Thursday, December 15, 2005

* லஞ்சம் சரணம் கச்சாமி *

* லஞ்சம் சரணம் கச்சாமி *


வாழ்க்கையில் சில விஷயங்களைச் சந்திப்பதற்குக் கடுமையாக மிரட்சியடைவதுண்டு.. அச்சிலவற்றில் பெரும்பாலானவை அரசாங்கத் துறைகளில் ஆக வேண்டிய காரியங்களுக்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்லவேண்டியிருப்பது. அப்படி ஏதாவது காரியம் ஆக வேண்டியிருந்தால் அதை எப்படியாவது தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருந்ததுண்டு. காரணம் வெறுப்பு. சற்றும் வெட்கமின்றி, கை நீட்டும் நபர்களைக் கண்டு ஆத்திரம் பொங்கும்.

நியாயவிலைக் கடையில் கால் கடுக்க மண்ணெண்ணை வாங்க வரிசையில் நின்று (நாம் நிற்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே அல்லது சில நாட்களுக்கு முன்பே எண்ணை டின்களின் வரிசையில் ரிசர்வ் செய்து கொள்ள வேண்டும்) கால்கள் தொய்ந்து விழும் நிலையில் பேரல் முன்பு முக்காலியில் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு ஜட்டி தெரிய உட்கார்ந்திருக்கும் அந்த ஆள், ஐந்து லிட்டர் அளவையில் அபார வேகத்தில் எண்ணை நிரப்பி, அதைவிட அதிக வேகத்தில் நுரைக்க நுரைக்க புனல் மூலம் டின்னில் ஊற்றி, நம் முகத்தைப் பார்க்காமல் கையில் கொடுக்கும்போது அதில் நாலு லிட்டர் தான் இருக்கும். மீதி கீழே இருக்கும் தகரப் பலகையில் சேமிக்கப்பட்டு ஐந்து லிட்டர் சேர்ந்ததும் இன்னொரு வாடிக்கையாளருக்கு ஊற்றப் படும். வயிறு எரிய எரிய அடுப்பு எரிய எண்ணை வாங்கி வந்திருக்கிறேன். வெறுப்பு மனதில் மண்டும்.

ஸ்டேட் பாங்க்கிற்கு நண்பனுக்கு கடன் வாங்குவதற்காகச் சென்றிருந்தபோது, காலை 9 மணியிலிருந்து காத்திருந்தோம். கடன்களை கவனிக்கும் அலுவலர் பதினோரு மணிக்கு சட்டையில் மூன்று பட்டன்களைத் திறந்து வைத்துக்கொண்டு, கைக்குட்டையை கழுத்தைச் சுற்றி காலர் அழுக்காகா வண்ணம் மடக்கி வைத்துக் கொண்டு, தொப்பையுடன் வந்து நாற்காலியில் அமர்ந்ததும் விகடன் படிக்க ஆரம்பித்தவர் இருபது நிமிடங்களுக்கு எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. நாங்களும் அவரது கவனத்தை ஈர்க்க முயன்று, தோற்றுப் போனோம். கடைசியில் வேண்டா வெறுப்பாக 'என்ன வேணும்?' என்று கேட்டுவிட்டு நாங்கள் கொடுத்த விண்ணப்பப் படிவத்தையும், மற்றும் சில காகிதத்தையும் மேம்போக்காக ஆராய்ந்து விட்டு, 'போங்க.. சொல்லி அனுப்பறோம். அப்ப வந்தா போதும்' என்றார் அசிரத்தையாக.

'எப்ப சார்?'

'எப்ப வேணாலும்.. காசு வேணும்ல? சொன்னா வரணும்'

'வந்துர்றோம் சார்'

'லோன் கிடைக்கறது சந்தேகம்தான். நா பாக்கறேன்'

'சார். நீங்க தயவு பண்ணினாக் கண்டிப்பா கிடைச்சுரும்'

'ம்ம் பாக்கலாம்'. அவர் எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்தும் புரியாதது போல் காட்டிக் கொண்டோம். காகிதங்களைக் கோர்த்திருந்த பேப்பர் க்ளிப், அவர் புரட்டியதில், தெறித்து விழ, மேசை மேல் இருந்த ஸ்டேப்ளரை வைத்து அமுக்கிப் பார்த்தார். அதில் பின் இல்லை. மறுபடியும் அமுக்கினார். அது 'ஒய்க்' என்று சத்தமில்லாமல் பேப்பரை அமுக்கி வெளி வர, உதறி மறுபடியும் முயன்றார். 'அதுல பின் இல்ல' என்று சொல்ல விழைந்தும் சொல்லவில்லை. கோபித்துக் கொண்டால் என்ன செய்வது என்று பயம்.

'மணீ..' என்று ஆபிஸ் பையனை அழைத்து 'இது வேலை செய்யலை. வேற ஒண்ணு புதுசு கொண்டு வா' என்று சொல்லிவிட்டு, அதைக் குப்பைக் கூடையில் எறிந்தார். நாங்கள் சத்தமில்லாமல் வெளியேறினோம்.

பி.காம் சீட்டுக்காக மதுரையில் அனைத்துக் கல்லூரிகளிலும் ஏறி இறங்கினேன். அனைத்து இடங்களிலும் ஒரே வகையான உரையாடல்:'

'நீ எப்ஸியா பிஸியா?'

என் அப்பா மெதுவாக 'எப்.ஸி. ஸார்' என்பார். நான் இக்கேள்விக்கு இனிமேல் பதில் சொல்ல மாட்டேன் என்று எட்டாவது படிக்கும்போதே முடிவு செய்திருந்தேன் என்பது அவருக்குத் தெரியும்.

'மார்க் எத்தனை?'

'தொள்ளாயிரத்து எம்பத்தெட்டு'

'எப்ஸியா இருந்துக்கிட்டு தொள்ளாயிரத்துச் சொச்சந்தாங்கிறியே? ஆயிரத்துக்கு மேல இருந்தாதான் இன்னேரம் வந்திருக்கும்.'

யாருக்கோ போன் செய்கிறார். பின்பு என் தந்தையிடம் 'பி.காம்.க்கு லாஸ்ட் மார்க் 900 எடுத்திருக்காங்க' என்றார்.

'நான் 988 ஸார்'

'அட்மிஷன் கார்டு இன்னேரம் வந்திருக்கணுமே. தொள்ளாயிரம் வரைக்கும் அட்மிட் பண்ணிருக்கோம்'

'வர்லையே சார்'

'எந்த ஸ்கூல்?'

'டிவிஎஸ்'

'அப்ப கட்டாயம் வந்துருக்கணும். போஸ்ட்டல் டிலேன்னு நினைக்கறேன்'

'இல்ல சார். இங்கயும் அங்கயும் ரெண்டு போஸ்ட் ஆபிஸ்லயும் செக் பண்ணிட்டேன்'

'எந்த க்ரூப்'

'ஃபோர்த் க்ரூப் ஸார்'

'ஃபோர்த் க்ரூப்பா? ஓ.. டமில் மீடியமா?'

'ஆமா சார்'

'அதாஆஆன் வர்லை.. தமிள் மீடியத்துக்கெல்லாம் மொதல்ல குடுக்கமாட்டாங்க. இங்கிலீஷ் மீடியம்னா தொள்ளாயிரம் இருந்தாலும் போதும்'

'ரெண்டும் ஒரே சப்ஜெக்ட் தானே சார். அப்றம் ஏன் எனக்கு சீட் கொடுக்கலை. அக்கவுண்டன்ஸில செண்டம் சார். காமர்ஸ்ல 98%'

'இருக்கட்டும்பா.. இங்க காலேஜ்ல தமிள் கிடையாதுல்ல.. எல்லாத்தையும் இங்கிலீஷ்லதான படிக்கணும்.. நீ அங்க பற்று வரவுன்னு படிச்சுருப்பே.. இங்க வந்து டெபிட் க்ரெடிட்னு படிச்சா ஒனக்கு ஒண்ணும் புரியாது'.

'சார். தமிழ்ல படிச்சாலும் கூடவே தேர்ட் க்ரூப் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட இருந்து இங்கிலீஷ் அக்கவுண்டன்ஸி புக்கையும் வாங்கி அதையும் தரோவா படிச்சிருக்கேன் சார்'

'நா ஒண்ணும் செய்ய முடியாதுப்பா. அட்மிஷன் முடிஞ்சு போச்சு. வெள்ளைச்சாமி நாடார்ல ட்ரை பண்ணுங்க'

'நா நாடார் இல்லை சார். அங்க கெடைக்காது'

அவர் டென்ஷனாகி என் அப்பாவிடம் 'பையன் ரொம்ப பேசறான். காலேஜ்ல சேர்றதுக்கு முன்னாடியே இப்படின்னா சேந்ததுக்கப்புறம் படிக்கமாட்டான். சீட் கிடையாது. போய்ட்டு வாங்க'

என் அப்பா அவரிடம் பலமுறை மன்னிப்புக் கேட்கத் தொடங்கிய வேளையில் நான் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வெளியே கிளம்பிவிட்டேன்.

கடைசியில் யாரும் சீண்டாத செளராஷ்ட்ர கல்லூரியில் யாரும் சீண்டாத புதிதாகத் துவங்கியிருந்த B.A.Corporate Secretaryship -க்கு சீட் கிடைத்தது. அதில் சேர்ந்ததும், பி.காம். சேராததற்குச் சந்தோஷப் பட்டேன்.

வாடகை வீட்டில் எத்தனை ஆண்டுகள் வசிப்பது என்று இரண்டு வருடம் முன்பு ஸ்ரீரங்கத்தில் ஒரு சிறிய செகண்ட் ஹாண்ட் ப்ளாட் வாங்கியதும், மதுரையிலிருந்து குடிபெயர்ந்து ஸ்ரீரங்கத்துக்கு வந்தோம். அந்த ப்ளாட்டை பதிவு செய்யச் சென்றபோது ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் அவர்கள் ஆடிய ஆட்டத்தில் என் தந்தை சோர்ந்து போனார்.

'அய்யாயிரம் கேக்கறாங்கப்பா' என்றார்.

'எதுக்கு?' என்றதற்கு ஒரு விரக்திச் சிரிப்பு கிடைத்தது.

'கொடுத்தாவணும்.. இல்லாட்டி பத்திரம் கெடைக்காது'.

அய்யாயிரம் கேட்ட சப்-ரிஜிட்ரார் ஒரு பெண்மணி என்றறிந்தபோது இன்னும் வயிறெரிந்தது. "செகண்ட் ஹேண்ட் வீடுங்கறதாலதான் அய்யாயிரம். இல்லாட்டி இருவது தரணும்" என்றார் என் கண்களைச் சந்திக்காமல்.

பதிவு முடிந்ததும் மின்சார இணைப்பு, நீர் இணைப்பு அனைத்தையும் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது; ரேஷன் கார்டு மதுரையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு மாற்ற வேண்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் கொடுக்கவேண்டியிருந்தது.

இதற்கு வாடகை வீட்டிலேயே இருந்திருக்கலாம் என்று இன்று வரை தோன்றிக் கொண்டிருக்கிறது. பல நிகழ்வுகள்.

போனவருடமே சுனாமிக்கு முன்பு பெய்த மழையில் சாக்கடைகளெல்லாம் நிரம்பி தெருவுக்கு வந்துவிட்டதில், சாக்கடை தோண்ட ஒவ்வொரு வீடும் பத்தாயிரம் கொடுக்கவேண்டும் என்று நகராட்சியிலிருந்து நோட்டீஸ் கொடுத்துவிட்டுப் போனார்கள். ஸ்ரீரங்கத்தில் எல்லாத் தெருக்களும் ஒரு நாள் மழையில் சாக்கடை மாதிரி தான் இருக்கும். இப்போது கேட்கவே வேண்டாம். தெருவில் சாக்கடை; நவீன அடுக்குமாடி குடியிருப்புகள். குண்டுங் குழியுமான சாலைகள் மீது நவீன வாகனங்கள்.

ஆனாலும், அன்றிலிருந்து இன்று வரை சாதாரண பொதுஜனம் இன்னும் ஓரத்தில் உண்மையான சாக்கடையிலோ அல்லது தெருச்சாக்கடையிலோ அல்லது விரையும் வாகனங்களிலோ இடித்துக்கொள்ளக் கூடாது என்று அட்லஸ் சைக்கிளில் மஞ்சள் பையோடு போய்க்கொண்டுதான் இருக்கிறது.

தாங்கவே முடியாத விஷயம் என்னவென்றால் முன்பெல்லாம் லஞ்சம் வாங்குபவர்கள் யாருக்கும் தெரியாமல் மிக மிக ரகசியமாக ஒரு குற்றவுணர்வுடன் கூழைக் கும்பிடுடன் தான் வாங்குவார்கள். இப்போது நாம் தான் கூழைக் கும்பிடு போட்டு 'பாத்துச் செய்ங்க ஐயா' என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது. பணம் குறைவாக இருந்தால் சீறி விழுகிறார்கள்; அல்லது உதாசீனம் செய்கிறார்கள். இந்தப் பிறழ்வு எப்படி எதனால் நடந்தது என்று அதிர்ச்சியாக இருக்கிறது.


ஆட்சித் தலைமை தவறு செய்யத் துவங்கிய அந்தக் கணமே எல்லா நிலை ஊழியர்களின் நேர்மையைக் கேள்விகேட்கும் தகுதி பறிபோய் விடுகிறது போல. நீயே திருடன்; என்னைக் கேள்வி கேட்க உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று ஒவ்வொருவரும் மற்றவரைக் கேட்கமுடியும் இன்று.

சில சமயங்களில் நம்மை நோக்கியே இந்தக் கேள்விகள் விழும்போதுதான் புண் எந்த அளவிற்குப் புரையோடிப் போயிருக்கிறது என்பதை உணர முடிகிறது.



என்னதான் இன்று ஊடகங்கள் கிடுக்கிப்பிடி போட்டுப் பிடித்து மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை - அதற்கு முன்பே தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 'சீட்' பெற்றவர்களை - சுளுக்கு எடுத்துக்கொண்டு இருந்தாலும், நம் உழைப்பின் வியர்வையின் ஈரம் படிந்த பணம், வியர்க்கவே வியர்க்காத (தோல் செத்த) மனிதர்களுக்குப் போய்ச் சேரும்போது

மிகவும் வலிக்கிறது.

***

16 comments:

Santhosh said...

ரொம்ப நல்லா கோர்வையா எழுதி இருந்கிங்க சுந்தர். ஆனா நீங்க ஒண்ணை புரிந்துக்கொள்ளணும்.லஞ்சம் வாங்குவது ஆட்சி ஆளர்கள் மட்டுமே இல்லை அவங்க திருந்தினா மட்டுமே பத்தாது. மக்கள் மற்றும் கீழ்மட்டத்துல இருக்கிற அதிகாரிகள் திருந்தனும், மேலும் சிவப்பு நாடா நடைமுறைகளை சரி செய்யணும் இவைகள் அனைத்தையும் விட முக்கியமா மக்கள் திருந்தணும்.அப்பொழுது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.

சந்தோஷத்துடன்
சந்தோஷ்.

துளசி கோபால் said...

லஞ்சத்தை ஒழிக்கமுடியுமுன்னு எனக்குத் தோணலைங்க. ஒரு ச்சின்ன வேலைக்காக நம்ம வாழ்நாள் முழூசும் அந்த ஆபீஸ் வாசலிலே காத்திருக்க நம்மாலே முடியுமா?
இந்தியன், அன்னியன்,ரமணான்னு படத்துலே வர்ற ஆளுங்க நிஜமாவே வரணும். அப்படி வந்தாலும்...... சந்தேகம்தான்.

எம்.கே.குமார் said...

சுந்தர்,

லஞ்சம் கொடுத்து ஜாதிச்சான்றிதழோ நோட்டரிபப்ளீக் கையெழுத்தோ (எளீதாக, சீக்கிரமாக) வாங்கியபின் எனக்கு வரும் அவமான உணர்வு என்னைப் பெரிதும் வருத்தியிருக்கிறது.

அரசு மருத்துவமனை வாசலில், உள்ளே செல்ல 10 ரூபாய் கொடுப்பதற்கு சண்டைபோட்ட நான், காவல்துறைக்கு 500 ரூபாய் கொடுத்தபோது வருத்தம் மட்டுமே அடைந்தது ஏன் என்று யோசிக்கிறேன்.

"கோப்ரா போஸ்ட்" நிருபர் போல தமிழ்நாட்டில் மிக எளிதாக நிறையப்பேரை மாட்டவைக்கலாம் என்பது கடந்தமுறை ஊருக்குச்சென்றபோது அறிந்துகொள்ள முடிந்தது. காலத்திற்காக காத்திருக்கிறேன்..

பதிவுக்கு நன்றி. ஒன்பதாம் வகுப்பிலே வந்துவிட்ட உங்களின் மன உறுதிக்கு எனது பாராட்டுக்கள்.

தங்களின் நினைவலைகள் ரசிகன்.
எம்.கே.

Sundar Padmanaban said...

//லஞ்சம் வாங்குவது ஆட்சி ஆளர்கள் மட்டுமே இல்லை அவங்க திருந்தினா மட்டுமே பத்தாது. மக்கள் மற்றும் கீழ்மட்டத்துல இருக்கிற அதிகாரிகள் திருந்தனும், மேலும் சிவப்பு நாடா நடைமுறைகளை சரி செய்யணும் இவைகள் அனைத்தையும் விட முக்கியமா மக்கள் திருந்தணும்.அப்பொழுது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.
//

மன்னிக்கணும் சந்தோஷ். லஞ்சம் வாங்குவது *மக்கள்* இல்லை. மக்கள் வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாகக் *கொடுக்கிறார்கள்*. கொடுக்க முடியவில்லை என்று வீம்பாக நின்றால் இந்தியன் தாத்தாவுக்கு நடந்த மாதிரிதான் நம்மூரில் நடக்கும்.

தலைவன் எவ்வழியோ அவ்வழியே தொண்டனும். மேலதிகாரி நாணயமானவராக நேர்மையாக நடந்துகொண்டால் அவருக்குக் கீழே வேலை செய்பவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள். தலைவரே குறுக்குவழியில் சம்பாதித்தால் தொண்டன் எப்படி நேர்மையாக நடந்துகொள்வான்?

மக்கள் திருந்துவதற்கு ஒன்றுமே இல்லை. மக்களை ஆள்பவர்கள் ஒழுங்காக இருந்தாலே போதும். கைசுத்தமாக இருந்தால் போதும். மாற்றங்கள் நிகழும். *மக்கள் கொடுப்பதால் வாங்குகிறோம்* என்று சொல்வது தலைவர்கள் தப்பிப்பதற்காகச் சொல்வது - அதாவது "பாக்கறாங்க; ரசிக்கறாங்கன்னு ஆபாசமா படம் எடுக்குறோம்" என்பது போன்ற சப்பைக் கட்டு.

கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே இல்லாம வாய்கூசாமல் லஞ்சம் கேட்கும் தைரியத்தை ஒரு ஊழியருக்குத் தருவது யார்? மக்களா இல்லை அவரது மேலதிகரியா? சொல்லுங்கள்.

RTO office போயிருக்கிறீர்கள்தானே. Registrar Office போயிருப்பீர்கள். இன்னும் எத்தனையோ உதாரணங்கள் காட்ட முடியும்.

பொதுமக்களைக் கைகாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னால். தவறு செய்ய நினைப்பவர்கள், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பவர்கள் - இவர்கள்தான் லஞ்சம் *கொடுக்கிறார்கள்*. ஆனால் நியாயமாகச் செய்ய வேண்டிய வேலைக்கும் காசு கேட்பதைத் தான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

Anonymous said...

Refer this page. http://www.viduthalai.com/20051214/thal.html

Looks like sathiyamoorthy did this way back in 1943. So I feel that there is noting wrong with it.

b said...

பன்னுன கல்யாணத்தை ரெஜிஸ்டர் பன்னப் போனா லஞ்சம் கேட்டான்யா அந்த ரெஜிஸ்ட்ரார். வந்துச்சு கோவம்! சட்டைய புடிச்சு செவுள்ல நாலு போடலாமான்னு ஆத்ரம். மாமியா வூட்டுக் காரங்க தடுத்துட்டாங்க. இல்லன்னா நாலு சாத்திட்டு 'மாமியா' வூட்டுக்கு போயிருப்பேன் அன்னிக்கு!

பினாத்தல் சுரேஷ் said...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள் சுந்தர். லஞ்சத்துக்கு துணை (பலமுறை) போகும்போது எனக்கு வரும் வெட்கம், கூச்சம் கூட வாங்குபவனுக்கு இல்லாமல் போனதும், கடமையை மீற லஞ்சம் என்றிருந்த நிலை மாறி கடமையைச் செய்யவே லஞ்சம் என்று ஆகிவிட்ட நிலையும் நம் வாழ்நாளிலேயே நாம் பார்க்கும் வீழ்ச்சி!

G.Ragavan said...

சுந்தர். இந்த லஞ்சம் எல்லா எடத்துலயும் இருக்குது.

பெங்களூருல வீட்டுப் பதிவுக்குப் போனப்போ டீச்செலவுக்குப் பதினஞ்சாயிரம் கொடுத்த வேதனைய என்ன சொல்ல? இதுவே சேட்டுங்கன்னா இன்னும் கூடுமாம். அடக் கொடுமையே!

கானகம் said...

Sundar..
the thought of "Imposible" is the main reason for he Bribes in India. Another thing is no one wants to wait to clear thier papers in Government. As long as we the people of India belive that everything is possible through bribe... No one can stop these malpractice and it will develop further according to our mentality. India is the only country where any one can can come out by bail even if you kill someone. Just imagine what will be the case if it happenned in Muscat or Doha..In India I can come out of Punishment by surrendering omeone as my binami in the court and he will be in jail instead of me and I can turn the case to any extent to my favor... So pray strongly for our countrey and or bribing ... Jeyakumar - Doha - Qatar

Muthu said...

அட இதையும் படிச்சிடுங்க அப்படியே....

http://muthuvintamil.blogspot.com/2005/12/blog-post_10.html

Sundar Padmanaban said...

சதீஷ்,

நான் மக்கள் தவறு செய்யவில்லை என்று சொல்லவில்லை. நாம் தவறு செய்கிறோம் - வேறு வழியில்லாமல். நம்மிலேயே பலர் குறுக்கு வழியில் பலன் பெற நினைத்து லஞ்சலாவண்யத்திற்குத் துணை போகிறோம். முன்பெல்லாம் திரைமறைவாக நடந்தேறியவை இப்போது பகல் வெளிச்சத்தில் அதுவும் பெரும்பான்மையான அளவில் நடைபெறுவதால் இருக்கும் கொஞ்ச நஞ்ச நேர்மையாளர்களும் குற்றவாளிகள் போன்று நடத்தப்படுகிறார்கள் என்ற சீர்கெடலைச் சொல்ல வந்தேன்.

// did you register it for the "real-value" or under value?.
//

இல்லையென்றே நினைக்கிறேன். தந்தையிடம் கேட்கவேண்டும். LIC மூலமாகக் கடன்பெற்று, அவர்களது ஆய்வாளர் வந்து மதிப்பிட்டு பின்பு வாங்கிய வீடு. அவர்கள் சொன்ன விலையே பத்திரத்திலும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. ஆனாலும் அதற்கு மேலே விற்றவரிடம் கூடுதலாகக் கொடுத்திருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது.

எனது கேள்வியே இந்த 'வாய்ப்பு' எப்படி ஏற்படுகிறது என்பதே. எதற்காக குறைந்த மதிப்பில் கிரயப்பத்திரம் பதிவு செய்வதை பதிவாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்? அப்படிக் குறைந்த விலைக்குப் பதிவு செய்ய மறுத்தால், லஞ்சம் கொடுத்தாலும் மறுத்தால், என்ன நடக்கும்?

நம்மிடம் தவறிருக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் நம்மை ஆளும் தலைமையும், நம்மைச் சுற்றியிருக்கும், நாம் அனுதினமும் பல காரியங்களுக்காக அணுகும் அரசு இயந்திரங்களும் முழு நேர்மையுடன் செயல்பட்டால், நாம் தவறு செய்வதற்கான வாய்ப்பு அபரிமிதமாகக் குறைந்துவிடும் என்று நம்புகிறேன்.

Sundar Padmanaban said...

அனானிமஸ்,

//http://www.viduthalai.com/20051214/thal.html
//

இதை திஸ்கியிலும் யூனிகோடிலும் படிக்க முடியலையே :( என்ன எழுத்துரு உபயோகித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? நன்றி.

Sundar Padmanaban said...

மூர்த்தி,

இப்ப எப்படித் தோணுது? மாமியா வீட்டுக்கே போயிருக்கலாம்னா? ;)

சுரேஷ், ஆமாம். அவமானமாகவும் வெட்கமாகவும் இருக்கும் கையாலாகததனத்தை நினைத்து.

ராகவன். டீச் செலவுக்குப் பாஞ்சாயிரமா? அடக் கடவுளே!


ஜெயக்குமார் - இந்தியா போலவே பல்வெறு நாடுகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

இந்தியனில் நிழல்கள் ரவியிடம் கமல் சொல்லும் வசனம் நினைவிருக்கிறதா?

"எல்லா நாட்லயும் லஞ்சம் வாங்கறான். ஆனா அங்க தப்பு செய்ஞ்சதை மறைக்க லஞ்சம் வாங்கறான். இங்க வேலை செய்யவே லஞ்சம் வாங்கறான். இதுதான் நமக்கும் அவங்களுக்கும் இருக்கற வித்தியாசம்"

இதுதான் வித்தியாசம். ஏழை எளியவர்களை வறுத்தெடுப்பதைத்தான் சகிக்கமுடியவில்லை.

வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்களில் பெரும்பான்மையாக இருப்பது அடித்தட்டுத் தொழிலாளர்கள். அவர்களில் நிறையப் பேருக்கு எழுதவோ படிக்கவோ கூட தெரியாது. பாஸ்போர்ட் வாங்குவதிலிருந்து ஏஜெண்ட்டிடம் கடன் வாங்கிப் பணம் செலுத்தி ஆயுள் கைதி போல வளைகுடா நாடுகளில் வெயிலில் வறுபட்டுக் கிடக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பற்றி உங்களுக்கே - நேரடியாகத் - தெரியும். இதில் தவறு யாரிடம் இருக்கிறது? அந்த அப்பாவித் தொழிலாளர்கள் செய்த ஒரே தவறு "இங்கே கூழுக்கும் கஞ்சிக்கும் சிங்கியடிக்காமல் ஏதோ மூன்று வேளை குடும்பத்துக்குச் சோறு போட்டு குழந்தைகளைப் படிக்க வைத்து, கடனில்லாது இருக்க வெளிநாடு போய் - கஷ்டப்பட்டாலும் - வேலை செய்வோம்" என்ற ஒரே எண்ணம்தான். எனக்கு இது தவறாகத் தெரியவில்லை. ஆனால் இவர்களை உபயோகித்துக்கொண்டு இவர்களிடம் - பால் வற்றிய மாட்டிடம் இரத்தத்தைக் கறப்பது போலப் - பணம் கறக்கும் இடைத்தரகர்கள் மீதுதான் மொத்தத் தவறும். இதை நெறிப்படுத்தாமல் கையைக் கட்டிக்கொண்டு கிம்பளம் வாங்கிக் கொழுக்கும் அதிகாரிகள் மீதுதான் தவறு.

விடுங்கள். நாளை நல்லதாய் புலரட்டும். விழிப்புணர்வு பெரும் அளவில் ஏற்படட்டும். தனியொருவனாய் நாம் ஒவ்வொருவரும் லஞ்சத்துக்குத் துணைபோகாமல் நம்மால் இயன்ற அளவு நேர்மையாய் எதையும் அணுக முயற்சி எடுத்தாலே போதுமானது. மாற்றம் நிகழும்.

இந்தக் குறைந்த பட்ச நம்பிக்கை கூட இல்லாவிட்டால் எதை நம்பி வாழ்வது? பயமாக இருக்கிறது.

யாத்ரீகன் said...

யய்யா மாற்றம்ன்றது.. இனி இந்த சென்மங்கள்டருந்து எதிர்பார்க்க முடியாதுங்க.. நான் -veஆ எதுவும் சொல்லலைங்க.. வேற ஒரு practical-ஆன நிரந்தரமான தீர்வ யோசிங்க..

இன்னும் பள்ளிகள்ல... எதுக்கும் உதவாத மெக்காலே கல்வி முறைய விட்டுட்டு.. இந்த மாதிரி நாட்டை பாதிக்குற விஷயங்களோட பிரச்சனைகளோட உண்மையான வேர் என்ன, அதுனால எப்படியெல்லாம், யாரெல்லாம் பாதிக்கப்படுறாங்க, அதெல்லாம் தப்புனு.. சொல்லிக்குடுக்க ஆரம்பிக்கனுமே..

இப்போ வர்ர தலமுறை.. லஞ்சம் குடுக்குறது தப்பில்லைனு ஒரு பார்வையோட வளர்ந்திரப்போராங்க..

-
செந்தில்/Senthil

Anonymous said...

Nadanthathai solla namakku ithanai andukal thevai pattirku.Unmaye sonnal namil puthi sali thanamaga pesum perumpalor ithu mathiriana thavarana seyalai thatti ketathillai.unmai thane.nan oppu kolkiren.ungalil ethanai per?.Innum ettu alaviliye than irukirom.itharku enna seyalam ena sindhithu seyal paduvathe mel.ammam,ithu ennaku nernthathu,ippadi nadanthathu , appadi nadanthathu enru thangal anubavathai pakirnthu kolla vendom.Mudinthal thairimai seyal patungal.Law padithal theriyum mudivil concluded enna venral "Entha kutrathayum adiodu alika mudiyathu anal kuraikamudiyum".

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சுந்தர்,அழகாக(!) எழுதப்பட்ட வலி இருக்கிறது உங்கள் வரிகளில்.

இந்த கோபம் எனக்கும் பல சமயங்களில் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் இதற்கான தீர்வுகள் Bottom Up approach ஆக இருப்பதை விட(கிரி'யின் மனசாட்சி-காவலர் தொப்பை பதிவில் இந்த சுட்டி எதைக் குறிக்கிறது என வியக்கிறேன்-அல்லது சுட்டி மாறிவிட்டதா??) top down approach ஆக இருக்க வேண்டும்,அதுவே தீர்வுகளைத் தரமுடியும் என்று நினைக்கிறேன்,நம்புகிறேன்.