங்கள் வாசிப்பிற்கு வைக்கிறேன். சிந்தனைச் செங்கற்களை அடுக்கி நான் கட்டும் இச்சிறிய தமிழ்க் குடிலுக்கு வருகை தந்தமைக்கு நன்றிகள். மீண்டும் வருக! என்றும் அன்புடன் - வற்றாயிருப்பு சுந்தர்
Wednesday, December 14, 2005
* குண்டலகேசி * சிறுகதை
* குண்டலகேசி *
குண்டலகேசி எப்போதும் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி காட்சியளிப்பான். காரணம் யாரும் அவன் முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடாதது மட்டுமல்ல. அதைச் சுருக்கி இகரத்தில் முடித்துக் கூப்பிடுவதால் அவனுக்கு கடுங்கோபம் வரும் - என்பதால் 'குகே'.
மனசு குழந்தையாக இருந்தாலும் உருவத்தைப் பார்த்துப் பெரியவர்களே பயப்படுவார்கள். மூன்று வேளை உணவு, உறக்கம் மட்டும்தான் பிரதானம். உறையுள் பற்றியெல்லாம் கவலைப் பட்டதில்லை. அக்ரஹாரத்தில் சாமி சிலைக்குக் கட்டினமாதிரி ஒரு அழுக்கு வேட்டியுடன் சதா உலா வந்து கொண்டிருப்பான். அவனிடமிருந்து ஐம்பதடி தூரத்தில் ஒரு சிறுவர் குழாம் ஒன்று எப்போதும் இரைச்சலுடன் காணப்படும். கரிமலை நடப்பது போல் நடந்துகொண்டே இருக்கும்போது சட்டென நின்று திரும்பிப் பார்ப்பான். பசங்கள் தெறித்து திசைக்கொன்றாகச் சிதறுவார்கள். திரும்பி சிரித்துக்கொண்டே நடக்கத் தொடங்குவான். தெருவில் எல்லோரையும் அவனுக்குத் தெரியும்; அவனையும் எல்லோருக்கும் தெரியும்.
அவன் மூன்றாம் வீட்டுக் கோதையை ஒருதடவை எலி போல் மூலையில் விளையாட்டுக்கு மடக்கியதில் அவளுக்கு ஜன்னி வந்து பத்து நாள் மந்திரித்தார்கள். மலையில் வெள்ளிக்கோடாக இறங்கும் நதி போல், கருத்த கனத்த மேனியில் பூணூல் நெளியாக நெளியாக நிறைய அழுக்காக இருக்கும். அவன் குளித்து யாரும் பார்த்ததில்லை. கடந்து போனால் ஒருமாதிரி உணவு வாசனை வரும்.
கிடைத்த சோற்றைத் தின்றுவிட்டு பெருமாள் கோயில் சொர்க்கவாசல் படிக்கட்டில் அரங்க சயனத்தில் இருப்பான். அடுத்த படியில் ஒரு நாய் ஒன்று அவனுடன் உறங்கும். ஒருதடவை உருண்டு விழுந்ததில் நாய் தப்பிக்க பதில்விசை (ரிப்ளக்ஸ்!) போதாமல் காலை நசுக்கிக் கொண்டதில் இன்னும் விந்தி நடக்கிறது. ஆனால் அவன் கூடவே வரும். குகே உறங்கும்போது பையன்கள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. காதில் புறா இறகை விடுவார்கள். நாய் மீது கல்லெறிவார்கள். அது வள்ளென்று அலறி ஓடும்போது குகேயும் திடுக்கிட்டு எழுந்து 'ஏய்ய்ய்' என்று இரைய, பையன்கள் காணாமல் போயிருப்பார்கள். சில சமயம் பையன்களின் தொந்தரவுக்காக அமர்ந்த நிலையிலேயே கோழித் தூக்கம் போடுவான் குகே. அவ்வப்போது இரைச்சலாக வாயு வெளிவிடுவான்.
அக்ரஹாரத்திலிருந்து அரைமைல் தூரத்தில் காவேரி. குகே காவேரிக்குச் செல்வது பெரிய அதிசயம் ஒன்றும் இல்லை. கரையோர முட்புதரில் தினமும் அமர்வது வழக்கம்தான். ஆனால் அன்று குளிக்கச் சென்றது பெரும் அதிசயம். மேடேறியதும் முதலில் வரும் பெண்கள் படித்துறையை அவன் கடந்தபோது, அங்கிருந்த பல வயதுப் பெண்மணிகள் மெலிதான அலறல்களுடன் சில வினாடிகள் அப்படியே ஸ்தம்பித்திருந்து அவன் கடந்ததும் குளியல்களைத் தொடர்ந்தனர். ஆண்கள் படித்துறை கிட்டத்தட்ட காலியாயிருந்தது. குகே சிலீர் தண்ணீரில் சற்றும் மயிர்கூச்சம் இல்லாமல் இறங்கிக் கழுத்தளவில் நின்று கொள்ள அவன் இறங்கும் முன்பே சொருக்கடித்து அவ்வளவு நேரம் மூழ்கியிருந்த அம்பி நீரிலிருந்து எழுந்தான். கண்முன் குகே மஞ்சள் காரைப் பற்களுடன் ஈயென்று இளிக்க, காண்டாமிருகத்தை அரையடி தூரத்தில் பார்த்த அதிர்ச்சியில் அம்பி மறுபடியும் மூழ்கி கொஞ்சம் நீர் குடித்து, நீரோட்டத்தில் பெண்கள் படித்துறையில் ஒதுங்கி, வசவுகளுடன் மேலேறி, நடுங்கிக்கொண்டே படியில் வைத்திருந்த கால்சராயை எடுத்துக்கொண்டு ஓடினான். குகே எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல், லங்கோடைக் கழற்றி, கசக்கிப் பிழிந்து காற்றில் உதறி மறுபடியும் அணிந்து கொண்டு, ஏற்கனவே நனைத்துப் பிழிந்திருந்த வேட்டியை கையைக் கொடியாகப் பாவித்து அதில் பரப்பிக் கொண்டு மறுபடியும் அக்ரஹாரத்தை நோக்கி நடந்தான். அதுவரை மேல் படியில் அமர்ந்து அவனையே கவனித்துக் கொண்டிருந்த நாயும் அவனைப் பின் தொடர்ந்தது.
முதல் வீட்டு கோமதிப் பாட்டி 'டே குண்டா' என்று குகேயை அழைக்க, அவன் நின்று திரும்பி கண்களாலேயே என்னவென்று வினவினான்.
'சாப்ட்டியா?'
குகே இல்லையென்று தலையசைத்தான்.
'இங்க வா. செத்த திண்ணைல ஒக்காரு' என்று சொல்லிவிட்டு உள்ளே மறைந்த பாட்டி சற்று நேரத்தில் கலயத்தில் நீர் சோற்றைக் கொண்டுவந்து வைக்க, குகே இருபது வினாடிகளில் வாயோரம் நீர் வழியக் அதைக் காலி செய்துவிட்டு 'பேவ்' என்று ஏப்பம் விட்டான். அவன் முழங் காலில் உள்ளங்கை அகலத்திற்குக் கிழிந்திருந்த தோல் பகுதியில் ஈ மொய்க்க, பாட்டி கரிசனத்துடன் 'மருந்து போட்டுண்டியா? இப்படி தெறந்திருந்தா இன்னும் ரணமாயிடும்டா' என்று விட்டு மறுபடியும் உள்ளே சென்று எண்ணைக் குப்பியுடன் வந்தாள்.
'தேங்காண்ணெ.. போட்டுண்டா ஈ வராது' என்று விட்டு எண்ணையை விரல்களில் விட்டுக்கொண்டு அவன் புண்ணில் மெலிதாகத் தேய்த்தாள். பாட்டியின் புறங்கையில் சுருங்கிய தோலூடே நரம்புகள் ஓடின. காவியுடை, மழிக்கப்பட்ட தலையையும் சேர்த்து மறைத்திருந்தது. நெற்றியில் திருநீறு தோல் சுருக்கங்களோடு போட்டி போட, மென்மையாகப் பேசினாள்.
'செத்த நாழி படுத்திருந்துட்டு அப்புறம் போ.. ஸ்ஸ்ஸ்ஸ் என்ன வெயில்! காலம்பறவே இத்தனை வெயிலடிக்கறதே. இன்னிக்கு மழை வரும். வாசனை அடிக்கறது பாரு' என்று சொல்லி முடிக்குமுன் குகே திண்ணையில் சரிந்து, வாயைத் திறந்துத் தூங்கத் தொடங்கியிருந்தான்.
மூன்றாம் வீட்டில் உளி செதுக்கும் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தது. கோதை வாசலில் நின்றுகொண்டிருந்தாள். திண்ணையில் இரு தச்சர்கள் மும்முரமாக மரத் துண்டுகளை இழைத்துக்கொண்டிருக்க, மரச் சிராய்களும், சீவல்களும் சிதறிக்கிடந்தன. ராஜவேல் வெள்ளையும் சொள்ளையுமாக வாசலில் கக்கத்தில் இடுக்கிய பையுடன் நின்று கொண்டிருந்தான். ராஜவேல் தச்சர்களின் முதலாளி. கோதையின் அம்மா உப்புத்தாள் பையில் மரத் தூளையும், சீவல்களையும் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டிருந்தாள்.
'அம்மா. என்ன அவசரம்? அப்பறம் பொறுக்கிக்கலாம். கண்ல பட்ற போறது'
'அப்றமா? நீ வேற.. இவனுகள் அள்ளிண்டு போயிடுவான்கள்'
'மாமீ.. அதெல்லாம் செய்ய மாட்டோம். நீங்கள் கவலைப் படாதீங்க' என்றான் ராஜவேல். வயதான கொல்லைப்புறக் கதவு பல இடுக்குகளைக் கொண்டிருக்க, அதன் வழியே இரவு நேரங்களில் பல பூச்சிகளும், ஜந்துகளும் உள்ளே புகுந்து மிகுந்த தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன. பார்வதி ஓரிரவு, கொல்லைப்புறத்திற்கு சிறுநீர் கழிப்பதற்காகக் கதவைத் திறந்ததும், நிலைப்படியில் அப்போதுதான் ஏறிய தேள் கொட்டிவிட்டது. அவள் போட்ட கூச்சலில் அலறி எழுந்த கோதைக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. அவசரத்திற்கு ராஜவேல் தான் உதவிக்கு வந்தான். கடிவாய்க்கு மேல் துணியால் இறுகக் கட்டி, மருத்துவரிடம் கொண்டு சென்றவனும் அவனே. புதுக் கதவு செய்ய யோசனை கூறி, கொல்லையில் பட்டுப் போய் நின்றிருந்த மரத்தை உபயோகித்துக் கொள்ளும் உபாயத்தையும் அவனே கூறினான்.
பார்வதிக்கு அது சரியென்று படவே, அந்த பட்டுப்போன மரம் இப்போது திண்ணையில் படுத்துக் கொண்டிருக்கிறது. உளியால் நன்றாக இழைக்கப்பட்டு புது நிறமாகிக் கொண்டிருக்கிறது.
'கதவு போக மரம் மிச்சமிருக்கும். பரண் போட்டுடலாமா?' என்று ராஜவேல் கேட்டதற்கு பார்வதி தயங்கினாள். 'இல்லாட்டி கட்டில் ஒண்ணு பண்ணிக் கொடுக்கறேன். பனிக் காலத்துல சிமெண்ட் தரைல படுக்காதீங்க. காசப் பத்தி கவலைப் படாதீங்க. எனக்கு ஒண்ணும் வேணாம். சும்மா பண்ணித் தரேன்' என்றவனை நன்றியோடு பார்த்தார்கள் தாயும், மகளும்.
'இவளுக்குக் காலாகாலத்துல ஒரு கல்யாணம் பண்ணி பாத்துட்டேன்னா, அப்புறம் தேள் கடிச்சா என்ன, பாம்பு கடிச்சா என்ன?' என்று புலம்பிய பார்வதியை, 'ஸ்ஸ்.. ஆரம்பிச்சுட்டியா' என்று கோதை அதட்டினாள்.
தச்சு வேலை அந்தியில் நிறுத்தப்பட்டு தச்சர்கள் 'காலைல வெள்ளன வரோம்.. நாளைக்கு முடிச்சிடலாம்.. வரோம்ங்க அண்ணாச்சி' என்று ராஜவேலிடம் விடைபெற்றுக் கொண்டார்கள்.
'டீ.. நான் செத்த கடைக்குப்போயிட்டு வரேன். மழை வரும்போல இருக்கு. கொஞ்சம் சாமான் வாங்கிண்டு வந்துடறேன்' என்று பார்வதி உள்ளே பார்த்துச் சொல்லிவிட்டு, கிளம்பித் தெருமுனையில் மறைய, ராஜவேல் திண்ணையிலிருந்த தச்சுச் சாமான்களை பையில் சேகரிக்கத் தொடங்கினான்.
பெருமாள் கோவிலிலிருந்து வந்த மணியோசையில் குகே எழுந்துவிட்டான். அன்றைக்கு ராமராயர் கட்டளை.. அருமையான பொங்கல் மணம் காற்றில் மிதந்து அவன் நாசியை அடைந்ததில் பசியை உணர்ந்த குகே, கோயிலுக்கு நடந்தான். குகேக்கு வரிசைப் பிரச்சினை இருந்ததே இல்லை. மரியாதையாக வழிவிட்டு விடுவார்கள். பெரிய ஜோடு பாத்திரத்திலிருந்து பொங்கல் வினியோகித்துக் கொண்டிருந்த முத்து, குகேயைப் பார்த்ததும் புன்னகைத்து, 'ஓய்.. வந்துட்டீரா? உம்மை நம்பிதான் இவ்ளோ பண்ணி அனுப்பிருக்கார் ராயர்வாள்.. எங்க வராம போயிடுவீரோன்னு பயந்துட்டேன்' என்று கிழிக்காத வாழையிலையில் பொங்கலைக் குவித்துக் கொடுக்க, குகே பெருமாள் வாசலில் அமர்ந்து அதைக் காலி செய்தான். அவனைக் கடந்து சென்ற சில பெண்மணிகள் 'சாமிப் ப்ரசாதத்த நாய்க்கும் போடறான் பாரு..அறிவுகெட்டவன்' என்று கடிந்ததை அவன் சட்டை செய்யவில்லை.
வருணன் வானவில்லில் மழை அம்புகளைத் தொடுத்து பூமிமேல் எய்யத் தொடங்கியிருந்தான். நாணிலிருந்து அம்புகள் விடுபட்ட ஒலி இடியாய் இடித்தது. இருள் சூழத் தொடங்கியிருந்தது. வெப்பம் தொலைந்துபோய் சில்லெனக் காற்று அடித்தது. அவனுக்குச் சிலிர்க்கவில்லை. தோல் அப்படிப்பட்டது. என்ன நினைத்தானோ தெரியவில்லை. தெருவில் நின்று கண்களை மூடிக்கொண்டு அண்ணாந்து நோக்கினான். பின்பு மெதுவாக நடந்து கோதை வீட்டை நெருங்கியதும் ஒரு கணம் நின்றான். மருண்ட கண்களுடன் கோதையின் முகம் அவன் நினைவில் வந்திருக்கவேண்டும். அவன் உதடுகளில் ஒரு மந்தஹாசப் புன்னகை பரவியது. திண்ணையில் ஏறி உள்ளே பார்த்தான். கக்கத்தில் இடுங்கிய பையுடன் வெளிப்பட்ட ராஜவேல் குகேயிடம் 'என்ன சாமி! செளக்கியமா இருக்கீஹளா?' என்று விட்டு, தெருவில் இறங்கிப் போக, குகே திண்ணையில் அமர்ந்துகொண்டான். பிறகு எழுந்து மறுபடியும் வீட்டினுள் எட்டிப் பார்த்து உள்ளே நுழைந்தான். மழை ஆவேசமாகப் பொழிந்து கொண்டிருந்தது.
***
காலைக் கதிரவன் கோபுரத்தில் தங்க நிறத்தைத் தூவிட, குகே எழுந்தான். ஒரு நிமிடம் எங்கே இருக்கிறோம் என்று யோசித்தான். தெருவில் அவ்வளவாக ஆள் நடமாட்டமில்லை. இரவு முழுதும் மழை பெய்திருந்தது. வீடுகளின் முன் தேங்கியிருந்த தண்ணீரில் குழந்தைகள் காகிதக் கப்பல்களை விட்டுக் கொண்டிருந்தார்கள். தங்குமிடம் கிடைக்காததால் மழையில் நனைந்த நாய், ஓரத்தில் நிச்சயமில்லாமல் அமர்ந்து நடுங்கிக் கொண்டிருந்தது. சில காகங்கள் அக்கம் பக்கம் பார்த்து எச்சரிக்கையுடன் நீரருந்தின.
தெரு முனையில் பார்வதி வேகமாக நடந்து வருவது தெரிந்தது. குகே தெருவிலேயே நின்று கொண்டிருந்தான். பார்வதி உள்ளே நுழைந்து சில நிமிடங்களில் 'ஓ'வென்று அலறும் சத்தம் கேட்க, அக்கம் பக்கத்தினர் 'என்ன என்ன?' என்று ஆவலுடன் குழுமத் தொடங்கினர். வீட்டு வாசலில் தலை வாரிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு அம்புஜம்தான் பார்வதியின் அலறல் கேட்டதும் முதல் ஆளாகப் பாய்ந்தோடி 'என்ன ஆச்சு பார்வதீ?' என்று கேட்டு, கண்ட காட்சியில் சிலையாகி நின்றுவிட்டாள். தரையில் கிழிந்த நாராகக் கிடந்தாள் கோதை. பார்வதி 'அய்யய்யோ என்ன ஆச்சுடி? என்னடி இது?' என்று அடித்துக்கொண்டு அழுதாள். 'அய்யோ. மழை பலம்மா இருந்ததாலே கடைக்குப் பக்கத்துல இருந்த சிவகாமி ஆத்துலயே நின்னு பார்த்துட்டு, அப்படியே ராத்தங்கிட்டேனே.. வயசுப் பொண்ணு வீட்டுல தனியா இருக்காளேங்கற எண்ணம் இல்லாம போச்சே' என்று தலையிலடித்துக்கொண்டு ஓலமிட்டாள். அக்கம் பக்கப் பெண்மணிகள் குழுமி ஆளாளுக்கு ஒரு கதையைச் சொல்லி ச்சு கொட்டிக்கொண்டிருக்க, அம்புஜம் கோதையை எழுப்பி அமர வைத்தாள். தலை கலைந்திருக்க, போராடியதின் பலனாக உடல் முழுக்கக் கீறல்கள். நைந்த துணிபோல் இருந்தாள் கோதை.
'யாராச்சும் ஒரு சோடா வாங்கிட்டு வாங்களேன்' என்ற அம்புஜத்தின் குரலுக்குச் சிறுவன் மோகன் நிமிடங்களில் சோடா பாட்டிலுடன் திரும்ப வந்து நீட்டினான். அந்த இடம் அல்லோலகல்லோலப் பட்டது. கோதையின் கண்களிலிருந்து தாரைதாரையாக கண்ணீர். பேசாமல் தொடர்ந்து அழுதாள்.
'பாவிப்பொண்ணே.. சொல்லுடி எவண்டி இப்படிப் பண்ணினது.. சொல்லுடீ' என்று பார்வதி அலற அவளை அம்புஜம் அதட்டினாள். 'போலீஸுக்குச் சொல்லலாம்' என்ற சொன்ன வேங்கடத்தை மற்ற மாமாக்கள் முறைக்க ஆட்சேபக் குரல்கள் எழுந்தன.
'அவா கிட்ட போனா இன்னும் சீரழிஞ்சுதான் போவா. ஏற்கனவே பட்டது போதாதா?' என்று யாரோ ஒருவர் அதட்டினார். 'எவன் பண்ணிருப்பான்?' என்று ஆளாளுக்குக் கேள்வி கேட்டனர். இந்த அமளிதுமளியால் கவனம் ஈர்க்கப்பட்ட குகே மெதுவாக அசைந்துவந்து வீட்டினுள் நுழைய, திண்ணையிலிருந்த சில பெண்மணிகள் அருவருப்புடன் ஒதுங்கிக் கொண்டனர். குகேயின் முகத்தில் நிரந்தரப் புன்னகை.
'இந்த ராட்சஷந்தான் காலைல வீட்ல இருந்து வெளில வந்தான். நான் கோலம் போடறச்ச பார்த்தேன்' என்றாள் எதிர் வீட்டுக் கமலம். வேங்கடம் 'இவன் நேத்து சாயங்காலமே திண்ணைல ஒக்காந்திருந்தான்' என்று சொல்ல எண்ணை எரியத் தொடங்கியது. குகே ஒரு சிறு கும்பலால் சூழப்பட்டான். ஆளாளுக்கு அவனுடம்பில் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் அடித்தார்கள்.
'இவனாடி? இவனாடி? சொல்லித்தொலை' என்று பார்வதி கோதையை உலுக்க, அவள் ஒரு முறை குகேயை ஏறிட்டுப் பார்த்துவிட்டு இன்னும் கதறியழ, கூட்டத்திற்கு இன்னும் ஆக்ரோஷம் கூடி, குகேயைத் துவைத்தார்கள். மலை சரிந்தாற்போல் தெருவில் தள்ளப்பட்டு விழுந்தான் குகே. முகத்தில் இன்னும் புன்னகை மறையவில்லை. வலி உணர்கிறானா என்றே சந்தேகமாக இருந்தது.
'என்ன அழுத்தம் பார்த்தியா? இவ்வளவு நாளா பசுமாதிரி சுத்திசுத்தி வந்துட்டு என்ன காரியம் பண்ணிட்டான் பாரு' என்று ஆளாளுக்கு அடித்தார்கள். வாழ்வில் அடித்தே இராத ஆண்களெல்லாம் அடித்தார்கள். குகே மெளனமாக அனைத்தையும் வாங்கிக்கொண்டான். என்று பேசினான் அன்று பேசுவதற்கு? பார்வதியும் அம்புஜமும் மிக இரைச்சலாகச் சத்தமிட்டுக் கூட்டத்தைத் தடுத்துப் பார்த்தார்கள். முதலில் பற்ற வைத்த வேங்கடமே 'விட்டுத் தொலைங்கப்பா.. நிறுத்துங்கப்பா. செத்துகித்துப் போயிடப்போறான். அப்றம் நம்ம எல்லாரும் கோவணத்தோட ஸ்டேஷன்ல ஒக்காரணும்' என்று அலறியதும்தான் அடி விழுவது நின்றது.
குகேயின் உதடுகள் கிழிந்திருக்க, நெற்றியிலும், முழங்கைகளிலும் சிராய்த்து, ரத்தம் எட்டிப் பார்க்க, இடதுகை சுண்டு விரல் ஒடிந்து வினோத கோணத்தில் இருந்தது. கடைவாயில் லேசாக எச்சில் ஒழுக, குகே கூட்டத்தை வெறித்துப் பார்க்க, சற்று பின்வாங்கி நகர்ந்தார்கள். அவன் மெதுவாக நடந்து மறுபடியும் வீட்டினுள் நுழைய, யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை. கோதையை நெருங்கியவன் தரையில் அமர்ந்து அவளையே உற்றுப்பார்த்தான். அவன் கண்களில் தெரிந்த உணர்ச்சிகள் இன்னதென்று இனம் பிரித்தரிய முடியாதவையாயிருந்தன. கோதை சட்டென்று மயங்கிச் சரிந்தாள். கூட்டம் நிச்சயமில்லாமல் நிற்க, வேங்கடம் பார்வதியை அணுகிக் காதில் ஏதோ சொல்ல, பார்வதி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். அம்புஜம் என்னதென்று கேட்டுக்கொண்டு தகவல் ஒலிபரப்பைச் செய்ய, கசகசவென்று அனைவரும் பேசிக்கொண்டிருக்க, கூட்டம் மெதுவாகக் கரையத் தொடங்கியது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, குகேயை யாரும் தெருவில் பார்க்கவில்லை. கோதையின் வீட்டுத் திண்ணையிலேயே கிடந்தான். எங்கேயும் செல்லவில்லை. மற்றவர்களுக்கு அவரவருடைய வாழ்க்கைப் பிரச்சினைகள் இருக்க, கிட்டத்தட்ட கோதையையும், குகேயையும் மறந்தே போனார்கள்.
***
அக்ரஹாரம் வழக்கம்போல் இயங்கிக் கொண்டிருக்க, ஆறு மாதங்கள் கழித்து, தெரு நடுவில் இருந்த பாடசாலையில் ஒரு சுபயோக தினத்தில் கோதைக்கும் குகேவிற்கும் திருமணம் நடந்து முடிந்தது. அடுத்த நான்கு மாதங்களில், பலர் புருவம் உயர்த்த, சிலர் பரிகசிக்க, கோதை அழகான ஆண் சிசுவுடன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பினாள்.
***
பார்வதி வீட்டைச் சுமாராக அலங்கரித்திருக்க, கோதை குழந்தையைவிட்டு ஒரு வினாடியும் நகராமல் இருந்தாள். குகே குழந்தையைத் தூக்காவிட்டாலும், வாஞ்சையுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது ஒரு விரலால் அதன் கன்னத்தைத் தொட்டு நெற்றியை வருடினான். குழந்தை புன்னகைத்தபோது, அவன் கண்கள் ஒளிர்ந்தன. அந்திப் பொழுதில் மலர்ந்த மலர்களைப்போல, எண்ணை விளக்குகள் வீட்டினுள் இருக்க, அழகாகக் கோலமிடப்பட்டு, பெண்கள் கலகலத்துக் கொண்டிருந்தார்கள். பாட்டியான பார்வதி கோதைக்கு உதவியாக அவளருகிலேயே இருக்க, பக்கத்துவீட்டு அம்புஜம் தான் ஓடியாடி எல்லாரையும் வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தாள். புண்யா ஜனனம் நடத்தி வைக்க வந்த சாஸ்திரிகள் லேசான அசூயையுடன் சடங்குகளைச் செய்துகொண்டிருக்க, பெண்கள் ஒருவர் மாற்றி ஒருவர் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். வேங்கடம் குகேயிடம் 'அப்படியே ஒன்னை உரிச்சு வச்சுருக்கான் குட்டிப்பயல்' என்று அவன் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தார்.
'கொழந்தைக்கு பேர் முடிவு பண்ணியாச்சா?' என்று சாஸ்திரிகள் வினவ, கோதை குகேயைப் பார்த்தாள்.
'கேட்டைல பொறந்துருக்கு.. க,கா..கி, கீ.. ர, ரா, ரி..ன்னு ஆரம்பிக்கறமாதிரி எதாவது பேர் சொல்லுங்கோ'.
பார்வதி 'என் ஆத்துக்காரர் ஞாபகார்த்தமா கிருஷ்ணன்னு வெக்கலாம். தாத்தா பேர் வைக்கறது வழக்கம்தான்' என்று பொதுவாகச் சொன்னாள்.
'பேஷா வைக்கலாமே. கொழந்தை குட்டிக் கிருஷ்ணனாட்டமா இருக்கான்'
கோதை மறுபடியும் குகேயைப் பார்க்க, அவன் யோசனையில் இருந்ததைப்போல தோன்றியது.
'தோப்பனார்கிட்ட கேளுங்கோ.. அவர் பேசுவாரா?'
வேங்கடம் குகேயின் தோளைத் தட்டி 'அப்பா குண்டலகேசி.. கொஞ்சம் வாயத்தொறந்து சொல்லேண்டா. ஒம்பையனுக்கு ஒம்பேரு மாதிரியே ஒரு அழகான பேரு சொல்லு' என சிலர் சிரித்தார்கள். வேங்கடம் சாஸ்திரிகளை நோக்கி 'மூணு பேரு வைக்கலாமில்லையோ?' என்று சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டார்.
குகே பேசுவான் என யாரும் எதிர்பார்க்காமல் அவரவர் அரட்டையில் இருக்க, கோதை இன்னும் சில பெயர்கள் யோசித்து வைக்காமல் போனதற்குத் தன்னையே கடிந்துகொண்டாள். பார்வதி மனதில் வைத்திருந்த ஒரே பெயரையும் சொல்லிவிட்ட திருப்தியில் வேறு சிந்தனையின்றி இருக்க, குகே ஒருமுறை கோதையைப் பார்த்துவிட்டு, குழந்தையை முதல் முறையாக அள்ளி மடியில் வைத்துக்கொண்டு, அதன் காதில் குனிந்து முணுமுணுக்க, எல்லாருக்கும் ஆச்சரியத்தில் புருவங்கள் உயர்ந்தன.
வேங்கடம் 'சபாஷ்..' என்றார். சாஸ்திரிகள் அடுத்த நிகழ்ச்சிக்குப் போகும் அவசரத்தில் இருந்தார். எப்படியும் பெரியதாக தட்சணை கிடைக்காது என்று அவருக்குத் தெரியும். இருந்தாலும் அவருக்கும் ஆவல் கிளம்பியது. 'அம்பி.. என்ன பேரு.. சொல்லு' என்றார்.
குகே சாஸ்திரிகளைப் பார்த்து கம்பீரமாகச் சொன்னான், 'ரா..ஜ..வே..ல்'.
***
நன்றி : மரத்தடி.காம்
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
இது யார் எழுதுன கதைன்னு சொல்லலியே சுந்தர். இல்லை எங்கேயாவது சொல்லியிருக்கீங்களா, எனக்கு தான் தெரியலையா?
நாந்தாஞ்சாமி. நானேதான்!! பின்ன யாராவது மண்டபத்துல கொடுத்ததையா இங்க வந்து போட்ருக்கேன்? :)
உண்மையாகவா சுந்தர்? கதையின் நடை ஒரு தேர்ந்த எழுத்தாளரின் நடையைப் போல இருக்கிறது. அதனால் தான் அந்த சந்தேகம் வந்தது. வாழ்த்துகள். வலைப்பதிவர்களில் ஒரு நல்ல எழுத்தாளரைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
சுந்தர்,
கதையின் போக்கு ஊகிக்கக் கூடியதாகத்தானிருக்கிறது.
குகேயின் பாத்திரப்படைப்புக்கு அவ்வளவு நீளம் தேவையா?
ஒருவேளை இலக்கியவாதிகளுக்கு இந்த பாணி சரியாய்த் தோன்ற வாய்ப்புண்டு :-)
சிறுகதையின் ஒவ்வொரு எழுத்தும் கதைக்குத் தேவையானதாக இருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
கதைக்கு ஏற்ற படங்கள் அருமை. நெகடிவ் எஃபக்டுக்குப் பதிலாக கோட்டு உருவங்களாக மாற்ற முயற்சி செய்யுங்களேன்.
குமரன். உங்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷமே. நன்றி.
நிலா.
இதுவும் முதல் சிறுகதை என்பதால் சரியாக அமையவில்லை. சிறுகதைக்கு அளவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளவே கடினமாக இருக்கிறது.
//சிறுகதையின் ஒவ்வொரு எழுத்தும் கதைக்குத் தேவையானதாக இருக்கவேண்டும்//
சரியாகச் சொன்னீர்கள். ஆனால் படைப்பாளியாகப் பார்க்காமல் வாசகனாகப் படித்தால்தான் எதெல்லாம் தேவையில்லை என்று கண்ணுக்குப் படும். :) வாசகனாப் படிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை :) இன்னும் முயற்சி செய்கிறேன்.
நன்றி.
நிலா.
//கதைக்கு ஏற்ற படங்கள் அருமை. நெகடிவ் எஃபக்டுக்குப் பதிலாக கோட்டு உருவங்களாக மாற்ற முயற்சி செய்யுங்களேன்//
நல்ல யோசனை. முயற்சி செய்கிறேன்.
ஒரு காலத்தில் இருந்த சித்திரத் திறமையையும் சரியாகப் பயிற்சி செய்யாமல் குழிதோண்டிப் புதைத்தாகிவிட்டது. இல்லாவிட்டால் சொந்தமாகவே வரைந்து போட்டிருப்பேன். :)
என் சித்தப்பா ஒரு சிறந்த ஓவியர் - மறைந்து சில வருடங்களாகிறது.
//ஒருவேளை இலக்கியவாதிகளுக்கு இந்த பாணி சரியாய்த் தோன்ற வாய்ப்புண்டு :-)//
இது சரியான உள்குத்தா இருக்கே!
//இது சரியான உள்குத்தா இருக்கே! //
:-)))
ஆமாங்க, நானெல்லாம் இலக்கியவாதியில்லை... (இலக்கியம்னா என்னன்னே இன்னும் புரியலைங்க).
Post a Comment