Friday, December 16, 2005

* Coming to America * (இது திரைப்பட விமர்சனம் அல்ல)



* Coming to America *

இது எடி மர்பி நடித்து நீண்ட காலத்திற்கு முன்பு வந்த திரைப்படத்தின் விமர்சனம் அல்ல (இதைத் தழுவி தமிழில் வந்த மை டியர் மார்த்தாண்டன் படம் பற்றியதும் அல்ல)

1999 இறுதியில் பெங்களூரிலிருந்து புலம்பெயர்ந்து மஸ்கட்டுக்கு வந்து ஐந்தரை வருடங்களாகியிருந்தது.

'நம்மூர் அப்போது இருந்தது போலவே இப்போதும் இருக்கும்' என்ற பிரமை எனக்கு மட்டுமா அல்லது புலம்பெயர்ந்த ஒவ்வொரு இந்தியனுக்கும் அப்படித் தோன்றுமா என்று தெரியவில்லை. எதுவும் மாறியிருக்காது என்ற பிம்பத்துடன் ஒவ்வொரு வருடாந்திர விடுமுறையின் போது ஊருக்கு வரும்போதும் பார்க்கும் மாற்றங்கள் ஒவ்வொரு முறையும் என்னை மலைக்க வைத்திருக்கின்றன. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனம் தயங்கும். இந்தியாவில் இல்லாமலிருந்த இழந்த கால இடைவெளி மனதை உறுத்தும்.

மஸ்கட்டின் மொட்டை மலைத்தொடர்களும் காற்றில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும் புழுதியும், அழகான சாலைகளும், சாலையோரப் பூங்காக்களும், இன்னும் அசுத்தமாகிவிடாத கடற்கரையோரங்களும், அதீத வெப்பமும் நிறைந்த வாழ்க்கை பழகிவிட்டது. வாழ்நாளில் பெரும்பகுதியை மஸ்கட்டில் கழித்த எனது குழந்தைகளுக்கும் அது கிட்டத்தட்ட சொந்த ஊர் போன்றாகி விட்டது. ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறை போனால் இறங்கிய சில நிமிடங்களில் நம்மூருக்கு முழுதாக என் மனமும் உடலும் திரும்பி இணைந்து கொள்ள, குழந்தைகள்தான் ஒவ்வொரு முறையும் அவஸ்தைப் படுவார்கள். மழை, வெள்ளம், சூறாவளி, கொலை, குத்து, அரசியல், சினிமா என்று எந்தவித பரபரப்புகளும் இல்லாது, காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியனுடன் வாழ்க்கை என்னவோ நகராமல் அங்கேயே நின்றிருப்பது போன்று கடந்த ஒரு வருடமாகவே தோன்றிக் கொண்டிருந்தபடியால், புலம் பெயர வேண்டும் என்று தீர்மானிக்கத் தொடங்கினேன். முன்பு வசித்த பெங்களூருக்கே திரும்பப் போய்விடலாம் என்பது நானும் என் மனைவியும் எடுத்த ஒரு மனதான முடிவு. ஆனால் வேலை? என் நிறுவனத்தின் இந்தியக் கிளை இருப்பதோ சென்னையில். சென்னை எனக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஊர் (ஏனென்று கேட்காதீர்கள் - தெரியாது - பிடிக்கவில்லை - அவ்வளவுதான்).

மாற்றல் என்றால் சென்னைக்கு மாற்றுவார்கள். பெங்களூருக்குப் போகவேண்டுமென்றால் வேலையை விட்டுவிட்டு அங்கிருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை தேடவேண்டும். ஆனால் தற்போதைய வேலையை விட்டுவிட எந்தவித முகாந்திரமும் எனக்கில்லை. குழப்பத்தில் ஆழ்ந்திருக்கையில் திடீரென்று அழைத்து எங்களது அமெரிக்கக் கிளைக்கு மாற்றுவதாக தலைவர் சொன்னபோது எனக்குள் எந்தவித பரவசமும் ஏற்படவில்லை. ஏற்கெனவே ஸ்ரீரங்கத்தில் தனித்திருக்கும் பெற்றோர்களைப் பற்றி ஏகமாகக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் அமெரிக்காவுக்குப் போவதாவது என்று எதிர்மறை எண்ணங்களே எழுந்தன. விஷயம் கேள்விப்பட்ட சக பணியாளர்கள் வாழ்த்திவிட்டு குழந்தைகளுக்குச் சிறந்த படிப்பு கிடைக்கும்; அதற்காகவாவது அங்கு போ என்று ஏகமாக அறிவுரைகள் சொன்னார்கள். மனதேயில்லாமல் மூட்டை முடிச்சுகளைச் சுமந்து இரண்டு வார விடுமுறை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கத்துக்குச் சென்றுவிட்டு, நல்ல நாள் ஒன்றைப் பார்த்து சென்னைக்குக் கிளம்பினேன்.


கூட்டைக் கலைத்துவிட்டு மறுபடியும் புதிய மரம் தேடி ஓடி முதலிலிருந்து கூடுகட்ட வேண்டிய பறவையின் மனநிலையே எனக்கு இருந்தது.

அமெரிக்கா என்றதும் ஹாலிவுட் படங்களில் பார்த்திருந்த பிரம்மாண்டமும், வானுயர்ந்த கட்டிடங்களும், படகுக் கார்களும், அழகுப் பெண்களும் (சுஜாதா : "அமெரிக்காவில் எல்லாம் பெரிசு. அவர்களுக்கிடையே நம்மூர் மென்பொருள் இன்ஜினியர்கள் கண்ணுக்கே தெரிவதில்லை"), மூச்சுக்கு முன்னூறு தடவை ஆங்கில நாலெழுத்துக் கெட்டவார்த்தை பேசும் அமெரிக்கர்கள் என்று மனதில் கற்பனைக் காட்சிகள் விரிய யோசித்துக் கொண்டே விமான நிலையத்துக்குச் சென்றால் அந்த அர்த்த ராத்திரி வேளையிலும் உள்ளேயும் வெளியேயும் கூட்டம் அம்மிக் கொண்டிருந்தது. புறப்படும் இடத்துக்குச் சென்று அரைத் தூக்கத்துடன் பொதி வண்டியைத் தேடியெடுத்து என்னை மறைக்கும் அளவிற்கிருந்த பொதிகளை ஏற்றிக்கொண்டு உள்ளே சென்றேன். ஒவ்வொருவரின் கண்களும் அந்நேரத்திலும் ஒளிர்ந்ததாக எனக்குத் தோன்றியது பிரமையா? அக்கண்களில் பலவித உணர்ச்சிகள்.

பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு விமான நுழைவுச் சீட்டு வாங்கிக்கொள்ளும் அனைத்து செக்-இன் கவுண்ட்டர்களிலும் கூட்டம். "இவ்வளவு பேர் வெளிநாட்டுக்குப் பிரயாணம் செய்கிறார்களா?" என்று ஆச்சரியமாக இருந்தது. லாரி லோடு அளவுக்குப் பொதிகளைச் சுமந்துகொண்டு வந்து அதிகப்படி கட்டணமில்லாது எடுத்துக் கொள்ள ஊழியர்களிடம் இறைஞ்சும் ஆத்மாக்கள் அன்றும் இறைஞ்சிக்கொண்டிருக்க, ஊழியர்கள் பொறுமையிழந்து எரிந்து விழத் தொடங்கினார்கள்.


எழுபது கிலோ அனுமதி. அதுவும் 2 x 35கிலோ என்று இரண்டே பொட்டிகளாக இருக்கவேண்டுமாம். 7 x 10 ல்லாம் ஒத்துக் கொள்ள மாட்டார்களாம். முன்னால் இரண்டு பெரிய பெட்டிகளையும் இரண்டு குட்டி அட்டைப் பெட்டிகளையும் வைத்திருந்தவர் விவரம் தெரிந்ததும் வரிசையிலிருந்து விலகி எல்லாவற்றையும் பிரித்து சதுரங்கக் காய்களைப் போல மாற்றி மாற்றி வைத்து ஒரே பெரிய பெட்டியில் துணிமணியனைத்தையும் அடைத்து, குட்டியாக இருந்த இரண்டு அட்டைப் பெட்டிகளைப் பிரித்து அதிலிருந்த சிறு க்ரைண்டரையும் மிக்ஸியையும் இரண்டாவது பெட்டியில் வைத்து இரண்டையும் கன்வேயரில் வைக்க அட... அறுபத்தெட்டு கிலோ இருந்தது. புன்னகையுடனும் வியர்வையுடனும் கிளம்பிப் போனார்.

எனக்கு 72 கிலோ. ஆனால் அந்த யுவதி ஒன்றும் சொல்லாமல் புன்னகை மாறாமல் எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு சீட்டைக் கொடுக்க, நான் கடவுச் சீட்டுச் சோதனைக்குச் சென்றேன். அதிகாரிகள் எல்லாரும் தீவிர முகங்களுடன் இருந்தனர். முதல்பக்கத்தைத் திறந்ததும் பிறந்த இடத்தைப் படித்துவிட்டுச் சட்டென்று நிமிர்ந்து புன்னகையுடன் 'வத்றாப்பா? நா ஸ்ரீவில்லிப்புத்தூர்' என்று வழியனுப்பி வைத்தார் அந்த அதிகாரி.

எல்லா சோதனைகளையும் கடந்து விமானத்திற்காகக் காத்திருக்கும் இடத்தில் நிறைந்திருந்த பயணிகளின் ஊடாக நடந்ததில் நள்ளிரவு தாண்டிய நேரத்திற்கான வினோதக் காட்சிகள். தூங்கி அடுத்தவர் தோளில் வழிந்து கொண்டிருந்தவர்கள். அப்போதுதான் எழுந்தது போல் புத்துணர்ச்சியுடன் ஓடியாடிக் கொண்டிருந்த குழந்தைகள். கோட் மாட்டிக்கொண்டு ஒரு பக்கம் சிலர் அமர்த்தலாக நடை பயின்று கொண்டிருக்க, அரைக்கால் சட்டை, கலர் பனியனுடன் காதுகளில் குண்டலங்கள் போன்று இயர் ·போன்களை மாட்டிக்கொண்டு இசை கேட்டபடியே சிலர். ஏகப்பட்ட பேர் அந்நேரத்திலும் மொபைல் பேசிக்கொண்டே இருந்தார்கள். இலவச உள்ளூர் தொலைபேசிக்கு ஒரு வரிசை எப்போதும் இருந்தது.

லுப்தான்ஸாவில் ஏறுவதற்கு ஏகப்பட்ட முஸ்தீபுகள். ஒழுங்குபடுத்தி வரிசைக் கிரமமாக அனுப்பினார்கள். குழந்தைகளுடன் இருப்பவர்களுக்கு முன்னுரிமையாம். ஒரு பத்து வயது பையனைத் தோளில் சுமந்து கொண்டு ஒரு தம்பதி முண்டிக்கொண்டு ஓடியது.

பசித்தவனுக்கு ரொட்டி கொடுப்பதற்கு முன் பிரியாணியை கண்ணில் மட்டும் காட்டி எடுத்துக்கொள்வது போல, லுப்தான்ஸாவில் முன்வாசல் வழியாக ஏற்றி உயர் வகுப்பு ஆடம்பர இருக்கைகளைப் பார்த்துப் பெருமூச்சு விடச் செய்துவிட்டு விமானத்தின் வாலில் இருக்கும் தரை டிக்கெட்டில் அமரச் செய்தார்கள். நீண்டு அகண்ட விமானம். உயர்ந்த புஷ்டியான பணிப்பெண்கள்.

ஓர இருக்கை ஆசாமிகள் முன்னும் பின்னும் திடீரென்று எட்டி எட்டிப் பார்த்தது எதேச்சையா இல்லை கடந்து செல்லும் பணிப்பெண்களின் இடையை உரசுவதற்கா என்று தெரியவில்லை. பிரியாணிப் பிரயாணிகள் இருந்த பகுதியை திரை போட்டு மூடிவிட உணவு வண்டியை எதிர்பார்த்து தரை டிக்கெட் பயணிகளெல்லாம் ஏங்க ஆரம்பித்தோம்.

விமானம் எழுந்து உயரத்தை அதிகரித்துக் கொண்டே சென்று நிலையாகச் செல்லத் துவங்குவதற்குள் ஏகக் களேபரம். பக்கத்து இருக்கை ஆசாமி காதுகளில் பஞ்சை அடைத்துக்கொண்டு கையோடு கொண்டு வந்திருந்த மப்ளரை வைத்து தலையைப் போர்த்திக்கொண்டு விரிந்த U வடிவத் தலையணையை கழுத்துக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டு சில நொடிகளில் தூங்கிப் போனார். வயலில் கத்தும் தவளைகள் போல இருக்கை வரிசைகளுக்கிடையில் கண்ணுக்குத் தெரியாத குழந்தைகள் சத்தமாக அழுதுகொண்டே இருந்தன.

நிறைய விமானப்பயணம் செய்திருந்தாலும் அதிகபட்சம் ஏழு மணிநேரம் ஒரே சமயத்தில் போயிருக்கிறேன். இந்த நெருக்கடியிலா இருபது மணி நேரம் பயணிக்கப் போகிறோம் என்று கிலியாக இருந்தது. இரண்டு இருக்கைகளுக்கும் பொதுவான ஒரு கை. அதில் முழங்கையை வைத்துக் கொள்ள பக்கத்து இருக்கைப் பயணியுடன் போட்டா போட்டி. அந்த ஆள் தலை சொரிவதற்காகவோ, சாப்பாட்டுத் தட்டை வாங்குவதற்காகவோ கையை எடுத்த அடுத்த நொடியில் நான் என் முழங்கையை வைத்து ஆக்கிரமித்துக் கொள்ளவேண்டும். சரியான அவஸ்தை.

இந்தியாவிலிருந்து - குறிப்பாகச் சென்னையிலிருந்தும் ஹைதராபாத்திலிருந்தும் வண்டி வண்டியாக அமெரிக்காவுக்கு வந்து இறங்குகிறோம் போல. என்னோடு சென்னையில் ஏறியவர்கள் எல்லாம் ·ப்ராங்பர்ட்டில் பிரிந்து லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், சிகாகோ என்று மற்ற நகரங்களுக்குப் பிரிந்துபோய்விட, பாஸ்டனுக்கான விமானத்தில் இந்தியர்கள் அரிதாக இருந்தனர்.

இறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே எந்தெந்த படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்; எவ்வகையான சோதனைகள் மேற்கொள்ளப் படும் என்பதை குழந்தைக்குச் சொல்லிக்கொடுக்கிற மாதிரியே முடிந்த வரை எளிமையாக ஒலி ஒளி மூலம் பரப்பினாலும் அதீத பில்டப் கொடுக்கிறார்களோ என்று தோன்றுகிறது. அந்த எளிமையே குழம்பச் செய்கிறது. ஏதோ சொர்க்கத்துக்குச் செல்லும் விமானத்தில் சீட்டு வாங்கிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டுவிடுகிறது.

நான் ஏதோ வானுயர்ந்த கட்டிடங்களின் மத்தியில் சர்ரென்று பறந்து விமானம் இறங்கப் போகிறது என்று நினைத்தேன். மதியம் ஒரு மணிக்கு பாஸ்டனின் லோகன் பன்னாட்டு விமான நிலையத்தில் இறங்கிய போது தூரத்தில் தெரிந்த நான்கைந்து உயர கட்டிடங்களைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. நம்மூரில் விமான நிலையத்தை அத்துவானக் காட்டில் வைத்திருப்பார்களே அது போல இதுவும் ஊரை விட்டுத் தள்ளி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இறங்கினேன். இதைவிட அதிமான கட்டிடங்கள் துபாயிலும் அபுதாபியிலும் இருக்கின்றன.

விமானத்தின் உள்ளே படம் காட்டிய அளவு குடியேற்றத்திற்கான காரியங்கள் அவ்வளவு கடினமாகவோ பயமுறுத்தும் விதமாகவோ இல்லை. நட்பான அதிகாரிகள். ஓரிரண்டு கேள்விகள். 'போய்க்கோ' என்று கடவுச்சீட்டில் குத்தி அனுப்பிவிட்டார்கள். இது "மஸ்ஸாசூசெட்ஸ்" இல்லையாம். "மேஸசூஸெட்ஸ்"ஆம். இதே போல சாவுக்கும் சேவுக்கும் இடைப்பட்ட ஒலியில் chance-ஐயும், பாவுக்கும் பேயிற்கும் இடைப்பட்ட ஒலியில் past-ஐயும் லாவுக்கும் லேவுக்கும் இடைப்பட்ட ஒலியில் Last-ஐயும் உச்சரிக்கவேண்டும்.

கிளம்பும்முன் ஆளாளுக்கு Jet Lag என்பதைப் பற்றிச் சொல்லி சென்று இறங்கி இரண்டு நாட்களுக்கு நடமாடவே முடியாத விஷயம் அது என்பதாக என்னை பயமுறுத்தி வைத்திருந்தார்கள். எனக்கு இப்போது jet lag வரப் போகிறது என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். Jet Lag என்றால் விமானத்திலிருந்து இறங்கி தரையில் கால் பாவாமல் கொஞ்ச நாள் மிதப்போம் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒன்றும் நிகழவில்லை. நீண்ட நேரப் பிரயாணத்தினாலும் விமானத்தில் ஒன்றும் சாப்பிடாததினாலும் அயர்வாக இருந்தது. எனக்கு படுக்கையில் கால் கைகளை நீட்டிப் படுத்து வெளிச்சமில்லாது இருந்தால் மட்டுமே தூக்கம் வரும். பக்கத்து இருக்கை ஆசாமி போல சொடக்கு போட்டதும் எந்த அபத்தமான நிலையிலும் தூங்கும் வரத்தை இறைவன் எனக்குக் கொடுக்கவில்லை. உட்கார்ந்த நிலையில் நான் கனவில் கூட தூங்கியதில்லை. கண்கள் எரிந்தன. இரவு முழுதும் தூங்காதிருந்தாலும் மறுநாள் காலையில் - அதாவது பகற்பொழுதில் - என்னால் தூங்க முடியாது. இரவு வேண்டும்.

உலகிலேயே கழுதைக்கு அடுத்தபடியாகப் பொதி சுமப்பது வெ.நா.வா. இந்தியர்கள் என்பது என் கருத்து (போட்டி - முன்னாள் சகோரர்களான பாக்கிஸ்தானியர்கள். வளைகுடா நாடுகளிலிருந்து PIA மூலமாக பாக்கிஸ்தானுக்குச் செல்லும்போது அவர்கள் சுமக்கும் பொதிகளின் அளவை நீங்கள் பார்க்கவேண்டும்) என் பொதிகளைச் சுமந்து வெளியே வந்து ·ப்ராமிங்ஹாம் (Framingham) என்ற இடத்துக்குச் செல்லும் லோகன் எக்ஸ்பிரஸ் பேருந்தைப் பிடித்து உட்கார்ந்தாகி விட்டது. ஓட்டுனர் ஒரு பெண்மணி. அவரே இறங்கி பொதி ஏற்றும் கதவைத் திறந்து பெட்டிகளை எடுத்துப் போட்டு வண்டியும் ஓட்டுகிறார். ஆஜானுபாகாக இருந்தார்.

காற்றில் லேசான குளிர் ஆறுதலாக இருந்தது. பேருந்து கிளம்பி பத்துப் பதினைந்து நிமிடங்களுக்குள் சுற்றுமுற்றும் இருந்த கட்டிடங்கள் தேய்ந்து இரண்டு பக்கமும் மரங்கள் மரங்கள்.. எங்கு பார்த்தாலும் பச்சை. பழைய ஆங்காங்கே டொக்கு விழுந்த சாலைகள். ஆங்காங்கே செருகி வைத்தாற்போல மர வீடுகள்.

எந்த விதமான எதிர்பார்ப்புகளும் இல்லை என்று வெளியில் சொல்லிக் கொள்ளலாமேயொழிய குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளும், சேருமிடம் பற்றிய ஏதோ ஒரு பிம்பமும் ஒவ்வொருவரின் மனதிலும் இருந்துதான் தீரும். எனக்குள்ளும் ஒரு பிம்பம் இருந்தது. அது விமான நிலையத்தில் விரியத் தொடங்கி 20 மைல் தொலைவில் இருக்கும் நேட்டிக் (Natick) கில் இருந்த விருந்தினர் மாளிகையை - அட... ஒரு அடுக்குமாடிக் குடித்தனம்ங்க - அடைந்ததும் விரிந்து சோப்புக் குமிழ்போல வெடித்தே விட்டது. இதுதான் அமெரிக்காவா? என்ற கேள்வி உறுத்தாமலில்லை.

இந்தியாவிலிருந்து நேரடியாக அமெரிக்கா வருபவர்களுக்கு இது சொர்க்கமாக இருக்கலாம். இதைவிட நல்ல வழுவழு சாலைகள் வளைகுடா நாடுகளில் இருக்கின்றன என்று தோன்றியது. அமெரிக்கா என்னை வசீகரிக்கவில்லை என்று தோன்றியது.

விலைவாசி எல்லாமே மூன்றிலிருந்து நான்கு மடங்கு. இரண்டு படுக்கையறை ·ப்ளாட்டுக்கு ஆயிரத்து முன்னூறு டாலர் வாடகை அநியாயம். மஸ்கட்டில் ஒரு கடற்கரை வில்லாவே கிடைக்கும். மஸ்கட்டுக்கு வந்த புதிதில் எந்தப் பொருளின் விலையைப் பார்த்தாலும் அதை இந்திய ரூபாயில் கணக்கிட்டுப் பார்ப்பது வழக்கமான ஒரு பழக்கம். இங்கு வந்த பிறகு எல்லாவற்றையும் ஓமானி ரியாலில் கணக்கிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இயந்திர மயம். அதுதான் மலிவாம். மனிதர்கள் ஈடுபடவேண்டிய எந்த வியாபார நடவடிக்கைகளுக்கும் அதீதமாகச் செலவாகுமாம். உண்மைதான். மணிக்கணக்கில் அல்லவா உழைப்பு விலை பேசப் படுகிறது. எல்லாவற்றுக்கும் பண மதிப்பீடு வைத்துக்கொண்டு 24 மணி நேரத்தை வாழும் இந்த வாழ்க்கைச் சித்தாந்தம் எனக்கு இன்னும் புரிபடவில்லை.

தோராயமாக மணிக்கு ஐம்பது டாலர்கள் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால் என்னுடைய ஒருநாள் வாழ்க்கையில் நான்:

  • 400 டாலர்கள் மதிப்பிற்கு தினமும் தூங்குகிறேன்
  • அலுவலகம் செல்ல நூறு டாலர்கள் செலவழித்துத் தயாராகிறேன்
  • 400 டாலர்கள் நேரத்திற்கு வேலை பார்க்கிறேன்
  • மதிய உணவுக்கான ஒரு மணி நேரத்தில் 50 டாலர்களை இழக்கிறேன்
  • மாலை வீட்டுக்குச் சென்று குடும்பத்தாருடன் - இரவு உணவு உள்பட - சேர்ந்திருப்பதற்கு 300 டாலர்கள் செலவழிக்கிறேன்.
வந்து இரண்டு மாதம் ஆகிறது. இங்குள்ள "எல்லாமே எண்கள்" என்ற வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிபடத் தொடங்கியிருக்கிறது. சிறைக் கைதிகளைப் போன்று இங்கிருக்கும் அனைத்து மக்களுக்கும் Social Security Number என்ற எண்ணைக் கொடுத்து அடையாளம் காண்கிறார்கள். இந்த மாதிரியான எண் அடையாளம் இல்லாதவர்கள் அமெரிக்காவில் மனிதர்களே இல்லை.

  • வங்கிக் கணக்கு துவங்க வேண்டும் - Your SSN please..
  • வாடகைக்கு வீடு வேண்டும் - Your SSN please
  • காப்பீடு எடுக்க வேண்டும் - Your SSN please
  • கடனட்டை வேண்டும் - Your SSN please
  • ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டும் - Your SSN please

என்று எல்லாவற்றிலும் எல்லாவற்றிற்கும் SSN கட்டாயமாக்கியிருக்கிறார்கள். விண்ணப்பித்த தினத்திலிருந்து - எந்தப் பிரச்சினையுமில்லாத பட்சத்தில் - மூன்றிலிருந்து நான்கு வாரங்களுக்குள் SSN வந்து விடும். முதல் ஒரு மாதத்தை ஓட்டுவது மிகவும் கடினம். எல்லா இடங்களிலும் முட்டிக்கொண்டு நிற்க வேண்டும்.


Credit History என்று இன்னொரு அவஸ்தை. நல்ல Credit History இல்லாதவர்களுக்கு கடனட்டையோ வங்கிக்கடனோ கிடைக்காது. "நான் வருமானத்திற்குள் செலவு செய்யும் ஆசாமி; ஆதலால் கடன் எதுவும் வாங்கவில்லை. கடனட்டையை உபயோகிப்பதில்லை" என்று பெருமையுடன் சொன்னதையெல்லாம் புறங்கையால் தள்ளுபடி செய்துவிட்டார்கள். இந்தியாவில் பத்து வருடங்களுக்கு முன்பு வாங்கி இன்று வரை Active-ஆக வைத்துக் கொண்டிருக்கும் Citi Bank கடனட்டையைக் காட்டிப் பார்த்தேன். "நான் citi bank-இன் மதிப்புக்குரிய நீண்ட கால வாடிக்கையாளர்" என்று அவர்களின் பெங்களூர் அலுவலகத்திலிருந்து கடிதம் வாங்கியும் காட்டிப் பார்த்தேன். அமெரிக்காவில் வழங்கப்பட்ட கடனட்டையையும் அதற்குரிய நடவடிக்கைகளை மட்டும்தான் Credit History கணக்கிற்கு எடுத்துக் கொள்வார்களாம். மகா எரிச்சலாக இருந்தது. நேற்றுதான் இங்கு வந்து இறங்கியிருப்பவனுக்கு என்ன அமெரிக்க வரலாறு இருக்க முடியும்?

"மன்னியுங்கள். எங்களால் எதுவும் செய்ய இயலாது" என்று உணர்ச்சியில்லாமல் அவர்கள் சொன்னபோது "இதெல்லாம் நமக்குத் தேவையா? மரியாதையாக மஸ்கட்டிலேயே இருந்திருக்கலாம். அல்லது இந்தியாவுக்குப் போயிருக்கலாம்" என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. "அமெரிக்கா மட்டுமே உலகம் என்று அமெரிக்கர்கள் நம்புகிறார்கள் என்பது உண்மைதான்" என்றும் நினைத்துக் கொண்டேன்.

ஆனாலும்..

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்ற ரீதியில் கொஞ்சூண்டு நிலப்பரப்பில் புழங்கிவிட்டு அமெரிக்காவைப் பற்றிய பிம்பத்தை வரைந்து கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

காலம் போகட்டும். என்னுடைய அமெரிக்க வாழ்வு குறித்த அனுபங்களும் சிந்தனைகளும் மாறலாம்.

அப்போது வருகிறேன் - என் அப்போதைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள.

***

3 comments:

Anonymous said...

MIKAAVUMMM INTERESTINGANA PAATHEEVUUU THOODARRINTHUUU ELLUTHUINKALL

துளசி கோபால் said...

சுந்தர்,

எங்களுக்கு ssn எல்லாம் கிடையாது. நாங்கள் இன்னும் மனிதர்களே:-))

புரியாத விஷயம் இந்த 70 கிலோ மேட்டரு?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.