Monday, December 19, 2005

இந்தியா Vs. வெஸ்ட் இண்டீஸ்


காவிரியைக் கடந்து அண்ணா சிலையில் இறங்கி மேலசிந்தாமணியின் தாழ்வாகச் செல்லும் சாலையில் படித்துறையை நோக்கி நடந்தேன். என் உற்ற நண்பன் கிச்சா வசிக்கும் பி.ஜி.ஐயர் காம்பவுண்டு மாதுளங்கொல்லை அக்ரஹாரத்தின் கடைசியில் இருக்கிறது. அங்கிருந்து ஒரு எம்பு எம்பினால் காவிரிப் படித்துறை.

காம்பவுண்டு என்றால் தெருமுக்கில் நம்மைப் பார்த்து இருக்கும் ஏழடி செங்கல் சுவர். இருசக்கர வாகனம் மட்டும் செல்லுமளவு இருக்கும் கதவைத் திறந்தால், இடப்புறம் தளை பரவிய வெற்றிடமும், வலப்பக்கம் வரிசையாக ஒரே அளவில் பத்து வீடுகளும். நடைபாதை நீண்டிருக்க மத்தியில் தரைமட்டத்தில் நன்னீர்க் குழாய்த் தொட்டி. முன்பெல்லாம் எந்நேரமும் பெண்கள் நீர் பிடிப்பார்கள். இப்போதெல்லாம் வாரத்துக்கு ஒருமுறைதான் தண்ணீர் வருகிறது. காம்பவுண்டு கட்டி ஐம்பது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இருப்பவர்களும் சில தலைமுறைகளாக அங்கிருப்பவர்கள்தான்.

கடைகளைக் கடந்து அக்ரஹாரத்தில் நுழைந்தபோது வழக்கத்துக்கு விரோதமாக பரபரப்பெதுவுமின்றி வெறிச்சென்றிருந்தது. கிரிக்கெட் விளையாடும் பையன்கள் யாரையும் காணோம். இத்தனைக்கும் ஞாயிற்றுக்கிழமை வேறு. வீடுகளைக் கடக்கையில் இரைச்சலாக வந்த ஒலியில் புரிந்துபோயிற்று. டிவியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கிறான்கள் பையன்கள். அதான் ஒருத்தனையும் தெருவில் காணவில்லை.

பி.ஜி.ஐயர் காம்பவுண்டில் நுழைந்து மூன்றாம் வீட்டை அடைந்து கதவிலிருந்த உலோக வளையத்தை தட்டினேன். அந்தக்காலத்துக் கதவு இன்னும் வலுவாக இருந்தது. உள்ளே டிவி இரைச்சலில் நான் தட்டியது கேட்டிருக்குமா என்று இன்னும் சற்று ஓங்கித் தட்ட, கதவு டக்கென்று திறந்து எச்சுமிப் பாட்டி 'யாரூ' என்றாள். கதவு திறந்த வினாடியில் டிவியின் ஒலி பலமடங்கு அதிகரித்துக் கேட்க, 'அடப்பாவிகளா. இவ்ளோ சவுண்டு வச்சுருக்காங்களே' என்று நினைத்துக்கொண்டே 'கண்ணன் பாட்டீ' என்றேன். எச்சுமிப்பாட்டி சம்பிரதாயமாக 'வாடாப்பா' என்றுவிட்டுத் திரும்பி 'அந்த எழவுச் சத்தத்தைக் கொறைக்கப் படாதா?' என்று சத்தமிட்டது யாருக்கும் கேட்டிருக்காது.

நான் உள்ளே நுழைய டிவியின் சத்தத்தையும் மீறிக் கிச்சாவின் குரல் கேட்டது. ஹாலில் ஒரு படையே தரையில் படுத்துக்கொண்டும், சோபாவில் சரிந்தும் ஆங்காங்கு பல நிலைகளில் அடைந்திருக்க, கிச்சா டிவிக்கு ஓரடி தூரத்தில் நின்று திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க அவன் முகத்தில் டிவியின் பிம்பம் கிட்டத்தட்ட தெரிந்தது.

அவ்வளவு சத்தத்திலும் நான் வந்ததை கிச்சா மட்டுமே கவனித்து 'வாடா மச்சி.. இங்க ஒக்கார்றா' என்று காட்டிய இடம் இரு சோபாக்களுக்கிடையே இருந்த எலிப்பொந்து இடைவெளி. நான் அதில் புகுந்துகொண்டு மாட்சை கவனித்தேன். இந்தியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் பகலிரவு ஆட்டம் என்று காலை தினமலரில் படித்தது நினைவுக்கு வந்தது.

அதற்குள் இருள் பழகிவிட ஹாலில் இருந்தவர்களைப் பார்த்தேன். கிச்சா இன்னும் முழங்கால்களில் கைகளை ஊன்றி முகத்தை கிட்டத்தட்ட டிவியில் தாங்கி நின்று கொண்டிருக்க, சம்பு எனப்படும் சம்பத் வினோத கோணத்தில் ஈஸிச் சேரில் இருந்தான். ஆனந்த் தரையில் படுத்திருக்க, 'எட்டி'யும் 'கவ்பாயு'ம் தலை மட்டும் சோபாவில் வைத்து கால்களை நீட்டி டிவியைத் தொட்டுக்கொண்டு படுத்திருக்க, இன்னும் சில காம்பவுண்டுப் பையன்கள் விரவியிருந்தார்கள். எச்சுமிப் பாட்டி விழித்திருக்கையில் எட்வர்டும் கமால்பாயும் எப்படியென்று ஆச்சரியமாக இருந்தது. அநேகமாக படித்துறையிலிருந்து சுவரேறிக் குதித்து, கொல்லைப்புறத்து வழியாகக் கிச்சா கூட்டிக்கொண்டு வந்திருப்பான்.

கருப்பு வெள்ளை க்ரெளன் டிவியில் பளிச்சென்று இருந்தது படம். கிச்சா திடீரென்று 'கலர் டிவியிலும் அவா அப்படித்தான் இருப்பா' என்று அவனுக்குள் சொல்லிக்கொண்டான்.

'கிரிக்கெட் வெறியர்கள் சங்கம்' மேலசிந்தாமணியில் ரொம்ப பிரபலம். கிச்சாதான் அதற்கு தலைவர், பொருளாளர், செயலாளர் எல்லாம். நடு ரோடு, காம்பவுண்டுக்கு உட்பட்ட பகுதி, காவிரியின் நடுவே மணல் ஓடும் மைதானங்கள்; ஒன்றும் கிடைக்காவிட்டால் சிலசமயம் மொட்டைமாடியென்று ஆகாயத்தைத் தவிர அனைத்து இடங்களிலும் கிரிக்கெட் ஆடுவார்கள். பையன்கள் கிரிக்கெட் விளையாட டென்னிஸ் பந்தையும், மட்டைகளையும், மரக்குச்சிகளையும் எடுத்துக்கொண்டு வெளியில் வந்தார்களென்றால் காம்பவுண்டே அமளிதுமளியாகும்.

பத்து வீடுகளுக்கும் பொதுவாக நான்கு கழிவறைகளை வரிசையாக இடதுபுறம் கட்டி வைத்திருந்தார் பி.ஜி. ஐயர். நாள் முழுதும் யாராவது வாளியைத் தூக்கிக்கொண்டு போய் வந்துகொண்டு இருப்பார்கள். கோடி வீட்டு ரங்கி (ரங்கநாயகி) மாமி மீன் தலையால் நடந்து வருவதைப் போல இடையில் அகலமாகவும் தலையும் காலும் குறுகலாகவும் அசைந்தாடி வாளியைத் தூக்கிக்கொண்டு நடந்து வந்தால் போச்சு. அவள் வீட்டிலிருந்து கழிவறையை அடையவே ஐந்து நிமிடமாகும். அதுவரை விளையாட்டை நிறுத்தி வைக்கவேண்டும். பையன்களுக்குப் பொறுமையே இருக்காது. ஒருமுறை அவள் கடந்து கொண்டிருக்கையில் மாதேஷ் ஓடிவந்து பந்தைப் போட முயல, பந்து கையிலிருந்து விடுபடவிருந்த கடைசி வினாடியில் ரங்கிமாமியின் வாளியிலிருந்த மொத்தத் தண்ணீரும் அவன் முகத்தில் பளேரென்று இறங்க மாது சொத்தென்று விழுந்து அரண்டுபோய் எழுந்து ஓடினான். 'எழவெடுத்த பயலே. பொம்மனாட்டி வர்றது கண்ணுக்குத் தெரியலையோ?' என்று திட்டிக்கொண்டே போக பலத்த மெளனம் நிலவியது.

அவள் உள்ளே சென்று அமர்ந்ததும் கிச்சா கைக்குட்டையை மூக்கை மறைத்துக் கட்டிக்கொண்டுவிட, அந்த ஏரியாவில் ஃபீல்டு செய்யும் பையன்கள் விலகி கல்லிக்கும், ஸ்லிப்பிற்கும் சென்றுவிடுவார்கள். அது பேட்ஸ்மென்களுக்குப் பொற்காலம். ஃபீல்டர்கள் எதிரே இல்லாததால் போட்டு விளாசுவார்கள். பந்து வீசுபவனும் ஓடி வரும் நீளத்தைக் குறைத்துக்கொண்டு, கிட்டத்தட்ட நடந்து வந்து பந்து போடுவார்கள். ரங்கி இரைச்சலாக வாயு வெளிவிட்டுக்கொண்டே இருப்பாள்.

'ஆனண்டூ' என்று கிச்சா சைகை செய்ய ஆனந்த் குறிவைத்து அவள் அமர்ந்திருக்கும் அறையின் கதவில் பந்தை அடிக்க, தகரமானதால் பயங்கரமாகச் சத்தம் வரும், உள்ளேயிருந்து கடுமையான வசவுகள் காற்றில் வர வெளியில் ஓவென்ற சிரிப்புச் சத்தம் எழும். அவளால் சட்டென்று எழுந்து வெளியில் வந்துவிட முடியாது என்று ஆனந்துக்குத் தெரியும்.

ரங்கி மாமி கிட்டத்தட்ட அரைமணிநேரம் உள்ளே இருந்துவிட்டு எழுந்து கதவைத் திறந்து வெளியில் வரும்போது மைதானம் காலியாக இருக்கும். பையன்கள் காற்றில் மறைந்து விடுவார்கள். அவள் சென்று வீட்டில் மறையக் காத்திருந்து புதர், புற்றிலிருந்து ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். கிச்சா எங்கிருந்தோ உதயமாகி 'மாமி போய்ட்டாடா.. நாளைக்கு அஞ்சலைக்கு எக்ஸ்ட்ரா ரெண்டுரூவா கொடுத்து நல்லாக் கழுவிவிடச் சொல்லணும்' என்பான்.

'சே.. நம்ம பேட்டை தூக்கிக்கிட்டு வந்தா இவ வாளியைத் தூக்கிக்கிட்டு வந்துர்றாடா' என்பான் ஆனந்த்.

ரங்குமாமா எப்போதும் திண்ணையில் நின்றுகொண்டிருப்பார். வேஷ்டியைப் பின்புறம் தூக்கி பிருஷ்டத்தைச் சொறிந்துகொண்டே பேசுவார். அவர் இறங்கி வந்தால் கிச்சா "வந்துட்டார்ரா பீப்பீ" என்று சொல்ல பையன்கள் 'பீப்பீப்பீ' என்று பாடுவார்கள். அவர் எதையும் சட்டை செய்யாமல் நடந்து போவார். கிச்சாவின் அப்பாவை நாமக்கல்லுக்கு மாற்றியிருந்தார்கள். திரும்பவும் திருச்சிக்கு மாற்றல் வாங்க அலைந்துகொண்டு, வேலைக்காக நாமக்கல்லில் இருந்துகொண்டு வாராவாரம் வந்து செல்வார்.

ஆனந்த் எப்போதும் காம்பவுண்டுக்கு வெளியே மூன்று வீடுகள் தள்ளியிருந்த அம்பி மாமா இட்லிக் கடையிலேயே பழி கிடப்பான். அவன் ஆள் நிம்மி ப்ள்ஸ்டூ படித்துக்கொண்டு, கடைக்குப் பக்கத்து வீட்டில் இருந்தாள். காலையிலும், மாலையிலும் ஆனந்த் அங்கேயே கடையில் நின்று, இட்லி வாங்கித் தின்றுகொண்டே இருப்பான். அவள் போகும்போதும், வரும்போதும் சைகை செய்து பேச முயல்வான்.

சனியன்று கிச்சா அப்பா வந்து ஆனந்தை விசாரிக்க கிச்சா 'ஆனண்டு நாலாம் நம்பர் இட்லிக்கடைல பழியா கெடக்கறான். ஒன் சொத்தையெல்லாம் இட்லி வாங்கி அழிக்கப் போறான். பேசாம அவனுக்கு மொதல்ல கல்யாணம் பண்ணி வச்சுரு' என்று போட்டுக் கொடுக்க, அப்பா வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கிளம்ப, கிச்சாவின் அம்மா 'சே.. சின்னப் பையனைப் போய் இப்படிப் பேசறியேடா? அவன் கொழந்தை' என பரிந்துகொண்டு வந்தாள்.

கிச்சா 'அசத்து மாதிரி பேசாதேம்மா.. பெத்தாளே ஒங்கம்மா.. வயித்துல பெரண்டைய வச்சுதான் கட்டிக்கணும்'.

கடைசித் தம்பி சம்பத் ஒரு மாதமாக மேலசிந்தாமணி ரமணி ஐயங்காரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டு இருக்க அப்போதுதான் ஸரிகமா தாண்டியிருந்தான். அதற்குள் அவனுக்கு பாடகர் ஜிப்பா போடவேண்டும் என்று ஆசை வந்து வாங்கிப் போட்டுக்கொள்ள கிச்சா தலையில் அடித்துக்கொண்டான். அப்பா தஞ்சாவூர் வீட்டிலிருந்து தம்புராவை கொண்டுவந்து வைக்க, கிச்சாவுக்கு எரிச்சல் மண்டியது. டிவி பக்கத்தில் நிறுத்தி வைத்திருந்த தம்புராவை வருடியபடி 'அப்பா.. ஒங்கப்பா சொத்தையெல்லாம் ஒவ்வொண்ணா டேஞ்சூர்லருந்து தள்ளிண்டு வரயா? இது என்னது? வீணையா? தம்புராவா?' என்று கம்பிகளை அழுத்தி மீட்டிப் பார்க்க, 'டொய்ங்' என்று ஒவ்வொன்றாய் அது வழிந்து விழ, அப்பா 'பாவீ' என்று அலறினார்.

கிச்சாவும் சும்மா இல்லை. அவனுக்கு எஸ்விஎஸ் அனுவை ரொம்பப் பிடிக்கும். அனு நிமிர்ந்து பார்க்கும் ஒரே ஆண் அவளது அப்பா மட்டும்தான். அவள் கடந்து போகும் போதெல்லாம் கிச்சா சன்னமாக 'கொஞ்சம் நிமிந்து பாரேண்டி.. ஒன் போன ஜென்மத்து ஆம்படையான் நிக்கறேன்' என்று சொல்ல, அவள் நடை வேகம் பிடிக்கும். கிச்சா ஓடிச்சென்று அம்மாவிடம் 'பொண்டாட்டி பாத்தாச்சு.. வைரத் தோடெல்லாம் சீதனமா கேட்டுடாதே.. போன ஜென்மத்துக் கல்யாணத்துலயே ஒனக்கு அதையெல்லாம் கொடுத்து ஓட்டாண்டியாகி இப்படி எப்படி குச்சு வீட்ல இருக்கா பாரு' என அம்மாவிற்கு கிச்சா கேலி செய்கிறானா இல்லை நிஜமாகச் சொல்கிறானா என்று குழம்பும்.

ஒரு தடவை அவனிடம் 'நெஜமாவே அனுவைக் கல்யாணம் பண்ணிக்கப் போறியா என்ன?' என்று நான் கேட்க, 'சும்மா வாயக் கெளறாதடா.. கேன.. என் பொண்டாட்டி போறா பாரு..ஏண்டா என்னைப் பாக்கவே மாட்டேங்கறாடா? ஃபேர் அண்ட் லவ்லி போட்டுக்கவா?' என்று கேட்டான். அனுவைப் பார்த்துவிட்டால் அன்று முழுதும் அவனுக்கு 'வெற்றி.. வெற்றி.' வசனம்தான். 'அப்ப்ப்ப்ப்ப்பா... பாத்துட்டேன்.. போறும்...' என்பான். அரைக்கண் கனாவில் இருக்கையில் அம்மா உலுக்கி 'போதுண்டா.. வந்து கொட்டிக்கோ' என்று சொல்ல கிச்சா 'ஒரு வார்த்தை சொல்லிடப்படாதே.. ஒனக்கு பத்திண்டு வருமே' என்று நொடித்துக் கொள்வான்.

இதற்குள் மேற்கிந்தியர்கள் விளையாடி முன்னூறுக்கு முடித்து, நம்மவர்கள் வந்தார்கள் சென்றார்கள் என்று முதல் மூன்று விக்கெட் விழுந்து, பூமியைப் பார்த்து பேட்டைச் சுரண்டிக்கொண்டு பெவிலியன் திரும்பிவிட எங்களுக்கு ஜூரம் போல உணர்ந்தோம். அந்திச் சூரியனின் ஒளி ஜன்னல் வழியாக டிவி முன் வட்டமாக விழ, ஒளிக் கதிரில் தூசி பறந்தது. டிவி வெள்ளை வெளேர் என்று எக்ஸ்போஸான புகைப்படம் மாதிரி லேசான அசைவு காட்ட, 'டேய்.. ஒரு எழவும் தெரியலைடா' என்று பையன்கள் இரைந்தார்கள்.

கிச்சா 'இர்றா சூர்ய பகவான் நம்ம மக்களை ஆசிர்வாதம் பண்ணட்டும். மேட்ச் இப்போ சூடுபிடிக்கும் பாரு' என்றான். ஒரு வழியாய் டிராவிட் உள்ளே வந்து நங்கூரமிட, டெண்டுல்கர் தொண்ணூற்றெட்டில் ஆடிக் கொண்டிருந்தார்கள். கிச்சா டிவியில் டெண்டுல்கர் முகத்தைப் பிடித்துக் கொஞ்சி, 'தலைவா.. செஞ்சுரி போட்டுர்றா.. சமயபுரத்துக்கு கோவணத்தோட நடந்து வந்து மொட்டை போட்டுக்கறேன்' என ஓவென்று சிரித்தார்கள்.

ஜானு சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருக்க, 'டீ.. அக்கா.. ஒரு டம்ளர் தூத்தம் கொண்டுட்டு இப்படி நடந்துவாடி.. ஒன் லக்கு எப்டீன்னு பாப்பம்..?' என்று கிச்சா அழைத்தான். 'சும்மார்றா.. எழவு அவுட்டாயித் தொலைச்சான்னா எந்தலைல விடியும்.. வேணாம்' என்று அவள் அவசரமாக மறுத்து விட்டாள். ஆனந்த் 'தலைவன் அடிச்சுருவாண்டா கிச்சா..பாரேன்' என்று சொல்லி கிச்சாவின் வயிற்றில் பால் வார்த்தான். சுவரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த அவனைப் பார்த்து கிச்சா, 'டேய்.. இர்றா.. .அப்படியே இரு' என்று அதட்டிவிட்டு, 'தலைவன் செஞ்சுரி போடற வரைக்கும் யாரும் நவரப் படாது' என்று உத்தரவிட்டான்.

பக்கத்து வீட்டு அம்பி அதுவரை அடக்கி வைத்திருந்த சிறுநீரை கொல்லைப்புறத்திற்கு ஓடிச் சென்று கழித்துவிட்டு பெளலரைவிட வேகமாக திரும்ப ஓடிவந்தான்.

கிச்சா டெண்டுல்கரை விட அதிக பதட்டத்திலிருந்தான். கண்களை மூடிக் கும்பிட்டான். அடுத்த பந்துக்கு மைதானமும், ஹாலும் அமைதியாகக் காத்திருந்து வீச்சாளனின் ஒவ்வொரு தப்படிக்கும் ஹப் ஹப்-பென்று குரலெழுப்பிக் கைதட்ட போடப்பட்ட பந்து பூப்போலப் பறந்து ரொங்கிக் கொண்டே ஸ்டேடியத்துக்கு வெளியே சென்றதை ஐந்து கோணங்களில் மறுபடி மறுபடி காட்ட, சில நிமிடங்களுக்கு உலகமே இரைச்சலாக இருக்க, டெண்டுல்கரும், கிச்சாவும் வானத்தைப் பார்த்துக் கொண்டார்கள்.

கிச்சாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீருடன் டிவியை முத்தமிட்டான். ஆனந்தைக் கட்டிக்கொண்டு தட்டாமாலை சுற்றினான். பையன்கள் நெகிழ்ந்திருந்த கைலியையும், வேஷ்டியையும் எழுந்து இறுக்கிக் கட்டிக்கொண்டு, திரும்ப அவரவர் பொசிஷனுக்குத் திரும்பினார்கள்.

ஜானு எல்லாருக்கும் டீ போட்டு, சொம்பையும், ஒன்றனுள் ஒன்றாக அடுக்கிய கூம்பு டம்ளர்களையும் வந்து வைக்க குபீரென்று அதன்மேல் பாய்ந்தார்கள். 'எதாச்சும் பச்சணம் வச்சுருக்கையாடீ' என்று கிச்சா கேட்க, ஜானு பரணைத் துழாவினாள்.

கிச்சா சற்று உட்கார விரும்பி சோஃபாவில் புதைந்திருந்த சம்புவை 'எந்திர்றா' என்று அதட்ட சம்பு 'சும்மா தூங்கிக்கிட்டு இருக்கற சிங்கத்தைத் தட்டியெழுப்பாதடா..' என்று கீழ்க்குரலில் உறுமி டிவிக்குப் பார்வையைத் திருப்ப, அவன் மேல் கிச்சா மொத்தென்று அமர, சம்பு அலறினான்.

இந்தியா இருநூற்றைம்பதை நாற்பத்திரண்டு ஓவர்களில் தாண்ட, மறுபடியும் எல்லாரையும் பரபரப்பு பற்றிக்கொண்டது. 'இன்னும் அம்பத்தொண்ணு ரன்னு; நாப்பத்தெட்டு பாலு.. அடிச்சிரலாம்' என்று கங்குலியைப் போல் கிச்சா நம்பிக்கை தெரிவித்தான். டிராவிட் இன்னும் இருக்கிறான் என்பது அவனுக்கு ஆசுவாசமாக இருந்தது. 'தூண்றா அவன்' என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க, நாற்பத்தொன்பது ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழந்து, இருநூற்று தொண்ணூற்றி நான்குக்கு வந்துவிட்டார்கள்.

கிச்சா 'ஆறு பந்துகள்; ஆறு ரன்கள்; அல்வா போல எடுக்கலாம்.. திராவிடா.. நானும் திராவிடன்.. கைவிட்றாதடா' என்று கெஞ்ச ஆரம்பிக்க, டிராவிட் முதல் பந்தில் ஒரு நான்கடித்துவிட்டு, அடுத்ததில் ஓங்கி அடிக்க முயற்சித்து பந்து தரையில் உருள ஒன்று ஓடினார்கள்.

'ரெண்டே ரெண்டு' என்று கிச்சா கூவினான். டிராவிட் எதிர்பக்கம் போய்விட கடைசியாள் மட்டை பிடித்து, அடுத்த மூன்று பந்துகளையும் தடவி கீப்பருக்கு வழிவிட, கிச்சாவுக்கும், மற்றவர்களுக்கும் ரத்தம் கொதித்தது. கிச்சா மூலையிலிருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்துவந்து அவனை அடிப்பதுபோல் பாவனை செய்தான். கடைசி பந்துக்காக பாண்ட்டில் தேய்த்து நடக்கையில் ஒரு மினி ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. 'டேய்.. எங்கடா எந்திரிக்கறே? ஒக்கார்ரா' என்று சம்பத்தை அதட்டினான் கிச்சா. ஆனந்த் தும்முவதற்காக மூக்கைத் தேய்க்க, தலையணையை அவன் முகத்தில் அமுக்கி 'அபசகுனமா தும்மாதடா சனியனே' என்று இரைந்தான். பந்து வீச்சாளன் மெதுவாக நடை பயில, கிச்சாவுக்கு இருப்புக் கொள்ளாமல் சட்டென்று எழுந்து பூஜையறைக்கு ஓடிப்போய் சூடம் கொளுத்தி, 'இந்தியா ஜெயிக்கணும்.... கிருஷ்ணா, ராமா, நாராயணா, ஆஞ்சநேயா.. . ' என்று கிணுகிணுவென்று மணியடிக்க, எச்சுமிப் பாட்டி நடுநிசி மணியோசையில் தூக்கம் கலைந்து எழுந்து 'கட்டேல போறவனே.. பிசாசுக்குப் பூஜை பண்றியா?' என்று இரைந்தாள்.

'டேய்.. நீ கும்பிட்டு முடிக்கறதுக்குள்ள மேட்ச் முடிஞ்சிடும்டா' என்ற எட்டி, எச்சுமிப்பாட்டியை ஒரு கணம் மறந்து மண்டியிட்டு 'பரமபிதாவே' என்று கூவினான். சம்பத் கவ்பாயைப் பார்த்து 'டே நீ ஒண்ணும் வேண்டலையா?' என்று கேட்டுவிட்டு பதிலுக்குக் காத்திராமல் 'அல்லா அல்லா.. நீ இல்லாத உலகே இல்லை' என்று தாளமிட, கிச்சா 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பாவிகளா.. பாட்டி காதுல விழுந்து தொலைக்கப்போகுது' என்று திரும்ப வந்து டென்ஷனில் கையில் சிக்கியதை எல்லாம் அங்குமிங்கும் எறிந்தான்.

சம்பத் எரிச்சலோடு எழுந்து டிவியை அணைத்தது கிச்சாவை உச்சகட்ட டென்ஷனுக்குக் கொண்டுசென்று இதயம் வெடித்துவிடுவான் போலிருந்தான். 'டே நாயே.. என்று சம்புவை அப்புறப்படுத்தி டிவியைப் போட்டால் டிராவிடும் கடைசி வீரனும் மேற்கிந்தியர்களுக்குக் கைகொடுத்துக்கொண்டிருக்க இரைச்சலில் கமெண்ட்ரி கேட்கவில்லை.

'அடிச்சானாடா?' என்று கிச்சா பையன்களைக் கேட்க ஒருவருக்கும் தெரியவில்லை. நான் அங்கே அப்போது ஒரு கொலை விழப்போகிறது என்று பயந்தேன்.

காமிரா இப்போது ஸ்டம்போடு ஓடிக்கொண்டிருந்த மேற்கிந்திய பவுலரைக் காட்ட ஓரத்தில் ஸ்கோர் போட்டதில் அவர்கள் ஒரு ரன்னில் ஜெயித்திருந்தார்கள். ஹாலில் ஒரு திடீர் மெளனம் குடிகொள்ள ஜானு 'என்னாச்சு?' என்று கேட்டாள்.

கிச்சா ஆஞ்சநேயரைப் பார்த்து 'நைவேத்தியம் போறலைன்னா கேக்கவேண்டியதுதானே?' என்று விரக்தியுடன் சொல்லிவிட்டு திரும்ப வந்தான்.

சூழ்நிலையில் மெலிதான சோகம் பரவ எனக்கும் சோகமாக இருந்தது. ஜானு எவ்வளவோ வற்புறுத்தியும் சாப்பிடாமல் அவரவர்கள் இருந்த இடத்திலேயே உறங்கிப்போக நானும் கிச்சாவும் நாலுமணிக்கு விழித்துக்கொண்டோம்.

ஜானு அதற்குள் எழுந்து காஃபி போட்டுக்கொண்டிருக்க வீட்டை விட்டு வெளியில் வந்தோம். மார்கழியாதலால் பக்கத்துவீடுகளில் பெண்கள் பலவயதுகளில் முன்னால் கோலமிட்டுக் கொண்டிருந்தார்கள். எச்சுமிப்பாட்டி திண்ணையில் கால்நீட்டி அமர்ந்திருந்தாள். பனி கவிந்திருக்க நதிக்கரையோரமாதலால் அதிகக் குளிராக இருந்தது. தோள்களைக் குறுக்கி கைகளைக் கட்டிக்கொண்டு குத்துக்காலிட்டுத் திண்ணையில் அமர்ந்து கோலத்தையும் பெண்களையும் வேடிக்கை பார்க்க, தூரத்தில் பாடல்களும் ஜல்ஜல் சத்தமும் கேட்க, எச்சுமிப்பாட்டி 'அவாளைப் பாரு.. காலைல நாலரைக்கு ஏந்து குளிச்சு பக்தியா பஜனை பண்ணிண்டு எங்க மாரி பெரியாவளை தரிசிச்சுண்டு நன்னா இருக்கா. நீங்களும் இருக்கேளே..' என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டாள்.

பஜனை கோஷ்டி குறுகிய காம்பவுண்டுக் கதவு வழியே ஒவ்வொருவராக வர கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் எழுந்து கொண்டார்கள். கிச்சாவுக்குக் கடுப்பாக இருந்தது. 'அவாள்ளாம் பஜனைக்கா வரா? நம்ம காம்பவுண்டுல கோலம் போடற பொண்களைப் பாக்கன்னா வரா?' என்றான் காஃபியை உறிஞ்சியபடியே. 'அபிஷ்டு.. ஒளராதே' என்று அதட்டினாள் எச்சுமிப்பாட்டி.

டம்ளரிலிருந்து எழுந்த ஆவியை இதமாக முகர்ந்ததில் எனக்கு மூக்கில் வியர்த்தது. பஜனை கோஷ்டி சென்றுவிட, பெண்கள் கோலமிட்டு வீட்டினுள் போய்விட, எச்சுமிப் பாட்டி கோழித் தூக்கம் போட்டுக்கொண்டிருக்க, வாசலில் நானும், கிச்சாவும் மெளனமாக அமர்ந்திருந்தோம். நேற்றைய தோல்வி அவனை நிறையவே பாதித்திருக்கும் என்று எனக்கும் வருத்தமாக இருந்தது. அவன் தோளை தொட்டு 'என்னடா டல்லா இருக்கே?' என 'ப்ச்ச்' என்றான்.

'இது ஸ்போர்ட்ஸ்டா. வெற்றி தோல்வி சகஜம். தோத்தவன் இப்போ சுகமா தூங்கிக்கிட்டு இருப்பான். கவலைப்படாத அடுத்த மேச்சுல ஜெயிச்சுருவாங்க' என்று ஆறுதல் கூற முற்பட்டேன். அவன் அலட்டிக்கொள்ளாமல் திரும்பி 'இந்தியாவோ மேற்கிந்தியாவோ.. ஏதோ ஒரு இந்தியா ஜெயிச்சா சரி' என்று பெருமூச்சுவிட்டு, தலையைக் குனிந்துகொண்டு மெதுவாகச் சொன்னான்...

'அனுவுக்கு நிச்சயம் ஆயிடுத்தாம்டா'.

***

நன்றி. மரத்தடி.காம்

2 comments:

Anonymous said...

Sundar
Excellently layered story.
not undertold or overtold.
Very good among what I have recently read .

Sundar Padmanaban said...

Thanks Karthik. Glad you enjoyed reading this.