Monday, December 12, 2005

* Yeh he hai right Choice Baby! *

ரஜினி பற்றி ஒரு பதிவு போடவேண்டும் என்று போனவாரம் நினைத்துக்கொண்டிருந்து, இன்று அதை எழுத முடிவதும், அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதும் தற்செயலான சமாசாரமேயொழிய அவர் பிறந்த நாளுக்காக எழுத வேண்டும் என்று திட்டமிட்ட பதிவல்ல இது. அவருக்கு இன்று பிறந்த நாள் என்பதையே இன்றைய சில பதிவுகளிலிருந்துதான் அறிந்துகொண்டேன்! :( பெப்ஸி நிறுவனம் இந்தியாவில் 1987-இல் நுழைந்து முதல் மூன்று வருடங்களில் தொழிற்சாலைகளை நிறுவி, ஏற்கெனவே இருந்த நலிந்த சில தொழிற்சாலைகளை வாங்கி மராமத்து செய்து, விற்பனைத் துறையை நாடு முழுவதும் விரிவு படுத்தி படுவேகத்தில் குளிர்பானங்களையும் இந்தியச் சந்தையில் இறக்கிவிட்டனர். நரசிம்மராவ் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியச் சந்தைக் கதவுகளைத் திறந்துவிட்டார். தகவல்தொழில்நுட்பக் காரர்கள் வாக்கியத்திற்கு நூறு புரியா வார்த்தைகளைச் (Jargons) சேர்த்துப் பேசுவார்கள் - லான், வான், டெர்ரா பைட், த்ரீ டியர் ஆர்க்கிடெக்சர் என்று கிரந்த மொழி போல பேசுவார்கள்! இது போலவே ஒவ்வொரு துறையிலும் அத்துறைக்கேயுரித்தான பிரத்யேக வார்த்தைகள் உண்டு. வெற்றிலைக்குக் 'கவுளி', விறகு நிறுக்க "தூக்கு" வாழையிலைக்குப் "பூட்டு"! குளிர்பானத்துறைக்கான சில வார்த்தைப் பிரயோகங்களில் நிர்வாகத் துறையில் பயன்படுத்தப் படும் வார்த்தைகள் COBOவும் FOBOவும். COBO என்றால் Company Owned Bottling Operations; FOBO - Franchisee Owned Bottling Operations. சொந்தமாகத் தொழிற்சாலைகளை நிறுவி அவர்களே இயக்குவதற்குக் COBO என்று சொல்வோம். ஆனால் நாடுமுழுவதும் அவர்களே நேரடியாக தொழிற்சாலைகளை நிறுவி இயக்குவது மிகவும் செலவும், அதிக நேரமும் பிடிக்கும் விவகாரம் என்பதால் FOBO முறையைப் பெரும்பாலும் கடைபிடித்து நாடு முழுவதும் Franchisee எனப்படும் முகவர்களை நியமித்தது பெப்ஸி நிறுவனம். இம்முறையில் தனியார் தொழிலதிபர்கள் ; ஏற்கெனவே தொழிற்சாலைகளை வைத்திருப்பவர்கள் பெப்ஸி நிறுவன குளிர்பானங்களைத் தயாரித்துச் சந்தைப் படுத்தலாம். உற்பத்தியையும், விற்பனையையும் பொருத்து ராயல்ட்டியை மட்டும் பெப்ஸி நிறுவனத்திற்குக் கட்டவேண்டும். தென் மாநிலங்களுக்கான உரிமையை அப்போது திருச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் - பரம்பரைப் பணக்காரர்; தொழிலதிபர் - வாங்கி மளமளவென்று தொழிற்சாலைகளை மதுரையிலும், மாமண்டூரிலும், பள்ளிக்கரணையிலும், பெங்களூர் கும்பல்கோடு பகுதியிலும் நிறுவி, பெரும் சரக்கங்களையும் ஆந்திராவிலும் கேரளாவிலும் ஏற்படுத்தினார். அசுர உழைப்பு! அவரது மகன்களும், மருமகனும் முழு ஈடுபாட்டுடன் நேரடியாகக் களத்தில் இறங்கி இரவுபகல் பாராது மேற்பார்வை செய்ததை கிட்டத்தில் இருந்து பார்த்து அசந்துபோனேன். உயரத்திலிருந்தாலும், கால் மேல் கால் போட்டுச் சாய்ந்து அமராது, உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற பாடத்தை அவர்களிடம் கற்றேன். தமிழகச் சந்தையில் குளிர்பானங்களை அறிமுகப்படுத்த வேண்டியதுதான் பாக்கி. First Impression என்பது மிக முக்கியம். அறிமுகம் தோல்வியாகிவிட்டால் வியாபாரம் அதோகதியாகி விடும். டெல்லியில் நிறுவனத் தலைமை கோடி கோடியாக விளம்பரத்திற்குப் பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்தது. அதுவரை தொலைக்காட்சி விளம்பரங்கள் பத்து விநாடிகள் நீளத்தைத் தாண்டினால் அதிகம். ஆனால் பாப் பாடகர் ரெமோ பெர்ணாண்டஸ்ஸையும் ஜூஹி சாவ்லாவைவும் வைத்து பெப்ஸி வெளியிட்ட The Choice of a New Generation என்ற அந்த விளம்பரத்தின் நீளம் 90 வினாடிகள்! - இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே நீளமான விளம்பரம் என்ற சாதனையை அது செய்தது. இன்னொரு சாதனையையும் அது செய்தது. அனைத்து தொலைக்காட்சி சானல்களிலும் நிகழ்ச்சிகள் முடக்கப்பட்டு ஒரே நேரத்தில் விளம்பரம் எல்லாச் சானல்களிலும் வெளியிடப்பட்டது. நினைத்துப் பாருங்கள். ரிமோட் கண்ட்ரோலை வைத்து சானல் மாற்றித் தப்பிக்கவே முடியாதபடி எல்லாச் சானல்களிலும் ஒரே விளம்பரம் - அதுவும் முழு ஒன்றரை நிமிடங்களுக்கு! விளம்பர உலகில் அந்த விளம்பரம் ஒரு புரட்சியைச் செய்தது. ஆனால் அவர்களது விளம்பர உத்திகள் தமிழ்நாட்டைப் பொருத்தவரைச் செல்லுபடியாகவில்லை. தமிழ் மக்களுக்கு ரெமோவையும் தெரியாது. ஜூஹியையும் தெரியாது. அதுவும் சென்னைக்கு வெளியே வந்துவிட்டால் ரெமோ பாரீனரா என்று கேட்கக்கூடிய நிலை (அந்நியன் அப்போதே வந்திருந்தால் ரெமோ என்ற பெயர் பிரபலமாகியிருக்கலாம்!). ஜூஹியெல்லாம் வாயில் நுழையாத பெயர். "முதலிடம்" என்பது வெற்றிக்கு முக்கியம். அதுவும் பெப்ஸி போன்ற ஒரு பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளை அதிரடியாகச் சந்தையில் அறிமுகப்படுத்துவது மிக முக்கியம். சொத்தையான உத்திகள் பயன் தராது. சந்தையில் ஏற்கெனவே பல்லாண்டுகளாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் குளிர்பானங்களை வீழ்த்தி, பெப்ஸி பானங்களைத் தனித்துக் காட்டவேண்டும். என்ன செய்யலாம் என்று பார்த்தார் நமது எம்.பி. தமிழக மக்களைப் பெரும்பான்மையாக ஈர்க்கும் ஒரே விஷயம் - இன்றுவரை - திரைப்படம்தான். வேறு எதற்கும் மக்கள் கூட்டம் சேர மாட்டார்கள். அவர் ஏற்கெனவே வியாபாரத்தில் கெட்டிக்காரர். சினிமா விநியோகஸ்தத்தையும் நீண்டகாலமாகச் செய்துகொண்டிருந்தார். திருச்சியில் சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்களை எப்போதும் அவரே வெளியிடும் பிரத்யேக உரிமை அவருக்கு இன்றுவரை உண்டு. போதாதா? சென்னைக்குப் போனார். மறுநாள் திரும்ப மதுரைக்கு வந்தார். எங்களை அழைத்தார். 'அடுத்த வாரம் பெப்ஸி லாஞ்ச் பண்றோம். ரஜினி கையால' என்று எப்போதும் போலச் சுருக்கமாகச் சொல்ல நான், எனது நண்பன் ராஜாங்கம் எல்லாருக்கும் உடனடியாகத் தீ பற்றிக்கொண்டது. அன்று தொழிற்சாலையே தீபாவளி மாதிரி தொழிலாளர்கள் கொண்டாடினார்கள். சரக்ககத்திற்குப் பின்னால் இருந்த திறந்த வெளியில் வெடி வெடித்துக் கொண்டாடினார்கள். மதியம் விடுமுறை விடப்பட்டது. தகவல் எப்படிப் போனது யார் மூலம் என்றெல்லாம் தெரியாது. மூன்றாம் நாள் நான் தொழிற்சாலைக்குள் நுழையக்கூட முடியவில்லை. மதுரை திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரவை கிராமத்திற்குச் சற்று முன்பாக சாலையின் இடப்புறம் இருக்கிறது தொழிற்சாலை. சாலையின் இருபக்கமும் வரிசையாக நூற்றுக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரே ஆரவாரம். ரசிகர்கள் குவிந்துவிட்டனர். பெப்ஸி அறிமுகத்திற்கு இன்னும் இரண்டே நாள்கள் இருந்தன. நாங்கள் அனைவரும் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தோம். எப்போது வருவார்? எங்கு தங்குவார்? போன்ற தகவல்கள் மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தோம். மதுரையிலிருக்கும் நட்சத்திர விடுதிகள் முன்னே ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் அலைபாய்ந்துகொண்டிருந்தனர். தொழிற்சாலைக்கு வந்து கேள்வி மேல் கேள்வி கேட்க நிர்வாகம் திணறிப்போனது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ரசிகர்கள் வன்முறையில் இறங்க, எம்.பி.யின் மருமகன் ரசிகர் மன்றச் செயலாளர்களை உள்ளே அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி ரகசியம் காக்கவேண்டியதின் அவசியத்தையும் விளக்கி அனுப்ப ரசிகர்கள் அமைதியானார்கள். மதுரை மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் முக்கிய அரசியல் கூட்டங்கள் நடந்ததுண்டு. சந்திப்பு முனையில் பிள்ளையார் கோயில் எப்போதும் கூட்டமாக இருக்கும். மைதானத்திடல்கள் எதையும் தேர்ந்தெடுக்காமல் அந்தச் சந்திப்பில் அறிமுக விழாவை நடத்த முடிவு செய்தார் எம்.பி. அதிகம் படித்தவரில்லை அவர். ஆனால் அவரது வியாபாரத் திறமைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். நடக்கப்போவது திரைப்பட விழாவோ அரசியல் விழாவோ அல்ல. நாளைமுதல் பெட்டிக் கடைகளிலிருந்து நட்சத்திர விடுதிகள் வரை சந்து பொந்துகளிலும் கிடைக்கக் கூடிய பன்னாட்டு நிறுவனத்தின் குளிர்பானம். அதைச் சந்தையிலேயே நேரடியாக அறிமுகப் படுத்த அந்தச் சந்திப்பைத் தேர்ந்தெடுத்தார் எம்.பி. பெப்ஸி என்றால் ஏதோ மருந்து என்று கடைக்காரர்கள் தவறாக நினைத்துவிடாத வண்ணம், அவர்களது முன்னாலேயே மிகப்பெரும் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்தில் "யாருன்னு கேட்டாச் சின்னக் குழந்தையும் சொல்லக்கூடிய' சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூலம் அறிமுகப் படுத்த முடிவு செய்த அவரது உத்தியை எண்ணி பிரமித்துப் போனேன். Yeh he hai right choice baby! அறிமுக நாள். மாலை ஐந்து மணிக்கு அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருந்தோம். பத்துப் பதினைந்து பேர் மட்டும் அமரக் கூடிய சிறிய மேடை அமைக்கப்பட்டது. முதல் நாளிரவே ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் சேர ஆரம்பிக்க, அறிமுக நாளன்று காலையில் போக்குவரத்து எல்லாத் திசைகளிலும் ஸ்தம்பிக்க ஆரம்பித்துவிட்டது. வழக்கம் போலவே அன்றும் பயங்கர வெயில். மதியம் 1 மணிக்கெல்லாம் மேடை முன்பாகப் பெண்கள் - முதிய பெண்மணிகள் உள்பட - ஆயிரக்கணக்கில் திரண்டு சாலையிலேயே அமர்ந்து விட்டனர். நெற்றியில் வியர்வை ஆறாய் வழிய, தார்ச் சாலையின் சூட்டைப் பொருட்படுத்தாது அமர்ந்திருந்த கிழவிகளைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. நான் 'சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் தலைவர் வர்றாரு. அப்படி ஓரமா நிழல்ல போய் இருந்துக்கங்க அப்பத்தா' என்று ஒரு முதிய பெண்மணியிடம் சொல்ல என்னை அவர் அடிக்கவே வந்துவிட்டார் 'போவியா.. மவராசனை ஒருவாட்டியாவது பாக்கலாம்னு வந்தா வெரட்டறியே? இப்ப ஒதுங்கி நின்னா அப்றம் கூட்டத்துல நுழைய முடியாது' என்று சொல்ல நான் நகர்ந்து மேடைக்குச் சென்றுவிட்டேன். மூன்று மணியளவில் மொத்த நகரமே ஸ்தம்பித்துவிட்டது. எல்லா மாசி வீதிகளிலும் லட்சக்கணக்கில் ரசிகர்கள். மேலமாசி வீதி வடக்கு மாசி வீதிகளெங்கும் தலைகள், தலைகள் தவிர வேறு ஒன்றையும் பார்க்க முடியவில்லை! ஊசியைப் போட்டால் கீழே விழாத கூட்டம். மேடையை நெருங்க முண்டியடித்தவர்களைக் காவல்துறையினர் படாதபாடுபட்டு லத்தியைச் சுழற்றித் தடுத்துக்கொண்டேயிருந்தனர். எனக்கும் ராஜாங்கத்துக்கும் அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் பயமாக இருந்தது. எம்.பி.யும் கவலையாகக் காட்சியளித்தார். 'என்னப்பா ஒங்கூர்ல இவ்ளோ கூட்டம்?' என்று கேட்க 'ஒங்கூர்ல நடத்தினா மட்டும் கூட்டம் வராம இருக்குமா?' என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டேன். வயது வித்தியாசமில்லாமல் திரண்டிருந்த அந்தக் கூட்டத்தை என்னால் மறக்கவே முடியாது. மேடையில் யார் ஏறினாலும் தலைவரோ என்று எழுந்து ஆர்பரித்துக்கொண்டேயிருந்தது கூட்டம். வீடு, கடைகள், எல்லாவற்றின் கூரைகளிலும் ரசிகர்கள் - மரங்களில் கூட தொற்றிக்கொண்டிருந்தனர். ரஜினி போலவே அலங்காரத்துடன் ஒரு ஐம்பது பேரையாவது பார்த்திருப்பேன். முன்னெற்றியில் நிறைய முடி இருந்தவர்கள் கூட, அதை நீக்கி ரஜினி போல ஏறு நெற்றியாக்கிச் சிகையலங்காரம் செய்துகொண்டிருந்தனர். முதலில் ஜெய்சங்கர் வந்தார். அவரைத் தொடர்ந்து ஜீ.வீ. கூட்டத்தின் ஆரவாரம் உச்சக்கட்டத்தை அடைய இரைச்சலைத் தவிர எதுவுமே கேட்காத அந்த நொடியில் சட்டென்று மேடையில் ஏறி நடுநாயகமாக வந்தமர்ந்தார் ரஜினி. நாங்களெல்லாம் திக்பிரமை பிடித்தது போன்று செயலற்று நின்றோம். வந்து அமருமுன் கூட்டத்தைப் பார்த்து மூன்று திக்குகளிலும் கையசைக்க "தலைவா" என்ற கோஷம் உச்ச ஸ்தாயியில் எழுந்தது. பெண்கள் எழுந்து விழுந்தார்கள். கூட்டத்தினர் அலையலையாய் முன்னே நெருங்க, காவல்துறை திணறியது. அப்போது தளபதி திரைப்படம் வந்த நேரம். ரஜினி மிலிட்டரி பச்சை சட்டையும் கால்சராயும் அணிந்து புன்னகையுடன் அமர்ந்திருக்க, கூட்டம் மந்திரித்து விட்டது போல் ஆர்ப்பரித்தனர். எம்.பி.யின் மருமகன் தான் மதுரைத் தொழிற்சாலையின் நிர்வாகத்தைக் கவனிப்பவர். அவரைச் சுற்றிய நெருங்கிய சகாக்களில் புலவர் ஒருவரும் உண்டு. அவர் மைக்கைப் பிடித்து 'நீங்கள் அமைதியானால்தான் தலைவரால் பேசமுடியும்' சொல்ல ஆரவாரம் ஒருவழியாய் ஓய்ந்தது. வழக்கமான 'பெரு மதிப்பிற்குரிய..... மரியாதைக்குரிய.... வேண்டிவிரும்பி.....ஆகவே....' போன்றவற்றையெல்லாம் அவர் சொல்லி முடித்து புலவர் கடைசியாக இப்படி முடித்தார். "மதுரை மூன்றெழுத்து. தமிழ் மூன்றெழுத்து. பெப்ஸி மூன்றெழுத்து. வெற்றி மூன்றெழுத்து. நமது சூப்பர் ஸ்டார்........." என்று சொல்லி நிறுத்த 'ரஜினிஈஈஈஈஈஈஈஈ' என்று பலத்த கரகோஷத்துடன் ரசிகர்கள் குரல் கொடுத்தனர். ஒரு பெரும் கூட்டத்தை ஈர்த்திருக்கும் அந்த மனிதர் எழுந்தார். 'வணக்கம்' என்று மட்டும்தான் சொன்னார். அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவரால் எதையும் பேசமுடியவில்லை. அந்த ஒரு வார்த்தையைக் கேட்டதுமே ரசிகர் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்திற்கே போய்விட்டனர். 'எனது நண்பர்... ' என்று சொல்லி எம்.பி.யை அறிமுகப்படுத்தி விட்டு பெப்ஸி ஒன்றைக் கையிலெடுத்து மூடியைத் திறந்து ஒரு வாய் மட்டும் உறிஞ்சிவிட்டுக் கீழே வைத்தார். ஜெய்சங்கரும் ஜீ.வீயும். எம்பியும், அவரது மருமகனும் வேகவேகமாகப் பேசி முடிக்க, இருபதே நிமிடங்களில் பெப்ஸி அறிமுகம் முடிந்து பலத்த காவல் வட்டத்தில் ரஜினி வெளியேறி ஹோட்டலுக்குச் செல்ல, அப்பாடா என்று இருந்தது. எல்லாமே ஒரு கனவு போல. அன்றைய இரவு அவரை ஹோட்டலில் சந்தித்துக் கைகுலுக்கியதும் கனவு போலவே இருக்கிறது. புகைப்படங்கள் எங்கோ வீட்டில் புதைந்து கிடக்கின்றன. தேடவேண்டும். அதிகமாகப் பேசாத, எளிய தோற்றம் கொண்ட அந்த மனிதரிடம் ஏதோ ஒரு கவர்ச்சி ஒளிந்திருக்கிறது. அது சுற்றியிருப்பவர்களைக் காந்தம் போல ஈர்ப்பதை உணர முடிந்தது. தினத்தந்தி விழாவுக்கும் மதுரைக்கு அவர் வந்திருந்தார். பசுமலைத் தாஜ்ஜில் தங்கியிருந்த போதும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பிற்பாடு வந்த மன்னன் திரைப்படத்தின் பெரும்பகுதி பெங்களூர் கும்பல்கோடு தொழிற்சாலையில் எடுக்கப்பட்டது. அப்போதும் அவரைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. நானும் சிறிய வயதில் ஒரு தீவிர ரஜினி வெறியனாகத்தான் இருந்தேன். இன்றும் அவரது ஜனரஞ்சக எளிய படங்களைப் பார்த்து ரசிக்கிறேன். வயது வித்தியாசமில்லாத குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் அவரது படங்கள் திரைத்துறையில் பலரது வாழ்க்கைக்கு முதுகெலும்பாக இருக்கிறது என்றால் மிகையாகாது. எதிர்மறை விமர்சனங்கள் நிறைய இருந்தாலும், ஜெயித்துக் காட்டிய அந்த எளிமையே எனக்கு முக்கியமாகப் படுகிறது. அவரது எளிமைக்கு வந்தனங்கள். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். ***

12 comments:

ஜெ. ராம்கி said...

சுவாராசியமான பிளாஷ்பேக்கை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.... wwww.rajinifans.com சார்பாக

Jayaprakash Sampath said...

//. வயது வித்தியாசமில்லாத குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் அவரது படங்கள் திரைத்துறையில் பலரது வாழ்க்கைக்கு முதுகெலும்பாக இருக்கிறது என்றால் மிகையாகாது. //

அது!!!!!

நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்

( ஆமா, அந்த எம்.பி. அடைக்கலார் தானுங்களே? )

Sundar Padmanaban said...

நன்றி ராம்கி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

ப்ரகாஷ்,

//அந்த எம்.பி. அடைக்கலார் தானுங்களே//

ஹிஹி!

மணியன் said...

நல்ல விவரிப்பு. கமலின் விசிறியிடமிருந்து என்பது சிறப்பு :)

Boston Bala said...

ரஜினியின் எளிமையின் மறு அவதாரமாக விளங்கும் விஜய் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் ;-)
-இளைய தளபதி ரசிகர்

ஜோ/Joe said...

சுவாரஸ்யமான பதிவு..நன்றி சுந்தர்!

அன்பு said...

மேலமாசி, வடக்குமாசி வீதி சந்திப்பில் பெப்சியை ரஜினி அறிமுகம் செய்தார் என்ற ஒற்றைவரிக்கு அமர்க்களமான விவரணை. ஷங்கர் பட பிரமாண்டத்தை எழுத்தில் கொண்டுவந்து, எங்களையும் அந்த நிகழ்வை மாபெரும் வைபவமாக உணரச்செய்துள்ளீர்கள். அருமை, பாராட்டுக்கள்.

Unknown said...

வர்ணனை எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால்

//அவரது எளிமைக்கு வந்தனங்கள்.//

என்ற வரியைப் படித்தவுடன் இது நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது.

Sundar Padmanaban said...

மணியன்,

நான் கமலின் தீவிர ரசிகன் - ஆனால் வெறியனல்ல. நல்ல படங்கள் - யார் நடித்திருந்தாலும் - எனக்குப் பிடிக்கும். ரஜினியின் படங்கள் ஜனரஞ்சகமாக அனைத்துத்தட்டு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். அதற்காக அவரது அனைத்துப் படங்களும் சிறந்தவை என்று சொல்ல மாட்டேன். ரஜினியோ கமலோ நிறைய குப்பைப் படங்களும் செய்திருக்கிறார்கள். எல்லாம் ஒரு 'கமர்சியல் காம்ப்ரமைஸ்'தான்.

நன்றி.

பாலா -> //விஜய் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் //

எங்களுக்கெல்லாம் வயசாயிடுச்சுன்னு குத்திக் காட்றீங்களாக்கும். நல்லா இருங்கப்பா! :)

ஜோ, சதீஷ் - நன்றிகள்.

அருட்பெருங்கோ - உங்கள் மறுமொழிக்கு நன்றி.

சாருவின் அக்கட்டுரையை முன்பே படித்துவிட்டேன்.

நான் எளிமை என்று குறிப்பிட்டது, அவரது எளிமையான தோற்றத்தையும் சுபாவத்தையுமே. அவர் குடிசையில் வாழ்கிறார்; கஞ்சி சாப்பிடுகிறார்; கதராடை மட்டுமே உடுத்துகிறார் என்றெல்லாம் சொல்ல வரவில்லை.

சாருவின் கருத்துகளோடு பெரும்பாலும் நான் உடன்படுகிறேன். அவர் மதிப்பதாகச் சொல்லும் கமல்ஹாஸன் தயாரிப்பாளர்களுக்கு எந்த அளவு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுத்தியிருக்கிறார் - படபிடிப்புகளில் - என்பதையும் படித்திருக்கிறேன். ஆளவந்தான்செலவைப் பற்றி நிறையவே படித்திருக்கிறேன். நான் இத்தனைக்கும் கமலின் தீவிர ரசிகன்.

இரண்டு விஷயங்கள். நடிகர்களைத் நடிகர்களாகத் திரையில் மட்டும் பார்த்து ரசிப்பதோடு ரசிகனாக என் வேலை முடிந்துபோகிறது. அவரகளது பின்புலத்தையும், கல்வி உள்ளிட்ட தகுதிகளையும், அவர்கள் பேசும் எல்லாவற்றையும் பொன்மொழிகளாகக் கருதி அப்படியே தலைவர்களாக ஏற்றுக்கொள்வதையும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை, மனைவி, மக்கள், மற்ற தொடர்புகள் என்று உள்ளே நோண்டிப் பார்ப்பதையும் - அது பக்கத்து வீட்டுக்காரனின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பது போல - என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ரஜினி அவருக்குத் தெரிந்த ஆன்மீகத்தைப் பற்றிச் சொல்கிறார். அது அவரது நம்பிக்கை. அதை வியாபாரத்திற்கு உபயோகித்துக்கொள்ளும் பத்திரிகைகளைப் பற்றி சாரு காய்ச்சியிருப்பதும் சரிதான். ரஜினியின் ஆன்மீகத்தைப் பற்றிய நம்பிக்கைககளையும், கருத்துகளையையும், யாத்திரைகளையும் பற்றி சாரு சொல்லியிருப்பது அவரது சொந்தக் கருத்து. நான் ரஜினியை ஆதரிக்கவுமில்லை. சாருவை எதிர்க்கவுமில்லை. சுருக்கமாக எனக்கு கலைஞர்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கவலை இல்லை.

எல்லாத் தொழில்களிலும் துறைகளிலும் Occupational Disease என்று ஒன்று உண்டு. நீங்கள் அதைப் பற்றிப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதன் சித்தாந்தத்தைப் புரிந்துகொண்டால் இம்மாதிரி விஷயங்களுக்கு நாம் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை.

நன்றி.

Anonymous said...

அரசியல்வாதிகள் நடிகர்களுடன் நண்பர்களாக இருப்பதே அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளத்தானே?. எங்கூர் எம்.பி. பிசினஸ்ல எப்பவுமே கில்லாடி. உழைப்பிற்கும் சலிக்காதவர்தான். நாங்கெல்லாம் ரஜினி பட டிக்கட் வாங்குறதே இவரோட மேனேஜர் ஒருவரிடம் இருந்துதான். ஒரு விழா மேடையில் பாண்டியராஜன் ஏறிய போது., கலைஞர் பேச்சையே... கவனிக்காது கூட்டம் ஆர்ப்பரித்தது. அட., நடிகன்னா நாலு பேர் கூடத்தான்யா செய்வாங்க!!!., - இது ஒரு நடிகன் சொன்னது.

Sundar Padmanaban said...

அப்டிப் போடு,

உண்மை - இளைஞ்சர்களைப் பயன்படுத்திக் கொள்வதைப் போன்று நடிகர்களையும் அவர்களது ரசிகர்களையும் அரசியல்வாதிகள் திறம்பட பயன்படுத்திக் கொள்கின்றனர்.

நடிகர்களுக்கும் சில விஷயங்களில் அரசியல் பின்புலங்கள் தேவைப் படுகின்றன. ஒண்ணுக்குள்ள ஒண்ணுதானே!

எம்.கே.குமார் said...

அன்பின் சுந்தர்,

தாமதமான நட்சத்திர வாழ்த்துகள்.

அந்தம் தொடர்கதைக்கு நன்றி.

ரஜினியைச்சந்தித்த அந்த அனுபவத்தையும் அடைக்கலராஜ் அவர்களின் அயராத உழைப்பையும் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

எம்.கே.