Wednesday, December 28, 2005

The Life of David Gale



*** The Life of David Gale ***

மனோஜ் நைட் ஷியாமளனின் The Sixth Sense படத்தின் இறுதிக் காட்சியில் ப்ரூஸ் வில்லிஸ் ஏற்கெனவே இறந்து போன ஒருவர் என்று புதிர் அவிழும் போது பகீரென்று இருந்ததே. ஆனால் The Life of DavidGale-லில் சொல்லப் பட்டிருக்கும் புதிர் வித்தியாசமானது. The Sixth Sense போன்று அமானுஷ்யங்களை வைத்துக் கொள்ளாமல் யதார்த்த வாழ்வில் நடக்கும், நடக்கச் சாத்தியங்களிருக்கிற சம்பவங்களைக் கொண்டு கதை பின்னப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் இறுதிக்காட்சி - ஓரளவுக்கு முன்னரே ஊகிக்க முடிந்தாலும் - பகீர் ரகம்.

அமெரிக்காவில் Capital Punishment எனப்படும் மரணதண்டனையை இரத்து செய்யக் கோரிப் போராடும் குழுவில் பிரதானமானவர் பேராசிரியர் டேவிட் கேல். முதல்வன் படத்தில் அர்ஜுன் ரகுவரன் சந்திக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பரபரப்பாய் பேசப்பட்டதே. அது போல இதில் (மரண தண்டனைக்கு வக்காலத்து வாங்கும்) டெக்ஸாஸ் ஆளுநரும் டேவிட் கேலும் சானல் நிகழ்ச்சி ஒன்றில் உரையாடுகிறார்கள்.

நறுக்கென்று நாலே வசனங்களில் இருக்கும் அந்தக் காட்சியில் ஆளுநர் டேவிட் கேலிடம் கேட்கும் ஒரு கேள்வியே பெரிய புதிராகப் பின்னப்பட்டு கடைசியில் அவிழ்க்கப்படுகிறது.

டைட்டானிக் புகழ் கேட் வின்ஸ்லெட் பிட்ஸி ப்ளூம் (Bitsey Bloom) என்ற பெயரில் நிருபராக கையில் வீடியோ கேஸட் ஒன்றுடன் சாலையில் ஓடிவரும் காட்சியோடு படம் துவங்குகிறது.

அலட்டிக்கொள்ளாத நடிப்புடன் டேவிட் கேல்-ஆக கெவின் ஸ்பேஸி நடித்திருக்கிறார்.

போராட்டக் குழுவின் சக உறுப்பினராக நண்பராக இருக்கும் கான்ஸ்டன்ஸ் என்ற பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் - யாரிடமும் அதுவரை வாய் திறவாத - டேவிட் கேல் தண்டனைக்கு மூன்று தினங்களுக்கு முன்னால் தன்னை வந்து சந்திக்கக் கோரி பிட்ஸிக்கு அழைப்பு விடுக்கிறார். தன்னை எதற்கு அழைக்க வேண்டும் என்று புரியாமல் - கற்பழிப்பு, கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனைக்குக் காத்திருக்கும் குற்றவாளியான டேவிட் கேல்-ஐ சந்திக்க உதவியாளர் ஒருவருடன் பிட்ஸி வர, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் சிறையில் தனியாக டேவிட் கேலைச் சந்தித்து உரையாடுகிறார்.

நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் டேவிட் கேல் சொல்ல - முதலில் அவற்றை நம்பிக்கையில்லாமல் கேட்டுக் கொள்ளும் பிட்ஸி பின்னணியின் தீவிரம் உறைக்கத் தொடங்கியதும் அதிர்ந்து போகிறார்.

டேவிட் கேல் வகுப்பில் அசட்டையான மாணவி பெர்லின். வகுப்பு முடிந்து அனைவரும் வெளியேறியதும் கேலை நெருங்கி காதோரம் "நல்ல Grade வாங்க நான் 'எதையும்' செய்யத் தயார்" என்று கிசுகிசுக்க, டேவிட் கேல் அவள் காதருகில் நெருங்கி கிசுகிசுக்கிறார் "'எதையுமா?', சரி உனக்கு நல்ல Grade நான் கொடுக்க வேண்டுமென்றால் நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்" என்று சொல்லி, சற்று இடைவெளி விட்டு முடிக்கிறார் "ஒழுங்காகப் படி". உதாசீனம் செய்யப்பட்ட பெர்லின் இரவு விருந்து ஒன்றில் அதிகமாகக் குடித்துவிட்டு கழிவறைக்குச் செல்லும் கேலை மூலையில் மடக்கி, மயக்கி உறவு கொள்ள வைத்து விட, மறுநாள் போதை தெளிந்து எழும் கேலை போலீஸ் கைது செய்கிறது - பெர்லினைக் 'கற்பழித்த' குற்றத்திற்காக.

பின்பு குற்றமற்றவர் என்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் வேலையிழந்ததோடு செல்லுமிடத்திலெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கப்பட்டு அவமானங்களைச் சந்திக்கிறார் டேவிட் கேல். அவர் மனைவி அவரை விட்டுப் பிரிந்து கேல் உயிருக்கு உயிராக நேசிக்கும் மகனையும் அழைத்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு (பாரீஸ்) சென்று விட, மனமுடைந்து போகிறார் கேல்.

எல்லா சந்தர்ப்பங்களிலும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் குழு சகா கான்ஸ்டன்ஸ் அவருக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற, இருவரும் அடிக்கடி சந்திக்கின்றனர். அதுவரை எந்தவித உறவுகளிலும் நாட்டமில்லாது வேலை வேலை என்று வருடங்களைக் கழித்த கான்ஸ்டன்ஸ்ஸூம், நொந்து போயிருக்கும் டேவிட் கேலும் - நெருங்கிய நட்பு என்ற எல்லையையும் மீறி - பலவீனமானதொரு பொழுதில் உறவு கொள்கின்னறனர்.

காலைப் பொழுதில் கான்ஸ்டன்ஸ் நிர்வாணமாகச் சமையலறையில் கால்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக மடக்கப்பட்டு விலங்கிடப்பட்டு, தலையை பாலித்தீன் பை ஒன்று முழுக்க மூடியிருக்க மூச்சுத் திணறிச் செத்துக் கிடக்கிறார். பிரேத பரிசோனையில் கைவிலங்கின் சாவி அவர் வயிற்றுக்குள் கிடந்ததையும் கண்டு பிடிக்கிறார்கள். டேவிட் கேல் போதையுடன் வீட்டிலிருந்து வெளியே சென்றதைப் பார்த்தவர்கள் சாட்சி சொல்ல - குறிப்பாக கான்ஸ்டன்ஸ்ஸின் நெருங்கிய நண்பனும் மரணதண்டனையை ரத்துசெய்யக் கோரிப் போராடும் குழுவில் தீவிர உறுப்பினருமாகிய அந்தக் கவ்பாய் நபர் - போலீஸ் டேவிட் கேலை கான்ஸ்டன்ஸைக் கற்பழித்துக் கொலை செய்ததற்காகக் கைது செய்து நீதி மன்றத்தில் வழக்கு நடந்து மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விடுகிறார்.

தண்டனை நிறைவேற்றப்பட மூன்று தினங்கள் இருக்கையில் பிட்ஸி ப்ளூமை வரச் செய்து பேசுகிறார் - நான் நிரபராதி, எனக்குப் பின்னே பயங்கரச் சதி நடந்திருக்கிறது என்று சொல்கிறார். மூன்றாம் நாள் சந்திப்பு முடிந்ததும் பிட்ஸியிடம் விடை பெறும்போது அவர் சொல்வது "நாளை இந்நேரம் நான் இறந்திருப்பேன். உன்னை வரச் சொல்லி இதையெல்லாம் விவரித்ததற்குக் காரணம் என் மகனுக்கு அவன் தந்தை குற்றவாளி அல்ல என்ற உண்மையை உன் மூலம் தெரிவிக்கவே" என்கிறார்.

இருப்பதோ 24 மணி நேரம். அதற்குள் என்ன செய்வது என்று செய்வதறியாது திகைக்கிறார் பிட்ஸி ப்ளூம். பின்பு பரபரப்பாக நிகழும் சம்பவங்கள் பதற்றம் ஏற்படுத்துகின்றன. பிட்ஸி ப்ளூமையும் உதவியாளரையும் நிழலெனப் பின்தொடர்கிறார் கான்ஸ்டன்ஸின் கவ்பாய் நண்பர். கான்ஸ்டன்ஸின் மரணத்துக்குக் காரணம் என்னவென்று புரியாமல் அலையாயும் பிட்ஸி ப்ளூமின் அறையில் ஒரு வீடியோ கேஸட் விட்டுச் செல்லப்படுகிறது - அந்தக் கவ்பாய் நபரால். அதில் கைகள் கட்டப்பட்டு முகம் மூடப்பட்டுச் சாவதற்கு முந்தைய கான்ஸ்டன்ஸின் சில நிமிட மரண அவஸ்தை பதிவாகியிருக்கிறது. 'வீடியோ எடுக்கப் பட்டிருப்பதால் அது கொலை; டேவிட் கேலோ நிரபராதி என்று அழுகிறார். யார் வீடியோ எடுத்திருப்பார்கள்?' என்று தடுமாறும் பிட்ஸி ப்ளூமிற்கு உச்சக்கட்ட அதிர்ச்சி ஏற்படுத்தும் காட்சி கேமராவின் பின்புறத்திலிருந்து ஒரு நபர் கான்ஸ்டன்ஸின் உடலருகே சென்று மரணம் நிகழ்ந்துவிட்டதா என்று பார்ப்பது; அவர் - அந்தக் கவ்பாய் நபர்!!! அப்படியென்றால் டேவிட் கேலை சிக்க வைக்க கவ்பாய் நண்பர் கான்ஸ்டன்ஸைக் கொன்றிருக்கிறாரா?

மரணம் நிகழ்ந்த அறைக்கே சென்று ஆராய்ந்து வீடியோவையும் மறுபடி மறுபடி போட்டுப் பார்த்த பிட்ஸி ப்ளூமிற்குப் பொறி தட்டுகிறது. அது கொலையல்ல - தற்கொலை!!! அப்படியென்றால் அப்படியென்றால்... கான்ஸ்டன்ஸூம் அந்தக் கவ்பாய் நண்பரும் சேர்ந்து டேவிட் கேலைக் கொலைக் குற்றத்தில் மாட்ட வைத்திருக்கிறார்கள்!!!

டேவிட் கேல் நிரபராதி என்று நிரூபிப்பதற்காகக் கேஸட்டை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாகச் சிறைச்சாலைக்கு விரைய, நடுவழியில் கார் பழுதாகி நின்றுவிட, தலைதெறிக்க ஓடிவரும் பிட்ஸி ப்ளூமைக் கடந்து சாவகாசமாக வண்டியை ஓட்டிக் கொண்டு போகிறார் அந்தக் கவ்பாய் நபர்.

சிறைச்சாலைக்கு வெளியே இரண்டு கோஷ்டிகளாக மக்கள் கூடியிருந்து கோஷம் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கோஷ்டி டேவிட்கேலுக்கான மரணதண்டனையை ஆதரித்தும், இன்னொரு கோஷ்டி எதிர்த்தும். ஒரு வழியாக அந்தக் கூட்டத்தை பிட்ஸி அடையவும் சிறை அதிகாரி வெளியே வந்து "டேவிட் கேலுக்கு நிச்சயக்கப்பட்ட நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டது" என்று உணர்ச்சியற்ற குரலில் அறிவிக்க, அப்படியே உடைந்துபோய் கதறுகிறார் பிட்ஸி.

பின்பு அந்த வீடியோ கேஸட்டை வைத்து அவரது ஊடக நிறுவனத்தின் மூலமாக டேவிட் கேல் கொலையாளி அல்ல என்று அவர் நிரூபிக்கும் காட்சிகள் சிரத்தையின்றிக் காட்டப்படுகிறது. ஒரு நாள் பணியிலிருக்கும் பிட்ஸிக்கு கூரியர் மூலமாக ஒரு பொம்மை வருகிறது. டேவிட் கேலின் மகன் எப்போதும் வைத்திருக்கும் பொம்மை. அந்த பொம்மைக்குள் ஒரு வீடியோ கேஸட். கான்ஸ்டன்ஸ்ஸின் மரணம் பதிவு செய்யப்பட்ட - பிட்ஸி முன்பு பார்த்த - அதே கேஸட். ஆனால் சற்றுக் கூடுதல் காட்சிகளோடு... அந்தக் கடைசிக் காட்சியைப் பார்க்கும் நமக்கு மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

ஆளுநர் தொலைக்காட்சிச் சந்திப்பில் டேவிட் கேலிடம் கேட்கும் கேள்விக்கும் வீடியோவிலுள்ள இறுதிக் காட்சிக்கும் நேரடித் தொடர்பு - என்னவென்பதைப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

தூக்கத்தை விரட்டிய படம்!

***

4 comments:

Anonymous said...

நல்ல விமர்சனம் சுந்தர். கெவின் ஸ்பேசி மீதான மதிப்பு படத்திற்கு படம் உயர்ந்துகொண்டே இருக்கிறது.

life of david gale படத்தை பற்றிய ஓர் குறிப்பு. இப்படத்தின் கதை ஓரளவிற்கு நான் பார்த்த ஓர் தெலுங்கு படத்தின் கதையை ஒத்திருக்கிறது. எண்டமூரி வீரேந்திரநாத்தின் புதினத்தை கொண்டு படமாக்கப்பட்ட சிரஞ்சீவியின் "அபிலாஷா"வும் இதே கதையை கொண்ட படம். இப்படம் வெளிவந்தது 1983ல் என நினைக்கிறேன். ஆனால் படத்தின் ஆதார கரு, மசாலா நெடியில் சிக்கி நீர்த்துவிட்டது என்னவோ உண்மை. :)

Sundar Padmanaban said...

நன்றி சித்தார்த்.

மசாலா இல்லாமல் இம்மாதிரி கதைக் கருவுடன் படங்கள் எடுத்தால் நம் மக்கள் பார்க்க மாட்டார்கள்.

ஆனாலும் குருதிப்புனல் போன்ற சிக்கலான கதையைக் கையெலெடுத்துக்கொண்டு கமல் போன்றவர்கள் செய்யக் கூடிய கதைதான் The Life of David Gale.

அழகிய தீயே, கண்டநாள் முதல் போன்ற படங்கள் லேசாக நம்பிக்கையூட்டுகின்றன.

பார்க்கலாம்.

SKuppa said...

மிகவும் அருமையான படம். kevin spacey நன்றாக நடித்திருப்பார். உங்களின் விமர்சனம் அருமை.


latha

SKuppa said...

மிகவும் அருமையான படம். kevin spacey நன்றாக நடித்திருப்பார். உங்களின் விமர்சனம் அருமை.


latha